rain flowers

பொடியாய் உதிரும்

தவிட்டுத் தூறலைக்

கைகளில் ஏந்தித்

தேடிப் பார்ப்பேன்

பொறுக்கு மண் கரைய

வழுக்கும் குளக்கரையில்

மசமசக்கும் தூறலில்

தூண்டிலுடன் நிற்பேன்

சிட்டாய்ப் பறந்தும்

வீடு சேரவிடாமல்

வழிமறித்துக் கொள்ளும்

கனத்த மழையைப்

பதுங்கி நின்று

பார்த்துக் கொண்டிருப்பேன்

வீதியேறி மீன்களை

விளையாடித் துள்ளவைக்கும்

குளத்தை நிறைக்கும்

அடை மழை என்றால்

அப்படியொரு பிரியம்

சட்டென இருட்டி

அடித்துப் பொழியும்

நல்ல மழையில்

நனைந்து கிடப்பேன்

நடுக் குளத்துத்

தாமரைப்பூக்களில்

நானும் ஒன்றாக

இரவில் பெய்யும்

பெருமழை என்றால்

கிளைகளை உலுக்கி

காலையில் நனைவேன்

அடுப்பிற்குப்

பனைமட்டை பொறுக்க

ஆட்டுக்குத் தழை ஒடிக்க

கடுகுக்கும் எண்ணெய்க்கும்

கடைக்கு ஓட என

மழை என்றாலே

பாதி நனைந்த பாவாடையுடன்

திரிந்தலைந்த

அது வேறு மழைக்காலம்