எதைப்பாட
என் தோழனே..

உனக்குப் பாட
என்ன இருக்கிறது என்னிடம்..?

என் பாடல்கள்
எளிமையானவை
உன் காதுகள்
அலட்சியப் படுத்தும்
அளவுக்கும்..

என் சொற்கள்
கூர்மையானவை..
உன் கண்கள்
காண முடியாத
அளவுக்கு...

என்னும்
என் பாடலின்
அர்த்தங்களை
உன் வியர்வைத் துளிகள்
விளங்கிக் கொள்ளும்...

என் சொற்களின்
வலிமை
உன் போராட்டங்களில்
புரியும்..

தோழனே..
என் எழுத்து
உன் பொழுதுகளில்
பூக்களை மலர்த்தாது
அழுது தவிக்கும்
மானுடத்தின்
குருதியைக்
கொப்பளிக்குச் செய்யும்...

தந்தையும் பாட்டனும்
தந்த சொத்துக்களை
ஏலமிடும் உன்னிடம்
என் நட்சத்திரங்களைத்
தந்து என் செய்ய?

கனவுகளைக்
கூறுகட்டி விற்கும்
காலத்தில்.. தோழனே..
குவித்திருக்கிறேன்
என் சொற்களை..
அவை..
கழன்று கொண்டேயிருப்பதைக்
கண்டுகொள்.

என் சொற்களை
எடுத்து வருகிறேன்
‹ரியனிடமிருந்து
அவற்றைக்
கூர்தீட்டுகிறேன்
நெருப்பில்
தருணத்தில்...
குளிரவும் வைக்கிறேன்
நிலவில்.

மண்ணில் புரளும்
என் சொற்களைப்
பாடலாக்கிக்
காற்றில் அனுப்புகிறேன்
உன்
காதுகளுக்கு
எதைப்பாட
என் தோழனே?
புரிந்து கொள்
என் பாடலின்
பொருளைப்
புரிந்துகொள்