கோடிக்கரை சுற்றுலா முனையம்; கிழக்கிலும் தெற்கிலும் கடல் அலை பாடும் இசையரங்கு. அங்கு கடலைச் சுற்றியும் பற்றியும் வாழ்ந்த கவிஞர் மாலியின் ‘புகழ் பூத்த பூமி’ புத்தகமாக மலர்ந்த நாள்: 29.05.2012. அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில் அவருடைய அன்புப் பிள்ளைகள் அவரது கவிதைகளைத் தொகுத்து வெளியிட்ட நூல் இது.

அவர் தமிழ் இலக்கண, இலக்கியத்திலும் ஆங்கிலத்திலும் பயிற்சி பெற்றவர்; தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், வேதாரணியம் வட்டக்கிளையின் இரு மாத ஒரு நாள் இலக்கிய வட்டத்தில் தொடர்ந்து பங்கேற்றவர். அரங்குகளிலும் தனியேயும் அவர் படைத்த கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.

இவர் குளிர் சாதனத்திற்கு அருகிலும், மின் விசிறிக்குக் கீழேயும் அமர்ந்து கற்பனை வரிகளைப் பிரசவிக்க வேதனைப்படும் கவிஞர் இல்லை. நாள் முழுதும் ஓடியும் அலைந்தும் உழைத்தும் பிழைத்த உழைப்பாளியின் வியர்வையது உடனிகழ்வாகச் சிந்திய அனுபவ வரிகள் இக்கவிதை மாளிகை கட்டும் கற்களாயின.

‘வள்ளுவன் கம்பன் இளங்கோவும் வரைந்த தமிழ்க்கவிதை வரவால்’ தமிழ் உயர்ந்திட்ட மரபைக் கவிதை வரிகளில் போற்றும் கவியாழ் ‘காவிரி வைகை பாய்வதனால் கன்னித் தமிழ்நாடு மேன்மையுறும்’ என்று நம்பிக்கை இசைக்கிறது. அதேசமயம் காவிரி நீர் உரிமைக்காகத் தஞ்சை முதல் வேதாரணியம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்ற சமயம், ‘‘ தருமங்கள் நிறைந்திருந்த தஞ்சைப் பூமி தார்ப் பாலைவனமாக மாறும் நாளை’’ என்று ஏக்கப் பெருமூச்சு விட்டார் கவிஞர். ‘‘கதிர்தான் முற்றிப் போருக்குள் போகின்ற வைக்கோல் இன்று பெருமளவில் வயல் காய்ந்து மாடு மேயும்’’ என்று கவலைப்படுபவர், ‘‘சிந்து நதி நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பங்கிட்டுக் கொள்ளும் பரந்த உள்ளமுடைய இந்தியாவில், கன்னடம் தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரா’’ என்று பல் கடிக்கும் பகைமையைச் சுட்டிக்காட்டுகிறார். வாய்ப்பாடுகளுக்குள் மடங்குமா மாநில வெறி?

‘‘காலுக்குச் செருப்புமில்லை’’ என்ற ஜீவாவின் பாடல் இவரைக் கிளர்ச்சியுறச் செய்திருக்கிறது. ‘‘தாழ்ந்த தமிழனே!’’ என்ற கவிதையில் அக்கவிதை வரிகளின் பாதிப்பு இவரை ஆட்டிப்படைத்திருக்கிறது.

பள்ளியிற் பகலுணவு தந்த காமராசரையும், வைக்கம் போராட்டத்தில் ஆலய நுழைவு இயக்கத்தால் தீண்டாமையைப் பல் பிடுங்கிய பகுத்தறிவுப் பகலவன் பெரியாரையும், எமனையும் எட்டி உதைக்க எக்காளமிட்ட பாரதியையும், தமிழ்த்தேரை வீதி வலம் வரச்செய்த பாவேந்தரையும் மரபு மிடுக்குடன் போற்றிப் பாடியவர் மாலி.

‘‘சூரியன் சிந்திய வீரியப் பார்வையில்...

குடிசையில் ஓட்டைகள்: இலவச மின்சாரம்’’

என்ற வரிகள் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற சித்தரிப்பை எள்ளி நகையாடுகின்றன.

நாடகக் கதையாசிரியராகவும், நடிகராகவும், பட்டிமன்றப் பேச்சாளராகவும், கவிஞராகவும் தம் ஆற்றலைப் பன்முகமாய் பரப்பிய மாலி வியர்வை பாத்தியில் விளைந்த உப்பு; உழைப்பு படகிலிருந்து பிடித்த உண்மை மச்சம்.

அறுபத்தைந்து ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்த மாலி வாழ்நாள் முழுவதும் போராடினாலும், நொடி நேரமும் கவிதையை மறந்ததில்லை. கடலூர், நாகை, திருச்சி எனப் பல ஊர்கள் சுற்றினாலும், அவருக்கு முன்னால் கவிதையும் தவறாது உடன் பயணம் வரும்.

‘‘சூடிக்கொண்ட மாலைகளும்

பாடித்தந்த வாழ்த்துக்களும்

சொரணையில்லா மனிதனுக்குக் கொள்ளி&பிறகு

சிதையினுக்குக் கொண்டு செல்வார் அள்ளி’’ &

என அரசியல் வாழ்வின் எத்துவாளித்தனத்தை எள்ளி நகையாடும் கவிஞர் சந்தம்&சிந்தில் கவி படைப்பதில் வல்லவர்.

‘‘பீர் பிராந்தி விஸ்கிக்கு வாக்கு& நீர்

போடுவதோ போடுகின்ற தூக்கு!

யார்வந்தால் நமக்கென்ன என்றால்& பல

நாய்வந்து குதறிவிடும் வென்றால்!’’

இது அவரது அரசியல் நுண்பார்வையைக் கோடிட்டுக் காட்டும் நிகழ்கால அரசியற் கூட்டணி பற்றிப்

‘‘பூனையும் எலியும் புன்னகை புரிந்திடும்

பாம்பும் கீரியும் பல்லை இளித்திடும்’’

என்று அவர் கணித்தார்.

இடையே, ‘‘இறந்துவிட்ட ஓர் உடலில் இறப்பில்லாமல் இருப்பதுவும் கண்பிறர்க்கு அளிப்பதாலே’’ என்று கண் தானத்தை வலியுறுத்தினார்.

‘புகழ் காத்த பூமி’ என்ற கவிதை நம் கவனத்தை ஈர்க்கும் செய்திகள் பொதிந்தது.

‘‘தாழை மடல் விரியத் தளிர்க்கொன்றை மணம் பரப்ப’’ என வர்ணனைபெறும் கோடிக்கரைக்காடு கவிஞர்க்குப் பிள்ளைத் தொட்டில்; இளமை மஞ்சம்; முதுமைக் கட்டில். கவிதையில் பதினாறு பக்கத்தில் படர்ந்துள்ள அந்த காடு கொண்டுள்ள மரங்கள், செடிகள், பூக்கள், கனிகள், மூலிகைகள், விலங்குகள், பறவைகள்... நெட்டோட்டமாக நோக்க, நிறையச் செய்திகள்! அந்த ஊரைப் பற்றிய தகவல் களஞ்சியம் என்றே வியக்க வைக்கும் பக்கங்கள் அவை! அணிந்துரையில் தமிழாசிரியர் இரா.பெ.செயலட்சுமி குறிப்பிடுவதுபோல் இவ்வரிகள் குறிஞ்சிப்பாட்டுக் கபிலனை நினைவூட்டுகின்றன.

சனநாயகத்தையும் நகர வாழ்க்கையையும் எள்ளல் வரிகளில் தோலுரிக்கும்போது கவிஞரின் அனுபவ ஆதங்கம் அரங்கேறுகிறது.

‘‘எனது இறுதி மூச்சு இருக்கின்றவரை

படித்துக்கொண்டிருக்கும்போதே சாகவேண்டும்

எழுதும்போதே உயிர் என்னைவிட்டுப் போக வேண்டும்’’

என்பது இவரது இருந்து எழுதிய இறப்பு உறுதிமொழி. இந்த வரிகளின்படியே உழைப்பிற்கும் ஓட்டத்திற்கும் நடுவில் குடும்பத்தினரின் எதிர்மறை அறிவுறுத்தலூடே இறுதிவரை எழுத்தும் படிப்புமாய் முடிந்த கவிஞனின் இதயப் பேச்சாகப் ‘புகழ் பூத்த பூமி’ காகிதத்தில் ‘தவிட்டாம் பழமாய்’ இனித்திருக்கிறது அவருக்குப் பின், அவர் பிள்ளைகளால்!

கவிதைகளை வெறும் செய்திகளாக பார்க்கும் விமர்சனம். பதினாறு பக்கம் தகவல் களஞ்சியம் என்று அவரே சொல்கிறார்.

Pin It