global warming tempபுவி வெப்பமாதலால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தால் உலகெங்கிலும் பருவநிலை மாறுபாடுகளும், பேரிடர்களும் தீவிரமடைந்துள்ளன. வெள்ளம், வறட்சி, புயல், கடுமையான மழைப் பொழிவு, வெப்ப அலை, வறட்சி, காட்டுத்தீ போன்ற பருவநிலை பிரச்சினைகள் அண்மைக் காலத்தில் தீவிரமடைந்துள்ளன.

புவியில் வெப்பச் சமநிலை ஏற்படுத்துவதில் காற்றுச் சுழற்சியும், நீர்சுழற்சியும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புவியின் முக்கால் பகுதி கடல்நீரால் சூழப்பட்டுள்ளது. அந்தக் கடல்நீரில் மூன்றில் ஒரு பங்கை பசுஃபிக் பெருங்கடல் கொண்டிருக்கிறது.

பெருங்கடல்களில் ஏற்படும் வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகள் (வெப்பநிலைச் சராசரியைக் காட்டிலும் அதிகமாகவோ, குறைவாகவோ மாறுபட்டால்) அது உலகளவில் பருவநிலைகளில் பெரும்தாக்கம் ஏற்படுத்துகின்றன.

இயல்பான சூழலில் புவியின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் கிழக்கத்திய வர்த்தகக் காற்று (Easterlies/Trade winds) பசிஃபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் காணப்படும் வெப்பமான மேற்பரப்பு நீரை ஆசியாவை நோக்கி மேற்குப் பகுதிக்குக் கொண்டுசெல்கிறது.

இதனால் பசிஃபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் கடல்மட்டம் குறைந்து மேற்கு பசிஃபிக் பகுதியில் கடல்மட்டம் உயர்ந்து அதிக வெப்பநிலையுடன் காணப்படுகிறது. இதுவே இயல்பாக மேற்கு பசிஃபிக் பகுதிகளான இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் நல்ல மழைப் பொழிவை ஏற்படுத்துவதற்கும், கிழக்கு பசிஃபிக் பகுதிகளான சிலி, பெரு போன்ற தென் அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படவும் காரணமாகிறது.

கிழக்கு பசிஃபிக் பகுதியில் கீழிருந்து குளிர்ந்த கடல்நீர் மேலெழுகிறது. கடலின் கீழேயுள்ள நைட்ரேட், பாஸ்பேட் மற்ற முக்கியமான சத்துப் பொருட்கள் மேலே கொண்டுசெல்லப்படுவதால் பாசிகள், மீன்கள் போன்ற கடல் உயிரினங்கள் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பெற முடிகிறது. இது மீன்வளம் பெருக உதவுகிறது.

ஆனால் சில ஆண்டுகளில் இந்த கிழக்கத்திய வர்த்தகக் காற்று வலுவிழக்கிறது. வர்த்தகக் காற்றின் திசை மாறி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்வதற்கு மாறாக மேற்கிலிருந்து கிழக்கு திசைநோக்கி இடம்பெயருவதால் மேற்கத்திய, கிழக்கத்திய பசிஃபிக் பகுதிகளின் காலநிலை முற்றிலும் மாறுகிறது.  

இதனால் வெப்பமான பசிஃபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் மேற்குத் திசையில் அல்லாது கிழக்கு நோக்கிக் கொண்டுசெல்லப்படுகிறது. இதனால் தென்அமெரிக்கக் கடல் பகுதியில் ஏற்படும் குளிர்நீர் மேலெழும்பும் நிகழ்வு தடுக்கப்படுகிறது. பசுஃபிக் பெருங்கடலில் ஏற்படும் இத்தகைய பருவநிலை மாற்றமே எல் நினோ என அழைக்கப்படுகிறது. எல் நினோ இயல்பான காற்றின் போக்கையும் நீர் சுழற்சியையும் தடுக்கிறது.

கிழக்கு பசிஃபிக் பகுதியிலிருந்து வெப்பமான கடல்நீர் மேற்கு நோக்கிச் செல்லும் இடப்பெயர்வுஎல் நினோவால் தடைப்படுகிறது. இயல்பாக நடைபெறும் வெப்பப் பரிமாற்றம் தடுக்கப்படுவதால் கிழக்கு பசிஃபிக் கடல் பகுதியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. அதாவது பெரு, ஈக்வேடர், சிலி போன்ற தென் அமெரிக்க கடற்கரைப் பகுதிகளின் வெப்பநிலை சராசரியாக இருப்பதைக் காட்டிலும் அதிகரிக்கிறது. இதனால் அங்கே அதிக மழை, புயல், சூறாவளி ஏற்படுகிறது.

மேற்கு பசிஃபிக் கடல்பகுதி வழக்கமாக ஈரப் பதமும் அதிக மழைப் பொழிவும் கொண்டிருக்கும். ஆனால் எல்நினோ தாக்கத்தின் போது தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய மேற்கு பசிஃபிக் கடற்கரைப் பகுதிகளில் ஈரப் பதமும், மழைப் பொழிவும் குறைவதால் வறட்சி ஏற்படுகிறது.

இதைப் போலவே கிழக்கத்திய பசிஃபிக்பகுதியானது வழக்கமாக குறைந்த மழையுடன் வறண்டு குளிராகக் காணப்படும். ஆனால் எல்நினோ தாக்கத்தினால் ஈரப்பதமும், வெப்பமும் மிகுந்த அதிக மழைப்பொழிவுடைய பகுதியாக மாற்றப்படுகிறது. 

இவ்வாறு எல் நினோவால் வழக்கத்துக்கு மாறாக கிழக்கு பசிஃபிக் பகுதியில் பெருமழை, வெள்ளத்தையும், மேற்கு பசிஃபிக் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக வறட்சியையும் ஏற்படுத்துகிறது.

தென்அமெரிக்கக் கடற்கரையோரப் பகுதிகள் இயல்பாக மீன்பிடித் தொழிலுக்கு ஏதுவான குளிர்ந்த வறண்ட வானிலையைக் கொண்டுள்ளன. அங்கு மீன்வளத்தை நம்பிய பொருளாதாரம் காணப்படுகிறது.எல் நினோவின் போது கீழே உள்ள குளிர்ந்த நீர் மேலெழும்புவது தடுக்கப்படுகிறது.

இதனால் ஊட்டப் பொருட்கள் கிடைக்காமலும், வெப்பநிலை அதிகரிப்பினாலும் மீன்கள் பெரும் எண்ணிக்கையில் செத்து மடிகின்றன. மீன்வளம் குறைவதால் மீன்பிடித் தொழிலும் அதை நம்பியுள்ள அப்பகுதி மக்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. எல் நினோவால் வறண்ட பகுதிகளான பெரு, சிலி, மெக்ஸிகோவில் பெருமழையும், வெள்ளமும் ஏற்படுகிறது.

அதேசமயத்தில் எல் நினோ ஆண்டுகளில் அதிக மழை பொழியும் பிரேசிலின் அமேசான், அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் வறட்சி ஏற்படுகிறது. மத்திய அமெரிக்காவிலும் வெப்பமும் வறட்சியும் ஏற்படுகின்றன.

அதிக மழைப் பொழிவைக் கொண்ட இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற பசிபிக்கின் மேற்குப் பகுதியில் எல் நினோவினால் வறட்சி ஏற்படுகிறது. இதனால் இவ்வளமான பகுதிகளின் உணவு உற்பத்தியும், பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. மக்களுக்கு உடல்நிலை பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

எல் நினோவால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. எல் நினோவால் இந்தியாவில் பெய்யும் பருவ மழையின் அளவு குறைவதற்கான சூழல் உருவாகிறது.

எல் நினோவால் இந்தோனேசியாவில் காட்டுத் தீ பரவியது. பெருவில் மீன்வளம் குறைந்தது, இந்தியாவில் பருவ மழை பாதிக்கப்பட்டது. தென் அமெரிக்காவில் வெள்ளம் ஏற்பட்டு நீரால் பரவக் கூடிய காலரா, போன்ற நோய்களும் கொசுவால் பரவும் நோய்களும் பரவுவதற்குக் காரணமாக இருந்தது. தென்னாப்பிரிக்காவில் பெரும் வறட்சி ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்வதற்கும் காரணமாக அமைந்தது.

எல் நினோ உருவாகும் போதெல்லாம் ஒரு பகுதியில் கடுமையான மழையும், மற்றொரு பகுதியில் தாங்க முடியாத வறட்சியும் என எதிர்மறையான தட்ப வெப்பத்தைப் பல பகுதிகளில் உருவாக்குகிறது.

எல் நினோ நிகழ்வை முதன்முதலாகக் கண்டறிந்தது பெருநாட்டின் மீனவர்கள். இயல்பாகக் காணப்படுவதை விடக் கடலின் வெப்பம் எல் நினோவின் போது அதிகமாகக் காணப்படுவதை உணர்ந்தார்கள். எல் நினோ பெரு நாட்டு மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டாலும், ஸ்பானியக் குடியேறிகள்தான் இதற்கு எல் நினோ எனப் பெயரிட்டனர். எல் நினோ என்றால் சிறுவன் என்று பொருள்.

கிறிஸ்துமஸ் வரும் டிசம்பர் மாதத்தில் ஏற்படுவதால் குழந்தை ஏசு என்ற பொருளிலும் அழைக்கப்படுகிறது. வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள் பண்டைய அமெரிக்க நாகரிகங்களான மோச்சே, இன்கா ஆகியவற்றின் சீர்குலைவில் எல் நினோவுக்கும் பங்கு உண்டு என்று கருதுகின்றனர்.

எல் நினோ குறித்த பதிவு செய்யப்பட்ட வரலாறு உண்மையில் 1500களில் தொடங்குகிறது. மழையையும், நீர் சுழற்சியையும் பாதிப்பதால் உணவு உற்பத்தி, பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைச் சூழல் என அனைத்துமே எல் நினோவால் பாதிக்கப்படுகிறது.

கடல் மேற்பரப்பு வெப்ப நிலையில் ஏற்படும் விலகல்களை அளவிட விஞ்ஞானிகள் பெருங்கடல் நினோ குறியீட்டை (ONI) பயன்படுத்துகின்றனர். கடல் மேற்பரப்பு வெப்பநிலை ஐந்து தொடர்ச்சியான மூன்று மாத பருவங்களுக்கு 0.9 டிகிரி ஃபாரன் ஹீட்டிற்கும மேல் அதிகரிப்பதை எல் நினோ நிகழ்வாகக் குறிக்கின்றனர், கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பு (சுமார் 4–5° ஃபார்ன்ஹீட்டிற்கு அதிகரிக்கும் போது அந்தப் பிராந்தியத்தில் வானிலை, கால நிலைகளில் மிதமான தாக்கம் ஏற்படுத்துகிறது.

கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பு 14–18° ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கும் போது உலகளாவிய முறையில் காலநிலை மாற்றங்களை  ஏற்படுத்துகிறது. பசிபிக் படுகை உலகின் மூன்றில் ஒரு பகுதியாகப் பரந்திருப்பதால், அங்கே காற்றிலும், ஈரப் பதத்திலும் ஏற்படும் மாற்றங்கள் உலகெங்கும் தாக்கம் கொள்கின்றன.

1876-78, 1896-97, 1899-1900 ஆண்டுகளில் பருவ மாற்றங்களால் பெரும் வறட்சிகளும், ஒருசில வெள்ளங்களும் ஏற்பட்டதாக பிரிட்டிஷ் இந்திய அதிகாரிகள் ஆவணப்படுத்தியுள்ளனர். இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளில் 30 முதல் 60 மில்லியன் மக்கள் இறந்து போயினர்; நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் பட்டினியாலும், சமூக அரசியல் மோதல்களாலும் பாதிக்கப்பட்டனர்.

ஐரோப்பிய காலனியாதிக்கமும், முதலாளித்துவத்தின் பரவலும் இந்தப் பேரழிவுகளில் முக்கியப் பங்கு வகித்திருந்தாலும், எல் நினோவும், லா நினாவும் உலகளாவிய அளவில் பெரும் வறட்சி, பயிர் சேதங்களையும், மலேரியா நோய் பரவுவதற்கும் தூண்டுகோலாய் இருந்துள்ளன.

1972-73, 1982-83, 1997-98, 2015-16இல் ஏற்பட்ட எல் நினோ நிகழ்வுகள் கடந்த அரை நூற்றாண்டின் பெரும் வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ, ஆகிய நிகழ்வுகளைத் தூண்டியுள்ளன. பவளப் பாறைகளை நிறமிழக்கச் செய்துள்ளன. வரலாற்றாசிரியர் மைக் டேவிஸ் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குறைந்தது மூன்று பெரிய பஞ்சங்களுக்கு எல் நினோவுடன் தொடர்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1957-58இல் உருவான எல் நினோவால், கலிபோர்னியாவின் கெல்ப் காடுகள் கடுமையாக சேதமடைந்தன. 1965-66இல் ஏற்பட்ட எல் நினோ பெருவில் உரத்திற்கான சந்தையை அழித்ததுடன், விலங்குகளின் தீவனமாக (மீன் உணவுக்கு பதிலாக) சோயாபீன்ஸ் பயன்பாட்டையும் தூண்டியது.

1972-73ஆம் ஆண்டில், நங்கூர மீன்கள் அழிவுக்குட்பட்டதால், பல லட்சக்கணக்கான கடல் பறவைகளின் மரணத்திற்கும் வழிவகுத்தது. இதனால் பெருவியப் பொருளாதாரத்திலும், அரசாட்சியிலும் சீர்குலைக்கும் விளைவுகளை ஏற்படுத்தியது.

20ஆம் நூற்றாண்டில் 1982-83, 1997-98 ஆகிய ஆண்டுகளில் மிகத் தீவிரமான எல் நினோ நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. 2016இல் ஏற்பட்ட எல் நினோவால் 60 பில்லியன் மக்கள் ஆசிய பசிபிக், லத்தீன் அமெரிக்கப் பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு இல்லாமல் போனது என ஐநா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எல் நினோவுக்கு நேர் எதிரான விளைவுகளை லா நினா என்ற நிகழ்வு ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் கிழக்கத்திய வர்த்தகக் காற்று வழக்கத்தை விட வலுவாக வீசுகிறது. பெரு, ஈக்குவடோர், சிலி போன்ற கிழக்கு பசிஃபிக் கடற்கரைப் பகுதிகள் இயல்பை விட குளிர்ச்சியாகவும், வறட்சியாகவும் காணப்படுகிறது. மேற்கு பசிஃபிக் பகுதியானது வழக்கத்தை விட அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது.

இதனால் கிழக்கு பசிஃபிக் பகுதியில் வறட்சியையும், மேற்கு பசிஃபிக் பகுதியில் அதிக மழைப் பொழிவையும், வெள்ளத்தையும் ஏற்படுத்துகிறது. ஆஸ்திரேலியாவில் கடும் வெள்ளம், இந்தியாவில் பருவ மழையின் அதிகரிப்பையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக, எல் நினோ, லா நினா ஆகிய நிகழ்வுகள் 2 - 7 வருடங்களுக்கு ஒரு முறை சீரற்ற இடைவெளியில் நிகழ்கின்றன. லா நினாவை விட எல் நினோவே அடிக்கடி ஏற்படுகிறது.

இயற்கையாக நிகழும் காலநிலை நிகழ்வுகளான எல் நினோ, லா நினாவால் பசிபிக் கடல் மேற்பரப்பின் இயல்பான வெப்பநிலை அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. 3 - 7 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் இந்தச் சுழற்சியில் வெப்பமான கட்டமாக எல் நினோவும், குளிர்ச்சியான கட்டமாக லா நினாவும் உள்ளன.

எல் நினோ, லா நினா ஒவ்வொன்றும் 9 - 12 மாதங்களுக்கு நீடிக்கும், அரிதான சந்தர்ப்பங்களில் பல ஆண்டுகள் நீடிக்கும். புவி வெப்பமாதலால் எல் நினோ நிகழ்வுகளும் அதன் தாக்கமும் அதிகரித்துள்ளன.

"லா நினா பொதுவாக உலகளாவிய வெப்பநிலையில் குளிரூட்டும் விளைவைக் கொண்டிருக்கிறது, ஆனால் இந்தக் குளிரூட்டும் விளைவையும் தாண்டி புவியானது பசுங்குடில் வாயுக்களால் அதிகமாக வெப்பப்படுத்தப்படுகிறது.

ஆகையால் லா நினா ஏற்பட்ட 2020 பதிவு செய்யப்பட்ட வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருந்துள்ளது. இதனால் தற்பொழுது ஏற்படும் லா நினா ஆண்டுகள் கடந்த காலத்தின் வலுவான எல் நினோ ஆண்டுகளை விட வெப்பமாக உள்ளன. லா நினா காலத்தில், மத்திய பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் புவிமையக் கோட்டுப் பகுதியில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5° C (5.4 முதல் 9° F) வரை குறைவாக இருக்கும்.

லா நினாவில் உள்ள லா என்பது ஸ்பானிய மொழியில் பெண்பாலைக் குறிக்கும் சொல். லா நினா என்றால் சிறுமி என்று பொருள். லா நினாவின் போது ஆஸ்திரேலியா, இந்தோனேசியா பகுதியில் அதிக மழை பெய்கிறது. ஈக்வேடார், பெருஆகியதென்அமெரிக்கக்கடற்கரைப்பகுதிகளில்அதிகவறட்சிஏற்படுகிறது.

இந்தோ - பசிஃபிக் பகுதியில் காற்றழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகள் தெற்கத்திய அலைவு எனக் குறிப்பிடப்படுகிறது. வழக்கமாக வெப்பமண்டல தென் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உயர் அழுத்தம் நிலவும் போது வெப்பமண்டலக் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதி குறைந்த அழுத்தத்துடன் காணப்படும்.

ஆனால் சில ஆண்டுகளில், இந்த வளிமண்டல அழுத்த நிலைகளில் ஒரு தலைகீழ் மாற்றம் ஏற்படுகிறது. கிழக்கு இந்தியப் பெருங்கடலுடன் ஒப்பிடுகையில் கிழக்கு பசிபிக் குறைந்த அழுத்தத்தைக் கொண்டுள்ளது. வளிமண்டல அழுத்தத்தில் ஏற்படும் இத்தகைய மாற்றமே தெற்கத்திய அலைவு என அழைக்கப்படுகிறது.

எல் நினோ, லா நினா, வடக்கத்திய அலைவு ஆகியவற்றை ஒன்றிணைத்து என்சோ (ENSO) என அழைக்கப்படுகிறது. எல் நினோ, லா நினா ஆகியவை என்சோ சுழற்சியின் கடல்சார்ந்த நிகழ்வுகளையும், தெற்கத்திய அலைவு அதன் வளிமண்டல மாற்றத்தையும் குறிப்பிடுகின்றன. பசிஃபிக் பெருங்கடல் பகுதிகளில் பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக என்சோ உள்ளது.

இந்தியப் பெருங்கடல் இருமுனைவு:

இந்தியப் பெருங்கடலில் கிழக்கு மேற்குப் பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை ஏற்றத்தாழ்வு பருவநிலையில் முக்கியத் தாக்கம் செலுத்துகிறது. இது இந்தியப் பெருங்கடல் இருமுனைவு என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய நினோ என்றும் அழைக்கப்படுகிறது.  இந்தியப் பெருங்கடலின் மேற்கில் ஆஃபிரிக்காவும், கிழக்கே இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவும் உள்ளது.

இந்தியப் பெருங்கடல் இருமுனைவு நேர்நிறை, எதிர்மறை ஆகிய இரு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் மேற்குப்பகுதியில் (ஆப்பிரிக்கப் பகுதியில்) கடல்நீரின் வெப்பம் அதிகமாகவும் கிழக்குப் பகுதியில் (இந்தோனேசியா பகுதியில்) கடல்நீரின் வெப்பம் குறைவாகவும் காணப்படுகிறது.

இதனால் இந்தியப் பகுதியிலும், கிழக்கு ஆஃப்ரிக்கப் பகுதியிலும் அதிக மழை வெள்ளம் ஏற்படுவதற்கும், அதே நேரத்தில் இந்தோனேசியா பகுதியில் மழை குறைவதற்கும் காரணமாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் இருமுனைவு எதிர்மறை நிலையில் இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ள கடல் நீரின் வெப்பநிலை குறைவாகவும், இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா பகுதியில் கடல் நீரின் வெப்பநிலை அதிகமாகவும் காணப்படுகிறது. இதனால் ஆஃபிரிக்காவில் வறட்சி ஏற்படுவதுடன் இந்தியாவின் இயல்பான பருவமழைப் பொழிவையும் பாதிக்கிறது.

இந்தியப் பருவ மழையில் எல் நினோவின் தாக்கத்தை இந்தியப் பெருங்கடல் இரு முனைவால் அதிகமாக்கவும் முடியும், பலவீனப்படுத்தவும் முடியும். எல் நினோ ஏற்படும் போது, இந்தியப் பெருங்கடல் இருமுனைவு நேர்நிறை நிலையில் இருந்தால், எல் நினோ தாக்கத்தையும் கடந்து இந்தியா நல்ல மழையைப் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எடுத்துக்காட்டாக, எல் நினோ ஏற்பட்ட1983, 1994 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் இந்தியப் பெருங்கடல் இருமுனைவு நேர்மறைநிலையில் இருந்ததால் இந்தியாவில் இயல்பான அல்லது அதிக மழைப் பொழிவு ஏற்பட வழிவகுத்தது. இதேபோல், 1992 போன்ற ஆண்டுகளில், இந்தியப் பெருங்கடல் இருமுனைவு எதிர்மறை நிலையும், எல் நினோவும் ஒன்றிணைந்து இந்தியாவில் குறைந்த மழைப்பொழிவை ஏற்படுத்தியது.

2007ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடல் இருமுனைவு நேர்நிறைநிலை, லா நினாவுடன் இணைந்து தோன்றியது மிகவும் அரிதான நிகழ்வு ஆகும், அதற்குமுன் 1967இல் ஒரு முறை மட்டுமே அவ்வாறு நிகழ்ந்துள்ளது. புவிவெப்பமாதலால் இந்தியப் பெருங்கடல் இருமுனைவால் ஏற்படும் தீவிர காலநிலை, வானிலை நிகழ்வுகள் எதிர்காலத்தில் அடிக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது.

வட அட்லாண்டிக் அலைவு:

ஐரோப்பாவின் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து போன்ற வட அட்லாண்டிக் பகுதிகளில் வளிமண்டல அழுத்தம் குறைவாக உள்ளது அதேநேரத்தில் டென்மார்க் போன்ற தென்பகுதிகளில் இதனுடன் ஒப்பிடும் பொழுது வளி மண்டல அழுத்தம் அதிகமாக உள்ளது.

இந்த வளிமண்டல அழுத்த ஏற்றத்தாழ்வுகளில் நேர்நிறை, எதிர்மறை என இரு நிலைகள் காணப்படுகின்றன. இந்த இரண்டு பகுதிகளுக்கிடையிலான வளிமண்டல அழுத்த வேறுபாடு அதிகமாக இருக்கும் நிலை நேர்நிறை என்றும், குறைவாக இருக்கும் நிலை எதிர்மறை என்றும் அழைக்கப்படுகிறது.

நேர்நிறையாக இருக்கும் போது வட ஐரோப்பியப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவும், தென் ஐரோப்பியப் பகுதிகளில் குறைந்த மழைப் பொழிவும்ஏற்படுகிறது. எதிர்மறையாக இருக்கும் போது, தென்ஐரோப்பியப் பகுதிகளில் மழைப் பொழிவு அதிகமாகவும், வடஐரோப்பிய பகுதிகளில் மழைப் பொழிவு குறைவாகவும் உள்ளது.

என்சோ, இந்தியப் பெருங்கடல் இரு முனைவு, வட அட்லாண்டிக் அலைவு ஆகிய இந்த மூன்று நிகழ்வுகளும் உலகளவில் மழைப் பொழிவிலும் பருவ நிலையிலும் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

புவிவெப்பமாதலால் பருவநிலை மாற்றங்களும், வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர்களும் அடிக்கடி ஏற்படுவதற்கான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளவில் உணவு உற்பத்தியும், நன்னீர் சுழற்சியும் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புவிவெப்பமாதலைக் கட்டுக்குள் வைப்பதன் மூலமே பேரழிவுகளிலிருந்து பாதுகாப்புப் பெற முடியும்.

- சமந்தா