இந்நூல் சென்னையிலுள்ள வானிலை ஆய்வு மையத்தில் பணிபுரியும் கு.வை. பாலசுப்பிரமணியம் அவர்களால் அறிவியல் ஒளி, தினமணி, தினத்தந்தி, தமிழ்ச்சுடர், தமிழ் நியூஸ், அறிவியல் பூங்கா முதலிய மாத, நாளிதழ்களில் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பாகும். பாலசுப்பிரமணியம் அவர்கள் உதவி வானிலை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வானிலை ஆய்வுத் துறையின் வானிலை முன்னெச்சரிக்கைகள் வழங்கல், புயல் கண்டறியும் ராடார், விமான வானிலை, பூகம்பவியல் ஆகிய பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.

இந்நூலில் அடங்கியுள்ள 31 கட்டுரைகளில் அறிவியல் ஒளியில் வெளிவந்த 13 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்டவை.

அண்டவெளியில் காட்சியளிக்கும் ஒரு தோற்றமான வானத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள் நமக்கு வியப்பளிப்பவை. மழை, இடி, மின்னல், பனி போன்ற காட்சிகள் பார்க்க இயலும் காட்சிகள் என்றாலும், நம்மால் பார்க்க இயலாத அளவிற்குப் பேராற்றல் கொண்டவை. பல மடங்கு பேராற்றல் கொண்ட இயற்கைப் பொருள்களின் ஒன்றான காற்று புயலாக மாறி வீசும் போது அதன் கொடுமையை நாம் உணர்ந்துள்ளோம். வெயிலின் கொடுமையை, குளிரின் கடுமையை நாம் அறிந்துள்ளோம். எனவே, மனிதனின் தினசரி நடவடிக்கைகளில் வானிலையின் தாக்கம் உள்ளது என்பது தெரிகிறது. அற்த வானிலையைப் பற்றி அறிவியல் ரீதியாகப் புரிந்து கொண்டு செயல்படும்போது பாதிப்புகளைக் கணிசமாகக் குறைக்க முடியும். அந்த வானிலை பற்றிய செய்திகளை ‘வானிலை ஆய்வு வளர்ந்த கதை’ என்று ஆரம்பித்து, ‘டிசம்பர் 26, 2004 - அந்த இரண்டு மணி நேரம்’ என்று 31 கட்டுரைகளில் எளிமையாக எடுத்துச் சொல்ல முனைந்திருக்கிறார் ஆசிரியர்.

இக்கட்டுரைகளில் வானிலை ஆய்வின் வரலாற்றைச் சுருக்கமாகத் தருவதுடன், வானிலை முன்னெச்சரிக்கை வழங்குவதில் முக்கிய இடம் வகிக்கும் வரைபடங்களின் வரலாறு பற்றியும் விளக்கி யுள்ளார். காலக்கணிதம் அறிவோம், மேகம், காற்று, புயல், வடகிழக்குப் பருவ மழை பற்றிய கட்டுரை களும் இவற்றைத் தொடர்ந்து பொதுவான கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

வானிலை மற்றும் காலநிலை பற்றிய காட்சிகளை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் அனைவரும் படித்துப் பயன்பெறவேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.

வெளியீடு:

முக்கடல், 72, எம்.ஜி. ஆர். சாலை, நங்கை நல்லூர், சென்னை - 600061                                            

விலை: ரூ 150/-   (221 பக்கங்கள்)

எழுதியவர்: கு.வை.பாலசுப்பிரமணியன்    அலைபேசி : 9444365642