விழித்தெழு! உணர்வுகொள்!! உருவாக்கு!!! தொகுதி -1, மானமிகு இனியவன் ஹாஜி முஹம்மது, மேற்குப் பதிப்பகம், மனித நேயம் இல்லம், 292, கிழக்குத் தெரு, ஆயங்குடி, 608306, காட்டு மன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம், பக்கம் 144, ரூ. 80.

மானமிகு இனியவன் ஹாஜி முகமது ஆயங்குடியைச் சேர்ந்தவர். இவருடைய முன்னோர்கள் உடையார் பாளையம் சமீன் குடும்பத்தோடு தொடர்புடையவர்கள். ஹாஜிமுகம்மது வாச்சாகனி இராவுத்தரின் கொள்ளுப்பேரன்.

ஹாஜிமுகமதுவின் தந்தையார் ஒரு நல்ல விவசாயி. ஹாஜிமுகமதுவும், வீணாய்ச் சுற்றாமல் வயலைச் சுற்றியவர்தான். ஆனால், விவசாயம் வீழ்ந்ததால், நிலத்தை விற்று விஸா வாங்கி வெளிநாடு சென்றவர். பாலைவன நாடுகளில் பசி மறந்து உழைப்பவர்.

கொடுமைதான்! திருமணத்திற்குப் பிறகு 26 நாள்களே ஒன்றாய் இருக்க முடிந்தது. பிறகு, எத்தனையோ மணவாளர்களைப்போல மீண்டும் இவரும் புலம் பெயர்ந்தார்.

மணவாட்டியோடு தொலைபேசியில் பேசலாம். கடிதங்கள் எழுதலாம். இவரைப் போன்றவர்களுக்குக் கற்பனையும் கவிதைகள் அறிமுகம் இருந்தால், இவர்கள் கடிதங்களைக் கவிதைகளாக எழுதலாம். எழுதி எழுதி அனுப்பலாம். மணவாட்டியும் ஏதே ஆறுதல் பெறலாம்.

இப்படிப் புலம் பெயர்ந்து நன்றிக்கட்டையாய்க் காலம் தள்ள நேரும் ஒருவர், உழைத்த நேரம் போக மீதமுள்ள நேரத்தில் உருப்படியாய்ச் செய்ய வேலைகள் இருக்கின்றன. இதனைச் சரியாகப்புரிந்து கொண்டு ஆக்கப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஒருவர்தான் இந்தக் கவிஞர்.

இறை, நபி, குரான் என்னும் அடித்தளத்தில் ஒரு கட்டுமானமாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டு வரும் இவர், தான் பெற்ற விழிப்பும் உணர்வும் தான் அறிந்த அறியாத யாரும் பெற்று உயர்ந்து உய்ய வேண்டும் என்னும் பேரால் கொண்டவர். செய்வன திருந்தச் செய்வதில் அக்கறை உள்ள இவர், உலக நாடுகளின் வரலாறுகளைப் படித்தும் மதங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டும் வருகிறார்.

எதிர்காலத்தின் மீதும் இளைஞர்கள் மீதும் அபார நம்பிக்கை வைத்துள்ள ஹாஜிமுகமது தன் ஆர்வங்களையும் ஆய்வு முடிவுகளையும் அரிய கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் எழுதி வருகிறார். இவற்றின் முதல் தொகுதிதான் இது. சென்னை தமிழ் அலை ஊடக உலகம் வடிவமைப்பில் ஒரு நூலாக வெளிவந்துள்ளது.

என் இனிய இஸ்லாமிய இளைஞனே! என விளித்து 35 பக்கம் கட்டுரை ஒன்று. தொடர்ந்து இனிய கவிதைகள். கட்டுரையாளரும் கவிஞருமான ஹா.மு. முதலாவதாகவும் முடிவாகவும் ஒரு நன்மார்க்கர், இசுலாமியர். இவருக்கு இசுலாம் என்பது மனித நேயம், சமவுரிமை.

இங்கே இவருடைய சொற்களைக் கொண்டே இவர் முழக்கங்களை எடுத்துரைப்பதே பொருத்தமாக இருக்கும்.

மனிதனுக்கு அஞ்சாமல் மறுமைக்கே அஞ்சியும், வீணுக்கு வாழாமல் தீனுக்காய் வாழ்ந்தும் வருபவர்கள், எந்த மனத்தடையும் இல்லாமல் தங்களை முஸ்லீம்கள் நாங்கள் என்று கூறிக்கொள்ள வேண்டியவர்கள்.

800 ஆண்டுக்கால இந்திய வரலாறு இவர்கள் உடையது. “இட ஒதுக்கீடுசு என்பது, புதிதாகக் கேட்கப்படும் ஒன்று அல்ல, எடுத்துக் கொண்டதைத் திரும்பக் கேட்பதே.

இவர்கள் சிறுபான்மையினர் என்று தங்களைக் குறுக்கிக் கொள்ள முடியாது. இந்தியர்கள் இந்தியவிடுதலையில் தங்களுக்கு உரிய பங்களிப்பைச் செய்தவர்கள்.

உண்மைக்குரல் கொடுக்கும், உரிமைக்கு உயிரியை கொடுக்கும் தலைவர்களே இவர்கள் தலைவர்களாக இருக்க முடியும். “விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்; வீரமில்லாத விவேகம் கோழைத்தனம்சு என்பது பாபா- ஆசான், தளபதி பழநிபாபா சொன்னது. 138 முறை சிறை சென்றவர் சொன்னது!

கவிஞர் ஹாஜி முஹமது இந்தியர் என்பதைப் போலவே தமிழர். தமிழர் விடுதலைக்காகக் குரல் கொடுப்பவர். தன் பதினாறாவது வயதில் இலங்கைக்குச் சென்றுவரத் துணிந்திருந்தவர். பிற்காலத்தில் இலங்கையில் நடந்தேறிய படுகொலைகளால் மனம் நொந்து தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கத் தாங்கள் தமிழர்களுடன் ஒன்றிணைய வேண்டியதன் தேவையை வற்புறுத்தியவர்.

மார்க்கத்தில் ஊன்றி நிற்கும் ஹாஜி முகமது ஒரு மானமிகு திறந்த மனமும் தெளிந்த அறிவும் கொண்ட இவர் தந்தை பெரியாரின் கருத்துகளோடு ஒத்துப்போவது இயல்-பானதுதான். முசுலீம் பெண்களின் முன்னேற்றம் விழையும் கவிஞர் ஹாஜிமுகமது கலியாணத்-துக்குப் பிறகே காதலை நினைத்தவர். நிழலாக, நீரோடையாக, மானாக மீனாக மணவலாட்டியைக் கொண்டாடுபவர்.

அவ்வைப் பாட்டியைத் தன் பூட்டியாக ஆராய்ந்து அறியும் கவிஞருக்கு ஆபிதா ஹாஜி அறிவழகி, அபூபக்கர் ஹாஜி எழிலன், ஆஃபியா ஹாஜி தேன்மொழி, வரலாறு என்பதும் தொடர்ச்சி என்பதும் இதுதான்.

ஹா.மு. நிறையப் படித்திருக்கிறார். படித்துக் கொண்டும் இருக்கிறார். இலங்கை சிவனடி பாதத்தை ஆதாம் நபி பாதமாகவும், இராமர் கிருஷ்ணர் போன்றோரை இறைத் தூதர்களாகவும் இவர் ஊகிப்பதை கவிமதி துபாய் தோழமையோடு சுட்டிக்காட்டியுள்ளார். திருமாவின் தம்பியின் இந்தக் குட்டுக்கும் தட்டுக்கும் மதிப்பளித்து வருபவர் கவிஞர்.

இனிவரும் பாகங்களில் விளக்கமாக எழுதத் திட்டமிட்டிருக்கும் நூலாசிரியருக்கு, நூலைப்படிப்பவர்களின் எதிர்வினைக் கருத்துகள் உதவுவனாய் அமையும் பிழையிருந்தால் பதியுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தங்கள் அணிந்துரைகளில், தலைவர் ஆனா ரூனா, ‘தம்பி இனியவன் தீவிரமாய்ச் சிந்திப்பவர்’ என்றும்; கவிஞர் அறிவுமதி, ‘இந்தக் கவிதைகள் உயிர்களின் வலிகளை உள்வாங்கி எழுதப்பட்டுள்ளன என்றும்; கவிக்கோ அப்துல் ரகுமான், ‘ஏணியில் ஏறுபவை’ என்றும் குறிப்பிட்டுள்ளவை, உண்மை, வெறும் புகழ்ச்சி அல்ல.

இவர் எழுத்துக்கள், ஏணியில் ஏறுபவை. படிப்பவர்களையும் ஏணியில் ஏற்றுபவை. இவைதாமே கட்டுரைகள், கவிதைகள்!

Pin It