சாதி மோதல்களின் விளையாட்டுத் தளமாகவே மாறிவிட்டது தமிழகம். ஆதிகாலம் முதல் தமிழின் தொன்மையை ஆராய்ந்தால், செய்யும் தொழிலால் வேறுபாடுடைய மக்கள் மட்டும் தான் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைய வெறி கொண்ட சாதிக்கான எந்தவிதமான தடயங்களும் தொடக்கத்தில் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பாட்டை உலகத்திற்கு வழங்கிய ஒரு சமூகத்தில் இன்றைய சாதி வெறி இடம் பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்க முடியாது என்பதை தர்க்க அடிப்படையில் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இதைப்போலவே சாதிக் கலவரங்களும், சுதந்திரத்திற்கு பிந்திய இந்தியாவில் பெருக்கமடைந்து விட்டன என்பதையும் நாம் மறுக்க முடியாது. இன்றைய சமூக வாழ்க்கையில் எத்தனையோ துயரங்களை இவை தந்துவிட்டன. அதிலும் இன்றைய வாழ்க்கையில், இவை வேறு மாற்றங்களை பெற்றுவிட்டன. கலவரங்களில் மறைந்தும் ஒளிந்தும் இருக்கும் மர்மமுகங்களைக் கண்டறிய முடிவதில்லை. உலகமயம் உருவாக்கியுள்ள கூலிப்படைகளும், அவர்களை இயக்கும் நிழல் உலகமும் மிகவும் வலிமை கொண்டதாக இருக்கின்றது. அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களையும் ஆட்டிப்படைக்கும் வித்தைகள் அனைத்தையும் இவர்கள் அறிந்திருக்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையின் துணை ஆய்வாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுதங்களால் அவரைக் கொன்று முடித்தவர்கள் அவருடைய வயிற்றில் விழுந்த காயத்தில் மணல் அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள். மருத்துவர்களால் கூட, இவர் காப்பாற்றக் கூடாது என்பதற்காக இந்த செயலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த அளவிற்கு கிரிமினலாகவே உருவாக்கப்பட்டவர்கள் தான் இந்தக் குற்றத்தை திட்டமிட்டு செய்துள்ளனர்.

இதைப்போலேவே தருமபுரி மோதல்களில், அந்த ஊர் மக்களே அதிர்ந்து போய் நிற்கிறார்கள். இதற்கு முன் என்றுமே நிகழாதவை, இன்று எப்படி நிகழ்ந்தது என்று தங்களைத் தாங்களேக் கொண்டிருக்கிறார்கள். நத்தம், கொண்டம்பட்டி, அண்ணா நகர் ஆகிய மூன்று கிராமங்களில் மிகப்பெரிய சேதம் நிகழ்ந்துள்ளது. மூன்று கிராமங்களிலும் ஒருமாலை நேரத்தைத் தேர்வு செய்து தாக்குதல் தொடங்கியிருக்கிறார்கள். தாக்குதலுக்கு நன்கு திட்டமிடப்பட்டுள்ளது தெரிகிறது. தலித் மக்களின் பொருளாதாரத்தை நாசப்படுத்தி பல ஆண்டுகள் தொடர்ந்து முன்னேறாமல் தடுப்பது இந்த தாக்குதலின் நோக்கமாத் தெரிகிறது.

தாக்குதல் மிகவும் கொடூரமானது. கல்லூரி, பள்ளி மாணவர்களின் சன்றிதழ்கள், நெருப்பில் கருகிப்போய் கிடக்கின்றன. தேடிப்பிடித்து, அழித்திருக்க வேண்டும். பாடபுத்தகங்கள் மாணவர்களுக்குப் பயன்பட்ட சைக்கிள், மோட்டார் சைக்கிள், அனைத்தும் தீயின் வெப்பம் தாங்காமல் உருகிப் போய்விட்டன. வசதி படைத்தவர்களின் வீடுகளாகப் பார்த்து தாக்குதலைத் தொடுத்துள்ளார்கள். இந்த வசதி எதுவுமே குறுக்கு வழியில் வந்தவையாகத் தெரியவில்லை. உழைப்பால் வந்தவை. பெங்களூரு மிகவும் அருகாமையில் அமைந்ததால், உழைத்து குருவி சிறுக சிறுக கட்டிய கூட்டைப்போல இவர்கள் தங்கள் வாழ்க்கையை கட்டியமைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் இன்று அழிந்துக் கிடக்கின்றன.

தருமபுரி மாவட்டத்தின் சமூகப் பொருளாதார வாழ்க்கை பல்வேறு வேறுபாடுகளைகளைக் கொண்டுள்ளது. இங்கு சாதிய ஒடுக்கமுறையால் ஏற்பட்ட மோதல்களும் கடந்த காலத்தில் நிகழ்ந்து தான் இருக்கின்றன. ஆனால் முதல்முறையாக இப்பொழுது தான், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு, தலித் மக்களின் குடிசைகள் முற்றாக எரிக்கப்பட்டுள்ளன. இதனை, ஓர் அபாய அறிப்பாக உணர்ந்து கொள்வது மிகவும் அவசியமானதாகும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வகுக்கப்பட வேண்டும். அரசு உதவிகள், அனைத்தும் அந்த மக்களுக்கு உடன் கிடைக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் செய்வது உடனடி கடமை.

சாதியம் உருவாக்கியிருந்த ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் அகற்றும் வலிமை சமூக நல்லிணக்கம் கொண்ட மக்களிடம் தான் இருக்கிறது. சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடும் அதே நேரத்தில், சாதி வெறி சார்ந்த செயல்பாடுகள் கொண்டவர்களை, மக்கள் புறக்கணித்து தனிமைபடுத்த வேண்டும். இதில் தான் சமூக சமத்துவதிற்கான வெற்றி அமைந்துள்ளது.

- சி.மகேந்திரன்