நேர்காணல் - சந்திரகாந்தன்

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவராகத் தாங்கள் தேர்வாகியிருக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள். அந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?

1980 லிருந்தே அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தோடு எனக்குத் தொடர்ந்து உறவு இருந்து வந்திருக்கிறது. அதன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்ட நேரங்களில், தமிழ்நாட்டின் பிரதி நிதியாக நான் பரிந்துரை செய்யப்பட்டு டில்லி மத்தியக் குழுவால் அழைக்கப்பட்டு கலந்திருக்கிறேன். கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் வழிகாட்டுதல் உரை வழங்குவார். மதிப்புக்குரிய தோழர் இந்திர இத்குப்தா, பின்னாளில் தோழர் எ.பி. பரதன் ஆகியோர் கூட்டங்களைத் தொடங்கி வைத்து நெறிபடுத்தியிருக்கிறார். இந்த நேரங்களில் கூட்டங்களில் தலைவராக அவர்கள் என்னைப் பரிந்துரைத்-திருக்கிறார்கள்.

அன்றைய கூட்டங்களில் அவர்களுடைய முக்கியமான பிரச்சினையாக இருந்தது. உருது மொழிக்கு சம அந்தஸ்தும், சமய நல்லிணக்கமும். நான் இங்குள்ள பிரச்சினைகளாகிய தலித்தியப்பிரச்சினை, பெண்ணியப் பிரச்சினை முதலியவை பற்றிப் பேசுவேன். எனக்காக மற்றவர்கள் ஆங்கிலத்தில் பேசத் தொடங்குவார்கள். சற்று நேரத்தில் எல்லாம் மறந்து, ஹிந்தியில் உரையாடிக் கொண்டிருப்பார்கள். எத்தனை முறை நான் குறுக்கிட்டாலும் அவர்களை மாற்ற இயலாது. பாட்னா மற்றும் சில இடங்களில் நடந்த மாநாடுகளுக்கு என்னை அழைத்திருக்-கிறார்கள். தமிழ்நாட்டு நிலைமைகளை நான் விளக்கும்போது ஆவலோடு கவனிப்பார்கள்.

12வது மாநில மாநாடு டில்லியில் நடந்த போது, நானும் இன்றைய நம் மாநிலப் பொதுச்செயலாளர் காமராசுவும் பிரதி நிதிகளாகச் சென்றிருந்தோம். ஹைதராபாத் மாநாட்டில் அகில இந்தியத்துணைத் தலைவராக்கப்-பட்டேன். தொடர்ந்து இந்த டில்லி மாநாட்டில் தலைமைப் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

நம் எல்லா அமைப்புகளையும் போல, நம் கலை இலக்கிய அமைப்பும் அகில இந்திய அமைப்பே. கேரளத்துக்கலை இலக்கியவாதிகள் முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனம் என்னும் பெயருக்குப் பதிலாக யுவகலா சாகிதி என்னும் பெயரில் அதை உருவாக்கி, தொடர்ந்து நடத்திவந்தார்கள். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் என்னும் பெயரை ஜீவா பயன்படுத்தினார்.

1965-ல் பொள்ளாச்சியில் நடந்த 3-வது மாநில மாநாட்டில் புகழ்பெற்ற ஹிந்தி நடிகர் பால்ராஜ்சகானி, உருதுக்கவிஞர் சாஃப்ரி அகமது ஆகியோர் கலந்து கொண்டார்கள். விமானத்தில் வந்த பால்ராஜ் சகானி போக்குவரத்துக்கு பெற்ற தொகை ஒரு குவளைத்தேனீர்! புகழ்பெற்ற கேரள எழுத்தாளர் தகழி சிவசங்கர பிள்ளையும் மாநாட்டில் கலந்து கொண்டார்.

1968-ல் நடந்த திருச்சி மாநில மாநாட்டில் பிரபல ஹிந்தி எழுத்தாளர் கே.எ.அப்பாஸ், நாட்டார் வழக்காற்றியல் மேதை சங்கர் சென்குப்தா, அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அன்றைய தேசியச் செயலாளர் சஜ்ஜாத்ஜாகிர், கேரள இலக்கிய மேதைகள் கே. தாமோதரன், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த மாநாட்டில் முழுக்க முழுக்க உருதுக் கவிஞரைக் கொண்டு உருது பாணியில் நடத்தப்பட்ட முசாயிரா என்னும் கவியரங்கம் திருச்சியில் வாழும் உருது பேசும் மக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.

அந்த மாநாட்டில் தான் கலை இலக்கியப் பெருமன்றத்தை அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளையாக இணைக்கும் முடிவு முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அகில இந்தியத் தலைமையை நம் மாநாட்டுக்கு அழைக்கும் இந்த மரபு திருப்பூர் மாநாட்டிலிருந்து முறையாகப் பின்பற்றப் படவில்லை. திருவண்ணாமலை மாநாட்டில் அன்றைய அகில இந்தியத் தலைவர். நம்வார்சிங், பொதுச் செயலாளர் பேராசிரியர் கமலாபிரசாத் இருவரும் கலந்து கொண்டார்கள்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றம் அதற்கான வரலாற்றுப் பின்னணி குறித்து இளைய தலைமுறையினர்க்கு அறிமுகமாகச் சில கூறுங்களேன்.?

அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனம் 1936-ல் தொடங்கப்பட்ட அமைப்பு முன்ஷிபிரேம் சந்த், மாபெரும் உருது கவிஞர் மக்தும் முகமது உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர் கே.ஏ. அப்பாஸ் முதலியவர்கள் அதை உருவாக்கி வளர்ந்தவர்களில் முக்கியமானவர்கள்.

அச்சங்கம் இந்திய முற்போக்கு இலக்கியத்திற்கு, முற்போக்கு இயக்கங்களுக்கு ஆற்றிய பணிகள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?

அந்தக் காலத்திலேயே “இரண்டு இலைகளும் ஒரு மொட்டும்சு என்னும் நாவலில் தேயிலைத் தோட்ட தொழிலாளர் பிரச்சினையையும், தீண்டதகாதவன் என்னும் படைப்பின் வழி தலித் மக்கள் பிரச்சினைகளையும் இலக்கிய பரப்புக்குகொண்டு வந்த மேதை. முல்க்ராஜ் ஆனந்த் இந்த அமைப்பைச் சார்ந்தவர். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் இம்மாதிரிப்-படைப்புகள் எவையும் வெளிவரவில்லை என்பதை ஒப்பிட்டு பார்க்கும்போதுதான் அந்த மேதைகளின் சிறப்பு நமக்கு விளங்கும்.

தன் எழுத்துக்களால் உலகைக் கவர்ந்த கே.எ. அப்பாஸ் இந்த அமைப்பைச் சேர்ந்தவர். தமஸ் என்னும் நாவல் மூலம் மதப்பகைமயின் குரூரத்தை அம்பலப்படுத்திய பீஷ்மசகானி இவ்வியக்கத்தைச் சார்ந்தவர். நம் எழுத்தாளர் ஜெயகாந்தனை என்றென்றும் அவர்கள் கொண்டாடுகிறார். கவிஞர் ஒ.என்.வி. குரூப்பைக் கொண்டாடுகிறார்கள். எல்லா மாநிலங்களிலும் அமைப்பின் கிளைகள் உள்ளன. புதுப்புதுப் படைப்பாளிகள் உருவாகிறார்கள். ஒரு மாநிலத்தில் சிறந்த படைப்பாளிகளைப் பிற மாநிலங்களுக்கு அறிமுகப்படுத்துதல், பல மாநிலங்களின் எழுத்தாளர்கள் கவிஞர்களை ஒன்று கூட்டி, அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்தல், அவர்களிடையே இலக்கியப் பரிவர்த்தனைக்கு வழிதேடுதல், எல்லாவற்றிலும் மேலாக சிறந்த படைப்புகளை உருவாக்கி, பிறரால் பின்பற்றத்தக்க மாதிரிகளாக இளம் படைப்பாளிகளுக்குக் கொடுத்தல், தலித்தியம், பெண்ணியம், சிறுபான்மை இயல் முதலிய துறைகளில் அகில இந்திய அளவிலான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல், எனப்பல முயற்சிகள் அகில இந்திய அளவிலும் வட்டார அளவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன இவை விரிவுபடுத்தப்பட வேண்டும்.

இந்தியா என்பது பல்வேறு மொழிகளின் சங்கமம் பலதரப்பட்ட பண்பாட்டுக் கோலங்களின் பேரிணைப்பு இவை ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கின்றனவா, ஒன்றை ஒன்று எதிரியாகக் கருதி, வளர்ச்சிக்குத் தடை இருக்கின்றனவா?

இந்தியா என்பது பல்வேறு மொழிகளின் நாடுகளைக் கொண்ட ஒன்றியம். சென்ற டில்லி மாநாட்டிலே ஒரு கவியரங்கம் நடந்தது. மராத்தியக் கவிஞர் ஒருவர் தன் கவிதையை மராத்தியில் படித்தார். வங்காளி ஒருவர் வங்க மொழியில் படித்தார். மலையாளி ஒருவர் மலையாளத்தில் படித்தார். ஹிந்தியில் படிக்கப்பட்ட கவிஞர்களுக்கே வரவேற்பும் பாராட்டும் சிறப்பாகக் கிடைத்தன. தமிழ் அங்கே அறியப்படாத மொழி. நாம் தமிழில் பேசினால் மொழி பெயர்க்க வேண்டும். படித்தவர்களிலும் 15 முதல் 20 சதவிகிதம் பேருக்கே ஆங்கிலம் தெரியும். நம் ஆங்கிலம் பெரும்பான்மையோருக்குப் புரியாது. இதுதான் அங்குள்ள நிலைமை. ஹிந்தி தெரிந்திருந்தால் இந்தியா முழுவதிலும் உள்ள மக்களிடம் மனம் திறந்து உரையாடலாம். ஹிந்தி தெரியாததால் ஊமையனாக உட்கார்ந்திருக்க வேண்டியதிருக்கிறது.

ஒன்றை ஒன்று எதிரியாக கருதும் நிலை இல்லை. புரியாமையை எவ்வாறு புரிந்து கொள்வது.

மாநிலங்களுக்கு இடையே நதி நீர்ப் பிரச்சினை, போன்றவைகள் தீவிரப்பட்டு வருகின்ற சூழலில், மக்களிடையே இணக்கம் உண்டாக இலக்கியவாதிகள் எப்படிச் செயல்படவேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

நதி நீர்ப் பிரச்சினை போன்ற மக்கள் பிரச்சினைகள் அரசியல்வாதிகளின் பேராசையால் அரசியல் பிரச்சினைகள் ஆக்கப்பட்டுவிட்டன. அரசியல் என்று வரும்போது, மக்கள் மறக்கப்பட்டு, அரசியல் உணர்வு தூண்டப்பட்டு, மாநிலங்களுக்கிடையே தீர்க்கப்பட முடியாத மோதலாக மாறுகிறது. மத்திய அரசும் வலுவற்றுப் போய்க்கிடக்கிறது. பண்பாட்டுத்துறையில் நாம் மக்களிடையே நெகிழ்ச்சி ஏற்படுத்தலாம். அரசியலைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியாவில் பண்பாட்டாளர்களிடம் இன்று வலு இல்லை தாகூர் மாதிரியான வலுவுள்ள பண்பாட்டாளர் இன்று நம்மிடையே யார் இருக்கிறார்?

தாய்மொழி, பெரும்பான்மை இந்தியர்கள் பேசும் ஹிந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழித் திட்டத்தை இலக்கியத்தில் கடைப்பிடித்தால் ஒரு படைப்பாளியின் படைப்பும், கருத்தும் ஏராளமான மக்களைச் சென்றடையுமல்லவா?

தாய்மொழியோடு ஆங்கிலமும் ஹிந்தியும் தெரிந்து கொள்ள வேண்டியது இந்திய அளவில் செயல்படுபவர்களுக்குத் தேவையானது. பண்பாட்டுத்துறையில் செயல்படும் நம்மைப் போன்றவர்கள் ஹிந்தியைக் கற்றுக் கொள்ளாமல் எதையும் சாதித்து விட முடியாது. நான் அடிக்கடி நினைத்துக் கொள்வது உண்டு. பெரியாருக்கும், குன்றக்குடி அடிகளாருக்குமானால், இந்தியாவின் பண்பாட்டு முகம் வெகுவாக மாறியிருக்கும். தமிழ்நாட்டை விட்டு வெளியே போனவர்களுக்கு வேறு மொழிகள் தேவையில்லாமலிருக்கலாம். வடநாட்டோடு தொடர்பு வைக்க வேண்டிய தேவையுள்ளவர்கள் ஹிந்தியில் படிக்க எழுத மற்றும் சரளமாக உரையாடக் கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

பொதுவாகவே எத்தனை மொழி தெரியுமோ அத்தனைக்கு மனிதர் விசலாமானவராக இருப்பார். மொழியறிவு மிக முக்கியம் நம்மவர்களுக்கு மொழியறிவு என்பது ஆங்கில மொழியறிவு என்ற குறுகிய சிந்தனையாய்ச் சிறுத்துவிட்டது.

சாகித்ய அகாதமி, நேஷனல் புக்டிரஸ்டும் போன்ற முற்போக்குப் படைப்புகளை இந்தியா முழுதும் கொண்டு, செல்ல ஒரு வெளியீட்டு நிறுவனம் அமைக்க திட்டம் உண்டா?

நல்ல படைப்புகளை சாகித்ய அகாதமியும் நேஷனல் புக்டிரஸ்டும் சிறப்பாக வெளிக்-கொணர்கின்றன. மொழிபெயர்த்தும் வெளியிடுகின்றன.

நமக்கு என்.சி.பி.எச். இருப்பது போல, பெரும்பாலான மொழிகளில் நமக்கு வெளியீட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. டில்லியில் பி.பி.எச் இருக்கிறது. நமக்கு உடனடித் தேவை சிறந்த மொழி பெயர்க்கக் கிடைத்தால், வெளியிட வெளியீட்டகங்கள் ஏராளம் உள்ளன. தரமான மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கவும், பயிற்சி அளித்து மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

உலக அளவில், பல மொழிகள் அழிந்து வருகின்றன என ஒரு கணிப்பு கூறுகிறது. அங்ஙனம் அழியும் நிலையில் உள்ள இந்திய மொழிகளைக் காக்க ஏதேனும் திட்டம் வகுக்கப் போகிறீர்களா?

தமிழ் மொழிக்கே இந்த ஆபத்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. என அறிஞர்கள் கருதுகிறார்கள். ஆங்கிலக்கலப்பு தமிழைக் கடுமையாகப் பலவீனப்படுத்திவிட்டது. இந்த நிலையைச் சீர்செய்ய தமிழ் சமூகங்களும், அமைப்புகளும், அரசும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழும் அப்படி அழிந்து விடும் என்று தாங்கள் கருதுகிறீர்களா?

உள்ளூர எனக்கு அந்த அச்சம் உண்டு. நல்ல தமிழில் பேசுபவர்களை ஏளனமாகப் பார்க்கும் பார்வை மேலோங்கி வருகிறது. தமிழ் என்றதும் நான் இலக்கணத் தமிழைத் சொல்லவில்லை. வளரும் தமிழைச் சொல்லுகிறேன். ஜீவாவும், டி.கே.சியும் சுட்டிக்காட்டிய தமிழ் அது. இந்தத்தமிழைப் பேசுவதற்குக் கலை இலக்கியப் பெருமன்ற அமைப்பினுள்ளே எத்தனை சதவீதம் பேரை நீங்கள் சுட்டிக் காட்ட முடியும்? தமிழ் அழிந்து போய்விடக்கூடாது என்னும் உணர்-வுடையவர்களாக நம்மவர்களிலே எத்தனை பேர் இருக்கிறார்கள்?

இந்திய முற்போக்கு எழுத்தாளர்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்த, PWA ஒரு வலிமையான அமைப்பு என்ற நிலையை உருவாக்கத் தாங்கள் வைத்திருக்கும் திட்டங்கள் எவை?

மாநிலங்களின் தனித்த குரல்களை, குறிப்பாக பண்பாட்டு குரல்களை பிற மாநிலத்தவர் புரியும்படிச் செய்துவிட்டாலே பெரிய வெற்றிதான். மண்டல அளவிலும், அகில இந்திய அளவிலும் சில கருத்தரங்குகளை நடத்த முயற்சிக்கலாம்.

Pin It