இந்திய அளவில் 59 வது தேசிய திரைப்பட விருது அளிப்பில் தமிழ்நாட்டிற்கு ஆறு விருதுகள் கிடைத்துள்ளன என்பது நமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. நம்பிக்கை அளிக்குமாறு தமது படைப்புகளை இந்திய அளவிற்கு உயர்த்தி காட்டிய அந்த படைபாளிகளுக்கு தாமரை தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

வாகை சூட வா படத்திற்கு பிராந்திய மொழிக்கான விருது கிடைத்துள்ளது. தமிழகத்தின் நம்பிக்கைக்கு உரிய அடுத்த தலைமுறை இயக்குநர். இவரது முதல் படைப்பு களவானி வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதன் ஆழமான தஞ்சை மண் சார்ந்த கலை உணர்வு, அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதற்கு முன்னர் இவ்வாறான கலைபடைப்பு தஞ்சை மண் பற்றி வந்ததில்லை என்று உறுதிப்படக் கூறமுடியும்.

வாகைசூட வா செங்கற் சூளையின் நெருப்பை சுமந்து வந்த கதை. அந்த நெருப்பால் அழிந்தமண் வளம், மரஞ்செடி கொடிகளின் வளம்.மனித உழைப்பின் வளம் ஆகியவற்றை படம் வேதனையோடு விவரித்து, நமது மனசாட்சியை சங்கடப்பட வைத்துவிடுகிறது. இத்தகைய மனித துயர வாழ்க்கையை யாராலும் பார்க்க முடியுமா? என்ற அளவிற்கு திரைபடம் நம்மை நெகிழ வைத்துவிடுகிறது. இதன் சிறப்பு என்னவெனில் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் அடித்தள மக்களின் உழைப்பு சுரண்டல் பற்றிய மறைவிடக் கருத்துக்களை தைரியமாக அறிவிக்கிறது. குறைபாடுகளற்ற கருத்துப் பதிவாகவே இது அமைந்து போனது.

இதைப்போலவே அழகர்சாமியின் குதிரை, தமிழ் திரையில் புதிய திசையைக் காட்டி நம்மை அழைத்து செல்கிறது. சின்னத்திரையில் தோன்றிய இளைய ராஜா இது பற்றிக் கூறிய கருத்துக்கள் நம்மை பிரப்பிக்க வைத்துவிட்டது. மிகவும் பாராட்டி பேசினார். கம்பன் வாயால் கவிப்பட்டம் பெற்றதைப் போன்ற உணர்வை இதன் மூலம் பெற்றுக்கொண்டோம். சிறந்த பொழுது போக்கு படத்திற்கான விருது இந்த திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. அழகர்சாமியின் குதிரையில் நடித்துள்ள சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

ஆரண்யகண்டம், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜவுக்கு அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது கிடைத்துள்ளது. இதைப்போலவே, சிறந்த எடிட்டருக்கான விருது பிரவீனுக்கு கிடைத்துள்ளது. பரிசு பெற்ற அனைவருக்கும் தாமரை தனது வாழ்த்துகளை மீண்டும்  தெரிவித்துக் கொள்கிறது. தமிழக மக்களிடம் அதற்கான முழு ஆதரவை திரட்டுவது அவசியமானதாகும்.

ஆசிரியர்