அதிகாலை ஐந்து மணிக்கு அலாரம் அடித்து ஓய்ந்தாலும், உடல் அலுப்பாலும், வலியாலும், சோர்வாலும் புரண்டு படுத்தாள் சுந்தரவல்லி. முழிப்புதட்டிய பிறகு இன்றைக்கு லீவாக இருக்கக் கூடாதா? என்றும் மனசு ஏங்கியது. வழக்கமாக செய்ய வேண்டிய வேலைகள் இருப்பதால், எழுந்தே ஆக வேண்டியக் கட்டாயத்தில் எழுந்தாள். பள்ளிக் கூடத்தில் எட்டு மணிக்கு இருக்கணும். எட்டே காலுக்கு இறை வணக்கம். எட்டரைக்குப் பள்ளி துவங்கும்.

இந்த ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற இன்னும் ஒன்றரை மாதங்கள்தான் இருக்கு சுந்தரவல்லிக்கு. வயதும் 58 ஆகப் போகிறது. இந்த முதுமையை ஓயாத பணி இறுக்கிப் பிடித்தாலும், அதையும் மீறி நரைகள் நிறைந்து விட்டன. அவளும் ஆசிரியர் தொழிலை முப்பது வருடங்களுக்கு மேல் பார்த்து விட்டாள். அதில் கல்வி சார்ந்த விஷயங்களைப் படிப்பது, பேசுறது, எழுதுறது அதனால் ஏற்படுகிற அந்தஸ்து, கௌரவம், சம்பளம் என்று நிறைவு இருந்தாலும் வீட்டிலும், பள்ளியிலும் எதிரிகளைச் சமாளிப்பதிலேயே பெரும் பாடாய்க் கழிந்தது. ஆனாலும் சுயகௌரவத்தை இழக்காமலும் கறாரான நிலைப்பாட்டைக் கண்ணியத்துடன் எடுத்ததினாலயும் குடும்பக் பெண்ணாகவும், நல்லாசிரியராகவும் பெயர் எடுத்துக் கொண்டாள். அதிலும் இரண்டு பெண் பிள்ளைகளையும் வளர்க்கப் பெரும்பாடு பட்டுப்போனாள்.

குறைந்த மதிப்பெண்களை வாங்கிய தர்சினியைப் பணம் கட்டித் தனியார் கல்லூரி ஒன்றில் படிக்க வைத்தாள். அது அங்கீகாரம் இல்லாத கல்லூரி பெரும் மன உளைச்சல் எதிர்காலச் சிக்கல், போராட்டம் நடந்தது. சுந்தரவல்லியும் அதில் கலந்து கொண்டாள். கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு வேறொரு கல்லூரியில் இடம் கிடைத்தது மகளுக்கு. தர்சினி நல்ஸிங் முடித்தபிறகுதான் நிம்மதி. அவளுக்கும் கலியாணம் முடிஞ்சிற்று. இரண்டு பிள்ளைகளும் இருக்கு.

புவனா குடும்பவாதி. அவள் நினைத்திருந்தால் பொறியாளர் அல்லன்னா மருத்துவராகக் கூட ஆகியிருக்கலாம். அதையும் உதறித்தள்ளிவிட்டாள். மொழிக்கல்வியை எடுத்துப் படித்தாள். அதிலும் குழப்பம். இந்தப் படிப்புக்கு வருங்காலம் இல்லை என்று முகத்தைத் தூக்கினாள். இளங் கலையில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டாள். பிடிக்காத ஆசிரியரிடம் சண்டையிட்டு, "இவர் சொல்லிக் கொடுத்து நான் படிக்க வேண்டியதாய் இருக்கிறதே?'' என்று அவர் காதுபடச் சொல்லப் போய் பழி வாங்கப்பட்டாள். முதுகலையில் இடம் கிடைக்காமல் ஆனது. சோர்ந்து போன மகளைத் தேற்றி அந்தாண்டு கம்பியூட்டர் படிக்க வைத்தாள். அடுத்தாண்டு அவளை எம்.ஏ. படிக்க வைத்தாள். மகள் எம்.பில் மற்றும் பி.ஹெச்.டி. முடித்ததும் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தாள். இந்த மகள் புவனாவுக்கு அடுத்த மாதம் கலியாணம். நம்ம ரிட்டெயர்மெண்ட் முன்னால் கலியாணம் நடந்து விடும் என்று சுந்தரவல்லி ஆறுதல் பட்டுக்கொண்டாலும் அந்தக் கசப்பை விழுங்க முடியாமல் முணுமுணுத்துக்கொண்டாள். "அப்பா உன் கலியாணம் வரை இருப்பார்''

சுந்தரவல்லி நேற்றும் அவமானப்பட்டாள். அதுவும் பள்ளிக்கூடத்தில் வைத்து. பள்ளி விஷயமாகவோ, பாட சம்பந்தமாகவோ, ஆசிரியர்களின் பிரச்சனையாலோ தலைமை ஆசிரியர் கொடுத்த சங்கடத்தாலோ, பிள்ளைகளின் தொல்லையாலோ, அவமானப்பட்டால் கூட தாங்கிக்கிடலாம். தாலி கட்டுன புருஷனால் அவமானம் வந்தால் எப்படித் தாங்க முடியும்? அவள் மத்தியானத்துக்கு மேல் கணிதம் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தாள். ஒரு சிக்கலானக் கணக்கு. அதை ஒரு முறைக்கு இரு முறை போட்டுப் பார்த்து விடையைத் தேடிக் கொண்டாள். அப்படியே பிள்ளைகளுக்குச் சொல்லிப் போதித்தாள். கணக்குப் பாதி நடந்துக் கொண்டிருக்கும் போதுதான் பியூன் ரெங்கசாமி வந்தார். அவரும் ரகசியம் சொல்லுகிற மாதிரி சொன்னார். ""டீச்சர், ஒங்க வீட்டுக்காரரு கேட்டுல நின்னுக்கிட்டு, எம் பொண்டாட்டிப் பணம் தர மாட்டுக்கா. வாங்கித்தாங்கன்னு போற வருறவங்கக்கிட்டயெல்லாம் கையேந்திக்கிட்டு நிக்காரு'' இந்தாளு பணம் கொடுக்கவில்லை என்றால், போக மாட்டார். வழக்கமாகக் கோவில் வாசல், கடை வீதி, சாலை ஓரம் என்று கண்டயிடங்களில் எல்லாம் பிடிவாதம் பிடிப்பார். இடத்தை விட்டு நகர மாட்டார். அதுவும் கெட்ட வார்த்தையில் பேசுவார். இப்படி அசிங்கப்படுத்தும் ஆளு, இப்ப பள்ளிக்கூடத்துக்கும் வந்தாச்சா என்ன?

சுந்தரவல்லி பணத்தை எடுத்துக் கொடுத்தாள். உடனே போய்க் கொடுக்கச் சொன்னாள். ஏக்காரணத்தைக் கொண்டும் பள்ளிக்குள்ள விட்டுடாதீங்க என்று சொல்லி ரெங்கசாமியை அனுப்பிளாள். அவளுக்கு ரத்த அழுத்தம் கூடிய மாதிரி படபடப்பு ஏற்பட்டது. அதுவே கோபமாகவும் மாறியது, கோபத்தைத் தணிக்கும் வகையில் 40 நிமிடங்கள் ஓய்வு நேரமும் வந்தது. தனிமையில் உட்கார்ந்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். எடுக்கப் போகிற முடிவு சரிதானா? என்று ஒன்றுக்கு இரண்டு தரம் ஆழ்ந்து யோசித்தாள். எடுத்த முடிவில் பின் வாங்கக்கூடாது. இதுதான் இறுதி முடிவு. இனி யார் தடுத்தாலும் முடியாது எங்கிற முடிவோடு பள்ளி முடிந்ததும் வழக்கமாகப் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து நிற்கிற சுந்தரவல்லி, ஒரு ஆட்டோவைக் கை காட்டி நிற்க வைத்து ஏறிக் கொண்டாள்.

அவளுக்குப் பழக்கமான வக்கீல் வீட்டு முன் வந்து இறங்கினான். காம்பவுண்ட் தூணில் வக்கீல் ஜீவரத்தினம் என்ற பெயர் பலகை இருந்தது. கிரில் கேட்டை எட்டிப் பார்த்து, காவலுக்கு நாய் இருக்கிறதா என்று கவனித்து, ஹாலிங்பெல்லை அழுத்தினாள். வயதான பெரியவர் வந்தார். அவரிடம், ""அம்மாவைப் பார்க்கணும்''; என்றதும், கேட்டைத் திறந்து விட்டார் "உன் ரூம்ல போய் உக்காருங்க. வக்கீலம்மா வருவாங்க''

"என்ன டீச்சரம்மா. எப்படியிருக்கீங்க. பார்த்து ரொம்ப நாளாச்சு. øŒயக்கியம் தானா?''

"சௌக்கியத்துக்கு என்னம்மா குறைச்சல். நானும் என் பொண்ணுகளும் நல்லாயிருக்கோம். அடுத்த மாசம் இளையப் பொண்ணுக்குக்கலியாணம். அவள் கலியாணமாகிப் போகிற கையோட, ஒங்களால எனக்கு ஒரு உதவியாகணும். அதான் பார்க்க வந்திருக்கேன்''

"சொல்லுங்க. என்ன செய்யணும்..?''

"எனக்கும் புருஷன்னு சொல்ற அந்தாளு கூட உண்டான உறவ சட்டப்படி பிரிச்சு விடணும். ஊடனடியாக டைவர்ஸ் வாங்கித்தரணும். அதுக்கான ஏற்பாட்டைச் செய்யணும். எப்படி''

"திடீரென்னு இப்படியொரு முடிவு. இவ்வளவு காலமும் அனுசரிச்சுத்தானே போயிருப்பீங்க. இந்த மாதிரி இருக்கிற காலத்தைக் கடத்திட்டுப் போக வேண்டிய தானே?''

pic_620

"மேட்டாப்பல பார்த்தா அனுசரிச்சுப் போன மாதிரிதான் இருக்கும். ஆனா நான் பல வருஷமா விக்கவும் முடியாம விழுங்கவும் முடியாம சித்திரவதை அனுபவிச்சுக்கிட்டிருக்கேன், பிள்ளைங்க வளரட்டும். கலியாணம் முடியட்டும்னு தான் காத்திருந்தது. அந்தக் காலம் வந்துற்று. இனியும் அந்தாளு மூஞ்சில முழிக்கக் கூடாது. இப்பமே விடுதலை வேணும். ஆதோட என் உழைப்புல இருந்து ஒரு சல்லிக்காசு கூட அந்தாளுக்கு போயிடக் கூடாது. நான் சம்பாதிச்சுக் கட்டுன வீடு. ஏம்பணமெல்லாம் என் ரெண்டு பிள்ளைங்க பேருலையும் எழுதிடணும். அதுக்கு நீங்க தான் ஏற்பாடு செய்யணும்''

" அந்தாளுக்கு வயசென்னாகுது?''

"அறுபது''

"அறுபது வயசாகுது எங்கீங்க. இனி வயசாக வயசாகப் பெலவீனப்படுவாரு. அவரால ஒண்ணும் செய்ய முடியாது. அவர வச்சு காப்பாத்தணும்ல…?''

"இப்பம் காப்பாத்தாமையா இருக்கோம். தெருவுல கெடக்கிறவரைத் தூக்கிட்டு வந்து படுக்க வைக்கோம். ஒரு குறையும் அவருக்கு வைக்கல. ஒரு வழிக்கும் வரக்காணோம். இப்படித்தான் போவேன்னா என்ன செய்ய முடியும்? எங்கையும் போகட்டும். அலையட்டும் கெடக்கட்டும். என்னாலே ஏண்ட முட்டும் பார்த்தாச்சு. அவமானப்பட்டதுதான் மிச்சம். இனியும் அவமானப்பட முடியாது. அந்தாளு சகவாசமே வேண்டாம். ரெண்டு பேருக்கும் ஒட்டுறவு இல்லன்னு கோர்ட்ல டைவர்ஸ் வாங்கித் தந்திடுங்க''

"என்னயிருந்தாலும் ஒங்க கழுத்துல தாலிக் கட்டுன புருஷனில்லையா அவுரும்''

"குடிச்சி, அழுச்சி, சீட்டாடி, கூத்தியா வீட்டுக்குப் போய் கைல உள்ள பணங்காசையெல்லாம் கொடுத்துட்டு மானம், மரியாதை இல்லாத ஆள் கூட இவ்வளவு நாள் வாழ்ந்தது போதும். இந்த மாதிரி ஆளை மனுஷனா நெனச்சுக் கூட சிநேகம் கொள்ள முடியாது. அப்படியே அந்தாளு வீட்டச்சுத்தி வந்தா வந்துட்டுப் போகட்டும். நாய் கூடதான் வீட்டச்சுத்தி வருது. அதுக்கென்ன செய்ய முடியும்?''

"இவ்வளவு வெறுப்பு இருக்கு உங்களுக்கு. அதுக்கு நான் தடையாயிருக்க மாட்டேன். கோர்ட்ல டைவர்ஸ் வாங்கித் தருகிறது எம்பொறுப்பு. அதுல எந்தச் சிரமமும் இருக்காது. இவ்வளவு வயசுக்குப் பெறவு பிரிவு எங்கிறது தான் கஷ்டமாயிருக்கு''

"நாந்தான் முதலேயே சொன்னேனே…. எம் பொண்ணுக வருங்காலத்த நெனச்சுத்தான் இவ்வளவு பொறுமையா இருந்தது. இல்லன்னா எப்பமோ வாங்கி இருப்பேன்''

"சரி நாளை சுதந்திரதினம் தானே. காலைல பத்து மணிக்கு மேல வாங்க. அதுக்கு முன்னால திரும்ப ஒரு தடவையும் யோசித்துக்காங்க. உங்க முடிவுக்கு நான் தடையா இருக்க மாட்டேன். வாங்க''

"ம்''

எதையும் தன் மகள்களிடம் சொல்லக் கூடாது என்று நினைத்தாள் சுந்தரவல்லி. அப்படியே அவர்களாகத் தெரிந்து கொண்டால் பரவாயில்லை. கொஞ்சம் குமறுவார்கள். குழம்புவார்கள். ஆவேசப்படுவார்கள். ஆனால் குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சந்தேகத்துக்கு இடமின்றி குடும்பப்பாரத்தைச் சுமர்ப்பது அம்மா என்று. மேலும் அப்பா, புத்திச் சொல்லக் கூடியவள். அப்பா எதையும் கேட்டதேயில்லை. அம்மாவை அடித்து அலற வைத்த நாட்கள் ரொம்ப. அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, குடியை நிறுத்தி, மனம் திரும்ப வைக்கிற வசீகரக்கலையைக் கற்க மருத்துவரிடம் கூட்டிக் கொண்டு போய் அப்பாவைக் காட்டினாள். அதுலையும் பிரயோஜனம் இல்லை. கொடுத்த மருந்தைச் சாப்பிடாமல் திரும்பவும் சொந்தக் கோதாவில், சொல் பேச்சக் கேட்காமல்தான் அலைந்தார். இப்படிப்பட்ட அப்பாவை என்ன செய்ய? அம்மாவின் முடிவில் தான் என்ன தப்புக் கண்டுபிடிக்க முடியும்?

இரவு விளக்குகளை அணைத்து விட்டு கதவுகளைப் பூட்டி நல்லத் தூக்கத்தில் இருக்கும் போது, வீட்டுக் கேட்டை ஆட்டிக் குலுக்கி இழுத்து கூப்பாடு விட்டு கூப்பிட்டுக் கொண்டே இருந்தார் சோம சுந்தரம். பொறுமை தாங்காமல் எழுந்து வந்து கேட்டைத் திறந்தாள் சுந்தரவல்லி லைட் வெளிச்சத்தில் குடி போதையில் தள்ளாடிய சுந்தரத்தின் பேச்சு நீண்டது. வார்த்தை தடித்தது. தாயும் மகளையும் தூங்க விட வில்லை அவர். சண்டையைத் தொடர்ந்தார். வழக்கம் போல பணத்தை, அங்ஙன கொண்டு வைத்ததும் எடுத்துக் கொண்டு போய் விட்டார். அவர் போய் மூணு நாட்களாகி விட்டது. வீட்டுப் பக்கம் ஆளைக்காணோம். கூராமல் இருந்தால் நிம்மதியாக இருக்கும். கூரவே கூடாது இருந்தாள். வந்தாலும் வீட்டுக்குள்ள விடக் கூடாது. அதற்கும் காலம் கனிந்து விட்டதாக நினைத்தாள் சுந்தரவல்லி.

வக்கீலிடம் பேசிவிட்டு, மற்றொரு ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தாள். மணியும் ஒம்பதரையைத் தாண்டி விட்டது.காம்பவுண்ட் கேட் திறந்திருந்தது. வீட்டில் எல்லா லைட்களும் எரிந்தன. ஏதிர்த்த வீடு, பக்கத்து வீடு என்று வந்து நிற்கிற ஆட்களையும் பார்க்க முடிந்தது. ஆட்டோவுக்குப் பணத்தைக் கொடுத்து விட்டு பதற்றம், குழப்பம், பரப்போடு சுந்தரவல்லி கேட்டாள்.

"என்ன நடந்துச்சு. எல்லாரும் கூடி நிக்கீங்க?''

கலவரத்தோடு நின்றவர்கள் வாயத்திறப்பதற்குள், புவனா பதறிக் கொண்டு வந்தாள். அவள் புடவையின் முந்தியை வாயில் கவ்வியபடியே அழுதாள். துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்ள வாயில் இருந்து துணியை எடுத்தபடியே பேசினாள்.

"அப்பா செத்துப் போய் தூக்கிக் கொண்டு வந்து கெடத்திருக்காங்க..''

சுந்தரவல்லி திடுக்கிட்டாள். ஆனால் பதறவில்லை, பதற்றப்படவில்லை. நிலை குலைந்து போயிடவில்லை. கலங்காமல் நின்றடள். ராத்திரியானால் எப்பமும்; வீசுகிற குளிர்ந்த காற்று அவளையும் தழுவிச் சென்றது. எதையோ, நினைத்து தலையை ஆட்டிக் கொண்டாள். துக்கம் தாங்காத மகள் புவனா, வீட்டுக்குள் போள் சவமாகக் கிடக்கிற அப்பா உடலைப் பார்த்து ஏங்கி ஏங்கி அழுகிறச் சத்தம் வெளியில் கேட்டது, சிறிது நேரம் கழித்து சுந்தரவல்லி, ஆட்களிடம் பதறடமல் விபரம் கேட்டு தெரிந்து கொண்டு, அவசரப்படாமல் வீட்டுக்குள் வந்தாள்.

Pin It