நாங்கள்
இளைப்பாற
நீ சுற்றினாய்

நாங்கள்
பேச
நீ முனகினாய்

நாங்கள்
வழி பெற
நீ வலி பெற்றாய்

எங்கள்
உணர்வுப் பசிக்கு
மானம் ஊட்டினாய்

எங்கள்
அறியாமையை அறிய
பொய்களின் மெய்யைச் சொன்னாய்

காலுக்கடியில்
கிடந்த பெண்களைத்
தோளுக்கருகில் உயர்த்தி
தோழர்களாக்கினாய்

விடைகளையே
நீ
வினாக்குள்ளாக்கினாய்

கல்வீசிப்
புண்படுத்திய போதும்
சொல்வீசிப் பண்படுத்தினாய்

இன இறக்கம்
பொறுக்காத நீ
குடல் இறக்கம் பொறுத்தாய்

இழிவைத் தூக்கிச் சுமந்த
இனத்திற்காய்க்
கழிவைத் தூக்கிச் சுமந்தாய்

ஆட்டம் கண்ட
இனத்தைத்
தள்ளாட்டம் கண்டாலும் தாங்கினாய்.

***

திலீபன்

ஒவ்வொரு பொழுதைக்
கடக்கும் போதும்
உயிரன்று
உரிமையே அழிகிறது என்றாய்

யாக்கை
சுருங்கிய போதும்
வேட்கையுடன் விரிந்தாய்

இறுதியின் நெருக்கத்திலும்
உன் வேட்கை
தண்ணீரை
நோக்கி இல்லாமல்
தாயகத்தை
நோக்கி இருந்தது

பசித்த வயிற்றோடு
இறப்பை
உண்டாய்.