அது 1982 அல்லது 83ஆம் ஆண்டு, நானும் தோழர் லெனினும் திருச்சிராப்பள்ளி மையச் சிறையில் வாழ்நாள் சிறையாளர்களாக இருந்தோம். எங்களை மற்றச் சிறைப்பட்டோருடன் சேர விடாமல் தனியாக வைத்திருந்ததால் எங்களுக்குச் சிறு உதவிகள் செய்வதற்காக ஏவலராக (ஆர்டர்லி) வேலைக்கு ஆள் அமர்த்துவார்கள். குறைந்த தண்டனை பெற்ற ஒருவர்தான் இப்படி வேலைக்கு வருவார். அப்படி எங்களிடம் வந்தவர்தான் சிறிதர் என்ற இளைஞர். திருட்டு வழக்கில் இரண்டு ஆண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனை. ஊர் உடையார்கோவில் அங்கேதான் திருட்டு வழக்கில் சிக்கினார். சொந்த ஊர் அம்மாப்பேட்டை என்றார். எல்லாம் எனக்குப் பழகிய ஊர்கள், தயங்காமல் படபடவென்று பேசினார். பெயர் கேட்டேன் சொன்னார், “இந்தப் பெயர் வேண்டாம், திருமாறன் என்றே நாங்கள் கூப்பிடுவோம்.” என்றேன். என் பழைய சென்னை நண்பர் ஒருவர் சிறிதர் என்ற பெயரை திருமாறன் என்று மாற்றிக் கொண்ட நினைவுடன் இப்படிச் சொன்னேன். அது முதல் அவர் திருமாறன் ஆகி விட்டார்.

1974ஆம் ஆண்டு தோழர் ஏஜிகே தலைமையில் சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கம் அமைத்து 25 கோரிக்கைகளுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் நடத்திய பின் தமிழகத்தின் 9 மையச் சிறைகளையும் ஒருங்கிணைத்துப் போராடுவது எங்கள் கனவாக இருந்தது. தோழர் லெனினும் நானும் அதற்காகவே திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தோம். சிறைக்குள் இரகசிய அமைப்பு ஒன்றைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தோம். சுதந்திர தாகம் என்ற திங்கள் கையேடு வெளியிட்டுச் சுற்றுக்கு அனுப்பினோம். இதற்கான தொடர்புப் பணிகளில் திருமாறனை ஈடுபடுத்த மெல்ல மெல்லப் பழக்கி வந்தோம். 50 கோரிக்கைகள் வரைந்து சிறையமைப்பில் விவாதித்து இறுதி செய்து முடித்தோம். பிற மையச் சிறைகளிலும் அமைப்பை விரிவாக்க முயன்று கொண்டிருந்தோம். இந்தப் பணிகளில் நாங்கள் ஒதுக்கிய வேலைகளைக் கவனமாகச் செய்து திருமாறன் இப்போது எங்கள் தோழராகியிருந்தார்.

காலவரையற்ற பட்டினிப் போராட்டத்துக்கு உறுதியான ஒரு குழுவைத் தெரிவு செய்ய வேண்டியிருந்தது. நான் அவ்வளவு கறாராக இருக்க மாட்டேன் என்பதால் இந்தப் பொறுப்பைத் தோழர் லெனின் ஏற்றுச் செய்தார். உள்ளே நாங்கள் அமைத்திருந்த தொகுதிக் குழுக்கள் தேர்ந்தெடுத்து அனுப்புகிறவர்களை நேர்காணல் செய்து கடுமையாக வடிகட்டி, சாகும்வரை உண்ணாமலிருக்க அணியமானவர்களை மட்டும் லெனின் தெரிவு செய்வார். 1974 போராட்டப் பட்டறிவைக் கருத்தில் கொண்டு அவர் கடுமையாக நடந்து கொண்டார்.

ஒருநாள் திருமாறன் என்னிடம் “உங்களோட நானும் உண்ணாவிரதம் இருக்கலாம்னு ஆசைப்படுறன். அண்ணன் கிட்ட சொல்லி என்னை சேத்துக்க சொல்லுங்க” என்றார். நான் லெனினிடம் சொன்ன போது, “என்ன தியாகராஜா விளையாடுறியா? அதெல்லாம் முடியாது” என்றார். மேலும் இந்தக் குழுவில் இடம் பெற்றவர்கள் அனைவரும் ஜென்மக்காரர்கள், இவன் வெறும் ரெண்டு வருசக்காரன் என்றார். ஆனால் திருமாறன் விடுவதாக இல்லை. இறுதியாகத் தேர்வு செய்யப்பட்ட 16 பேர் குழுவில் அவரும் இடம் பெற்று விட்டார். அது மிகப் பெரிய போராட்டம். பாளையங்கோட்டை தவிர எல்லா மையச் சிறைகளிலும் போராட்டம் பரவலாக நடைபெற்றது. அப்போதைய டிஐஜி வித்யாசாகர் “என்னய்யா, திருச்சில என்னய்யா பண்றிங்க? இங்கதான்யா ஹெட்குவார்ட்டர்? ஒடுக்குங்கய்யா” என்று எங்கள் எதிரிலேயே கொக்கரித்தார்.

நானும் லெனினும் உட்பட 15 பேர் காலவரையற்ற பட்டினிப் போராட்டாத்தில் இருந்தோம். திருமாறன் இந்தக் குழுவில் இருப்பது சிறையதிகாரிகளுக்குப் பெரிய உறுத்தலாக இருந்தது. சிறை முழுக்கவும் பல்வேறு வடிவில் போராடிக் கொண்டிருந்தது. எங்கள் குழுவில் ஒருசிலர் நலிவுறத் தொடங்கிய போது எங்களைச் சிறை மருத்துவ மனையில் கொண்டுபோய்ப் படுக்க வைத்தனர். 12 அல்லது 13ஆம் நாள் திருமாறன் மயங்கி விட்டார். மருத்துவர்கள் ஊசிபோட்டு குளுக்கோஸ் ஏற்ற முயன்ற போது விழித்துக் கொண்டு தட்டி விட்டார். எவ்வளவு சொல்லியும் அசைந்து கொடுக்கவில்லை.

சிறையலுவலர் (ஜெயிலர்) வந்தார். திருமாறனிடம் எடுத்துச் சொன்னார்: “ஒங்க தோழர் ரெண்டு பேரும் சொல்றாங்கண்ணு கேட்காதே. எல்லாம் ஜென்மக்காரன். அவன் கோரிக்கைக்காகப் போராடுறான். பத்து வருசம் கழிச்சவனை விடுதலை பண்ணுங்கறான், நீ ரெண்டு வருசக்காரன். சரின்னு சொல்லு, மார்க்கு போட்டு நாளைக்கே ரிலீஸ் பண்றன். நீ இப்படியே இருந்தின்னா முழுசா ரெண்டு வருசம் கழிச்சுதான் வெளிய போக முடியும், என்ன சொல்ற?” திருமாறன் நிதானமாகச் சொன்னார்: “ஐயா, நான் உசுர் பொழைச்சு வீடு போகணும்னு இதில சேரலிங்கய்யா. எனக்கு மார்க்கே வேணாங்கய்யா. இவங்களோட இருக்கிறதுக்கு அப்பறம் வாய்ப்புக் கிடைக்காதுங்க.” அதிகாரி வாயடைத்துப் போனார்.

போராட்டம் முடிந்து சில மாத காலம் திருமாறன் எங்களோடு இருந்தார். வெளியே போய் என்ன செய்யலாம்? ஊருக்குப் போனால் மீண்டும் மீண்டும் பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளி விடுவார்கள். வேறு எங்காவது அனுப்ப வேண்டும்? வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்வது? “ஒரு பழைய சைக்கிள் இருந்தால் பிழைத்துக் கொள்வேன்” என்றார். அதற்கு 300 ரூபாய் இருந்தால் போதும்.

பந்துவாக்கோட்டை தோழர் லெனின் இல்லத்துக்கு அனுப்புவது, சிபிஎம் கட்சியிடம் 300 ரூபாய் கொடுக்கச் சொல்வது என்று முடிவு செய்தோம். அப்போது திருச்சியில் டி.கே. ரெங்கராஜன், கே, வரதராஜன் ஆகிய தோழர்கள் இருந்தார்கள். அவர்களுக்குச் சொல்லியனுப்பினோம். “சரி, கொடுப்போம், ஆனால் 300 ரூபாயை வைத்துக் கொண்டு என்னசெய்வது? மூலதனம் மொழிபெயர்த்த தோழர் தியாகுவுக்கு நடைமுறைப் பொருளாதாரம் தெரியவில்லையே?” என்றார்களாம்.

திருமாறன் விடுதலையான பின் பந்துவாக்கோட்டை சென்று அம்மா, தங்கைகளோடு இருந்து கொண்டார். பழைய சைக்கிள் வாங்கி இரண்டு மூன்று நாளைக்கு ஒரு முறை ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம் சென்று கருவாடு வாங்கி வருவார், சைக்கிளிலேயே ஊர் ஊராகப் போய் விற்று வருவார். ஓய்வு கிடைக்கும் போது மானாவரி நிலத்தில் பயிர்ச் செலவும் செய்வார். எங்கள் குடும்பத்துக்கு உதவியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தார். கொஞ்சம் காசு பணம் சேர்த்துக் கொண்டு திருவாரூர் சென்று கமலாலயக் கரையில் தேநீர்க்கடை வைத்துப் பிழைக்கலானார்.

திருமாறன் பின்னணியைத் தெரிந்து கொண்டு திருவாரூரில் காவல்துறை தொல்லை கொடுக்கத் தொடங்கியது. எங்கே திருட்டுப் போனாலும் அவரைக் கூப்பிட்டு விசாரிப்பார்கள். ஒரு முறை உயரதிகாரி ஒருவரிடம் அவர் என் பெயரைச் சொன்னாராம். “நீ சொல்வது உண்மையானால் நான் உனக்காக எதுவும் செய்வேன்” என்றாராம் அவர், பிறகு உண்மைதான் என்று உறுதி செய்து கொண்டு “உன் பெயரை லிஸ்ட்லேருந்து எடுத்தாச்சு, போய் வேலையைப் பார்” என்று அனுப்பி விட்டாராம்.

அவர் வாழ்க்கையில் திருமணம் நடந்து குழந்தைகள் பிறந்தன, அவர்களை நன்கு படிக்க வைத்தார். என்னோடு தொடர்ந்து தொடர்பில் இருந்தார். அரசியலிலும் ஈடுபாடு இருந்தது, என்னை “தலைவரே” என்றுதான் அழைப்பார். திருவாரூர் செல்லும் போதெல்லாம் அவர் கடையில்தான் உணவு! என் குறிப்பறிந்து உதவுவார், தமிழ்த் தேசிய முன்னணி அமைத்த போது கமலாலயக் கரையில் தன் தேநீர்க் கடையின் எதிரில் கொடியேற்றி வைத்தார். முன்னணி செயல்பாடுகளில் முடிந்தவரை உதவியாக இருந்தார். முன்னணி கலைந்து போனபின் அவரது அரசியல் ஈடுபாடும் மங்கி விட்டது. கடைசியாக இந்திய ஜனநாயகக் கட்சியில் திருவாரூர் மாவட்டச் செயலாளராக இருந்தார்.

கடைசியாக மார்ச் 12 இரவு கூத்தாநல்லூரில் பேசி விட்டு திருவாரூர் வந்துதான் தொடர்வண்டியேறினேன். பிறகு ஒரு நாள் திருமாறனிடமிருந்து அழைப்பு “என்ன தலைவரே, திருவாரூர் வந்து விட்டு சொல்லால் போய் விட்டீர்களே?” என்று வருத்தமாகப் பேசினார். சரிய்யா, அடுத்த முறை வருகிறேன் என்றேன்.

மே தொடக்கத்தில் தமிழர் தன்மானப் பேரவை தோழர் பிரகாஷ் அழைத்துச் சொன்னார்: “ஐயா, ஏப்ரல் 24ஆம் தேதி திருமாறன் திடீர்னு செத்துட்டாராம். மாரடைப்பாம்! கொரோனா ஊரடங்குனால உடனே தெரியாமப் போச்சு” என்றார். எனக்கு ஒரு தோழனை இழந்ததை விடவும் ஒரு பிள்ளையை வளர்த்துப் பறிகொடுத்த உணர்வு!

திருமாறனின் மகன் தினேஷ், காவல் துறையில் பணி செய்கிறார், “தலைவரே, நம்ம வீட்ல ஒரு போலீஸ்காரன்” என்று அவர் சொல்லிச் சிரித்தது கண்ணில் நிற்கிறது. மகள் வெளிநாட்டில் இருக்கிறார். வாழ்க்கையின் சுழற்சிதான் எவ்வளவு வியக்கத்தக்கது!

போராட்டம் ஒரு மனிதனை எப்படி மாற்றியமைக்கும் என்பதற்கு நான் கண்ட சான்றுகளில் ஒருவராக எனக்கு என்றென்றும் திருமாறன் இருப்பார்.

- தியாகு