ஒற்றுமை நோக்கில் ஒரு விவாதம் - 3

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல், இலங்கையில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது, எப்படி எதிர்ப்பது என்ற சுழலும் சொற்போர் தொடங்கிவிட்டது.

rajapaksaஅதிபர் மகிந்த இராசபக்சே இப்போது இரண்டாம் பதவிக் காலத்தில் இருப்பவர்; இப்போது மூன்றாம் பதவிக் காலத்தின் மேல் கண் வைத்துவிட்டார். இரண்டுக்கும் மேற்பட்ட பதவிக் காலங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட அரசமைப்புச் சட்டப்படித் தடையில்லை என்று இலங்கை உச்ச நீதிமன்றத்தில் உத்தரவும் வாங்கி விட்டார். உரிய நாள் வரை காத்திராமல் 2015 தொடக்கத்திலேயே அவசரமாகத் தேர்தல் நடத்தி வெற்றி பெற்று விடலாம் எனபது அவர் கணக்கு!

இராசபக்சே நடத்துவது சிங்களப் பேரினவாத ஆட்சி மட்டுமன்று, பாசிச ஆட்சி, குடும்ப ஆட்சி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மகிந்தாவின் இளவல்கள் பசில், கோத்தபயா, மகன் நமல் உள்ளிட்ட இராசபக்சே குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் ஏதேனும் ஓர் அதிகாரப் பதவியில் அமர்ந்திருக்கக் காணலாம்.

ஐக்கியத் தேசியக் கட்சி உள்ளிட்ட சிங்கள எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல, 2005 தேர்தலில் இராசபக்சேயின் கூட்டணிக் கட்சிகளாக இருந்த ஜனத விமுக்தி பெரமுனா, ஜதிக ஹெல உருமையா ஆகியவையும் இப்போது இராசபக்சேவுடன் முரண்பட்டு நிற்கின்றன. சிங்கள இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் கூட இராசபக்சே எதிர்ப்பில் ஒத்தக் கருத்தே காணப்படுகிறது. இராசபட்சேயின் சொந்தக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே சந்திரிகா முதலான பெருந்தலைகள் இராசபக்சேயை எதிர்க்கின்றனர். எல்லாவற்றுக்கும் உச்சமாக அதே கட்சியைச் சேர்ந்த மைத்திரிபலா பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தாம் அதிபராக்கப்பட்டால் இரணில் விக்கிரமசிங்கேதான் பிரதமர் என்று அவர் அறிவித்துள்ளார்.

ஆக, பெரும்பலான சிங்கள எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியிலேயே இராசபக்சே எதிர்ப்பாளர்களும் இராசபக்சே மீண்டும் பதவிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டனர். எல்லாக் கட்சிகளும் சேர்ந்து இராசபக்சேயை எதிர்த்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதே அவர்களின் அடிப்படையான தேர்தல் உத்தி. யார் அந்தப் பொது வேட்பாளர்? இரணில் விக்ரமசிங்கே, முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகா, சந்திரிகா இவர்களில் யாருமில்லை, மைத்திரிபலாதான் என்று தெளிவாகிவிட்டது.

இராசபக்சேக்கும் அவரை எதிர்ப்பவர்களுக்கும் இடையிலான கொள்கை வேறுபாடு எனப்படுவது என்ன? ஒன்றே ஒன்றுதான்: அதிபர் ஆட்சிமுறையா, நாடாளுமன்ற ஆட்சி முறையா? வேறுவிதமாகச் சொன்னால், வட அமெரிக்காவில் இருப்பது போன்ற ஆட்சிமுறையா? அல்லது பிரித்தானியாவில் இருப்பது போன்றதா? பிரதமர் தலைமையிலான ஆட்சிமுறைதான் 1972 அரசமைப்பின்படி ஏற்படுத்தப்பட்டது. 1978இல் ஐக்கியத் தேசியக் கட்சியின் ஜே.ஆர். ஜெயவர்தனாதான் புதிய அரசமைப்பைக் கொண்டு வந்து அதிபர் ஆட்சிமுறையை நுழைத்தார். இப்போது அந்த ஆட்சிமுறையைப் பிரதமர் ஆட்சிமுறையாக மாற்றப் போவதாக உறுதியளிப்பவர் அதே கட்சியின் இரணில் விக்கிரமசிங்கே.

ஆட்சிமுறை எதுவானாலும் ஏற்படப் போவது சிங்கள ஆட்சிதான். ஏனென்றால் சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசமைப்பில் மாற்றம் அல்லது திருத்தம் செய்வது பற்றி இரு சிங்களத் தரப்புகளில் எதுவும் ஒப்புக்குக் கூடப் பேசவில்லை.

பொது வேட்பாளர் பற்றிப் பேசுகின்ற எந்த சிங்களக் குழுவும் ஒரு தமிழரின் பெயரை முன்மொழிவது பற்றி எண்ணிக் கூடப் பார்க்கவில்லை. மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களாட்சி என்பது சிறிலங்காவைப் பொறுத்த வரை சிங்களருக்காக சிங்களரால் நடத்தப்படும் சிங்கள ஆட்சியே என்பதற்கு இதுவே போதிய சான்று. இத்தனைக்கும் நம்மவர்கள் சிலர் விவரம் தெரியாமல் சொல்லிக் கொண்டிருப்பது போல் இலங்கையில் தமிழர் ஒருவர் அதிபர் அல்லது ஆட்சித் தலைவர் ஆவதற்குச் சட்டத் தடை ஒன்றுமில்லை.

சிங்களத் தேர்தலின் முடிவைத் தமிழர்களால் தீர்மானிக்க முடியாது என்பதைக் கூறத் தேவையில்லை. ஆனால் இராசபட்சேயைத் தோற்கடிப்பதற்காக அவருக்கு எதிரான பொது வேட்பாளரை ஆதரிக்கலாம் என்று சில தமிழன்பர்கள் முன்மொழிகின்றார்கள். அவர்கள் முன்வைக்கும் முதன்மையான வாதத்தைப் பார்ப்போம்...

1995இலும் 2005இலும் தேர்தல் புறக்கணிப்பு செய்தது தவறு. மீண்டும் அதே தவற்றைச் செய்யக் கூடாது. 1995இல் வெறும் 10,744 வாக்குகள் பெற்ற டக்லஸ் தேவானந்தா கட்சி ஒன்பது உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடிந்தது. 2005இல் நாம் தேர்தலைப் புறக்கணித்ததால்தான் இராசபட்சே வெற்றி பெற்றார். மீண்டும் அதேபோன்ற தவறு இப்போதும் நிகழக் கூடாது. இராசபக்சேவைத் தோற்கடிக்கும் வாய்ப்புள்ளபோது தேர்தலைப் புறக்கணிப்பது தற்கொலைக்குச் சமம்.

நாம் இதை மறுக்கிறோம். நம்முடைய போராட்டம் தேசிய விடுதலைக்கான போராட்டம் என்பதை மறந்துவிடக் கூடாது. தேவானந்தா கட்சியின் வெற்றியைத் தடுப்பதற்காக நாமும் தேர்தலில் பங்கேற்றிருந்தால் விடுதலைப் போருக்கு அதனால் என்ன நன்மை கிடைத்திருக்கும்? டக்ளசைத் தோற்கடிக்க நம் சில புதிய டக்ளசுகளைத் தோற்றுவித்திருப்போம், அவ்வளவுதான். உங்கள் தர்க்கத்தை ஜெயவர்த்தனா கொண்டுவந்த மாவட்டக் கவுன்சில் திட்டத்துக்குப் பொருத்திப் பாருங்கள். தமிழீழத் தனியரசுக்கு 1977 தேர்தலில் சனநாயகக் கட்டளை பெற்ற தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் செயவர்த்தனாவின் மாவட்ட கவுன்சில் பதவிகளுக்குப் போட்டியிட்டதை நாம் துரோகம் என்றே வரையறுத்துக் கண்டித்தோம். நாம் போட்டியிடாவிட்டால் அரசுக்கு வேண்டியவர்கள் பதவிக்கு வந்து விடுவார்கள் என்ற வாதத்தை நாம் ஏற்கவில்லை. நம் குறிக்கோளுக்குப் பொருத்தமான களத்தில்தான் நாம் போராட முடியும்.

2005 அதிபர் தேர்தலை நாம் புறக்கணித்ததால்தான் இராசபக்சே வெற்றி பெற முடிந்தது என்பது பலரும் பல காலமாகச் சொல்லி வருவது. இந்து ஆங்கில நாளேடு இது குறித்து எழுதிய ஆசிரிய உரையை மறுத்து அப்போதே தமிழர் கண்ணோட்டம் ஏட்டில் நான் எழுதியிருந்தேன். தமிழர்கள் தேர்தலில் பங்கேற்று இரணிலை ஆதரித்திருந்தால், அவர் வெற்றி பெற்றிருப்பார் என்று வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் அவர் இராசபக்சே போல் செய்திருக்க மாட்டார் என்று நம்புவதற்கு என்ன ஆதாரம்? 2002 போர்நிறுத்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையைக் கிஞ்சிற்றும் மதிக்காமல் போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தவர்தானே அவர்?

ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்களைப் பறிப்பதாக உறுதியளித்து விட்டு, அதற்கு மாறாகக் கருணாவை வளைத்து ஒரு புதிய துரோகப் படையை உருவாக்கியது யார்? அதியுயர் பாதுகாப்பு மண்டலங்களைக் கலைப்பதாக உறுதியளித்து விட்டு அவற்றை வளர்த்து வலுப்படுத்தியது யார்? தலைவர் பிரபாகரன் இரணிலுக்கு வாக்குக் கேட்டிருந்தால் அது விடுதலைப் போருக்கே இழுக்காகி விடாதா? இராசபக்சேயையும் நம்பாதே, இரணிலையும் நம்பாதே, சிங்களத் தேசத் தேர்தலில் தமிழ்த் தேசம் செய்வதற்கொன்றுமில்லை என்பதுதானே சரியான ஏரணமாக இருக்க முடியும்?

போரின் வழியாக அமைதி (peace thro’ war) என்று விபரீத விளக்கம் கொடுத்து ஜெயசிக்குறு போர் நடத்திய சந்திரிகா கூட இப்போது இராசபக்சேக்கு எதிராகத்தான் இருக்கிறார். சிங்களப் பேரினவாத வெறியர்களில் பெரிய தீமை, சிறிய தீமை என்றெல்லாம் பிரித்துப் பேசுவதற்கு ஆதாரம் எதுவுமில்லை. கருநாகத்தில் எது திருநாகம்? எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி?

ranil and chandriakaஅடுத்த கேள்வி: தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிக்காமல் இரணிலுக்கு வாக்களித்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பாரா? இரணில் கூட சென்னையில் இப்படித்தான் பேட்டியளித்தார். பிரபாகரன் செய்த முட்டாள்தனம் (அதாவது தேர்தல் புறக்கணிப்பு) முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு ஒரு காரணம் என்றார். உடனே கலைஞர் கருணாநிதியும் அவர் கருத்தை வழிமொழிந்தார். ஆனால் உண்மை என்ன? தமிழர்கள் இரணிலுக்கு வாக்களித்திருந்தால் அந்த அளவுக்கு இன்னுங்கூட அதிகமாகவே சிங்களர்கள் அவரை எதிர்த்து வாக்களித்திருப்பார்கள். அவர் படுதோல்வி அடைந்திருப்பார். பிரபாகரனின் ஆதரவு பெற்றவருக்கா உங்கள் வாக்கு? என்று கேட்டாலே போதும் இராசபக்சேக்கு சிங்களர்கள் இன்னும் பெரிய வெற்றியைத் தந்திருப்பார்கள். போர் முடிந்த பின் நடந்த தேர்தலில் சரத் பொன்சேகாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்காமல் விட்டிருந்தால் அவர் இன்னுங்கூடுதலான வாக்குகள் வாங்கியிருப்பார் என்பதே என் கணிப்பு.

இப்போதுங்கூட விடுதலைப் புலிகள் மீது தடையை நீடிக்கும்படி இரணில் ஐரோப்பிய நாடுகளைக் கேட்பது ஏன்? இராசபக்சேயை எதிர்ப்பதாலேயே தமிழர்களை ஆதரிப்பதாகக் கருத வேண்டாம் என்று சிங்களர்களிடம் காட்டுவதற்காகவே.

இப்போதும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்ரிபலாவை ஆதரித்தால் அதைக் காட்டியே இராசபக்சே சிங்கள வாக்குகளை அள்ளிக் கொண்டு போய் விடுவார். இதுதான் சிங்களப் பேரினவாதத்தின் வேதியியல்.

தேர்தலை ஒரு குறுவுத்தியாகப் பயன்படுத்துவதில் தவறில்லை. 1977, 2004 தேர்தல்களை நாம் பயன்படுத்திக் கொண்டதில் தவறில்லை. அதற்கான தனிக் காரணங்கள் இருந்தன. ஏற்ற சூழல் இல்லாத போது, தேர்தலில் வாக்களிப்பது நம் தலைவிதி என்பது போல் அணுகத் தேவையில்லை. குளிருக்கு அனல் காய்ந்தால் தப்பில்லை. ஆனால் அனலுக்குள்ளேயே குதித்து விட முடியாது.

இந்தியாவில் காங்கிரசை எதிர்ப்பதற்காகவே பாரதிய சனதா கட்சியை ஆதரிப்பது, பாசகவை எதிர்ப்பதற்காகவே காங்கிரசை ஆதரிப்பது, தமிழ்நாட்டில் இதே போல் திமுகவை எதிர்த்து அதிமுக, அதிமுகவை எதிர்த்துத் திமுக என்ற சந்தர்ப்பவாத இழி அரசியலை நிறையப் பார்த்து விட்டோம். இந்த நோய் ஈழத்துக்கும் பரவ வேண்டாமே?

நாம் தமிழீழ விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இராசபக்சே மீதான கோபத்தில் இந்த உண்மையை மறந்து விடக் கூடாது. போராட்டத்தில் இன்றைய கட்டம் என்பது ஈடுசெய் நீதி (Remedical Justice) கோரி நடத்தப்படுவது. இதில் நம்முடைய மூன்று கோரிக்கைகள்: தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு, கட்டமைப்பியல் இனக்கொலைக்கு எதிரான பன்னாட்டுப் பாதுகாப்புப் பொறியமைவு, பொது வாக்கெடுப்பு. இந்த மூன்று கோரிக்கைகள், இவற்றுக்கான போராட்டம் என்ற கோணத்திலிருந்து சிங்களத் தேர்தலைப் பாருங்கள்.

நமக்கு முன் இருக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு என்பது புலப்படும்: சிங்கள வேட்பாளர்களில் எவரும் நம் கோரிக்கைகளில் எதையும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களில் எவரையும் நம்மால் ஆதரிக்க முடியாது. தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து ஒரு வேட்பாளரை நிறுத்தி அவருக்குக் கிடைக்கும் வாக்குகளைத் தமிழர்களின் எண்ணவோட்டத்துக்கு அளவுகோலாக உலகிற்குக் காட்டலாம். இதற்கு வாய்ப்பில்லை என்றால் ஒரே வழி தேர்தல் புறக்கணிப்புதான். ஒரு தமிழ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதைக் காட்டிலும் புறக்கணிப்புக்கு ஆதரவு திரட்டுவதே எளிது என்பதே அடியேன் கருத்து. இது சிங்களத் தேர்தல், இதில் தமிழர்களுக்குப் பங்கில்லை என்று காட்டுவதுதான் இராசபக்சேக்களுக்கு உண்மையான தோல்வியாக முடியும். அந்த அளவுக்குத் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஊக்கம் தரும். இல்லாத வாய்ப்பை இருக்கும் வாய்ப்பாக மாற்ற இதுவே சிறந்த வழி. மற்றபடி இராசபக்சேயை ஆதரித்தாலும் சரி, மைத்ரிபலாவை ஆதரித்தாலும் சரி, இரண்டுமே தற்கொலைக்குச் சமம்.