புயல் ஒன்றின் பெருந்துயர் எத்தகையது என்பதை அண்மையில் வீசிய தானே புயல் நம் அனைவருக்கும் உணர்த்திவிட்டது. அதிலும் புதுவை, கடலூர் வாழ் மக்கள் எந்த காலத்திலும் இந்தப் புயல் தந்தக் கோர வடுவை மறந்துவிட மாட்டார்கள். நூற்றுக்கணக்கில் மக்கள் இறந்து போய்விட்டார்கள். லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரடப்பட்ட நெல், கரும்பு, வாழை, முந்திரி முதலான பயிர்கள் முற்றாக அழிந்து போயின. மக்கள் ஆதரவற்று என்ன செய்வது என்று திகைத்துப் போய் இருக்கிறார்கள்.

புயல் தவிர்க்க முடியாதது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனாலும் புயல் வெள்ளம் என்ற எந்தப் பேரிடரும் மனிதன் இயற்கைக்கு செய்த கொடுமையால் விளைந்த எதிர் விளைவுகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் அவசியமானதாகும். விஞ்ஞானம், முன்னேற்றம் என்ற பெயரில் இயற்கையைக் காயப்படுத்தும் அனைத்து செயல்களையும், மனிதன் செய்து முடித்துவிட்டான். இதன் மூலம் இயற்கையின் கட்டமைப்பை எல்லாம் நிலைகுலைந்து போய் நிற்கிறது. இதன் விளைவுகள்தான் இயற்கை பேரிடர் என்று விஞ்ஞானிகள் உறுதிபடக் கூறுகிறார்கள். இயற்கையை சொல்லிக் குற்றம் இல்லை. மனிதன் தான் இவை எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க வேண்டும்.

ஆனாலும் புயல் தாக்கி சென்று விட்டது. இயற்கை பேரிடர் தனது தீவிரத்தை நிறுத்திக் கொண்டு விட்டது. இனி செய்ய வேண்டியது என்ன என்பது தான் இப்பொழுது நம் முன்னால் உள்ள கேள்வியாகும். புதுச்சேரி, தமிழக அரசுகள் தங்களால் முடிந்த பணிகளை ஓரளவிற்கு செய்து நிறைவேற்றி வருகின்றன. இந்தப் பணிகளும் குறைபாடுகளற்றது என்று கூறிவிட முடியாது. மத்திய அரசாங்கத்தின் பங்களிப்பைத் தான் இதில் முக்கியமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசுதான் இந்திய மக்கள் வரிப்பணத்தில் பெரும் பகுதியை திரட்டி வைத்துக் கொள்கிறது. மாநில அரசின் குறைபாடுகளை தீர்ப்பதில் இது போதிய கவனம் கொள்வதில்லை என்ற வேதனைக்குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் தமிழகம் காலம் தோறும் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கத்தான் செய்கிறது. இந்தப் புயல் பேரிடர் துயரிலும் தேவையை அறிந்து உதவி செய்வதாக மத்திய அரசின் பங்களிப்பு அமையவில்லை.

தமிழக அரசு மட்டும் 5 ஆயிரம் கோடியை நிவாரணமாக கேட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசு வெளிப்படையாக எதையும் சொல்லுவதற்கு தயாராக இல்லை. மதிப்பீடு என்ற பெயரில் காலதாமதம் செய்கிறது. உயிர் பாதுகாப்புப் பிரச்சனையில் காலதாமதம் செய்வது மனித நேயமற்ற செயலாகும். உடனடியாக பாதிப்புகளுக்கான உதவியை காலதாமதம் இன்றி மத்திய அரசு வழங்குவது அவசியமானதாகும்.

இவை எல்லாவற்றையும் விட, இந்திய அரசு, வைத்திருக்கும் சட்டம்தான் நம்மை பெரிதும் வருத்தமுற வைக்கிறது. பேரிடர் பாதிப்புக்கு நிவாரணம் மட்டும்தான் வழங்க முடியும். இழப்பீடு வழங்க முடியாது என்ற சட்டத்தை கையில் வைத்திருக்கிறது. இது எத்தகைய மனிதநேயமற்ற செயல். தொழிற்சாலை சேதம் என்றால் இழப்பீடு தரமுடியும். இந்திய வங்கிகளில், எத்தனைக்கோடியை வேண்டுமானாலும் கார்பரேட் கம்பெனிகள் அள்ளிக்கொள்ள அனுமதி உண்டு. இந்திய விவசாயத்தையும், இந்திய வாழ்க்கையையும் பாதுகாத்து வரும் எளிய மக்களுக்கு இழப்பீடு இல்லை என்றால் இதை விடவும் வேதனை வேறு என்ன இருக்க முடியும்?

உடனடியாக, இதற்கான பேரிடர் சட்டத்தை இயற்றுவது இன்றைய அவசியமாகும்.

சி.மகேந்திரன்
ஆசிரியர்

Pin It