நதிகள் தொழிற்சாலை கழிவுநீரால் மாசுபடுகின்றன. பிளாஸ்டிக் பொருட்களால் நிலம் பாதிப்படைகிறது. மணல் கொள்ளையால் ஆறு நலிவடைகிறது. இரசாயண உரங்களால் உணவு நஞ்சாகிக் கொண்டிருக்கின்றது. மரபணுமாற்றுப்பயிர்களால் நோய் அச்சுறுத்தல்கள். அதிக மாகும் புவி வெப்பம். அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்கள், என்று சுற்றுச் சூழலையும், மண்ணையும் காக்க எந்த நூற்றாண்டிலும் எழாத குரல்கள் இப்போது ஆங்காங்கே கேட்கின்றன.

இவ்வேளையில் சுற்றுச்சூழலையும், மண்ணையும் காப்பாற்றும் முயற்சி எந்த ஆரவாரமும் இன்றி, அமைதியாக நடந்து கொண் டிருக்கிறது. நெல்லைமாவட்டம் பொதிகை மலையடிவாரத்தில் உள்ள பாபநாசம் எனும் ஊரில் தான் அந்த பசுமை வேள்வி நடந்து வருகிறது.

இந்த மூலிகையின் பெயர் "களா'. கண் நோய்களை குணமாக்கும். இது "சீந்தில்' கொடி. நம் உடலின் கல்லீரல், மண்ணீரலுக்கு பலம் சேர்க்கும். இது "அவுரி'. மஞ்சள் காமாலை நோய் தீர்க்கக் கூடியது, என்று அங்கு காணப்படக்கூடிய மூலிகைகளுக்கு பெயர்ப் பலகைகள் வைக்கப் பட்டிருந்தன. ஓலைச்சுவடிகளில் மட்டுமே காணப்படக்கூடிய அரிய மூலிகைப் பெயர்களையும், மருத்துவப் பயன்களையும் அங்குப் பார்க்க முடிகிறது. பெரும்பாலான பெயர்கள் நாம் இதுவரை கேள்விப்பட்டிராதவை. இப்படி அங்கு காணப்படும் மூலிகைகள் ஒன்றோ, இரண்டோ அல்ல. சுமார் ஆயிரம் மூலிகைகளை அதன் எண்ணிக்கை நெருங்கிவிட்டதென்றே சொல்லலாம். இவை அத்தனையும் ஒரே இடத்தில் காணப்படுவது தான் நம்மை மலைக்க வைக்கிறது. பாபநாசத்தின் "பாபநாசநாதர் திருக்கோயில்'  தெப்பக்குளத்தைச் சுற்றி அந்த மூலிகை பூமி உருவாக்கப்பட்டு "பதினெண் சித்தர் மூலிகைப் பொழில்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

plant_620

சில ஆண்டுகளுக்கு முன்புவரை அந்த தெப்பக்குளத்தை சுற்றி, புதர்கள் மண்டியும், பொதுமக்களின் கழிப்பிடமாகவும், துர்நாற்றம் வீசக்கூடிய இடமாகவும் இருந்து வந்தது. இன்று அதை அடியோடு மாற்றியமைத்து பாபநாசம் ஊரின் குறிப்பிட்ட தொலைவு வரை மூலிகை மணம் வீசிக் கொண்டிருக்கும்படியாக இப்பொழிலை தனது கடினஉழைப்பாலும் மருத்துவ ஞானத்தாலும் செய்து முடித்திருப்பவர் மருத்துவர் பி. மைக்கேல் செயராசு. இவர் ஒரு சித்த மருத்துவர். சொந்த ஊர் பாளையங்கோட்டை என்றாலும் தற்போது பாபநாசத்திலேயே வசித்துவருகிறார். 1989ம் ஆண்டு பாளை சித்த மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தவர். 1992ம் ஆண்டு உலகத் தமிழ் மருத்தவக்கழகத்தை தொடங்கி, ஏராளமான சித்த மருத்துவப்பணிகளையும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுப்பணிகளையும் செய்து வருகிறார்.

"கற்ப அவிழ்தம்' என்ற சித்த மருத்துவ மாத இதழின் நிறுவனர், ஆசிரியர். ஆயிரம் மூலிகை களைக் கொண்ட இந்த பொழிலை உருவாக்க அவர் எடுத்த முயற்சிகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. மூலிகைகளைத் தேடி காடு, மலை என்று அலைந்திருக்கிறார். சித்தர்கள் உலவுவ தாக சொல்லப்படும் பொதிகைமலை, தென்மலை, அச்சன்கோயில், மகேந்திரகிரி, சதுரகிரி, கொல்லிமலை, ஏலகிரி சவ்வாது மலை, ஏற்காடுமலை, மற்றும் காடுகள், வயல்வெளிகள் என்று தேடித்தேடி தன் வாழ்நாள் முழுக்க சேகரித்த மூலிகைக் கன்றுகளை கொண்டு சுமார் 3 வருட உழைப்பால் இம்மூலிகைப் பொழிலை உருவாக்கியிருக்கிறார். இப்பொழிலை 2012 சனவரி 6ம் தேதி தமிழ் மக்களுக்கு அர்பணிக்கும் விழாவாக கொண்டாட உள்ள மருத்துவர் பி.மைக்கேல் செயராசுவுடன் பேசியபோது, ""வெயில் நுழைவறியா குயில் நுழை பொதும்பர்' என்ற சங்ககாலப் பாடலில் உள்ள "பொதும்பர்' என்பது "பொழில்' என்ற பெயராவும், தமிழ் மருத்துவத்தின் நிறுவனர்களான சித்தர் பெருமக்களைப் பெருமைப்படுத்தும் விதமாக "பதினெண் சித்தர்' என்ற பெயரையும் இணைத்து "பதினெண் சித்தர் மூலிகைப்பொழில்' என்று பெயரிட்டுள்ளோம்.

stu_plant_370வெயில் நுழைய முடியாத அளவிற்கு பசுமையான அடர்த்தியை ஆயிரம் மூலிகைகள் கொண்டு உருவாக்க வேண்டும், என்ற கனவோடு தொடங்கிய இப்பணியில் தற்போது ஆயிரம் மூலிகைகளின் எண்ணிக்கையை ஏறக்குறைய நெருங்கிவிட்டோம். சுமார் 350 மூலிகை மரங்கள், 300 வகையான புதர் தாவரங்கள், 100 வகையான கொடிகள் என்று வளர்த்துள்ளோம். புல் வகைகளில் மட்டுமே 11 வகைகள் உள்ளன. நறுமணத்திற்கு பெயர் பெற்ற மரம் "அகில்' ஆகும். வெள்ளை அகில், காரு அகில், செவ்வகில், அகில் என்று நான்கு வகைகளும் இங்கு வளர்த்துள்ளோம். இப்போது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் புளி அரபு நாட்டைச் சேர்ந்ததாகும். பிணர்புளி, ராஜபுளி, புளிமா, புளிச்சங்காய் போன்றவைகள் நம் மண்ணிற் குரியவை. இவைகளை இங்கு வளர்த்துள்ளோம். இந்த வகையான புளிகளை உணவில் சேர்த்துக் கொண்டால், நமக்கு நோய்கள் வராது. இப்படியான மூலிகைகளைக் கொண்ட இப்பொழில் மூலம் சுத்தமான நறுமணக் காற்று கிடைக்கிறது. மயில்கள், குயில்கள் வருகின்றன. குறிப்பாக "சொர்க்கப்பறவை' வந்து செல்கிறது. ஏராளமான வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள் சுற்றி வருகின்றன. இங்குள்ள மண்ணில் கோடான கோடி நுண்னுயிர்கள் வளம் பெற்று வாழ்கின்றன. தெப்பக்குளத்தைச் சுற்றி மனிதர்கள் நடக்கும் படியாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாபநாசத்தைச் சேர்ந்த பெருவாரியான மக்கள் அதிகாலையில் நடைபயிற்சிக்காக தெப்பக்குளத்தை வலம் வருகிறார்கள். 1/2 கி.மீ சுற்றளவு கொண்ட தெப்பக் குளத்தை சுற்றி மூச்சுப்பயிற்சி, ஒகப்பயிற்சி தவப்பயிற்சிகளையும் செய்கிறார்கள். இதனால் உடல், உள்ளம், ஆன்மா வலுவடைகிறது.

இன்றைக்கு தமிழ் மொழி பல வழிகளில் அழிந்து வருகிறது. ஆனால் மூலிகையின் பெயர்களில் தான், எந்த மொழிக்கலப்பும் இல்லாமல் தமிழ் வாழ்ந்துவருகிறது. ப.ய.சாம்பசிவம்பிள்ளை என்ற அறிஞர் 1932ம் ஆண்டு, சுமார் 1 லட்சம் சித்த மருத்துவக் கலைச் சொற்கள் கொண்ட அகராதியை தயாரித்து வெளியிட்டார். அது சித்த மருத்துவ உலகிற்குக் கிடைத்த மாபெரும் கொடை. அவர் சித்த மருத்துவர் அல்ல. காவல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றியவர். தமிழ் மொழி மீது கொண்ட பற்று ஒன்றே, அவரின் இப்பணிக்கான காரணமாகும். தனி மனித முயற்சியாக அவர் செய்த பணியின் தொடர்ச்சியாகவே, நான் இந்த மூலிகைப்பொழிலைப் பார்க்கிறேன். ஓலைச் சுவடிகள் மூலம் தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்டு வந்த அரிய பல மூலிகை களின் மருத்துவப் பயன்பாடுகள் குறித்த செய்திகள் தமிழர்களின் உயர்நிலை அறிவுப் புதைய லாகும். இம்மாபெரும் அறிவுச் சொத்தின் அருமையை இளையசமுதாயத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடனேயே இம்மூலிகைப்பொழில் உருவாக்கப்பட்டுள்ளது. இதோடு சித்த மருத்துவ மேன்மைகளைச் எடுத்துச் சொல்லும் "சித்த மருத்துவக் கருத்துருவப் பூங்கா' உருவாக் கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம்'' என்றார்.

நம் இயற்கை வளங்கள் பல வழிகளில் நச்சுத்தன்மையாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மண்ணையும், தமிழ் மருத்துவத்தையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு மூலிகைகளை வளர்க்கும் மருத்துவர் பி.மைக்கேல் செயராசு கரங்களுடன் நம் அனைவருடைய கரங்களையும் இணைத்துக்கொள்வது மிக மிக அவசியமாகும்.

Pin It