karl marx 350கார்ல் மார்க்ஸ் தமது வாழ்க்கைப் பெரும்படைப்பைத் தம் தாய்மொழி ஆகிய ’டைச்’ என்கிற ஜெர்மன் மொழியில் எழுதி Das Kapital என்று அதற்குப் பெயரிட்டார். இதையே ஆங்கிலத்தில் CAPITAL என்று மொழிபெயர்த்து வெளியிட்டனர். இதன் தமிழாக்கத்துக்கு மூலதனம் என்று பெயரிடப்பட்டது. நான் மட்டுமல்ல, தோழர் ஜமதக்னியும் இவ்வாறே பெயரிட்டார். முழுமையாக இல்லா விட்டாலும் நூலின் சில பகுதிகளை மட்டும் தமிழாக்கம் செய்தவர்களும் மூலதனம் என்ற சொல்லையே பயன்படுத்தினர். ரா. கிருஷ்ணையா, ராமநாதன் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

தமிழில் வந்துள்ள மார்க்சியப் படைப்புகள் அனைத்திலும் மூலதனம் என்றுதான் உள்ளது. இதற்கு விலக்காக, அன்றைக்கே CAPITAL நூலைத் தமிழாக்கம் செய்து தொடராக வெளியிடத் தொடங்கிய தோழர் ஜோதிப்பிரகாசம் மட்டும்தான் மூலதனத்துக்கு மாற்றாக முதல் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இதற்கான பெருமை அவருக்குரியது. 

சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம் capital என்பதற்குச் சமனாக முதல், மூலதனம் என்ற இரு சொற்களையும் தருகிறது. அடுத்து எழுந்த கேள்வி: மூலதனம் தமிழாகுமா? மூலம்+தனம் = மூலதனம். மூலம் தமிழ் தான். ஆனால் தனம் தமிழ்தானா? தமிழ்தான் என்று சொல்லக் கூடிய சில தமிழறிஞர்கள் உண்டு. தனம் என்றால் தனது செல்வம் என்று இவர்கள் விளக்கமளிக்கின்றனர்.

ஆனால் தனம் சமற்கிருதச் சொல் என்ற வலுவான கருத்து உள்ளது. சொல்லாய்வறிஞர் அருளியாரின் அயற்சொல் அகராதி தனம் சம்ற்கிருதம் எனச் சுட்டி, செல்வம் முதலான பொருளுரைக்கிறது. மூலதனம் என்ற சொல்லில் மூலம் தமிழென்றும் தனம் சமற்கிருதம் என்றும் பிரித்துக் காட்டுகிறது. மூலதனம் இடையில் தமிழுக்கு வந்திருக்கலாம், ஆனால் முதல்தான் தூய தமிழ்ச்சொல் என்ற அருளியாரின் கருத்தை நான் ஏற்றுக் கொல்கிறேன். 

திருக்குறளில் ”ஆக்கம் கருதி முதல் இழக்கும்.செய்வினை” (குறள்463) பற்றிய குறிப்பு உள்ளது. செவ்வியல் தமிழ் இலக்கியம் எதிலும் தனமோ மூலதனமோ இல்லை. இருந்தாலும் தூய தமிழ் நோக்கில் முதல் என்ற சொல்லே சிறப்பு என்ற முடிவுக்கு வந்தேன். மூலதனம் இவ்வாறு என்னிடம் முதல் ஆயிற்று. 

ஆங்கிலத்தில் capital என்பதை மூலதனம் என்று சொன்னாலும் capitalist என்பவரை மூலதனவாதி அல்லது மூலதன அதிபர் என்று சொல்வதில்லை. முதலாளர் அல்லது முதலாளியர் என்றுதான் சொல்கிறோம். கலைச் சொல்லாக்கத்தில் இவ்வாறான முரண்பாடுகளுக்கு இடமில்லை. Capitalist முதலாளர் என்றால் capital முதலாகத்தான் இருக்க முடியும்.

ஆனால் முதல் என்று மட்டும் சொல்வதில் வேறு பல சிக்கல்கள் தலை தூக்கின. ஒன்றாவது என்ற வழக்கமான பொருளிலும் முதல் வருவதைத் தவிர்க்க முடியாது. ஒரே ஒரு தொடர், ஒரெ ஒரு சொல்லியம் (வாக்கியம்), ஒரெ ஒரு கட்டுரை என்றால் சமாளிக்கலாம். இயல் ஒன்று மட்டுமே ஆயிரம் பக்கம் வரக்கூடிய ஒரு நூலில் முதல் என்பதற்கு மேல் ஒரு சொல் தேவை என்று எனக்குத் தோன்றிற்று. முதலீடு, இடுமுதல் போன்ற மாற்றுச் சொற்கள் சரிப்படவில்லை.

ஏனென்றால் மார்க்ஸ் capital என்பதற்குத் தரும் விளக்கம் அடிப்படையிலேயே புதியதொன்று. அது வெறும் முதலீடு, முன்னீடு அல்லது செலவீடு அன்று. இறுதி நோக்கில் capital என்பதொரு குமுக உறவு என்பதை அவர் மெய்ப்பிப்பார். இது வழக்கமான capital அல்ல என்பதால்தான் ஜெர்மன் மொழியில் Das Kapital என்றும், பிரெஞ்சு மொழியில் Le Capital என்றும் சொல்லப்பட்டது. ஜெர்மன் மொழியில் Das, பிரெஞ்சு மொழியில் Le என்பற்றுக்கு நிகரான ஆங்கிலச் சொல் The என்பது. ஆங்கிலத்தில் a, an, the என்பவை articles எனப்படும்.

ஆக, THE CAPITAL என்பதே சரியான பெயர். ஆங்கிலப் பெயரில் the தொக்குநிற்பதாகக் கொள்ள வேண்டும். இங்கே das, le அல்லது the செய்யும் வேலை பலவற்றில் ஒன்றல்ல, தன் வகையில் ஒன்றே ஒன்று என்பதைக் குறிப்பதாகும். வெறும் முதல் என்பதால் இந்தச் சிறப்பியல்பை முழுமையாக உணர்த்த முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். மூலதனத்தில் தனத்தை மட்டும் நீக்கி விட்டு முதலைச் சேர்த்து மூலமுதல் ஆக்கி அசைபோடலானேன். 

மார்க்ஸ் கண்டறிந்த Capital என்பது வரலாற்று வழிப்பட்டது. இதுவும் வள்ளுவர் காலத்திய முதலும் ஒன்றல்ல. இந்த வேறுபாட்டை உணர்த்தவும் முதல் அல்லாத, ஆனால் முதலும் அடங்கிய ஒரு சொல் தேவை எனக் கருதினேன். இப்படித்தான் மூலமுதலுக்கான பொறி தட்டிற்று. 

பட்டுக்கோட்டையில் தமிழ் அறம் அமைப்பின் நிறுவுநர் / தலைவர் தோழர் இரமசாமி அழைத்து ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கு வண்ணத்தட்டி ஒன்றில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் எழுச்சிப் பாடல் எழுதி வைக்கபட்டிருந்தது. அதில் ஒரு வரி ”அயல்நாட்டு வல்லரசின் மூலமுதலீடும்” என்றிருந்தது. என் உதட்டில் புன்னகை! “வேறென்ன வேண்டும்” என்று மனத்துக்குள் பாட்டு வந்தது. கனிச்சாறு மூன்றாம் தொகுதியில் “புயல்வேகப் புரட்சியொன்று புறப்பட்டதிங்கே!” என்ற பாடலில் இந்த வரி இடம் பெற்றிருப்பதைப் பிறகு தெரிந்து கொண்டேன். 

மூலதனம் இப்படித்தான் மூலமுதல் ஆயிற்று. இப்போதும் கூட வாய்ப்புள்ள இடங்களில் முதல் என்றும் சுருக்கிச் சொல்கிறேன். தூய தமிழாக்கம் படிக்கும் போது நீங்களே தெரிந்து கொள்ளலாம்.  

கார்ல் மார்க்சின் பெரும்படைப்பு
மூலமுதல்
இயல் ஒன்று (தூய தமிழாக்கம்)
முன்வெளியீட்டுத் திட்டத்தில் சேர படி ஒன்றுக்கு ரூ.600/-.
நன்கொடையும் தரலாம்.
வைப்பகச் சேமிப்புக் கணக்கு:
K. THIAGARAJAN,
SB A/C No. 20654748511
ALLAHABAD BANK / AMBATTUR BRANCH
CHENNAI- 53.
IFSC: ALLA0211909