ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானமும் அதைத் தொடர்ந்தும்...

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம், அதற்கான ஆதரவுப் போராட்டம் இப்போது செய்ய வேண்டியது என்ன? இந்த வினாவுக்கு விடைகாண நாம் கணக்கில் கொள்ளவேண்டிய சில மெய்க்கூறுகள் உள்ளன.

தமிழீழ மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போர் 2009 மே 16, 17, 18 நாட்களில் முள்ளிவாய்க்காலில் கொடிய உச்சம் கண்டது. இந்த முழுப் பேரழிவில் பல்லாயிரம் தமிழ் உயிர்கள் கொத்துக் கொத்தாய் அழிக்கப்பட்டதோடு, ஈழ தேசத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டமும் அடியோடு நசுக்கப்பட்டது

eelam womanசிறிலங்காவின் இறுக்கமான ஒற்றையாட்சி அரசமைப்பு, சிங்கள மக்களிடம் காணப்படும் பேரினவாத மனப்போக்கு ஆகியவற்றோடு தமிழீழப் பகுதிகளில் நிலவும் இராணுவ மேலாதிக்கமும் சேர்ந்து கொண்டுள்ள நிலையில், தமிழீழ மக்கள் தாயகத்தில் தொடர்ந்து போராடுவதற்கான சனநாயக வெளியும் அற்றுப் போயுள்ளது, அல்லது பெரிதும் குறுகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரழிவு தமிழீழ விடுதலைக்கான வரலாற்றுத் தேவையை ஒழித்து விடவோ குறைத்து விடவோ இல்லை, பார்க்கப் போனால் அத்தேவையைப் பன்மடங்கு உயர்த்தியே உள்ளது. மறுபுறம் விடுதலைக்காகப் போராடும் திறனை அது பெரும்பாலும் குலைத்துவிட்டது. இந்த முரண்பாட்டுக்கு எவ்வாறு தீர்வு காணப் போகிறோம் என்பதைப் பொறுத்ததே ஈழ மண்ணில் மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் வளர்வதும் வளராமல் போவதும். அதாவது தாயகம்வாழ் தமிழர்கள் மீண்டெழுந்து போராடத் துணை செய்வது எப்படி? என்ற கேள்விக்குக் கோட்பாட்டளவிலும் நடைமுறையளவிலும் விடை காண வேண்டும்.

குறிக்கோள் என்ன?

தாயகத்துக்கு வெளியே தமிழகத்திலும் புலம்பெயர் உலகத்திலும் நடத்த வேண்டிய போராட்டங்களின் குறிக்கோள் தாயகத் தமிழர்கள் போராடுவதற்கான சனநாயக வெளியை உண்டாக்குவதும் விரிவாக்குவதுமே. இதற்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வதே.

ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஈடேற்றம் இறுதி நோக்கில் தமிழீழ மக்களைச் சார்ந்ததே தவிர, ஐக்கிய நாடுகள் அமைப்பு போன்ற பன்னாட்டு மன்றங்களைச் சார்ந்ததன்று. அதேபோது இன்றைய உலகில் நிலவும் அரசியல், அரசுறவியல் பகைப்புலத்தில்தான் இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. நாடுகளிடையிலான ஏற்றத் தாழ்வை உலக ஒழுங்காகக் கொண்ட இன்றைய பன்னாட்டு அரங்கில் இடம்பெற்று வரும் நிகழ்ச்சிப் போக்குகளைக் கண்டுகொள்ளமல் செயலாற்றுவது போராட்டத்தின் வளர்ச்சிக்கு உதவாது. அரசுகள் தத்தமது சொந்த நலனையும் அதையட்டிய புவிசார் அரசியலையும் முன்னிறுத்திச் செயல்படும் பன்னாட்டு அரங்கில் வினையும் எதிர்வினையும் ஆற்றாமல் விடுதலைப் போராட்டத்துக்குத் துணை சேர்க்க இயலாது.

மூன்று கோரிக்கைகள்

இந்த அடிப்படையில்தான் 2009 மே தொடங்கி நாளது வரையிலுமான ஐநா மனித உரிமை மன்ற விவாதங்களையும் தீர்மானங்களையும் பிற செயற்பாடுகளையும் பார்க்க வேண்டும் எனக் கருதுகிறோம். பன்னாட்டு அரங்கில் உலகத் தமிழர்களின் ஒருமனதான அடிப்படைக் கோரிக்கைகள் மூன்று:

1) இனக்கொலை, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள் குறித்துத் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும்.

2) தொடர்ந்து வரும் கட்டமைப்பியல் இனக்கொலையைத் தடுத்து நிறுத்த ஒரு பன்னாட்டுப் பொறியமைவை ஏற்படுத்த வேண்டும்.

3) தமிழீழத்தின் வருங்காலம் குறித்து முடிவு காணத் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத் தமிழரிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

கடந்த 2011இல் ஐநா பொதுச் செயலரின் மூவல்லுனர் குழு அறிக்கை அளித்தது முதற்கொண்டே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், உலகத் தமிழர் பேரவையும், பிரித்தானியத் தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை போன்ற அந்தந்த நாட்டுக்குரிய தமிழர் அமைப்புகளும் ஒரே குரலில் இந்தக் கோரிக்கைகளை எழுப்பி வருகின்றன. தமிழ்நாட்டின் தமிழ்த் தேசிய அமைப்புகள் உள்ளிட்ட தமிழீழ ஆதரவு அமைப்புகளும் இதே கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஆகவே பன்னாட்டு அரங்கில் இவை உலகத் தமிழர்களின் ஒருமனதான கோரிக்கைகள் என்பதில் ஐயமில்லை. ஒருசில அமைப்புகளுக்குக் கூடுதலாகச் சில கோரிக்கைகள் இருக்கக் கூடும். காட்டாக, சிறிலங்கா அரசு செய்த குற்றங்களுக்கு ஐநா தன்னிடமுள்ள சான்றுகளை வெளியிட வேண்டும் என்று நா.க.த.அ. கோருகிறது. யாருக்கு என்ன கோரிக்கை இருப்பினும் அது மேற்கண்ட மூன்று அடிப்படைக் கோரிக்கைகளில் எதற்கும் முரணன்று.

இந்த மூன்று கோரிக்கைகளையும் பன்னாட்டுச் சமுதாயத்தின் சார்பில் ஐநா உடனே ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்பது நமக்கு நன்கு தெரியும். இது கடினமானதொரு நீண்ட பயணம். ஏனென்றால் உலகில் தமிழர்களுக்கென்று இறைமையுள்ள அரசு ஏதுமில்லை என்ற நிலையில், ஐநாவிலோ பிற பன்னாட்டு அரங்குகளிலோ நமக்கென்று நாமே குரல் கொடுக்க வழியில்லை.

தமிழகம் என்ன செய்யும்?

தமிழீழம் போலவே தமிழ்நாடும் அடிமைத் தேசமாகவே இருக்கிறது என்பதை ஈழத்தமிழர் இன அழிப்பு தமிழகத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் வலிக்க வலிக்க உணர்த்தி விட்டது. நமக்காக இந்தியா குரல் கொடுக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் ஏமாந்துதான் போனார்கள். ஆனால் உலகில் தமிழர்களின் முதற்பெரும் தாயகம் என்ற முறையில் தமிழகத்தால் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து உலக அரங்கில் தமிழர் நலனுக்காக இயன்ற வரை பேச வைக்க முடியும் என்பது நம் பட்டறிவு.

இரண்டாவதாக, தாயகத்தில் படை வலிமையையும் அரசியல் வலிமையையும் பறிகொடுத்தாலும் உலகத்தில் முன்னெப்போதுமில்லாத அற வலிமையோடு நிற்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நடந்து முடிந்த முழுப்பேரழிவும் தொடர்ந்து வரும் இன அழிப்பும் நமது போராட்டத்தின் நியாயத்தை மலையளவு உயர்த்தியுள்ளன. சிங்களப் பேரிவாதம் எவ்வளவுதான் முயன்றாலும் இனியும் நம் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று முத்திரையிட்டுத் தனிமைப்படுத்தி ஒடுக்க முடியாது.

ஈடுசெய் நீதி

மொழி, புலம், பண்பாடு, பொருளியல், வரலாறு என்பனவற்றின் அடிப்படையில், ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழீழம் ஒரு தேசம், அதற்கென்று இறைமையுரிமை உண்டு, தன்தீர்வுரிமை உண்டு. இவை இயல்பாய் அமைந்த உரிமைகள் - பிறப்புரிமை - என்பதற்கு மேல் இப்போது இனக்கொலை, போர்க் குற்றங்கள், மானிடவிரோதக் குற்றங்களுக்கு இலக்காகி வதைபட்ட இனம் என்ற வகையில் இதற்கெல்லாம் பரிகாரமாக ஈடுசெய் நீதி (Remedial Justice), ஈடுசெய் இறைமை (Remedial Sovereignty), ஈடுசெய் தன்தீர்வுரிமை (Remedial Right to Self-determination) கோரிப் போராடும் வழியும் நமக்குத் திறந்துள்ளது. சுருங்கச் சொல்லின், பன்னாட்டு அரங்கில் நமது போராட்டம் ஈடுசெய் நீதிக்கான போராட்டமும் ஆகும் என்பதைப் புரிந்து கொண்டு அதற்குப் பொருத்தமான அரசியல், அரசுறவியல் வழிகளைக் கையாள வேண்டும்.

இரண்டாம் உலகப் போரில் இனக்கொலைக்கு இலக்கான யூதர்களுக்கு ஒரு வகையில் உலகம் வழங்கிய ஈடுசெய் நீதிதான் இசுரேல் என்ற உண்மையை - வேறு எவ்வகையிலும் ஈழத்தையும் இஸ்ரேலையும் ஒப்பிடாமலே - நினைவில் கொள்ளலாம்.

போராட்டத்தின் வருங்காலம்

ஈடுசெய் நீதிக்கான உலகத் தமிழர்களின் போராட்டம் மட்டுமே அதனளவில் தமிழீழ விடுதலையைப் பெற்றுத் தந்து விடும் என்று நாம் கருதவில்லை. நமது இந்தப் போராட்டம் சிங்களப் பாசிசப் பகைவனைத் தனிமைப்படுத்தவும், சிங்களப் பேரினவாதத்தைச் சோர்வுறச் செய்யவும், தமிழ் மக்களுக்கு ஊக்கமளிக்கவும் பயன்படுவதன் மூலம் தாயகத்தில் மக்கள் போராடுவதற்கான சனநாயக வெளியை விரிவாக்கும். அங்கு அப்போராட்டம் எவ்வாறெல்லாம் வடிவெடுத்து வளர்ந்து செல்லும் என்பதை இப்போதே அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இசுரேலின் வன்பிடிப்பில் இருந்தபடி யோர்தான் மேற்குக் கரையிலும் காசா முனையிலும் பாலத்தீன மக்கள் நடத்திய இண்டிஃபாடா போல் போர்க்குணம் வாய்ந்த பெருந்திரள் போராட்டங்கள் வெடிக்க வாய்ப்புண்டு. பொறுத்திருந்து பார்ப்போம், போராடிப் பார்ப்போம்.

முள்ளிவாய்க்கால் முடிந்த கையோடு பன்னாட்டு அரங்கில் நம் ஈடுசெய் நீதிக்கான போராட்டமும் தொடங்கி விட்டது. இது வரை நடந்தவற்றை முழுமையாக விரித்துச் சொல்லத் தேவையில்லை எனக் கருதுகிறேன். சுருக்கமாகப் பார்ப்போம்.

செனிவா 2009

செனிவாவில் 2009 மே இறுதியில் கூட்டப்பட்ட மனித உரிமை மன்றச் சிறப்புக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை நன்கறிவோம். இரண்டு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. இரண்டில் எதுவும் தமிழர்களுக்கு எவ்வகையிலும் பயன்படக் கூடியது அன்று. ஒன்று, மனித உரிமை மீறல்கள் குறித்து சிறிலங்கா அரசே விசாரணை நடத்தட்டும் என்றது. இது தோற்றுப் போனது. மற்றொன்று பயங்கரவாத எதிர்ப்புப் போரில் வென்ற சிறிலங்காவைப் பாராட்டித் துணை செய்யக் கேட்டது. இது வெற்றிகரமாக நிறைவேறியது. இரு தீர்மானங்கள் மீதுமான வாக்கெடுப்பில் சிறிலங்கா மகிழும் வண்ணம் இந்தியா நடந்து கொண்டது.

கொடிய இன அழிப்புக்கு ஆளான தமிழர்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட உலகில் ஓர் அரசுமில்லை என்ற அவல நிலையிலிருந்து மீள வேண்டிய அவசரத் தேவை இருந்தது. அதற்கும் மேலே நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்தாக வேண்டும். இந்தத் தேவையை நிறைவு செய்யப் புதிய வடிவில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தோன்றின. நம் பார்வையில் இவற்றுள் முதன்மையானது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE). உலகத் தமிழர் பேரவை (GTF), பிரித்தானியத் தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை மற்றும் அந்தந்த நாடுகளுக்குரிய தமிழர் அமைப்புகளும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளன. இந்த அமைப்புகள் யாவும் முனைந்து களமிறங்கி உலகின் முன் உண்மைகளை அம்மணமாய் அணிவகுக்கச் செய்தன.

லண்டன் சேனல் 4 வெளியிட்ட ஒளிப்படங்களும் ஆவணப் படங்களும், இவற்றை இயக்கிய கலம் மக்ரேயும், பிரியம்வதா போன்ற இந்திய ஊடகர்களும் இவ்வகையில் ஆற்றியுள்ள பங்கு மகத்தானது. டப்ளின் நகரில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயமும் சாட்சிகளை விசாரித்து, சான்றுகளை அலசி, சிறிலங்கா அரசு போர்க் குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும் புரிந்திருப்பதாகத் தீர்ப்பளித்தது. இனக்கொலைக் குற்றத்தை மெய்ப்பிக்கத் தன்னிடம் உள்ள தரவுகள் போதுமானவை அல்ல என்றும் கூறியது.

சாட்சிகள் இல்லாத போரை நடத்தி விட்டதாக இறுமாந்திருந்த இராசபட்சே கும்பலுக்கு அது சான்றுகள் இல்லாத போரன்று என்பதை இவை யாவும் உணர்த்தின. ஐநா பொதுச் செயலர் தமக்கு அறிவுரை சொல்வதற்காக அமர்த்திய - மார்சுகி தருஸ்மன், யாஸ்மின் சூக்கா, ஸ்டீவ் ராட்னர் அடங்கிய - மூவல்லுனர் குழு அறிக்கையும் ... இலங்கை அரசு பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களை மீறி போர்க் குற்றங்களும், பன்னாட்டு மனிதநேயச் சட்டங்களை மீறி மானிட விரோதக் குற்றங்களும் புரிந்திருப்பதை நம்பும்படியான குற்றச்சாட்டுகள் (credible allegations) என்று வகைப்படுத்தியது.

செனிவா 2012

பிறகு, 2012 மார்ச்சில் ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டுவரப் போவதாகச் செய்தி வரத் தொடங்கியவுடனேயே ‘இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்’ என்று தமிழ்நாட்டில் அவசரமாகச் சிலர் குரல் கொடுத்தனர். அப்போது நாம் ‘அவசரம் வேண்டாம், தீர்மான உரை வரட்டும், படித்து விட்டு முடிவு செய்யலாம்’ என்று எச்சரித்தோம். முடிவில், நம் மூன்று கோரிக்கைகளுக்கும் நேராகவோ சுற்றடியாகவோ இடமளிக்காத அமெரிக்கத் தீர்மானம் சிங்கள அரசுக்கு எதிரானதோ தமிழர்களுக்கு ஆதரவானதோ அல்ல என்பது தெளிவாயிற்று.

இராசபட்சே அரசாங்கம் உலகை ஏய்ப்பதற்காகத் தனக்குத் தானே அமைத்துக் கொண்ட படிப்பினைகள்-நல்லிணக்க ஆணையத்தின் (LLRC) அறிக்கையை வலியுறுத்துவதாகவே அமெரிக்கத் தீர்மானம் அமைந்தது, மூவல்லுனர் குழு அறிக்கை பற்றி அதில் ஒரு சொல் கூட இல்லை. ஆனால் இந்தத் தீர்மானத்தையும் கூட சிறிலங்கா ஏற்பதாக இல்லை. இந்தியா பெரும் இழுத்தடிப்புக்குப் பின் தீர்மானத்தை ஆதரித்தது என்றாலும் அதற்கு முன்பே தன்னாலியன்ற வரை அதை நீர்க்கச் செய்து விட்டது. இலங்கை அரசின் ஒப்புதலுடனேயே ஐநா அதிகாரிகள் இலங்கைக்கு ஆலோசனையும் செய்நுட்ப உதவியும் வழங்கலாம் என்ற திருத்தம் இந்தியாவால் நுழைக்கப்பட்டதே. தமிழர்களைப் பொறுத்த வரை கவைக்குதவாத தீர்மானம் என்றாலும், அதன் மீதான வாக்கெடுப்பில் சிங்களம் அடைந்த தோல்வி நமக்கு மகிழ்ச்சி அளித்தது. ஏனென்றால் பன்னாட்டு அரங்கில் சிறிலங்கா பெற்ற முதல் தோல்வி இதுவே.

செனிவா 2013

அடுத்து வந்த 2013 தீர்மானத்தின் கதையும் கிட்டத்தட்ட இதுவேதான். ஆனால் தீர்மானம் வருவதற்கு முன்பே தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வுக்கான குரல் வலுத்து விட்டது. ஐநா மனித உரிமை மன்ற ஆணையரே இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார். பன்னாட்டு நெருக்கடிக் குழு, பன்னாட்டுப் பொதுமன்னிப்பு அவை, மனித உரிமைக் கண்காணிப்பகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தின. அமெரிக்காவே இந்தக் கோரிக்கையைக் கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் மனித உரிமை மன்றத் தீர்மானத்தில் நேரடியாகவோ சுற்றடியாகவோ இதற்கான வழிவகை ஏதுமில்லை.

தமிழ்நாட்டில் இம்முறை மாணவர் போராட்டம் தெளிவான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்றது. அமெரிக்கத் தீர்மானத்தால் பயனில்லை, சரியான கோரிக்கைகளை (தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு, பொது வாக்கெடுப்பு) உள்ளடக்கிய ஒரு தீர்மானத்தை இந்தியாவே முன்மொழிய வேண்டும் எனக் கோரினோம். தமிழக மாணவர்கள்-மக்கள் போராட்டங்களின் அழுத்தத்தால் இந்தியா இறுதி வாக்கெடுப்பில் சிறிலங்காவுக்கு எதிரணியில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இம்முறையும் இந்தியா அமெரிக்கத் தீர்மானத்தை நீர்க்கச் செய்து விட்டுத் தான் ஆதரித்தது. பல்வேறு துறைசார்ந்த ஐநா அதிகாரிகளும் வல்லுனர்களும் இலங்கை சென்றுவர தடையற்ற அனுமதி வழங்க வேண்டும் என்ற கட்டளையை நீக்கியதும், மனித உரிமை மன்றம் 2013 செப்டெம்பரில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை 2014 மார்ச்சு என்று மாற்றியதும் இந்தியாவின் கைங்கரியங்களே. இம்முறையும் தமிழர்களின் கோரிக்கை எதுவும் ஏற்கப்படவில்லை என்பதால் நமக்கு வெற்றியில்லை. ஆனால் சிங்களம் மீண்டும் தோற்றது என்ற அளவில் மகிழ்ச்சி அடைந்தோம்.

சிறிலங்காவின் தனிமைப்பாடு

ஐநா மனித உரிமை மன்றத்தின் 2012, 2013 தீர்மானங்கள் சாரத்தில் ஒரேவிதமானவை என்றாலும், இரண்டுக்கும் இடைப்பட்ட நுட்பமான வேறுபாடுகளும், வாக்கெடுப்பில் நிகழ்ந்த மாற்றங்களும் ஈடுசெய் நீதிக்கான போராட்டத்தில் குறுவுத்திநோக்கில் முக்கியமானவை (tactically important). நம் போராட்டங்கள் உலகில் எவ்விதத் தாக்கமும் ஏற்படுத்தாமல் போய் விடவில்லை என்பதை உணர்ந்து கொள்வதோடு, அடுத்தடுத்த போராட்ட உத்திகளை வகுக்கவும் இவை நமக்குத் துணைசெய்யும்.

தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகள் என்ற கோணத்திலிருந்து பார்த்தால் ஐநா மனித உரிமை மன்றத்தின் 2009, 2012, 2013 தீர்மானங்களின் உள்ளடக்கத்தில் பெரிதாக வேறுபாடில்லைதான். ஆனாலும் இவற்றின் மீதான வாக்கெடுப்புக் கணக்கு தமிழர்களின் உறுதியான முன்னெடுப்புகளால் உலக அரங்கில் சிங்களப் பேரினவாதம் மென்மேலும் தனிமைப்படுவதைக் காட்டும் குறிமுள்ளாகும். இலங்கையை எதிர்த்தும் ஆதரித்தும் வாக்களித்த நாடுகள் 2009இல் 13/26, 2012இல் 23/15, 2013இல் 25/13. மனித உரிமை மன்ற உறுப்பு நாடுகளில் ஏற்படக் கூடிய மாற்றத்தைக் கணக்கில் கொண்டால் சிறிலங்காவின் தனிமைப்பாடு இன்னுங்கூட துலக்கமாகும்.

நவநீதம்பிள்ளை அறிக்கையும் காமன்வெல்த்தும்

ஐநா மனித உரிமை மன்றத்தின் 2013 அமர்வுக்கும் 2014 அமர்வுக்குமிடையில் இரு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலாவதாக, மனித உரிமை மன்ற ஆணையர் நவநீதம்பிள்ளை நேரில் இலங்கை சென்று பார்வையிட்டார். அவர் கொழும்புவிலேயே ஸ்ரீலங்கா அரசைக் கண்டித்து அளித்த பேட்டி, பிறகு மனித உரிமை மன்றத்துக்கு வாய்மொழியாகவும் எழுத்துவடிவிலும் அளித்த அறிக்கை... எல்லாமே தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு உடனே தேவை என்ற கோரிக்கைக்கு வலுச் சேர்த்தன.

இரண்டாவதாக, 2013 நவம்பரில் கொழும்புவில் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது. முதலில் கனடாவும் பிறகு மௌரிசசும் இம்மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இலங்கையில் காமன்வெல்த்-எதிர்ப்பியக்கத்தின் சார்பில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஆகிய நான் மேற்கொண்ட 15 நாள் பட்டினிப் போராட்டம், தமிழக மாணவர்-மக்கள்-அரசியல் இயக்கங்களின் போராட்டங்கள், சட்டப் பேரவைத் தீர்மானம்... யாவும் சேர்ந்த தமிழ்நாட்டின் போராட்ட அழுத்தத்தால் இந்தியத் தலைமை அமைச்சர் கொழும்பு செல்ல விடாமல் தடுக்கப்பட்டார். பிரித்தானியத் தலைமை அமைச்சர் கேமரூன் தமிழர்களின் எதிர்ப்பையும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் எதிர்ப்பையும் மீறி காமன்வெல்த் சந்திப்பில் கலந்து கொண்ட போதிலும் அவரது யாழ் பயணமும், பிறகு கொழும்புவில் அவர் தெரிவித்த கருத்துகளும் பன்னாட்டுப் புலனாய்வுக் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தன.

செனிவா 2014 நோக்கி...

ஆக இம்முறை 2014 மார்ச்சில் ஐநா மனித உரிமை மன்றம் கூடும் போது உருப்படியாக ஒரு முன்னேற்றம் இருக்கும் என்று உலகத் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். நாமும் எதிர்பார்த்தோம். நம் மூன்று அடிப்படைக் கோரிக்கைகளும் உடனே ஏற்கப்பட்டு விடும் என்று நம்பவில்லை. அவை நியாயமற்றவை என்பதாலோ நடைமுறைப்படுத்த முடியாதவை என்பதாலோ அல்ல, அரசுகளை மட்டுமே உறுப்புகளாகக் கொண்ட ஒரு மன்றத்தில், மனித உரிமைக் கோரிக்கைகளோடு புவிசார் அரசியல் நலன்களும் பின்னிக் கிடக்கையில், நமக்கு எந்த அளவு வாய்ப்பிருக்கும் என்று அறுதியிட்டுச் சொல்வதற்கில்லை.

தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிவகை செய்யும் தீர்மானம் நிறைவேறும் வாய்ப்பு தென்பட்டது. மற்ற இரு கோரிக்கைகளுக்கும் அந்த அளவுக்கு வாய்ப்பிருப்பது போல் தெரியவில்லை. புலனாய்வும் கூட எந்தெந்தக் குற்றங்கள் மீது? இனக்கொலைக் குற்றம், போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள் ஆகிய அனைத்தின் மீதும் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு என்பதுதான் நம் உறுதியான கோரிக்கை. ஆனால் மூவல்லுனர் குழு அறிக்கையின் தொடர்ச்சியாகத்தான் புலனாய்வு என்றால் முதலிலேயே இனக் கொலைக் குற்றம் இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால் போர்க் குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும் யாரால் யாருக்கெதிராக இழைக்கப்பட்டவை என்பதையும், இந்தக் குற்றங்களின் வரலாற்றுப் பின்னணியையும் உரிய சான்றுகளோடு எடுத்துக்காட்டி, குற்றவாளிகளின் இனக்கொலை உள்நோக்கத்தையும் மெய்ப்பிக்க முடியுமானால், இந்தப் புலனாய்வு இனக்கொலைக் குற்றச்சாட்டுக்கான புலனாய்வாகவும் விரிவடையும்.

போர்க்குற்றங்களும் இனக்கொலையும்

ஆனால் எடுத்த எடுப்பிலேயே இனக்கொலைக் குற்றத்துக்கான புலனாய்வுக்குக் குறைவான எதையும் ஏற்க மாட்டோம் என்று சொல்வதற்கான அடிப்படை வலு நமக்கில்லை. மூவல்லுனர் குழு அறிக்கையும் சரி, மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அறிக்கையும் சரி, இனக்கொலைக் குற்றம் என்று வரையறுக்கவில்லை. இனக்கொலை இல்லை என்று சொல்வதாகவும் இதற்குப் பொருளில்லை.

நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் பிறேமன் அறிக்கை மட்டுமே இனக்கொலை என்று வரையறுத்ததது. ஆனால் ஐநா பார்வையிலும் உறுப்பரசுகளின் பார்வையிலும் அது அதிகாரப்பற்றுள்ள அறிக்கை ஆகாது. பிறேமன் அறிக்கையின் முக்கியத்துவத்தை நாம் குறைத்துப் பார்க்கவில்லை. இனக்கொலை என்ற அதன் வரையறுப்பும் இந்தக் குற்றத்தில் வல்லரசுகளின் பங்கு பற்றிய அதன் கண்டறிதலும் நம் அரசியல் பரப்புரைக்கும் இயக்கத்துக்கும் பயன்வாய்ந்தவை, ஆனால் ஐநா மனித உரிமை மன்றம் இனக்கொலைக் குற்றச்சாட்டைப் புலனாய்வுக்கு ஏற்றுக்கொள்ள அது போதுமானதன்று. இனக்கொலை, போர்க் குற்றம், மானிட விரோதக் குற்றம் மூன்றின் மீதும் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கும் போதே, இனக்கொலையை சேர்க்கா விட்டால் இந்தப் புலனாய்வு அறவே வீண் என்று நாம் கருதவில்லை.

‘போர்க் குற்றங்கள் என்று சொல்வதே தவறு, இனக்கொலை என்றுதான் சொல்ல வேண்டும்’ என்பது சில நண்பர்களின் வாதம். ஒவ்வொரு போர்க் குற்றமும் அல்லது ஒவ்வொரு மானிட விரோதக் குற்றமும் அதனளவில் இனக்கொலை ஆகாதுதான். ஆனால் போர்க் குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும் நடந்தன என்று சொல்வதே இனக்கொலையை மறைப்பதோ மறுப்பதோ ஆகாது.

போர்க் குற்றங்களையும் மானிட விரோதக் குற்றங்களையும் மெய்ப்பிப்பதுடன் அவற்றுக்கான உள்நோக்கத்தையும் மெய்ப்பிக்கும் போது அதுவே இனக்கொலையை மெய்ப்பிக்கும் வழி. போர்க் குற்றங்களும் மானிடவிரோதக் குற்றங்களும் இனக்கொலைக் குற்றத்தின் கூறுகளே.

இனக்கொலையைப் போர்க்குற்றம் என்று குறுக்கிப் பார்க்கக் கூடாதுதான். ஆனால் போர்க்குற்றங்களைப் போர்க்குற்றங்கள் என்று சொல்வதே இனக்கொலையை மறுப்பதாகாது. முழுமையாகப் பார்க்குமிடத்து நடந்தது போர்க் குற்றமல்ல, இனக்கொலைதான். இந்த இனக்கொலையின் கூறுகளாக நடந்தவையே போர்க் குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும். பன்னாட்டுச் சட்டங்களின் படி இனக்கொலைக் குற்றம், போர்க்குற்றம், மானிடவிரோதக் குற்றம் ஒவ்வொன்றுமே தண்டனைக்குரிய குற்றம்தான்.

‘போர்க்குற்றம் என்று சொல்லாதே, போரே குற்றம்’ என்பதெல்லாம் வெறும் சொற்சிலம்பமே தவிர, கொடிய இனவழிப்புக்கு ஆளான மக்களுக்குரிய ஈடுசெய் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ஊறுதான் செய்யும், உதவாது.

கோரிக்கைகளின் இடைத்தொடர்பு

தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு, பாதுகாப்புப் பொறியமைவு, பொது வாக்கெடுப்பு - இந்த மூன்று கோரிக்கைகளுக்குமான இடைத்தொடர்பைப் புரிந்து கொண்டால்தான், இவற்றில் ஒன்று குறித்து ஏற்படுகிற சிறு முன்னேற்றமும் கூட முழுப் போராட்டத்தின் வளர்ச்சியிலும் தாக்கங்கொள்ளும் என்பதை உணர முடியும். இல்லாவிட்டால் இந்தக் கோரிக்கைகளே கூட ஒன்றுக்கொன்று முரண்படுவது போலத் தெரியக் கூடும்.

நீதி விசாரணை வேறு, புலன் விசாரணை வேறு, வழக்கு விசாரணை வேறு. வினவல், ஆய்தல். உசாவல் என்று வகைப்படுத்தலாம். மூவல்லுனர் குழு நடத்தியது ஒரு வகையில் நீதி விசாரணை, அடுத்து நடைபெற வேண்டியது புலன் விசாரணை அல்லது புலனாய்வு. இது வெற்றிகரமாக முடிந்தால் இறுதியாகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திலோ, இதற்கென அமைக்கப்படும் தனித் தீர்ப்பாயத்திலோ வழக்கு உசாவல் நடைபெற்றுத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

குற்றவியல் நீதியும் அரசியல் நீதியும்

இந்தச் செயல்வழி யாவும் வரிசையாகவும் சரளமாகவும் நடந்தேறி விடும் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கவில்லை. நமது சட்ட முயற்சியின் திசைவழியைச் சுட்டுகிறோம், அவ்வளவுதான். நமக்கு எது முக்கியமென்றால், இந்தச் செயல்வழி சிங்களத்தைத் தனிமைப்படுத்தவும், தமிழர்களுக்கு ஊக்கம் தந்து அவர்களின் அற வலுவை அரசியல் வலுவாக மாற்றவும் எந்த அளவுக்குப் பயன்படும் என்பதே. குற்றவியல் நீதிக்கான போராட்டத்தின் ஊடாக அரசியல் நீதிக்கான போராட்டத்தை வளர்த்தெடுப்பதே நம் குறி.

நீதி விசாரணையைக் குற்றக் களங்களுக்குச் செல்லாமலே கூட நடத்தி முடிக்க வாய்ப்புண்டு. ஆனால் புலனாய்வை அப்படி நடத்துதல் அரிது. புலனாய்வுக் குழுவினர் இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவார்களா? அனுமதிக்கப்பட்டாலும் இராணுவ மேலாதிக்கம் நீடிக்கும் போது அச்சமற்ற சூழலில் முறையான புலனாய்வுக்கு ஒத்துழைக்க மக்கள் முன்வருவார்களா? இந்த வினாக்களுக்கு விடையாக சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட்டு (அல்லது எப்படியும் முகாம்களில் முடக்கி வைக்கப்பட்டு) பன்னாட்டுப் பாதுகாப்புப் பொறியமைவு ஏற்படுத்த வேண்டிய அவசரத் தேவை வலுப்பெறும். புலனாய்வு முடிந்த பின் பன்னாட்டுப் பாதுகாப்புப் பொறியமைவு நிரந்தரமாக நீடிக்க இயலாது என்ற நிலையில் தமிழீழத்தின் வருங்காலம் பற்றிய பொது வாக்கெடுப்புக் கோரிக்கை வலுப்பெறும். இவையெல்லாம் தாமாகவே நடைபெறும் என்ற மயக்கம் நமக்கில்லை. விழிப்புடனிருந்து இந்தச் செயல்வழியில் முன்னேற்றம் ஏற்பட அடிதோறும் அடிதோறும் போராட வேண்டிய கடமை நமக்குள்ளது.

இந்தத் தொலைநோக்குடன்தான் ஐநா மனித உரிமை மன்றக் கூட்டத்தை எதிர்நோக்கினோம். இனக்கொலை, போர்க் குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள் மீது தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு, பொது வாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை உள்ளடக்கிய தீர்மானத்தை இந்தியாவே தனித்தோ பிற நாடுகளுடன் சேர்ந்தோ முன்மொழிய வேண்டும் என்பது நம் கோரிக்கை, அல்லது வேறு நாடுகள் முன்மொழியும் தீர்மானத்தில் பொருத்தமான திருத்தம் கொண்டுவரலாம். இதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தபின் அமெரிக்கா கொண்டுவரப் போவதாகச் சொல்லப்பட்ட தீர்மானத்தின் மீது கவனம் செலுத்தினோம்.

தீர்மானத்தின் குறைகள்

அமெரிக்கா, பிரித்தானியா, மௌரிசஸ், மாசிடோனியா, மாண்டிநெக்ரோ... ஆகிய ஐந்து நாடுகள் முன்மொழிவதாக இருந்த தீர்மானத்தின் முதல் வரைவு இணையத்தில் இடம் பெற்றவுடனே கவனமாகப் படித்துப் பார்த்து விவாதித்தோம். இத்தீர்மான வரைவில் தமிழர்களின் தேசிய இனச் சிக்கல், அதற்கான தீர்வு என்ற பார்வையே இல்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளும் 13ஆம் சட்டத் திருத்தத்திற்குட்பட்டும் அதிகாரப் பரவல் என்ற இந்தியாவின் மோசடித் தீர்வுதான் வலியுறுத்தப்பட்டிருந்தது. பொறுப்புக் கூறல் வழிப்பட்ட நீதியை நிலைநாட்ட உதவாத படிப்பினைகள்-நல்லிணக்க ஆணையப் பரிந்துரைகளைச் செயலாக்க வேண்டுகோள் விடப்பட்டிருந்தது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்காவே நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் என்ற புளித்துப் போன சடங்காசார வேண்டுதலும் சேர்க்கப்பட்டிருந்தது.

இப்படிப் பலவகையிலும் 2012, 2013 தீர்மானங்களைப் போலவே ஏமாற்றமளிப்பதாக இருந்த அளவில் இந்தத் தீர்மானத்தை அயோக்கியத் தீர்மானம் என்று சாடுவதில் தவறில்லை. ஆனால் ஈடுசெய் நீதிக்கான போராட்டத்தில் ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளும் படியான சில கூறுகளும் இந்தத் தீர்மானத்தில் இடம்பெற்றிருக்கக் கண்டோம். அவற்றுள் முதன்மையானது தீர்மானத்தின் செயல்திட்டப் பகுதியின் எட்டாம் பத்தியில் மனித உரிமை மன்ற ஆணையருக்குத் தரப்பட்டிருந்த கட்டளை.

எட்டாம் பத்தி

எட்டாம் பத்தி கூறியது என்னவென்றால், மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக் கூறலுக்கு சிறிலங்கா அரசாங்கம் நம்பகமான உள்நாட்டுச் செயல்வழி ஒன்றை நிறுவத் தவறி விட்ட நிலையில் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு தேவை என்ற மனித உரிமை மன்ற ஆணையரின் முடிவுகளையும் பரிந்துரையையும் வரவேற்கிறோம். இலங்கையில் இரு தரப்பினரும் புரிந்ததாகச் சொல்லப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் புலனாய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். மனித உரிமை ஆணையர் இப்புலனாய்வின் முடிவுகளை மன்றத்தின் இருபத்தைந்தாவது அமர்வில் வாய்மொழியாகவும் இருபத்தாறாவது அமர்வில் எழுத்துவடிவிலும் அறிக்கையிட வேண்டும்.

தீர்மானம் தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு என்று வெளிப்படையாகப் பேசவில்லை. ஆனால் இது உள்நாட்டளவிலான புலனாய்வாக இருக்க முடியாது. மனித உரிமை ஆணையர் ஐநா வல்லுனர்களின் உதவியோடு நடத்தும் புலனாய்வு பன்னாட்டுத் தன்மையும் தற்சார்பும் கொண்டதாகத்தான் இருக்க முடியும் என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

மனித உரிமை மன்றமே பன்னாட்டுப் புலனாய்வுக்கான ஆணையத்தை நிறுவ வேண்டும் என்றுதான் ஆணையர் நவநீதம்பிள்ளையே கேட்டார். ஆனால் சொல்லளவில் இல்லையென்றாலும் செயலளவில் ஒரு தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வுக்கு இந்தத் தீர்மானம் வழிகோலுகிறது என்பதுதான் உண்மை. 2012, 2013 தீர்மானங்களைக் கடுமையாகச் சாடிய பிரான்சிஸ் பாய்ல் இந்த 2014 தீர்மானம் குறித்து எழுதும் போது “எதுவும் இல்லை என்பதை விட ஏதோ ஒன்று கிடைப்பது நல்லதுதான்” என்று குறிப்பிட்டார். இந்த ஏதோ ஒன்று சிறியதுதான் என்றாலும் பெரிய விளைவுகளைக் கருக்கொண்டிருப்பது என்று பார்க்கிறோம்.

இறுதி வரைவு

தீர்மானத்தின் முதல் வரைவுகளோடு ஒப்பிடுமிடத்து இறுதி வரைவு பலவகையிலும் நீர்த்துப் போயிருந்தது. பழைய எட்டாம் பத்தி இப்போது பத்தாம் பத்தி ஆகியிருந்தது. முன்பு மனித உரிமை ஆணையரின் அறிக்கையை வரவேற்பதாக இருந்தது போய் இப்போது கவனத்தில் கொள்வதாக மட்டும் இருந்தது. ஆனால் மனித உரிமை ஆணையர் ஐநா வல்லுனர்களின் உதவியைப் பெற்றுப் புலனாய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டுவதில் மாற்றமில்லை.

புலனாய்வு செய்ய வேண்டிய குற்றங்கள் எவை? இனக் கொலை என்றோ போர்க்குற்றங்கள் என்றோ மானிட விரோதக் குற்றங்கள் என்றோ வரையறுத்துச் சொல்லவில்லை. தொடர்புடைய குற்றங்கள் (related crimes) என்று பொதுவாகச் சொல்லியிருப்பதால், இனக்கொலை உள்ளிட்ட எல்லாக் குற்றங்களைப் பற்றியும் புலனாய்வு செய்யும்படி நம்மால் வாதிட முடியும். புலனாய்வுக்குரிய காலம் படிப்பினைகள்-நல்லிணக்க ஆணையத்தின் ஆய்வுக் காலம் என்று வரையறுத்திருப்பதும் குறைதான். ஆனால், தமிழீழ மக்களது உறுதிப்பாட்டின் நேர் விளைவும் சிங்களப் பேரினவாத அகந்தையின் எதிர்விளைவும் சேர்ந்து, சொல்லாட்சியிலும் காலவரையறையிலுமான இந்தக் குறைபாடுகளைக் களைய வழிகோலும் என நம்புகிறோம். இந்தக் காலவரைக்குள்ளும் கூட நிகழ்ந்தவற்றைச் சான்றுகளுடன் நிறுவினாலே, இனக்கொலை செய்யும் உள்நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மானிடவிரோதக் குற்றங்கள் என்பதைக் காட்டி இனக்கொலைக் குற்றத்தையே நம்மால் மெய்ப்பிக்க முடியும்.

வெற்றி

தமிழர்களின் மீதான தேசிய இன ஒடுக்குமுறைக்குத் தீர்வு என்ற கோணத்தில் இந்தத் தீர்மானம் உதவாத ஒன்று என்றாலும், தட்டுத் தடுமாறியாவது தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிதிறக்கக் கூடிய ஒன்று என்ற அளவில் வரம்புக்குட்பட்டு வரவேற்கத்தக்கது எனக் கருதினோம். இந்தத் தீர்மானத்தை இந்தியா கெடுத்து விடக்கூடாதே என்று கவலைப்பட்டோம்.

ஒருவழியாக இந்தத் தீர்மானம் வெற்றி பெற்று விட்டது. சிங்களத்துக்கு மட்டுமல்ல, இந்தியத்துக்கும் இது ஒரு தோல்வி. பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிகோலும் பத்தாவது பத்தியை நீக்க பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியா செய்த முயற்சி தோற்ற பிறகுதான் இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஓடிப்போனது. 2012, 2013 தீர்மானங்களை ஆதரித்து வாக்களித்த இந்தியா இம்முறை ஒதுங்கிக்கொன்டதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முதன்மைக் காரணம்... பழைய தீர்மானங்களைப் போல் இது பல்லில்லாத தீர்மானம் அன்று என்பதே. தற்சார்பான பன்னாட்டுப் புலனாய்வு ஏற்படுத்தக் கூடிய தொடர்விளைவுகளை அது நன்கறியும். அது சிங்கள அரசோடு இந்திய அரசையும் கூண்டிலேற்றி விடக் கூடும்தானே!

புலனாய்வும் சிங்கள எதிர்வினையும்

பன்னாட்டுப் புலனாய்வுக்கான செயல்வழி தொடங்கி விட்டது. இதை ஏற்க முடியாது என்கிறார் இராசபட்சே. ஏற்கா விட்டால் உலகம் தடைகள் விதிக்க நேரிடும் என்று யாஸ்மின் சூக்கா எச்சரிக்கிறார். ஐநா தடைகள் கொண்டு வரவிடாமல் சீனா போன்ற நாடுகள் தடுக்கக்கூடும். அப்படியும் ஐரோப்பியத் தடைகள் வருவதைத் தடுக்க இயலாது. சிறிலங்காவைப் புறக்கணிக்கும் இயக்கம் உலகு தழுவிய அளவில் வீச்சுப் பெறும். இந்தியாவிலும் இந்த இயக்கத்தை வீரியத்துடன் நடத்த நாம் முயன்றால் முடியும்.

பன்னாட்டுப் புலனாய்வுக்கான வழி திறந்திருப்பது எவ்வளவு முகாமையான முன்னேற்றம் என்பதைப் பகைவனின் ஆத்திர ஆவேசத்திலிருந்தே புரிந்து கொள்ளலாம். புலம்பெயர் தமிழர் அமைப்புகளை சிறிலங்கா அவசர அவசரமாகத் தடை செய்துள்ளது. குறிப்பிட்ட தலைவர்களையும் பயங்கரவாதிகள் என்று அறிவித்துள்ளது. புலிப்படை புத்துயிர் பெறுவதாகச் சொல்லி மூன்று தமிழ் இளைஞர்களை அநியாயமாகச் சுட்டுக் கொன்று விட்டது. வடக்கு மாகாணத்தில் அடக்குமுறையைத் தீவிரப்படுத்தியுள்ளது. மறுபுறம் உலகத் தமிழர்களோ பன்னாட்டுச் சமுதாயமோ இந்தப் பூச்சாண்டிக்கு மிரள்வதாக இல்லை. தாயகத் தமிழர்களையும் புலம்பெயர் தமிழர்களையும் பிரிக்கும் சிங்கள அரசின் சூழ்ச்சி வெல்லப் போவது இல்லை.

சிங்கள இராணுவம் இழைத்த குற்றங்களுக்குச் சான்றுகள் திரட்டும் வேலை தொடங்கி விட்டது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இனவழிப்பில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகளின் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்? இன அழிப்புப் போர் நடந்த போது அதைத் தடுத்து நிறுத்தத் தவறி விட்டோம் என்ற குற்ற உணர்வு நமக்கு இருக்குமானால், இப்போது அதற்கு நீதி தேடும் போராட்டத்திலாவது நம் முழு வலுவையும் திரட்டி சிங்களத்தைத் தனிமைப்படுத்துவோம். தமிழ்நாட்டுத் தமிழர்கள் நிழல் என்றாலும் நிசம் என்றாலும் சிறந்த சண்டை ரசிகர்கள் என்ற அவப்பெயர் நீங்கச் செய்வோம். ஈழத் தமிழரின் நீதிக்கும் இறைமை மீட்புக்கும் விடுதலைக்குமான போராட்டத்தில் தமிழ்நாட்டு இயக்கங்களும் கட்சிகளும் கருத்து வேறுபாடுகளைக் கடந்து தமிழ் மக்களைத் திரட்டிக் களமாடுவோம். தமிழினத்தின் வீறெழுச்சி கண்டு சிங்களப் பேரினவாதமும் இந்திய வல்லாதிக்கமும் நடுநடுங்கட்டும்!