விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த ஜுன் அன்று பள்ளிப்-பிள்ளைகளின் மின்னஞ்சலிலும், குறுஞ்செய்தியிலும் இடம் பெற்ற வாசகம்; நாங்க மீண்டும் ஜெயிலுக்குப் போறோம், இது துணுக்கு என்பதை காட்டிலும் இதன் பின்னே உள்ளே இளம்பிள்ளைகளின் மனத்துயர் கவனிக்கத்தக்கது.

பள்ளியும் கல்வியும் தேர்வுகளும் மதிப்-பெண்களும் குதிரைச் சவாரி நிலைக்கு வந்துவிட்டன, கல்வி என்பது அறிவு பெறும் வாயிலாகவும் தேர்வும் மதிப்பெண்களும் கல்வியறிவின் அடையாளங்களாகவும் எண்ணிய சூழல் இன்று இல்லை. அறிவின் அளவுகோல்களாக தேர்வுகளும், வேலைவாய்ப்பின், தன்முன்-னேற்றத்தின் நுழைவுச் சீட்டுகளாக மதிப்-பெண்களும், சான்றுகளும் ஆகிவிட்டநிலை கவலைக்குரியது.

ஒருபுறம் அனைவருக்கும் கல்விக்கான முயற்சிகள். முதல் தலைமுறையாக பள்ளி, கல்லூரிகளின் படிகளேறும் பிள்ளைகள். இவர்களுக்காக காத்திருக்கும் வேலையின்மையும், வறுமையும். மறுபுறம் தரமிக்க கல்வி நிறுவனங்கள். பொருளாதார வளமிக்க மாணவர்கள் வாரிவழங்கும் கல்வி வள்ளல்கள், வளாக நேர்காணல்கள். டாலர்களில் ஆண்டு ஊதியங்கள். இந்த இருவேறு உலகத்தியற்கைதான்ட இன்றைய இந்தியா அண்மையில் ஊடங்களில் பரவலாக கவனம் பெற்ற சில நிகழ்வுகள் நமது கல்விமுறை குறித்து யோசிக்க வைக்கின்றன. ஒன்று பதினான்கு வயது மாணவன் தனது ஆசிரியையை வகுப்பறையிலேயே குத்திக் கொலை செய்தது. (குத்தினால் செத்துப்போவார் எனத் தெரியாது என்பது அவனது வாக்குமூலம்) மற்றொன்று பதினாறு வயது மாணவன் போதிய மதிப்பெண் வாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டது. பிரிதொன்று பதின்ம வயது பள்ளி மாணவன் ஒருவனும் பேரிளம்பெண்ணான அவனது ஆசிரியை ஒருவரும் பாலியல் ஈர்ப்பில் ஊரைவிட்டு வெளியேறியது. அண்மை நிகழ்வு தைரியலட்-சுமியின் முடிவு.

இவை நிச்சயமாக தனிமனிதத் தவறுகள் என ஒதுக்கிவிடமுடியாதவை. பலவித கனவுகளுடன் இருந்த ஒரு மாணவனைக் கொலைகாரப் பழிக்கு இட்டுச் சென்றது எது? பன்னிரண்டாண்டுகளைப் பள்ளியில் கழித்த ஒரு மாணவனை தன்னம்பிக்கை இழக்கச் செய்து தன்னுயிரைக் காவு கொள்ளத் தூண்டியது எது? சமூக மதிப்பீடுகளைத் தகர்த்து வயதுக்கு மீறிய நெறிபிறழ் முடிவை எடுக்கச் செய்தது எது? பெயரில் தைரியம் தாங்கி பொறியியல் பயின்றவரை சாவுப்பொறியில் தள்ளியது எது? என்ற வினாக்கள் எழுகின்றன. இவை யாவும் பிள்ளைகளின் நடத்தைச் சார்ந்தவை. கல்வியின் பண்பும் பயனுமே நடத்தை மாற்றத்தை உருவாக்குவதுதான் என கல்வியியல் அறிஞர்கள் கூறுவர். அப்படியெனில் நடைமுறையில் உள்ள கல்விமுறை சிக்கலுடையதாக இருக்கின்றது என்பதுதானே உண்மை.

மேற்குறித்த நிகழ்வுகளுக்கு மோசமான திரைப்படங்கள், தண்டனைமுறை, வீட்டுச்சூழல், தோல்வி மனப்பான்மை என ஏதாவது ஒன்றை காரணமாக்கி தீர்ப்புக்கூறி ஒதுங்கிக் கொள்ள முயலக்கூடாது அல்லது இவை விதிவிலக்குகள் என்றும் முடிவு செய்துவிடமுடியாது. ஏனெனில் வெளிச்சத்துக்கு வந்தவை இவை. வெளி உலகுக்கு தெரியாதவை பல அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

பள்ளிகள் என்பவை சமுதாய மையங்கள் என்ற நிலை மாறி மதிப்பெண்கள் எனும் தங்க-முட்டையிடும் கோழிகளை உருவாக்கும் பண்ணைகளாக மாறிவிட்டன. மாணவர்களும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒரே மையத்தில் மதிப்பெண் எனும் கொம்புகளைச் சீவிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

மொழிப்பாடங்கள் தேவையற்றவை. கலைப்-பாடங்கள் வீணானவை என்ற மனநிலை உருவாக்கிவிட்டது. தொடக்கநிலை தொடங்கி நீதிபோதனை போன்ற கதை சொல்லல் வகுப்புகள் காணாமல் ஆகிவிட்டன. கலை இலக்கிய மன்றங்கள், அறிவியல் கழகங்கள், நூலக வாசிப்பு எல்லாம் பள்ளிகளின் நிகழ்ச்சி நிரலில் இருந்த காலம் மாறிவிட்டது. ஏன் உடற்பயிற்சி வகுப்புகள் கூட ஒருசில தனித்திறன் மாணவர்களை வெளியிடங்களுக்கு அனுப்பி பள்ளி நிறுவனங்-களுக்கு விளம்பரம் பெறுவது என்ற நிலைக்குச் சுருங்கிவிட்டது இவை எல்லாம் சராசரி பள்ளிகளின் நிலை.

இன்று இன்னொரு பெருங்கொடுமை உண்டு, உறைவிடப்பள்ளிகள். வீடுகளில் ஓடியாடி விளையாடி விரும்பியதைப் பேசி உண்டு மகிழ்ந்து உறவுகளோடு கொஞ்சி குலாவி இருக்க வேண்டிய குழந்தைமைப் பருவம் காவுகொடுக்கப்படுகின்றது. போதிய கழிப்பிட, இருப்பிடவசதி, நல்ல உணவு, உறக்கம் ஏதுமின்றி சிறைக்கூடங்களில் சிக்கியது போன்ற உணர்வில் பிள்ளைகள், எல்லாவற்றுக்கும் மேலாக இளம் பிஞ்சுகளின் இயல்பூக்க எதிர்பார்ப்பான அன்பும் நேசமும், அரவணைப்பும், பாதுகாப்புணர்வும் பறிபோகும் அவலம் ஊரும் உறவுகளும் நிலவியல் சார் இயற்கைச் சுழலும் மீறப் பிடுங்கி நடப்பட்ட குரோட்டன்ஸ்களாக ஆகிப்போகின்றனர். இவைகுறித்து சமூகவியல், உளவியல் ஆய்வுகளை உடனடியாக நடத்தியாக வேண்டும். இப்பள்ளிகளில் சேரும் பல்லாயிரம் மாணவர்களில் சில நூறு மாணவர்களே சிறப்பிட-மதிப்பெண்கள் பெறுகின்றனர். எஞ்சிய பெரும்பாலானவர்கள் மதிப்பெண்கள் மட்டுமின்றி மனிதத் தன்மையும் கெட்டழிகின்றனர் என்பதை உணரப் போவது எப்போது?

வீட்டில் மிக சுதந்திரமாக இருந்த மாணவர்கள் பள்ளியில், விடுதியில் மிகுந்த கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகும் போது விரக்திநிலைக்குத் தள்ளப்படுகின்றனர். உறங்கும் நேரம் போக எல்லா நேரமும் படித்தல், எழுதுதல் என்பதான நெருக்கடி இனம் புரியாத வெறுப்பையே விதைக்கும். இத்தகு நிலைக்கு காரணமான பெற்றோர்கள். ஆசிரியர்கள். சமூகம் மீதான எதிர்வினையாக குழந்தைகள் நெறிபிறழ் நடத்தைகளில் ஈடுபடுகின்றனர்.

இன்றைக்கும் பள்ளிகளுக்கு அருகில் கவனித்தால் பள்ளி தொடங்கும் காலைநேரம் பதுங்கிப்பதுங்கி வகுப்புகளுக்குச் செல்லும் பிள்ளைகள். மாலை பள்ளி முடியும் மணி ஒலித்ததும் கூடு திரும்பும் பறவைகளையத்த உற்சாகத்துடன் வெளியேறுவதைக் காணமுடியும். இந்த தயக்கத்திற்கும் உற்சாகத்திற்குமான உளவியலை உள்வாங்கிட வேண்டும். நாளை உலகம் அழியப் போகிறது என்றால் கூட அப்ப பள்ளி விடுமுறையா எனக் கேட்கும் குழந்தைகளின் மனதில் பள்ளியை விளையாட்டு மைதானமாக, பூந்தோட்டமாக, திருவிழாக்கால சந்தையாக ஆக்கிக்காட்ட வேண்டாமா?

எப்பொழுதும் எங்கும் படி...படி... என்ற சொற்களே மாணவர்களைச் சுற்றிச் சுழன்று வருகின்றன. காலை, மாலை தனிப்பயிற்சி வகுப்புகள் வேறு.

ஆசிரியர்களை இரண்டாவது பெற்றோர் என்பர். பிள்ளைகளை தனது மக்களாக கருத வேண்டிய ஆசிரியச் சமுதாயம் தனது மக்களையும், மாணவர்களாகவே நடத்துவதை தவிர்த்ததாக வேண்டும்.

இன்று கூட்டு குடும்பங்கள் சிதைந்து தனிக்குடும்பங்கள் பெருகிவிட்டன. வீட்டிலும் ஒன்றிரண்டு பிள்ளைகள்தான். பொருளாதாரம் தேடி வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் பெற்றோர்-களிடமும் பிணக்குகள். பொருள்வயின் பிரிவு மற்றும் குடும்பச்சிதைவுகளால் ஒரு பெற்றோர் குழந்தைகளின் விகிதம் அதிகரித்துவிட்டது. பெற்றோரின் சுற்றத்திலிருந்து பிடுங்கப்பட்டு முகாம்களும் விடுதிகளுமே வாழ்விடங்களாகிப்-போன நிலை ஆகிய இச்சூழல்கள் எல்லாம் சேர்ந்துதான் பிள்ளைகளின் ஆளுமையை, ஆளுமைச் சிதைவை உருவாக்குகின்றன.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி உலகின் அனைத்தையும் வீட்டுக்கூரைக்குள் கொட்டுகின்றது. மின்னனு ஊடகங்களின் ஆதிக்கம் குழந்தைகளை சுக்கு நூறாக்குகின்ற இவை வன்முறையை, கிண்டலை, கேலியை மிக யதார்த்தமாக பிள்ளைகள் மனதில் விதைக்கின்றன. காட்சி சார்ந்தும், மொழிசார்ந்தும் இன்றைய சிறார் அலை வரிசைகள் இதைத்தான் செய்கின்றன.

போதாக்குறைக்கு நஞ்சைப் பந்திவைக்கும் அருந்தமிழ்க்குடும்பத் தொடர்கள். பெற்றோர், ஆசிரியர், கல்வி நன்கு படிக்கும் பிள்ளைகள், ஒழுங்குகள் ஆகியவற்றை கேலிப்பொருளாக்கி விட்டேத்தியானமனநிலையுடன்கூடிய எதிர்நடத்தையுள்ள பாத்திரங்களை கதாநாயகத் தன்மைப்படுத்தும் திரைப்படங்கள் இவைகளைப் பார்த்து இவைகளாக தன்னைப் பாவிக்கத் தொடங்கும் பிள்ளைகள். போலச் செய்யும் இயல்பு இவர்களைத் தொற்றிக்கொள்கிறது.

இத்தகைய அகப்புறக் காரணிகளாக பதற்றம் நிறைந்த மனநிலைக்கு குழந்தைகள் ஆளாகிறார்கள், வீட்டிலும், பள்ளியிலும், சமூகத்திலும் போதிய அக்கறை காட்டப்படும் பிள்ளைகள் கரைசேர்-கிறார்கள். எஞ்சியோர் மனநெருக்கடிக்குள்ளா-கிறார்கள். இதன் தொடர்ச்சியே சமூக குற்றங்கள் பெருகுவதற்கு காரணமாக அமைகின்றன.

பல குழந்தைகள் அகமுகர்களாக மாறி விடுகிறார்கள். யாரோடும் ஒட்டுறவு இல்லாத நிலைக்கு ஆளாகிறார்கள். கொண்டு கொடுத்து உண்டு உயிர்த்து வாழும் தன்மைக்கு மாறாகப் பயன்பாட்டுத் தன்மைக்கு இரையாகிவிடுகின்றனர். மருத்துவம், பொறியல், ஆட்சி நிர்வாகம் போன்ற துறைகளுக்குச் செல்லும் இவர்களில் பெரும்பாலோர் இறுக்கமாகவும் மனிதத்-தன்மையற்றும் இயந்திர மயமாகிப் போகின்றனர். இவர்களின் தனி வாழவும் கூட பாதிக்கப்-பட்டுவிடுகின்றது. வயதான பெற்றோரை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பவும் இவர்கள் தயங்குவதில்லை.

கல்விதுறை, பாடதிட்டம், தேர்வுமுறை, மதிப்பெண்முறை ஆகிய குறித்த விவாதங்களை உருவாக்குவது அவசர அவசியம். மனிதப் பண்பியலை வளர்க்கும் நோக்கில் கல்வித்திட்டம் அமையவேண்டும். தாய்மொழி வழியிலானதும் பண்பாட்டு மதிப்புகளை உள்ளடக்கியதும் அறிவை விரிவு செய்யக்கூடியதும் மண்ணையும் மரபையும் சார்ந்ததுமான கல்விமுறையை நோக்கி நகர்ந்ததாக வேண்டும் குழந்தைகள் ஒரு சமூகத்தின் இளைய மனிதமூலதனங்கள். அறம் தொலைந்துவரும் சமூகத்தின் எச்சங்கள் காக்கப்பட குழந்தைகள் குறித்து அக்கறை கொள்வோம். கல்வியில் மனிதம் மலரட்டும்...

Pin It