மின்சாரம் வந்த சடுதியில் துண்டித்துக்கொண்ட போது மாடசாமிக்கு ஒரு யோசனை உதித்தது. உடனே அதற்கான வேலையில் தொடங்க வேண்டுமென துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு எழுந்தவர் கொட்டகைக்குள் கட்டப்பட்டிருந்த இரண்டு காளைகளையும் நோட்டமிட்டார்.

கிளிங்க், கிளிங்க் என மணியாட்டிக்கொண்டிருந்த காளைகள், மொய்க்கும் ஈக்களை விரட்டுவதும் அசை போடுவதுமாக இருந்தன. மாடசாமி, கொட்டகைக்குள் நுழைந்ததும் காளைகள் எஜமானனுக்கு மரியாதை தரும் விதமாக மண்டிக்காலிட்டு துள்ளி எழுந்தன. காளைகளை அவிழ்த்தார்.

நுகத்தடியை லாவகமாய் தூக்கி காளைகளை வண்டியில் பூட்டினார். ""எங்கேப்பிடி'' என தாவி உட்காருவதற்குள் சவாரி நாலுகால் பாய்ச்சலில் பாதி தூரத்தைக் கடந்தன. மாடசாமி மகனுடனான பந்தத்தில் மூழ்கத்தொடங்கினார்.

"இந்த மாட்டுக்கு என்னவாம். எலும்பு புடைச்சா.... கிழடுனு அர்த்தமோ. அப்படியே கிழடுனாலும் அதை வித்துப்புடனுமோ. இந்தக் கட்டை இருக்கும் வரைக்கும் அந்த பாசாங்கு என்னக்கிட்ட எடுபடாது ஆமா....''

வண்டிப் போகும் வேகத்தில் சுக்காங்கற்கள் காளைகளின் கால்களில் பட்டு சில்லுச்சில்லாய் தெரிந்தன.

"ட்ரேய்... ட்ரேய்.... மெதுவா போடா'' நினைவுகளுக்கிடையில் கயிற்றை இழுத்துப்பிடித்து வண்டியை ஓட்டியவர் மீண்டும் கடந்தக்காலத்தில் மூழ்கத்தொடங்கினார்.

"என்னைக்குமில்லாம மாட்ட அவுக்கிற.''

"சந்தைக்கு''

மாடசாமிக்கு உடம்பே சில்லிட்டது போல ஒருவித உணர்வு.

"என்னத்துக்குடா?''

"கடன்காரனுக்கிட்ட தலைக்காட்ட முடியல.''

" கடன் தொல்லைனா மாட்ட வித்திடுவிகளோ!''

"பின்னே. மாட்ட விக்காம வேற. உன்னயா விக்க முடியும்?''

"என் ரெத்த நிழலு நீ. வார்த்தய அளந்து வையடா.. உழச்ச மாட்ட பஞ்சத்தக்குத்தான் விக்கிறதோ?'' மீசை துடித்தது.

"விடிஞ்சா, இருட்டினா பைனான்ஸ்காரன் கடையில நிக்கிறான்னே என்ன பண்ணுறதாம்.....?''

"நின்னா என்ன. தாரேனு சொல்லு. கடையில வெத்தல சீவலோட கூட ரெண்டு சாமான் வாங்கி வையி. கூட ரெண்டு ரூபா லாபம் பார்க்கலாம்.''

அப்பா மூர்க்கத்தனமாய் பேசுவதாக உணர்ந்தான் மகன் செங்கொடியன்.

"யார் வீட்ல கடன் இல்ல. நாளும் கிழமையும் பைனான்ஸ்காரன் முகத்திலதான் விடியுது. தர்மத்தையே ஒழித்து விடுவதைப்போலதான் அவன்க கிளம்பிட்டானுங்க புற்றீசல் போல. நான் கூடதான் என் வைத்திய செலவுக்கு ரெண்டாயிரம் ரூபாய கைநீட்டி வாங்கி வருசம் திரும்பிருச்சி. ஆயிர ரூபா கட்டப்படுவேனாங்குது. ஒரு நாளு குடிசை வாசற்படியில பாய இழுத்து விட்டு ஒளிஞ்சேன். இன்னொரு நாளு நேரம் பார்த்து தலைய உள்ளே இழுத்துக்கிட்டேன். அவனும் மனிசன் தானே எத்தனை நாளைக்குத்தான் விட்டுப்பிடிப்பான். ஒரு நாளு கேட்டான் நாலு கேள்வி நாக்குப்பிடுங்க.

"யோவ் நீ மனிசன் தானே. கடன் வாங்கி வருசம் திரும்பிருச்சி. உன் மனசல என்னையா நினைச்சிக்கிட்டு இருக்கே?''

கடன்கொடுத்தவன் எதிரே வந்தால் கடன் பட்டவன் ஊம. கூனி குறுகிப்போனேன்.

"தம்பி ரெண்டு வாரம் விட்டுப்பிடிங்க. சத்தம் போட்டு ஊரைக்கூட்டாதீங்க''

"இத கௌரவ குறைச்சலா வேற நினைக்கிறீங்களோ. உன்னால முடியலனா உன் மகன காட்டிவிடுயா. அவனுக்கிட்ட வாங்கிக்கிறேன்''

"மவன் இங்கே இல்லப்பா''

"ஊகூம். மக இருப்பாளே எங்கேனு நாக்க சொலட்டிவிட்டுக் கேட்டது வேறொருத்தனா இருந்தால் மண்வெட்டிய தூக்கிருப்பான். எனக்கு மவ இல்ல. அதனால என்னவோ ரோசமும் வரல. வெறிச்சுப்பார்த்தேன். போயிட்டான்''

"போன வாரம் மீண்டும் வந்தான். அதே பாட்டத்தான் பாடினான். தம்பி என் தொழில் சத்தியமா சொல்றேன். பத்து நாளையில உன் கடன அடைச்சிடுறேன் என்றேன். முகத்தில அடிச்சாப்பில பார்த்திட்டு போயிக்கிட்டேருந்தான்."

"எனக்கு மட்டும் கடன் இல்லையோ. நான் அதுக்காக மாட்டையா வித்தேன். வத்தலும் தொத்தலுமான இந்த மாடு எவ்வளவுக்கு விலை போகும். மாட்ட கட்டுத்தடியில கட்டுறியா இல்லையடா''.

காளைகளை அவிழ்த்து விட்டுட்டு இரண்டு உள்ளங்கைகளிலும் காரி எச்சிலைத் துப்பிக்கொண்டார். எண்ணி அறுபது கொட்டு . சல்லடை வண்டி நிறைஞ்சிருச்சி. அடுத்த பத்து நிமிடத்தில் நாக்குத்தள்ள ஓடி வந்த காளைகள் வீட்ல வந்துதான் சாணம் போட்டுச்சு.

காளைகளை கழட்டிவிட்டு முகத்தடி மூக்கை உள்ளங்கையில் தாங்கி "எங்கேக்கொட்டு'' என்று உந்தியபோது மனிசங்க எரு போல "லபக்''கென்று பூமியில் விழுந்தது மொத்த மண்ணும்.

கையால் கொத்தாக அள்ளிப்பார்த்தார். அமாவாசை இரவு மஞ்சள் தேச்சிக் குளிச்சக்கணக்காக கருப்பும் மஞ்சளும் கலந்த நிறமா இருந்திச்சு களிமண்ணு. உள்ளங்கையால அள்ளி உளுந்த பிசையுற மாதிரி பிசைஞ்சார். மண்ணு, வயசுப்பொண்ணாட்டம் நெளிஞ்சு விரல் இடுக்குகளில் கழிஞ்சது.

"வண்டல் மண்ணின் சேரிக்குடித்தனம்தான் இந்தக் களிமண்ணு. அவனவன் ஆத்து மணல வண்டி வணடியா ஏத்துறான்வ. மண் கொட்டுல ஒரு கொட்டு களி மண்ணு வந்திருச்சினா, மண்வெட்டிய தலைகுப்புற தட்டிவிட்டு அடுத்த எடத்த சொரண்டுறான்க. ஒன்னுமில்லாத ஆத்துமணல வண்டி ஐநூறுக்கு ஏத்துறான்க. எல்லாம் உள்ள களி மண்ண ஏளனமா பாக்குறான்க. அரிசிய ரோட்ல விக்கிறான்க. செருப்ப ஏசி ரூம்குள்ள வைக்கிறான்க." என சொல்லிக்கொண்டே மொத்த மண் முட்டயும் ரெண்டு முட்டா வச்சி பெருமூச்சு விட்டார். மொத்த வியர்வையும் வழுக்கிக்கிட்டு வந்து மண் முட்டுல விழுந்து தெரிச்சிச்சு. "களி மண்ணு ஒன்னும் மணல் ஜாதி இல்ல. விழுந்த தண்ணிய லபக்கெணு உறிஞ்சி கொடங்கைக்குள்ள மறைக்க. தாமர எலையில வீழ்ந்த தண்ணி கணக்கா பயபுள்ள மண்ணு என் வியர்வைத் துளிகள் அப்படியே வச்சிருக்கே.'' என மெய்ச்சிலிர்த்தார். அந்தத்துளியை விரலால் தடவி நாக்கில் வச்சிப்பார்த்தார். உப்புக் கரிச்சது.''

ஒரு சொம்பு தண்ணி அள்ளி வாயில் ஊத்திக்கிட்டு மண் முட்டப் பார்த்தார். தண்ணியை பருகிக்கொண்டே ஏறி முட்டுல குதிச்சார்.

கல் நெஞ்சுக்காரியாட்டம் அந்த மண்ணு மசியுவேனானு எகிறிருச்சி. பாதியிலேயே அவரை விட்டுட்டுப் போன மனைவிய நினைத்து மிதிச்சார். விலையாத ஒரு மா நிலத்தை மட்டும் விட்டுட்டு மீதத்த குத்தகைக்கு விட்டுட்டு டவுன்ல பெட்டிக்கடை நடத்திக்கொண்டு கடன்ல தத்தளிக்கும் மகன் செங்கொடியனை நினைச்சும் மிதித்தார். பலூன்ல கால வச்சா நெளியுற மாதிரி நெளிஞ்சதே தவிர விலகிக்கொடுப்பதாக இல்ல. ரெண்டுக்கொடத்து தண்ணிய விரல்கள் இடுக்கில இறைச்சாரு. காலோடு ஒட்டின மண்ண கட்டை விரலால் வழிச்சு குழியில போட்டவரு போனவாரம் வட்டிக்காரர் பொருமித்தீர்த்த சஞ்சலத்தை நினைச்சிப்பார்த்து மிதிச்சார். இதுவரைக்கும் அடம் பிடித்த களிமண்ணு எண்ணெய்ல தெறிக்கும் கடுகாட்டம் பாதச்சந்து விரல்கள் சந்து என கிடைக்கும் வழிகளில் பிதுங்கின.

ரெண்டு காலாலயும் விலகிப்போன மண்ணை ஒன்னு சேர்த்து கால்களால் நாலு கும்மு கும்மினார். புரோட்டாக்கடை மைதா மாவு போல கூனிக்குறுகிப்போய் சொல்றவேலையைக் கேட்கிறேனு வாய்ப்பொத்தி கிடந்துச்சு.

மரத்தடி கீழே விட்டேத்தியா உட்காந்திருந்த மாடசாமி "வயசுப்பொண்ணையும் களி மண்ணையும் முறையாக கையாளனும் .இல்ல.... மனம் நோக வேண்டி வரும்'' என சொல்லிக்கொண்டே சக்கரத்தைச் சுற்றினார். ரெண்டுக்கொட்டு மண்ணை சக்கரத்தில வச்சி பலம் கொண்ட மட்டும் சுத்தினார். புத்துக்குள்ளேருந்து நாகம் வரும் கணக்கா மண் தலையெடுத்துச்சு. வாய்க்குள் கையை விட்டுக் கொடைஞ்சார். மங்கு, சால் , என பல உருவமெடுத்து பானை உருவம் எடுத்தப்ப சக்கரத்தின் வேகத்தைக் குறைச்சார்.

பெரிசும் சிறிசுமா முப்பது பானை. பிள்ள பெத்த மனிசியாட்டம் பானையில அத்தனை பிரகாசம். வெயிலில் காயவைத்து காவல் இருந்தார். பட்டாளத்தையே திரட்டிக்கொண்டு வந்த மேகம் அவர் கோலத்தைப்பார்த்ததும் பெய்ய மறுத்து போயேப் போச்சு. ஒன்றொன்றாக எடுத்து கால்வாயில அடுக்கினார். செம்மண் முலாம் பூசி எரிச்சார். கோட நெருப்பு அசுர பசியெடுத்து சுடர் விட்டு எரிஞ்சுச்சு.

அக்ரஹாரப் பொண்டுகள் போல அப்படியொரு சிவப்பு. சுட்ட கருவாடு போல ஒவ்வொன்னா எடுத்து கவிழ்த்தார். கவுச்சிப் பொலங்காம விரதமிருந்து சுட்டெடுக்கும் பானை. உடைஞ்சிடக்கூடாதுனு பயபத்திரமா எடுத்தார். முப்பது உருப்படிகளுக்கும் கணக்கு போட்டார். ஒன்னு முப்பது ரூபானா முப்பதுக்கும் தொள்ளாயிரம் ரூபா. கூடகுறைச்சி, அப்படி, இப்படி வித்தால் எப்படியும் ஆயிரம் தேத்தலாம். மனப்பெட்டி நிறைஞ்சது.

உள்ளூரு சந்தையில அத்தனையையும் கவிழ்த்தார். ரோஜா இதழ்கள் போல மூனு அடுக்குகள். ஈக்களைப்போல பொண்டுகள் மொய்த்தார்கள். ஒவ்வொன்றாக எடுத்து உற்றும் தட்டியும் பார்த்தார்கள்.

"என்ன தாத்தா விலை?''

அவர்கள் கேட்கிற தோரணையைப் பார்த்தா வாங்கிற மாதிரி அவருக்குப் படலை.

"முப்பது ரூபாதான் ஆத்தா''

" ஆமா... இன்னும் அம்பது ரூபானு சொல்லுங்க. சோடி அம்பது ரூபாய்க்கு தாரீங்களா?''

"ஒரே விலதான்''

பழையன கழிய அடுத்தடுத்து புதிய பொண்டுகள் என மொய்த்தார்கள்.

உச்சி வெயில் மண்டைத்தண்ணிய உறிஞ்சியது. ஆசைக்கு பத்துப்பானையை முழுசா விக்க முடியல எனும் மனசு ஒருபுறம். வார வட்டிக்காரனுக்கு கொடுத்த சத்திய வாக்குறுதி இன்னொரு புறம். இதற்கிடையில் மகனின் இன்னல்கள் என பல நினைவுகள் அவரை மென்றுகொண்டிருந்தன.

விற்பனைக்காக ஒரு முப்பது ரூபா செலவு செய்ய நினைச்சார். அதையும் பாக்கெட்டிலிருந்து எடுக்காமல் ஒரு பானையாக எடுத்தார். ஒரு குடம் தண்ணிக் கொண்டு வந்து ஓரத்தில வச்சிட்டு அவர் ஒரு மூலையில உட்கார்ந்தார்.

கொஞ்ச நேரத்தில் இருட்டினதும் தோட்டுக்குள்ளேருந்து வெளிவரும் ஈசலைப்போல வீட்டைவிட்டு கொத்துக்கொத்தாக பெண்கள். இதிலிருந்து மாடசாமி சுறுசுறுப்பானார்.
குழுமிருக்கும் பெண்களுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் மொண்டு கொடுத்தார். அந்தத் தண்ணி பாகு கலக்காத சர்பத் போல சுளீரென இருந்தது.

கன நேரத்திற்குள் பலாச்சுளையில் மொய்த்த ஈக்களை விரட்டியடித்த இடத்தைப்போல வெறிச்@சாடியானது சந்தை. மொத்தப்பானையும் விற்றாகிவிட்டது.

"பானை ஒன்னு கொடுங்கண்ணே. கரண்ட நம்பி இனி கதையாகாது. என் பையன் பிரிட்ஜ் தண்ணிதான் விரும்பிக் குடிப்பான்''

"இல்லையே ஆத்தா. எல்லாப்பானையும் வித்துப்போச்சே''

"ரொம்பப் பொய் சொல்லாதீங்க தாத்தா. இது என்னவாம்''

"தண்ணி வச்சிருந்து குடிச்சதாச்சே.''

"நான் எதுக்கு கேட்கிறனாக்கும்.கொடுயா அந்தப்பானைய.''

புளங்கியப் பானைய கொடுக்க மாடசாமிக்கு மனசு எடங்கொடுக்கல

"அட காசு வேணுமுனா சேர்த்து வாங்கிக்கய்யா. மணி ஆறு.. சீரியல் போய் பார்க்கணும்''

''சும்மா எடுத்துக்கிட்டு போ தாயி. காசெல்லாம் வேண்டாம்''     

 "நல்லா சொன்னீங்க தாத்தா. போறப்பவே விழுந்து உடையவா. இந்தாய்யா அம்பது ரூபா''

கடைசி பாக்கிய மாடசாமி கொடுக்கிறதுக்குள்ளே அந்தப் பெண் சந்துக்குள்ளே போய் செருகிக்கொண்டாள்..

பாக்கெட்டை துலாவி நோட்டுகளை எண்ணிப்பார்த்தார். சொல்லி வைத்தது போல சில்லறையும் நோட்டுகளுமாக ஆயிரம் ரூபாய் இருந்தன. அந்த நிமிடங்களில் அவர் ஒரு குபேரனாக வாழத்தொடங்கினார். வசந்தகாலத்திற்கு திரும்பும் மரங்கள் போல மனசு பசுமையாக இருந்தது. மகன் தனது கடன்சுமையை சொல்லாமல் இருந்திருந்தால் அவரும் பைனான்ஸ்கடனில் சிக்காமல் இருந்திருந்தால் என் குறைகாலத்தைக் கழிக்க இவ்ளோ பணம் போதும். கடன்போக வேண்டிய காசுகள் ஒரு வகையில் செல்லாக்காசுகளே... என்பதாக அவர் உணரத்தொடங்கினார்.

அந்த நாள் இரவு அவருக்கு அவ்ளோ எளிதாக நகர்ந்திடவில்லை. தனது ரத்தத்தின் நிழல் கண்முன் வந்து நிழலாடியது. மகனின் கழுத்தில் யாரோ துண்டைப்போட்டு இழுப்பதை போலவும் பத்துப்பேர் முன் உட்கார வைக்கப்பட்டவன் போலவும் அடிக்கடி கனாக்கண்டு திடுக்கிட்டு முழித்தார். இந்தப் பண முடிச்சை எப்படியும் மகனிடம் கொண்டுபோய் சேர்த்திடணும் என்னும் ஆசை அவரை தூங்கவிடாமல் இரவை நகர்த்தியது.

 ஒரு வழியாக பொழுதும் விடிந்தது. ஓரம் கிழிஞ்ச நாலு முழ வேட்டியை தேடி உருவினார். அதில் பண முடிச்சை சுற்றி மீத வேட்டியில் கோமணத்தை மறைத்துக்கொண்டு குடிசைக்குள்ளேருந்து வெளியே தலையை நீட்டினார்.

வாசலில் நின்றுகொண்டிருந்தான் வார வட்டிக்காரன். சிவனுக்கு எதிரே நந்திபோல.
மனசு தகித்தது. சள்ளையும் கோபமுமாக முணுமுணுத்தார். பின் சுதாகரித்து தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொள்ளப்பார்த்தார்.

"மாடசாமி.......''

"வாங்க தம்பி!''

"இன்னையோட கணக்க முடிங்க.''

"சரிங்க தம்பி.''

வேட்டியை மொத்தமாக உருவியெரிந்துவிட்டு பணமுடிச்சை நீட்டினார்.

பசியோடு மேயும் ஆடு போல மொத்த காசையும் சடுதியில் எண்ணி பைக்குள் போட்டுக்கொண்டு "கணக்கு முடிஞ்சது''னு சொல்லிக்கொண்டு வண்டியை நகர்த்தினார். அதில் நானூறு மட்டும் அசல். மனசு பொம்மித்தீர்த்தது

"தம்பி ஒரு நிமிசம்....''

"என்ன மாடசாமி?''

"மவன் கண்ணுக்குள்ளேயே நிக்றான். வெறுங்கையோடு பார்க்கப்போக மனசு இடம் கொடுக்கல. ஆயிரம் ரூபா கொடுத்தீங்கனா மவன போய் பார்த்திட்டு ரெண்டு வாரத்தில கணக் கச்சிதமா முடிச்சிருவேன்''

''சவ்வு... மாதிரி இழுத்து இப்பதான் கணக்கு முடிஞ்சிருக்கு.. அதுக்குள்ளே மறு கடனா! என்ன மாடசாமி சொல்றே.....?''

 "ஆமா தம்பி. ரத்தம் சுண்டி இழுக்குது. ரா முழுசும் நித்திர இல்ல. மவன் கண்ணுக்குள்ளேயே நிக்றான்.....''

அடுத்தடுத்த நொடிகள் ஊமையாக நகர்ந்தன.

"கொடுக்கிறனோ இல்லையோனு யோசிக்காதீங்க தம்பி. ஊருக்கு போய் வந்த கையோட மீத மண்ண சுட்டுக் காசாக்கிடுவேன். நம்பிக் கொடுங்க தம்பி . உங்கள சாமியா நினைக்கிறேன். .''

 தர்ம சங்கடமான தவிப்பை வட்டிக்காரர் வேப்பெண்ணைய் மாதிரி விழுங்கிக்கொண்டிருந்தார்.

 "மண்ணப்பாருங்க தம்பி. நான் கொடுக்கலனா இந்த மண்ண அள்ளிக்கிட்டு போங்க தம்பி.''

மண்ணையும் மாடசாமியையும் ஏற இறங்க பார்த்தான் வட்டிக்காரன்.

"என்ன தம்பி பார்க்கிறீங்க. போயும் போயும் களிமண்ண காட்டுறேன்னா. எங்க ஊரு சாமிங்க எல்லாத்தையும் இந்த மண்ணுலதானுங்க செய்றேன். உங்களுக்கு வேணுமுனா இது மண்ணாக தெரியலாம். என்னைப் பொறுத்தவரை இது சாமிங்க.''

வாழைப்பூ மாதிரி கைகளை குவித்து வைத்துக்கொண்டு பார்வையால் கெஞ்சிக்கொண்டிருந்தார். கொஞ்சநேரத்தில் புகையைக் கக்கிக்கொண்டு விருட்டென்று வண்டி கிளம்பியது.

எப்போதும் வாய் வழியே பிறக்கும் வார்த்தைகள் நாசி துவாரத்தின் வழியே வெடித்தன. மனசுக்குள் பூகம்பம் நிகழ்ந்த ஒருவித அதிர்வு. உதடுகள் படபடத்தன.

கீறல் விழுந்த குறுந்தகட்டைப் போல மனசு திரும்பத்திரும்ப நமைச்சது. "சாமிய விடு, பூமிய விடு. என் தொழில நம்பமாட்டேனுடாய்யா''

Pin It