கீற்றில் தேட

மனிதன் வாய்திறந்து பேசக் கற்ற காலத்துக்கு முன்னரே ஓவியமாக, கற்படிமமாகத் தன் எண்ணங்களை வெளிப்படுத்த தொடங்குகிறான். பின்னர் வாய்மொழியாகப் பன்னெடுங்காலம் வளர்ந்த இலக்கியம் எழுத்துமொழி வந்து அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் வேகமெடுத்தது. மொழிக்கு ஆண், பெண் பேதமுண்டா என்ற கேள்விக்கு அது யார் கையகப்பட்டு இருக்கிறது என்னும் பிறிதொரு கேள்வியின் மூலம் விடையளிக்கலாம். பால் அதிகாரம் மையப்பட்டு இருக்கக் கூடிய சமூகத்தில், அதனை வளர்த்தெடுக்கும், உறுதியாக நிறுத்திக்கொண்டிருக்கும் மதம், சாதி, அரசு ஆகியன எவரை முன்னெடுக்கிறது; ஆதரிக்கிறது என்பது சொல்லாமலே விளங்கும். இவர்களை மையப்படுத்தியே, இவர்களின் அதிகாரத்திலேயே இயங்கும் சமூகம், அதன் வெளிப்பாட்டு மொழியான ஆணை அலங்கரிப்பதாகவும் அவனால் இரண்டாம் பாலினமாக்கப்பட்டிருக்கின்ற பெண்ணை அவமதிப்பதாகவுமே இருக்கிறது. மொழி எப்படிப் பெண்ணை இழிவுபடுத்துகிறது என்பது பல முறை சொல்லிச் சலித்த விஷயம். அந்த மொழி வெளியிலிருந்து புறப்படும் இலக்கியங்களும் ஆணாலேயே படைக்கப்படுவதும் ஆண் சார்போடே இயங்குவதும் அறிந்ததே. ஆனாலும் எழுத்திலக்கியத்தின் முன்னோடியாக இன்றைக்கு நம் கைக்குக் கிடைக்கின்ற சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய நாள் வரையிலும் கூடத் தன்னை, தன் சுயத்தைச் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பெண் வெளிப்படுத்தியபடியே இருக்கிறாள். அப்படித்தான் சங்க இலக்கியத்திலிருந்து பெண் இலக்கிய வரலாறும் தொடங்குகிறது.

ஆண் / பெண் பற்றிய சமூக மதிப்பீடுகள் வெவ்வேறாக இருக்கின்றன. பெண் பிறந்த கணத்திலிருந்தே ஆணுக்கு ஏற்றபடியானவளாகவே உருவாக்கப்படுகின்றாள். வெவ்வேறான சூழலில், மனநிலையிலிருந்து வருகின்ற இலக்கியத்தை ஒன்றாகப் பார்க்க முடியாது; பார்க்கவும் கூடாது. எனவேதான் கருப்பு இலக்கியம், தலித் இலக்கியம், பெண்ணிலக்கியம் என்ற வகைமைகள் உருவாகி சமூகத்தின் கவனிப்பைக் கோருமளவில் வளர்ந்திருக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன. அவற்றைப் பாடியவர்களாக 473 புலவர்கள் இருக்கின்றனர். இவர்களுள் பெண்பாற் புலவர்களைக் கணக்கிட்டால் 45 பேர் என்று, முனைவர், தாயம்மாள் அறவாணன் ஒரு பட்டியலைத் தருகின்றார். இது மொத்த எண்ணிக்கையில் 10 விழுக்காட்டிற்கும் குறைவு. பத்துப்பாட்டில் ஒரே ஒரு பெண் புலவரின் கவிதை மட்டுமே உள்ளது. பதினெண்கீழ்க்கணக்கு நூலில் ஒரு பெண் புலவர் கூடக் கவிதை எழுதவில்லை. பக்தி இலக்கியத்தில் சைவத்திற்குப் புனிதவதியும் வைணவத்திற்கு ஆண்டாளுமாக 63 க்கு ஒன்று, 12க்கு ஒன்று என்ற கணக்கில்தான் இருக்கின்றனர். ஒரே ஒரு காப்பியம்கூடப் பெண்களால் எழுதப்படவில்லை. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் இயங்கிய இன்றும் அறியப்படும் பெண்களைக் கை விரல்களுக்குள் அடக்கி விடலாம். தனிப் பாடல் திரட்டில் அறியப்படும் பெண் கவிஞர்களெனப் பதினைந்து பேரை முனைவர் தாயம்மாள் அறவாணன் சுட்டிக் காட்டுகின்றார்.

இதற்கு, பெண் முழுமையாக ஒடுக்கப்பட்டிருந்ததும் கல்வி மறுக்கப்பட்டிருந்ததும் புற வெளி முற்றாக மறுதலிக்கப்பட்டிருந்ததுமே காரணிகளாகும். இன்றைக்கும் பெண்களில் ஒரு பகுதியினருக்கே கல்வியும் வேலை வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இன்னமும் இத்தகைய வெளி கிடைக்காத, அதை அறியாத பெண்கள் செம்பாகம் உள்ளனர். இச்சூழலில் கல்வியும் புற வெளியும் கிடைக்கப்பெற்றிருக்கின்ற பெண்களில் ஒரு குறைந்த விழுக்காட்டினரே சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, நாடகம், நிகழ்த்து கலை ஆகியவற்றில் இயங்கி வருகின்றனர். சிறுகதை, புதினம், கட்டுரை, கவிதை போன்றவை தொல்காப்பியத்திலேயே பேசப்பட்டிருப்பதாகக் கூறினாலும் அச்சு இயந்திரத்திற்குப் பிறகுதான் அவற்றுக்கான பெருவெளி சாத்தியப்பட்டிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் கொடை என்றே இவற்றைச் சொல்லலாம். தொடக்கத்தில் வாய்மொழி இலக்கியத்தில் குறிப்பாக, கும்மி, நாற்றுப் பாடல், தாலாட்டு, ஒப்பாரி ஆகிய பாடல்கள் எழுத்தாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அதில் பொதிந்துள்ள பெண் வாழ்வு இன்னும் பேசப்படவே இல்லை; ஆய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை. நாட்டுப்புறப் பாடல்களில் பெண் நிலை ஆய்வு செய்யப்பட்டால் அக்காலத்தின் பெண் குரலை வெளிப்படுத்தும் முக்கியமான ஆய்வாக அது அமையும்.

பின்னர் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி, 20ஆம் நூற்றாண்டின் பாதி வரையிலும் கூட எழுதிய பெண்கள் ஆதிக்க வர்க்க்கத்திலிருந்தும் மேல் மற்றும் இடை நிலை ஆதிக்க சாதிகளிலிருந்துமே கிளம்பினர். அவர்களுடைய எழுத்து ஆண் எழுத்தைப் பிரதி எடுப்பதாகவே இருந்தது. இன்றைக்கும் கூடப் பல பெண் படைப்பாளர்கள் மேல்தட்டு மனோபாவத்துடன் இயங்குவது மேற்சொன்ன ஆதிக்க வர்க்கத்தின் சாதிகளின் இயக்கத்தைக் காட்டுவதாகவே உள்ளது. சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றில் தனித்தனியாக இயங்காமல், இருந்த சிலரே தான் திரும்பத்திரும்ப இயங்கி இருக்கின்றனர். காலகட்ட அடிப்படையில் பெண் படைப்பாளர்கள் பற்றிப் பார்க்கும்போது இன்றைக்கும் நமக்குக் கிடைப்பவர்களாக கு.ப. சேது அம்மாள் (கு.ப. ரா வின் சகோதரி), கமலா விருத்தாசலம் (புதுமைப்பித்தனின் மனைவி), வை.மு.கோதைநாயகி அம்மாள், சாவித்திரி அம்மாள், சரசுவதி, விசாலாட்சி போன்றோர் தொடக்க நிலையில் இருக்கின்றனர். இவர்களுள் வை.மு.கோதைநாயகி அம்மாள் 1925 ஆகஸ்டு மாதத்தில் நின்று போயிருந்த ஜெகன்மோகினி என்ற இதழை வாங்கி வெளியிடத் தொடங்குகின்றார். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண் சிக்கல், குழந்தைத் திருமணம் போன்ற அவலங்களைப் பேசியுள்ளார். பத்திரிகையாளராகவும் 115 நாவல்கள் எழுதிய நாவலாசிரியராகவும் குறிப்பிடத்தகுந்தவராக விளங்குகின்றார். இவருடைய நாவல்கள் சில திரைப்படங்களாக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் இலக்கியத்தில் முதல் சிறுகதை எழுதியது பாரதியா, வ.வே.சு அய்யரா? புதுக்கவிதையின் தொடக்கம் பாரதியா, ந. பிச்சமூர்த்தியா? என்னும் விவாதமே முடிவடையாத நிலையில் சிறுகதை, நாவல், எழுதிய முதல் பெண் யார் என்ற கேள்வியே எழாமல் இருப்பது பெண் இலக்கியச் சூழலின் அவலத்தையே காட்டுகிறது.தாஸிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்ற நாவலை எழுதிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அல்லது 3 ஆம் வகுப்பு வரை படித்து, 12 வயதில் திருமணம் செய்யப்பட்டு நான்கு குழந்தைகளுக்குத் தாயாய், 16 வயதிலேயே கைம்பெண்ணாகி, எழுத்தே தன் வாழ்வெனக் கொண்டு, தன் இல்லத்தின் வாசலில் சித்தி ஜுனைதா பேகம், பன்னூலாசிரியை என்ற பெயர்ப் பலகையை வைத்திருந்த காதலா, கடமையா என்ற நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் இருவரில் ஒருவர்தான் தமிழில் பெண்களில் முதல் நாவலை எழுதியவராக இருக்க வேண்டும். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் இன்று வரையிலும் பேசப்படாதவராக, கவனிக்கப்படாதவராகவே இருப்பது நம் சாபக்கேடே. குறிப்பாக, அவர் சார்ந்திருந்த இயக்கத்தவராலும் முன்னெடுக்கப்படாத, இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில் இருப்பது பதிவு செய்யப்பட வேண்டியது.

 மூடுண்ட சமூகமாக இருக்கும் இஸ்லாத்தில் இருந்து கொண்டு 1930 களிலேயே கதை, நாவல், கட்டுரைகளை எழுதிய சித்தி ஜுனைதா பேகம் மிக குறிப்பிடப்பட வேண்டியவர். இஸ்லாத்தில் தெளிவாய் வற்புறுத்திப் பெண் கல்வி அனுமதிக்கப் பட்டிருப்பினும் முஸ்லீம் பெண்கள் கல்வியில் மிகவும் பிற்போக்கடைந்திருக்கவும் மற்றைப் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் காரணம் என்ன? தந்நலப் பேய் பிடித்த பலர் பொருள் தெரியாது குர்ஆன் ஓதி விடுதலே அறிவை அளிக்குமெனப் பல ஆண்டுகளாய்க் கூறி, இஸ்லாமியப் பெண்களை ஏமாற்றி அவர்களை விலங்குகட்குச் சமமாய் ஆக்கி வைத்திருப்பதே காரணமென்றால் மிகையாமோ? என்று அவர் அன்று எழுப்பிய வினா இன்றைக்கும் விடை சொல்லப்படாமலே உலவி வருகிறது.

சித்தி ஜுனைதா பேகத்திற்குப் பிறகு அச்சமூகத்திலிருந்து எழுத வந்த பெண்ணாக நமக்குக் கிடைத்திருப்பவர் கவிஞர் சல்மா. இருவருக்குமான கால இடைவெளியை அறியும்போதுதான் அது எத்தனை இறுக்கமான சமூகமாக இருக்கிறதென்பதை உணர முடிகிறது. தாம் எழுதிய கட்டுரை ஒன்றில் கீரனூர் ஜாகிர் ராஜா, நானறிந்த வரை கடந்த 25 ஆண்டுகளில் சல்மா மட்டுமே எழுத்துக்கு வந்திருக்கிற இஸ்லாம் சமூகத்துப் பெண்ணாக இருக்கிறார். சல்மாவைத் தொடர்ந்து ஒரு பெண் கூட எழுத முன் வரவில்லை என்பது எத்தனை பெரிய சோகம்? இதன் பின்னணியில் நிலவுகின்ற நீண்டதொரு மௌனத்துக்கு எவர் பொறுப்பு? என்று கேட்பது கவனிக்கத்தக்கது. ஈழத்தில் பஹீமா ஜஹான், அனார், சுல்பிகா ஆகியோர் இருந்தாலும் நம் நாட்டில் இன்னமும் பின்னடைந்த சூழலே மாறாமல் இருக்கிறது.

மூவலூர் இராமாமிர்தம் தொடங்கி இன்றைக்கு எழுதத் தொடங்கியிருக்கும் ஆர்த்தி வரையிலும் ஒரு பட்டியல் எடுத்தாலும் கூட ஒரு நூற்றாண்டு வரலாற்றில் எழுதிய, எழுதிக் கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவான விழுக்காட்டையே கொண்டுள்ளது வருந்தத்தக்கது. மற்றுமொரு கவனிக்க வேண்டிய விஷயம், எழுபதுகளில் ஓரளவு உரைநடையில் இயங்கிய அளவுக்குக் கூட இன்றைக்குப் பெண்கள் இல்லை என்பது. நாவல், கட்டுரை, சிறுகதை ஆகிய தளங்களில் இன்றைக்கு எழுதும் பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆனால் கவிதைப் பரப்பில் எழுதும் பெண்கள் அதிகரித்திருந்தாலும் அதற்கான காரணத்தை ஆராய வேண்டியதாகிறது.

கன்னிமரா நூலகத்தில் உள்ள புத்தகப் பட்டியலில் கவிதை வகைப்பாட்டை எடுத்தால் ஒரு பெரிய அதிர்ச்சி கிடைக்கும். ஒரு புத்தகம் போட்ட பெண்கள் ஏராளமாக இருக்கிறார்கள். பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்? பெரும்பாலானோர் திருமணத்துக்குப் பிறகு காணாமல் போய் விடுகின்றனர். இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்த, கவனிக்கப்பட்ட கவிஞர்களான ப. கல்பனா, அழகுநிலா, சே.பிருந்தா போன்றோர் இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்களெனினும் அவர்களின் இயக்கம் முன்னைப் போலில்லாமல் இருப்பது குடும்ப வெளியின் அடக்குமுறைக்குள் காணாமல் போய் விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தொண்ணூறுகளில் தலித் இலக்கியம் தீவிரமடைந்து கவனிக்கப்படும்போதுதான் பெண் எழுத்தும் தீவிரமடைகிறது.  "பெண் கவிதை மொழியே உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் சார்ந்தது" என்று குறிப்பிடுகிறார் ஜூலியா கிறிஸ்தவா. தமிழ்ப் படைப்புகளில் இத்துடன் சமூகக் கட்டமைப்பின் ஒடுக்குமுறை தரும் வலியும் வேதனையும் கசியும் குரல்களும் சேர்ந்தே பதிவாகி இருக்கின்றன. "வாழ்க்கை பூராவுமே கவலையும் கஷ்டமும் கண்ணீருமாகக் கழிந்ததனால் இந்தக் கதைக்குக் கவலை என்று பெயரை வச்சி எழுதினேன்" என்று அழகிய நாயகி அம்மாள் தன் நாவலுக்குப் பெயர் சூட்டியதற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருப்பார்.

உலக மயமாதல், தனியார் மயமாதல், தாராள மயமாதல் கொடுக்கும் அழுத்தம் பெண் மீது எத்தனை தீவிரமாகப் பதிந்திருக்கிறது என்பதனை இன்றைய பெண் கவிதைகளில் பரக்கக் காணலாம். ஊடகப் பெருக்கம், பெண் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவை ஆகியவை இன்றைக்கு இலக்கியத்தில் பெண்களின் வருகையைச் சற்றே எளிமைப்படுத்தி இருக்கிறது. ஆனால் இன்றைக்கும் கதை, நாவல், கட்டுரை தளத்தில் இயங்கும் பெண்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். எழுபதுகளில் எழுதிய அளவு கூட இல்லை என்பது பெண் எழுதுவதற்கான நேரமின்றி, குடும்பச் சுமையில் அழுந்திக் கிடப்பதைத்தான் காட்டுகிறது. வீடு, அலுவலகம் என்ற இரட்டைச் சுமையில் இயங்கும் பெண், தனக்கான நேரத்தைக் கண்டடைந்து, வாசித்தலையும் எழுத்தையும் சாத்தியப்படுத்துவது என்பதன் போதாமையே இதற்குக் காரணம். இதன் மற்றுமொரு விளைவே ஏராளமான பெண்கள் இன்றைக்குக் கவிதை எழுதுவதும். மற்ற இலக்கிய வகைமைகளுடன் ஒப்பிடும்போது கவிதை மனத்துள் அசை போட்டு, சொற் சிக்கனத்துடன், குறைந்த நேரத்தில் எழுதக் கூடியது. சீசாவுக்குள் அடைபட்ட காற்று, அணு அளவு இடம் கிடைப்பினும் வெடித்துக் கிளம்புவது போலவே இன்றைக்குக் கவிதைப் பெண்கள் கிளம்பியிருக்கின்றனர்.

குடும்பத்து ஆண்களால் மட்டும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்த பெண், அவளுடைய மொழி வெளியில் பரவலாகக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தப்படவுமாகவே இருக்கிறாள். அதன் விளைவே பெண் எழுத்துக்குக் கிளம்பும் எதிர்ப்புகள். தொண்ணூறுகளின் இறுதியில் கிளம்பிய உடலரசியல், உடல் மொழி ஆகியவை இலக்கியப் பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன்மூலம் கவிஞர்கள் குட்டி ரேவதி, சுகிர்த ராணி, சல்மா, மாலதிமைத்ரி, போன்றோர் கவனிக்கப்பட்டனர். பெண்களின் உடலை வணிகமாக்கி, துய்ப்புப் பொருளாய்ப் பார்க்கும் ஆண் பார்வை கடந்து, அந்த உடலையே ஆயுதமாக்கியது இவர்களுடைய மொழி. காலம் காலமாகப் புனிதமாக்கப்பட்டும் உற்பத்திப் பொருளாகவும் அவளுக்கே உரிமையற்றும் இருந்த பெண் உடலை இவர்கள் மறுவாசிப்புக்குட்படுத்தினர். இதன் மென்மையான போக்கு இரா. மீனாட்சி காலத்திலேயே தொடங்கி விட்டதெனினும் இவர்கள் காலத்திலேயே உக்கிரம் பெற்றது.

பெண்ணின் காதல், அன்பு, உடல் விழைவு, வலி, வேதனை என எல்லாமும் பதிவு செய்யப்பட்டது. ஆணாதிக்கப் பார்வையில் வெளிப்பட்ட காமக் குரலிலிருந்து மடைமாற்றப்பட்டது இவர்தம் மொழி.

"முலைகள் சதுப்பு நிலக் குமிழிகள்/பருவத்தின் வரப்புகளில்

மெல்ல அவை பொங்கி மலர்வதை/அதிசயித்துக் காத்தேன்

எவரோடும் ஏதும் பேசாமல் என்னோடே/எப்போதும் பாடுகின்றன

விம்மலை/காதலை/போதையை

.... ....

ஒரு நிறைவேறாத காதலில்/துடைத்தகற்ற முடியாத

இரு கண்ணீர்த் துளிகளாய்த்/தேங்கித் தளும்புகின்றன"

என்று குட்டி ரேவதி நிறைவேறாத காதலின் வலியைத் தேங்கித் ததும்பும் கண்ணீர்த் துளிகளென நிற்கும் முலைகளின் வழியே காட்சிப்படுத்துகிறார். தனக்கான விடுதலையை முன்னெடுத்தல்,  தன்னுடலைக் கொண்டாடுதல், சமூகம் பெண்ணுக்கு விதித்துள்ள வரையறைகளை விசாரணைக்கு உட்படுத்துதல் என்ற அரசியலைக் கொண்டே இவர்தம் உடல்மொழி இயங்குகின்றது.

உடல் மொழி என்ற சொல்லையே மறுத்து, அதை "மற்றுமொரு பெண் சுயமழிக்கும் ஆண் மேலாதிக்க அரசியல்" என்று திலகபாமா உள்ளிட்ட சில பெண் கவிஞர்கள் மறுக்கின்றனர். இக்கருத்தினைப் பல ஆண் படைப்பாளர்கள் ஆதரிக்கின்றனர். 'முலைகள்' என்ற தலைப்புக்காக குட்டி ரேவதி ஏராளமான சிக்கல்களைச் சந்தித்தார். ஆனால் குட்டி ரேவதியின் மேற்சொன்ன கவிதையோ, அல்லது சல்மாவின்,

"ஒவ்வொரு முறையும்/அம்மா நாசூக்காய்ச் சொல்வதை

அக்கா கோபமாய்ச் சொல்வாள்/ படுக்கையறையின் தவறுகள் எல்லாம் என்னுடையதென

 உன்னிடமிருந்து/ கலங்கலானதே எனினும்

சிறிது அன்பைப் பெற/வெளியுலகிலிருந்து சானிட்டரி நாப்கின்களையும்

கருத்தடைச் சாதனங்களையும் பெற/இன்னும் சிறு சிறு உதவிகள் வேண்டி

முடியுமானால்/உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய

நான் சிறிதளவு அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள

எல்லா அறிதல்களுடனும் விரிகிறது என் யோனி"

இந்தக் கவிதையோ அதிகாரச் சமூகம் தங்களுக்கான புணர்ச்சி இன்பத்துக்கென்றே வைத்திருந்த பெண் உடல் உறுப்புகளை வழமையான அவர்தம் வகையிலன்றி, தம் துயரத்தைச் சொல்ல, அதிகாரத்துக்குச் சமரசம் செய்துகொண்டு அதன் வழி சிறிது அதிகாரம் செலுத்தும் சுய இரக்கத்தையுமே கவிதையாக்கி இருக்கின்றன.

அத்தருணத்தில் பெரும் பாய்ச்சலாகக் கிடைத்த ஊடகக் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க இன்றைக்கு இதே சொற்களைப் பயன்படுத்திக் கொண்டு புற்றீசலெனக் கவிஞர்களும் கவிதைகளும் கிளம்புகிறதென்றாலும் காலம் கடந்து நின்று கேள்வி கேட்கின்றன இக்கவிதைகள்.

"ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதிய நேரம்

தெரு முடக்கில் நீட்டிக் கொண்டிருந்தது

அன்று விசித்திரப் பிராணியாகிச்

சொல்லாமல் வகுப்பினின்று வெளி நடந்தேன்

ஓடும் பேருந்தில்/திடுக்கிட்டு விழி தாழ்த்தி

அவமானம் உயிர் பிடுங்க/கால் நடுவில் துருத்தியது

....

பிறிதொரு நாள்/வீட்டிற்குள் புகுந்து

சோபாவிலமர்ந்தபடிக் காட்சிப்படுத்திற்று

இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி

இறைச்சிக்கடை மிருகமென வாலுரசிப் போனது

பின் கழுத்தை நெருங்கிச் சுடுமூச்செறியும் போதில்

ஈரம் படர்ந்து திகைப்பிருள் சூழ்ந்த

உன் கண்களை நினைத்தபடி

குறி தவறாது சுடுகிறேன்

இதழ்க் கடையிரண்டிலும் முளைக்கின்றன பற்கள்

என் சின்னஞ்சிறுமியே"

என்னும் தமிழ்நதியின் கவிதையில் குறி நேர்ப் பொருளன்றி மறைமுகமான அர்த்தங்களுடன் மற்றுமொரு தளத்துக்கு, பெண்களின் சிக்கலை, கோபத்தை வெளிப்படுத்துமிடத்திற்குக் கவிதையை நகர்த்துகிறது.

சொற்களுக்கு வலிமை சேர்ப்பது அதன் பாடு பொருளே. இது பயன்படுத்தத்தக்கது, இதைப் பயன்படுத்தக் கூடாது என்னும் ஆதிக்கவாதிகளின் குரல்கள் ஏன் பெண் கவிஞர்களை நோக்கி மட்டும் எழுகிறது? மேலாதிக்கத்தின் சுட்டு விரல்கள் ஏன் இவர்களை நோக்கி நீள்கிறது?

சங்க இலக்கியம் தொடங்கி இப்போது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இலக்கியம் வரையிலும் பெண்ணை, அவள் உடலை வெற்று வருணனைகளாய்ச் சொல்லிச் செல்லும் கவிதைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களுடைய கவிதைகள் எதிர்ப்பைச் சமாளித்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் வெளி வந்த இந்தக் கவிதைகளையும் கவனிப்போம்.

"தொண்டையடைத்த பறவையின்/விக்கல்களாகப் பிதுங்கி வருகிறது

உன் விரியோனியின் சமிக்ஞை" (யூமா. வாசுகி)

 

"காயப்படுத்தியதற்காக உன் முலைகளிடம்

மாறி மாறி மன்னிப்புக் கோரினேன்

பல்தடங்கள் சிரிக்கின்றன" (ஜெ. பிரான்சிஸ் கிருபா)

இந்தக் கவிதைகள் ஏன் இலக்கிய பீடாதிபதிகளால், சமூக ஆதிக்கங்களால் கேள்வி கேட்கப்படுவதில்லை? மேலே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்ற கவிதைகளில் பெண்களுடைய கவிதைகள் பாலியல் கவிதையாக இல்லாமல் சமூக வக்கிரத்தை, அதிகாரத்தை, வன்புணர்வைச் சொல்லும் வகையில் அமைந்திருப்பதையும் அது எழுதப்பட்ட காலத்தில் பெற்ற எதிர்ப்புகளையும் சற்றே நினைத்துக் கொண்ட பின் ஆண் கவிஞர்களுடைய கவிதைகளையும் படித்துப் பாருங்கள்.

உலகில் வேறெந்த மொழியிலும் இல்லாத அளவு தமிழ் இலக்கியப் பரப்பில் பெண் பெயரில் எழுதும் ஆண் படைப்பாளர்கள் மிகுந்திருக்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் பாலினப் பாகுபாடு முன்னிறுத்தப்படும் தமிழ்ச் சமூகத்தில் பெண் அடையாளத்தைக் கைப்பற்றிக் கவனப்படும் எளிமையான தந்திரத்துடனேயே பெரும்பாலானோர் இயங்குகின்றனர். மிகக் குறைவாக இருந்த இந்தப் போக்கு, பெண்கள் எழுதத் தொடங்கிய எழுபதுகளில் மிகுதிப்பட்டு, இன்றைக்கு வரையிலும் கட்டுப்படுத்தப்பட முடியாத வகையிலேயே உள்ளது. படைப்பாளர்களே முன்னின்று தொகுத்த 'பெயல் மணக்கும் பொழுது', 'பறத்தல் அதன் சுதந்திரம்' ஆகிய பெண் படைப்பாளர்களின் தொகுப்பில் கூட பெண் பெயரால் எழுதும் ஆண் படைப்பாளர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. காலப் போக்கில் பெண்ணெழுத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஆணாதிக்கப் பார்வையாகவே இதனைப் பார்க்க வேண்டும். பெண் மொழி வெளியில் ஆண் படைப்பாளர்களின் நீதியற்ற இத்தகைய வன்முறை நுழைவு கண்டிக்கப்படவும் வேண்டும். உலக அளவில் கருப்பர்களின் பெயரால், எழுத்தால் வெள்ளையர்கள் எழுதத் தொடங்கியபோது அதற்குப் பெரிய எதிர்ப்புக் கிளம்பி, முடிவு கட்டினர். தமிழில் இன்னமும் முடிவு கட்ட முடியாத துயரமாகவே ஆண்களின் ஊடுருவல் இருந்து கொண்டு இருக்கிறது.

பாலியல் வேட்கை என்பதும் காதல் வெளிப்பாடு என்பதும் ஆணுக்கானது மட்டுமல்ல. அது பெண் பிறவிக்குமானதே. ஆனால் நடப்பில் வெளி வந்திருக்கும் கவிதைகளில் நகுலனுக்கு ஒரு சுசீலாவைப் போலவோ, கலாப்ரியாவுக்கு ஒரு சசி போலவோ ஏன் ஒரு பெண்ணுக்கு அமையவில்லை அல்லது வெளிப்படுத்தவில்லை? இத்தகைய வெளிப்படுத்த முடியாத வகையில்தான் தமிழ் இலக்கியச் சூழல் இருக்கிறது. பெண்களின் பாலியல் வேட்கையைச் சொன்ன கவிதைகளைக் காட்டிலும் தனதாயிராத தன்னுடலை, அதன் வாதையை, வன்புணர்வை, தன் விருப்பமின்றியே தான் ஆளப்படுவதை, தன்னடிமைத்தனத்தைப் பேசும் கவிதைகளே அனேகமாக இருக்கையில் ஒரு சில கவிதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கூச்சல் போடுவதும் பெண்ணின் வலி பேசும் கவிதைகள் வேண்டுமென்றே கவனிக்கப்படாமல் இருப்பதுமே இலக்கியத்தின் அரசியலாக இருக்கிறது.

"உதிரத்தின் சுவையோடிருந்தது/அந்தக் கூடல்

என்னைக் குத்திய சிலாம்புகள் பிடுங்கப்படாமலிருந்தன

பயணக் களைப்பையும்/ரணங்களின் நோவையும்

பசிக்கும் வயிற்றையும்/உன் கண்ணசைவு

புறக்கணித்தது/கொன்ற கோழியிறகுகளைப் பிய்த்து எறிவது போல்

எப்படிக் களைந்தாய் என் ஆடைகளை/நாம் தழுவத் தழுவ

அவை நழுவி விட விரும்பினேன்/தானாகவே இறுகித் தவிக்கும் மனம்

உன் வருடலில் ஆறுதல் தேட

தேகமோ இளகி விடுகிறது/வெண்ணையில் செய்த மலராக

உன் கத்திகளைக் காதலுடன் வரவேற்றவாறு"

உமா மகேசுவரியின் இந்தக் கவிதை அத்தகைய உடல் ஆக்கிரமிப்பைப் பெருத்த வேதனையுடன் பேசும் கவிதை. இப்படியொரு கவிதையை ஒரு ஆணால் எழுத முடியுமா? கவிதை மொழியில் ஆண்/பெண் பேதம் இல்லை என்று பேசுவோர் பதில் சொல்லட்டும்.

இதையே சிவகாமியும்,

"எனதாயிராத என்னுடலை

விக்கிரமாதித்தனெனச் சுமப்பதில்/பேதலிக்கிறேன்

மரங்களிலிருந்து மலர்கள் உதிர்கின்றன"

என்று பேசுகின்றார். தன்னுடலைப் பேசுதல், உடல்மொழி ஆயுதம் என்ற சுழலுக்குள்ளேயே இன்றைய பெண் கவிஞர்கள் சுற்றிக் கொண்டிருப்பதாக எழும் குற்றச்சாட்டும் தேவையற்றதே. மைய ஓட்டத்திலிருந்து உள்ளொடுங்கிய தனித்த கூறுகளை, விளிம்பு நிலைத் துயரத்தைப் பேசும் கவிஞர்கள் அத்துடன் நின்று விடாமல்,

"இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்

பளிச்சென்று சொல்லி விடுவேன்/பறச்சி என்று"

என்ற இன்னொரு கவிதை இவர்களுக்குப் பதில் சொல்கிறது. பெண், ஆண் முரணைக் கேள்விக் குள்ளாக்குவதுடன் இத்தகைய முரண்களைக் காப்பாற்றி நிற்கும் மதமும் சாதியும் தோலுரிக்கப்பட வேண்டியவை என்ற இடத்தில் நின்று எழுந்ததே தலித் பெண்ணியக் கவிதைகள். சக மனிதர்களை ஒடுக்கி, கயர்லாஞ்சியிலும், உத்தபுரத்திலும், திண்ணியத்திலும் நடக்கும் மனித இழிவுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது சுகிர்தராணியின் இக்கவிதை. பெண்களின் சிக்கலும் தலித்களின் பிரச்சனையும் ஒடுக்கப்படுவதாகவே இருக்கிறது. தீட்டாகவும் சேரியாகவும் அவை கருத்தாக்கம் பெற்று ஒடுக்கிக் கொண்டிருக்கிறது என்னும் குரலை மிகச் சரியாக இக்கவிதை பதிவு செய்கிறது.

"தேனும் தினைமாவும் கிழங்குச் சீவல்களும்/டப்பாக்களில் அடைக்கப்பட்டு

நாளங்காடிகளில் விற்பனையாகின்றன

சறுக்குமர மலை விளிம்புகளில்/நாங்கள் பாடிய குறவஞ்சிப் பாடல்கள்

கல் குவாரிக் குட்டைகளில் மிதக்கின்றன

கையில் குறி சொல்லும் கோலுடன்/கடற்கரை நகருக்கு/

நகர்ந்து விட்டனர் குறத்திகள்

புழுத்த அரிசிச் சோற்றைத் தின்றபடி/வேடிக்கை பார்க்கிறோம்

யாரோ யாருக்கோ கையளிக்கும்/எங்கள் வாழ்நிலங்களை"

என்னும் சுகிர்தராணியின் இக்கவிதை சிறப்பு மண்டலம் என்ற பெயரால் அரசு தன் மக்களுக்குச் செய்யும் துரோகத்தை, அந்நிய ஆதிக்கத்துக்கு விலை போகும் அவலத்தைப் பதிவு செய்கிறது. பெண்ணரசியல் என்பது தனித்த பெண்ணின் வலி மட்டுமல்ல; அது எல்லாச் சிக்கல்களையும் உள்ளடக்கிய நுண்ணரசியல் என்ற தத்துவார்த்த அடிப்படையில் இன்றைய அதிகார அரசியலின் முகத்தை வெளிப்படுத்துகிறது.

சங்கராபரணி என்ற ஆற்றைப் பெண்ணுக்கான படிமமாக்கி, அது சவுக்குக் காடாய், கரட்டுப் புல்லாய், தேங்கிய குட்டையாய் மாற்றப்பட்டிருப்பதை, தன் சதையை வெட்டி எடுத்துச் செல்லும் லாரியில் மணலைப் போலவே இருக்கிறாள் என்று பெண்ணைப் பற்றியும் கொள்ளையடிக்கப்படும் ஆற்றைப் பற்றியும் ஆதங்கப்படுகிறார் மாலதி மைத்ரி.

பெண்ணின் தனி மனித உளவியல் சிக்கலை, உழைப்புச் சுரண்டலை,

"உனக்கு வேலை மட்டுமே வேலை

எனக்கு வேலையும் ஒரு வேலை"

என்னும் இளம்பிறையின் எளிமையான சொற்கள் காத்திரமாய் நின்று குரலெழுப்புகிறது. கிராமமாயினும் நகரமாயினும் வர்க்க பேதமின்றிப் பெண் சுரண்டப்படுகிறாள் என்பதே இளம்பிறை சொல்லும் செய்தி.

இன்றைக்குப் பல பெண்கள் எழுதுகிறார்களெனினும் அவர்களின் கவிதை மொழியில் வெளிப்படும் அரசியல், அவர்தம் வெளிப்பாட்டுத் தன்மை, பாடுபொருள் என்ற அளவில் கவனப்படும் கவிஞர்கள் வெகு குறைவே. அரசியல் இயக்கங்கள் சார்ந்து அடையாளப்படும் பெண் கவிஞர்களின் செயற்பாடுகளைப் பேசப் புகுந்தால் எள் முனையளவாய் இருக்கும் துயரத்தையும் இங்கு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. இன்னும் சுருங்கிப் போயிருக்கும் அவர்க்கான நேரத்தைப் பிய்த்துத் தங்களை வெளிப்படுத்துதல் என்பது அவர்களுக்கு அரிதாகவே வாய்க்கிறது.

"நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ

உமது உயிர்க்கூறு

அரசியல் கடந்த காலம் கொண்டது

உமது சருமம்

அரசியல் படிந்தது

உமது விழிகள்

அரசியல் நோக்குக் கொண்டது"

- விஸ்வாலா சிம்போர்ஸ்கா. 

Pin It

ஓர் அறிமுகம் மற்றும் நேர்காணல்

தமிழில்: எச்.பீர் முகம்மது

வாதி அல் யுயோன். ஆரவாரமற்ற பாலைவனம் அது. பாலைவன மணல் வெடிப்புகளுக்கிடையே சின்னதான பச்சைத்துளிர்ப்புகள். பூமியானது வெடித்தும் வானம் அதன் மீது இறங்கியதான தோற்றத்துடனும் இருந்தது. அதனை பார்ப்பவர்கள் இந்த இடத்தின் மீது கண்வைக்க வேண்டியதிருக்கிறது. தண்ணீர் இதனிலிருந்து எப்படி வெளியாகிறது? இதன் சலனம் என்பது என்ன? இயற்கை அதன் அசலையும் நேர்த்தியையும் ஒரு சேர இங்கு அளித்திருக்கிறது.

(முனீபின் Cities of Salt என்ற நாவலின் தொடக்க வரிகள் )

பாலைவனங்கள் சூழ்ந்து கொண்டிருக்கும் மத்திய கிழக்கின் ஓரத்திலிருந்து அரபு இலக்கிய படைப்புகளை பற்றி மதிப்பிடும் எனக்கு அப்துல் ரஹ்மான் அல் முனீபின் படைப்புவெளி குறித்து அதிகம் விவரிக்க வேண்டியதாக இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டு அரபுலகம் அதன் தனித்த படைப்பாளுமையால் மேற்குலகின் கவனத்திற்கு ஆள்பட்டிருக்கிறது. தங்கள் சுய அடையாளங்களை இழந்ததன் தவிப்பும், அதன் ஊடுருவலும், ஏக்கமும் படைப்பாளிகளின் மொழிக்குள் வகைப்பட்டிருக்கிறது. எட்வர்த் செய்த் சொன்னது போன்று இலக்கியம் சில நேரங்களில் விசனத்தின் மொழியாக இருக்கிறது. வாழ்க்கைப் பற்றிய அவ நம்பிக்கை அவர்களின் படைப்புக்கு தெளிவான உயிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதம் என்ற எல்லைக்குள் மட்டுமே குறுக்கப்பட்டு வந்த அரபு மொழி இன்று அதன் எல்லா நேர்கோடுகளையும் உடைத்து விட்டது. அதன் படைப்பு வெளி எல்லா தரப்பினரின் கவனத்திற்கும் ஆளாகியிருக்கிறது.

எகிப்திய நாவலாசிரியர் நகிப் மஹ்பூஸுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டதற்கு பின் அரபு படைப்புகளின் பிற மொழி கடப்பு அதிகமானது. நகிப் மஹ்பூஸ் பற்றி தமிழில் இப்போது தான் பதிவுகள் வர ஆரம்பித்திருக்கின்றன.. இவரை அடுத்து அல்லது அதன் சம தளத்தில் அப்துல் ரஹ்மான் அல் முனிப் வருகிறார். லத்தீன் அமெரிக்க படைப்பாளிகளான கப்ரேல் கார்சியா மார்க்யூஸ் மற்றும் ஆக்டோவியா பாஸ் ஆகியோரின் இடத்தில் மதிப்பிடப்படும் அப்துல் ரஹ்மான் அல் முனீப் ஓர் அகோன்னத கட்டத்தில் 1933ல் ஜோர்டான் தலைநகரான அம்மானில் பிறந்தார். இவரின் தந்தை சவூதி அரேபியாவை சேர்ந்தவர். ஒட்டக வர்த்தகரான இவர் அரபுலகம் முழுவதும் தன் வணிக ஸ்தாபனங்களை விரிவுபடுத்தியிருந்தார். தாயார் ஈராக்கில் பிறந்தவர். தந்தையை பின் தொடர்ந்து அப்துல் ரஹ்மான் சவூதி அரேபிய குடியுரிமையை கொண்டிருந்தார். பின்னர் தன் படைப்புகள் காரணமாக அதை துறக்க வேண்டியதாயிற்று. பள்ளி படிப்பை ஜோர்டானில் முடித்த அவர் மேற்படிப்புக்காக ஈராக் சென்றார். அங்கு சட்டபடிப்பு படித்தார். இறுதியில் பெல்கிரேடு பல்கலைகழகத்தில் பெட்ரோலிய பொருளாதாரத்தில் ஆய்வு படிப்பை நிறைவு செய்தார்.

இதன் பிறகு சிரியாவில் பெட்ரோலிய துறையில் பணிபுரிந்த முனீப் 1967 ல் நடந்த அரபு இஸ்ரேலிய போர் காரணமாக ஈராக்கிற்கு சென்றார். இந்த காலகட்டத்தில் சிரியாவில் பிரபலமாக இருந்த பாத் சோசலிச கட்சியில் இணைந்து அதன் தீவிர உறுப்பினராக செயல்பட்டார்.பின்னர் ஈராக்கில் எண்ணெய் வள பொருளாதார நிபுணராகவும் அதன் பின்னர் பெட்ரோலிய ஏற்றுமதி கூட்டமைப்பிலும் (OPEC) சில காலம் பணிபுரிந்தார். இக்காலகட்டத்தில் நாடோடி பதூயீன்களும் எண்ணெய் பொருளாதாரமும் குறித்த இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. பிந்தைய கட்டத்தில் எண்ணெயும் வளர்ச்சியும் என்ற மாத இதழின் ஆசிரியரானார். ஈராக்கில் பாத் சோசலிச கட்சியோடு இணைந்து செயலாற்றினார். சோசலிசம் குறித்த நுண்ணுணர்வு அப்போது தான் அவருக்கு ஏற்பட்டது. சோவியத் ரஷ்யாவின் தாக்கத்தோடு அது இணைந்திருந்தது.அதன் நிலைபாடுகளில் மனமுறிவு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறினார். அந்த கட்டம் தான் ஈராக்  ஈரான் போர் ஏற்பட்டது. அதற்கு சதாம் உசேனை கடுமையாக விமர்சித்தார்.

1981 ல் பிரான்சுக்கு நகர்ந்தார். மேற்குலக நகர்வுக்கு பின்னர் தான் எழுத்தில் தீவிர கவனம் செலுத்த தொடங்கினார். பிரான்சு வாழ்க்கை அவருக்கு புதிய பரிமாணத்தை கொடுத்தது. பிரெஞ்சு இலக்கியத்தை ஆழ்ந்து கற்ற முனீப் அதன் அகவய பிரக்ஞையோடு அரபு எழுத்து வெளியில் உலவ தீர்மானித்தார். இதன் தொடர்ச்சியில் ஐந்தாண்டுகள் பிரான்சில் கழித்த முனீப் அதன் பிறகு சிரியா திரும்பினார். சிரியாவை தன் இருப்பிடமாக மாற்றிக் கொண்டார். இவரின் முதல் நாவல் மரங்களும் மர்சூக்கின் படுகொலையும்  என்ற தலைப்பில் 1973 ல் வெளிவந்தது. அவரின் இளமைக்கால பாதிப்புகள் குறித்ததாக இருந்தது அந்த நாவல். இளமையின் உதிர்ப்புகள் வாழ்வின் பிந்தைய கட்டத்தில் எவ்வித பிரதிபலிப்பை செலுத்தும் என்பதான கதை வெளியை கொண்டது அது. அதன் பின்னர் அரபு பழங்குடியினரின் காதல் கதை என்ற நாவல் வெளிவந்தது.

அரபு இனத்தின் பூர்வ குடியினரான பதூயீன்கள் பற்றிய வரைபடமாக அது இருந்தது. பதூயீன்களின் வாழ்க்கையமைப்பு பெட்ரோலிய நிலத்தோடு சம்பந்தப்பட்டது. அதனோடு இயைந்த விடுபடல்களிலிருந்து எழும் மன உணர்வுகளின் கூட்டுநிலையாக கதையமைப்பு தடமறிந்து செல்கிறது. இக்கட்டத்தில் முனீப் நவீன ஓவியங்கள் மீது கவனம் செலுத்தினார். ஈராக்கில் இருந்த போதே அவருக்கு பண்டைய மெசபடோமிய சிற்பங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஈராக்கின் ஓவியர்களாக இருந்த ஜவாத் சலிம் மற்றும் சகிர்அலி செய்த் ஆகியோரின் ஓவியங்கள் முனீபின் படைப்பு வெளிக்குள் மிகுந்த பாதிப்பை செலுத்தின. அவரின் அநேக நாவல்கள் அரபு ஓவியர்களின் ஓவியத்தை உட்கொண்டிருக்கின்றன. நவீன ஒவியத்தில் ஆர்வம் உண்டான பிறகு முனிப் அதை அரபு உலகம் முழுவதுமானதாக வளர்த்தெடுக்க முடிவு செய்தார். இதற்காக பாலஸ்தீன அறிவு ஜீவியான ஜாபர் இப்ராஹிம் அல் ஜாப்ராவுடன் தொடர்பை ஏற்படுத்தினார். நவீன ஓவியங்களை பொறுத்தவரை முனீப் ஒரு விமர்சகராகவே இருந்தார் எனலாம்.

இருபதாம் நூற்றாண்டு அரபு ஓவியர்களான பதிஹ் அல் முதரிஸ், மர்பான் பாஸி, நாதிர் நாபா, நயிம் இஸ்மாயில், ஜாபர் அல்வான், அபு தாலிப் மற்றும் மஹ்மூத் முக்தர் ஆகியோரின் ஓவியங்களை பற்றி பல்வேறு இதழ்களில் விமர்சன கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவற்றை தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் நிறைவேறுவதற்கு முன் மரணம் அவரை முந்திக் கொண்டு விட்டது. ஓவியங்கள் மீதான அவரின் ஆர்வம் பற்றி முனீப்பிடம் ஒரு தடவை கேட்கப்பட்டது. அதற்கு அவர் "முதலில் ஓவியங்களை விரும்பக்கூடியவன் என்ற முறையில் நான் அதன் இயற்கை தன்மையை மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டாவதாக ஓவியங்களை நேசித்த அரபு கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகளை கண்டறிந்து அவர்கள் தொடாத ஓவியங்களின் புள்ளிகளை, அதன் ஒளிவீச்சை தேர்ந்த விமர்சகராக உள்வாங்கி கொள்வது, மூன்றாவதாக அரபுலகில் ஓவியர்களிடையே ஏற்பட்டிருக்கும் பலகீனங்களை கண்டறிந்து அதை நாவல்கள் வழியாக சீரமைப்பது. மேற்கண்ட அம்சங்கள் அவரின் ஒவியங்கள் மீதான பங்களிப்பிற்கு உதாரணமாக இருக்கின்றன.

முனீப் தன் படைப்பு உத்தியில் நவீனத்துவத்தை அதிகம் உள்வாங்கி கொண்டு இருக்கவில்லை. நவீனத்துவத்தின் காலச்சேர்வை அதிகம் கற்றவராக இருந்த முனீப் அவரின் சமகாலத்தவர் மாதிரி அதனோடு முழுமையாக ஒன்றி போகவில்லை. நவீனத்துவம் ஏற்படுத்திய ஒரு வித அயற்சியே அதற்கு காரணம். அவரின் சமகாலத்தவர்கள் அதோர்னோவின் எதிர் காவியம் என்ற கருதுகோளுக்குள் வந்து விழுந்தார்கள். அவர்கள் நாவல் அதன் சரியான மரபில் நிற்க வேண்டுமென்றால் அதன் எதார்த்தவாத தன்மையை கைவிட வேண்டுமென்று சொன்னர்கள். அப்போது தான் அது மீண்டும் உற்பத்தி செய்யமுடியாத ஒன்றாக இருக்கும் என்றார்கள். முனீப் இந்த முறையிலிருந்து சற்று விலகி ஒரு வித தாராள கதை வெளிக்குள் தன் வரிகளை வடிவமைத்துக் கொண்டார். இதுவே அரபுலகில் அவரின் குறிப்பிட்ட கால இடைவெளியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது.

அவரின் எதார்த்த மொழி வாசகனிடத்தில் வெறுமனே கடந்து செல்லாமல் ஒரு வித ஊடுருவலை ஏற்படுத்தியது. அரபுலகில் முனீப் ஒரு படைப்பாக்க ஆளுமையாக மாற அவரின் நாவல்களே காரணம். வாழ்வின் அவிழ்க்க முடியாத புதிர்களை பற்றி ஆராய சிறந்த தளம் நாவலே என்று முனீப் அதிகம் நம்பினார். முதல் நாவலுக்கு பிறகு 1982 ல் வெளிவந்த வரைபடமற்ற உலகம் (World without maps) என்ற அவரின் நாவல் அரபுலகில் மிகுந்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஜோர்டானில் பிறந்து மத்திய கிழக்கின் பல்வேறு நகரங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருந்த முனீப் வீடற்ற நிலை என்பதன் பிரக்ஞையில் ஆழ்ந்திருந்தார். எழுத்தாளரும் நாடுகடத்தலும் என்ற கட்டுரையில் முனீப் நாடுகடத்தல் என்பது ஒருவனை சமூக குற்றவாளியாக , மனநிலை பிறழ்ந்தவர் இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது என்றார். அவரின் பெரும்பாலான நாவல்கள் புலம் பெயர்தலை குறித்ததாகும்.

ஜார்ஜ் லூக்காஸின் நாவல் பற்றிய கருதுகோளான "நாவல் என்பது சமூக மாற்றத்தை முன்னிறுத்தும் களம்" என்பதை முனீபின் நாவல் பிரதிபலித்தது. மேலும் இவரின் நாவல்களில் மேற்குலகத்தால் அதிகம் பேசப்பட்டது உப்பின் நகரங்கள் (Cities of Salt) என்ற நாவலாகும்.. நான்கு பகுதிகளை கொண்டிருக்கும் இந்நாவல் அரேபியாவின் பெயர் அறியப்படாத ஒரு பாலைவன கிராமத்தில் பெட்ரோலிய கண்டுபிடிப்பின் பிறகு அங்குள்ள நாடோடி பழங்குடியினர் விரட்டப்பட்ட கதையை முன்னிறுத்தியதாகும். வாதி அல் யுயோன் என்ற கற்பனா கிராமம் பாலைவன தாவரங்களாலும் சிறிய நீரூற்றுகளாலும் நிரம்பியிருக்கிறது. பூர்வ குடியினரான பதூயீன்கள் குடில் அமைத்து அதன் பல எல்லைப்பகுதிகளில் தங்கியிருக்கின்றனர். மிதப் அல் ஹதால் என்ற நபர் அவர்களின் தலைவராக இருக்கின்றார்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் சவூதி அரேபியாவில் பிரிட்டன் உதவியுடன் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் அந்த பழங்குடியினர் வாதி அல் யுயோன் என்ற கிராமத்திலிருந்து விரட்டப்பட்டனர். எங்கு செல்வதென்ற உணர்வில்லாத நிலையில் கூட்டம் கூட்டமாக பல மைல்களுக்கு அப்பால் சென்று குடியேறுகின்றனர். வாதிஅல் யுயோன் சகல வசதிகளும் நிரம்பிய பூமியின் சொர்க்கமாக இருக்கிறது. பல வருடங்கள் கழித்து மிதப் அல் ஹதாலின் மகன் பவாஸ் அந்த கிராமத்திற்கு திரும்பி வருகிறான். தாங்கள் தங்கியிருந்தாக அறியப்படும் இடங்கள் எவ்வித சுவடுகளுமற்று எண்ணெய் குழாய்களின் தடயமாக மாறி இருப்பதை நேரில் காண்கிறான். நீரூற்றுக்களும் தடமழிந்து இருந்தன.

வாதி அல் யுயோன் புதிய நகரத்திற்கான தோற்றம் குறித்ததாக இருந்தது. எதார்த்தவாத கதை சொல்லல் முறையில் இருந்தாலும் இதன் பிந்தைய பகுதி மாந்திரீக எதார்த்தவாத முறையில் இருக்கிறது. அடையாளங்களை இழத்தல் ஆழ்மன ரீதியில் ஏற்படுத்தும் பாதிப்புகள் இந்நாவலில் பவாஸின் ஏக்கத்தோடு இயைந்து நிற்கிறது. வாழ்வு அதன் அர்த்தத்தை இழந்து நிற்பதையும் இன்னொன்றிற்கான தேடல் முற்று பெறாமல் நிற்பதையும் நாவல் பாலைவன கதைவெளிக்குள் வரைந்து கொள்கிறது. இந்நாவல் மூலம் முனீப் அரபுலக இளம் அறிவுஜீவிகளால் அதிகம் ஆகர்சிக்கப்பட்டார். அதே நேரத்தில் அரசுகளால் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.அரபுலகில் பெட்ரோல் பற்றிய முதல் நாவல் என எலியாஸ் கௌரியால் இது குறிப்பிடப்பட்டது. சவூதி அரேபிய அரசாங்கம் ராஜ்ய விரோத நாவல் என குறிப்பிட்டு சில காலம் இதை தடைசெய்தது. சுமார் ஐந்தாண்டுகளுக்கு பிறகு இத்தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்நாவலை பற்றி முனீப் ஒரு தடவை இவ்வாறு குறிப்பிட்டார். "எவ்வளவு தூரம் இந்நாவல் வட்டார சித்திரத்தை கொண்டிருக்கிறதோ அதே அளவு உலக சித்தரிப்பையும் கொண்டது. வேறு வார்த்தைகளில் சொன்னால் வட்டார காலநிலையோடு நெருங்கும் அந்நேரத்தில் உலகத்தோடும் நெருங்குகிறது.

மக்களின் வாழ்நிலையோடு ஒன்றிய நிலையில் அவர்களின் தேடலாகவும் இருக்கிறது." இவரின் கடைசி நாவலான இருண்ட நிலம் (Land of Darkness) ஈராக்கின் கதையாக பிரதிபலிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈராக்கின் ஆட்சியாளராக இருந்த சுல்தான் பாதுஷாவின் அதிகார ஒடுக்குமுறை குறித்ததான சித்திகரிப்பாக இருக்கிறது. அம்மக்களின் அரசை எதிர்த்த தின வாழ்வாதார போராட்டம் கதைவெளியை நுட்பமாக கட்டமைக்கிறது. இந்நாவல் இவருக்கு படைப்பு ரீதியாக மேலும் வலுசேர்த்தது. நாவல்கள் மூலம் அப்துல் ரஹ்மான் அரபு இலக்கிய வெளியின் உன்னத நிலையை வெளிக்கொண்டார் எனலாம். தீவிர எழுத்து செயல்பாடுகளில் ஈடுபட்ட அப்துல் ரஹ்மான் புற்று நோயால் சில காலம் பாதிக்கப்பட்டார். சிரியாவுக்கும், பெய்ரோட்டிற்கும் இடையே பயணம் மேற்கொண்டிருந்த முனீப் 2004 ஆம் ஆண்டு ஜனவரியில் மரணமடைந்தார். முனீப் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவற்றை Vintage பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அப்துல் ரஹ்மான் அல் முனீப்பின் நேர்காணல்கள் மிகக் குறைவே. அதற்கு காரணம் முனீப் பத்திரிகைகளின் கண்கள் படாமல் ஒதுங்கியதாகும். இதில் ஒரு நேர்காணல் அல் ஜதீத் என்ற ஆங்கில பத்திரிகையிலும் மற்றொன்று லெபனானிலிருந்து வெளிவரும் அந்நஹாரிலும் வெளியாகி இருந்தது.

அல் ஜதீத் நேர்காணலிலிருந்து...

அல் ஜதீத்: உங்கள் வாழ்க்கை குறிப்புகளை எடுத்துக்கொள்வோர் உங்களின் பொருளாதார படிப்பையும் அதன் பிறகான உங்களின் ஆய்வு பட்டத்தையும் எடுத்து கொள்வார்கள். எப்படி உங்களால் பெட்ரோலிய பொருளாதாரத்திலிருந்து நாவல்களுக்கு நகர முடிந்தது?

அப்துல் ரஹ்மான் அல் முனீப்: ஒரு காலத்தில் என்னுடைய பெரிய விளையாட்டாக அரசியல் இருந்தது. அரசியல் செயல்பாடுகளை அனுபவ பூர்வமாக உணர தொடங்கிய பிறகு ஏற்படும் அனுபவம் குறைபாடு உடையதாகவும், போதாமையாகவும் எனக்கு உணரப்பட்டது. அதன் பிறகு நான் மற்றவர்களின் விசனங்களையும், வெளிப்பாடுகளையும் இணைப்பதற்கான வாய்ப்பாட்டை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினேன். அது வரலாற்று தலைமுறை சார்ந்ததாகவும் இருந்தது. என்னுடைய செயல்பாடாக இருந்த வாசிப்பானது எனக்கு நான் தேடி கொண்டிருந்த கருவியை அளித்தது. அரசியல் இயக்கம் என்பதை விட எனக்கு நாவல்கள் வழி அதிகம் வெளிப்பாட்டு முறையை ஏற்படுத்த முடிந்தது. பொருளாதாரத்தை பொறுத்த வரை குறிப்பாக பெட்ரோலை பொறுத்த வரை அதிகார சமூகங்கள் மீதான படிப்பினையை அளிக்கிறது. இவ்வாறாக பொருளாதாரமும், அறிவியலும் படைப்பாளிகளுக்கு சமூகத்தைப் பற்றி புரிந்து கொள்ளும் வழிமுறையை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த இடத்தில் தான் நாவலாசிரியன் முன்னுக்கு வருகிறான்.

அல்ஜதீத்: அரசியலை நீங்கள் ஏன் ஜனநாயகத்திற்கு எதிரானது என்கிறீர்கள்? நாவல் இலக்கிய சொல்லாடல்களை விட அதிகம் அரசியல் சொல்லாடல்களை தானே உற்பத்தி செய்கிறது?

அப்துல் ரஹ்மான் அல் முனீப் : முதல் கேள்வியை பொறுத்த வரை நம்முடைய தலைமுறையானது கடரும் தலைமுறை என்றழைக்க சாத்தியமானது. நாம் மாற்றத்திற்கான மிகுந்த கனவுகளையும், அபிலாசைகளையும் சுமந்து கொண்டு திரிகிறோம். அதே நேரத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பானது மாற்றத்திற்கான வாகனத்தை கொண்டு வருகின்றது. நமக்கு வழிகளை விட கனவுகளே பெரிது. அரசியல் கட்சிகளின் எச்சங்கள் மாற்றத்திற்கான தூண்டலில் மிக பலவீனமாகவும், இயலாமை கொண்டவையாகவும் உள்ளன. அவைகளின் கருத்துக்களில் பழமை தன்மையும், வெறுமையும் ஒரு சேர கிடக்கின்றன. அவை சமூக இயக்கங்களுக்குள் இணைக்கப்படவில்லை. அவைகளிடம் அரசியல் செயல்திட்டங்களை விட வெறும் கோஷங்களே மிஞ்சி இருக்கின்றன. அவைகள் எதார்த்த சோதனையை எதிர்கொள்ளும் போது அவற்றின் பலகீனங்களும், தோல்விகளும் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்து விடுகின்றன. இரண்டாவது கேள்வியை பொறுத்தவரை நாவலாசிரியன் அரசியல் கட்சிக்கு வெளியே அரசியல் பார்வையோடு நகரக்கூடியவனாக இருக்கிறான். காலப்போக்கில் அவன் அதிகரிக்கும் அனுபவ வெளியால் சமூகத்தை வெறும் அரசியல் சொல்லாடல்களை விட உயர்ந்த மதிப்பீட்டிற்கு கொண்டு வருகிறான். இவ்வாறாக வாசிப்பு என்பது சமூகத்திற்கு மாற்றத்திற்கான உயர்ந்த உத்திகளை ஏற்படுத்தி கொடுக்கிறது. வரலாறு, பொருளாதாரம் மற்றும் சமூகவியலானது, சமூகத்திற்கு தனித்தோ அல்லது கூட்டாகவோ அதன் கனவுகள் மற்றும் அபிலாசங்களின் வெளிப்பாட்டு முறையாக மாறுகிறது.

அல்ஜதீத்: உங்கள் நாவல்களை வாசிப்பவர்கள் சந்தேகமின்றி ஒரு விசனகரமான அறிவுஜீவியின் நிலையான பிம்பத்தை அதில் கண்டடைகிறார்கள். நாவலாசிரியர் என்ற முறையில் மூன்றாம் உலக அறிவு ஜீவிகளின் இன்றைய பங்களிப்பு என்ன என்பதாக கருதுகிறீர்கள்?

அப்துல் ரஹ்மான் அல் முனீப்: இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவுஜீவிகள் சமூகத்தின் மிக முக்கிய பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியும் , இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமும் அரபு உலகில் அறிவு ஜீவிகள் இயக்கத்தின் சுடர் காலமாக இருந்தது. அதன் பிறகான கட்டத்தில் அரசியல் இயக்கங்களும் பிற அமைப்புகளும் அவர்களின் குரலை வெளிப்படுத்த அறிவு ஜீவிகள் தங்களுக்கு அவசியம் என்பதை கண்டுபிடிக்க தொடங்கினார்கள். மற்றொரு கட்டத்தில் அவை அறிவுஜீவிகளை தங்கள் இயக்கத்து பிரசாரர்களாகவும், ஆலோசகர்களாகவும் மாற்றுகிறது. அந்த இயக்கங்கள் நலியும் போது அவை அவற்றின் அறிவுஜீவிகளின் தோல்வியை வெளிப்படுத்துகின்றன. அதே நேரத்தில் அறிவு ஜீவி தான் மட்டுமே அரசியல் இயக்கங்களுக்கு மாற்றாக சமூகத்தை பிரதிபலிக்க முடியும் என கருதுகிறான். என்னுடைய தொடக்க நாவல்களில் நான் அறிவுஜீவிகளின் தோல்வியையும், சறுக்கலையும் சித்தரித்திருக்கிறேன்.

பிந்தைய கட்டங்களில் அறிவுஜீவி என்பவன் முழுமையாக நாவலும், வாழ்க்கையும் இல்லை என குறிப்பிட்டிருக்கிறேன். வாழ்க்கை இதை விட வளமானது. அறிவு ஜீவியின் பங்களிப்பு இதன் முப்பரிமாண தளங்களில் இருந்த போதும் அதன் ஒரு பக்கம் இருள் கவ்வும் போது அவனால் வாழ்க்கையின் மற்ற பகுதிகளை அணுக முடியாது. நடப்பு மூன்றாம் உலக அறிவுஜீவிகளை பொறுத்தவரை அவர்களின் பங்களிப்பானது சந்தேகமின்றி முக்கிய கேள்வியாகவும், கவனமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் இருக்கிறது. என்னை பொறுத்தவரை அறிவுஜீவி சமூகத்தின் அறிவு தோற்றத்திற்கான, மாற்றத்திற்கான முக்கிய பங்காளியாக இருக்கிறான். அவன் வெறுமனே தூண்டிலாக, பிரசாரகராக இல்லாமல் அவனின் கருத்தியல் தளத்தில் நின்று கொண்டு சமூகத்தை அணுக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால் அறிவுஜீவி என்பவன் அரசியல் இயக்கங்களின் பதிலியாக அல்லது பிரசார ஊடகமாக மாறக்கூடாது. மாறாக அவனின் நிலைபாட்டில் நின்று கொண்டு ஜனநாயக பூர்வமான கருத்தாக்கங்களை. பன்முக தளங்களில் பதிவு செய்ய வேண்டும். இது தான் இன்றைய மூன்றாம் உலக அறிவுஜீவிகளின் கடப்பாடு.

அல் ஜதீத்: உங்கள் நாவல்களில் நீங்கள் குறிப்பிடுவது "பாலத்தை கடந்து விடும் போது' கடந்து போன தோல்விகளும் அதன் வழிகளும். இது 1976ல், இருபது ஆண்டுகள் கடந்த பிறகும் அதே நிலைபாடு தானா?

அப்துல் ரஹ்மான அல் முனீப்: நான் சொன்னது "வறட்சியான ஏழு வருடங்கள்" அது இந்நூற்றாண்டு வரையோ அல்லது அதன் பிறகோ தொடரலாம். இது சவூதி அரேபியா அல்லது பிற தேக்க நிலை சமூகங்களுக்கு அதிர்ச்சியை தரலாம். அடுத்த சகாப்தங்களில் அங்கு பஞ்சம் காரணமாக உள்நாட்டு கலகங்கள் ஏற்படலாம். அரசியல் முரண்பாடுகள் இன்னும் அதிகப்படலாம். ஏற்கனவே அடிப்படைவாதம் அங்கு உச்சநிலையை அடைந்துள்ளது. இதில் முக்கிய பிரச்சினை என்னவென்றால் இதற்கான மாற்று செயல்திட்டங்களோ அல்லது வடிவங்களோ இல்லை என்பது தான். நாம் அத்தகைய நிலையில் சிவில் சமூகத்தையும், பன்முகப்பட்ட ஜனநாயக வடிவத்தையும் ஏற்படுத்த முனைய வேண்டும்.

அல் ஜதீத்: எழுபதுகளில் வெளிவந்த உங்கள் நாவலான The Eastern Mediterraneanல் பல விஷயங்களை கையாள்கிறீர்கள். அதே விஷயங்கள் 90 ல் வெளிவந்த நாவலான "now here or the Eastern Mediterranean one more time என்பதற்கும் அது திரும்புகிறது. ஏன் இந்த திருப்பம். புதிய நாவலில் அதை மறு பரிசோதனை செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?

அப்துல் ரஹ்மான் அல் முனீப் : Eastern Mediterranean யை எழுதும் போது எனக்கு நானே சுய தணிக்கையாளராக இருந்தேன். அந்த தருணத்தில் வேறு நாவல் எதுவும் வெளிவராத நிலையில் அதில் எனக்கு சில விடுபடல்கள் இருந்தன. குறிப்பாக அரசியல் சிறைகள் பற்றியதானது அது. இரண்டாம் நாவலான Now here அதனை ஓரளவு நிறைவு செய்தது. இன்னும் Cities of Saltக்கு திரும்பி கொண்டிருக்கிறேன். மொத்த நிலையில் அரசியல், சமூக, மனித நிலை போன்ற பல விஷயங்கள் நாவலுக்குள் நிரம்பியிருக்கின்றன. இதன் மூலம் நாவலாசிரியன் சாரத்தை குவியப்படுத்தும் பல விஷயங்களை அதில் வரைந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

அல் ஜதீத்: இன்றைய நம்முடைய எதார்த்த பிரச்சினை எண்ணெயில் தான் ஒளிந்திருக்கிறது என நீங்கள் நம்புகிறீர்களா?

அப்துல் ரஹ்மான் அல் முனீப்: நம்முடைய பிரச்சினை என்பது முத்தளத்திலானது. எண்ணெய், அரசியல் இஸ்லாம் மற்றும் சர்வாதிகாரம். இந்த அம்சங்கள் நவீனத்துவத்திற்கான பாதையை தேடிக் கொண்டிருக்கும் அரபு சமூகங்களுக்கு குழப்பத்தையும், நிலைகுலைவையும் ஏற்படுத்துபவை. எண்ணெயானது அரசியல் இஸ்லாத்தோடு இணைந்து அதிக அதிகார குவியலை ஏற்படுத்துகிறது. ஆப்கானிஸ்தான் இதற்கான உதாரணம். அதே நேரத்தில் எண்ணெயானது சர்வாதிகார சமூகங்களுக்கு மேலும் பலத்தையும், அதன் ஒடுக்குமுறைகளுக்கு மேற்தூண்டலையும் அளிக்கின்றது. இது பல கட்டங்களில் இணைந்து கொண்டு பிராந்தியம் முழுமைக்குமானதாக பரவுகிறது. அதே கட்டத்தில் மற்ற இயக்கங்களின் இயலாமை காரணமாக அவர்களால் இதை எதிர்கொள்ள முடியாமல் போகிறது.

அல் ஜதீத்: உங்கள் நாவல்களில் அடிக்கடி வரும் சொல்லாடலான "எங்குமில்லை" என்பது இன்னும் சந்தேகமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இது எதை விவரிக்கிறது?

அப்துல் ரஹ்மான் அல் முனீப் : இடங்களின் சரியான விஷயம் என்பது ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கிடையேயான உறவு முறையை விவரிப்பதாகும். அது சார்பாகவும், விளிம்பாகவும், முக்கிய மற்றும் இருக்கிறது. அரசியல் சிறைகளை பற்றி குறிப்பிட்டேன் என்றால் அது ஈராக்கிலோ அல்லது சவூதி அரேபியாவிலோ இருக்கிறது என்பதல்ல. இவைகள் அட்லாண்டிக் முதல் வளைகுடா வரை இருந்தாலும் அவற்றின் சூழலும், வழியும் தீர்மானகரமான சக்திகளாக இருக்கின்றன. ஏனென்றால் எல்லோரும் அந்த சூழலின் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். என்னுடைய சுய வாழ்வு மற்றும் இயக்க அனுபவங்களின் தாக்கம் சமூகம் பற்றிய பிரத்யேக வாசிப்பை ஏற்படுத்தி அவற்றை பற்றிய படைப்பு கருதுகோளுக்கு என்னை வரவழைத்தது. மேலும் இந்த சாரங்கள் என்னை ஓர் இடத்திற்கும் மற்ற இடத்திற்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதை கண்டுபிடிக்க வைத்தது.

அல் ஜதீத்: மேற்கண்ட எங்கள் கேள்வியின் நீட்சியில் லெபனான் பற்றி.. அதை எப்படி அதிகார சமூகத்திலிருந்து வித்தியாசப்படுத்தி பார்க்கிறீர்கள்

அப்துல் ரஹ்மான் அல் முனீப்: லெபனான் உள்நாட்டு போரை பற்றி நாம் படிக்கும் போது 1975 லிருந்து 90 களின் முந்தைய பகுதி வரை நடந்த போரானது அந்த சமூகம் நவீனமயமாதலின் எதார்த்த அர்த்தத்தையும், அதன் கால உறவு முறையையும் நமக்கு அளிக்கிறது. அதன் அடுக்கு முறைக்கு வெளியே புராதன மற்றும் பழைய சமூகங்களுக்குரிய மோசமான பின் தங்கிய நிலையையும், பிளவுகளையும் கொண்டு விளங்குகிறது. இந்த அர்த்தத்தில் ஒரு வேளை அதன் வடிவத்திலும், தோற்றத்திலும் ஓர் இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு வித்தியாசம் வரலாம். ஆனால் பதூயீன்களை பொறுத்தவரை எண்ணெய் வளமிக்க பாலைவனங்களோடு அவர்களின் வாழ்க்கை முறை சம்பந்தப்பட்டிருக்கிறது. அங்கிருந்து அது எல்லா அரபு நகரங்களுக்கும் இடம்பெயர்ந்திருக்கிறது. இந்த சக்திகளின் தீர்மான முறை வெறும் அரசியல் மட்டுமல்ல, கலாசாரம் மற்றும் வாழ்க்கை வழி முறை போன்றவற்றோடு இயைந்திருக்கிறது.

அல் ஜதீத்: உங்களின் அம்மான் (ஜோர்டானின் தலைநகரம்) பற்றிய புத்தகத்தில் நீங்கள் நகரம் பற்றிய சுய சரிதையை போலி செய்வதாக இருக்கிறது. ஆனால் இந்த கதை 1940 முதல் பாலஸ்தீன் புலப்பெயர்வு வரை நீள்கிறது. ஏன் இந்த சுய சரிதை? இது வரலாற்றிற்குள் விவாத தன்மையை ஏற்படுத்த கூடியதா? பாலஸ்தீனியர்களின் அம்மான் புலப்பெயர்வு பொருளாதார மற்றும் அதன் கட்டமைப்பின் பிறப்பிற்கு வழி ஏற்படுத்துகிறதா?

அப்துல் ரஹ்மான் அல் முனீப்: இது பன்முக பரிமாணங்களை கொண்ட கேள்வி. முதலில் நான் நவீன இலக்கியத்தில் நகரம் பற்றிய அதிக எழுத்துக்களை கண்டுபிடிக்க விரும்பவில்லை. நகர வாழ்க்கை பற்றிய பல பிரச்சினைகள் அது ஆவணமாக்கபடாத சூழலில் கொஞ்சமாக மறைய தொடங்கி கால ஓட்டத்தில் அழிந்து விடுகிறது. நகரம் பற்றிய என்னுடைய சுய சரிதையானது அநேக படைப்பாளிகளின் தூண்டலாக விளங்கும் நகரமும், இளமைக்காலமும் குறித்ததாகும்.

அல் ஜதீத்: சுய சரிதைகள் நாவல்களில் எந்த எல்லை வரை பங்களிக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?

அப்துல் ரஹ்மான் அல் முனீப்: இது இரண்டு வித்தியாசங்கள் மூலம் சாத்தியமாகிறது. ஒன்று நாவல் மற்றும் பிற எழுத்து முறை. நாவலில் இதன் பங்கு அல்லது தாக்கம் மிகக்குறைவே. நாவலின் தன்னிலையில் இதன் குணாதிசயங்கள், வாழ்க்கை ஓட்டங்கள் வருகின்றன. ஒவ்வொரு ஆசிரியனும் அவன் எதை எழுதுகிறானோ அதன் சிறு பரப்பில் உள்ளாக இருக்கிறான். நாவல்களில் அறிவுஜீவீயின் குணாதிசயம் என்பது அவனின் வாழ்க்கை ஓட்டத்தை அர்த்தப்படுத்துவதாக இருக்க கூடாது. அதற்கு எதிர் நிலையில் சில குணாதிசயங்களை மட்டுமே ஆசிரியன் விமர்சிப்பதாக இருக்க வேண்டும். புனைவு எழுத்தின் எல்லையானது அதன் இயல்பான வேட்கைகளையும், கனவுகளையும் கொண்டது. இதில் சுய சரிதை என்பது நாவலுக்கு அடிப்படையான தடையாக இருக்கிறது. ஒரு தடவை நான் சொன்னேன். " ஆசிரியன் தன் நாவலை சுய சரிதையாக கருதி நகர்த்தி கொண்டு சென்றால் அவனால் எதையுமே அடைய முடியாது. இது வெறும் உணர்ச்சி பெருக்கங்களையே ஏற்படுத்தும்." என்னுடைய எழுத்துகள் இந்த எல்லையிலிருந்து வெளி நகர்ந்து தான் வந்திருக்கின்றன.

அல் ஜதீத்: மர்வான் குசப் பாஸியை (சிரியாவின் ஓவியர்) பற்றிய உங்கள் எழுத்துக்கள்....

அப்துல் ரஹ்மான் அல் முனீப்: நான் முதலில் நவீன ஓவியங்களை விரும்புபவன் என்ற முறையில் அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்கிறேன். ஓவியத்தின் ஆக பெரும் விரிவெல்லையானது இதுவாக தான் இருக்க முடியும். இலக்கிய படைப்பாளர்கள் ஓவியங்களை காண்கிற போது ஒருவித நுண்வாசிப்பு அனுபவத்தை அடைகிறார்கள். நாவல் இவற்றை கடக்கும் புள்ளியாக இருக்கிறது. மர்வான் குசப் என்னை பொறுத்தவரை இதை தான் பிரதிபலித்தார். அரபுலகில் ஓவியங்களுக்கு இருக்கும் வரவேற்பின் எல்லையை தாண்டியே அவரின் பயணம் இருந்தது. ஒரு நாவலாசிரியனுக்கு நாவலோடு உறவு ஏற்படுவது மாதிரி ஓவியங்களோடும் ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

Pin It

தோழர் இசாக் அவர்களின் நட்பிலும் தோழமையிலும் மகிழ்ந்திருந்தபோதும், அவருடைய கவிதைகளில் தோயும் வாய்ப்புகள் என்னைவிட்டுத் தள்ளியே நின்றன. ஏற்கனவே வெளிவந்திருந்த தொகுப்பு என்னிடம் வழங்கப்பட்டிருந்த போதும், அதன் வாசிப்பை நான் தள்ளியே வைத்து வந்துள்ளேன். கவிதைகளின் மீது கொண்ட அன்போ, மதிப்போ தெரியவில்லை, எந்த ஒரு கவிதையையும் பட்டென அணுகும் துணிவைத் தந்ததில்லை. நண்பர் மீது கொண்ட அன்பு, அத்தொகுப்பின் உள்ளடக்கத்திற்கு அப்பாற்பட்டது. சில சமயங்களில், வெறும் வரிகளால் கனக்கும் ஒரு தொகுப்பு, என்னைச் சித்திரவதை செய்துவிடுவதுண்டு. நேரடியாகச் சொல்லும் கணங்கள் நட்பின் இழைகளை அறுத்து விடக்கூடியவை. இதனால் பல நேரங்களில் முன்னுரைகளுக்கோ, மதிப்புரைகளுக்கோ வரும் தொகுப்புகளைத் தொடாமல் பல நாட்கள்  ஏன்  பல மாதங்களைக் கடத்தியுள்ளேன்.

ஒரு கவிதைத் தொகுப்பைப் படிப்பதற்குரிய மனநிலையும் அவசியம். இயந்திரகதியில் எந்த இலக்கியத்தையும் படிக்க முடியாது. கவிதைக்கு இன்னும் கூடுதலான உணர்வு வேண்டும். சில சமயங்களில்  ஒரு படைப்புக்கான கால அவகாசமும், உணர்வும் கவிதையைப் படிப்பதற்கும் தேவைப்-படுவதை அனுபவித்திருக்கிறேன். இசாக்கின் "துணையிழந்தவளின் துயரம்' என்ற இத்தொகுப்பை என் மேசையில் விரித்தபோது, என்றுமில்லாத அவல உணர்வுகளால் அல்லாடினேன். ஈழத்தமிழர்களின் துயரம், எனது எல்லா வகையான இலக்கிய முயற்சிகளையும் குலைத்தது. படிப்பு, படைப்பு எதிலும் மனம் ஈடுபடவில்லை. காலம் மனத்தை இயல்பு நிலைக்குத் திருப்பக் கூடியது. துயரத்தை ஆற்றக் கூடியது. இப்பொழுது கிட்டத்தட்ட ஒர் ஆறுதலான மன நிலையில் இருக்கிறேன். எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்பதன்று இதன் பொருள். எல்லா நடப்புகளையும் எதிர் கொள்ள வேண்டும் என்கிற மனநிலை. எல்லாவற்றையும் தெளிவுபடச்சிந்தித்து எழுத வேண்டும் என்கிற மனநிலை.

இசாக்கின் "துணையிழந்தவளின் துயரம்' ஒரு வகையில் புலப்பெயர்வின் துயரத்தின் வெளிப்-பாட்டைத் தான் கூடுதலாகப் பாடுகிறது. எனினும் இதை ஈழம் உள்ளிட்ட பிற நாடுகளில் நிகழும் வன்முறையின் விளைவான புலப்பெயர்வோடு ஒப்பிட முடியாது. ஈழத்தில் நிகழ்வது வேருடன் பெயர்தல். கூடு இழக்கும் கொடுமை. தமிழகத்தில் அப்படிப்பட்ட கொடுமை நிகழவில்லை. 

துபாயில் பிழைக்கப் போனவரின் கதையைச் சொல்லுகின்றன பெரும்பாலான கவிதைகள்.

"வாழ்க்கையில்

விடுமுறை நாட்கள் வரும் போகும்

அனைவருக்கும்.

விடுமுறை நாட்களில் தான்

வந்து போகிறது

வாழ்க்கை

நமக்கு.'

மிக எளிமையாகச் சொல்லப்பட்ட இந்தக் கவிதையில் பாடுபொருளாவது வாழ்க்கைதான். அந்த வாழ்க்கை நெடும்பிரிவால் அலைக்கழிகிறது குறுகிய நாட்களில் குமிழியிடுகிறது.

"அந்த மூன்று நாட்கள் பற்றியான

அங்கலாய்ப்புகளால்

நிரம்பி வழிகிறது பெண்களுலகம்.

ஆண்டு முழுவதும் மூன்று நாட்களான

சோகத்தை

யாரிடம் சொல்லியழுவாள்

அவள்.'

இப்படி பொருள்வயின் பிரிதலை, புதிய சூழல்களில் வைத்துப் பேச முனைகிற கவிதைகள் நிரம்ப. இந்தப் பிரிவு  ஒரு வன்முறை அரசியலின் விளைவு அன்று என்று நமக்குத் தோன்றும். ஆனால், இப் பிரிவுகளின் பின்னணியில் உள்ள கண்டுணரப்படாத அரசியல், பொருளாதார சமுதாய வன்முறைகளை யார் பேசுகிறார்?

ஆயுதத்தால் மட்டுமே வன்முறையை அடையாளப் படுத்தும் மரபு நம்முடையது. அதனால் வன்முறையின் உண்மை முகத்தை நாம் காணத்தவறுகிறோம். பல சமயங்களில் ஆயுதம் ஏந்தாத இருப்புகள், ஆயுத வன்முறையைக் காட்டிலும் கொடுமையும் கபடமும் நிறைந்தவை.

"இளமை புறங்கொடுத்து' இசாக்கை ஒத்த இளைஞர்கள், பாலையின் கானல் கரைகளில் ''சுருண்டு விழுவதன் பின்னுள்ள ஒரு பொருளாதாரமுறை, அதைக் காப்பாற்றும் அரசியல் முறை வன்முறை சாராதது என்பது எத்தனை பெரிய ஏமாற்றுக் கொள்கை? புலப்பெயர்வின் பின்னுள்ள இந்த வன்முறை இயக்கத்தை இசாக்கின் கவிதைகள் நேரடியாகப் பேசாவிடினும், நுட்பமாகப் பதிவு செய்கின்றன.

"கட்டடக் கட்டுமானப் பணியின்போது

கோடையின்

கொடும் வெயில் தாங்கமுடியாமல்

சுருண்டு விழுந்து

செத்துப் போன

கூலித்

தொழிலாளி

கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.'

என்று ஒரு தற்செயல் நிகழ்வின் துயரத்தைச் சாதாரணமாகச் சொல்லித் தொடங்கும் இசாக்  அடுத்துக்காட்டும் காட்சி இத்தற்செயலின் கண்டுணரப்-படாத பயங்கரத்தைக் காட்டுகிறது அக்காட்சி..

"கோடை வரும்முன்

தனி வானூர்தியேறி

தூரத்து

குளிர்தேசம் சென்று ஓய்வெடுக்கத்

துபாய் இளவரசனின்

பந்தயக் குதிரையா இவன்?'

மானுடம் எவ்வளவு மலிவாய்ப் போய்விட்டது! இந்த உணர்தல்தான் "மக்கட்பண்பு' என்று வள்ளுவரால் ''சுட்டப்படுகிறது. பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றும் பண்பு. ஆனால் இசாக் உணரும் வலி, துபாய் இளவரசனுக்கு ஏன் இல்லாமற் போனது?

தமிழீழத்தில் பயணம் செய்த போது இப்படி ஒரு காட்சியைக் கண்டு நானும் அதிர்ந்தேன். இதை வேறொரு கட்டுரையில் பதிவும் செய்துள்ளேன். மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களின் லாயனுக்குச் சென்றோம். கூட வந்த மலையக நண்பர் ஒருவர் சொன்னார்: தொழிலாளர்களின் இந்த லாயன் ஒரு காலத்தில் வெள்ளைத்துரைகளின் குதிரை லாயமாக இருந்ததாம். அங்கு ஒரு வீட்டுக்குள் நுழைந்து பார்த்தோம்.

அதை வீடு என்று சொல்வது ஒப்புக்குத்தான். நுழைந்தபோது உள்ளே இருட்டாக இருந்தது. கால் வைத்த நான் இடறிவிழப்பார்த்தேன். அந்த இருட்டுக்குச் சில நிமிடம் பழகிய பிறகு அங்கு இருந்தவை புலப்பட்டன. பத்துக்குப் பத்து என்ற அளவில் இருந்த ஒரு கெமரா அது. அறையை அப்படித்தான் சொல்கிறார்கள். அதில் நடப்பதற்கு ஓர் ஒன்றரை அடி வழி விட்டு, அந்த அறையை இடுப்பளவு உயரமுள்ள ஒரு களிமண் சுவர் பிரித்திருந்தது. அந்தச் சுவருக்கு இருபுறமும் இரண்டு மண் அடுப்புகள் "தூர்ந்து' போய்க்கிடந்தன. அடுப்பை அடுத்த இப்பக்கமும் அப்பக்கமும் பழந்தலையணைகள், சிதைந்தபாய்கள் கிடந்தன.

அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரும் நாற்பது வயதுத் தோற்றமுள்ள மற்றொருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். இரண்டு பெண்களும் குழந்தைகளும் சூழ நின்றார்கள். "இதில் யார்குடி இருக்கிறார்கள்?'' என்று கேட்டேன். நாற்பது வயதுக்காரர் பெரியவரைச் சுட்டிக்காட்டி: "எங்கள் இரண்டு பேரின் குடும்பமும் இருக்குதுங்க'' என்றார். எனக்கு அதிர்ச்சி! இந்தப் புறாக்கூட்டுக்குள் இத்தனை மனிதர்களா? மீண்டும் கேட்டேன். "எவ்வளவு காலமாக?'' முதியவர் சிரித்தபடிச் சொன்னார்: "நாங்க பொறந்ததே இங்கேதான்'' எனக்கு எதுவும் பேசத்-தோன்றவில்லை. வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது மலைச்சரிவுகளில் தேயிலைச்செடிகள் "கிராப்' வெட்டிக்-கொண்டதுபோல் சீராகப் பசும் முகம் காட்டிக்-கொண்டிருந்தன.

அங்கிருந்து "நுவரேலியா' என்ற இடத்துக்குப் போனோம். அங்குள்ள குதிரை லாயத்துக்கு அழைத்துச்சென்றார்கள். பல்வேறு குதிரைகள் பளபளவென்ற தோல்களில் மினுங்கிக்-கொண்டிருந்தன. ஒவ்வொரு குதிரைக்கும் பத்துக்குப்பத்தடி குறையாத வெளியில் ஒரு தடுப்பு இருந்தது. வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்த பந்தயக்குதிரைகள் என்றார்கள்.

மலையகத்தில் சென்றவிடமெல்லாம் தேனீர் பரிமாறப்பட்டது. சுவையான தேனீர்! அந்த லாயனில் அடைக்கப்பட்ட மனிதர்கள்கூடப் புலம்பெயர்ந்தவர்கள் தாம்! இசாக்கின் அரபுக்குதிரையைப் படித்த போது எனக்கு நுவரேலியாக் குதிரைகள் தாம் நினைவுக்கு வந்தன.

இசாக்கின் முந்திய கவிதைகளில் ஒருவகையான காதல் தகிப்பு இருந்தது. அந்தத் தகிப்பு புனைவியல் பாங்கில் வெளிப்பட்டிருந்தது. இந்தப் புனைவியல் பாங்கு, கவிதை எழுதத்தொடங்குபவரையும் ஏமாற்றும்; கவிதையின் தொடக்க வாசகரையும் ஏமாற்றும். ஏனெனில் அக்கவிதைகளில் வாழ்வனுபவம் பதிவு செய்யப்படுவதைவிடக் கற்பனை அழகே கூடுதலாக அழுந்தி இருக்கும். "மௌனங்களின் நிழற்குடை'யில்

"மிகவும்

ஆபத்தானதென்கிறார்கள்

புதைகுழி

அடீ

உன்

கன்னக்குழியைவிடவா?'

என்று எழுதுவது ஒரு புனைவுதான். இதில் வெறுங்கற்பனை தெறிக்கும் அளவுக்கு, அனுபவம் தலைநீட்டவே இல்லை. இதில் இசாக்குக்குப் பல பெரிய கவிஞர்களே முன்னோடிகள்!

ஆனால் இந்தத் "துணையிழந்தவளின் துயரம்'   தொகுப்பில் இசாக் விடுபட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. இவருக்கு இயல்பாக அமைந்துவிட்ட எளிய சொல்லாட்சிதான் இவரை இப்படி மீட்டுவந்திருக்கிறது.

"மூன்று மாதம் முழுதாக வீட்டில் தங்காமல் மறுபயணத்துக்குப் புறப்படுகிறான் தலைவன்.' அவன் பயணம் அப்பா அம்மாவுக்கு, அக்கா தங்கைகளுக்கு.. எல்லோருக்கும் தாங்க முடியாத சோகந்தான். புறப்படும் அன்று / சோக.. சோகமாகக் காட்சியளிக்கிறார்கள்/வழியனுப்ப வந்தவர்களும்கூட/.. இப்படி ஒவ்வொருவர் மீதும் கவியும் துன்பங்களைச் சித்தரித்து வந்தவர், யதார்த்தத்தின் வலியுடன் கவிதையை இப்படி முடிக்கிறார்:

"என்ன செய்ய

துபாய் போகாமல் இருந்துவிட்டாலும்

மகிழ்ச்சியடையப் போவதில்லை

எவரும்!'

இந்தத் தலைவன் போகிறான் என்பதைவிடத் துரத்தப்படுகிறான் என்பதுதான் உண்மை. துரத்துபவர்கள் எல்லாம் வேறு யாருமில்லை, சொந்த ரத்தமே! போவதில் அவனுக்கும் மகிழ்ச்சி இல்லை. துரத்துவதில் அவர்களுக்கும் உடன்பாடில்லை. எனினும் இது நிகழ்கிறது.. ஏன்? இங்குதான் முன்னரே குறிப்பிட்ட கண்டுணராத அரசியல், பொருளாதார வன்முறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி எழுதுவதற்குக் கற்பனை பயன்படாது! அனுபவ முதிர்ச்சிதான் பயன்படும். இசாக் இப்படிப்பதிக்கும் அனுபவமுத்திரைகளால் இத்தொகுப்பே கனத்துக் கொண்டிருக்கிறது.

பிரிவின் வலிமட்டும் இங்கு பாடுபொருளாக-வில்லை. வெவ்வேறு சூழல்களில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளும் கவிதைகளாகி உள்ளன. நிறையச்-சொல்லலாம். ஒரு சான்று மட்டும் இதோ:

"சிறப்புப் பிரார்த்தனையன்றிற்குத்

தலைமையேற்ற போதகர்

ஒலிவாங்கியின் உதவியால்

நள்ளிரவைத் தாண்டியும்

மறுமை நாளின்

சிறப்பைத்

தெளிவாகச் சொல்லிக் கொண்டிருந்தார்

பகலெல்லாம்

உறங்கப்போகிற உற்சாகத்தில்.

மறுநாள்

காலை

பணிக்குப் போகவேண்டுமென்கிற

கவலை

என்னைப்போல பலருக்கு

இறைவன்

ஆசிர்வதிப்பானா?

சபிப்பானா?'

இதைப் படிக்கும் போது ஒரு மெல்லிய புன்னகைதான் என் உதடுகளிலும் நெளிந்தது. இத்தொகுப்பில் இப்படி பல இடங்களில் புன்னகைத்துச்செல்லலாம். துயரம், விழுமியங்களின் போதாமை மீதான ஒரு கிண்டல்  எதிலும் மிகையில்லாமற் சொல்கிற ஒரு போக்குத்தான் இத்தொகுப்பில் ஊடாடுகிறது. குறைகளே இல்லை என்று சொல்ல முடியாது எளிமையாகச் சொல்லும் முயற்சியில் சில இடங்களில் வெறுமையாக நிற்கிற விபத்தும் நிகழ்ந்து விடுகிறது. எனினும் இந்தக் குறைகள் மிகவும் குறைவு.

ஓரிடத்தில் தம்மைப் பற்றியே பேசுகிறார். எந்த ஒரு பிரகடனமுமில்லாமல்.

"நவீன யுக்திகளோடு

வாழ்வனுபவங்களின் பொருளுணர்த்தும் கவிதை

இவனுடையதென அடையாளப்பட

இச எழவுகள்

எதுவுமறியாவிட்டாலும் இளித்து நிற்க வேண்டும்.

அப்படியிருக்க அறியாதவன்

நான்.

-இப்படிப்பல அறியாததுகளைச் சொல்லி, தான் கவிஞனுக்குரிய தகுதி இல்லாதவர் என்று சொல்லும் போது- கவிஞர்கள் அடிக்கும் 'லூட்டி'யை நினைவுப்படுத்திக்கொண்டே வருகிறார். கவிதை இப்படி முடிகிறது:

'எந்த எல்லைக்குள்ளுமில்லாத என்னை

கவிஞனென்று சொல்லுகிற துணிவு

எவருக்குண்டு

என் நண்பர்களைத் தவிர.'

தோழர் இசாக் அவர்களே!

தோழமை என்ற பரிவால் அல்ல-

உங்களுடைய கவித்துவத்தால் சொல்லத்துணிந்தேன்

உங்களை ஒரு கவிஞன் என!

Pin It

பண்பாடு

இனத்தாலும் மொழியாலும் பிறவற்றாலும் முற்றிலும் வேறுபட்ட சூழலில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதனாலே அப்பண்பாட்டுச் சூழலின் தாக்கம் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்விலும் செல்வாக்குச் செலுத்த ஆரம்பிக்கின்றது. புகழ்பெற்ற மானிடவியலாளரான "எட்வர்ட் பர்னட் டைலர்' பண்பாடு என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் தருகிறார். “பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கநெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனிதன் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும் பழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும்.''(பண்பாட்டு மானிடவியல்)

தமிழர் சமுகம் தன் இனக்குழுமத்துடன் தன் சொந்த நாட்டில் வாழ்ந்தால் இந்த முழுமைத் தொகுதியைக் கற்றுக் கொள்வதில் எந்தச் சிக்கல்களும் இல்லை. ஆனால்  புவிப்பரப்பிலிருந்து சிந்தனைவயப்பட்ட நிலை வரை எமது தமிழ்ப்பண்பாட்டோடு ஒப்புமை காண முடியாத சூழலில் அவர்கள் வாழ்கின்ற போது புதிய பிரச்சனைகளும் முரண்பாடுகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

புலம்பெயர்ந்தோர் கவிதையில் பண்பாடு

புகலிட இலக்கியமும் பண்பாடும் பண்பாடு பற்றிய சிந்தனை புலம்பெயர்ந்தவர்களில் எழுத்துக்களில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதற்கு ஆதாரமாக முதலில் கவிதைகளை நோக்குவோம். பண்பாட்டு மாற்றம் என்பது (culture change) புலம் பெயர்ந்தவர்களின் தொழில் முறையாலும் அவர்களின் அன்றாட நடைமுறைத் தேவைகளாலும் ஏற்பட்டு விடுகின்றன. இது கவிதைகளில் எப்படி முரணாக வருகின்றது என்பதைப் பார்ப்போம்.

“................

இன்று ஒரு தமிழ்த் திருமண நாள்

கோட்

அதற்கு மட்டுமான ரவுசர்

பொருத்தமான சப்பாத்து

ஒரு அவன்!

அவளோ எமது கலாசாரத்தைக் காவ வேண்டும்

குளிரோ வெயிலோ

கூனியோ குறுகியோ!

காவினாள்.

சாறி

தலையில் கனகாம்பரம்

நெற்றியில் பொட்டு

கழுத்தில்தாலி

போதாததிற்குஅணிகலன்கள்.

அதேஅவள்!

...........

நாமோ வேட்டியைக் கொன்றவர்கள்.

சரத்தை எம் வீட்டுக் கதவுவரை மட்டும்

உலவ சுதந்திரம் கொடுத்தவர்கள்.

ஆனாலும் கோட் ரை உடன் மேடை ஏறி

எமது கலாசாரம் வேண்டி முழங்குவதிலும்

வெட்கம் கெட்டவர்கள்.

எங்களுக்கு வேண்டும் எங்கள் கலாசாரம்.

அச்சடித்தபடி!

அதைக் காவுவதற்கு பெண்களும் வேண்டும்.

தூ ...!'' (ரவி – சுவிஸ்)

இன்னொரு கவிதையில்;

“புலம்பெயர்ந்து வந்ததனால்நாம்

பொன் கொண்டோம் பொருள் கொண்டோம்

பெருந்தொகையில் கார் கொண்டோம்

தங்கத்தால் கத்தி செய்து பிள்ளைக்குத்தான் கேக்கு

வெட்டிவிட்டோம் …இதுபோல

குங்குமத்தின் மகிமைதனை

குலமகளும் மறந்துவிட்டாள்.

கரிய நெடுங்கூந்தல் கரைச்சலென்று

கன்னியரும் அறுத்துவிட்டார் சூழ்நிலையால்

சீரான பட்டுச்சேலை பாரமென்று கிழவியரும்

ஜீன்சுக்குள் புகுந்துவிட்டார்.

புலம்பெயர்ந்து வந்ததனால் புதிய பெயர் கொண்டோம்

சுதந்திரமாய் பறந்தவெம்மை

ஒரு கூட்டுக்குள் தானடைத்தோம்

ஊருக்காய் உறவுக்காய் ஒருகணமும்

ஊராலும் உறவாலும் மறுகணமும்

உள்ளம் தானுடைந்து உருக்குலைந்து போகின்றோம்..'' (அம்பி)

இந்த இரண்டு கவிதைகளின் அர்த்தப்படுத்தலுக்கும் கவிஞர்களின் காலத்திற்கும் இடையில் உள்ள தலைமுறை இடைவெளியை புரிந்துகொள்ள வேண்டும். நம்பிக்கைகள், கருத்துக்கள், வழக்காறுகள் ஆகிய அறிதல்சார்கூறுகளும் விழுமியங்கள், நெறிமுறைகள், விதிகள், குடிவழக்குகள், வழக்கடிபாடுகள், மரபாண்மைகள், அன்பளிப்புகள், வழக்கங்கள், பழக்கங்கள் ஆகிய நெறியியல் சார்கூறுகளும் எமது தமிழ்ச் சூழலில் இருந்து மெல்லமெல்ல விலகி, புதிய பண்பாட்டுச் சூழலில் பண்பாட்டு மாற்றத்தையும்,  பண்பாட்டுக் கலவையையும் ஏற்படுத்தும்போது அது பாரதூரமான தாக்கத்தை புலம்பெயர்ந்த தமிழரிடம் கொண்டுவருகிறது.

அவர்கள் பேசும்மொழி, பழக்கவழக்கங்கள், எமது இளம் தலைமுறைகளுக்கு கிடைக்கின்ற கல்விச்சூழல், அவர்களின் பிறநாட்டு நண்பர்களின் தொடர்புகள், உறவுநிலைகள், எமது மரபுகளை ஏற்றுக் கொள்வதில் காட்டும் தயக்கங்கள் எனப் பல விடயங்களைக் கூறலாம். குறிப்பாக மொழி நுண்மையான ஆய்வுக்குரியது. இது புலம்பெயர்ந்து வாழும் தலைமுறை இடைவெளிகளை மனங்கொண்டே கூறமுடியும். மொழியாயினும் சரி , அந்நாட்டுக் கலாசாரத்திற்கு ஏற்ற வாழ்வு முறையாயினும் சரி எமது தமிழ்ப்பண்பாட்டின் பார்வையில் முரண்பாட்டுக்கும் சிக்கலுக்கும் உரியதே.

பின்வரும் கவிஞர்களின் கவிதைவரிகளைப் பார்ப்போம்.

“தமிழ் பேசி

கவி பாடி

கருத்துக்கள் கக்கிய

உதடுகள்

முரண்பாடு கொண்டு

சிக்கித் தவிக்கின்றன.

சிந்தனையும் தான்''(நிருபா)

 

“சூழல் மொழியே வாழும் மொழியாய்ச்

சுவைபட வளர்கிறது.

வாழும் மொழியாய் வளரும் மொழியாய்

வாயில் தவழ்கிறது.

நாளும் பொழுதும் நாவிலும் மொழியே

நமதாய் வருகிறது.

ஆளும் மொழியாய் நாளும் அதுவே

நாவில் திரிகிறது.''(அம்பி)

 

“இழந்தோம்

நாட்களை இழந்தோம்

உறவுகளை இழந்தோம்

பதிவுகளை இழந்தோம்

தேசத்தையும் மண்ணையும்

மொழியையும் மறந்து

புதிய தலைமுறை வாழ்கிறது''(செழியன்)

அச்சூழலில் பிறந்து கல்வி கற்று வாழும் மூன்றாவது தலைமுறைப் பிள்ளைகள் பிறப்பால் தமிழ்ப் பிள்ளைகளாக இருந்தபோதிலும், அவர்கள் வேற்றுமொழி பேசுபவர்களாக வளரவேண்டிய சாத்தியப்பாடுகள் தான் அதிகம்.

இங்கு பிரச்சனை மூன்றாவது தலைமுறையினருக்குத் தான். அவர்களிடம் எமது இனத்தின் அடையாளத்தை எவ்வாறு கையளிப்பது என்ற பிரச்சனை வருகிறது. இந்நிலையில் இன்று புலம்பெயர்ந்த பெரியவர்கள் எல்லாம் முன்நின்று கோயில்கள் சங்கங்கள் தமிழ் விழாக்கள் என்று சொல்லிக் கொண்டாலும் எமது அடையாளமாக மிஞ்சப் போவது தமிழில் அல்லாத பண்பாட்டுப் பேணுகைதான்.

“தமிழை தமிழ்ப் பண்பாட்டுக்கு அப்பாலே கொண்டு செல்லுகின்ற பொழுது, தமிழின் பண்பாட்டுப் படிமங்களிடையே தமிழைப் பேணுவது என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக இன்னுமொரு பத்தாண்டில் மேற்கிளம்பப் போகின்றது. அப்பொழுது தமிழ்த் தன்மையின் சாரம் என்ன என்ற கேள்வி மேலெழும்பும்''  என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களிள் கூற்று இன்னமும் பொருத்தமாகவே இருக்கின்றது.

நெறிமுறைகள் என்று வரும்போது மொழியை விடவும் மிகப் பாரதூரமான விளைவுகளை அந்நியக் கலாசாரம் எமது தமிழ்ப் பண்பாட்டுக்குள் ஏற்படுத்துகின்றது. தமிழர்களின் உறவுநிலைகளில் இந்த மாற்றம் நிகழ்தலை விரும்பியோ விரும்பாமலோ மறுத்தாக வேண்டிய கடப்பாடு எமது தமிழ் வாழ்வு நிலைக் கூடாக ஏற்படுகின்றது.

“நாளை உன் மகன்

எங்காவது ஒரு bar இல் disco வில் உரசக்கூடும்;

உறவு காதலாகக் கூடும்

எமக்கொரு பேரன்

கறுப்பு வெள்ளை அல்லது கலர்களில்

பிறக்கக் கூடும்.''(ஆதவன்)

 

“...........

நான் அழகானவளா?

என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா?

பெண்ணே

நீ அழகானவள் என்பதில் எந்தப் பொய்யுமே இல்லை.

உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.'' (கொய்யன்)

 

“ஆண்மோகம் பெண்போகம் காரணமாய்

வந்த நோய்க் கலப்பே.

ஆனாலும் இன்று அதிகம் பலியாவது

அப்பாவிக் குழந்தைகளே!'' (மகேஸ்வரி)

உதாரணத்திற்காக மேலே குறிப்பிட்ட மூன்று கவிதைகளிலும் ஓடுகின்ற கவிதைச்சரடு யாதெனில்; ஒழுக்கவியலானது அந்நிய கலாசார வாழ்வுக்குள் கேள்விக்கு உள்ளாவதேயாகும். தனிமனித உணர்வுகள், விருப்பு வெறுப்புக்கள், பாலியற் தேவைகள், உறவுநிலைகள் என்பவற்றில் இந்தக் கேள்வி அந்நிய கலாசார சூழலிலே தமிழ்ப் பண்பாட்டை கைக்கொள்ளல் என்ற வகையில் ஏற்படுகின்றது. “195060 களில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அமெரிக்காவை சொர்க்கம் என நம்பினார்கள். அவர்களின் பிள்ளைகள் 13,14 வயது வந்தவுடன் "டேற்றிங்' போதைப் பொருள் பாவனை, ஆபாச தொலைக்காட்சி என்பவற்றிற்கு அடிமையாகி சிதைந்ததை தம் கண்ணெதிரே கண்டார்கள். இதேபோல் இங்கிருந்து புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் பணம் ஈட்டும் சுயநலத்தினால் தங்கள் பரம்பரைகளை மட்டுமல்ல அவர்களது அந்நியச் செலாவாணியின் முறையற்ற செல்வாக்கின் காரணத்தால் எங்கள் எதிர்காலப் பரம்பரையையும் சிதைக்கத் தான் போகிறார்கள்'' (பேரா.கா.சிவத்தம்பி) என்ற கருத்து சிந்தனைக்குரியது. மேலே குறிப்பிட்ட இக்கூற்றுக்கு பொருந்துமாற்போல் கவிதைகளை விட சிறுகதைகளையே எடுத்துக் காட்டலாம்

ஏனெனில் பண்பாடு என்பது ஓடுகின்ற நீரோடைபோல். காலத்திற்கும் மனித வாழ்வு நெருக்குவாரங்களுக்கும் ஏற்ப அடிப்படையை மாற்றாமல் சிலவற்றையே மாற்றுகின்றது. ஆனால் அந்நிய கலாசாரத்தில் இது பலத்த சிந்தனைக்கு உரியதாகும்.

“பண்பாட்டு மாற்றம் ஒரு சிக்கலான நிகழ்வாகும். இதைப் பல காரணிகள் இயக்குகின்றன. அவற்றுள் கண்டுபிடிப்புக்கள் வெளிப்படுத்துதல்கள் பரவல் பண்பாட்டுப் பேறு, ஓரினமாதல் நவீனமயமாதல் தொழில்மயமாதல் நகரமயமாதல் புரட்சி போன்றவை முதன்மையாகச் செயல்படுகின்றன.'' (பக்தவத்சலபாரதி பண்பாட்டு மானிடவியல்)

இந்தவகையில், சிற்சில மாற்றங்களை புலம்பெயர்ந்த தமிழர் வாழ்வில் அந்நிய கலாசார சூழல் ஏற்படுத்துதல் தவிர்க்க முடியாது. இவ்விடத்தில் எமது தமிழர் சமுகம் பேணிவரும் மீளுருவாக்கம் பற்றியும் சிந்தித்தல் வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் விழாக்கள், சடங்குகள் முதலியனவற்றை புலம்பெயர்ந்த தேசத்திலும் நடவு செய்கின்றபோது எமது சமுக அடுக்குகளில் புரையோடிப் போயிருக்கும் அதிகாரம் சாதி வர்க்கம் என்பன மீண்டும் அங்கு முளைகொள்ளத் தொடங்குகின்றன. தமிழ்வாழ்வு, மேலைத்தேயவாழ்வு இரண்டிற்குள்ளும் மூச்சுத் திணறி வாழும் இரட்டை வாழ்வே இறுதியில் மிஞ்சிப்போகின்றது.

“சிரிக்க முயன்றும் தோற்றுப் போகிற

இயந்திர மனிதன் நான்.

இறால் போட்டு சுறா பிடிப்பவர்க்கிடையில்

அகப்பட்டதென்னவோ

தலைவிதிதான்.

எத்தனை நாளைக்குத் தானம்மா

சவாரி மாடென நிற்பது?

நுகத்தடி கண்டிய காயங்கள்

கழுத்தில் மாலை போல்.

ஊர் நினைப்பும் உற்றார் உறவினர் பற்றிய

துடிப்பும்/எப்போதாவது ஒரு நாள்

மண்ணுக்குத் திரும்பி வருகிறதான

கனவும் நினைவும்

நிழலாய்த் தொடரும் இரட்டை வாழ்க்கை.

குளத்து நீரில் தாமரை இலைபோல்

ஒட்டவும் முடியாது, வெட்டவும் முடியாது

தவிக்கிற மனது'' (பாலகணேசன்)

என்று கூறுகின்ற குரல் தான் இன்றைய புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரட்டை வாழ்வுக்கு பொதுமையான குரலாக ஆகிவிடுகின்றது. “இந்தத் தமிழர்கள் செய்யவேண்டிய பணிகள் பல உள்ளன. அவற்றுள் முதலாவது தமக்குப் பின் வரும் சந்ததியின் தமிழ்த்தன்மையை (அடையாளத்தை) உறுதிப்படுத்திக் கொள்வதாகும். யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் நோர்வேயிலும், கனடாவிலும் நாற்று நடவு செய்ய முனையாது அவ்வவ் நாடுகளின் பண்பாடுகளோடு எவ்வாறு இணைந்து கொள்வது என்பது பற்றிச் சிந்தித்து அடிப்படைத் தமிழ்ப் பிரக்ஞையை பேணிக் கையளிப்பதற்கான வழிமுறையை அறிவுபூர்வமாக மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் மொரிஷியசிலும் றெயூனியோவிலும் தமிழுக்கும், தமிழருக்கும் ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்.'' ("புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் அறைகூவல்' என்ற டாக்டர் க. இந்திரகுமரின் நூலுக்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் எழுதிய அணிந்துரையில்)

புகலிட இலக்கியமும் பண்பாடும் ஈழத்து நவீன கவிதையின் ஓட்டத்திற்கூடாகவே தடம் பதித்துச் செல்கின்ற புலம்பெயர் கவிதைகள் அதற்குள்ளேயே சில விலகலையும் நிகழ்த்தியிருக்கின்றன. அந்த விலகல் தமிழ்ப் பண்பாட்டால் பண்பட்ட மனங்களுக்கு கொஞ்சமும் பரிட்சயமில்லாத அந்நிய கலாசார வாழ்வுச் சூழலியே நிகழுகின்றது.

1. புதிய நிலவமைப்பு, அதற்கேற்ப இயற்கைச்சூழல்.

2. பல்கலாசார வாழ்வுப் பின்னணி.

3. மொழி வேறுபாடு.

4. வளர்ச்சியடைந்த சமூகம்.

என்பவற்றைக் கருத்திற் கொள்ளும்போது இவர்களின் படைப்புக்களையும் படைப்பு மனோபாவங்களையும் புரிந்து கொள்ள முடியும். இதுவே ஈழத்து தமிழ் இலக்கியச் சூழலில் அதிகமும் பேசப்படாத அந்நியம், தனிமை, நிறவாதம், பாலியற்பிரச்சனை என்பவற்றை பொருளாகக் கொண்ட கவிதைகள் அங்கிருந்து வெளிவருவதற்கும் காரணமாக அமைந்துள்ளன. இவை அடிப்படையில் அவர்களின் படைப்புக்களில் புதிய உணர்வு உள்வாங்கல்களுக்கு இடங்கொடுத்து வெளிப்படுவதைக் கண்டுகொள்ளலாம்.

எமது மரபின்படி "தனித்திருத்தல்' என்பது அதிகம் இல்லை. சங்க இலக்கியங்களும் கூட தலைவன் வேறு இடத்திற்கு தொழில் நிமிர்த்தம் சென்றாலும் குறிப்பிட்ட பருவ காலத்திற்கு இடையில் திரும்பி வருவேன் என்று வாக்குக் கொடுத்து விட்டே செல்கின்றான். பாலைநில ஒழுக்கமும் தலைவனுடன் தலைவி உடன்செல்லலையே குறிப்பிடுகின்றது. எமது மரபின்படி திருமணம் முடித்த பெண்; கணவன் வெளியூர் சென்றவிடத்து அவளின் தாய் தகப்பன் வீட்டில் தங்க வைக்கப்படுகின்றாள். ஆரம்பத்தில் இருந்த தாய்வழிச் சமூக அமைப்பும், கூட்டுக்குடும்ப அமைப்புக்களும் கூட எப்போதும் தனித்திருத்தலை விரும்பியனவாக இல்லை. கூட்டுக்குடும்பம் பின்னர் உடைந்து கருக்குடும்பமாகியபோதும், எமது உறவுமுறைகளும் தொடர்புகளும் பாரம்பரிய சடங்குகளிலும், விழாக்களிலும், நிகழ்வுகளிலும் தொடர்ந்து வாழ்ந்து வந்தன. தனிமை வாழ்வும் உலகமயமாக்கல் கலாசாரத்திற்கு உள்ளே அமிழ்ந்து போன நிலையில் தனிமனிதனின் உணர்வுகள் ஒரு பொருட்டாக கருதப்படவில்லை. எல்லாமே பிம்பங்களாகவும், மாயைகளாகவும் மாறிப்போய் விடுகின்ற நிலையிலே மனிதனுக்கு அப்பாற்பட்ட சடப்பொருட்களும் உள் உணர்வுகளும் கவிதையாவதைக் கண்டுகொள்ளலாம்.

புகலிட இலக்கியமும் பண்பாடும் இன்றைய உலகமயமாக்கல் இதனை இன்னமும் வேகமாக்கியிருக்கின்றது.  உலகமயமாக்கல் "கலாசாரத்தை' பண்டமாகவும் பொருளாகவும் பார்க்கத் தொடங்கி விட்டதால் மனித உறவுகளும் உணர்வுகளும் பின்தள்ளப்பட்டு எல்லாமே இலாப நட்டக் கணக்காகி விடுகின்றன. இந்த கலாசாரத்துள் சிக்குண்டு போனமையைத்தான் இந்த புலம்பெயர் படைப்புக்களில் உள்ளடங்கியுள்ள சில கவிதைகள் எமக்குக் காட்டுகின்றன.

புலம்பெயர்ந்தோரின் சிறுகதைகளில் பண்பாடு புலம்பெயர் கவிதைகளை விடவும் சிறுகதைகளில் தமிழர்தம் பண்பாட்டுப் பெறுமானத்தை மேலும் இலகுவாக அறிந்து கொள்ளமுடியும். புகலிடச் சூழலை மையப்படுத்திய தேர்ந்தெடுத்த சிறுகதைகளிலிருந்து இதனை ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டலாம். பண்பாட்டைப் பிரதிபளிக்கும் தனித் தொகுப்பு என்று அல்லாமல் அச்சூழலிலிருந்து எழுகின்ற படைப்பாளிகளின் சில கதைகளாவது இதனை வெளிப்படுத்தத் தவறுதில்லை.

வழிவழியாக எமது மூத்த தலைமுறைகள் மண்ணில் கைக்கொண்ட மரபுகள் பழக்கவழக்கங்களை கைவிட முடியாத நிலையும், அந்நிய கலாசாரத்துக்குள் தம்மை உடனடியாக மாற்றிக்கொள்ள முடியாத நிலையும் இங்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு ஏற்படுகிறது. இளைஞர் யுவதிகளாக சென்றோர் இரண்டு கலாசாரத்துக்குள்ளும் ஒத்துப்போகவேண்டியோராய் உள்ளனர். புதிய தலைமுறைகள் பிறப்பால் தமிழராக இருந்தாலும் அவர்களின் மொழி பழக்கவழக்கம் அந்தந்த நாட்டு கலாசாரத்திற்கு உட்பட்டதாகவே அமைந்து விடும் நிலை ஏற்படுகிறது. இது குறிப்பாக இளைஞர் யுவதிகளின் செயற்பாடுகள் பெற்றோருக்கு பலவித நெருக்கடிகளை தோற்றுவித்து விடுகின்றது.

“அங்கு ஏற்படுகிற சமூக, உளவியல் மாற்றங்களால் எங்களுடைய ஆடைமுறைமை மாறுகிறது. வாழ்க்கை முறைமை மாறுகிறது. அங்குள்ள சீதோசன நிலைகளால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். அங்குள்ள பாடசாலைகளில் கல்வி கற்கப்போகின்ற பிள்ளைகள் பிற பண்பாடுகளுக்கு பரிச்சயமாகி விடுகிறார்கள். அவர்கள் மற்றைய பண்பாடுகளின் அம்சங்களை நன்கு அறிந்தவர்களாக வருகிறார்கள். அந்தப்பண்பாட்டின் நியமங்கள் எங்கள் வீடுகளுக்குள் வருகிறது. இதனால் இரு வேறுபட்ட மனோநிலை வீடுகளில் ஏற்படுகிறது. பெற்றோர்கள் சடங்குகளை தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டவர்களாகவும், பிள்ளைகள் அதை விரும்பாதவர்களாகவும் வளர்க்கப்படுகின்றனர். பெற்றோர்கள் இச்சடங்குகளை விரும்பக் காரணம் இந்தச் சடங்குகள்தான் அவர்களின் சமூக ஒருமைப்பாட்டிற்கான தளமாகும்'' (பேரா.கா.சிவத்தம்பி) என்ற கூற்று அங்கு வாழும் புதிய தலைமுறை பற்றி தெரிந்து கொள்ள உதவுகின்றது. மொழி புரியாமை மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது. உடையில் இருந்து உறவுமுறைகள் வரை வித்தியாசமான வாழ்வுச் சூழலாக உள்ளபோது பண்பாட்டு நெருக்கடிகள் தமிழரை முரண்பட வைக்கின்றது. சக்கரவர்த்தியின் "மனசு',அ. முத்துலிங்கத்தின் "கொம்புளானா', அளவெட்டி சிறிசுக்காந்தராசாவின் "மரபுகளும் உறவுகளும்' , கலைச்செல்வனின் "கூடுகளும்', ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் "அரங்கேற்றங்கள';, ரதியின் "நிறமில்லை' ஷோபாசக்தியின் "பகுத்தறிவு பெற்ற நாள், தனது மற்றது நான்காம் பிரஜை,' கோவிலூர் செல்வராஜனின் "புதிய தலைமுறை', ஆசி. கந்தராஜாவின் "ஒட்டுக்கன்றுகளின் காலம், முன்னிரவு மயக்கங்கள்', ஆகிய சிறுகதைகளை உதாரணமாகச் சுட்டலாம்.

பொ. கருணாகரமூர்த்தியின் சிறுகதைகளில் "ஒரு கிண்டர்கார்டன் குழந்தையின் ஆத்ம விசாரங்கள் , விண்ணின்று மீளினும் , வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படல்', ஆகிய கதைகளில் இந்தப் பண்பாட்டு நெருக்கீட்டை அறிந்து கொள்ளமுடிகின்றது. புலம்பெயர் தமிழர்களின் புதிய தலைமுறைகளுக்கு ஏற்படும் குழப்பங்களை ஒரு குழந்தையின் கேள்விகளிலும், தந்தையின் பதிலுக்கூடாகவும்,பொ. கருணாகரமூர்த்தி எடுத்துக் காட்டுகின்றார். கடவுள் நம்பிக்கையும், தத்துவமும் எமது அறிவார்ந்த செயற்பாடுகளுடன் ஒப்பிடப்படும் போது ஒன்றுக்கொன்று முரணாக அமைகின்றது. இது புதிய தலைமுறைக் குழந்தைகளின் மனங்களின் விசாரணையாக விரியும்போது விடைகூறமுடியாத நிலை தமிழ்ப்பண்பாட்டால் கட்டமைக்கப்பட்ட தலைமுறைகளுக்கு ஏற்படுகின்றது. ஜேர்மனியில் வாழும் ஒரு தமிழ் இளைஞன் தாய்லாந்துப் பெண் ஒருத்தியுடன் வாழ முற்படும்போது அவனுக்குள் ஏற்படும் முரண்பாடுகளை வெளிப்படுத்துவதோடு, அவனைச் சூழ்ந்த தமிழ்ச்சமூகத்தின் ஒதுக்குதலுக்கு அவன் ஆளாவதையும் "வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்' என்ற சிறுகதை சித்திரிக்கின்றது.

“சித்தார்த்தன் என்னைப் பாருங்கள் நல்ல தாம்பத்தியம் என்பது வெறும் மோகங்களாலோ செக்சினாலோ அமைந்து விடுவதில்லை. அங்கே ரசனைக்கலப்புகளும் கருத்துப் பரிமாற்றங்கள் இதெல்லாம் இருக்கவேணும். அப்போதுதான் அது சுவைபடும். எங்களுடைய வாழ்க்கையைப் பாருங்கள் குறைந்தபட்சம் எங்கள் சாப்பாட்டு ரசனையாவது ஒத்துப் போகின்றதாவென்று நான் கிராமத்தில் பிறந்து நாகரிகம் தெரியாமல் வாழ்ந்துவிட்ட ஒரு பட்டிக்காட்டுப் பெண். உங்கள் கவிதையிலும் இலக்கியத்திலும் தத்துவத்திலும் எனக்கு எக்காலத்திலும் ஈடுபாடு வரப் போவதேயில்லை. எனக்காக நீங்கள் உங்களின் எத்தனையோ உறவுகளையும் நண்பர்களையும் இழந்துவிட்டீர்கள். எதிர்காலம் பற்றி எனக்குத் தெரிகின்ற காட்சிகளையும் கோலங்களையும் இரண்டாவது மொழி ஒன்றில் எடுத்துச் சொல்ல எனக்குத் திறமை இல்லாமலிருப்பதற்கு வருந்துகிறேன். இது நானே எடுத்துக் கொண்ட தீர்க்கமான முடிவுதான்'' (வண்ணத்துப்பூச்சியுடன் வாழ முற்படுதல்) என்று கூறும் தாய்லாந்துப் பெண்; சில நாட்களிலேயே பிரிந்து சென்றுவிடுகிறாள். இதனூடாக வேற்றுநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து வாழ்தல் என்பது தமிழரைப் பொறுத்தவரையில் கடினம் என்பதே இக்கதையில் உணர்த்தப்படுகின்றது. இதுபோன்ற இளைஞர்களின் பிரச்சனைகளை உணர்த்தும் சிறுகதைகள் பல உள்ளன.

கலாமோகனின் அதிகமான சிறுகதைகள் பண்பாட்டு நெருக்கீட்டை ஐரோப்பிய கலாசாரப் பின்னணியில் மிக அருகருகாக வைத்துப் பார்க்கின்றன. இவரின் கதைகளில் தமிழ்ப்பண்பாட்டு ஒழுக்கவியல் மரபின் தகர்வை மிக நுண்மையாக அவதானிக்கமுடியும். தனிமை, இழப்பு, பாலியல் நெருக்கீடு, ஒழுக்கவியல் மரபின் தகர்வு அல்லது படிப்படியான வீழ்ச்சி என்பவற்றை இவரின் கதைகள் கூறுகின்றன. கலாமோகனின் "நிஷ்டை' தொகுப்பிலுள்ள "இரா,கனி, இழப்பு, ஈரம், தெரு,' மற்றும் உதிரியாக வெளிவந்த "புகார், பாம்பு, 20 ஈரோ', ஆகிய சிறுகதைகளையும் இதற்கு சான்றாக காட்டலாம். எம்.வேதசகாயகுமார் ஈழத்தமிழ்ச் சிறுகதைகள் என்ற நீண்டதொரு கட்டுரையில் கலாமோகனின் படைப்புப் பற்றிக் கூறும்போது

“ஈழத்தமிழ் ஒழுக்கவியல் மரபின் மீது கலாமோகனின் படைப்புலகம் நிகழ்த்தும் கலகங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். ஈழத்தமிழ் ஆண்களோடு உலகின் வெவ்வேறு இனப் பெண்கள் உடலுறவு கொள்ள இச்சை கொள்கின்றனர். தயக்கமின்றி இவர்களால் உடன்படவும் முடிகிறது. ஒழுக்கவியல் மரபின் தகர்வை, கலாசார இழப்பை இவை உறுதி செய்கின்றன. ஆனால் இச்சுதந்திரம் ஈழத்தமிழ்ப் பெண்களுக்கு இவர் படைப்புலகில் மறுக்கப்படுகின்றது. இவர்களும் ஒழுக்கநெறி பிறழலாம். ஆனால் ஈழத் தமிழ் ஆண்களோடுதான். இந்த இரட்டை நிலைப்பாடு இவர்கள் படைப்புலக நேர்மையைக் குறித்த ஐயங்களைத் தோற்றுவிக்கின்றன.'' (வேதசகாயகுமார்)

புகலிட இலக்கியமும் பண்பாடும் பலத்த விவாதங்களை ஏற்படுத்திய நா. கண்ணனின் "நெஞ்சு நிறைய' அரவிந் அப்பாத்துரையின் "அனுபவம் தனிமை' என்பவற்றை சாருநிவேதிதாவின் "உன்னத சங்கீதம்' கதையின் அருகருகாக வைத்துப் பார்க்கும்போதுதான் இந்த கலாசார நெருக்கீடு அல்லது ஒழுக்கவியல் மரபின் தகர்வு தொணீய வருகின்றது ஆனால் கலாமோகனும், ஷோபாசக்தியும் கருணாகரமூர்த்தியும் முன்வைக்கும் இந்நெருக்கீட்டை மேலே குறிப்பிட்ட மூவரின் படைப்புக்களுடனும் வைத்துப் பார்க்க முடியாது. ஆனால் கோட்பாட்டு ரீதியாக கருணாகரமூர்த்தியை தவிர்த்து மற்றவர்களின் படைப்புக்கள் ஒரே கோட்டில் வரக்கூடியவை. கல்வி கற்கும் மாணவர்களின் நிலையோ வேறாக இருக்கிறது.

தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு இடையிலான அவர்களின் புரிந்துணர்வில் தமிழ்  பிரெஞ்சு கலாசாரம் செல்வாக்குச் செலுத்துவதால்; முரண்பாடுகளுக்கு வழிவகுக்கின்றது. இதனை ரமேஸ் சிவரூபனின் "மலர்வு' என்ற சிறுகதையில் நோக்கும்போது, “எல்லாவற்றுக்கும் உச்சக் கட்டம்போல் அந்தச் சம்பவம் நடந்தது. அன்று வதனிக்கும் நீச்சல் வகுப்பு இருந்தது மாலையில் நான் அவர்கள் வீட்டிற்குப் போனபோது மிகவும் சோர்வாகக் கண்களெல்லாம் சிவந்து கட்டிலில் படுத்திருந்தாள். ஏன்? என்ன நடந்தது? எனக் கேட்டபோது, நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும்போது சக வகுப்பு மாணவனாகிய ஆப்பிரிக்க இளைஞனொருவன் என்னை நீருக்கடியில் அமிழ்த்தி கட்டிப்பிடித்தபடி நிறைய நேரம் வைத்திருந்தான். அதனால் மூச்சுத் திணறி களைத்து விட்டேன் என்றாள். எனக்குக் கோபம் வந்தது. இனிமேல் நீ நீச்சல் வகுப்பிற்குப் போகக் கூடாது. அந்த நாளில் மெடிக்கல் எடுத்துக் கொடுத்துவிடு என்றேன்.. ஏன் போகக்கூடாது? அவன் விளையாட்டாகத்தான் செய்தான். இது சாதாரணம். எல்லோரும் இப்படி அடிக்கடி விளையாடுவோம் என்றாள் வதனி. இல்லை இனிமேல் நீ போகவேண்டாம் என்றேன். அவன் என்னை என்ன கெடுத்தா விட்டான்? நீ இப்போதெல்லாம் என் மீது சந்தேகப்படுகிறாய். நீ ஒரு சந்தேகம் பிடித்த பிராணி. என்று கத்தினாள் வதனி. இது என் கோபத்தை அதிகரித்தது. நிதானமிழந்து அவள் கன்னத்தில் அடித்து விட்டேன். என்னை அடிக்க நீ பார் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை. உடனடியாக வெளியே போ இனிமேல் இந்த வீட்டுப் பக்கம் வராதே! எனப் பிரெஞ்சில் கத்தினாள் வதனி. எனக்கு வந்த கோபத்தில் அவளைத் தரக்குறைவாக ஏசிவிட்டு வெளியேறினேன். அவள் கொஞ்சம் தூரத்தில் இருந்தபோது அவளுக்கிருந்த உரிமைகளைப் பற்றிப் பேசிய நான் அவள் எனக்குரியவளாகப் போகிறாள் என்ற நிலை ஏற்பட்டு மிக அண்மைக்கு வந்தபோது சந்தேகம் கொண்ட சாதாரண மனிதனாகிப் போனதை தாமதமாகவே உணர்ந்து கொண்டேன்.'' (ரமேஷ் சிவரூபன்)

இந்தப்பண்பாட்டு நெருக்கடியை புரிந்து கொள்வதற்கு

1. இளைஞர்கள் தமிழர் அல்லாத பிற நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்தல்.

2. தாய் தந்தையரின் விருப்புக்கு மாறாக தமிழ் இளைஞர் யுவதிகள் பிறநாட்டு இளைஞர் யுவதிகளை நண்பர்களாக ஏற்றுக் கொள்ளல்.

3. பிறநாட்டுச் சூழலின் மத்தியில் அந்நாட்டுக் கலாசாரத்தையே கைக்கொள்ளல்.

ஆகிய நிலைமைகளின் ஊடாகவே இப் பண்பாட்டு நெருக்கடியை விளங்கிக் கொள்ளமுடியும். இது திருமணம் நட்பு உறவு என்பவற்றுள் ஏற்படும் பண்பாட்டு மாற்றம் என்பதற்கு மட்டும் பொருந்தக் கூடியது. ஷோபாசக்தியின் "ரவுடி ரதி' என்ற சிறுகதையில் முற்றிலும் பிரெஞ்சு கலாசாரத்துக்குள் மாறிவிட்ட யுவதி ஒருவரின் நடத்தைக் கோலங்கள் பெற்றோருக்கு பெரும் பிரச்சனையாகத் தோன்றுவதும் எடுத்துக் காட்டப்படுகிறது. இதேபோல் “தாங்கள் ஒழுக்கந் தவறி நடந்து கொண்டே தங்கள் சமூகப் பெண்பாலரிடம் தமிழ்ப் பண்பாட்டை கட்டிக் காக்க விழையும் ஆண் வர்க்கத்தினரின் முகத்திரைகளை ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் அரங்கேற்றங்கள் சந்திராதேவியின் கலாசாரங்கள் ஆகிய கதைகள் கிழித்தெறிகின்றன.'' (கலாநிதி நா.சுப்பிரமணியம்)

மனைவி பிள்ளைகளை ஈழத்தில் விட்டுவிட்டு வந்திருக்கும் ஒரு ஆணுக்கு அந்நிய நாட்டுப் பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு உடலுறவு வரை செல்ல முனையும்போது, “வாயை மூடு அஞ்ஜெலா. நான்காண்டுகளுக்கு மேலாக என் ஸ்பரிசம் இன்றி எனது உடல் சுகம் கிட்டாமல் துப்பாக்கி வேட்டுக்களுக்கும் செல் அடிகளுக்கும் பயந்து கொண்டு என் மனைவி என் செல்வங்களுடன் உயிரைப் பாதுகாக்க அங்கே போராடிக் கொண்டிருக்கிறாள். உனது வாதம் வேண்டுகோள் நியாயமாகப் பட்டால் என் மனைவியும் அங்கே இந்த சுகத்திற்காக உன்னைப்போல் ஒருவனைத் தேடிப்போயிருக்கலாம்'' (முருகபூபதி) என்று லெ.முருகபூபதி "மழை' சிறுகதையில் எழுதுவது, ஒருவகையில் புலம்பெயர்ந்த மண்ணில் பாலியல் ரீதியான தவறிழைத்தல்களை எடுத்துக்காட்டவும், மறுபுறத்தில் அவர்களை சாணீயான பாதையில் நெறிப்படுத்தலுக்காகவும் என்று கூறலாம். கருணாகரமூர்த்தியின் "வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படல், சுண்டெலி, கலைஞன், தரையில் ஒரு நட்சத்திரம், ஆகிய சிறுகதைகளும், பார்த்திபனின் "ஐம்பது டொலர்ப் பெண்ணே, தெரிய வராதது, இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' ஆகிய சிறுகதைகளிலும் இந்த உலகளாவிய மானிய நேயம் படைப்புக்களில் ஒன்றுபடுவதைக் கண்டுகொள்ளலாம்.

பார்த்திபனையும் கருணாகரமூர்த்தியையும் பொறுத்தவரையில்

1. புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களின் செயற்பாடுகள்.

2. அந்நிய கலாசார சூழலில் தமிழ்ப்பண்பாட்டு மனம் எதிர்கொள்ளும் மானிட அவலங்கள்.

3. பெண்கள் எதிர்கொள்ளும் உடல் உள சிதைவுகள்

ஆகியவற்றை தமது கதைகளில் வெளிப்படுத்துகின்றனர். மிகுந்த துயருடனும் கழிவிரக்கத்துடனும் வாசக மனங்களில் இரண்டு படைப்பாளிகளும் ஏற்றியும் விடுகின்றனர். நடுவானில் விமானம் வெடித்துச் சிதறியபோது யாருக்கும் தொணீயாது செத்துப்போன பாலுவும், கேட்ட காசு கொடுக்காததால் ஏதோ ஒரு நாட்டில் தெருவில் விட்டுவிட்டு வந்தபோது செத்துப் போன புனிதாவும், பார்த்திபனின் கதைகளில் இந்த நூற்றாண்டை உலுக்கி விடக்கூடிய துயரக்கதைகளின் பட்டியலில் சேரக்கூடியவர்கள். ஆனால் பார்த்திபனிடத்தில் வெளிப்படும் துயர் கவிந்த கதைகள் கருணாகரமூர்த்தியிடம் மிக அடங்கிய குரலில் வெளிப்படுவதனையும் கண்டு கொள்ளலாம்.

இன்றைய புலம்பெயர்ந்த இளைஞர்களின், புலம்பெயர்ந்தவர்களின் உண்மையான முகத்தைக் காட்டக்கூடிய கதைகளாக அவை இருக்கின்றன. புலம்பெயர் வாழ்பனுபவத்தினூடாக சில முக்கியமான படைப்புக்களைத் தருபவர்களில் அடுத்து குறிப்பிட வேண்டியவர்கள் கலாமோகனும், ஷோபாசக்தியும். இருவரிடமும் கதை, கதைமொழி, கதைக்குரிய வடிவம் என்பவற்றில் அதிக ஒற்றுமை காணக் கிடைக்கின்றது.

1. நவீன எழுத்து வடிவம் சார்ந்த பிரக்ஞை.

2. தமிழர் ஒழுக்கவியல் மரபின் சரிவுகளை படைப்பில் கொண்டு வருதல்.

தமிழ்ப் பண்பாட்டால் கட்டமைக்கப்பட்ட மாந்தர்களின் ஒழுக்கவியல் மரபினை உலுக்கிவிடக்கூடியவையே இவரது சிறுகதைகள். ஆண்பெண் உறவுநிலை குறித்தும், சமூகத்தில் மறைந்திருக்கும் பிறழ்வான நடத்தைகள் குறித்தும் இவரின் கதைகள் கேள்வி எழுப்புகின்றன. அவற்றை எந்தவித விமர்சனமுமின்றி பூடகமுமின்றி சமூகத்தின் முன் வைக்கும் கலாமோகன்  பலத்த விவாதங்களுக்குரிய களங்களையும் தோற்றுவித்திருக்கின்றார்.

இவரின் "கனி' என்ற கதை தமிழ்நாட்டில் மிகுந்த விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட கதை. "ஈரம், கனி, இழப்பு, 20 ஈரோ, ஆகிய கதைகளை இவ்வாறு குறிப்பிடலாம்.

"ஜெயந்தீசன் கதைகள்' தொகுப்பில் சமூகத்தின் மீது கலாமோகன் வைக்கும் குற்றச்சாட்டுகள் பல. போலி, ஆடம்பரம், சாதி சீதனம், கண்மூடித்தனமான மரபுப் பேணுகை என்பவற்றை ஜனரஞ்சக ஊடகத்திற்குரிய மொழி நடையில் முன்வைக்கின்றார். தமிழரின் தற்கால வாழ்வின் மீதான கேள்வியாக அமையும் இக்கதைகள் புலம்பெயர் படைப்புலகில் இன்னொரு தளத்தில் முக்கியமானவை. ஏற்கனவே கலாமோகனுடன் ஒப்பிட்டவாறு தமிழ்ப்பண்பாட்டின் சரிவுகளை வெளிப்படு;த்தும் பல கதைகள் ஷோபாசக்தியிடமும் உள்ளமை உள்ளார்ந்து நோக்கும்போது புலப்படும். "பகுத்தறிவு பெற்ற நாள், பத்துக் கட்டளைகள், காய்தல்' ஆகியன இவ்வகையில் ஆய்வுக்குரியன.

முதல்முதலில் "பயண இடைவெளியில்' பெண் உடலும் உளமும் சிதைக்கப்படல் மிகத் தாமதமாகவே புலம்பெயர் படைப்புலகில் வெளிப்படுகிறது. அந்த வெளிப்பாடுகளில் மூன்று கதைகள் மாத்திரம் இதுவரை கிடைத்துள்ளன. ஒன்று ஷோபாசக்தியின் "தனது மற்றது நான்காம் பிரஜை' ஏனையவற்றுள் சுமதிரூபனின் "யாதுமாகி நின்றாள்' பார்த்திபனின் "வந்தவள் வராமல் வந்தாள்' ஆகியவை. இந்த அனுபவம் முதல் முதலில் இவர்களிடமே பதிவாகின்றது.

புகலிட இலக்கியமும் பண்பாடும் புலம்பெயர்ந்த தமிழரின் வாழ்க்கை இன்று பல்வேறுவிதமான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. அது மொழியிலும், குடும்ப உறவுநிலைகளிலும், இனம் சார்ந்த மரபுவழிப்பட்ட பேணுகையிலும் பலத்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆனாலும் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் (கனடா  ரொரன்ரோ) தமிழர்கள் குவிந்து வாழ்கின்ற சூழல் இன்று ஏற்பட்டிருப்பதனால் மொரீசியஸில் தமிழுக்கும் தமிழ்ப்பண்பாட்டுக்கும் நேர்ந்த அவலம் போல அச்சப்படவேண்டிய அவசியம் இப்போது இல்லை. சில தலைமுறைகளுக்குப் பின்னர் தமிழ்ப்பண்பாடு அதன் அடையாளமாகப் பேணுவது தொடரக்கூடும். அது தமிழ் மொழியினூடாக அல்லாத அந்தந்த நாட்டு மொழி உணர்வுக்கூடாகவே தொடர வாய்ப்புண்டு. இந்த நிலையில் எமது அடையாளத்தைப் பல விதத்திலும் கட்டிக்காக்க வேண்டிய தேவை தாய்ச்சமூகத்திற்கும் புலம்பெயர்ந்த சமூகத்திற்கும் பொறுப்பான கடமைகளாகவுள்ளன. இதனை இலக்கியத்திற்கு ஊடாக மட்டுமன்றி சமூகவியல் மொழியில் பண்பாட்டு ஆய்வுகளினூடாகவும் நோக்கினால் மேலும் பல உண்மைகள் வெளிவர இடமுண்டு. (இலங்கை திருகோணமலையில் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் காணி காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய தமிழ் இலக்கிய விழா 2010 ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

துணை நூல்கள்

1. பக்தவத்சலபாரதி ; 1999, பண்பாட்டு மானிடவியல், சென்னை, மணிவாசகர் பதிப்பகம்.

2. சிவத்தம்பி கா. பேராசிரியர் ;1988, தமிழ்ப்பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பும் நவீனவாக்கமும். கொழும்பு.

3. நித்தியானந்தம். வி கலாநிதி ;2002, புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழனின் பண்பாட்டுத் தனித்துவம் சில அவதானிப்புகள், கொழும்பு தமிழ்ச் சங்கம்.

4. குணேஸ்வரன். சு : 2006, “இருபதாம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை புனைகதைகள் பற்றிய ஆய்வு'' (பதிப்பிக்கப்படாத முதுதத்துவமாணி ஆய்வேடு) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உயர்பட்டப் படிப்புகள் பீடம்.

5. புலம்பெயர்ந்தோர் கவிதைகள் (தேர்ந்தெடுத்தவை)

6. புலம்பெயர்ந்தோர் சிறுகதைகள் (தேந்தெடுத்தவை)

Pin It

"எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று மகாகவி பாரதியார் பாடியதை உறுதி செய்வது போல் மலேசியாவில் ஆண்களோடு பெண்களும் அனைத்து துறைகளிலும் ஈடுபாடு கொண்டு முன்னேறி வருகிறார்கள்.

தமிழ் இலக்கியத் துறையிலும் பெண்களின் பங்களிப்பு கணிசமான அளவில் வளர்ச்சி கண்டே வந்துள்ளது எனலாம்.

இலக்கியத் துறையின் மீது நம் பெண்களுக்கு அதிக ஆர்வமும் அக்கறையும் இயல்பாகவே இருக்கின்றது.

படைப்பிலக்கியங்கள் அனைத்துமே மக்களின் நலன் கருதி நன்னோக்குடன் படைக்கப் படுதலே சிறப்பு என்பதைக் கருத்தில் கொண்டு பெண்கள் தங்கள் எழுத்தை மிகவும் சிரத்தையுடன் படைத்துள்ளனர்.

பெண்களின் எழுத்துத் துறை ஈடுபாடு அன்று தொட்டு இன்றும் இனி என்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்று பெண் படைப்பாளிகளின் சிந்தனைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை இலக்கிய வடிவங்களின் வழியாக அறிய முடிகின்றது.

இது பெண்ணிய இலக்கிய சிந்தனையின் மலர்ச்சிக் காலம் என்றும் சொல்லலாம்.

மலேசியாவில் 100 ஆண்டுகளுக்கு முன்னரே படைப்பிலக்கியம் தோன்றியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சிறுகதை கட்டுரை, கவிதை, நாவல், நாடகம் போன்ற இலக்கியப் பிரிவுகள் மலேசிய மண்ணில் ஆர்வமுடன் படைக்கப் பட்டு வந்தாலும் சிறுகதை இலக்கியமே ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி வளர்ந்துள்ளதாகப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவைப் பொறுத்தவரை பெண்களில் பலர் பெரும்பாலும் சிறுகதை எழுத்தாளர்களாகவே அறியப் படுகின்றனர்.  எனினும், மற்ற இலக்கியப் பிரிவுகளிலும் தடம் பதித்துள்ளனர்.

மலேசியத் தமிழ் இலக்கியத்தின் புதிய தொடக்கம் 1946க்கும் பின்னரே என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

1950ஆம் ஆண்டு வாக்கில் தமிழ் நேசன் ஞாயிறு பதிப்பில் கதை வகுப்பு நடத்தத் தொடங்கி, சு.நாராயணனும், பைரோஜி நாராயணனும் எழுத்தார்வம் உள்ளோர்க்குக் கதை, கவிதை, உரை நடை, நாடகம் போன்ற பல்வேறு துறைகளிலும் பயிற்சி அளித்துள்ளனர்.

பயிற்சிக்குப் பின்னர் தேர்வு செய்யப் பட்ட எழுத்தாளர்களில் ஆறு பெண்களும் இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அதன் பின்னர் நடை பெற்று வந்த சிறுகதை எழுதும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களில் திருமதி கு.நா.மீனாட்சி, மு.தனபாக்கியம், கமலச்செல்வி இ.மேரி என்ற உஷா நாயர் ஆகியோரும் இருந்தனர்.

இவர்களில் திருமதி உஷா நாயர் கவிதைத் துறையில் புகழ் பெற்று விளங்கியவர்; தமிழ்மணி பட்டம் பெற்றவர்; மரபுக்கவிதைகள் எழுதியவர்;  இலக்கிய நிகழ்ச்சிகளில் தலைமையேற்று வழி நடத்தியுள்ளார்;  செந்தமிழில் சிறப்புற பேசும் ஆற்றல் கொண்ட தமிழாசிரியர் திருமதி உஷா என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தேசிய விடுதலை, நாட்டுப் பற்று, மொழிப் பற்று மற்றும் நன்னெறிக் கோட்பாடுகள் போன்ற கருப் பொருள்களை மரபுக் கவிதைகளில் பாடியவர். சுமார் 30 ஆண்டு காலம் சோர்வின்றி இலக்கியப் பணியைச் செம்மையாகச் செய்துவிட்டு மறைந்தவர்; இன்றும் இலக்கிய உலகில் பேசப்பட்டு வருபவர்; மறையாது நிலைத்திருப்பவர் திருமதி உஷா நாயர்.

தொடர்ந்து எழுதி வந்தவரான திருமதி கமலாட்சி ஆறுமுகம், கதை, கட்டுரை, நாவல், வானொலி நாடகம் போன்ற படைப்புகளின் மூலம் பிரபலமானவர். அரசியலிலும், சமூகப் பணிகளிலும் ஈடுபட்டவர் இரு நூல்களை வெளியிட்டு தனது இலக்கியப் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளார்.

அடுத்த காலக்கட்டத்தில் வந்த பெண்களில் பலரும் சிறுகதையோடு, கட்டுரை, கவிதை, குறுநாவல், நாவல், வானொலி, நாடகங்கள், சிறுவர் இலக்கியம், தொடர் கதைகள் போன்ற பல்வேறு பிரிவுகளிலும் தங்களின் படைப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது இளம் எழுத்தாளர்கள் புதுக் கவிதை எனும் உரைவீச்சில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்று களஞ்சியம் படைத்துள்ள இலக்கியக் குரிசில் மா. இராமையா அவர்கள் இலக்கியத் துறையில் பங்காற்றியுள்ள சில பெண் படைப்பாளர்களை வரிசையிட்டு காட்டியுள்ளார்.  எனினும், அவர்களில் பலர் எழுத்துத் துறையினின்றும் விலகியுள்ளனர்.  

நம் பெண்களில் பலர் தொடர்ந்து எழுதாமைக்குப் பல காரணங்களைக் கூறலாம்.  இலக்கிய அரும்புகள் ஆய்வு நூலைப் படைத்திருக்கும் முனைவர் இலக்குமி மீனாட்சி சுந்தரம் அவர்கள் எடுத்துக் கூறியிருக்கும் காரணங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.

பெண்கள் திருமணத்துக்குப் பின்னர், எழுத்துலகையே மறக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துவிடுகின்றது.

மலேசிய இலக்கியத் துறை பத்திரிகைகளை நம்பியே இருக்கிறது.  ஆனால், எழுத்தாளர்களுக்கு போதுமான ஊக்கத் தொகை அளிக்கப்படுவதில்லை. எழுத்தாளர்களின் எழுத்துப் படிவங்கள் நூல்களாக வெளியிடப் படுவது மிகவும் அரிது; நூல்களை வாங்கிப் படிப்பவர்களும் குறைவு.

அதனால், எழுதுபவர்களின் ஊக்கம் குறைகிறது; எழுதும் ஆர்வமும் தடைபட்டுப் போகின்றது.

மேலே குறிப்பிடப் பட்டவாறு சிக்கல்கள் பல நிறைந்த இக்கட்டான சூழ்நிலையில் ஓரிருவரே எதிர்நீச்சலுடன் தொடர்ந்து எழுதி வந்துள்ளனர் என்கிறார் முனைவர் இலக்குமி.

அவர் சொல்லும் கருத்துகளும் ஏற்புடையதே!  நான் எழுதிய நூற்றுக்கணக்கான கதைகளும், தொடர்களும், சிறுவர் இலக்கியமும் நூல் வடிவம் பெறாமையால் அடையாளம் இன்றி மறைந்து போயின.

எழுதத் தொடங்கி 28 ஆண்டுகளுக்குப் பின்னரே என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான "தாய்மைக்கு ஒரு தவம்' நூலை வெளியிடும் துணிவு பிறந்தது; அதுவே இன்றும் என்னை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது.

ஆர்வமுடன் எழுதத் தொடங்கும் பெண்கள் மின்னல் வேகத்தில் மறைந்து போவதற்கு உயர்கல்வி மொழி அறிவு ஆழமான இலக்கிய இலக்கணம் கிட்டாமல் போயிருப்பதும் தடையாகியிருக்கலாம்.

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு ஏழாம் ஆண்டுவரை தமிழில் கற்கும் வாய்ப்பு இருந்தது. பெண்கள் தங்களுக்கு கிட்டிய ஆரம்ப பள்ளியின் மொழி அறிவைக் கொண்டு வாசிக்கும் பழக்கத்தை, கதைப் புத்தகங்கள் வழியே வளர்த்துக் கொண்டனர். அதுவும் சில பெண்களுக்குத்தான் அவ்வித வாய்ப்பும் வசதியும் கிடைத்தது எனலாம்.

பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நாளிதழ்கள், வார,மாத இதழ்களை வாசிப்பதுதான் விருப்பமான பொழுது போக்காக இருந்தது. அதன் வழி மொழியறிவை வளர்த்து கொள்ளவும் முடிந்தது.

இப்படி வாசிக்கும் பழக்கமே அவர்களை இலக்கியத் துறையின் பால் ஈடுபாடு கொள்ளச் செய்கிறது. தங்களுக்குக் கிட்டிய மொழியறிவைக் கொண்டு எழுதும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு எழுதத் தொடங்கி, இலக்கியப் பணியாற்றியவர்கள் சிலர்.

உயர்கல்வி கிட்டாத நிலையில் ஆர்வத்தூண்டலால் எழுத வருபவர்களுக்கு வழிகாட்டலோ வாய்ப்புக்களோ இன்றிச் சோர்வடைந்து முடங்கிப் போவதும் உண்டு.  தமிழாசிரியர்களாகப் பயிற்சி பெற்ற வெகுசிலர் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.

இது தொடக்கக் கால நிலை.!

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு

இன்று பெண்களுக்கு உயர்கல்வி பெறும் வாய்ப்பும் வளமும் பெருகியுள்ளதால், தொடர்ந்து எழுதவும் நூல் வெளியீடு செய்யவும் ஓரளவு இயல்கின்றது எனினும், அதிக அளவில் நூல் வெளியீடு காணவில்லை என்பதும் கவலை தரும் நிலையே.

பல சிரமங்களுக்கிடையே ஆர்வமுடன் எழுதும் பெண்களின் இலக்கியப் பணி அடையாளமின்றி மறைந்து போய்க் கொண்டிருக்கிறது.

சமூக அமைப்புகள் மற்றும் மொழித்துறை சார்ந்தவர்கள் ஆலோசனைகள் கூறி ஆவன செய்தால் நம்மொழிக்கு ஆற்றிய பணியாகும்.

தற்போது சில பெண்கள் தங்களின் படைப்புகளை நூல் வடிவில் கொண்டு வருவதில் அக்கறை  கொண்டுள்ளனர்.  ஆனாலும், அவை வாசகர்களைச் சென்றடையவதாகத் தெரியவில்லை. விமர்சனம் செய்பவர்கள் கூட அவற்றை தேடி எடுத்துக் குறிப்பிடுவது இல்லை.  அத்தகையதொரு அலட்சியம் நிலவுகிறது இங்கே.

இரண்டாவது காலக் கட்டமாக குறிப்பிடப்படும் 1956முதல் 196670 வரையிலான காலத்தில்தான் பல பெண் படைப்பாளர்கள் உருவாகி வந்துள்ளனர். தரமான படைப்புகள் மூலம் நிலையான இடத்தையும் பிடித்துள்ளனர். அவர்களின் பெயர்களே இன்றும் நினைவில் நிற்கின்றன எனலாம்.

சிலர் சோர்வின்றி இன்றுவரை எழுதிக் கொண்டு வருகின்றனர்; சிலர் காலப் போக்கில் எழுத்துலகில் இருந்து காணாமல் போய்விட்டனர்.

1956  தொடக்கம், ஈடுபட்டவர்களில் சிலர், திருமதி அன்னலெட்சுமி மயில்வாகனம், அன்னக்கிளி ராசையா, திருமதி பரணி, சரஸ்வதி அரிகிருஷ்ணன் போன்றவர்களை குறிப்பிடலாம்.

1957இல் தொடங்கிய ந.மகேசுவரி. அவரைத் தொடர்ந்து வந்தவர்களில் திருமதி துளசி, இராஜம் கண்ணன், நா.மு.தேவி, நேசமணி, அமிர்தவல்லி இராக்கம்மாள், வி.விஜயா, வில்வமலர், வருணா ரகுநாதன், சரஸ்வதி அருணாசலம், தீனரட்சகி, தா.ஆரியமாலா, பாவை, பாக்கியம், நிர்மலா ராகவன், சாரதா கண்ணன், எலிஸெபத், சு.இந்திராணி, ஜனகா சுந்தரம், இ.தெய்வானை, த.மு.அன்னமேரி, வளர்மதி, பத்மாதேவி, வேலுமதி, மல்லிகா சின்னப்பன் போன்றோரை குறிப்பிடலாம்.

இவர்களில் சிலர் மறைந்து விட்டனர். பாவை, மகேசுவரி, பாக்கியம், நிர்மலா போன்ற சிலர் இன்னும் எழுதி வருகின்றனர்.

மூன்றாவது காலக் கட்டத்தில் வந்தவர்கள் வே.இராஜேஸ்வரி, கி.அஞ்சலை, கண்மணி, சுந்தரம்பாள், சுபத்திராதேவி, வே.நீலவேணி, சந்திரா சூரியா, என்.ஜெயலட்சுமி, கல்யாணி வேலு, கமலாதேவி, வீ.சுமதி, ஜீ.ராஜகுமாரி, பூங்காவனம் ஜெகநாதன், தேவிநாதன் சோமசன்மா, சி.வெண்ணிலா, ருக்மணி முத்துக்கிருஷ்ணன், சரஸ்வதி பாண்டியன், மு.பத்மாவதி, உமையாள் பார்வதி, அம்மணி ஐயாவு, ஆரியமாலா குணசுந்தரம், கெஜலட்சுமி, கோ.பராசக்தி போன்றவர்கள்.

1980ஆம் ஆண்டுகளில் எழுதத் தொடங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் திருமதி கமலா, ஆதிலட்சுமி, கோமகள், நிர்மலா பெருமாள், எஸ்.பி.பாமா, பத்மினி, கல்யாணி மணியம், சுந்தரி பொன்னையா, துளசி அண்ணாமலை, மங்களகௌரி, ருக்மணி, லோகா, வாணி ஜெயம், இன்னும் சிலர்.

மேலே கூறியவர்களில் வெகு சிலரே தொடர்ந்து எழுதி வருகின்றனர். சிலர் அவ்வப் போது எழுதுவர். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும், சில சமூக அமைப்புக்களும், மன்றங்களும் எழுதும் பெண்களை பாராட்டி பொன்னாடை அணிவித்து பொற்பதக்கம் அளித்தும் கேடயம் வழங்கியும் சிறப்பித்துள்ளன என்பது பெண்களின் இலக்கியப் பங்களிப்புக்குச் சான்றாகும்.

ஆனால், வருத்தம் தரக்கூடிய செயல் யாதெனில், பெண் படைப்பாளர்களைச் சக எழுத்தாளர்களோ, விமர்சனம் செய்பவர்களோ ஆய்வு செய்பவர்களோ நினைவில் வைத்துக் கொள்வதில்லை என்பதுதான். இலக்கியத் துறையிலும் சிலரின் ஆதிக்கம்.  அதுமட்டுமன்று, இவர்களின் படைப்புகள் நூல் வடிவம் பெறாமல் மறைந்து போகின்றன.  மற்றொரு காரணம் இவர்கள் இலக்கியப் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. வெளி உலகத் தொடர்புகள் இல்லை; யாரையும் சந்திப்பதுவுமில்லை.

ஒரு குறிப்புக்காக சட்டென நினைவுக்கு வர வேண்டிய பெண் இலக்கியவாதிகளை இங்கே தருவதன் மூலம் ஒரு சிலரையாவது கருத்தில் கொள்ள இயலுமே என்கிற ஆதங்கத்தில் சில பெயர்களை குறிப்பிட்டுள்ளேன்.

புதிதாகப் பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வரவேற்போம். வருங்காலத்தில் அவர்களையும் வரிசையில் இணைத்துக் கொள்வோம். நூற்றுக்கணக்கான கதைகளும் தொடர்களும் எழுதியவர்களின் பெயர்கள் கூட மறந்து விடுகின்றது. ஆனால், ஒரே ஒரு நூலை வெளியிட்டிருந்தால் பளிச்சென்று பெயர் நினைவுக்கு வருகின்றது. பெண்கள் இக்குறிப்பைக் கருத்தில் கொள்வார்களாக.  சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல் போட்டிகளில் பவுன் பரிசுகளும் முதல் பரிசுகளும் பெற்ற பெண்கள் பலரும் சிறப்பாக எழுதக் கூடியவர்களே.  அவர்களின் எழுத்தும் தரமானவை. இல்லையேல் தேசிய அளவில் அனுபவ முத்திரைப் பதித்துள்ள பிரபலங்களோடு போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருக்க இயலுமா?

"எட்டும் அறிவினில் இலக்கியத் துறையில் நாங்கள் இளைப்பில்லை காணென்று'

பெண்களும் இலக்கியத் துறையில் தங்களின் திறமையை நன்கு வெளிப்படுத்தியுள்ளனர். தங்கள் பங்களிப்பை நிறைவாகவே செய்து வந்துள்ளனர்.

ஆனால், பெண் படைப்பாளிகளின் இலக்கியப் பணிகள் அதிகம் பேசப்படுவதில்லை. அடையாளமின்றி அவை மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன.

நம் தமிழ்ப் பெண்களின் உலகம் குடும்பம் எனும் ஒரு வட்டத்துக்குள்ளே அடங்கியுள்ளது. குடும்பம், குழந்தைகள், வீட்டுக் கடமைகள் என்று ஓர் எல்லைக்குள்ளே அடங்கியுள்ளது. பண்பாட்டுக் கூறுகள் என்கிற கட்டுப் பாட்டு வேலிகள் அவர்களை முடக்கிவிடுகின்றது.  வெளியில் பணிபுரியச் சென்றாலும் வெளியுலகத் தொடர்புகள் அதிகமிருக்காது.

அனுபவங்களைத் தானே கற்பனையுடன் கலந்து கலை நயத்துடன் வெளிப்படுத்தலாம். தனி மனித அகவெழுச்சிதானே இலக்கியமாகிறது. அவ்வகையில் தங்களின் அனுபவங்களை எழுத்துக்களின் வழி படைப்புகளாகக் கொண்டு வருகின்றனர். பெண்களின் புனைவுகளில் யதார்த்தமும், நேர்மையும் பண்பாட்டுக் கூறுகளும் மொழித் தூய்மையும் சிறப்பாகவே வெளிப்படுகின்றன.

பெண்களின் மன உணர்வுகளை எழுத்தில் வடிக்கின்றனர். பெண்களின் எழுத்துக்களில் ஆபாசமோ, அத்துமீறல்களோ பண்பாட்டுக்குப் புறம்பானவையோ வடிவமைக்கப் படுவதில்லை. கிளர்ச்சி வேட்கை, வலி போன்ற அகவுணர்வுகளை மலேசியத் தமிழ்ப் பெண்கள் இன்னும் பேசவில்லை. பெண்களுக்கே உரிய மனப்படிமங்களை எழுத்தில் வெளிப்படுத்தவே விரும்புகின்றனர்.

பெண் எழுத்தாளர்களின் அகப்பொருள் கதைகளில் பொதுவாகத் தான் காணமுடிகின்றது.  பெண்ணின் துயரங்கள், எதிர்பார்ப்புகள், கனவுகள் பெண்ணுக்காகப் பரிந்து பேசும் குரல்களைத் தான் அதிகம் காணமுடிகிறது.

இதுவரை பெண்ணுடல் அந்தரங்கப் பிரச்சனைகள் தொட்டு இங்கு யாரும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. பெண்கள் தாங்கள் நினைத்ததை எல்லாம் முழுமையாக வெளிப்படையாக பேசுவதில்லை.  அச்சம், மடம் நாணம் பயிர்ப்பு எனும் கட்டுப் பாடுகள் பெண்களுக்கு மட்டுந்தானே!

பெண்களுக்கு எல்லாவற்றிலுமே எல்லையை குறுக்கிவைத்துள்ளதால் போதுமான அனுபவங்கள் கிடைப்பதில்லை. தங்களின் மென்மையான உணர்வுகளின் மூலமே கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர்.

புதிய பார்வைகள் புதிய தேடல்கள், புதிய கோணங்களில் மலேசியாவில் பெண்களின் எழுத்துகள் இன்னும் அழுத்தமாகப் பதிவாகவில்லை என்று நினைக்கின்றேன். இரண்டொருவர் மேலோட்டமாகவே தொட்டுப் பேசியுள்ளனர்.

முரண்பாடுகளில்  பாக்கியம், ஞானப்பூக்கள்  பாவை, தீ மலர்  கமலா, ஆறாவது காப்பியம்  வே.இராஜேஸ்வரி இவர்களிடமிருந்து தீப்பொறி கிளம்பியுள்ளது. ஆதிலட்சுமி, நிர்மலா ராகவன், நிர்மலா பெருமாள் போன்றவர்களிடமிருந்து சமூகப் பிரச்னைகளும் பார்வையும் வெளிப்படுகின்றன.

இலக்கியம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, சமூக மலர்ச்சிக்குரிய கருவி.  சமூக மாற்றத்தின் உச்சக்கட்ட எழுச்சியாக இலக்கியம் திகழ்கிறது. மக்களுக்கான இலக்கியம் தேவை என்பதைப் புரிந்து கொண்டுதான் பெண்கள் தங்கள் பங்களிப்பைச் செய்கின்றனர்.

அதைப் புரிந்து கொள்ளாமல் சிலர், பெண்கள் குடும்பக் கதைகளையும் பெண்களைப் பற்றியுமே எழுதுவதாகக் குறை கூறுகின்றனர். பெண்கள் படித்திருந்தாலும் பணி புரிந்தாலும் தங்களின் குடும்பத்திற்காகவே சேவை செய்கிறார்கள். குடும்பத்தையும் பெண்ணையும் பிரித்துப் பார்க்கவா முடியும்?

கருப்பொருள் அடிப்படையில் கதைகள் குடும்பச் சூழலில் அமைந்தாலும் தங்களின் நுட்பமான பார்வை மூலம் பல கோணங்களில் சமுதாயத்திற்குப் பல படிப்பினைகளை வழங்குகின்றனர். அதீதமான கற்பனைகளை அள்ளி வீசாமல் நம்பகத் தன்மையோடு கதை சொல்ல முடிகின்றது. நேரடியாகச் சமுதாயத்தை நோக்கிச் செல்லாவிடினும் குடும்பத்தின் மூலம் பல சிக்கல்களைத் தீர்க்க முடியும். தெளிவு பெறவும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் உதவுமன்றோ?

மேலோட்டமாக நுனிப்புல் மேய்வது போல படித்தால் பயன் தெரியாதுதான். குடும்பமும் சமுதாயத்தின் ஓர் அங்கம்தான் என்பதை உணர்ந்தால் குறை சொல்ல நேரிடாது. எல்லா ஆறுகளும் கடலில் தானே சங்கமிக்கின்றன. பிரச்னைகள் எங்கிருந்து கிளம்பினாலும் சமூகத்துக்கு சீர்கேடுதானே; சிக்கல் தீர்வடைய வேண்டுமல்லவா? எழுதும் பெண்களில் பலர் ஆசிரியர்களாக இருப்பதால் பள்ளியில் நிகழும் அவலங்களையும் நம்மின மாணவர்களின் சங்கடங்கள், சிக்கல்கள், இழப்புகள், பாதிப்புகள் பலவற்றையும் கதையின் மூலம் வெளிப்பார்வைக்குக் கொண்டுச் செல்கிறார்கள். பெற்றோர்களை விழிப்படையச் செய்கிறார்கள்.

தோட்டப்புறங்களையும் பால்மரங்களையும் வறுமையையும் பற்றி மட்டுமே எழுதினால் போதுமா? நகர்ப் புற அவலங்களி அங்கே அலைபாயும் நம் மக்களைப் பற்றி எழுத வேண்டாமா?

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதைக் குறிப்பிடும்போது அவர்களின் சிறப்பான சாதனை எனும் அளவுக்கு சொல்லப் படும் சில குறிப்புகளையும் இங்கு வெளியிடவேண்டியுள்ளது.

சிறுகதைப் போட்டிகளில் பல பெண் படைப்பாளிகள் பவுன் பரிசுகளும் பெற்றிருக்கின்றார்கள்.  திருமதி பாவை என்ற புஷ்பலீலாவதி, பேரவைக் கதைகளில் மட்டும் 15 முறை பரிசுகள் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

வரலாற்று நாவல் எழுதும் போட்டியில் பினாங்கு திருமதி சு.கமலா  தீ மலர் எனும் நாவல் எழுதி முதல் பரிசு பெற்று இலக்கிய உலகில் வரலாறு படைத்திருக்கிறார்.

ஆஸ்ட் ரோவும் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றவர் மங்கள கௌரி.

தமிழகத்து மஞ்சரி இதழ் நடத்திய தேவன் நினைவுக்கட்டுரைப் போட்டியில் "அங்கோர்வார்ட்'' வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோயில்கள் பற்றிய கட்டுரை எழுதி முதல் பரிசை பெற்றவர் ந.மகேசுவரி.  இவர் எழுதிய "தாய்மைக்கு ஒரு தவம்' தமிழகத்தின் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டப் படிப்புக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் இலக்கியக் களம் சிறுகதைத் திறனாய்வில் திருமதி பாக்கியம் எழுதிய “வேனல்'' சிறந்த கதையாகத் தேர்வு பெற்றது.

சிறுகதை, கட்டுரை, நாவல் என 8 நூல்களை வெளியிட்டு பெண்களின் பாராட்டைப் பெற்றுள்ளவர் திருமதி நிர்மலா பெருமாள்.

14 பெண் எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து "கயல்விழி' எனும் நூலை வெளியீடு செய்தவர் புலவர் கோமகள்.

1995இல் ஆனந்த விகடன் நடத்திய நகைச்சுவை நாடகப் போட்டியில் 2ஆம் பரிசு பெற்றவர் திருமதி ராஜம் கிருஷ்ணன்.

லண்டன் முரசு நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர் திருமதி கோ.அமிர்தவல்லி.

துணைவன், சலங்கை ஆகிய மாத இதழ்களின் ஆசிரியராக இருந்து வெளியீடு செய்தவர் முன்னாள் செனட்டர் திருமதி ஜெயா பார்த்திபன்.

தமிழ் மலர், தினமணி, தமிழ் நேசன் போன்ற ஏடுகளில் துணையாசிரியராகப் பணி புரிந்து பத்திரிகை துறையில் ஈடுபட்டவர் திருமதி வில்வமலர். மலேசியத் திருக்கோவில்கள் எனும் கட்டுரைத் தொகுப்பையும், உருப் பெறும் உண்மைகள் எனும் கட்டுரைகளையும் நூல் வடிவில் தந்தவர் இவர்.

சித்த வைத்தியம் படித்த ஜனகா சுந்தரம், பல மருத்துவ குறிப்புகள், தொடர் கட்டுரைகளும், கதைகளும் எழுதியவர். சிறுகதை, கட்டுரைத் தொகுப்புகளையும் நூல் வடிவில் வெளியீடு செய்தவர்.

"மகளிர் உலகம்' என்ற பெண்களுக்கான இதழை வெளியிட்டவர் திருமதி ராஜேஸ்வரி கணேசன்.

மகளிருக்காக "ஆனந்த ராணி' மாத இதழை நடத்தி வருகிறார் திருமதி ஆனந்தி.

உடல் ஊனமுற்று சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே இரு நூல்களை எழுதி வெளியிட்டவர் தா.மு.அன்னமேரி.

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு மனநிறைவு தரும் வகையில் சிறப்பாகவே அமைந்திருக்கிறது;  எனினும் நூல் வடிவம் பெறாமலும், ஆய்வு செய்யப் படாமலும் காலப் போக்கில் அவை மறைந்து கொண்டே வருகின்றன என்பது கவலைக்குரிய நிலையாகும். அடையாள மின்றி மறைந்து போகுமுன் தமிழின் பால் அக்கறை கொண்டவர்கள் இதனைக் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள் என்று நம்புவோமாக.

Pin It