ஒத்தவீடு மேலவீட்டு சென்னப்பரெட்டியாரு கடைசிமகள் கொண்டம்மா சடங்காகிட்டாகளாம் பூமணி நீவந்து ரெண்டுவாழ்த்துப்பாட்டு பாடனுமாம். அர்ர்னு ஓங்குரலக்கேட்டு ரெண்டு மூணு மாசமாச்சில்ல மின்ன மாரி(மாதிரி) வெசேச வீடுக வாறதுல்ல.. நீ கண்டுசனா வரனும்னு பெரிய மொதலாளி சொல்லிவுட்டாக கைச்செலவுக்கு இந்த அம்பது ரூவாவையும் வச்சிக்கிருவியாம்...”னு பணத்தை பூமணிகிழவியிடம் கொடுத்துவிட்டு ஊர் திரும்புகிறான். ஊர் ஏகாலி மாடன்.

பூமணி கிழவியோட பாட்டு இந்த ஊர்ப்பக்கம் எட்டமட்டும் அவ்வளவு பேரு. சுத்திபட்டி ஊர்கல்ல நடக்கிற அத்தனை கலியாணம், முளப்பாரி, திருவிழா, சடங்கு, தண்ணிஊத்து, சாவுவீடுனு ஒண்ணு விட்டுவைக்கம போய்பாடுவாள். சுயமா அவளெ இட்டுக்கட்டி காட்டுப்பாட்டாவே பாடுவாள். அவளுக்குன்னு எந்த வடிவமும் கிடையாது. வேற ஆள்களோட பாட்டுக்களையும் வாங்கிப்பாடமாட்டாள்.

விட்டால் விடியவிடிய பாடிக்கிட்டே இருப்பாள். ஆளு சித்துப்போல சீவிலியாய் இருப்பாள்.ரெண்டு காதுலயும் தரிப்பு, கல்பதிச்சகம்மல் இரு சமஅளவில் பளபளத்து இழுத்துத்தொங்கும் கணத்த பாம்படம் பாடுகிற நேரங்களில் பாம்படத்தை ஒரு சிலுப்பு சிலுப்பிவிடுவாள் அது ராகத்திற்கு ஏற்றவாறு ஆடி அசைந்து நிற்கும் சிவப்பு கல்பதிச்ச ஒத்தக்கல்மூக்குத்தி ரெண்டு மூக்குகளையும் நிறைத்திருந்தது. பாட்டுப் பாடப் போகுமிடங்களுக்கு விலை பேசமாட்டாள். பாட்டுப் பாடியதுக்கு என்ன கொடுத்தாலும் மறுக்காமல் வாங்கிக்கொள்வாள்.

தாத்தா கிடையாது. ஒத்தையாள் தான் வேலையில்லாத இந்த மாதிரி நிகழ்ச்சிக்களுக்கு போகமுடியாத நேரங்களில் தட்டுப்பெட்டியில் வெத்தலையை வைத்துக்கொண்டு தெரு தெருவுக்கு விளாத்திகுளம் டவுணில் வெற்றிலைப்பாக்கு விற்கப்போவாள். அதையும் எதாவது காட்டுப்பாட்டு பாடிக்கிட்டே தெருவழியே போவாள். இவளுடைய பாடல் ராகத்திற்கும் நையாண்டிப் பேச்சிக்கும் விரும்பி விரும்பி வாங்குவாக,

யாராவது, என்ன விக்கிற கிழவி”னு கேட்டா..

‘யாரு நானா பஞ்சரை விக்கிறேன்..’னு சொல்லி ராகம் போடுவாள்.

‘என்னது பஞ்சவரா’

‘ஆமா பஞ்சபாண்டவா; தெரியாது.அவங்கதான் பஞ்சவா;’

‘அதுக்கும் வெத்தலை பாக்கு விக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்..’

‘இருக்கு ராசாசாசா’னு ராகம் இழுத்து, ஒரு வெத்தலையை கையில் எடுத்து இது என்ன? காம்பு..னு அதைகிழிக்கிறாள்.. இது கிழிப்பு. அதை மடிக்கிறாள் இது மடிப்பு. அதில் சுண்ணாம்பு தடவுகிறாள்... இதுஉரைப்பு. அதைவாயில் போட்டுமெல்லுகிறாள் இது சிவப்பு, காம்பு, கிழிப்பு, மடிப்பு, உரைப்பு, சிவப்பு, ‘சரியாராசா அந்த பஞ்சபாண்டவா; .அதைத்தான் விற்கிறேனு.. ராகமிடுகிறாள்

பூமணி கிழவியோட வீடு ஊருக்கு தெற்கே எட்டுக்குஎட்டு அடியில் பனைமட்டையால் கட்டி பனைஓலையில் வேய்ந்துள்ள குடிசை.ஆள் படுத்தாள் கால்நீட்ட முடியாது. கதவு பனைசில்லாட்டையால் அடுக்கிஅடுக்கி பச்சநாலீ;கிழித்து ஏத்துமட்டையால் நான்குபக்கமும் இருக்கி கட்டப்பட்டுள்ளது. பூட்டுதிறப்பு இல்லை துண்டாத்தூக்கி அடைத்துவிட்டு இரண்டு பெரிய கல்லை தடுப்புக்கு வைத்துவிட்டால் தான் பன்றி முண்டாமல் இருக்கும் ராத்திரி நேரங்களில் உரிச்ச நாரை தட்டியின்(கதவு)மையத்தில் கட்டி இழுத்து குடிசையின் மொகட்டில் கட்டிவிடுவாள்.

அவளைப் போலவே அவள் வீடும் குறுகியிருந்தது. பூமணிகிழவியோட பூர்வீகம் கீகாட்டுப்பக்கம் இங்ன அவுக அய்யா காலத்துலயே பனைசீவ மொதலாளி மாருக கூட்டியாந்தாகளாம் வீட்லயே வெதான் மூத்தவளாம்... ஒம்பதாவது பிள்ளயாம் இவுக இருந்த பக்கம் பூரா பனையேறிமாருகதான்.. அவுகயாவும் பனைச்சீவுவாராம் கொட்டானுக்கு ரெண்டுகொட்டான் மூனு கொட்டான்தானிருக்குமாம் பதினி. இத அங்க பனைச்சீவுர இடத்திலிருந்து வெரும்மண்டையில தலைச்சுமையா பெரிய மொடாப்பானையெ சுமந்துக்கிட்டு வூடுகாட்டுப்பாதைக்கு ஓட்டமும் நடையுமா வரனும் அந்தக் காலத்துல செருப்புக்கிடையாது. அப்படியே இருந்தாலும் பட்டணத்துக்காரவுகதான் பகுசா போட்டு வருவாக அது எங்க இழுவைக்கு தோது படாது. ரெண்டு நாளைல அறுந்துபோகும். செருப்புக்களையெல்லாம் கண்ணுலகூட பார்த்ததில்லியாம்.

பனைமட்டைய செறுப்பு மாதிரி ஓட்டைபோட்டு பனைநாரு வச்சி கட்டி காலுக்கு அளவாசெய்து கொண்டு போட்டுக்கொள்வாளாம். அதுதான் எந்தக் கல்லு முள்ளு ஒன்னும் செய்யாது.முள்ளு கல்ல மிதிச்சா முள்ளுசும்மா நொரு நொருனு நொருங்கும்.அதப் போட்டுக்கிட்டு நடந்தா சட்டு சட்டுனு எட்டு எடுத்து வைக்கும் போதொல்லாம் நடக்கிற சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும்.

மொடாப்பானை நிமுரெ பதினியை ஊற்றிக் கொண்டு தலையில சுமந்து வருவாளாம் பானை அலம்பி அலம்பி முகத்தில் வழிகிவரும் பதினியை நக்கிஇநக்கி பதினி ஆசையே தீந்து விட்டதாம்.பதினிப்பானை சுமந்து சுமந்து மண்டையில பூரா பொட்டுப் பொட்டா விழுந்திருச்சி மண்டையில இருக்கிற கொஞ்ச நஞ்ச மயிரும் உதுந்து பொயிட்டு.

சுமந்துட்டு வந்த பதினியை காய்ச்சி இறக்கி சிரட்டையில ஊற்றி கருப்பட்டியா ஆக்குற வரைக்கும் நான் தான் பாக்கனும் எனக்கு கிழ பூரா சின்னதுக கடைசியா ஒத்தப்பயல பெத்துப்போட்டுட்டு எங்கம்மெ செத்துப்பொயிட்டா. அத்தனை பேரையும் காப்பாத்துற துக்குள்ள போதும் போதும்னு ஆகிப்போச்சி.

இப்டி பனங்காட்டுச் சாம காட்ல இருக்கப்பிடிக்காம இங்ன பனங் காட்லயே இருக்கேனு மூச்சிக்கு முன்னூரு தடவெ சொல்வா கிழவி” ஏகாலி மாடன். பதினி காய்ச்ச ஒடி அடிக்க (விறகு) போனாலும் பதினிப்பானை சுமந்து வந்தாலும் ஒத்தைலதான் வரனும், போகனும் அல்லது அதுகமாதிரி பனையேரி பொம்பளைக வருங்க அதுல அலுப்புத் தெரியாம இருக்க பாடஆரம்பிச்சவெதான் அதையே தெரிந்து பாடிக்கிட்டு இருக்காள். இவளெ மேகாட்டுப் பக்கம் லெட்சுமிபுரத்துல கெட்டிக் குடுத்தாக அதுக பூரா சமூசாரிக் காடுக இவளுக்கு அந்தக்காட்டு வேலையெல்லாம் செய்து பழக்கமில்லை இப்டி பனங்காட்லயும் பனங்காட்டுவேலையும் செய்தவளுக்கு மேகாட்டு வேலைக செய்யத்தெரியாம இங்க அய்யாவீட்டுக்கு ஓடியாந்திருவாளாம். இதச்சாக்கா வச்சி கலியாண மான மூனுமாசத்துல தீந்துட்டானாம். அதுலயிருந்து இந்தக் குச்சலே தஞ்சம்னு கெடந்துட்டாளாம்;.” இதுதான் அவ பழைய கதை.

“என்னப்பா நேரம் இருட்டீருச்சி இன்னும் அந்த பூமணிக்காணோம்

ஏலேய் என்ன ஏதுன்னு பாருங்கல.. சொனக்கமில்லாம வந்திருவா..

இன்னிக்கு என்ன இம்புட்டுத்தேரம்..? அவெளட்டசொன்னீகளால

அவெவந்து பாட்டெடுத்துவுட்டா எங்குட்டாப்பட்ட கூட்டமெல்லாம் வீடுவந்து சேரும் அப்படிப்பாட்டுக்காரி. ஏலேய் அந்த மாடனக்கூப் புடு பெரியமொதளாலி.

பெரிய மொதலாளி வீட்டு அத்தனை பொம்பளை பிள்ளைக சடங்குகளுக்கும் தண்ணி ஊத்துக்கும் இவெபாட்டுத்தான். அதுகளளோட கல்யாணத்துக்கும் இவெதான். அதுக இன்னைக்கு நல்ல நிலையில் இருக்குதுகன்னா அது இவெ வாழ்த்திப்பாடுன பாட்டுகளும் ஒரு காரணம்னும் பெரியமொதலாளியோட நம்பிக்கை.

“எலேய் என்னனுபாருங்கல ஞ்”

“தாத்தா” மாடன்அவெள கூப்பிடதான் போயிருக்கானாம் தாத்தா வந்துட்டா பூமணி”

“ஏன்த்தா இம்புட்டு தேரம்”

“சாமிஞ்மேயப்போன ஆடுகுட்டிகளுக்கு அஞ்சாறு தண்ணிவெண்ணி வச்சிட்டு... கொழக்கெட்டுட்டு வந்தேன் அதான் தேரமாகிட்டு அப்பத்தான் வெரசாக்கிளம்பறேன் அப்பச்சி வந்து கூப்பிட்டாக .. தடபுடலா ஓடியாந்தேன்”னு ரெண்டு கையெடுத்துக்கும்பிட்டாள் பெரியமோதலாளியை பார்த்து.

“சரிசரி ஆரம்பித்தா ஓங்கொரல் தான் ஊரக்கூப்பிடனும்... ஏலேய் வேடபட்டியான் மைக்க குடுல”னு உத்தரவு போட்டார்.

மைக் முன்னாடி இருக்கு எந்தப்பயமுமில்லாம இயல்பா பாட ஆரம்பிச்சா...”

“நாட்டுக்கு ராசா மக

நாள் பூத்தான்னு சொல்லி

நாட்டுக்கு நாடு

நறுக்கெழுதி விட்டிருங்கோ

 (நறுக்கெழுதி விட்டிருங்கோ)

 

சீமைக்கு சீமை

சீட்டெழுதி விட்டிருங்கோ

 (சீட்டெழுதி விட்டிருங்கோ)

 

பேரூரு ஆண்டிருக்கும்

பெரிய மாமா ஓடிவந்து

 (பெரிய மாமா ஓடிவந்து)

 

வாழைத்தார்கொண்டு வந்து

வரிவரியாத் தூக்கி வைத்து

 

பச்சைப் பனை கீறி

பதினாறு தூண் நிறுத்தி

 

தூணுக்குத் தூண்

துணை வாழை தான் நிறுத்தி

 

கோலமுத்து திண்ணையில்

குழைச்சி வைச்ச மாவட்டு

 

வட்டு விழும் மாவை

வரிவரியாய் கோல மெழுதி

 

திண்ணை யிலொரு

மாதாகிளி மொழி கோலமிட்டு

தாழுரு ஆண்டிருக்கும்

தாய் மாமன் ஓடியாந்து

 

சாத்தூரு ஆண்டிருக்கும்

 

தாய்மாமன் ஓடியாந்து

ஓட்டஞ்சி கொட்டி

ஊரடைஞ்சி கொட்டி வாரா

 

தாம்பத்தான் பாடிவாரா

தாசிமார்ஆடிவாரா

 

நல்ல கிணறும்

நைக்கரும்பு தோட்டமும்

 

உப்பு கிணறும்

உப்பரையும் புல்லும்

 

கோவையர் நீங்க

கொடிக்கால் மண்டபத்தெ

 

பாவையர் நீங்க

பளிங்குக்கல் மண்டபத்தெ

 

பார்த்த சனமெல்லாம்..

போடுங்கடி கொலவை ரெண்டு”னு

குலவை போட்டுப் பாடுகிறாள். பூமணிக்கிழவி குரல் கேட்டதும் திமுதிமுவென கூட்டம் கூட ஆரம்பித்தது. அவளைத்தொயந்து கூடியிருந்த பெண்களும் “ஓ... லோலோலோ...”னு குலவை போட்டார்கள்.

இந்த வாழ்த்துப்பாடலோடு சேர்த்து ரெண்டு மூனு பாடல்களோடு இராத்திரி சாப்பாடும் முடித்து அன்று அவளுடைய முறை கழிகிறது.இதுதான் பூமணிக்கிழவியின் வாழ்க்கை இப்படி நல்லது பொல்லதுகளில் தான் அவளுக்குவாயிறாரச் சாப்பாடுகிடைக்கும். மத்த நேரங்களில் புளிச்சாணி (புளித்தக சித்தண்ணி) யும் பட்டவத்தலும்தான் தினமும். அவளைச் சுற்றி அவள் உடன் பிறந்ததுக இருந்தாலும் அதுகளும் நம்மளப் போல கஷ்டப துன்னு சொல்லி ஒருநாக்கூட அதுகள அண்டியதில்ல தனக்குதுணை இந்த காட்டுப்பாட்டுகதான். பாடுன அன்னைக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும், பாடுன சந்தோசத்துல மனசு குளுரும்.

 அவெ எதிர் பார்த்துக்கிட்ருக்கிறது எல்லாம் அரசு வழங்கும் வயாதான கலைஞர்களுக்கான பென்சன் தான்.

“போஸ்ட் மேன் போஸ்ட் மேன் வந்தாரா வந்தாரா னு என்னமும் தந்தாரா”னு தினமும் அவள் வந்து போகும் மணிமளிகை கடையில் கேட்டுட்டேயிருப்பாள். போஸ்ட் மேனைப் பார்த்தால் ராகம் போட்டு “சாமீ.. சாமீ எனக்குஞ்ஒமரு மனசக் கொஞ்சம் காமியும் காமியும்...” னு பாட்டுப்பாடியே மணியாடர்ல பென்சன் பணம் வந்ததானு கேட்பாள்.

அன்னைக்கி மணிகடைக்கு போஸ்ட்மேன் வந்து “மணி அந்தப் பூமணிக்கிழவி வந்தாளா? அவளுக்கு பென்சன் வந்திருக்கு”னு சொன்னார். அவரோடு சேர்ந்து மணியும் சந்தோசப்பட்டான்.ஏன்னா.. அவனோட கடையில வாங்கின வெத்தலை வகையில் பாக்கி இருந்தது. பென்சன் வாங்கினால் பாக்கிவந்து சேரும் என்கிற பெரிய எண்ணம்.

“பூமணிக்கிழவி விடிஞ்சதுல இருந்து காணோமே ஆட்டப்பத்தி கிட்டு அங்கிட்டு ஆத்துப்பக்கம் பனங்காட்டுச்சாமெ பொயிட்டாலோ என்னமோ அங்கிட்டு தெக்க பாருங்கஞ்நிப்பா”னு சொன்னான் கடைக்காரன் மணி.போஸ்ட் மேன் தெற்காமல் ஆத்துப்பாதைக்கு போனார். அங்கயும் காணோம் கம்மாய் பாதைக் குப்போயிருப்பானு அங்க வடக்கு கம்மா பாதைக்கு போனார், அங்கேயும் காணோம்.

 மதியாமாயிருச்சி அவெ எங்கிட்டுப்போனாலும் அவெ கஞ்சிகுடிக் கவும்,ஆடுகளுக்கு தண்ணிகாட்டவும், எப்படியும் குச்சலுக்கு (அவள் வீட்டுக்கு)தான் வரனும்னு குச்சலுக்குப் போனார். தூரத்திலேயே ஆள் இருப்பதற்கான அறிகுறியாக ஆடுகள் கட்டிக்கிடந்தது.

அருகில் போன போஸ்ட்மேன் “பூமணிப்பாட்டி பூமணிப்பாட்டி”னு கூப்பிட்டுக்கிட்டே சாத்தி(மூடி)யிருந்த தட்டியை(கதவை)தள்ளி எட்டிப்பார்க்கிறார் பாட்டி செத்து விரைத்துக் கட்டெறும்பு மொய்த்துக் கிடந்தாள்.

அவளைச் சுற்றி அவள் வளர்த்தகோழிகளும், குஞ்சிகளும், ஆட்டுக்குட்டிகளும் கத்திக் கொண்டே அவளை முகர்ந்து முகர்ந்து அவளைச் சுற்றிநின்று கட்டெறும்புகளை விரட்டிக்கொண்டு இருந்தது.

குச்சல் முகட்டில் கூர்மையான கம்பியை வளைத்து பென்சனுக்கு எழுதிப்போட்ட தாள்கள் குத்தி தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து போஸ்ட்மேன் கண்கலங்கியது.

Pin It