கஷ்மீரில் நடக்கும் அத்தனை அவலங்களுக்கும் காரணம் இராணுவத்தைப் பாதுகாத்திடும் அளவில் அங்கு செயலிலிருக்கும் ஆயுதந்தாங்கிய படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டந்தான். ARMED FORCES SPECIAL POWERS ACT.

                இந்தச் சட்டம் அங்கே செயலிலிருக்கும் வரை, கொலைகளையும், கற்பழிப்புகளையும், தங்கு தடையின்றி செய்யும் இராணுவத்தினரை நாம் தடுத்திட இயலாது. அவர்களை நீதியின் முன் நிறுத்திட இயலாது.

                kashmir_muslim_370கொலைக் குற்றங்களுக்கும் கற்பழிப்புகளுக்கும் தண்டனைகளைப் பெற்றிட வேண்டியவர்கள், அதாவது பாதுகாப்புப் படையினர் அங்கே பதக்கங்களையும் பரிசில்களையும் பதவி உயர்வுகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

                இந்த வகையில் வைகறை வாசகர் வட்டம், தாருல் இஸ்லாம், இன்னும் நாடெங்குமுள்ள நல்ல உள்ளங்கள் இவர்களெல்லாம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிகளைக் குவிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

                ஆனால் மக்கள் இன்னுங் கொஞ்சம் அழுத்தம் தந்திட வேண்டும். அதனை நாம் முறையாகச் செய்து கொண்டிருக்கின்றோம். நாம் அதனைத் தொடருவோம் மக்களும், மனித உரிமை அமைப்புகளும் தங்கள் முயற்சிகளைத் தொடரும் என எதிர்ப்பார்க்கின்றோம்.

                ஆனால் கஷ்மீரில் அரசின் தீவிரவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புகள், இந்தியாவின் இதர பகுதிகள், கஷ்மீர் மக்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுகின்றார்கள்.

                அவர்களின் ஆதங்கத்தை அப்படியே இங்கே பதிவு செய்கின்றோம்.

                அதாவது "அந்த ஆவணம் (அதாவது கஷ்மீரில் இயங்கும் மனித உரிமை அமைப்புகள் தயார் செய்த ஆவணங்கள் மேலும் இப்படிக் கூறின. மத்திய மாநில அரசுகள், இந்தப் பிரச்சனையில் கவனம் செலுத்துவதே இல்லை. (இந்தப் பிரச்சனை எனக் குறிப்பிடப் படுவது) காணாமற்போகும் முஸ்லிம் இளைஞர்கள், சம்பந்தமான பிரச்சனைதான்) ஆனால் இந்தியாவின் இதர பகுதிகளில் உள்ள மக்களும் இந்தப் பிரச்சனையில் (கஷ்மீர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனையில்) கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இந்திய மக்கள் நாட்டில் நடக்கும் இதர மனித உரிமை மீறல்கள், உரிமை மீறல்கள் இவற்றில் நிரம்பவே கவனஞ்செலுத்துகின்றன. வெற்றிகளையும் ஈட்டுகின்றன.

(SOURCE : REPORT BY JKCCS = JAMMU & KASHMIR COALITION OF CIVIL SOCIETIES).

                கஷ்மீரில் இயங்கும் மனித உரிமை அமைப்புகளின் குழுமந்தான் இந்த யிரிசிசிஷி கஷ்மீர் மக்களின் கூட்டமைப்பு என்ற இந்த அமைப்பு - அந்த மக்கள் தங்கள் வரலாற்றின் மிகவும் நெருக்கடியானதொரு காலகட்டத்தில், மிகவும் அந்நியமான உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்கள். இஃது போக்கப்பட வேண்டும், அவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சனையில், மொத்த இந்தியாவும் பின்னணியில் நிற்க வேண்டும்.

                எப்படி இந்தியாவின் இதரப்பிரச்சனைகளில் - உரிமை மீறல்களில் நாம் முன்னணியில் நிற்கின்றோமோ அதேபோல் கஷ்மீர் மக்களின் பிரச்சனைகளிலும் முன்னணியில் நின்றிட வேண்டும்.

                இந்த வகையில்தான் "வைகறை வெளிச்சம்" இந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கின்றது.

                2011ஆகஸ்ட் 30 ஆம் நாள் காணாமற் போனவர்களின் உலக கவன ஈர்ப்பு நாள் என ஐக்கிய நாடுகளின் சபை அறிவித்த போது தாருல் இஸ்லாம், வைகறை வாசகர் வட்டம் அதில் சிறப்பாகப் பணியாற்றியது.

                கஷ்மீர் மக்களின் கண்ணீர் கதைகளை தமிழக மெங்கும் துண்டு பிரசுரங்களின் வழி கொண்டு சென்றது. அத்தோடு அத்தனை உரிமை மீறல்களையும் - கொலைகளையும் - கற்பழிப்புகளையும் அனுமதிக்கும் ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகார சட்டத்திற்கெதிராக ஓர் இயக்கத்தையும் நடத்தியது.

                ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் தந்திடும் பாதுகாப்பால்தான், இராணுவத்தினர் காட்டுமிராண்டிகளாக நடந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் காட்டுமிராண்டித் தனத்தின் ஆயிரக்கணக்கான அத்தாட்சிகளுள் ஒன்றை இங்கே தருகின்றோம்.                         ஹாலிதா அக்தர் 28 வயதான நங்கை !!

 kashmir_pla_370                கஷ்மீரில் மிகவும் அதிகமான கெடுபிடிகளுக்கும், கொடுமைகளுக்கும் கற்பழிப்புகளுக்கும் உள்ளாகும் மாவட்டம் பாராஹ்முல்லாஹ். இந்த மாவட்டத்தில் ஹீரீ என்ற ஊரைச் சார்ந்தவர் ஹாலிதா அக்தர்.

                 ஜூலை 2001 ஆம் ஆண்டில் அது நடந்தது.

                ஹாலிதா அக்தரும் தம்பிமார்களும் தாய் தந்தையரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந் தார்கள்.

                நடுநிசி!!

                வீட்டை யாரோ தட்டும் சப்தம்.

                முதலில் வந்த சப்தம் மிகவும் மெல்லிதாகவே இருந்தது. அதனால் யார் வீட்டையோ, யாரோ தட்டுகின்றார்கள் என்ற ஹாலிதா அக்தரின் குடும்பத்தார் சட்டை செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

                ஆனால் நேரஞ்செல்லச் செல்ல தங்கள் கதவை தான் யாரோ தட்டுகின்றார்கள் என்பதை உணர்ந்தார்கள்.

                ஆனால் அதற்குள் கதவைத் தட்டும் சப்தம் தட்டுபவர்கள் உடைத்து விடுவார்கள்ளோ என அஞ்சிடும் அளவிற்கு அதிகரித்தது.

                இனி கதவை திறப்பதில் தாமதம் காட்டினால் வீட்டின் கதவு விழும் என்ற நிலை.

                ஆகவே ஹாலிதா அக்தர் விரைந்து சென்று கதவைத் திறந்தாள்.

                கதவைத் திறந்தது தான் தாமதம். அவளை இடித்துத் தள்ளிவிட்டு ஆயுதந்தாங்கியப் படையினர் உள்ளே நுழைந்தார்கள்.

                கண்ணில்பட்ட ஆண்களையும், பெண்களையும் உதைத்தார்கள். வீட்டைக் கபளீகரப்படுத்தினார்கள்.

                பின்னர் ஹாலிதா அக்தரின், தம்பிமார்கள், கணவன், தந்தை அதாவது அத்தனை ஆண்களையும் தரதரவென இழுத்துக் சென்று, வீட்டின் முன்புறம் நின்று கொண்டிருந்த இராணுவ ஊர்தியில் ஏற்றினார்கள்.

                மின்னல் வேகத்தில் பாய்ந்தாள் ஹாலிதா அக்தர், தன்வீட்டு ஆண்களை விட மாட்டேன், எனத் தடுத்தாள். அந்த இராணுவ அதிகாரிகளின் மிருகப் பலத்திற்கு முன் அவள் எம்மாத்திரம்? தலைகுப்புற அவளைப் பிடித்துத் தள்ளினார்கள். வீழ்ந்ததால் மூக்கு உடைந்தது. அதையும் பொருட்படுத்தாமல் நீங்களெல்லாம் எந்த இராணுவப் பிரிவினர்? ஏன் எங்கள் ஆண்களை இழுத்துச் செல்கின்றீர்கள்? எனக் காரணம் கேட்டாள்.

                கஷ்மீரில் இராணுவத்தினர் அழைத்துச் சென்ற ஆண்களை உயிருடன் திரும்பவிட்டதே இல்லை. இதையும் ஹாலிதா அக்தர் நன்றாக அறிவாள். அதனால்தான் அவள் காயம்பட்ட நிலையிலும் காரசாரமாக அந்தக் காட்டுமிராண்டிகளிடம் வாதிட்டாள் வந்ததை வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

                ஆனால் கஷ்மீரின் கொடுங்கோலர்களிடம் அவளைப் போன்ற அபலைகளின் அலறல்கள் எடுபட்டதில்லை.

                இது ஜனநாயகமாம் ! அதுவும் இந்திய ஜனநாயகமாம் 65 ஆண்டுகளாக இது நன்றாகவே செயல்பட்டிருக்கின்றதாம். நமது நாட்டின் பிரிக்க முடியாதப் பகுதி கஷ்மீர் என மார்தட்டிக் கொள்ள வேண்டுமாம், இல்லையேல் "இராஜகுத்தம்" வந்துவிடுமாம்.

                தனக்கேற்பட்ட காயங்களையெல்லாம் துச்சமென மதித்து அன்றிரவே தங்கள் குடும்பத்தைச் சார்ந்த ஆண்கள் எங்கே கொண்டு செல்லப்பட்டார்கள் என்பதைக் கண்டுபிடிக்க புறப்பட்டாள் காரிகை ஹாலிதா அக்தர்.

                இப்படி அழைத்துச் செல்பவர்களை முதலில் பக்கத்திலுள்ள காவல்துறை நிலையத்திற்குத்தான் அழைத்துச் செல்வார்கள் பின்னர் தான் அவர்களை இதர இடங்களுக்குக் கொண்டு செல்வார்கள். பக்கத்து காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லவில்லையென்றால், பக்கத்து காவல் நிலையத்திற்குத் தகவலாவது தருவார்கள். இதையும் ஹாலிதா அக்தர் நன்றாக அறிவாள், அதனால் தான் அவள் பக்கத்திலுள்ள காவல் நிலையத்திற்கு ஓடினாள்.

                மொத்தத்தில் ஹாலிதா அக்தர், நல்ல விபரமான பெண். மனித உரிமைகளைப் பற்றிய அகலமான அறிவு இல்லாவிட்டாலும் அவள் மனித உரிமைப் பிரஞ்சை உடையவள் எனச் சொல்லலாம். ஆனால் கஷ்மீரில் முட்டாள்களுக்கும், அறிவாளிகளுக்கம் சித்திரவதையும் மரணமும் தான் பரிசு. பிணத்தையும் காட்டமாட்டார்கள் புதைத்த இடங்களையும் காட்டமாட்டார்கள்.

                ஆனால் ஹாலிதா அக்தர் தன்னால் இயன்றதையெல்லாம் செய்து தன் குடும்பத்து ஆண்களை மீட்டுவிடுவது என முடிவு செய்திருந்தாள்.

                ஆகவே இரவோடு இரவாக தன்வீட்டு எல்லைக்குட்பட்ட காவல் நிலையம் சென்றாள். அங்கே இருப்பவர்கள் தங்களுக்குத் எதுவும் தெரியாது என்றார்கள்.

                சட்டப்படி உங்களுக்குத் தெரிவித்திருப்பார்கள் என்றாள். சட்டம் பேசினால் நீயும் சிக்கிக் கொள்வாய் என்று மிரட்டினார்கள்.

                முடிந்த மட்டும் வாதாடி பார்த்தாள். அவர்கள் முடிவாக நீ பாராஹ்முல்லாஹ்விலுள்ள தலைமை காவல் நிலையத்தை அல்லது அங்கேயுள்ள இராணுவ முகாம்களைச் சென்று பார் எனக் கூறி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக அனுப்பிவிட்டார்கள்.

                அதிகாலைவரை காவல்நிலையத்தைச் சுற்றிச், சுற்றி வந்துவிட்டு இல்லந் திரும்பினாள். வீட்டில் தாயும் மற்றவர்களும் கதிகலங்கிக் கிடந்தார்கள். தாயார் நினைவற்றுக் கிடந்தாள். அக்கம் பக்கத்தவர்கள் தங்களாலான கை வைத்தியத்தைச் செய்து கொண்டிருந்தார்கள்.

                தன் தாய்க்காகத் தான் தேக்கி வைத்திருந்த கண்ணீரை உகுத்துவிட்டு, நடந்ததை வந்திருந்தவர்களிடம் கூறிவிட்டு, தளர்ந்து தள்ளாடியவளாக படுக்கையில் சாய்ந்தாள்.

                சற்று நேரத்திற்கெல்லாம் பதறித்துடித் தெழுந்தாள். ஆமாம் எல்லாந்தான் பறிபோய்விட்டதே அதனால் இனி பதறலும், துடித்தலுந்தான் வாழ்க்கை என்பதை அவள் அறிவாள். ஆமாம்!! கஷ்மீரில், இப்படித்தான் ஆண்களைப் பறிகொடுத்த குடும்பங்களெல்லாம், பதறி துடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

                பதறியெழுந்த ஹாலிதா அக்தர் பாராஹ்முல்லாஹ் நோக்கிப் புறப்பட்டாள் நிச்சயமாக அவளுக்கு அங்கே தன் குடும்பத்து ஆண்களைப்பற்றிய தகவல்கள் கிடைக்கும் என நம்பினாள்

                வீட்டிலிருந்த நகைகளில் பெரும் பாலானவற்றை விற்றுப் பணமாக மாற்றினாள். ஏனெனில் அவளுக்கு நிச்சயமாகத் தெரியும் நீதிக்கான தனது போராட்டம் நீளமானது., நிலை இல்லாதது.

                ஒரு வழியாக பாராஹ்முல்லஹ் வந்தாள்.

                தலைமைக் காவல் நிலையத்தைக் கண்டுபிடித்தாள். அங்கே இருந்தவர்களிடம் விசாரித்தால், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆகவே அங்கேயுள்ள இராணுவ முகாம் நோக்கிச் சென்றாள்.

                அங்கே இருந்த இராணுவ அதிகாரிகள், நேற்று இராணுவத்தினர் அப்படி யாரையும் அழைத்துவரவில்லை என அடித்துக் கூறினர்.

                அதாவது ஹாலிதா அக்தர் கண்ணால் பார்த்தவற்றை இல்லை என்றார்கள்.

                ஹாலிதா அக்தர் ஆதங்கப்பட்டார். ஆத்திரத்தில் அதிகாரிகளிடம் கடுமையாக வாதிட்டாள். ஆனால் அவர்கள் தாங்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். சிலர் கோபாவேசமாகப் பேசினார்கள். அதே கோபத்தோடு ஹாலிதா அக்தரும் பேசினாள்.

                இராணுவத்தினர் சிப்பாய்களை ஏவி அவளை அடிக்கவும், மான பங்கப்படுத்திடவும் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

                இந்த மிருகங்களிடமிருந்து தப்பித்து விடுவதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தாள் ஹாலிதா அக்தர். மெல்ல பின்வாங்கினாள். எல்லா ஆண்களையும் மொத்தமாய் பறிகொடுத்த அவளால் எதையும் விட்டுக் கொடுக்க இயலவில்லை. ஆனால் அந்த இராணுவ முகாமில் தனது மானமே தப்புமா? என்ற நிலைவந்ததால் மெல்ல பின் வாங்கினாள்.

                 ஆனால் அங்கே இருந்த சிப்பாய்கள் அவளைக் குண்டுக்கட்டாக தூக்கி ஓர் அறைக்குள் கொண்டு சென்றனர். கடுமையான சித்திரைவதைகளுக்கு ஆளாக்கினார்கள். அவள் போற்றி வந்த மானமும், பெண்மையும் அங்கே பறிக்கப்பட்டது.

                குடும்பத்து ஆண்களை மீட்க வந்த அந்த வீரத்திருமகள், எதிர்பாராத கொடுமைகளுக் கெல்லாம் ஆளாக்கப்பட்டாள்.

                இரண்டு நாள் இராணுவ முகாமில் சிறை வைக்கப்பட்டாள். பின்னர் கஷ்மீரை விடுவிக்கப் போராடும் போராளிகளுக்கு உதவி செய்தாள்: போராளிகளின் கூட்டத்தின் உறுப்பினர் என்றெல்லாம் குற்றம் சுமத்தப்பட்டாள்.

                மூன்றாம் நாள் இந்தப் பொய்களை யெல்லாம் ஒரு வழக்காக ஜோடித்து பாராஹ்முல்லாஹ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். அத்தோடு ஹாலிதா அக்தரையும் ஒப்படைத்தார்கள்.

                இவளை தீவிரவாதியென கைது செய்து சிறையிலடையுங்கள் என ஆணைப் பிறப்பித்து விட்டுப் போய்விட்டார்கள்.

                ஆணையிட்டது இராணுவத்தினர் என்பதால் அதனை அப்படியே நிறைவேற்றினார்கள் காவல் துறையினர்.

                ஹாலிதா அக்தர் சிறையிலடைக்கப்பட்டார்.

                இதற்காக காவல் துறையினர் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கைதான் 91/02 கஷ்மீரில் இப்போது இந்த எண் மரணத்தின் எண் என பிரபல்யமாகிவிட்டது.

                அதற்குள் அவள் எல்லா சித்திர வதைகளுக்கும் ஆளாக்கப்பட்டு விட்டாள்.

                அடுத்து அவளுக்குப் பிணை கேட்கும் பணிகளைத் தொடங்கினார்கள் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள்.

                பிணை நீதிமன்றம் வந்தபோது ஹாலிதா அக்தரே அதிகமாகவும், ஆக்ரோஷமாகவும் பேசினாள். தனது நடந்த அநியாயங்கள் தனது குடும்பத்தைச் சார்ந்த ஆண்கள் கடத்தப்பட்டது, தேடிச் சென்ற தன்னை சித்திரவதைச் செய்தது எல்லாவற்றையும் பட்டியலிட்டாள்.

                நீதிபதி உண்மையையும் யதார்த்தத்தையும் உணர்ந்தார் என்றாலும், கைது செய்தது முதல் அத்தனையையும் செய்தது இராணுவம் என்பதால் எடுத்த எடுப்பிலேயே பிணையை வழங்கிட வில்லை. 'வாய்தா' போட்டார். ஆனால் அடுத்த விசாரணையின் போது சாட்சியங்கள் வலுவானவையாக இல்லை எனக் கூறி பிணை வழங்கினார்

                நாடெங்கிலும் நடப்பிலிருக்கும் பழக்கம் பிணையைப் பெற்றவர்கள், சட்டப்படியான நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னர் வீட்டுக்குச் செல்வார்கள். ஆனால் கஷ்மீர் முஸ்லிம்கள் பிணைகிடைத்தாலும் சிறையிலேயே இருக்கின்றார்கள். அதற்கு ஹாலிதா அக்தர் விதிவிலக்கல்ல.

                உண்மையைச் சொன்னால், ஹாலிதா அக்தர் விசயத்தில் சட்டத்தைச் செயல்படுத்திட வேண்டியோர், இன்னும் குரூரமாகவும், கேவலமாகவும் நடந்து கொண்டார்கள்.

                பிணை கிடைத்த ஹாலிதா அக்தரை வெளியே வரவிடாமல், சித்திரவதைக் கூடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அவள் மீது மின்சாரத்தைப் பாய்சினார்கள். தண்ணீரில் அவள் முகத்தை திணித்து மூச்சுத் திணறச் செய்தார்கள்.

                அதன்பின் எழுதும் தரத்தலில்லாத செயல்களில் ஈடுபட்டார்கள். இத்தனை சித்திர வதைகளிலிருந்தும் விடுபட வேண்டும் என்றால், அவள், தனக்கும் போராளிகளுக்கும் தொடர்பு உண்டு என்று ஒத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவள் அதற்குத் தயராக இல்லை. அவர்களும் விடுவதாக இல்லை.

                ஒரு பல்லை இழந்தாள், உடலும், மானமும் பழுதுபட்டன. என்றாலும் இராணுவம் சொன்னவற்றை அவள் சொல்வதாக இல்லை. மறுத்தாள், எதிர்த்தாள்.

                நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பெற்ற, ஹாலிதா அக்தர் அங்கிருந்து 'கோட்டி பல்வால்' சிறைக்கு மாற்றப்பட்டார். இது ஸ்ரீ நகருக்குப் பக்கத்திலுள்ள ஒரு சிறை.

                ஆறுமாதங்கள் அங்கே வைக்கப்பட்டபின் மீண்டும் நீதி மன்றம் கொண்டுவரப்பட்டாள்.

                நீதிமன்றம் அவளை வழக்கிலிருந்து முற்றாக விடுவித்தது.

                பலசோதனைகள், இல்லை அவை சோதனைகளல்ல. நமது இந்திய அரசின் இராணுவத்தினர் அடுக்கடுக்காய் கட்டவிழ்த்திட்ட அநியாயங்கள். அத்தனையையும் ஒன்றாய் எதிர்கொள்வது என முடிவுசெய்தாள்.

                இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகளை மேற்கொண்டாள்.

                இராணுவத்தினர் என்ன செய்தாலும், எத்தனை கொடூரங்களை அவிழ்த்து விட்டாலும் எதுவும் செய்திட இயலாது. அவர்களைப் பாதுகாக்கும் சிறப்புச் சட்டம் ஒன்று இருக்கின்றது. அதையும் மீறி அவர்கள் மீது ஒரு புகாரை பதிவு செய்ய வேண்டும் என்றாலும், அதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றார்கள்.

                                இராணுவத்தின் காட்டுமிராண்டித் தனங்களுக்கு 'லைசன்ஸ்' வழங்கும் சட்டங்களைப் பின் வாங்குங்கள் என்ற கடிதம் எழுதினாள், அனுமதிகேட்டு. அந்தக் கடிதத்தில் இராணுவத்தினர் தன்வீட்டு ஆண்கள் அனைவரையும் கடத்திச் சென்றதையும் விவரமாக எழுதி இருந்தாள். தன்னை சிறை வைத்ததையும் சித்திரவதைச் செய்ததையும் விவரித்துச் சொன்னாள்.

                இருக்கின்ற சமுதாய அமைப்புகள் எதுவும் பலன்தராது என்பதால், அவள் இந்தப் பெரும் போரை தானே தன்னந்தனியாகத் தொடர்ந்தாள்.

                மத்திய அரசிடமிருந்து பதில் வரும் எனக் காத்திருந்த ஹாலிதா அக்தருக்கு வேறுவிதமான வினை ஒன்றே வந்தது.

                ஆமாம் ஒரு நாள் அதிகாலையில் இராணுவ ஊர்திகள் அவள் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றன. சில காவல்துறை வாகனங்களும் வந்தன. ஹாலிதா அக்தரை ரான்பிர் பீனல் கோடு (RANBIR PENAL CODE SECTION 212) பிரிவு 212 இன் கீழ் கைது செய்திருப்பதாகக் கூறி கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.

                அக்கம் பக்கம் மக்களெல்லாம் அழுது புலம்பி அல்லோலப் பட்டார்கள், ஹாலிதா அக்தரின் அம்மா அன்று நினைவிழந்தவள்தான், அதன் பின்னர் அவள் நினைவு திரும்பவே இல்லை.

                இப்போதும் ஆறுமாதங்கள் சிறையில் வைத்தபின்னர் தான் நீதிமன்றம் கொண்டு வந்தார்கள். அப்போதும் ஹாலிதா அக்தரே தன் வழக்கை வாதிட்டார். உண்மையில் தன் வழக்கை வாதிடுகின்றோம் என்ற பாங்கில் அவள் தன் வாதங்களை வைக்கவில்லை மாறாக தன் ஆதங்கத்தையும், தொடர்ந்து நடத்தப்படும் கொடூரங்களையும் அடுக்கினாள். காவல் துறையினரை எச்சரித்த நீதிபதி ஹாலிதாவை முற்றாக வழக்கிலிருந்து விடுவித்தார்.

                இப்போது தன்மீது தொடுக்கப்படும் வழக்குகளில் அவள் பிணை கேட்பதில்லை. காரணம் பிணைகிடைத்தாலும் அவளை வெளியே விட மாட்டார்கள். சிறைபிடிப்பார்கள். சித்திரவதை செய்வார்கள்.

                ஹாலிதா அக்தர் மீது தொடரும் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. ஆனாலும் அவள் தொடங்கிய போரை தொய்வின்றி தொடர்ந்தாள்.

                தனக்கு இழைக்கப்பட்ட எல்லா அநியாயங்களையும் பட்டியலிட்டு விளக்கிச் சொல்லி இவையெல்லாம் இராணுவத்தின் சதிகள்தாம் ஆகவே இராணுவத்தினர் மீது வழக்குத் தொடரும் அனுமதி கேட்டாள்.

                மத்திய அரசுக்கு எழுதிய ஒவ்வொரு கடிதத்திற்குப் பின்னும், ஒவ்வொரு மனுவுக்குப் பின்னரும் நெருக்கடிகள், கைதுகள், சித்திரவதைகள் இவைதாம் பதிலாகக் கிடைத்தன.

                2006 ஆம் ஆண்டு ஜூலை திங்களில் ஹாலிதா அக்தர் வீட்டின் முன் ஏராளமான காவல் துறையினர், சற்று இடைவெளி விட்டு இராணுவத்தினர் இப்படி ஒரு பெரும் கூட்டம் படைபரிவாரங்களோடு திரண்டு நின்றது.

                ஏதோ பெரியதொரு கோட்டையை முற்றுகை இட்டதைப் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கினர்.

                குழுமி இருந்த மக்களிடையே ஒரு செய்தியை தங்கள் ஒற்றர்கள் வழி கசியவிட்டார்கள். அதன் வழி லஷ்கரே - தொய்பா - ஜெய்ஸே முஹம்மத், ஆகிய அமைப்புகளுக்கும், ஹாலிதா அக்தருக்கும் தொடர்பு இருப்பதாக சொன்னார்கள்.

                ஹாலிதா தனது கைதுக்கும், குவிக்கப்பட்டிருக்கும் படைக்கும் அதன்வழி உருவாக்கப்படும் பதற்றத்திற்கும் காரணம் கேட்டார்.

                அனைத்திற்கும் பதிலாக அவளை இழுத்துச் சென்று வேனில் ஏற்றினார்கள். நொடியில் அந்த வேன் அவ்விடம்விட்டு அகன்றது.

                ஆனால் அங்கே நின்ற பரிவாரங்கள் அவ்விடம் விட்டு அகல அதிக நேரம்பிடித்தன.

                ஏதோ பெரியதிட்டம் ஒன்று அரங்கேறுகின்றது என்பதை மட்டும் எல்லோராலும் புரிந்திட முடிந்தது.

                இப்போது ஹாலிதா அக்தர் இருக்குமிடத்தையே தேடிட வேண்டியநிலை வந்தது. எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை.

                ஜனவரி 21 ஆம் நாள் 2007 ஆம் ஆண்டு.

                ஹாலிதா அக்தரின் உடல் ஓர் பழத்தோட்டத்தில் பிணமாகக் கிடந்தது. உடலெங்கும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து உடலை சல்லடையாக்கி இருந்தன. அந்தப் பழத்தோட்டம், பாராஹ்முல்லாஹ் மாவட்டம் ராபியாபாத் இவ் புத்தான் டங்கி வாச்சா என்னுமிடத்தில் கிடந்தது.

                காவல்துறையினர் உடலை கண்டெடுத்தார்கள். அவளைக் கொலை செய்வதற்கு முன் கத்தியால் காயப்படுத்தி இருந்தார்கள், சித்திரவதைகளின் மொத்த அடையாளத்திற்கு எடுத்துக்காட்டாக அவளின் உடல் அங்கு கிடந்தது.

                ஹாலிதா அக்தரை யார் கொலை செய்தார்கள் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை என அறிவித்தார்கள் காவல்துறையினர்.

                ஹாலிதா அக்தரை தேடும் பணி இனி யாருக்குமில்லை.

                ஆமாம் ஹாலிதாவுக்கு தன் கணவன் உட்பட தன்வீட்டு ஆண்களைத் தேடும் பணியும் இல்லை. அவள் தாயாருக்கு எந்தக் கவலையுமில்லை. அவள் நினைவிழந்து பல ஆண்டுகளாக 'கோமா' வில் கஷ்மீர் மருத்துவமனையில் 2009 ஆண்டுவரை இருந்தாள்...

                SOURCE : Widows & Half Widows, saga of Extra Judicial arrests

Pin It