பொது வாழ்வு எல்லாக் காலங்களிலும் கௌரத்திற்கு உரியதாகவே கருதப்படுகிறது. சுயநலம் சார்ந்த மனிதர்களின் சராசரி வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, பொதுவாழ்க்கையில் சிறகடித்துப் பறந்து, பல ஆண்டுகள் அர்ப்பணித்து அந்தப் பணியில் வெற்றி பெறுவதும் அத்தகைய சுலபமானதல்ல.அதில் அடையும் வெற்றிதான் உண்மையான வெற்றியாகும். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் தோழர் கோபு அவர்களின் வெற்றி, இளம் வயதிலேயே கம்யூனிச வாழ்க்கை முறையை ஏற்று ஒரு கம்யூனிஸ்டாக வாழ்ந்து பொதுவாழ்வில் உயர்வு பெற்ற வெற்றியில் அடங்கி விடுகிறது. தோழர் ஏ.எம்.கோபு அவர்களுக்கு சென்னையில் பொதுவாழ்வு கௌரவிப்பு விழா நடத்தப்பட்டது. தாமரை தனது புரட்சிகர வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறது.

 ஈர்ப்புத் தன்மையைக் கொண்டிருக்கிறது தோழர் கோபு அவர்களின் இளமைக் கால வாழ்க்கை. நாட்டின் விடுதலைக்குப் பின், பெற்ற சுதந்திரம் பெரும் பெருமுதலாளின் ஏகபோக சுதந்திரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக கம்யூனிஸ்டுகள் ஆயுதம் தாங்கியப் போராட்டத்தை அறிவித்திருந்தார்கள். தெலுங்கானாவிலும் இந்தியாவின் மற்றப் பலபகுதிகளிலும்  கொரில்லா யுத்தமுறையில் கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கியிருந்ததர்கள். இதில் சமரசமற்ற போராளியாக இளமைக் கால வாழ்க்கையைத் தொடங்கியவர்தான் தோழர் கோபு அவர்கள்.

 புரட்சிகாரர்களுக்கு எல்லா நாடுகளிலும் நிகழ்வதைப்போலத்தான் இவருக்கும் நிகழ்ந்தது. கொலை மற்றும் கொள்ளை முதலான கொடிய குற்றம் சாட்டப்பட்ட, அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த அரசியல் குற்றவாளி இவர் ஆக்கப்பட்டார். இதன் பின்னர் நள்ளிரவில் காவல் துறையால் சுட்டு கைது செய்யபட்டார். கொடிய அடக்குமுறைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தவிர பிரஞ்சிந்திய அரசாங்கமும் இவர் மீது வேறு பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து, ஆயுள் தண்டனை வழங்கியிருந்தது. சுதந்திர இந்தியாவில் பண்டித நேரு அவர்களோடு போராடிய பின்னர்தான், இந்த தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.

அரசியல் தலைமறைவு இயக்கப் போராளியான கோபு அவர்கள், கட்சியின் முழுநேர ஊழியராகவும் அதே சமயம், தொழிற் சங்கத்தின் தலைவராகவும் விடுதலைக்குப் பின்னர் தன்னை அர்ப்பணித்து கொண்டார். 80 வயதைக் கடந்த நிலையிலும் இன்று வரை, தனது அர்பணிப்புக் மிக்கப் பணியை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து கொண்டே இருக்கிறார். கட்சியின் அன்றாடப் பணிகள், ஜனசக்தி உதவி, தேடிவரும் தொழிற் சங்கப் பிரச்சனைகளுக்கு உதவுதல் என்று அனைத்திலும் ஒரு துடிப்பு மிக்க இளைஞனைப் போல பங்கேற்று வருகிறார்.

கட்சியும் தொழிற் சங்கமும் பொது வாழ்வு சேவைக்கென்று அளித்த நிதியை கட்சிக்@க அளித்துவிட்டார். கட்சி வேறு, தான் வேறு என்று பிரித்துப் பார்க்காத குணம், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் பாரம்பரிய இயல்புதான் என்ற போதிலும், தோழர் கோபு அவர்கள் இதைத் தவிர ரூபாய் 10 லட்சத்தை கூடுதலாக தன் குடும்ப சார்பில் அளித்து, அதனை அறக்கடளையாக அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் கட்சிக்கு வைத்துள்ளார். கட்சியால் நலிந்த குடும்பத்திற்கு பயன் கிடைக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அவரது இந்த சிந்தனை நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

மக்களின் முன்னோடி தோழர் கோபு அவர்கள், பொதுப் பணி சிறக்க மேலும் ஆண்டுகளின் வாழ வேண்டும் என்று வாசகர்களின் சார்பில் தாமரை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Pin It