சாகித்திய அகாதெமியின் சிறுவர் இலக்கியத்திற்கான விருது பெற்ற கொ.ம.கோதண்டம் நேர்காணல்

விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் குறிஞ்சிக் செல்வர் கொ.மா. கோதண்டம் அவர்களை சந்திக்க செல்கிறோம். சாகித்ய அகாதெமியின் விருது பெற்றதற்காக “தாமரையின்” சார்பில் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தாமரைக்காக பத்திரிக்கையாளர் எஸ்.பழனிக்குமார் நடத்திய நேர்காணல்...

உங்கள் குடும்ப பூர்விகம் பற்றிச் சொல்லுங்கள்?

எங்களுடைய பூர்வீகம் ஆந்திர மாநிலம் கொட்டுமுக்கல கிராமம். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் கிருஷ்ண தேவராயர் தமிழகத்திற்கு படைகளுடன் வந்தார். அவருடன் வந்த சத்திரிய படைப்பிரிவைச் சேர்ந்த பாதிப்பேர்கள் மன்னருடன் திரும்பிப் போகாமல் இங்கேயே தங்கி விட்டனர் அதில் எங்கள் குடும்பமும் ஒன்று. எனது பெற்றோர் மாடசுவாமிராஜா & சீதாலட்சுமி எனது தந்தை விவசாய தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பும் மேஸ்திரியாகவும் விவசாய தொழிலாளியாகவும் வேலை செய்திருக்கிறார். எனது தாய் பஞ்சாலை தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தார்.

உங்களது ஆரம்பகால பிறப்பு, படிப்பு பற்றி...

நான் 1938ல் பிறந்தேன் என் உடன் பிறந்த சகோதரிகள் இருவர். தொடக்கப் பள்ளியில் சேர்ந்து 5ம் வகுப்பு வரைதான் படித்தேன். நெருக்கடியான காலகட்டம். குடும்பத்தை நடத்துவதே சிரமாக இருந்தது. அப்பொழுது ஒரு பாடல் பிரபலம்.

“ஈசன் படியளக்கும் இதிகாச காலமல்ல ரேசன் படியளக்கும் ரெண்டும் கெட்டான் காலம்”

எனது தந்தை எனது படிப்பை நிறுத்தி, ஒரு கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டார். மாதம் ரூ 5 சம்பளம் கிடைத்தது.

ஐந்தாம் வகுப்புவரை படித்த நீங்கள் எழுத்தாளராக மாறியது எப்படி?

கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்து கேலியும், கிண்டலும் செய்வார்கள். எனக்கு அழுகை அழுகையாக வரும். விடுமுறை நாட்களில் எனக்கு, எனது தந்தை கொடுத்த காசை மிச்சப்படுத்தி, வாசகசாலையில் 1/2 அணா கொடுத்து புத்தகங்கள் வாங்கி வந்து படிப்பேன். அன்றைய காலகட்டத்தில் இராசபாளையத்தில் தெருவுக்கு ஒரு வாசககாலை இருந்தது அதில் சிற்றிதழ்கள், கண்ணன், முயல், அணில், மிரம் என ஏரளமாக வந்தது. அவைகளை எல்லாம் படிப்பேன். புத்தகமும் கையுமாக அலைவேன். அதைப் பார்த்த ஒருவர் என்னை அழைத்து “கண்டதும் கற்க பண்டிதனாவான்” என்ற பழமொழியே உள்ளது. எனவே பள்ளிக்கு செல்லவில்லையென்றாலும் எல்லா புத்தகங்களையும் படி அறிஞனாகிவிடலாம் என்றார். அவரது சொல் என்மனதில் ஆழமாப் பதிந்து விட்டது. பல்வேறு இலக்கியங்களை பலநாட்டு இலக்கியங்களை தேடிப்பிடித்து படித்தேன். பலநாள் வாசகன் ஒருநாள் எழுத்தாளன் ஆவான் என்பதைப் போல் எனக்கும் எழுத வேண்டுமென்று உந்துதல் ஏற்பட்டது.

முதல் கதைக்கு உருவான கரு எப்படி ஏற்பட்டது?

எனது தந்தை இறந்த பின் எனது தாயார் வேலை பார்த்த இராசபாளையம் மில்லில் நானும் தொழிலாளியாக சேர்ந்தேன். அருவிக்கு செல்வேன். அது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு மலைவாழ் பளிங்கர் இன மக்கள் அருவிக்கு வருபவர்களுக்கு சிறுசிறு உதவிகள் செய்து கொடுத்ததை வாங்கிக் கொள்வார்கள். நான் அடிக்கடி அங்கு சென்று பளிங்கர் இன வாலிபர்களிடன் பழகி. அவர்கள் வாழும் இடத்திற்கு செல்லும் அளவிற்கு நெருக்கமாகிவிட்டேன். அவர்களது வாழ்க்கை, வீடு, உணவு, துயரம், எளிமை என்னை மிகவும் பாதித்தது. அவைகளை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அவர்களது வாழ்க்கையை சிறு கதைகளாக எழுதினேன். அதில் ஒரு கதையை “சிவகாசி முரசு” மாத இதழில் வெளியிட்டார்கள். பின் தாமரை, தீபம், செம்மலர் இதழ்களிலும் எனது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தன.

உங்களது இலக்கிய ஆர்வத்தை தூண்டிவிட்டவர்கள்?

நான் கதை எழுத ஆரம்பித்த நேரத்தில் எனக்கு முறையாக எழுதவும், கதைக்கருவை எப்படி தேர்வு செய்வது என்பதுவரை கற்றுக் கொடுத்தது பன்மொழிப்புலவர் மு.கு.ஜெகந்நாதராஜா ஆவார். அவர்தான் என் குருநாதர் கவிதை எழுத வேண்டும் என்றால் எதுகை மோனை, யாப்பு, ஓசை இவைகளை மட்டும் படித்தால் போதும் என்றார். அனுபவத்தில் தானே கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். பின் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அமைப்பை இராசபாளையத்தில் தொடங்கினேன். தாமரையில் எனது படைப்புகளை பாராட்டி தி.க.சி. வல்லிக்கண்ணன், வண்ணதாசன், வண்ணநிலவன், கலாப்ரியா, மீரா, கர்ணன் ஆகியவர்களின் ஊக்கம், பழக்கம், பல்வேறு இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டது ஆகியவைகள்தான் எனக்கு மேன்மேலும் ஊக்கத்தை தந்தன.

சாகித்ய அகாதெமி விருது எந்த நூலுக்கு?

நான் எழுதிய “காட்டுக்குள்ளே இசைவிழா” என்ற நூலுக்கு சாகித்ய அகாதெமியின் சிறுவர் இலக்கியத்திற்கான விருது கிடைத்துள்ளது.

இதுவரை எத்தனை விருதுகள் கிடைத்துள்ளன.

நான் முதலில் எழுதிய “ஆரண்யகாண்டம்” நூலுக்கு குடியரசுத் தலைவர் விருது, மலேசியா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம், உலகத் தமிழ்ச்சங்கம், தென்னிந்திய பதிப்பாளர்கள் சங்கம், மத்திய மாநில அரசுகள், பல்வேறு இலக்கிய அமைப்புகள், முன்னாள் பாரதபிரதமர் இந்திராகாந்தி நேரில் அழைத்துப் பாராட்டு குழந்தை எழுத்தாளர் சங்கத்திலிருந்து ஏ.வி.எம் தங்கப்பதக்கத்துடன் விருது உள்பட 70 விருதுகள் வாங்கி உள்ளேன்.

இதுவரை எத்தனை புத்தகங்கள் எழுதியுள்ளீர்கள்?

அதில் 86 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. 16 நூல்கள் அச்சில் உள்ளன. நான் எழுதியவைகளில் நாவல், சிறுகதைகள், நாடகம், கவிதை, இலக்கிய ஆய்வு, வன இயல், பறவையியல் ஆகியவை அடங்கும். சிறுவர்களுக்கு மட்டும் 40 நூல்கள் எழுதி உள்ளேன்.

வெளிநாடுகளுக்கு சென்று உள்ளீர்களா?

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளேன், இலங்கையில் ஒருமாத காலம் எழுத்தாளர் சுற்றுலா என்ற பெயரில் எழுத்தாளர்களுடன் சுற்றுப்பயணம் செய்துள்ளேன்.

உங்களது படைப்புகள் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.?

எனது படைப்புகள் ஆங்கிலம், உருசியன், சிங்களம், வங்காளி, தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.

படைப்பாளர்களுடன் இலக்கிய மேடைகளில் உரை ஆற்றி உள்ளீர்களா?

ஆமாம் இலங்கை பல்கலைக்கழக தமிழ் சங்கம், ஏ.ஜி.ஐ. படைப்பாளர் சங்கம், புதுடெல்லி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி, கோட்டயம் தமிழ்ச் சங்கங்களிலும், கவிதை எழுதுவது எப்படி? கதை எழுதுவது எப்படி? என்று உயர்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், வாசகர் வட்டங்களில் பேசி இருக்கிறேன். மேலும் கலைஞர் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சிகளிலும் பேசி உள்ளேன்.

தற்போதுள்ள உங்கள் குடும்பம் பற்றி..?

எனக்கு 1966ல் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் ராஜேஸ்வரி 10ம்வகுப்பு வரை படித்த அவர் எனது மனைவி ஆன பின்பு தான் எனது படைப்பில் முழுக்க கவனம் செலுத்த வாய்ப்பு கிடைத்தது. குடும்பபாரத்தை அவரே சுமந்து கொண்டு, எழுதுவதற்கு எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். மேலும் எனது மனைவியும் சுய முயற்சியில் தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளைக் கற்று அம்மொழிகளில் 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் எனது மகன் குறளமுதன் இரண்டு நூல்களையும், இளைய மகன் இளங்கோ மூன்று நூல்களையும் எழுதி உள்ளனர். எனது மொத்த குடும்பமே படைப்பாளிகள் குடும்பமாக இருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது, என் மனைவியைப் பொறுத்த அளவில் மிகச் சரியாகவே உள்ளது.

இராசபாளையம் மில்லில் பணியாற்றிய போது தொழிற்சங்க அனுபவம் பற்றி கூறுங்கள்.

நான் இராசபாளையம் மில்லில் 31 வருடங்கள் பணியாற்றி உள்ளேன். அங்கு ஏஐடியுசி, ஐனன்டியுசி, எச்.எம்.எய். ஆகிய மூன்று தொழிற்சங்கங்கள் உள்ளன. தொழிலாளர்களின் உரிமை, கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்த போராடி பெற்றுத்தருவது ஏஐடியுசி சங்கம்தான் அதன் தலைவர் பி.எம்.இராமசாமி தொழிற்சங்கத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஒருமுறை வாயிற்கூட்டத்தில் தலைவர் பாலதண்டாயுதம் பேசவந்த பொழுது, என்னை தலைமை வகிக்க வைத்துப் பெருமைப்படுத்தினார். பி.எம். இராமசாமி சேவையை நினைவு கூறும் வகையில் இந்நகரில் ஒரு கோடி ரூபாய் செலவில் “பி.எம்.ஆர். முத்து மகால்” என்ற கட்டிடத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஏஐடியுசியும் இணைந்து வசூல் செய்து கட்டிடம் கட்டி வருகிறது. அந்தப்பணியில் என்னையும் இணைத்துக் கொண்டு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். ஏஐடியுசி சங்கத்தில் சேர்ந்ததன் மூலமாகத்தான் மார்க்சீய தத்துவங்கள் புரியக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. சமூகத்தையும், சுரண்டல், ஒடுக்குமுறை பற்றிய புரிதல் ஏற்பட்டது. அதனால்தான் கீழ்தட்டு மக்களைப்பற்றி சுரண்டல் கொடுமைபற்றி படைப்புகள் இயற்ற ஊக்கம் கிடைத்தது.

உங்களுக்கு எந்தெந்த மொழிகள் தெரியும்?

எனக்கு தாய்மொழி தெலுங்கு பேசத்தான் தெரிந்தது. நான் சுயமுயற்சி எடுத்து தெலுங்கும், ஆரம்பகாலத்தில் மலையாளதிலும் தெலுங்கிலும் உள்ள நூல்களை தமிழில் மொழிபெயர்ந்து வெளியிட்டுள்ளேன். பின்னாளில் சுயபடைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மொழிபெயர்ப்பு பணிகளை விட்டுவிட்டேன்.

உங்களுக்கு பிடித்த, கவர்ந்த அரசியல் தலைவர்?

மக்கள் தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்கள்தான். அரசியல்வாதிகளுக்கு எல்லாம் வழிகாட்டியாக உள்ள ஆர்.என்.கே.தான் என்னை கவர்ந்தவர்.

உங்களது சாதனையாக எதை கருதுகிறீர்கள்?

நான் தாமரையில் மலைவாழ் பளிங்கர் இன மக்களைப் பற்றிய கதைகளை அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த க.சுப்பு. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சத்தியவாணிமுத்துவிடம் கொடுத்து இருக்கிறார். பளிங்கர் இனமக்களின் குடியிருப்பு, அவர்களது கொடுமையான வாழ்க்கை ஆகியவைகளைச் சித்தரித்து எழுதப்பட்ட கதைகளை படித்து விட்டு மனம்நெகிழ்ந்த அமைச்சர் மாவட்ட ஆட்சியருக்கு உடனே வீடுகள் கட்டிக் கொடுக்க உத்திரவிட்டார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

கே.ஏ.அப்பாஸ் எழுதிய ‘இருதுளி நீர்’ நேரு படித்து ராஜஸ்தான் தண்ணீர் பிரச்சினைக்கு கால்வாய் வெட்டியது போல், சகோதரி ஸ்டோவின் டாம்மாமாவின் குடில் கறுப்பினமக்களுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தது. போல ஒருகவிஞனின் கவியால் சோவியத் யூனியனில் காரம்குங்கால்வாய் அமைந்ததைப் போல எனது படைப்பால் மலைவாழ் மக்களுக்கு அரசு வீடுக்கட்டித்தந்ததை பெருமையாக எண்ணுகிறேன்.

உங்களை நெகிழ வைத்த சம்பவம் பற்றி கூறுங்கள்?

தமிழ்நாட்டில் நடிகர்களுக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. ஆனால் நான் எழுதிய கதைகளில் வரும் கதாபாத்திரம் “நீலன்” பெயரில் 3 இடங்களில் மாணவர்கள் ரசிகர் மன்றங்கள் அமைத்து இருப்பது மேலும் கற்பனை பாத்திரமான நீலனிடம் காட்டுக்குத் தங்களை அழைத்து போக வேண்டுமென கூறி அனுப்புவது ஆகியவை என்னை நெகிழ்ச்சியுறச் செய்துள்ளன.

மேலும் சுட்டி விகடனில், இறையன்பு திருவிழா நூலைப் படித்து முடிந்து” இப்படி எல்லாம் வன அறிவியல் செய்திகளை தமிழில் எழுத ஆளில்லையே எனது வருத்தம், கொ.ம.கோதண்டம் எழுதிய காட்டுக்குள்ளே திருவிழா நூலைப் படித்தபின் சீங்கிவிட்டது. என்று விரிவாக எழுதி இருந்தார்கள்.

அதேபோல் கரிசல் கி.ராஜநாராயணன் “தமிழில் சங்ககால குறிஞ்சிக் கபிலருக்குப் பின் வனஇயல், பறவை இயல், விலங்கியல் தாவரவியல் செய்திகளை அறிவியல் முறையில் இரண்டாயிரம் ஆண்டுகளாக யாரும் எழுதவில்லை. கொ.ம.கோதண்டம்தான் எழுதுகிறார். அவரே இருபதாம் நூற்றாண்டின் குறிஞ்சிக்கபிலர் எனப்பாராட்டி எழுதியது என்னை நெகிழ்ச்சியுறச் செய்தது.

திகிலான அனுபவங்கள் ஏதாவது?

ஒருமுறை பளிங்கர் இன வாலிபருடன் காட்டுக்குள் போய்க் கொண்டிருக்க பொழுது. ஒற்றைக் காம்புயானை (இரண்டு தந்தம் உண்டு.) தனியாக இருந்தால் ஒற்றைக்கொம்புயானை என சொல்வது வழக்கம்) எங்களைப் பார்த்து விரட்ட ஆரம்பித்துவிட்டது. ஓடுங்கள் ஓடுங்கள் என் பின்னாலேயே வாருங்கள். என அப்பளிங்கர் இன வாலிபன் பின்னால் ஓடினேன். யானை விரட்டிக் கொண்டுவந்தது. சிறிது தூரத்தில் இருந்த பாறையின் இடைவெளியில் உள்ளே போய் நின்று கொண்டோம். யானை உள்ளே வரமுடியாமல் பாறையை சுற்றி சுற்றி வந்தது. பாறையின் பின்புறம் யானை சுற்ற சென்றபோது பளிங்கர் இன வாலிபர் மின்னல் வேகத்தில் வெளியே சென்று யானை போட்ட லத்தியை எடுத்து வந்தான். வேட்டி சட்டையைக் கழற்றிவிட்டு, லத்தியை உடல் முழுவதும் பூசிக் கொள்ள சொன்னான். அவனும் பூசிக் கொண்டான். சுற்றி வந்த யானை சிறிது நேரம் நின்று விட்டு காட்டுக்குள் போய்விட்டது. அன்று உயிர்பிழைப்போமா என்ற திகைப்பு இருந்தது.

உங்களது படைப்புகள் பள்ளி, கல்லூரிகளில் பாடநூலாக உள்ளதா?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரியில், மதுரை லேடி டோக் கல்லூரியில் எனது நூல்கள் பாடநூலாக உள்ளது.

தாமரை வாசகர்களுக்கு...?

இலக்கிய உலகில் தாமரைக்கு என்றும் ஒரு உயர்ந்த இடம் உள்ளது. தாமரையில் ஒரு படைப்பு வந்தால் அந்தப்படைப்பாளி பெருமைப்படுகிறான், இலக்கியத்தரம் உள்ள பத்திரிக்கை என்பதால், பள்ளிப்படிப்புத்தான் ஒருவனை படைப்பாளியாக்க முடியும் என தவறான கருத்து உள்ளது. பள்ளிப் படிப்பும் அவசியம் அதே நேரத்தில் ஏராளமாக படித்து வேண்டும் நான் ஆயிரக்கணக்கான எழுத்தாளனாக முடிந்தது. எனவே தாமரை வாசகர் ஏராளமாக படிக்கவேண்டும் அதன் அடிப்படையில் உங்களது வாழ்க்கை அனுபவத்தையும் சேர்த்து கதை, கவிதைகள் எழுத வேண்டும். முற்போக்கு எழுத்தாளர்களுக்கு தாமரை என்றும் உறுதுணையாக இருக்கும்.

தற்போது புதிதாக எழுதிக் கொண்டு இருக்கிறீர்களா?

தற்போது ஆண்டாள் காவியம் என்ற படைப்பை எழுதியுள்ளோம். மேலும் இரண்டு படைப்புகளுக்கு கரு உருவாகி உள்ளது. மக்கள் தலைவர் ஆர்.நல்லகண்ணு வாழ்க்கை வரலாறை ஒரு காவியமாக எழுத வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது.

40 ஆண்டுகளுக்கு மேல் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு, சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது ஒரு எழுத்தாளனுக்கு உரிய அங்கீகாரத்தை இந்திய அளவில் கொடுத்திருக்கிறது. அதற்கு மேலும் தாமரை என்னை சிறப்பிக்கும் வகையில் நேர்காணல் நடத்தி, பத்திரிக்கையில் போடுவதற்கு எனது நெகிழ்வான நன்றியை உரித்தாக்குகிறேன்.