1. Oncology : புற்றுநோய் இயல்:

      புற்றுநோய் பற்றிய விரிவான அறிவியல் பகுதி. இதில் புற்றுநோய்க்கான காரணம், அதன் வளர்ச்சி, மருத்துவ முறைகள், ஆராய்ச்சி அனைத்தும் அடங்கும். புற்றியல் என எளிமை யாகவும் கூறலாம்.

2. Radiation Oncology : கதிர்வீச்சுப் புற்றியல்:

      புற்று நோயினை எக்ஸ், காமா, மற்றும் அயனியாக்கும் கதிர்களின் துணையுடன் மருத்துவம் மேற்கொள்ளும் மருத்துவ அறிவியல் துறை. கதிர் வீச்சு பலவகைப்படும். இவைகளின் பரந்த ஆய்வு புற்று நோயினைக் குணப்படுத்த உதவுகிறது.

3. Onco gene : புற்றூக்கி ஜீன்:

      பொதுவாக உயிரணுக்கள் தங்கள் பணியினை முடித்ததும், தானே அழிந்து விடுமாறு இயற்கை திட்டமிட்டுள்ளது. ஆனால், புற்று நோயினைத் தூண்டும் ஜீன்கள், உயிரணுக்களின் மாற்றுத்திறனைத் தோற்றுவித்து, அவை அழியாமல் மாறாகப் பெருக வழி செய்கின்றன. இதனால், பிறழ்நிலை உயிரணுக்கள் பெருகி புற்றுநோய் ஏற்படுகிறது. 

4. Oncologist : புற்றுநோய் மருத்துவர்:

      புற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவர். இதில் புற்றுநோய் அறுவை மருத்துவர் (surgical Oncologist), புற்றுநோய் கதிர்வீச்சு மருத்துவர்  (Radiation Oncologist) மற்றும் புற்று நோய் வேதி மருந்து மருத்துவர்கள் (Chemo  Oncologist)  என பல பிரிவுகளில் மருத்துவர்கள் உள்ளனர். இந்தத் துறைகளில் பட்ட மேற்படிப்பும் பெற்றவர்கள்.

 5. Radio Biology : கதிர் உயிரியல்:

      அல்லது கதிர்வீச்சு உயிரியல் (Radiation Biology) என்பது பல அறிவியல் சார்ந்த ஒரு பகுதியாகும். இந்தப் பகுதியில் காமாக் கதிர்கள், எக்ஸ் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள், வானொலி அலைகள் மற்றும் ஒலி அலைகள் போன்றவற்றால் உயிரிகளில் தோன்றும் விளைவுகளை விரிவாக ஆராயும் அறிவியல் பகுதியாகும். புற்று நோய் மருத்துவத்திலும், கதிர் வீச்சிலிருந்து பாதுகாப்பு (Radiation Protection) போன்ற துறைகளிலும் பெரிதும் பயன்படும் அறிவியல் பகுதியாகும்.

 6. Radiology : கதிரியல்:

      அயனியாக்கும் பண்புடைய கதிர்க ளான எக்ஸ் கதிர்களை மருத்துவம், உயிரியல், தொழில் துறை மற்றும் அறிவியல் துறை ஆய்வுகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுவது கதிரியல் எனப்படும். இன்று ஒலி அலைகளும் மருத்துவத் துறையில் பெரிதும் பயன்படுகிறது. மின்காந்த அலைகளின் சில பகுதிகளும் பயன்படுத்தப் படுகிறது.

7. Radiography : கதிர்ப்பட இயல்:

      அயனியாக்கும் கதிர்களைக் கொண்டு இயற்பியல் மற்றும் தொழில் துறை கோட்பாடுகளின் துணையுடன் உடலின் உள் உறுப்புகளை இரு பரிமாணத்திலோ அல்லது முப்பரிமாணத்திலோ படமாகப் பெறும் அறிவியல் துறை.

8. Radiologist : கதிரியல் மருத்துவர்:

      கதிரியல் துறையில் சிறப்புப் பட்டம் பெற்ற மருத்துவர். கதிர்ப்படத்தின் துணையுடன் நோயினைக் கண்டு தெரியப்படுத்தும் மருத்துவர்.

9. Diagnostic Radiology : நோயறி கதிரியல்:

      மருத்துவருக்கு உடலின் உள் பகுதியிலுள்ள நோயினை, சிக்கல்களைப் படமாகக் காட்டும் கதிரியல் பகுதி. எளிய எலும்பு முறிவு முதல் கொடிய புற்றுநோய் வரை பல நோய்களையும் தெரிந்துகொள்ள முடியும்.