விடிகாலை வானம்.. ஓவியனின் மை டப்பாவில் இருந்து சிதறிய வண்ணமாய் இருந்தது. ஆகாயத்தில் சில இடங்களில் மேகம் சூழ்ந்திருந்தது.

தளர்வாய் நடந்தான் சந்தோஷ்குமார்.

மனதில் உற்சாகம் குன்றியிருந்தது. முகத்தில் ஏதோ கப்பல் கவிழ்ந்தது மாதிரி கலவரம் அப்பியிருந்தது. சிக்கல் விழுந்த நூல்கண்டு மாதிரி வாழ்க்கை இருந்தது.

“என் ராசி.. மாவு விற்கப்போனால் காற்று அடிக்கிறது. உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது. பஸ் ஸ்டாண்டில் நான் காத்திருக்கும்போது, நான் செல்ல வேண்டிய பஸ்ஸைத் தவிர எல்லா பஸ்களும் வரும். அவசரமாய் கிளம்பும்போது செருப்பு அறுந்து போகும். நான் மணி பார்க்கும்போது என் வாட்ச் நின்று போயிருக்கும். சைக்களில் அவசரமாய் செல்லும்போது முள் குத்தி சைக்கிள் டியூப் பஞ்சராகும். தியேட்டரில் என் முறை வரும்போது படாரென்று ஜன்னல் கதவைச் சாத்தி "ஹவுஸ்புல்' போர்டை மாட்டுவார்கள். காசு போட்டு வெயிட் மிஷினில் நான் வெய்ட் பார்க்கும்போது மட்டும் மிஷின் வேலை செய்யாது. அழகான பெண்ணிடம் பேச நினைத்தால் அவளே வந்து "அண்ணா' என்று அன்பாய் அழைப்பாள்... இப்படித் தினசரி வாழ்க்கையில் தோல்வியே என்னைத் தழுவிக் கொண்டிருக்க, வெற்றி எனக்குக் கிடைக்கவா போகிறது?'' இப்படி ஓடியது சந்தோஷ்குமாரின் சிந்தனை.

அலிபாபா குகை மாதிரி புதிராய் வாழ்க்கை இருந்தது. கவலைகள் சிலந்திவலை மாதிரி அவனைப் பின்னி இருந்தன.

திரௌபதியின் சேலை மாதிரி பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டே இருந்தன. வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். ஆனால் அவனுக்குப் பிரச்சனைகளே வாழ்க்கையாய் இருந்தது.

கடலில் அலை அடிப்பது மாதிரி தினம் தினம் பிரச்சினைகள் வந்து போய்க் கொண்டே இருக்கின்றன.

அவன் வாழ்க்கைப் படகில் எத்தனையோ அலைகள், சுறாக்கள், திமிங்கலங்கள் புயல் காற்று எல்லாம் @மாதிக் கொண்டே இருக்கின்றன.

இலட்சியம் என்ற நீரோடையை அடைய, பாறைகளைக் கடந்து... கற்குவியல்களையும், தாண்டிச் செல்ல வேண்டி இருந்தது.

வாழ்க்கை நீரோடைப் போலத் தெரிந்தாலும் போராடும் களமாகவே அமைந்து விட்டது. வாழ்க்கைப் பயணத்தில் அவனுக்குப் பூ தூவின பாதை அமையவில்லை. அது முள்பாதைதான்.

குடிகாரனின் பார்வையில் பொருள்களின் பிம்பம் தலைகீழாக வேறொன்றாகத் தெரிவதுபோல் எல்லாம் தடுமாற்றமாய் தெரிந்தது. ஓர் அடைமழையில் ஸ்டார்ட் ஆகாத ஆட்டோ இன்ஜின் மாதிரி மனசு முரண்டு பண்ணியது.

தன்னைக் கடந்து அவசர அவசரமாய் துடிப்போடு வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஜனங்களை வெறித்தான். அவர்களைப் போலத்தானும் வேலைக்குச் செல்வது "பகல் கனவு' என்று நினைத்த போது தாழ்வு மனப்பான்மை உந்தித் தள்ளியது.

இந்த நிமிடம் வரை சந்தோஷ்குமார் வேலை இல்லாத பட்டதாரி இளைஞன். பெயருக்குப் பின்னே வெளவால் மாதிரி எம்.ஏ. டிகிரி.

கல்லூரியில் படித்த நாட்களில் பேச்சு, எழுத்து, ஓவியம், நடிப்பு என்று எல்லாப் போட்டிகளிலும் ஃபைல் நிறைய சான்றிதழ்களும், கேடயங்களும் வாங்கியவன், கல்லூரி இலக்கியமன்ற விழாவில் கலைஞரின் "பராசக்தி' வசனத்தை சிவாஜியைப்போல் தத்ரூபமாய்ப் பேசி முதல் பரிசு பெற்றவன்.

"ஒரு புளியமரம்! அந்த மரத்தின் கீழே முக்காலி. முக்காலிக்கு கிழேயுள்ள வெள்ளைப் பகுதியிலும் "கயத்தாறு' என்ற எழுத்துக்கள்! முக்காலியின் மீது கட்டபொம்மன்! அவன் கழுத்திலே தூக்குக் கயிறு!' என்று அவன் வரைந்த ஓவியத்திற்கு முதல் பரிசு கிடைத்தது.

கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதத்தை' மனப் பாடமாய் ஒப்புவிப்பான். வைரமுத்துவின் கவிதைகளை நடுராத்திரியில் எழுப்பிக் கேட்டால்கூட ஏற்ற இறக்கத்தோடு சொல்வான்.

கவர்மெண்ட் ஸ்காலர்ஷிப் உதவியோடு எம்.ஏ. வரலாற்றில் மாவட்டத்திலே முதல் மதிப்பெண் பெற்று மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. தன்னுடன் கல்லூரியில் ஒன்றாய் படித்து, தன்னைவிட குறைவாய் மார்க் எடுத்தவர்கள் எல்லாம் இன்று பிரபல கம்பெனிகளில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.

அவர்களிடம்சுசிநேகிதன்'' என்ற உரிமையில் பிச்சை எடுப்பதைப் போல் வேலை கேட்டுச் செல்ல தன்மானம் இடம் தரவில்லை.

தாகூர் இறைவனிடம் பிரார்த்தனை செய்ததுபோல், இவனும் பிரார்த்தனை செய்தான்.

“இறைவா! அபாயங்களிலிருந்து என்னைப் பாதுகாக்கும்படி உன்னை நான் பிரார்த்திக்க மாட்டேன். ஆனால் அபாயங்களை எதிர்நோக்கும் சக்தியை எனக்குக் கொடு.

இறைவா! என்னுடைய வேதனைகளையும் துன்பங்களையும் மறைக்கும்படி உன்னை கெஞ்ச மாட்டேன். ஆனால் அவைகளை வெல்லும் வலிமையுள்ள இதயத்தை எனக்கு கொடு!

இறைவா! வாழ்க்கைப் போராட்டத்தில் நான் துணைவர்களை நாடி நிற்க வேண்டாம். ஆனால் என்னுடைய சொந்த பலத்திலேயே போராட அருள் புரிவாயாக!

இறைவா! பொறுமையில்லா பயத்தில் என்னை பதற விடாதே! ஆனால் என்னுடைய சுதந்திரத்தைக் காக்க எனக்கு பொறுமையைக் கொடு!''

கலைந்த தலைய வாரிக்கொள்ளக்கூடத் தோன்றவில்லை. ஏதோ ஒரு கசங்கல் சட்டை, மனசில் வன்மமும் ஆத்திரமும் குமுறியது. வீசும் எதிர்காற்றில் தலைமுடி மேலும் கலைய எரிச்சலாய் இருந்தது.

ராமர் சீதையைத் தேடி அலைஞ்ச கதையாய்... வேலை தேடினான்... தேடினான்.. தேடிக்கொண்டே இருந்தான்... வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருந்தது.

எம்ப்ளாய்மெண்ட் ஆபிஸை நம்பிக் காத்திருந்தான். தொகுதிப் பக்கம் வரும் எம்.எல்.ஏ.வைப் போல அபூர்வமாய் எப்பொழுதாவது கடிதம் வரும். உற்சாகமாய் செல்வான். ப்யூன் வேலை. படித்த படிப்பு... கௌரவம் பார்க்க வைக்கும். தோல்வியாய் திரும்புவான். அப்புறம். இது தொடர்கதையாக இண்டர்வியூக்களை அலட்சியப்படுத்தினான்.

இத்தனைக்கும் அவனைச் சுற்றி நண்பர்களுக்கு அரசாங்க வேலை கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. வேலையிலே சேருகிறார்கள். யமஹா வாங்குகிறார்கள். கார் வாங்குகிறார்கள்.

கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அதற்கெல்லாம் அவன் ஆசைப்பட்ட காலங்கள் உண்டு.

இப்போது எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிற ஒரு மனுஷனாய் அவன் மாறிவிட்டான்.

“எனக்கு அமைதியான வீடு வேணும். ஆயிரம் டென்ஷன்களோடு வந்தா, வீடு அமைதியா சொர்க்கம் மாதிரி இருக்கணும்னு விரும்பறேன். அழகான சிரிப்போடு மனைவி! ஆசை ஆசையாய் ஓடி வரும் குழந்தைகள்! சுத்தமான அறைகள்! தூய்மையான உடைகள்! ரசிச்சுச் சாப்பிடச் சாப்பாடு! என்னை, குழந்தைகளை அன்போடு பராமரிக்க, தன் நேரம் முழுவதும் செலவழிக்கக்கூடிய மனைவி! அவளை உள்ளங்கையில வெச்சுத் தாங்கற நான்! ? ஞாயிற்றுக் கிழமைகளில் லேட்டாய் எழுந்து குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு காலையில் டி.வி.யில் பாட்டுக்குப்பாட்டு... சப்தஸ்வரங்கள்... அரட்டை அரங்கம்... மதிய சாப்பாட்டிற்குப்பிறகு ஒரு சுகமான தூக்கம்!'' இது தான்.. இதுதான்.. அவன் கனவு.

அவன் உள்ளத்தின் ஆழத்தில் உறங்கி கிடக்கின்றன கனவுகள். அவன் சிறகுகள் உடைந்து போனாலும் நினைவுகள் ஏனோ உயரவே பறக்கின்றன.

எல்லோருக்கும் தூக்கத்தில் கனவு வரும். சந்தோஷ்குமாரைப் பொறுத்தவரை அவனது கனவுகளும் தூங்கிவிட்டன.

எதிர்கால வாழ்க்கையில் அவன் கட்டி வைத்திருந்த கனவு, அவன் கற்பனை, அவன் கோட்டைக் கொத்தளம் எல்லாமே சுக்கல் சுக்கலாய் நொறுங்கிப் போயின.

வேலை தேடப்போகும்போதுதான் தெரிந்தது... படித்த கலித் தொகையும், குறுந்தொகையும் போதாது... பெருந்தொகையும் வேண்டுமென்று!

இண்டர்வியூக்களில் வழக்கப்படி, ஒண்ணு...சுஇந்தச் சாதாரண வேலைக்குப் பட்டம் படிச்ச நீ எதுக்குப்பா வர்றே?'' ன்றாங்க.. இல்லே "முன் அனுபவம் இல்லை' என்று கைவிரிச்சுடறாங்க.. வேலை கொடுத்தால்தானே அனுபவம் கிடைக்கும்..? வேலையே கொடுக்காமல் அனுபவத்தைப் பற்றிக் கேட்கறப்ப எரிச்சலா வருது...

வயதானவன்தான் வழிகாட்ட வேண்டும் வாழத் தொடங்கும் வாலிபனுக்கு...

“அறிவு என்பது தெரியாதவற்றைத் "தெரியாது' என்று ஒப்புக்கொள்ளும் கம்பீரத்தில்தான் உள்ளது!'' என்று சீன அறிஞர் கன்பூசியஸ் சொன்னது இவர்களுக்குத் தெரியாதா...?

எனக்குத் தெரிந்த மனிதர்கள்! எனக்கு கிடைத்த அனுபவம் இவற்@றாடு நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உனக்குக் கிடைத்த அனுபவம் என்னைவிட கூடுதலாக இருந்திருக்கலாம். நான் வாழ்ந்த சூழல், நான் படித்த விஷயங்கள் இவற்றை சார்ந்ததுதான் நான். இது உனக்கு @மாசமானதாக தெரியலாம். உன்னோட வீட்டில் நல்ல சோபா இருக்கலாம். என்னோட வீட்டில் உடைந்த நாற்காலிதான் இருக்கிறது. ஆனாலும் என்னோட வீடு எனக்குப் பெரிசுதானே! அதை நீ எப்படி கொச்சைப்படுத்தலாம்?''

எத்தனையோ நிறுவனங்கள் ஏறிவிட்டான். எல்லாமேசுவேலை காலி இல்லை'' என்ற வாசகங்கள் வரவேற்க, சலித்துப்போய் விரக்தி அடைந்தான். அவன் இதயம் ஒரு கொசுவர்த்திச் சுருள்போல் சுருண்டுவிட்டது.

அழுகை, ஆத்திரம், வெறுப்பு, கோபம் எல்லாம் அவனுள் எரிமலைக் குழம்பாய்க் கொதித்தது.

“ச்சே.. இந்த சமூகத்தில் தனிமனிதனுக்கு வேலை இல்லை என்றால் தெருவோரக் குப்பைத் தொட்டியில் எச்சில் இலை நக்கும் நாயைப்போல் அல்லவா இளக்காரமாய் பார்க்கிறார்கள். வீட்டில்கூட தெண்டச்சோறு தின்பவனாய்.. சப்பியெறிந்த மாங்கொட்டையாய் என்னை நினைத்துவிட்டார்களா?''

எடைக்கு வரும் புத்தகத்திலிருந்து கடை வியாபாரி பக்கங்களை கிழித்து வைத்துக் கொண்டு தூர எறிந்துவிடும் அட்டையைப்போல் இந்த சமூகம் அவனைத் தூர எறிந்து விட்டதாக நினைத்தான்.

"காலேஜில் வெட்டியாய் எம்.ஏ., வரலாற்றில்... ஹர்ஷர் வரலாறு, சங்ககாலம், இந்திய வரலாறு, பன்னாட்டு அரசியல் சூழ்ச்சித்திறன், அமெரிக்கா, சீனா, ஜப்பானிய வரலாறுகளைப் படித்துப் பாஸாகியும்... என்வரலாறு சரியில்லையே... கையெழுத்தை அழகாய் படைத்த ஆண்டவன் தலையெழுத்தைச் சரியாய் படைக்காமல் சதி செய்து விட்டானே..' தன்னையே நொந்து கொண்டான்.

வாழ்க்கையே தொண்டைக்குள் சிக்கிய மீன்முள் மாதிரி கொக்கி போட்டிருந்தது. வாழ்க்கை வறட்சி காலத்து செம்மண் ஏரியைப் போல் வறண்டிருந்தது.

புயலடிக்கும் பொழுதோடு புலர்கிறது விடிகாலை. அலை அடிக்கும் மனதோடு தொடர்கிறது அன்றாட வாழ்வு. எந்த நொடியும் உடைந்துபோகும் நீர்க்குமிழிகளாய் நான் காணும் மனிதர்கள்.

இங்கே ஆண்கள் பணம் பூக்கிற செடியாகவும், பெண்கள் குழந்தை காய்க்கிற மரமாகவும் மட்டுமே இருக்கிறார்கள்.

மனிதர்கள் பணம் பணம் என அலைகிறார்கள்.

உலகையையே வென்ற மாவீரன் அலெக்சாண்டர் இறக்கும் போது, கையில் எதையும் கொண்டு போகவில்லை என்ற வாசகத்தைக் கல்லறையில் எழுதி வைக்கச் சொன்னான்.

தந்திரக்காரன் தைரியசாலியைப்போல பேசும்போது உண்மையும் நேர்மையும் சுமக்கும் நான் ஊமைப்போல் இருக்க வேண்டி இருக்கிறது.

கடிகாரத்தின் பெண்டுலத்தைப்போல் அவன் மனமும் அங்கு மிங்குமாய் அமைதியற்று ஊசலாடியது. வேடன் கையில் சிக்கிய மான்போல், கரையில் எறியப்பட்ட மீன்போல் மனசு நிலை கொள்ளாமல் துடித்துக் கொண்டிருந்தது. குழப்பம் மூளையைத் தின்றுவிடும் போலிருந்தது அவனுக்கு.

சிகரெட்டை பற்ற வைத்து இலக்கில்லாமல் நடந்தான். தேவர் ஹாலில் வைரமுத்துவின் கவியரங்கம் நடப்பதாய் சுவரொட்டியில் எழுதியிருந்தது.

அனிச்சையாய் கால்கள் தேவர் ஹாலுக்குள் சென்றன.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் படித்தபோது "ஹாஸ்டல்டே'க்கு கவியரசு வைரமுத்துவைச் சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தார்கள்.

எல்லாருமே அவரைப் புகழ்ந்து கொண்டும், அவருடன் சேர்ந்து போட்டோ எடுப்பதிலுமே ஆர்வமாய் இருக்க... இவன் மட்டும் அவர் சினிமாப் பாடல்களில் குற்றம் கண்டுபிடித்து எடக்கு முடக்காய் கேள்விகள் கேட்டான்.

விழா முடிந்து செல்லும்போது வைரமுத்துவே அவனை அழைத்து அருகே நிற்க வைத்துக் கொண்டு போட்டோகிராபரை போட்டோ எடுக்கச் சொன்னார்.

அவர் எழுதிய "இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்' என்ற நூலைப் பரிசாகக் கொடுத்து, அவன் முதுகை வாஞ்சையோடு தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

புத்தகத்தை ஆசையோடு பிரித்தான். முதல் பக்கத்தில்.. "எந்தப் பூவில் எந்தப் பாம்போ என்று பார்க்காதே!எந்தப் பூவில் எந்தத் தேனோ என்று பார்!' பிரியமுடன் வைரமுத்து என்று செதுக்கிய எழுத்தில் அவர் ஆட்டோகிராப் இட்டுத் தந்ததாய் ஞாபகம்.

இன்றும் வைரமுத்துவை ரசிகர்களும், ரசிகைகளும் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருந்தார்கள். கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டோடு வைரமுத்துவை நெருங்கினான்.

பாக்கெட்டிலிருந்த சிகரெட் பாக்கெட்டில் சிகரெட்டை உருவிக் கொண்டு சிகரெட் அட்டையை அவரிடம் நீட்டினான்.

கலர் கலரான டைரக்டரிகள், வண்ண பேப்பர்கள் இவைகளுக்கு நடுவில் வித்தியாசமாய் தெரிந்த சிகரெட் அட்டையையும், அவன் விரலிடுக்கில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டையும் பார்த்த வைரமுத்து நிமிர்ந்து அவனைப் பார்த்தார்.

அவன் கண்களை சினேகமாய் பார்த்தார். குழந்தைச் சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு அந்த சிகரெட் அட்டையில்சுதடுமாறி விழுவதில் தப்பில்லை... எழுந்திரிக்க எண்ணமில்லாமல் இருப்பதுதான் தவறு'' என்றும் மாறாத அன்புடன், வைரமுத்து என்று எழுதி ஆட்டோகிராப் இட்டுத் தந்தார்.

அதை வாங்கிக் கொண்டுதேவர் ஹாலை விட்டு வெளியே வந்தான். வைரமுத்துவின் ஆட்டோகிராபை படித்துக் கொண்டே நடந்த சந்தோஷ்குமார் மீது எதிரே சைக்கிளில் தள்ளாடியபடி வந்து விழுந்த குடிமகனைசுகண்ணு அவிஞ்சி போச்சா?'' என்று திட்டினான்.

கீழே அலங்கோலமாய் விழுந்த குடிகாரன், விலகிய கைலியை இறுக்கமாய் கட்டிக்கொண்டு...சுயார்ரா அவன் பேமானி, யாரைப் பார்த்து அவிஞ்சி பூட்ச்சான்னு கேக்கறே..? ஒன் கண்ணுல மட்டும் இன்னா பவர் லைட் பல்பு மாட்டியிருக்குதா? இது இன்னா உன் அப்பன்வூட்டு ரோடா? இல்ல உன் பாட்டன், முப்பாட்டான்வூட்டு ரோடா? உன் கண்ணுதாண்டா பொட்டை, சோமாறி, நீ பொட்டை, உங்கப்பன் பொட்டை, உன் பாட்டன் பொட்டை... என்னைப் பார்த்து.. டாஆஆஅஆய்ய்ய்..'' பரம்பரையையே அவன் தெருவுக்கு இழுக்க வாக்குவாதத்தைத் தவிர்த்து நடந்தான் சந்தோஷ்குமார்.

தெருவில் மீசை முளைக்கத் தொடங்கிய விடலைப் பையன் ஒருவன் அகலமான சைக்கிள் கேரியரில் நூறு கிலோ உப்பு மூட்டையை அனாசயமாக "நங்'கென்று வைத்து கயிறு கூட கட்டாமல் சட்டென்று சைக்கிளில் ஏறி "உப்பூ.. உப்பூ..' என்று கூப்பாடு போட்டுக் கொண்டு கம்பீரமாய் சென்றான்.

ரோட்டில்... மேளச்சத்தம். மேளச்சத்தம் வந்த இடத்தை வட்டமடித்து நின்றது ஒரு கூட்டம். கூட்டத்தில் நடுவே கரகத்தைச் சுமந்தபடி ஒரு பெண்.. ஜிகினாத் துணியில் இறுக்கமான உடையில் ஆட... சுற்றி நிற்கும் கூட்டம் விசிலடித்து கைத்தட்டியது. பதினாறு வயது பெண்ணைப்போல் அற்புதமாய் ஜலக்ஜலக்கென்று அடவு பிடித்து அவள் நடந்த நடையிலும், காட்டிய நளினத்திலும் கூட்டம் மயங்கிப்போனது.

செழித்துக் குலுங்கும் மலர்ச்செடிகளையும், தழைத்துக் கிடக்கும் பச்சைக் கொடிகளையும் பரவசத்தோடு பார்த்து ரசித்தவாறே மேலே ஏறிக் கொண்டிருக்கும்போது, திடீரென அந்த செங்குத்தான பாறையிலிருந்து தங்குதடையின்றி கீழே விழுந்து சிதறி உடைவது போல ஆயிற்று அவனது எதிர்கால இன்ப நினைவு. தன்மீதே அவனுக்கு வெறுப்பாய் இருந்தது.

நகரம் பெரிய காடுன்னு நினைத்துக் கொண்டான். அதுல எல்லா வகைப்பட்ட @மாசமான மிருகங்களும் இருக்கும். கர்ஜனை செய்யறதும், உறுமுவதும், விளையாடறதும், முனகுறதும்.

தன்னுடைய வாழ்க்கை ஒரு நீண்ட ரெயில் பயணம்போல் தோன்றியது அவனுக்கு. நிலையங்கள் வரவர, அவனுடன் பயணம் செய்தவர்கள் இறங்கிப்போய்க் கொண்டே இருந்தார்கள். அவன் மட்டும் இலக்குத் தெரியாத பிரயாணியாய் அசையாது உட்கார்ந்திருந்தான்.

எங்கே இறங்குவது? தெரியவில்லை. அழைத்துச் செல்லவும் யாரும் வரவில்லை... வாழ்க்கையில் தான் தோற்றுப் போனதாய் உணர்ந்தான். மனசுக்குள் கதறிக் கதறி அழுதான்.

நிராசையும், விரக்தியும் அவனை ஆட்கொள்ள, திடீரென முடிவு செய்தான். தற்கொலை. ஆம்... அதுதான் சரியான முடிவு! இனி வாழ்ந்து என்ன பயன்? யாருக்கு இலாபம்? இந்தச் சமுதாயம் அவனை ஏளனப் பார்வைகளாலும், கேலிப் பேச்சுகளாலும் வெட்டிச் சாய்க்கும்முன், அவனே அவனை வெட்டிக் கொள்வது தான் சிறந்த வழி என்று தோன்றியது.

அவனைப் பொறுத்தவரை அவனோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை. அவன் விதியைப் பற்றி அவனே நினைத்துப் பார்த்தான். அவன்மேல் அன்பு செலுத்தவோ, அவனை வெறுப்பதற்கோ இந்த உலகத்துல ஓர் உயிர்கூட இல்லை.

தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தான்.

ரெயில் தண்டவாளத்தில் தலையை வச்சு, புகைவண்டியோட சக்கரம் அதுமேல ஏறி, அதைச் சின்னாபின்னமாக்கிக் கடந்து போகும். தலை தனி, உடல் தனி என்றாகும். எல்லாம் முடியும். வேதனைகளும், கஷ்டங்களும் முடிவுக்கு வரும்.

ஆனால் தைரியம் வரவில்லை. வாழ்க்கை முழுக்க வலிகளோடே வாழ்ந்தவன் சாகும்போதாவது வலியில்லாமல் சாக ஆசைப்பட்டான்.

பக்கத்தில் இருந்த மெடிக்கலில் பாலிடால் பாட்டிலை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

ஆகாயத்தில் கார்மேகங்கள் சூழ்ந்திருந்தன. பூமி அவனைப் போலவே வறண்டு போய் கிடந்தது. மழை வருமா? அது பெய்தால் என்ன? பெய்யாவிட்டால் என்ன?

சாலை ஓரத்தில் வண்டியில் இஸ்திரி போடுபவனின் வயிற்றில் சுருக்கம் இருந்ததது.

“ஆரி... ரா...ரா...ரோ...'' சாலையோர மரத்தில் சேலையை கட்டி ஒரு தாய் தன்குழந்தைக்குத் தாலாட்டுப்பாடி தூங்க வைத்துக் கொண்டிருந்தாள்.

பிறகு, லைப்ராரிக்குள் சென்றான். ஒவ்வொரு புத்தகமாய் புரட்டினான். ஜெயகாந்தன் எழுதியசுஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'' என்ற நாவலை தேர்ந்து எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

எதிரே கெயிட்டி தியேட்டரில்சுவறுமையின் நிறம் சிவப்பு'' சினிமாப்படம் ஓடிக் கொண்டிருந்தது.

ஏற்கனவே 10 தடவைக்குமேல் பார்த்த படம்தான். இருந்தாலும் போனான்.

வேலை தேடி அலையும் கமல், பசிக் கொடுமையால் சாக்கடைக்குள் கிடக்கும் ஆப்பிளை எடுத்து தின்ற காட்சியை கண் சிமிட்டாமல் பார்த்தான். படம் விட்டதும் வெளியே வந்து நடந்தான்.

மலைக்கோட்டை அடிவாரத்தில் இருக்கும் மாணிக்க விநாயகர் கோயில்... நாயக்கர் காலத்து மண்டபத்துடன் காட்சியளித்தது.

அங்குள்ள மனைவியோடு கூடிய திருமலை நாயக்கர் சிலைக்கு கீழே, கால நேரம் போவது தெரியாமல் கண்மூடி அமர்ந்தான். அந்த அமைதி அவனுக்குத் தியானம் போன்றதொரு நிலையைக் கொடுத்தது.

இப்படித் தனிமையை உணரும் மனம் இன்னொன்றுக்கும் ஏங்கத் துவங்கியது.

“எனக்கு ஒரு நல்ல வழிகாட்டி மட்டும் இருந்தால் நான் இன்னும் உயர்ந்து நிற்பேனே! இன்னும் பலருக்கு உதவியாக வாழ்வேனே! எனக்குச் சரியாகச் சொல்லிக் கொடுக்காமல் போய் விட்டார்களே... இந்தச் சமூகம் என்னை வழி நடத்தவில்லையே! என் கேள்விகளுக்குப் பதில் சொல்ல, நல்ல ஒரு மனிதர் எனக்குப் பார்க்கக் கிடைக்கவே இல்லையே'' என்ற பரிதவிப்பும் எழுந்தது.

இதுதான் குருவைத் தேட, குருவுக்கு ஏங்கியது.

அவன் வாழ்க்கைத்தரம் உயர மாணிக்க விநாயகரிடம், கண்ணதாசன் கண்ணனிடம் மனமுருக வேண்டியதைப்போல வேண்டிக் கொண்டான்.

“மாணிக்க விநாயகரே!''

எவ்வளவு துன்பங்கள், எவ்வளவு கஷ்டங்கள் வந்த போதிலும், இதயத்தில் தீய சிந்தனைகள் எழாமலிருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

குளிர்ந்த நீரோட்டம் போன்ற தெளிந்த மலர்களுடைய மனதை எனக்குத்தா!

செயல் செய்யும் திறமையை என் வாழ்நாளிலும், பெயர் பெறும் பெருமையை என் சாவுக்குப் பிறகும், நிலைத்திருக்கும் நல்ல பெயரை நிரந்தரமாகவும் எனக்கு வழங்கு!

என் கரங்களில் விளையாடும் காசு பணங்கள் என்னைக் கல் நெஞ்சனாக ஆக்கிவிடாமல் என்னைக் காப்பாற்று!

பணத்தை இழப்பதா? குணத்தை இழப்பதா? எனும் பிரச்சினை வருமானால், பணத்தையே இழந்துவிடவும்... இழந்தபின் அதைப் பற்றிச் சிந்திக்காமலிருக்கவும் எனக்கோர் இதயம் வழங்கு!

இவ்வளவையும் நான் கேட்பது எதற்காக? ஊரில் உயர்ந்த உத்தமனாகவா? இல்லை. குறைந்தபட்சம் எனக்காவது நான் நல்லவனாக இருக்கலாம் அல்லவா?''

கோயிலைவிட்டு வெளியே வந்தான்.

டவுசர் போட்ட சிறுவன் ஒருவன்சுசார்... ஒரு ரூபாய்க்கு ஒரு பேனா..''என்று விற்றுக் கொண்டிருந்தான்.

யாருமே வாங்கவில்லை...

கொஞ்சநேரம் யோசித்த அந்தச் சிறுவன்சுநாலு பேனா வாங்கினால் ஒரு பேனா இலவசம்... நாலு பேனா அஞ்சே ரூபாய்தான்...'' என்று கூவி விற்க... ஜனங்கள் அவனை மொய்த்துக் கொண்டு வாங்கினார்கள்.

தெப்பக்குளத்தைத் தாண்டியபோது அந்தக் காட்சியைக் கண்டான்.

பூக்கடைக்குச் சற்றுத்தள்ளி பர்மா பஜார் கடைகளுக்கு முன்னால் மக்கள் கும்பலாய் நின்று வேடிக்கை பார்க்க, கும்பலின் நடுவே கிழிந்து, அழுக்கேறிப்போன உடைகளோடு, கால்கள் முடமாகிப்போன அந்தப் பிச்சைக்காரன் ரோட்டில் அப்பியிருந்த மண் துகள்களை வாயால் ஊதி சுத்தம் செய்து, கையிலிருந்த கரித்துண்டால் கிறுக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் கருணை தவழும் இயசுவை அற்புதமாய் வரைந்தான். மக்கள் ஆவலாய் பார்த்தார்கள்.

அந்தப் பிச்சைக்காரன் இயேசுவுக்குக் கலர் சாக்பீஸால் பார்டர் போடத் தொடங்கினான்.

சிலர் கண்டு கொள்ளாமல் சென்றார்கள்.

பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சின்னக் குழந்தைகள் தேன்மிட்டாய், கொடுக்காப்புளி, நெல்லிக்காய், மாங்காய் வடு, எலந்தைப்பழம், குச்சி ஐஸ், பொன் வண்டு வாங்க வைத்திருந்த சில்லரைக் காசுகளை இயேசுநாதர்மேல் பயபக்தியோடு போட்டார்கள்.

ஜென்டிலாய், டிப்டாப்பாய் டிரஸ் அணிந்த பெரிய மனிதர்கள் பர்ஸ் திறந்து, பணம் எடுத்து... பக்கத்திலிருந்த பெட்டிக் கடைகளில் "கிளாசிக் மென்த்தால்' சிகரெட் வாங்கிப் பற்ற வைத்து, தொண்டைக்கு ஜில்லென்று புகையை இழுத்து வேடிக்கை பார்த்தார்கள்.

தான் வரைந்த இயேசுவின் மீது விழுந்த 5 பைசா, 10 பைசா, நாலணா, எட்டணா காசுகளை வரைந்த படம் அழிந்து விடாமல் லாவகமாய் அந்தப் பிச்சைக்காரன், தான் வைத்திருந்த தகர டப்பாவில் பொறுக்கிக் கொண்டான்.

வைத்த கண் வாங்காமல் அந்தப் பிச்சைக்காரனையும், அவன் வரைந்த படத்தையும் பார்த்தான் சந்தோஷ்குமார்.

வாழ்க்கையில் முதல் முறையாய் அந்தச் சம்பவம் அவன் மனதை வெகுவாய் பாதித்தது.

போதிமரத்தின்கீழ் புத்தனுக்கு ஞானோதயம் ஏற்பட்டது போல, தத்துவஞானி பட்டினத்தாருக்கு திருவொற்றியூர் கடற்கரையில் ஞானோதயமும், ஆன்ம பரிபக்குவமும் ஏற்பட்டது போல் அங்கே அவனுக்கும் ஏற்பட்டது.

மறுநாள் விடிகாலை 5.00 மணி...

கோழி கூவுவதற்கு முன்பே சந்தோஷ்குமாருக்கு விழிப்பு வந்து விட்டது.

கண் திறந்தான்.

வீட்டு மேல்கூரையில் ஒரு சிலந்தி, தனது எச்சிலை நூலாக்கி வலை பின்னிக் கொண்டிருந்தது. மிகமிக மெல்லிய நூல் இழை. அதில் தொங்கிக்கொண்டே தன் எட்டுக் கால்களை அப்படியும் இப்படியும் அசைத்து அசைத்து தனது குடியிருப்பை... தனது உணவுகளைப் பிடிக்கும் படைக்கான அணிவகுப்பை... வலைப் பின்னலை உருவாக்கிக் கொண்டிருந்தது சிலந்தி... வலை அறுந்து அறுந்து போனாலும் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல், ஒய்ந்து விடாமல் பாய்ந்து பாய்ந்து வலை பின்னியது சிலந்தி. தோல்வி அந்தச் சிலந்தியைப் பாதிக்கவே இல்லை.

ஜன்னல் வழியே வானம் பார்க்க அழகாய் இருந்தது.

பாலாஜி தியேட்டருக்கு அருகில் இருந்த டீக்கடையில் இருந்துசுஉன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் வாழ்ந்தாலும்.. தாழ்ந்தாலும்.. தலை வணங்காமல் நீ வாழலாம்'' என்ற எம்.ஜி.ஆர். பாடல் காதில் கேட்டது.

தினசரி காலெண்டரில் தேதி பார்த்தான். அன்றைய தேதியில்சுஉழைக்கும் வயதில் ஓய்வெடுத்தால் ஓய்வெடுக்கும் வயதில் உழைக்க வேண்டியிருக்கும்'' என்ற பொன்மொழி இருந்தது.

தலையணைக்குக் கீழே இருந்த பாலிடால் பாட்டிலை எடுத்து ஜன்னல் வழியே வீசி எறிந்தான்.

“காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்.. என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்... அட காலா!'' என்ற பாரதியார் பாடலை பாடினான்.

பாத்ரூம் சென்றான்.

பல் துலக்கி, முகம் கழுவி, பேண்ட் அணிந்து, டீ ஷர்ட் மாட்டினான். காலில் லெதர் ஷû மாட்டி வீட்டை விட்டு வெளியே வந்தான்.

பனி படர்ந்த விடியற்காலை பொழுதில், ஈரம் சொட்டும் தலையோடும் இழுத்துச் சொருகிய முந்தானையோடும் எதிர் வீட்டுப் பெண் குப்பைகளை நீக்கி, கூடுதல் நீர் தெளித்து நெளிந்து நெளிந்து புள்ளிகள் எண்ணி கோடுகளிட்டு வண்ணங்களைத் தூவி அணு அணுவாகச் செதுக்கிய கோலச் சிற்பத்தை ஒதுங்கி, கோலத்தை மிதித்து விடாமல் நடந்து ரசித்துச் சென்றான்.

பாலாஜி தியேட்டர் சாலையில் நடந்து, கோர்ட் அருகே வந்து இடது புறமாய் வளைந்து மகளிர் காவல் நிலையம் எதிரில் இருந்த நாகநாதர் டீ ஸ்டாலுக்கு வந்தான்.

அவனைப் பார்த்ததும் கடைக்காரர் வழக்கம்போல் வில்ஸ் பில்டர் சிகரெட் எடுத்துத்தர, அதைசுவேண்டாம்'' என்று சொல்லிவிட்டு தொங்கிக் கொண்டிருந்த தாரில் இருந்து ஒரு ரஸ்தாளிப்பழத்தை பறித்துச் சாப்பிட்டான். பால் சாப்பிட்டான்.

கடைக்காரர் என்றைக்கும் இல்லாத அதிசயமாய் அவனை ஆச்சரியமாய்ப் பார்த்தார்.

இடது புற சாலையில் வாக்கிங் போனான்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிச் சாலையில் மெல்ல ஓடினான்.

இருள் பிரியாத அந்த விடிகாலைப் பொழுதில் சாலையின் நடுவே இருபுறமும் இருந்த 26 மெர்க்குரி விளக்குகள் வெளிச்சத்தில் வாக்கிங் போவது அற்புதமான விஷயம்.

பெரியவர்கள், இளைஞர்கள் குழந்தைகள், குமரிகள், ஒரு கை இழந்த ஒருவன் என்று எல்லா வயதினருமே அந்த சாலையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்.

நடந்து செல்லும்போது குட்டி நாய் அவனைப் பார்த்து வாலாட்டியது. ஜன்னல் வழியாக ஒரு குழந்தை எட்டிப் பார்த்து சிரித்துவிட்டு டாட்டா காட்டியது. பஸ்ஸில் ஒரு கணம் அந்த இளம் பெண் அவனை அதிகப்படியாக பார்க்கிறாள். முற்றிலும் அன்னியர் ஒருவர் ஓடிவந்து பஸ் கிடைத்த சந்தோஷத்தில் அவனைப் பார்த்துப் புன்னகைக்கிறார். திடீர் என்று காய்ந்த சருகுகளை குப்பைத் தொட்டியில் போட்டுக் கொளுத்தும்போது மூக்கில் படரும் வாசனை அவனுக்குப் பிடித்திருக்கிறது.

உலகமே சுறுசுறுப்பாய் இருப்பதைப்போல் இருந்தது. எதிர்காற்று தலைமுடியைக் கலைக்க, சுகமாய்த்தான் இருந்தது.

மூச்சை மெல்ல இழுத்து விட்டான். புத்துணர்ச்சியாய் இருந்தது. தென்றல் காற்று முகத்தில் முத்தமிட்டது.

ரேடியோ ஸ்டேஷனைத் தாண்டியபோது, அந்தப் பெரிய ஆலமரத்திலிருந்து கேட்ட விதவிதமான பறவைகள் ஓசைகளை நின்று ரசித்தான்.

அந்த அதிகாலையில் அங்கே ஒரு பறவை புல்லாங்குழல் இசைப்பதுபோல் கூவுவதைக் கேட்பது சுகமாய் இருந்தது.

பறவைகள் சோம்பல் முறித்து, சிறகைச் சிலிர்த்துக் கொண்டு உணவைத் தேட புறப்பட்டுக் கொண்டிருந்தன.

பிறகு வலதுபுறச் சாலையில் வளைந்து டேப் காம்ப்ளக்ஸை ஒட்டிய சாலையில் ஓடினான்.

முன்னால் போன ஆட்டோவின் பின்புறம்சுகஷ்டப்படாமல் இருக்கக் கஷ்டப்படுங்கள்!'' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

“மயக்கமா? கலக்கமா? உனக்கும் கீழே உள்ளவர் கோடி... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு'' என்ற கண்ணதாசன் பாடல் ஆட்டோவிலிருந்து கேட்டது.

கேம்பியன் ஸ்கூல் வந்தது.

உள்ளே நுழைந்தான்.

பசுமையான பூச்செடிகள், பச்சைப் பசேலென்ற புல் மெத்தைகள், பார்க்க மனசுக்குக் குளிர்ச்சியாய் இருந்தது.

பூங்காவில் சிலையாய் இருந்த இயேசுநாதர் இவனை ஆசீர்வதிப்பதைப் போல் கனிவாய்ப் பார்த்தார்.

அருகே இருந்த சர்ச்சிற்குள் சென்றான்.

“இயேசுவே! நான் எல்லோருக்கும் உதவணும்... எனக்கும் எல்லோரும் உதவணும்.. எனக்குத் தெளிவான புத்தியைக் கொடு.. தன்னம்பிக்கையைக் கொடு... நானும் வாழ்க்கையில் பெரிய ஆளாக வர அருள்புரி!'' என்று மனமுருக பிரார்த்தனை செய்தான்.

வீட்டிற்குள் வந்தான். சேவிங் கிரீமை குழைத்து கன்னத்தில் அப்பி சேவிங் செய்தான்.

குளித்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்த போதுசுஉலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக..'' என்ற பாடலைப் பாடினான். அம்மாவும் அப்பாவும் வியப்பாய் அவனைப் பார்த்தார்கள். தங்கச்சி டீ கொண்டு வந்து கொடுத்தாள்.

கவலைகள் யாருக்குத்தான் இல்லை? உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான பில்கேட்சுக்குப் பணத்தைப் பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக வேறு ஏதாவது கவலைகள் இருக்கும்.

எனவே, கவலைகள் நமக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைக்கக்கூடாது.

வரும் கவலைகளைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டால், அந்தக் கவலைகள் சந்தோசப் புன்னகைகளாக மாறும் என்று தோன்றியது.

“வாழ்க்கையில பிரச்சனைங்கறது வைக்கோல் பிரி மாதிரி. வைக்கோல் பிரியை உடனே பிரிச்சுட்டா ஈசியா வந்துடும். அப்படியே வெச்சிருந்து மழையில் நனைஞ்சுட்டா பிரிக்கறது சிக்கலாயிடும்! பிரச்சனையும் அதுமாதிரிதான். உடனே தீர்த்துக்கணும். ஆறவிட்டா சிக்கல் அதிகமாயிடும்'' என்று புரிய ஆரம்பித்தது.

அடுப்பிலேற்றப்பட்ட பால் நிறைந்த ஒரு பாத்திரம் கொதிப்பேற்பட்டுப் பொங்கும்போது, சிறிது குளிர்ந்த நீரை அதன் மீது தெளித்தவுடன் எப்படி அடங்கி விடுகிறதோ அதைப் போல் அவன் மனமும் அமைதியாய் இருந்தது.

ஒரு பட்டமரத்தில் புறப்படும் தளிரைப்போல் அவனுக்குள் நம்பிக்கை பூத்திருந்தது.

விசிறிவிட்ட பற்றியத் தீக்கொழுந்தாய் நெஞ்சில் தைரியம் வளர்ந்திருந்தது.

தொட்டாசிணுங்கியைப்போல் இத்தனை நாளாய் சுருண்டு மூடிக் கொண்டிருந்த மனசு மல்லிகைப் பூவாய் மலர்ந்திருந்தது.

தான் இவ்வுலகில் புதிதாய் பிறந்ததைப் போல் உணர்ந்தான்.

பூஜை அறைக்குள் சென்று விபூதி வைத்துக் கொண்டான்.

“தக்க தரி கிடத்தக்க.. தக்க திமி... தக்க திமி.. தாம் தரிகிட தக்க.'' மனசுக்குள் சலங்கை ஒலித்தது.

நேற்றைய சம்பவம் அவனுக்குப் புதிதாய் பலத்தையும் நம்பிக்கையையும் அளித்திருந்தது.

கையிலிருந்து பிரஷ்ஸை வைத்துவிட்டு எழுதியதை ஒரு தடவை படித்தான்.

“உங்கள் கடை விளம்பரங்கள் உங்கள் மனம் விரும்பும் வகையில் இங்கே அழகிய வண்ண போர்டுகளில், பேனர்களில் எழுதித் தரப்படும்'' எழுதிய போர்டை பார்த்துக் கொண்டே இருந்தான்.

அப்போது ஒரு பெரியவர் கையில் மஞ்சள் பையோடு வந்தார்.

“தம்பி... விளம்பர போர்டு ஒண்ணு எழுதணும்''

“சொல்லுங்க சார்... என்ன மேட்டர்?''

“வேலை காலி இல்லை''

சந்தோஷ்குமார் மனசுக்குள் சிரித்துக் கொண்டான்.

நேற்று தன்னைத் திருத்திய அந்தப் பிச்சைக்காரனை உள்ளுக்குள் மனசீக குருவாய் நினைத்து சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினான்.

தூரிகையில் பெயிண்டைத் தோய்த்து கண்ணைக் கவரும் வண்ணம் கலைநயத்தோடும், பயபக்தியோடும் அந்தசுவேலை காலி இல்லை'' விளம்பரத்தை எழுத ஆரம்பித்தான்.

Pin It