கறுப்புப் பணம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வேகத்துடன் விவாதிக்கப்படும் காலம். அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டமும், ராம்தேவ் போன்றவர்களின் அதிரடியான அறிவிப்புகளும், காட்சி ஊடகங்களை ஆக்ரமித்துக்கொண்டு விட்டன. இந்த பரபரப்பு எட்டு திசைகள் தோறும் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்றபோதிலும், இதன் மூலம் ஊழலோ கறுப்பு பணமோ அகற்றபடும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை. நிறைவேற்றுவதற்கு முன்வைக்கப்பட்டு திட்டங்கள் மீதோ இதனை நிறைவேற்றி தருவதாக அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளின் மீதோ யாருக்கும் நம்பிக்கை என்பதும் இல்லை. இது தான் இன்றைய இந்திய எதார்த்தம்.

இந்திய ஆட்சியாளர்கள், நல்லவர்களை போல் ஒப்பனைப் புனைந்து ஆட்டம் காட்டம் காட்டுவதில் வல்லமை பொருந்தியவர்கள். இப்பொழுது கறுப்பு பணத்தைக் கைப்பற்றியே தீருவோம் என்பதிலும் தனது தீவிர நடிப்பாற்றலைக் காட்டத் தெடங்கியுள்ளனர். தனிக்குழு அமைத்து வெளிநாடுகளுக்கு சென்று புலன் விசாரணை செய்து குற்றவாளிகளைப் பிடித்து நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றுகின்றனர். எதனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.

உலகில் பல நாடுகளில் இந்தியக் கறுப்பு பணம் குவிக்கப்பட்டுள்ளது. சுவீஸ் வங்கி என்றவுடன் இந்திய சட்டவிரோதப் பணத்தை தான் உலகில் பலரும் ஞாபகப்படுத்தி பார்க்கிறார்கள். இந்திய ஏழைகளை கசக்கிப் பிழிந்ததில் இந்த கறுப்பு பணம் தான் முக்கியமான பங்கை வகிக்கின்றது. நாம் ஒவ்வொருவரிடமும் அடிப்படையில் எழும் கேள்வி இந்த ஆட்சியாளர்களுக்குத் தெரியாமல் கறுப்பு பெருகியிருக்க முடியுமா? என்பது தான்.

அருவெறுப்பை உருவாக்கும் இந்திய தேர்தல் செலவுகளுக்கு சட்டபூர்வமற்ற பணம் தேவைப்படுகிறது. தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி பலகோடி ரூபாய்கள் இவர்கள் செலவு செய்ததற்கான மர்ம சுரங்மாக விளங்குவது இந்த கறுப்பு பணம் தான். இன்று நடைபெறும் தேர்தல்களில் கறுப்புபணம் இல்லை என்றால், பலரால் வெற்றிபெறவே இயலாது. எனவே தான் ஒருபுறம் கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்ற வேடத்தை அரங்கத்தில் மேடையேற்றிவிட்டு மறுபுறத்தில் மேடைக்கு அடியில் கறுப்புப் பணத்தைக் குவித்து வைக்கும் துரோகத்தை செய்கிறார்கள்.

நாட்டின் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி கறுப்பு பணத்தை எடுப்பதில் 37 நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளேன் என்கிறார் இன்று. இதில் பணம் போட்டவர்கள் யார் என்ற விபரத்தை வெளியிட்டால் தானே உண்மை நிலவரத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இந்த பட்டியலை ஆளும் காங்கிரஸ் வெளியிடும் என்ற நம்பிக்கை நமக்கு இல்லை. இந்த ஏமாற்று வேலையை எதிர்த்து போராடுவதைத் தவிர நமக்கும் வேறு வேலையில்லை.

Pin It