இந்த பூமியில் நாம் பிறப்பது ஒருமுறைதான். நாலுபேருக்கு நல்லதை செய்ய வேண்டும். அந்த நல்ல காரியத்தை தள்ளிவைப்பதோ, அல்லது தவிர்ப்பதற்கோ இடமில்லை. ஏனெனில் மீண்டும் இந்த பூமியில் நான் பிறக்க போவதில்லை"                          - கர்னல் பென்னிகுவிக்

                "தமிழக கிராமங்களில் தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள் கேரளத்துக்கு வருகின்றன. பணப்பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக் கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்து தான் வருகிறது. ஆனால் அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் விட மறுக்கும் கேரள அரசை கடுமையாக கண்டிக்கிறேன்" -பால் சக்காரியா

                புகழ் பெற்ற மலையாள இலக்கிய அறிஞர், சாகித்திய அகாததெமி விருது பெற்றவர் 19-1-2003 ஆனந்த விகடன் இதழில் கூறியது.

                இயற்கை எழில் மிகுந்த கேரள மாநிலம். மரங்களும் - மலைகளுக்கு நடுவே ஓடிவிளையாடும் நதிகள், நூறு சதவீதம் படித்தவர்கள் நிறைந்த மாநிலம். அறிவார்ந்த சமுதாயம். சுத்தமான சுயநலத்தோடு இருப்பது புரிந்து கொள்ள முடியாத புதிர்.

    mullaiperiyar_anai_370            முல்லை பெரியாறு அணை விவகாரம் இருமாநிலங்களிலும் புயலைக்கிளப்பி பல போராட்டங்களை நடத்தி, பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இரு மொழி பேசுபவர்கள் தாக்கப்பட்ட 'நதிமூலத்தை' அறிந்து கொள்வோம்.

                இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடியில். மூன்று பக்கம் மலைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் 1895- ல் அன்றைய ஆங்கில அரசுப் பொறியாளர் பென்னிகுவிக் தலைமையில் கட்டியது. கட்டுமானப் பணிநடந்து கொண்டிருக்கும் போது. பணப்பிரச்சினையால் பணி நிறுத்தப்பட்டது. அணையின் அவசியத்தை உணர்ந்த கர்னல் பென்னிகுவிக் தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று அணையைக் கட்டி முடித்தார்.

                பொதுவாக அணைகளின் முன் பகுதியில் மதகுகள் அமைக்கப்பட்டு, பாசனத்திற்காக தண்ணீரை திறந்து மூடும் வகையில் அணைகள் கட்டப்படுவது வழக்கம். முல்லை பெரியாறு அணை இதற்கு முற்றிலும் மாறுபட்டது. அணையின் முன்பக்கம் மதகுகள் கிடையாது. அணையின் பின் பக்கம் மலையை குடைந்து இரண்டு கி.மீ தூரத்திற்கு ராட்சத குழாய் அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் திருப்பிவிடப் படுகிறது. கடும் தண்ணீர் பஞ்சத்தால் தவித்த அன்றைய ஒருங்கிணைந்த மதுரை ராமநாதபுரம் இன்று தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்கள் பாசன குடி நீர் வசதியை இதன் மூலம் பெறுகின்றன.

                இந்த அணை தண்ணீரை மேலே குறிப்பிட்ட மாவட்டங்கள் பயன்படுத்தும் வகையில் 999 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டது. 104 அடிக்கு மேல் வரும் தண்ணீரை மட்டும் தான் தமிழகத்திற்கு திருப்ப வேண்டும் என்பது ஒப்பந்த ஷரத்துக்களில் மிக முக்கியமான ஒன்று. அணை நீர் மட்டம் 152 அடி உயரமாக இருந்த போதும் மொத்த கொள்ளவான 15.5 டி.எம்.சி யில் 9 டி.எம்.சி தண்ணீர் அணையிலிருந்து வெளியேறாது. இந்த அளவு தண்ணீரை தேக்கி வைக்க உதவியாக இருப்பது அணையின் இடது புறம் உள்ள பேபிடேம். 1895- ஆம் ஆண்டு அக்டோபர் 10 - ம் தேதி முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டது முதல் 25.11.1979 வரை பெரிய பிரச்சனைகள் ஏதும் இல்லாமல். சென்னை ராஜதானி அரசுக்கும் - திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே 29.10. 1886 - ல் செய்து கொண்ட அணை ஒப்பந்தம் மீறப்படாமல் சுமுகமாக எல்லாம் நடந்து வந்தது.

                உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள் ! கோசத்தை வழிமொழிந்த கேரளவாழ் காம் ரேட்டுகளும், தேசியம் பேசும் காங்கிரஸ் காரர்களும் முல்லை பெரியாறை பலிகொடுக்க ஒரே மாதிரியே யோசித்து பல திட்டங்கள் போட்டார்கள் அவற்றுள் ஒன்று 1976 - ம் ஆண்டு இடுக்கியில் மிகப்பெரிய 555 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட நீர்மின் நிலையம் அமைப்பது எதிர்பார்த்தளவு நீர்வரத்து இல்லை என்பதால் கைவிடப்பட்டது. (கொள்ளையடிப்பதற்காகவே இப்படி ஒரு அணையை கட்டியதாக ஒரு பேச்சு உண்டு).

                பெரியாறின் நீர் மட்ட அளவை குறைத்து - மீதித் தண்ணீரை இடுக்கி அணைக்கு திருப்பி விட திட்டம் போட்டார்கள். இதற்கு 999 ஆண்டு ஒப்பந்தம் தடையாக இருந்தது. பீர்மேடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.கே, தாமஸின் மூலம் பெரியாறு அணை பலவீனமடைந்து விட்டது. எனவே 152 அடி தண்ணீர் தேக்கினால் அணை உடைந்து விடும் என்று போலி பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். இதற்கு ஊடகங்களும் துணை போயின.

                police_37025.11.1979 - ல் அப்போது மத்திய நீர் வளக் கமிஷன் தலைவராக கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கே.கி. தாமஸ் இருந்தார் - இவர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் ரூ 51 லட்சம் செலவில் அணையை பலப்படுத்த முடிவானது. இதற்கான செலவை தமிழகமே ஏற்றுக் கொள்ளவது என்றும், அணையை பலப்படுத்துவது வரை 136 அடியாக நீரை தேக்கி வைப்பது என்றும் முடிவானது. அன்றைய எம்.ஜி,ஆர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராஜா முஹம்மது - இந்த முடிவை எதிர்த்தார் கையெழுத்து போடவில்லை.

                பல்வேறு நிர்ப்பந்தங்களால் வேறு வழியின்றி தமிழகம் ஏற்றுக் கொண்டது மராமத்துப் பணிகளையும் தொடங்கியது. இதை எதிப்பார்க்காத கேரள அரசு பலவகையில் முட்டுக்கட்டைகளைப் போட்டு பணியை நிறைவு செய்ய விடவேயில்லை. முல்லைப் பெரியாறு கேரளத்துக்கு மட்டும் சொந்தம் என்ற எண்ணத்தை ஈடேற்ற எல்லோரும் ஓர் அணியில் சதி செய்கிறார்கள் இன்று வரை இதே நிலைதான்.

                136 அடியாக அணை நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் ரூ 70 கோடிக்கும் மேல் விவசாய உற்பத்தி இழப்பு ஏறிக் கொண்டேபோகிறது. இது 75,000 ஏக்கருக்குள் தான் பாசனம் செய்ய முடிகிறது 1,47,000 ஏக்கர் நிலம் தரிசாக மாறிவருகிறது (தேனியின் புறநகர் பகுதியான பழனிச்செட்டிப் பட்டியிலிருந்து கூடலூர் வரை பயணம் செய்யும் போது வயல்களின் நடுவே, நெல்வாசனையோடு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை மனதுக்கு இதமாக இருக்கும். இப்போது ரோட்டிலிருந்து 300 மீட்டர் வரை கடைகளும் வீடுகளுமாகக் காட்சியளிக்கின்றன).

                அணையை பலப்படுத்தும் பணியை முழுமைப் படுத்தவிடாமல் கேரளம் தடுத்ததால் தமிழகம் உச்ச நீதி மன்றத்தில் வழக்குபோட்டது. இருதரப்பு வாதங்களையும் பரிசோதிக்கும் படி ஆணையிட்டது உச்ச நீதிமன்றம். தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு ஒன்றை அமைத்து பரிசோதித்து அணையின் நீர் மட்டத்தை 142 அடிவரை உயர்த்துவதால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியது தமிழக அரசு. இதை ஏற்று உச்சநீதி மன்றமும் தீர்ப்பளித்தது. இன்று வரை கேரளம் இத்தீர்ப்பை மதிக்கவேயில்லை. தீர்ப்பை கேலிசெய்யும் விதமாக 31.3.2006 - ல் கேரள ஆறுகளின் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி தமிழகத்தை வெறுப்பூட்டியது. மீண்டும் உச்ச நீதி மன்றத்தை தமிழகம் அணுக ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐந்து பேர் கொண்ட உயர் மட்ட குழுவை நியமித்து மீண்டும் விசாரித்து அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டது உச்ச நீதி மன்றம். இது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடும் வேலை. கடந்த 31 அண்டுகளுக்கு மேலாக முல்லை பெரியாறு விசயத்தில் கேரளம் சொல்லிவரும் பொய்களுக்கு அளவேயில்லை.

இடுக்கி மாவட்டத்தில் நில அதிர்வு:

                2001 - ம் ஆண்டு 4.8 ரிக்டர் அதிர்வு ஏற்பட்டது. அண்மையிலும் 2.3 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. கேரளமுதல்வர் உம்மண் சாண்டி முதல், ஊடகங்கள் வரை எல்லோரும் ஒரே குரலில் "அணையில் விரிசல், ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டுள்ளது பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் ஐந்து மாவட்டத்தில் உள்ள 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிந்தே போவார்கள் என கூப்பாடு போடுகிறார்கள்.

உண்மை நிலை என்ன தெரியுமா?

                 இடுக்கி, எர்ணாகுளம் என இரண்டு மாவட்டங்களில் மட்டுமே பெரியாறு ஓடுகிறது அதுவும் கூட பெரியாறு அணையிலிருந்து 50 கி.மீ வரை காடுகளின் வழியாக ஓடி இடுக்கி அணையை அடைகிறது. அதன் பிறகு 70 கி.மீ நீர்வழிப்பாதையாகப் பயணப்பட்டு அரபிக்கடலை அடைகிறது. இதில் 35 லட்சம் எங்கே இருக்கிறார்கள்? மலைபிரதேசமான கேரளாவில் 2869 கடல் மட்ட உயரத்தில் அணை உள்ளது. இடுக்கியும் எர்ணாகுளமும் இதைவிட அதிக உயரத்தில் உள்ளது.

                டிசம்பர் முதல் வாரத்தில் கேரள உயர் நீதிமன்றம் ஒரு கேள்வியை எழுப்பியது, 'அணை உடையப்போகிறது என்கிறீர்கள் மக்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?' இதற்கு பதில் சொன்னார் கேரள அட்வகேட் ஜெனரல் தண்டபானி: "முல்லைப் பெரியாறு அணை இருபுறமும் மலைகளால் சூழ்ந்துள்ளது அணை உடைந்தால் 480 வீடுகள்தான் பாதிக்கும் இன்னும் சரியாக சொல்வது என்றால் உப்புத்துறையில் 420 குடும்பங்களும், சப்பாத்துப் பகுதியில் 580 குடும்பங்களும் உள்ளன, இவர்களை பாதுகாக்க 36 அடி உயரத்தில கரையும் கட்டப்பட்டுள்ளது. ஒரு வேளை அணை உடைந்தால் 106 அடிக்கு மேல் தான் உடையும் அப்போது 6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வெளியேறும் அந்தநீர் நேராக இடுக்கி அணையைத்தான் போய் சேரும் முழு அணையும் உடைந்து தண்ணீர் வெறியேறினாலும் 70 டி.எம்.சி கொள்ளளவு உள்ள இடுக்கி அணை ஏற்றுக் கொள்ளும்" என்றார்.

                உண்மையை சொன்னதால் அட்வகேட் ஜெனரல் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை காட்டுகிறார்கள் மலையாளிகள்.

                தமிழ் நாட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் மொத்த பரப்பளவு 2.588 ச.கி.மீ இதிலிருந்து 2.641 மி.க.மீ நீர் பாய்ந்தோடி கேரள மாநில நதிகளான பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடியாறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இந்த தண்ணீரை தடுத்து நிறுத்திக் கொள்ள தமிழகம் எப்போதும் நினைத்தது இல்லை. தமிழ் நாட்டை விட கேரளாவில் மரங்கள் அதிகம் அதனால் மழையும் அதிகம். சுமார் 25,00 டி.எம்.சி தமிழ் நாட்டில் 1,350 டி.எம்.சி தான் மொத்த நீர்வளம். கேரளத்தவர்கள் பயன்படுத்தியது போக சுமார் 1300 டி.எம்.சிக்கும் அதிகமான தண்ணீர் வீணாக அரபிக் கடலில் கலக்கிறது இந்த நீரின் அளவை இப்படி புரிந்து கொள்ளலாம். மேட்டூர் அணையிலுள்ள நீரை போல் 11 மடங்கு அதிகமாகும் இவ்வளவு தண்ணீரை கூட தரவேண்டாம் 850 டி.எம்.சி தண்ணீரை மட்டும் கொடுத்து உதவினால் தமிழ்நாட்டின் 8.20 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் இதனால் கேரளத்திற்கு பலன்கள் அதிகம்.

                மிக குறைந்தளவு தண்ணீர் வசதியில் பயிர் செய்து தமிழகமும் சாப்பிட்டு கேரளத்திற்கு அனுமதி பெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் - இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் தேவை. பருப்பு, பழங்கள், காய்கறி, ஆடு மாடு, கோழி, முட்டை, பால், துணிகள், மணல், சிமிண்ட், கம்பி இவற்றை எல்லாம் உற்பத்தி செய்ய எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை கணக்கு போட்டால் முல்லை பெரியாறில் தமிழகம் பெறுவது வெறும் 126 மில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே. இதை கூட மனிதாபிமான அடிப்படையில் தரமறுப்பதால் தான் மனிதர்களுக்கு இயல்பான கோபம் வருகிறது. போராட்டம், உண்ணாவிரதம், உருவபொம்மை எரிப்பு, மனித சங்கிலி - எல்லை முற்றுகை என அகிம்சை போராட்டங்கள் அர்த்தமில்லாமல் போகும் போதுதான் மக்கள் வெறுப்படைகிறார்கள்.

                இதற்காக இங்கே வாழும் கேரளத்துச் சகோதரர்களைத் தாக்குவதோ, அங்கே வாழும் தமிழகத்து சகோதரர்களைத் தாக்குவதோ முறையற்ற செயல். ஒரு நாட்டுக் குடிமக்கள் இப்படித் தங்களுக்குள் மோதிக் கொள்வது முட்டாள் தனம்.             

                முல்லைப் பெரியாறு அணை உடைந்து மிகப் பெரிய சேதமேற்படுவது போல் 'கிராபிக்ஸ்' துணையுடன் ஹாலிவுட் பின்பலத்துடன் ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு பீதியைக் கிளப்புவதற்காகவே மலிவான உத்தியை கேரள சகோதரர்கள் செய்து வருகிறார்கள் சில மாதங்களுக்கு முன் சிடி வடிவில் வந்ததை வெள்ளி திரையில் காட்டி வியாபாரம் செய்ய அரசியல் வாதிகள் அணி திரண்டு நிற்கிறார்கள் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த கேரள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 72 இடங்களையும் இடது சாரி கம்யூனிஸ்ட்டுகள் 68 இடங்களையும் கைப்பற்றினார்கள்.

நதி அரசியல்:

                சபாநாயகர், நியமன உறுப்பினர் போக 70 இடங்களே மூன்று உறுப்பினர்கள் முன்னிலை பெற்றதால் முதல்வரானார் உம்மன் சாண்டி. தன் அமைச்சரவையில் உணவுத்துறை மந்திரியாக இருந்த எர்ணாகுளம் மாவட்ட பிரவம் தொகுதி எம்.எல்.ஏ, டி.எம். ஜேக்கப் திடீர் மரணம் அடைந்ததால் ஜனவரி அல்லது பிப்ரவரியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எப்படியும் ஜெயித்தாக வேண்டும் என்ற வெறியில் முல்லைப் பெரியாறு பிரச்சனை பெரிதுபடுத்தப்படுகிறது.

                இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு அரசியல்வாதிகள். தங்கள் நலத்திற்காக நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பலி கொடுத்தாவது தாங்கள் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க நினைக்கின்றார்கள். இவர்களை மக்கள் தான் ஒதுக்கிவைக்க வேண்டும் 1952 - ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் (அப்போது சென்னை ராஜதானி) இராஜாஜி முதலமைச்சராக இருந்த நேரம் முல்லை பெரியாறு அணையிலிருந்து ராட்சச குழாய் வழியாக வரும் நீரிலிருந்து மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கு திருவாங்கூர் கொச்சி அரசின் முதலமைச்சராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளையிடம் அனுமதி கேட்கப்பட்டது கேரள அரசு தயங்கியது.

இராஜாஜி

                தமிழ் நாட்டின் எதிர் கட்சித் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தியை அழைத்து கேரள அரசிடம் பேச சொன்னார் இராஜாஜி. கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான பி. இராமமூர்த்தி பேசி வெற்றிகரமாக ஒப்புதல் பெற்றுத் திரும்பினார். தன்னலமில்லாத அன்றைய தலைவர்கள் இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை தீட்டி வெற்றிகரமாக செயல்படுத்தி தூரநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டதால் வரலாறு இன்று அவர்களை வாழ்த்துகிறது.

                இன்றைய தலைவர்கள் சென்னையில் உண்மை சொல்லி விட்டு டெல்லியில் போய் தன் கருத்தை வாபஸ் வாங்கும் தொடை நடுங்கிகள். இவர்களை என்ன சொல்வது? அரசியலை விட்டே அப்புறப்படுத்துவதே நாம் செய்யக் கூடிய மிக மிக நன்மையான செயலாக இருக்கும். இந்த பிரச்சனையில் அரசியல் ஆதாயம் கருதி போராடியவர்களையும் அப்புறப்படுத்துவதும் அவசியம்.

                முல்லைப் பெரியாறு பிரச்சனையில் அரசியல் ஆதாயத்தைத் தாண்டி சுயநலம் மேலோங்கி உள்ளது. முல்லைப் பெரியாறு அருகே புதிய அணைகட்ட மத்திய சுற்றுச் சூழல்துறை ஆய்வு (சர்வே) செய்வதற்காக எந்த அனுமதியும் தரவில்லை என்கிறார் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன். ஆனால் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் தலைமைப் பொறியாளர் இவர்கள் ஊடகங்களிடம் இப்படி சொல்லி வருகிறார்கள்.

                2010 - ம் ஆண்டிலேயே ஜெய்ராம் ரமேஷ் அமைச்சராக இருந்தபோது அனுமதி பெற்று விட்டோம் டிபிஆர் (டீடெய்ல்டு பிராஜெக்ட் ரிப்போர்ட்) தயாராகி விட்டது. ரூ 650 கோடியும் ஒதுக்கப்பட்டு விட்டது என்கிறார்கள்.

                 புதிய அணைகட்டும் போது முல்லை பெரியாறு அணையை எவ்வாறு எந்தெந்த நிலைகளில் உடைப்பது என்பதை எல்லாம் விலாவாரியாக சொல்லிவருவதற்கு தைரியம் தருபவர்கள் டெல்லியில் இருக்கும் 35 - க்கும் மேற்பட்ட உயர்மட்ட கேரளத்து அதிகாரிகள் எல்லா துறையிலும் இருக்கிறார்கள். இவர்களை மீறி சோனியாகாந்தியும், மன்மோகன் சிங்கும் கூட எதுவும் செய்துவிடமுடியாது. இந்த அதிகார மையங்கள் உறங்கும் நேரம் தவிர மீதி நேரங்கள் எல்லாம் உடன் இருப்பவர்கள் இந்த கேரள அதிகாரிகள். தங்கள் மாநிலத்தின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு அனுமதி வாங்கித்தருபவர்கள் இவர்கள் தான்.

                1976 - ம் ஆண்டு மத்திய அரசு கேரளத்தில் இருக்கும் நதிகளை பற்றிய ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தது 85 க்கும் மேற்பட்ட மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் கேரளத்தில் உள்ளது. இவற்றின் மூலம் 1,98,000 மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் செல்கிறது. கேரளா பயன்படுத்தியது போக 1 இலட்சத்து 25 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீரை தமிழகத்திற்கு திருப்பினால் சுமார் 8.20 லட்சம் ஏக்கர்கள் பாசனவசதி பெறுவதன் மூலம், பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உணவு உற்பத்தியும் பெருகும் என குழு அறிக்கை சமர்ப்பித்தது.

                இது பற்றி தமிழகம் கேரளத்துடன் சுமார் 11 முறை பேசியும் சம்மதிக்க வில்லை இது பற்றி சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பலமுறை கேள்வி எழுப்பியும் பலன் இல்லை இது பற்றி இனிமேல் பேசுவதே தவறு என்பதை போல் திசை திருப்பியவர்கள் இதே அதிகாரிகள் வர்க்கம்தான்.

                முல்லைப் பெரியாறு பிரச்சனையில் "கேரளத்திற்கு பாதுகாப்பு - தமிழ்நாட்டுக்குத் தண்ணீர்" என்ற கேரளத்தின் கோசம் முழுக்க, முழுக்க நயவஞ்சகத் தனமானது. இவர்கள் சொல்வதை செய்யக் கூடியவர்கள் இல்லை என்பதே உண்மை.

                கேரளத்தின் வறட்டுப் பிடிவாதம் தமிழகத்தை பாலைவனமாக்கி விடும். வாழ்வாதாரப் போராட்டம் உயிரோட்டத்துடன் இருக்க வேண்டும். மத்திய மாநில அரசுகளுக்கு நெருக்குதல் தருவதன் மூலம் நியாயமான தீர்வு எட்ட சலிப்படைந்து விடாதப் போராட்டம் மிக, மிக முக்கியம்.

999 - ஆண்டு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் மின் உற்பத்திக்காக தான் அணை உடைக்க நினைக்கிறார்கள். சூரிய மின் உற்பத்திக்கு முன்னுரிமை தரவேண்டும். இந்தியாவில் 300 நாளும் நல்ல வெயில் அடிக்கிறது. இதன் மூலம் சுற்று சூழல் மாசு இல்லாத மின் உற்பத்தி செய்யலாம். ஆனால் விவசாயம் செய்ய தண்ணீர் மிக, மிக தேவை இதை ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் திருத்தமாக வலியுறுத்த வேண்டும். இப்பிரச்சனையில் மிக முக்கியான படிப்பினை நிறைய மரங்களை வளர்த்தால் அதிகமான மழையை பெறமுடியும். நூறு சதவித கல்வியறிவு மூலம் உயர் பதவிகளுக்கு தமிழர்கள் முன்மொழியப்படுவார்கள். நியாயங்கள் நிம்மதியடையும்.

Pin It