வழக்கு எண் 18/9 – ஒரு பார்வை

தமிழ்த் திரையுலகம் இன்னமும் பெருமையுடன் நோக்கும் இயக்குநர் மகேந்திரன் அவர்களின் உதிரிப்பூக்கள் பெண் சூழலின் குறியீடாக பேசப்பட்ட யதார்த்த படைப்பு. முள்ளும் மலரும் கூட பெண்களின் சூழலை மையப்படுத்தியது. நாயக பிம்பங்கள் கோலோச்சிய காலகட்டத்தில் அசலான ஒரு கிராமத்தை, கிராமத்து பெண்ணான மயிலுவை 16 வயதினிலே படத்தில் மையப்படுத்தி பிரபல கதாநாயகர்களை சப்பாணியாகவும், பரட்டையாகவும் இயக்குநரின் நடிகர்களாக காட்டிய பெருமை இயக்குநர் பாரதிராஜாவை சாரும், இயக்குநர் விஜயனின் பாதை தெரியுது பார், பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை, பாலுமகேந்திராவின் வீடு, ஸ்ரீதர் ராஜனின், கண் சிவந்தால் மண் சிவக்கும், துரையின், பசி, ஆபாவாணனின் ஊமைவிழிகள், நாசரின் அவதாரம், வி.சேகரின் படங்கள், பாலாவின் நந்தா, பிதாமகன், சேரனின் தவமாய் தவமிருந்து, வசந்தபாலனின் அங்காடித்தெரு, சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின்குதிரை, பாண்டிராஜின் பசங்க, மெரினா, ராசுமதுரவனின் மாயாண்டி குடும்பத்தார், சற்குணத்தின் வாகை சூடவா, அமீரின் பருத்திவீரன், சீனு ராமசாமியின் தென்மேற்குப் பருவகாற்று, தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் என்று 1980களிலிருந்து மக்களுக்கான, அதுவும் விளிம்புநிலை மக்களான சிறுபான்மையினர், மகளிர், அரவாணிகள், தலித்துகள், அடித்தட்டு உழைக்கும் மக்களை கருவாக்கி உருவாக்கிய இயக்குநர்களின் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம் நாயக துதிபாடலும், சாதிப்பெருமையும், வக்கிரமும் வன்முறையும் ஆதிக்கம் செய்த படங்கள் பல மக்கள் மனங்களிலிருந்து தூக்கியெறியப்பட்டன.

துவக்கத்தில் மக்களுக்கான படம் எடுத்தவர்களில் சிலர் பின்னாளில் சுயம் இழந்து, வணிக நோக்கில் பின்னோக்கி சென்றதன் விளைவு மீண்டும் ஒரு வெற்றிடம் உருவானது. திரை ஆதிக்க கொம்பன்களின் வாரிசுகள் பெருநிறுவனங்களின் மகா ஆதிக்கம், கடந்த ஆண்டுகளில், சிறு முதலீட்டாளர்களை, புதியவர்களை காணாமல் அடித்த-து. திரையரங்குகள், விநியோகம், தயாரிப்பு என ஆளும் ஆதரவுடன் முஸ்தீபுகள் தொடர்ந்தன. நேர்மையான படைப்பாளிகள் மனம் குமுறினர். ஆட்சியாளர்களின் வாரிசுகள் திரைப்பட தயாரிப்பு, நடிப்பு என்ற போர்வையில் கறுப்பை, வெள்ளையாக்கிக் கொண்டனர். ஊழல் பணம் உழைத்த பணமாக கணக்கு காட்டப்பட்டது. நல்ல படைப்பாளர்கள், சிறு முதலீட்டாளர்கள் முண்டியடித்து, மூச்சு முட்டி தலையெடுப்பது என்பது தற்போது சிறிது இலகுவாகியிருக்கிறது இருந்தாலும் இப்போதும் பெரு முதலாளிகள் சிறு மீன்களை விழுங்க காத்துக் கொண்டுதான் இருக்கிறது.

அன்றாட வாழ்க்கையில், ஒவ்வொருவர் வாழ்விலும் வழி நடத்துபவர்கள் எல்லா குண நலன்களும் கொண்டவர்களே. ஆனால் திரைப்படங்களில் கதாநாயகன் நல்லவனாகவே காட்டப்படுகிறான். பெரும்பாலானவர் வாழ்க்கையில் பெண்ணே ஆகப்பெரியவள், அவளே எல்லாமுமாக இருக்கிறாள் இதை எத்தனை பேர் சொல்லியிருப்பார்கள். ஏழைக்கு ஏழைதான் உதவிக் கொண்டிருக்கிறானே தவிர ஏழைக்கு பணக்காரன் ஆதாயமின்றி உதவுவதல்ல. அதற்கே ஏழை நாயாய் நன்றி பாராட்டுகிறான். துரோகமும், குழிபறிப்பும், நயவஞ்சகமும் குடிகொண்டிருக்கும் பணம் படைத்தவர்களின் தோலுறிக்கும் படம் தமிழில் மிக குறைவு தனது காதல் படத்தின் வழியே இளம் உழைப்பாளியின் ஆத்மார்த்தமான காதலையும், அதை நசுக்கி எரியும் சாதி வெறியின் உக்கிரத்தையும் உரக்க சொன்னவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

கல்லூரி என்ற தனது அடுத்த படத்திலும், அடித்தள வர்க்க நடுத்தர வர்க்க பிள்ளைகளின் ஒருங்கிணைந்த உண்மையான கல்லூரி வாழ்க்கையின் ஊடாக ஒளிரும் காதல், கிண்டல் நேயம், நட்பு, கொண்டாட்டம் எந்தவித ஆபாச புனைவுகளின்றி, மடடரகமான கொச்சை வசனங்கள் இன்றி மாணவ சமுதாயத்தை உயர்த்திப்பிடித்தது கல்லூரி திரைப்படம் அப்பாவி மாணவிகள் மீதான கொடூர தாக்குதலையும் உண்மையானதாக காட்டியதால் ஆளும், எதிர் கட்சிகளின் அரசியல் பார்வைகளால் மூடி மறைக்கப்பட்டது.

வணிகரீதியான தோல்வி என்பது ஒரு சரியான படைப்பாளிக்கு தோல்வி அல்ல. கல்லூரிக்குப் பிறகு எற்பட்ட இடைவெளி பலாஜி சக்திவேல் அவர்களை மெருகேற்றியது. ஒவ்வொரு அடியையும் நிதானமாக வைத்திருக்-கிறார். தனது இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை. இன்னும் வேகமாக பொறுப்பான-வராக அடுத்த படைப்பான வழக்கு எண்18/9 ஐ உருவாக்கியிருக்கிறார். மிகச் சிறந்த நாவல் படைப்புகள் படைக்க பல ஆண்டுகள் எடுத்து எழுதுவதாக (தேடலுக்காக) பொன்னீலன் போன்ற நாவலாசி-ரியர்கள் கூறுவர். எழுத்தாளனைப் போன்றே சமூகக் கடமை கொண்ட இயக்குநர் பாலாஜி சக்திவேல் போன்றவர்களும் அப்படித்தான். அதற்கு முதலீட்டாளர்கள் பொறுமை காக்க வேண்டியதும் சமூகக் கடமையாகிறது. இயக்குநர் லிங்குசாமியை விட தயாரிப்பாளர் லிங்குசாமி இதற்காக பாராட்டப்-பட வேண்டிய-வராகிறார்.

அச்சு ஊடகங்களிலிருந்து, காட்சி ஊடகங்கள் வரை அவரவர் பார்வையில் வியந்து பாராட்டு-கின்றன. அப்படி என்னதான் இருக்கிறது வழக்கு எண் 18/9 படத்தில் ஆரம்பமே, விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வின் அவல நிலை, கந்து வட்டிக் கொடுமையினால் கொத்தடிமை முறைக்கு தள்ளப்படும் விவசாயத் தொழிலாளர்களின் கண்ணீரிலிருந்து துவங்குகிறது படம். வட நாட்டு முறுக்கு கம்பெனியில் கசக்கிப் பிழியப்படும் கிராமத்து பள்ளி மாணவன் வேலு, பெற்றோரின் மரணத்தை மறைத்த ஏமாற்றிய நிறுவனப்பேய்களுக்கு எதிராக, கொதிக்கும் எண்ணையை வீசி விட்டு கொந்தளிக்கும் காட்சி-யிலேயே, “எதற்கும் ஒரு எதிர்வினையுண்டுசு என்பதை அறிவிக்கிறார். பசியில் சென்னை நடைபாதையில் சுருண்டு கிடக்கும் வேலுவுக்கு பசி தீர்த்து, நடைபாதை தள்ளு வண்டி இட்லி கடையில் வேலையும் பெற்றுத்தரும் ஈரமுள்ள இதயக் காரியாக வரும் பாலியில் தொழிலாளியாக வரும் பெண் மனதைவிட்டு அகல மறுக்கிறார். நடைபாதை தள்ளு வண்டியும், கை மிதிவண்டியும், வீதியோரமும் பின்னணியாகக் கொண்டே பெரும் பகுதி நம் வாழ்வைப்போல் நகருகிற. அண்ணாந்து பார்க்கும் தூரத்து வசதியானவர்களின் போலித் தனமான ஆடம்பரப் பகட்டுகள், அவுட்டிங்குகள் வசதி படைத்த கபட ஆண்களால், பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை மட்டும் காட்டாமல், அதை எப்படி எதிர்த்து நேர்கொள்ள வேண்டும் என்பதை அந்த பள்ளிப்பெண் வழியே உணர்த்தப்படுகிறது.

தும்பைப் பூவைப்போல மிளிரும் அந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணின் கண்கள் பேசுவது தனிக்கவிதை. அவள் தினமும் பாசம் காட்டுவது மனநலன்குன்றிய சிறுவனிடம் என அங்காங்கே புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான காட்சிகள் வெகு நேர்த்தியாக பின்னப்பட்டுள்ளது.

ஒரு புறம் வசதியான பள்ளியில் படிக்கும் மாணவியையும், மறுபுறம் அதே வயதுடைய, பள்ளியில் படிக்கப்பட வேண்டிய ஏழைப்பெண் வேலைக்கார பெண்ணாகவும் காட்டி களையப்படவேண்டிய வேறுபாடுகள் நம் முன் நிறுத்தப்படுகிறது. அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் நாம் கடந்து போகையில் கவனிக்காத காட்சிகள், காதல்கள், வாழ்நிலைகள் பாலாஜி சக்திவேலால் உற்று நோக்கப்பட்டிருக்கிறது.

காவல்துறையில் உள்ள சில குற்றநரிகளின் கொடூர நயவஞ்ச முகம் தோலுரித்து காட்டப்படுகிறது. மார்க்ஸ், லெனின் புத்தகங்களை சொத்தாகவிட்டுச்சென்ற பொதுவுடமை இயக்கத் தோழரின் மகளாக வரும் வீட்டு வேலை செய்யும் பெண்ணின் காவல்துறை ஆய்வாளரிடம் தரும் கடிதத்தின் வாசகங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. “நீதியை காக்க வேண்டியவர்கள் அநீதிக்கு துணை போகலாமா? ஏழை மக்கள், வீட்டு வேலை செய்யும் பெண்தானே இவளால் என்ன செய்யமுடியும் என்றுதானே நினைத்துவிட்டாய். உன்னை போன்றவர்களுக்கு தகுந்த பாடம் தருவதற்கு எனது தந்தை (பொதுவுடமைத் தோழர்) கற்றுத் தந்திருக்கிறார்சு என பதிலடி தரும் இடம் பொதுவாழ்வில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவர்களுக்கு தரப்படும் மரியாதையாக இருந்தது. வேலுவின் நண்பனாக வரும் கூத்துக்கலைஞனின் வழியே கவனிக்கப்படாத நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கைச் சூழல் பதிவு செய்யப்படுகிறது. இப்படியாக, விவசாயிகளும், திரட்டப்படாத தொழிலாளர்-களும், உதிரித் தொழிலாளர்களும், நாட்டுப்புற கலைஞர்களும், கொத்தடிமைகளும், உழைத்துழைத்து உடலம் தேய்ந்த பெண்களும் நிறைந்த நமது நாட்டில் அவர்களுக்காக, அவர்களின் பண்பாடு, ரசனை, வாழ்க்கை சார்ந்த படங்கள் வெகுகுறைவு. அந்த குறையை வழக்கு எண் 18/9 வழியே நிவர்த்தி செய்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்கள் வணிக நோக்கம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட படங்கள் எப்படி எளிய மக்களுக்கான படங்களாக இருக்க முடியும். அதைத்தான் வீதி நாடகக் கலைஞர் பாதல் சர்க்காரும், ஈரான் இயக்குநர் மக்மல்பப் அவர்களும் கூறுகின்றனர். குறைந்த பொருட் செலவில், எளிமையாக திட்டமிடப்படும் படங்கள் வழியே துணிச்சலுடன் நாம் கூற வேண்டியதை கூறமுடியும். எந்த பகாசூர கொள்ளை நிறுவனங்களிடமும் விட்டுக் கொடுத்து சமரசம் செய்து கொள்ள வேண்டியதில்லை என்கின்றனர். அப்படித்தான் குறைந்த பொருட்செலவில் வழக்கு எண் 18/9 தயாரானதாக கூறப்படுகிறது. இனி குறுப்பட, ஆவணப்பட வாயிலாக சமூகக் கடைமையாற்றி வரும் இளம் இயக்குநர்கள், தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு எளிய முதலீட்டாளர்கள் வழக்கு எண் 18/9க்கு மக்கள் தந்த ஆதரவின் வழியே ஆதரவு தருவார்கள் என்றே நம்பிக்கை வைப்போம்.

அரசியலில் ஆரோக்கியமான கூட்டணி ஏற்படுகிறதோ இல்லையோ? தமிழ் திரையுலகில் சமூகப்பார்வை கொண்ட ஒரு ஆரோக்கியமான படைப்பாளிகள் அங்கொன்றும், இங்-கொன்றுமாக உருவாகிக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் அவரவர் சுயம் இழக்காமல், பொது புத்தியில் ஒரு புரிதலுடன் கூடிய அணியாக அடுத்தடுத்து இது போன்ற படைப்புகளை தோற்றுவித்துக் கொண்டே இருக்க வேண்டும். தமிழ் திரை உலக அளவில் பேசப்படக்கூடிய நான் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துவோம். இனி பாலாஜி சக்திவேல் முதல் என்றொரு எளிய தலைமுறை உருவாகட்டும்.

Pin It