அலைபேசி மணி அடித்ததும் அதை அணைத்து, சட்டைப்பையில் போட்டுவிட்டு, படுக்கையிலிருந்து எழுந்தான் பாலமுருகன்... கையில் டார்ச் விளக்கையும் சால்வைத் துண்டையும் எடுத்துக்கொண்டான். கதவைத் திறந்தபோது மேகக்கூட்டம்போல் பனிமூட்டம் அவன் உடலை ஊடுருவியது. அதன் தீவிரக் குளிர்ச்சியில் அவன் உடம்பு சில்லிட்டது. சால்வையை விரித்துத் தலைக்கு முக்காடிட்டு, தொங்கலைத் தோளின் இடமாகவும் வலமாகவும் போர்த்திக்கொண்டான். நிமிர்ந்து பார்த்தபோது சாலையோரத் தெருவிளக்கு மின்மினிப்பூச்சியாய்த் தெரிந்தது. டார்ச் விளக்கை அழுத்தினான். வீட்டை ஒட்டி நின்ற ரோஜாச்செடிகளையும், சாமந்திச் செடிகளையும் கூட அது அடையாளம் காட்டவில்லை. கைக்கடிகாரத்தைப் பார்த்தான், மணி ஐந்தரை. அவன் நினைவு காட்டுக்குச் சென்றது. மற்றவர்கள் வருமுன் கால்வாயிலிருந்து நீரைத் திருப்பி வயலுக்கு விடவேண்டும். பின்பனிக்காலத்தில் இப்படி ஒரு சிரமம். சலித்துக் கொண்ட பாலமுருகன் ஆறு மணிக்குக் கிளம்பலாம் என நிதானப்பட்டு மனைவி மார்க்கிரெட்டை எழுப்பி, சூடாக ஒரு குவளை தேநீர் கேட்டான்.

ஆவி பறக்க தேநீர் வந்தது. அதைப் பருகியவாறே பூஜை அறையைத் திரும்பிப் பார்த்தான். முருகன் படமும் இயேசு படமும் அருகருகே இருந்தன. குறுநகை ஒன்று அவன் உதட்டை விரித்துச் சென்றது. வெளியே எட்டிப்பார்த்தான். வாகனங்களின் விளக்குகள் ஓடி ஓடி மாய்ந்தன. மீண்டும் டார்ச் விளக்கை அழுத்தினான். இப்போது ரோஜா மலர்கள் மீதும் சாமந்திப்பூக்களின் மீதும் முத்துக்களைக் கோத்துப் போட்டதுபோல் பனித்துளிகள்.

கால்களைத் தூக்கி வைத்தான். நாகியம்பட்டி சாலை வழி சென்றபோது இடப்பக்கம் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. இரண்டு நாள்களுக்கு முன்பு இந்த நேரத்தில் இருண்டிருந்த அந்தப்பகுதி, ஆடை அணிகலன்கள் இழந்த கைம்பெண்போல் வெளிறிக்கிடந்தது. கால்களை இடப்பக்கம் திருப்பி, டார்ச் விளக்கை நீட்டினான். எதுவும் சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் நடந்தான். அவனுக்கு உதவுவதுபோல் சாலையைக் கடந்து சென்ற லாரி ஒன்று ஒளியைப் பீச்சியடித்தது. அந்த வெளிச்சத்தில் கண்ட அவலம் அவனைத் திகைக்க வைத்தது.

அங்கு எழும்பிநின்ற நீண்ட சுற்றுச்சுவரையும், அதையயாட்டி உள்ளே நின்ற வேம்பு, புங்கு, தூங்குமூஞ்சி மரங்களையும் காணவில்லை. கருவிழிகளைத் தீட்டிக்கொண்டு, குனிந்தபடி மெல்ல ஓசை வராத வகையில் கால்களை நகர்த்தினான். நூறு மீட்டர் நீளமிருக்கும் அந்தச் சுவர் இடிக்கப்பட்டிருந்தது. ஒரு செங்கல்லோ, காரைத் துண்டுகளோ இந்தப் பக்கம் இல்லை. எல்லாம் உள்பக்கம், அதுவும் நான்கு, ஐந்தடி தள்ளிக் கொட்டப்பட்டிருந்தது. தலைவேறு, கை வேறு, கால் வேறு எனத்துண்டிக்கப்பட்டுச் செத்துக்கிடந்தன மரங்கள். பழைய சுவரிலிருந்து சற்றுத்தள்ளி உள்ளே புதிதாக ஒரு கம்பி முள்வேலி.

பனி கொட்டும் நள்ளிரவில் இந்த இடிப்பும் வெட்டும் நடந்திருக்கும். ஐம்பது இளைஞர்கள் ஈடுபடாமல் இது நிர்மூலமாகியிருக்காது. கடப்பாரை, சம்மட்டி, மண்வெட்டி, கொடுவாள், ரம்பம் எல்லாம் கையில் எடுத்திருப்பார்கள். மின்பொறிகளைக் கூட பயன்படுத்தியிருக்கலாம். அவனின் கணிப்பு தவறுதலாய் இருக்க முடியாது.

தரைமட்டமாக்கப்பட்டது அரசு உதவிபெறும் ஒரு பள்ளியின் சுற்றுச்சுவர். அது ‘காயிதே மில்லத்’ நடுநிலைப்பள்ளி; இசுலாமியர் நிர்வகித்து வருவது. அதையயாட்டி தெற்கே இருந்தது செங்கோடக் கவுண்டரின் நிலமும் கட்டடமும். கட்டடத்தின் தரைத்தளத்தை அவர் வாடகைக்கு விட்டிருந்தார். அதில் ஒரு பற்றவைப்புப் பட்டறை இயங்கியது. மாடியில் அறுபது பேர் அமரும் வகையில் ஓர் அரங்கம். அதன் வெளிப்புறச்சுவரில் ‘ஹிந்து ஆலயப் பாதுகாப்புக்குழு, தம்மம்பட்டி’ என எழுதப்பட்ட பலகை. சாலையில் நடந்தோ, வாகனங்களிலோ செல்வோருக்குத் தெரியும்படி அது பொருத்தப்பட்டிருந்தது.

செங்கோடக் கவுண்டர் சிவன் கோயிலுக்குத் தர்மகர்த்தா. காடு, கழனி, தோப்பு, துரவு என இருபது ஏக்கருக்கு மேல் வைத்திருந்தார்; தம்மம்பட்டி ‘நடராஜா பட்டு மாளிகை’யின் உரிமையாளர். அவரை நினைத்ததும், தன் திருமணமே பாலமுருகன் மனத்தில் உருண்டது.

கல்லூரியில் படித்த நாள்களில் அவனுக்கும் மார்க்ரெட்டுக்கும் காதல். கோனேரிப்பட்டி சலேத் மாதா கோயில் அருகில் அவள் வீடு. சாதி, மத வேர் பிடித்த ஒரு சமூகம் இருப்பதை அறியாததாய் அவர்கள் காதல் வளர்ந்தது. இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்தனர். பாலமுருகன் உடையார்பாளையத்தில் நகலகம் ஒன்றைத் தொடங்கினான். அதோடு அவர்களுக்குச் சொந்தமான காடு, கழனியையும் கவனித்து வந்தான்.

திருமணப் பேச்சுத் தொடங்கியது. மார்க்ரெட்டின் அப்பா, அவளை மனுடுயாகவோ, மகளாகவோ கூட பார்க்கவில்லை. தங்கள் கிறிஸ்தவ மதத்தின் உறுப்பினளாகவே பார்த்தார். ‘அவென் வேணுன்னா மதம் மாறி நம்ம கோயில்லெ வந்து கட்டிக்கட்டும்’ எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். பாலமுருகன் மதம் மாற தயக்கம் காட்டினான். மார்க்ரெட்டும் அவனை வற்புறுத்தவில்லை.

ஊரிலுள்ள சில பெரியவர்களைச் சந்தித்து மார்க்ரெட் யோசனை கேட்டாள்; ஒரு தீர்வு கிடைத்தது. அதைச் சொல்ல பாலமுருகனின் நகலகம் வந்தாள். ‘நீங்க மதம் மாற வாணாம்... எங்க கோயில்ல வந்து தாலி கட்டிக்கிட்டா போதும்... மத்த விசயங்களெ நான் பாத்துக்கரன்’ என்றாள். அவனுக்கு அது சரியெனப்பட்டது. தலையை ஆட்டினான். ‘எதுக்கும் அப்பாகிட்ட ஒரு வார்த்தெ கேட்டுக்கரன்’ வீட்டுக்குத் திரும்பினான் பாலமுருகன்.

வீட்டுக்கு வந்து அப்பாவிடம் அவன் பேசிக் கொண்டிருந்தபோது, வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினார் செங்கோடக் கவுண்டர். வந்ததும் வராததுமாய் ‘அதென்னெ ஒரு பொட்டச்சிப் பேச்செக் கேக்ரது? அந்த மார்க்ரெட் மதம் மாற வாணாம்.. இந்த மாப்ளெ வேணுன்னா.. அவ நம்ம சிவன் கோயிலுக்கு வரட்டும்.. அம்மி மிதிச்சு, அருந்ததி பாத்து, ஹோமம் வளத்து, அய்யரெ வச்சு மந்திரம் ஓதி கல்யாணத்தெ ஜாம்ஜாம்ன்னு நடத்திர்லாம்... என்ன நான் சொல்ரது?’ எனச் சற்றுத் தூக்கலான குரலில் பேசி, சாதகமான பதிலுக்காக இருவர் முகங்களையும் மாறி மாறிப் பார்த்தார். அவர் பேச்சிலும் நியாயம் இருப்பதுபோல் அப்பாவுக்குத் தோன்றியது. அவர் முகத்தில் அது பளிச்சென வெளிப்பட்டது. அதைக் கவனித்த கவுண்டர், ‘என்னர்ந்தாலும் கெட்டிமேள சத்தத்தில மஞ்சள் அரிசியும் பூவும் தூவி தாலிகட்ர மாத்ரி வருமா? அவுளெ ஒத்துக்கச் சொல்லுப்பா... நாலு குதிரெ பூட்ன சாரட் வண்டில மாப்ளெ பொண்ணுக்கு ஊர்வலம் நடத்ரேன்’ என உசுப்பி விட்டார். ‘நீங்க சொல்ர மாதிரி செஞ்சுக்கிட்டா போச்சு! என்னப்பா சொல்ர.?’ மகனின் முகத்தைப் பார்த்தார் அப்பா. அவன் முகத்தில் சோகம் படர்ந்திருந்தது. இருப்பினும் அப்பாவும், கவுண்டரும் அவன் காதலின்மேல் ஒரு மத முத்திரையைக் குத்திக் கொண்டிருந்தார்கள்.

     இப்படி இருதரப்பினரும் அடம் பிடிக்க பேச்சு ஒரு முடிவுக்கு வராது போயிற்று. ‘திருமணம் நடக்காது போய்விடுமோ’ நெஞ்சிலிருந்து புகையும் அச்சத்தின் ஆவி காதலர் மூச்சில் கலந்திருந்தது. பத்து நாள்களுக்குப்பின்பு சந்தித்தபோது, இருவரும் கடவுள், மதம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்கள். மார்க்ரெட் கேட்டாள்,

‘எனக்கும் உங்களுக்கும் தனித்தனி கடவுள் இருக்க முடியுமா?’

‘இருக்கவே முடியாது. நமக்கு மட்டுமல்ல, அண்டம் முழுமைக்கும் ஒரே கடவுள்தான். அவரே ஆப்பிரிக்கர், ஆஸ்திரேலியர், யூதர், கிரேக்கர், ஆரியர், திராவிடர், சீனர் என வெவ்வேறு மனித சமூகங்களைப் படைத்தவர்’

‘அப்டீன்னா... மகாவீரர், புத்தர், கம்பியூசியஸ், இயேசு நாதர், முகமதுநபி போன்ற மகான்களையும் அவர்தானே பிறப்பித்திருப்பார்?’

‘அதிலென்ன சந்தேகம்.. அதுபோலவே, வேதங்களும் கீதையும் பைபிளும் குரானும் ஒரே கடவுளால் வெவ்வேறு சமூகங்களுக்கு ஓதப்பட்டவைதான். அந்தந்த அருள்மொழிகளோடு அவ்வவ் காலத்து ஆதிக்க வர்க்கச் சிந்தனைகளும் கலந்து கிடக்கின்றன’.

‘கிடக்கட்டுமே; கழிவுகளை நீக்கித் தெளிவுகளைக் கண்டடையும் மனிதர்கள் எல்லாக் காலங்களிலும் வாழ்ந்திருக்கிறார்கள்; ஆதிக்க சூழ்ச்சிகளை எதிர்த்துப் போராடியுமிருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகமும் தம் புவியியல் சூழலுக்கேற்ப இயற்கை வழிபாடு, உருவ வழிபாடு, உருவமற்ற வழிபாடு எனப் பல்வேறு விதமான சடங்குகளை உருவாக்கியுள்ளன. மூடத்தனம் என்றால் எல்லாம் மூடத்தனம்தான். இவற்றில் ஒரு மதம் உயர்ந்தது; இன்னொரு மதம் தாழ்ந்தது என்ற வாதத்துக்கே இடமில்லை’.

‘அதே நேரம் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே சமய நிறுவனங்களும், பூசாரிகளும் இருக்கத்தான் வேண்டுமென்ற கட்டாயம் எதுவும் இல்லை’

இப்படித் தொடர்ந்த உரையாடலால் அவர்களுக்குள் ஒரு ஞானம் பிறந்தது. அந்த ஞான ஒளியில், இரண்டு ஊருக்கும் தெரியாமல் அரசு முறைப்படி பதிவுத்திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களின் பூஜை அறையில் முருகனும் இருந்தார்; இயேசுவும் இருந்தார்.

இதைக்கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்த செங்கோடக் கவுண்டர் ‘நீயயல்லாம் ஒரு அப்பனுக்குப் பொறந்தவனாடா?’.... பாலமுருகனை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தார். ஆனாலும் ஓர் இந்து கிறிஸ்தவனாக மாறிவிடவில்லை என்பதில் அவருக்கு ஒரு திருப்தி.

‘அவர்தான் சுவரை இடித்திருப்பாரோ?’ சந்தேகித்தான் பாலமுருகன். அதற்குச் சமயவெறுப்பு அல்லாத வேறு ஒரு காரணமும் இருந்தது.

‘காயிதே மில்லத்’ பள்ளித்தாளாளர் அப்சரப் அலி. அவரின் மகன் மகபூப் ஜான். அவனுக்குத் துபாயில் வேலை. கணிசமான அளவு பணம் சம்பாதித்திருந்தான். அவன் மூன்று மாடி கட்டடம் ஒன்றைத் திருச்சிச் சாலையில் எழுப்பிக் கொண்டிருந்தான். அதில் துணிக்கடை வைக்கப்போவதாகப் பேச்சு அடிபட்டது. தனக்குள்ள வருமானமும் மதிப்பும் பாதிக்கப்பட்டு விடும் எனக்கருதிய கவுண்டர் அதைத் தடுக்க நினைத்தார். அவரது முயற்சிகள் பலிக்கவில்லை. அப்போதுதான் கவுண்டருக்குச் சொந்தமான மூன்றடி நிலம் பள்ளிக்குள் இருப்பதாகச் செய்தி பரவியது. அதை அளந்து யாரும் உறுதிப்படுத்தவில்லை.

கவுண்டர் மத ஆச்சாரங்களில் பிடிவாதம் காட்டினாலும் கல்வி கிடைக்கச் செய்வதில் தாராள மனம் கொண்டவர். ஆண்டு தோறும் மாணவர்களின் கல்வி உதவிக்கு இருபதாயிரம் ரூபாயாவது ஒதுக்குவார். பாடநூற்கள், குறிப்பேடுகள், சீருடைகள், பள்ளிக்கட்டணம் என ஏழை மாணவர்களுக்கு வழங்குவார். அவரின் உதவிகளைப் பெற்றுச்செல்வதில் பெரும்பான்மையோர் இசுலாமிய, கிறிஸ்தவ மாணவர்கள்தான். அது அவனது சந்தேகத்தை உறுதிப்படுத்தத் தடை விதித்தது.

பொழுது நன்றாக விடிந்திருந்தது. தலையிலிருந்த சால்வையை எடுத்துத் தோளில் போட்டபடி பள்ளியை நோக்கினான் பாலமுருகன். அதன் நுழைவாயிலில் கடப்பாரைகள், கொடுவாள்கள், வேல்கம்புகள் உயர்ந்தன. கும்பல் ஒன்று வாயிலைத் தள்ளிக்கொண்டு பெரும் கூச்சலுடன் மைதானத்தை நிறைத்தது. ‘இவர்களுக்கு எப்படித் தெரிந்தது? ஒருவேளை இரவுக்காவலாளி தகவல் கொடுத்திருக்கலாம்’ என ஊகித்தான் அவன்.

கறுத்த குறுந்தாடியும், தலையில் குல்லாவும் வைத்த இளைஞர்கள் ஐம்பதுக்கும் மேலிருக்கும். அலாவுதீனும், முகமது அலியும் முன்னணியில் நின்றார்கள். இருவரும் கடைவீதியிலுள்ள முசுலிம் தெருவைச் சேர்ந்தவர்கள். பாலமுருகனுக்கு அறிமுகமானவர்கள்தான். ‘இவங்ககிட்ட இப்பொ எதெப்பேசினாலும் வம்பாப்போவும்’ முணுமுணுத்த பாலமுருகனை அச்சம் ஆட்டத் தொடங்கியது. அவன் வலப்பக்கம் திரும்பினான். ‘சர்ரக்.. சர்ரக்’ ஒரு தாள லயத்துடன் மாடியிலிருந்து சிலர் இறங்கிக் கொண்டிருந்தார்கள். காக்கி டவுசரும் முண்டா பனியனும், மூங்கில் தடிகளை ஏந்திய கைகளுமாய் அந்த இளைஞர்கள். சிலரின் இடுப்புக்களில் குறுவாள்கள் அசைந்தன. எதிரி நாட்டைத் தீக்கிரையாக்கிய பேரரசனின் செருக்குடன் கடைசியாக ஒருவன் இறங்கினான். அவன்தான் செங்கோடக் கவுண்டரின் ஒரே மகன் ரமேஷ்.

அவன் முதுகலை பட்டதாரி. குஜராத்தில் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை. கடந்தமுறை ஊருக்கு வந்தபோது, இந்தி பேசும் நாலைந்து நண்பர்களோடு அவன் தம்மம்பட்டியில் சுற்றித்திரிந்தது மட்டும் பாலமுருகனுக்குத் தெரியும். ரமேஷ் இவ்வளவு வாலிபர்களை ரகசியமாகத் திரட்டும் வலுவுடையவன் என்பதை இப்போது தான் புரிந்துகொண்டான். இருபக்கமும் ஆயுதங்களுடன் நிற்கும் கும்பல்களை மாறி மாறிப்பார்த்ததும் பாலமுருகனின் கை, கால்கள் நடுங்கின. நடுக்கத்தின் நடுவே அண்ணார்ந்து பார்த்தான். அந்த மண்கரடுதான் அவன் கண்ணுக்குத் தெரிந்தது.

செம்மண்ணும் தவிட்டுநிறக் கற்களும், வெள்ளைக் கற்களும் கலந்த கரடு அது. வேலம், கிச்சிலி,வேம்பு மரங்கள் உயர்ந்து நிற்கும். அடர்ந்த புதர்களுக்கிடையே, ஆஸ்துமா, மூக்குத்தி பூண்டுகள் தலையை நீட்டும். இந்த மண்கரட்டின் மேற்கே தர்க்கா. முசுலிம்கள் தொழுகை நடத்துவார்கள். நடுப்பகுதியில் பாலதண்டாயுதபாணி கோயில். இந்துக்கள் வழிபட்டுச் செல்வார்கள். தென்கிழக்கில் கிறிஸ்தவர்களின் அந்தோணியார் ஆலயம். ஆலயத்திலிருந்து தண்டாயுதபாணி கோயில்வரை மலைச்சரிவில் பதினான்கு சிலுவைகள் நடப்பட்டிருந்தது. கீழிருந்து பக்கவாட்டில் பார்த்தால் பதினான்காவது சிலுவை கோயில் முன்பு இருப்பதுபோல் தோன்றும். பத்தாம் வகுப்புப் படித்தபோது தமிழாசிரியர் அடிக்கடி சொன்னது அவன் காதில் எதிரொலித்தது. “நம்ம மண்கரட்டின் உச்சியின் மேலே இறைவன் எழுந்தருளி, ‘உங்கள் யாவருக்கும் யாம் ஒருவரே கடவுள்; உங்களை வெவ்வேறு சமயச் சமூகங்களாகப் படைத்ததும் யாமே என அறிக்கையிடும் புண்ணிய பூமியில் வாழ்கிறோம்”.

அதன் அடிவாரத்தில் ஒருவரை ஒருவர் கொல்லும் வெறியில் ஆயுதம் ஏந்திய பக்தர்கள். சமயத்தின் பெயரால் மனிதர்கள் மீது வெறுப்பையும் ஆயுதங்களையும் வீசும் பக்தர்களை விட, மனித இனத்தை நேசிக்கத் தூண்டும் நாத்திகர்கள் எவ்வளவோ மேலானவர்கள் என்றே அவனுக்கு எண்ணத் தோன்றியது. ‘எத்தினி உசிரு போவ்மோ? எப்டிப்பட்ட பயங்கரமான கலவரங்க உருவாவ்மோ?’ அவன் இதயம் படபடக்கத் தொடங்கியது. அந்தப்படபடப்பில் அவன் உணர்வு தளர்ந்து போயிற்று. ஏதோ ஒரு விழிப்பில் சட்டென்று அவன் விரல்கள் அலைபேசியின் எண்களைத் தொட்டன. தொடர்பு கிடைத்தது. காவல் ஆய்வாளருக்கு நிலைமையை விளக்கினான்.

காவலர்கள் வருவதற்குள் மோதல் மூண்டுவிட்டால்? எப்படித் தடுப்பது? தனக்குத் துணையாக யாராவது வரமாட்டார்களா? மனம் அலைபாய்ந்த அந்த நேரத்தில் சையத் கரீம் சாலையைக் கடப்பது அவன் கண்ணில் பட்டது. அவருக்கு ஐம்பது வயதிருக்கும். ஒரு புழு பூச்சிக்குக் கூட தீங்கு செய்யாதவர் என்பார்களே, அப்படிப்பட்ட மனிதர் அவர். அவர் சொல்லுக்கு எல்லாத் தரப்பினரிடமும் மரியாதை இருந்தது. இசுலாமிய இளைஞர்களைச் சமாதானப்படுத்த அவர்தான் சரியான நபர் எனக் கணித்த பாலமுருகன், ‘கரீம் பாய்... கரீம் பாய்.. வாங்க வாங்க’ எனப் பரபரப்போடு அழைத்தான். அவர் வந்து கொண்டிருந்தார்.

அலாவுதீன் கர்ஜித்தான், ‘யார்ரா எங்க காம்பவுண்ட் சொவத்தெ இடிச்சவன்?’

‘அன்னிக்கு இந்தியாவெ ஆக்கிரமிச்சீங்க.. இன்னிக்கு எங்க பட்டா நெலத்தயே அபுகரிக்கப் பாக்ரீங்களா?’ சீறினான் ராஜா.

‘நாங்க அபுகரிச்சோமா? நீதான் கம்பி வேலி போட்டு அபுகரிச்சிருக்க... பேசாம புடுங்கிப்போடு...’

‘புடுங்கரதுக்கா போட்டிருக்கோம்... முடிஞ்சா வேலியயத் தாண்டிப்பாருங்கடா...!’

‘தாண்ட்னா... வேலியும் இருக்காது.. ஒன் தலயுமிருக்காது’ ஓங்கிய கொடுவாளுடன் வேலியைத் தாண்டிக் குதித்தான் அலாவுதீன். அவன் குதிப்பதும், முகமது அலியோடு சேர்ந்து சிலர் கற்களையும், கம்பிகளையும் உடைப்பதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது.

‘வெட்டிக் கொல்லுங்கடா இந்த நாய்களெ’ ஆணையிட்டான் ரமேஷ். உறையிலிருந்த குறுவாள்களை உருவினார்கள். அவை மின்னலைப்போல் பளபளத்தன.

‘வாணாம் ராஜா. வாணாம்... அவசரப்படாத... அப்பாவெக் கூப்பிட்டு பேசித் தீத்துக்கல்லாம்’ என அக்கறையோடு பேசிய பாலமுருகன் டார்ச் விளக்கை ஒரு அமைதிக்கொடிபோல் தூக்கிப்பிடித்தான். அதற்குள் இருதரப்பினரும் நெருங்கி விட்டனர்.

‘நிறுத்துங்கப்பா.. நிறுத்துங்க.. அல்லாவுதீன் கரஸ்பாண்டன்ட் அப்சரப் அலி, முத்தவல்லி, இமாம் எல்லாரும் வருட்டும். பஞ்சாயத்து வச்சு தீத்துக்கல்லாம்’ இரு கைகளையும் உயர்த்தி இசுலாமியர்களைத் தடுக்க முயன்றார் சையத் கரீம்.

இருதரப்பினரும் ‘வெட்டுங்க... அடிங்க’ என ஒரே நேரத்தில் உரக்கக் கத்தினார்கள். குறுவாள்களும் கொடுவாள்களும் வெட்டிக் கொண்டன. ‘அம்மா.. அம்மா..’, ‘ஹேய் அல்லா.. அல்லா..’, வேதனையின் அலறல். வீழ்ந்தனர் இருவர்.

வெடித்தது வானம் அடுத்த நொடியில். ‘ஸ்டாப் இட்’ கைத்துப்பாக்கிகளை நீட்டியபடி காவல் கண்காணிப்பாளரும் ஆய்வாளரும் விரைந்து வந்தார்கள். ‘கத்தீங்களெயும் தடீங்களெயும் கீழெ போடுங்க... இல்லெ’ எச்சரித்தார் கண்காணிப்பாளர். வாகனங்களிலிருந்து குறிபார்க்கும் துப்பாக்கிகளுடன் காவலர்கள் ஓடிவந்தார்கள். தென்புறக் கும்பலை நோக்கி ஒரு பிரிவும், வடபுறக் கும்பலை நோக்கி இன்னொரு பிரிவுமாகக் காவலர்கள் அணிவகுத்தார்கள்.

இரு தரப்பிலிருந்தும் சிலர் கையிலிருந்தவற்றைப் போட்டுவிட்டுப் பின்வாங்கித் தப்பித்தனர். எஞ்சிநின்ற ராஜா, அலாவுதீன், முகமது அலி இன்னும் இருபது பேர்களைக் காவலர்கள் கைது செய்தார்கள். ஒரு கணம் கூட தாமதிக்காது, விழுந்து துடித்த இருவரையும் தூக்கச் சென்றார்கள். துண்டாகிக் கிடந்த ஒரு கையின் விரல்கள் டார்ச் விளக்கை இறுக்கமாகப் பிடித்திருந்தன. ஒரு பகுதியிலிருந்து இரத்தமும் இன்னொரு பகுதியிலிருந்து வெளிச்சமும் பாய்ந்து கொண்டிருந்தன. முதுகு பிளந்து குருதிப்பெருக்கில் புரண்டு கொண்டிருந்தார்

சையத் கரீம். பாலமுருகனையும், துண்டான கையையும், சையத் கரீமையும் தூக்கி காவலர்கள் ஜீப்புக்குக் கொண்டு வந்தார்கள். ஜீப் மருத்துவமனைக்குப் பறந்தது.

பாலமுருகனின் அப்பா, மார்க்ரெட்டை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போனார். கரீம்பாயின் மனைவி சபீதா பானுவும் பிள்ளைகளும் கூட அங்கு வந்திருந்தனர். எல்லாரையும் துயரம் கவ்விக்கொண்டது. இருவரும் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர். மருத்துவர்கள் அரிய முயற்சி எடுத்து பாலமுருகனின் கையை பொருத்தி விட்டார்கள். கரீம் பாய்க்கு நினைவு திரும்பியது. ஆனாலும் அவர் தூக்கத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

கேள்விப்பட்டதும் பதறிப்போனார் செங்கோடக் கவுண்டர். தனக்குத் தெரியாது இவ்வளவு பெரிய கலவரம் நடந்திருப்பது அவருக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தண்டபாணி கோயில் முன்பு நின்ற சிலுவை, அவர் மத உணர்வைக் கேவலப்படுத்துவதாகக் கருதினார். அதை அகற்றுவதே அவரது லட்சியமாக இருந்தது. அதற்காகக் கூட்டம் போட்டார்; இந்துக்களை அணி திரட்டினார்; ஆர்ப்பாட்டமும் நடத்தினார். நீதிமன்றத்துக்குக் கூட அவர் போய் வந்தார். இருந்தாலும் வன்முறையை அவர் தூண்டிவிடவில்லை.

இன்று தன் மகன் ரமேஷ் ஒரு தீவிரவாதிபோல் ஆகிவிட்டதற்காக வெட்கித் தலைகுனிந்தார் அவர். ‘பாலமுருகன் போலீசுக்குச் சொல்லாட்டி பத்து உசிருக்குமேல போயிருக்குமே... அவென் கய்யயும் கரீம்பாயின் தோளெயும் வெட்டி சாய்ச்சிட்டாங்களே’ அந்த மார்க்ரெட்டும், கரீம்பாயின் சம்சாரமும் இனி எப்டி பொளப்பு நடத்துவாங்க... எனப் புலம்பிக்கொண்டே சம்பவ இடத்துக்கு வந்தார்.

உடைந்த செங்கற்கள், வீழ்ந்து போன மரக்கிளைகள், கம்பி முள்வேலி. மானுட நேசத்தின் முத்திரையாய் உறைந்து கிடக்கும் மனித ரத்தம். பார்க்கச் சகிக்காது கண்களை மூடிக்கொண்ட கவுண்டரின் நெஞ்சு விம்மி விம்மி உடம்பை உலுக்கி எடுத்தது. மெல்லத் திரும்பி கால்களை எடுத்து வைத்தார். அப்போதுதான் அந்த வினா அவருக்குள் எழுந்தது. ‘இந்த மூன்றடி நிலம் எனக்குச் சொந்தமா? பள்ளிக்குச் சொந்தமா? விடை கிடைக்காது வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

மறுநாள் அமைதிப்பேச்சு... வட்டாட்சியர், காவல் கண்காணிப்பாளர், கல்வி அலுவலர்கள், பள்ளி நிர்வாகிகள், இந்து, இசுலாம், கிறிஸ்தவ சமயப்பெரியோர்கள் கூடியிருந்தனர். செங்கோடக் கவுண்டர் முதல் கோரிக்கையை வைத்தார். ‘நிலத்தை அளக்கணும்’.

‘அளந்தாச்சு... பத்திரப்படி பள்ளி நெலம் சரியாருக்கு.. அவுங்க காம்பவுண்ட் கட்ரப்ப எங்க சர்வேயர் கல்லு போட்டதிலதான் ஒரு சின்ன தவறு நடந்திருக்கு. வடக்குப்பக்கம் மூணடி தள்ளி போட்ரதுக்குப் பதிலா தெற்குப்பக்கம் மூணடி தள்ளிப்போட்ருக்காரு.. ஏன் இப்டி செஞ்சாருண்ணு தெரில்ல... அவரு இப்பொ ரிட்டையடாயிட்டாரு.. எல்லாரும் எங்களெ மன்னிக்கணும்’ எனக் கேட்டுக்கொண்டே அமர்ந்தார் வட்டாட்சியர்.

கண்களை மூடி உதட்டை இறுக்கிய கவுண்டரின் முகத்தில் கோபக்கனல். அந்தக் கனலின் வெப்பம் கூடியிருந்தோரைப் பதற்றமடையச் செய்தது. பிரச்சனையைப் பெரிதாக்கி விடுவாரோ? அனைவரது முகங்களும் அவரை நோக்கித் திரும்பின. மேசைமீது கைகளை வைத்து முகத்தைக் கீழிறக்கினார் கவுண்டர். ஓரிரு நிமிடம் மௌனம். பின்பு திடகாத்திரமாக எழுந்த அவர்.

‘சொவத்தெக் கட்டிக் குடுத்தர்ரேன்... இந்த மூணடி நிலத்தெயும் நாளெக்கே பத்திரம் பண்ணி பள்ளிக்குத் தந்தர்ரேன். ரெண்டு பேத்தோட ஆஸ்பத்திரி செலவெ நானே ஏத்துக்கரேன்’ என்ற வாக்குறுதிகளோடு வெளியேறினார்.

Pin It