telugukhana 600சென்ற ஆண்டு அனைத்துலக உழைக்கும் பெண்கள் நாளை முன்னிட்டு ஐதராபாத்தில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்காக நான் இங்கிருந்து சென்றிருந்தேன். தெலங்கானா போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு  வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடந்தது.

அப்போது போராட்டத்தில் உயிர் விட்ட மாணவர் ஒருவரின் தாயார் பேசும் பொழுது, பெருமை கலந்த கண்ணீருடன்  போராட்ட வடுக்களையும் வலிகளையும் சுமந்தபடி ‘ம தெலங்கானா மீக்கே காவாலி’ என்று சொன்ன வார்த்தைகள் இன்று நனவாகி  உள்ளன. 

கடந்த  2014 சூன் 2ஆம் நாள்  இந்தியாவின் 29ஆவது மாநிலமாகத் தெலங்கானா  அறிவிக்கப்பட்டது. 3.5 கோடி மக்கள்தொகை, 10 மாவட்டங்கள். நாற்புறமும் நிலம் சூழ்ந்த மாநிலமாகத் தெலங்கானா அமைந்துள்ளது. சூன்  2 ஆம் நாள் மாநில அரசின் பதவி ஏற்பு விழா நடந்தது.  தெலங்கானா இராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

ஒரு சமூகம் முழுமையும் ஓரங்குலம் முன்னேறிச் செல்வதற்கு எத்துணை நீண்ட நெடிய போராட்டம் நடத்த வேண்டி இருக்கின்றது என்பதை தெலங்கானா போராட்டம் நமக்கு உணர்த்துகின்றது. தெலங்கானா மக்களின் வீரஞ்செறிந்த போராட்ட வரலாறு போராடும் அனைத்து மக்களுக்கும் ஊக்கமாகும்.

தனி மாநிலமானதால் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? மாநில அரசே ஒரு 'மேற்பார்வை’ அரசு தானே? என்று கேட்கலாம். நாமும் பிரச்சனைகள் தீர்ந்துவிட்டதாகக் கருதவில்லை. சனநாயகத்திற்கான போராட்டத்தில் ஓரடி முன்னே போயினர் தெலங்கானா மக்கள் என்கின்றோம்.  அடக்குமுறைக்கு அடி பணியாத பண்பைத் தமது இரத்தத்திலேயே கொண்ட தெலங்கானா மக்கள் இந்திய அரசின் தேசிய ஒடுக்கு முறைக் கெதிராகவும்  கிளர்ந்து எழுவார்கள்! 

நீண்ட போராட்டத்தின் பயனாய்த்  தெலங்கானா மக்கள் தமது வரலாற்று வளர்ச்சிப் போக்கில் ஓரடி முன்னேறியுள்ளனர். தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை ஆதரித்துக் குரல்  கொடுத்தவர்கள் என்ற முறையில் தெலங்கானா மக்களின் மகிழ்ச்சிப் பெருக்கில் நாமும் பங்கு பெறுகின்றோம். தெலங்கானா போராட்டத் தியாகிகளுக்கு வீர வணக்கம்! தெலங்கானா மக்களுக்கு நமது நேசமிகு  வாழ்த்து!

- பரிமளா (சேவ் தமிழ்ஸ்)