முனியம்மாவிற்கு கல்யாணம் என்று தெருவே அவள் வீட்டு முன் கூடியிருந்தது. கல்யாண வீடு என்பதற்கு அடையாளங்களான பந்தலோ.. அலங்காரங்களோ... கொட்டு முழக்கோ.. ரேடியோ செட்டோ... எதுவும் இல்லை. நண்டு.. சுண்டுவிலிருந்து கெழடுகெட்டைகள் வரை ஒரே திருவிழாக் கூட்டமாயிருந்தது. 

வெள்ளப்பூடு பழமல செட்டியாரின் வீட்டிலிருந்து.. இரண்டு பேர் உட்கார்ற மாதிரியான ஒரு மர நாற்காலியைக் கொண்டு வந்து.. அதன்மேல் சிவப்பு, பச்சை, வெள்ளை என்று பட்டைக்கோடுகள் போட்ட புது ஜமுக்காளம் விரிக்கப்பட்டு..அரக்கு பச்ச கலரில் சந்தனக்கலர் பார்டர் போட்ட சேலை கட்டி.. அடர் பச்சக் கலரில் ரவிக்கை போட்டு முனியம்மாளும்... சந்தனக்கலர் சில்க் வேட்டியும், சட்டையும் போட்டிருந்த பழனியப்பனும்... அதில் உட்கார்ந்திருக்க... இருவர் கழுத்திலும் ரோஜாப்பூ மாலைகள் கிடந்தன. அவர்களின் கைகளில் ஆப்பிள் பழத்தை.. சாமந்திப்பூக்களால் சுற்றிய செண்டுகளும் இருந்தன.

மூன்றாந்தல் காளிகோவில்.. பரமசிவம் பூசாரி பித்தளை தாம்பாளத்தட்டில் விபூதியைப் போட்டு கோபுரமாய் குவித்து.. மேலாக தட்டி வட்டமாக சமப்படுத்தி.. அதில் சூடக்கட்டியை வைத்தார். பிறகு அவர் நாலஞ்சு பத்திகளை மொத்தமாக இடது கையில் பிடித்துக்கொண்டு, வலது கையால் தீப்பெட்டியை பொருத்தி அதனை பற்ற வைத்தார். பத்திகள் கொழுந்து விட்டு எரிந்தவுடன்... வலது கையால் ஆட்டி... எரிவதை அணைத்ததும்... பத்திகளின் நுனியில் கங்குகள் பூக்க புகை பரவியது.

பத்திகளை மேலே நான்கு திசைகளையும் நோக்கி காட்டியபடி வாயில் ஏதேதேதோ முணுமுணுத்தார். பிறகு உட்கார்ந்திருந்த மணமக்களைச் சுற்றி மூன்று முறை இடது வலமாக.. வலது இடமாகச் சுற்றிவிட்டு.. வீட்டுக்குள்ளிருக்கும் சாமி படத்திற்கு முன்னால் குத்தவைக்கச் சொல்லி.. முனியம்மாளின் அம்மா வாசியம்மாளிடம் கொடுத்தார்.

அதனை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் போன அவள்... திரும்பி வருகையில்.. மினுமினுக்கும் மஞ்சள் நிறத்தில் புதுக்கயிறோடு பொட்டுத்தாலியை கொண்டு வந்து பூசாரியிடம் கொடுத்தாள்.

அவர் அதை விபூதித்தட்டில் வைத்து..சூடத்தை பொருத்தி.. வானத்தை நோக்கி காட்டிவிட்டு... விபூதியை அள்ளி நான்கு திசைகளிலும் எறிந்துவிட்டு.. கொஞ்சம் கையில் எடுத்து பட்டையாக நெற்றியில் பூசிக்கொண்டு.. அங்கிருந்தவர்களின் முன்பு நீட்டியபடி நகர்ந்தார். எல்லோரும் தட்டைத் தொட்டுக்கும்பிட.. அங்கும் இங்குமாக நடந்து.. மணமக்களின் முன்னால் வந்து நின்று... அவர்களின் தலையில் விபூதியை போட்டு.. நெற்றியில் பூசிவிட்டு.. தாலியை எடுத்து பழனியப்பனிடம் கொடுத்திட.. கல்யாணம்.. திருப்பூட்டிட முடிந்தது.

முனியம்மா என்றால் அந்த தெருவில் யாருக்கும் தெரியாது. மொண்டி முனியம்மா என்றால்தான் எல்லோருக்கும் எளிதில் அவள் ஞாபகத்துக்கு வருவாள். அவளது இரு கால்களும் பிறக்கும்போதே சூம்பிப் போய்.. நண்டுக் கால்களைப்போல வளைந்து இருந்தன. அவள் வளர வளர கால்களைத்தவிர உடலின் மற்ற பாகங்கள் பூரித்துப்பெருகின.

அவள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்கையில் உடலை மேல் தூக்கியவாறு தன் இரு கைகளையும் கீழே ஊன்றி தாவிச்செல்வது போல் நகர்வாள். அப்போது அவளது இரு கால்களும் சம்மணம் போட்டது போல் தொடைகளோடு ஒட்டிக்கொள்ளும்.

களவானிப்பயல பிடிங்க.. களவானிப்பயல பிடிங்க.. ஓடுறான்.. விடாதீங்க.. என்ற சத்தம் கேட்டு தன் வீட்டு வாசல் முன் படுத்திருந்த முனியம்மா படக்கென்று முழித்து, எழுந்து பார்த்தபோது...யாரோ ஒருவன் கையில் தகர டிரங்பெட்டி ஒன்றைத் தூக்கிக் கொண்டு... தன்னைக் கடக்க முற்பட்டதும்..அவள் எட்டி அவன் காலைப் பிடித்தாள்.

அவளது பிடி.. உடும்புப்பிடி மாதிரி இருந்ததால்.. ஓடியவன் தடுமாறி கீழே விழுந்தான். அவன் கையிலிருந்த தகரப்பெட்டி தள்ளிப்போய் விழுந்தது.

கைக்கு சிக்கிய அவனை.. சருட்டென்று முன்னே இழுத்து.. அவன் முதுகில் னங்.. னங்கென்று குத்தினாள் முனியம்மா.

அவனை துரத்திவந்தவர்கள் அதற்குள் அங்கே நெருங்கிவிட்டார்கள். அவர்கள் சின்னத்தாயியும், அவளது தங்கச்சி ஈஸ்வரியும் தான்.

தெருவே வந்து அவர்களை சூழ்ந்துகொண்டது. அரிக்கேன் விளக்கை யாரோ கொண்டு வந்து பார்த்தபோது... கீழே விழுந்தவனின் மேல் முன் பற்கள் காணாமல் போயிருக்க.. வாயெல்லாம் இரத்தம் வழிந்தது. அவனது சட்டையெல்லாம் செவப்பாக இருந்தது.

அந்த ஆள் நல்லா ஓங்கு தாங்காகத்தான் இருந்தான். கூட்டத்திலிருந்த ஒருவர் கொச்சக்கயிறை கொண்டு வந்து அவனை... அருகிலிருந்த விளக்குத்தூணில் கட்டிப்போட்டார்.

தூரக்கிடந்த டிரங் பெட்டியை கொண்டு வந்து முனியம்மா முன் வைத்தார்கள். கொத்தனார் மணி சின்னத்தாயைப் பார்த்து, ‘‘ஏம்மா.. திறந்து பாரு.. ஏதாவது.. காணாமப் போயிருக்காணு...’’என்றார்.

அதற்கு சின்னத்தாயி, ‘‘அதெல்லாம்.. ஒன்னும் போயிருக்காது...’’ என்றபடி பெட்டியை தூக்கியபோது.. கீழே விழுந்ததால்.. அதன்பின் இணைப்பு விடுபட்டு.. பெட்டி திறந்திட.. ஏதோ ஒன்று பெட்டியிலிருந்து கீழே விழுந்து உடைந்தது.

அது என்னவென்று பார்த்தபோது..எல்லோருக்கும் சிரிப்பு பீறிட்டது. அது சோளக்கூழ் சட்டி.

ஈஸ்வரியின் புருஷன் ஒட்டடக்குச்சி தயார் செய்து கொண்டு போய்.. வெளியூர்களில் வியாபாரம் செய்து வருபவன். பழனிபக்கம் போனவன்...யாரோ..ஒரு விதவைப் பெண்ணை சேர்த்துக் கொண்டதை அறிந்ததும்.. இவள்.. அவனை ஒதுக்கிதள்ளிவிட்டு.. தன்னுடைய பூர்வீக வீட்டிற்கு வந்துவிட்டாள்.

அந்த வீட்டில் அவளுடைய அக்காள் சின்னத்தாயி குடியிருந்தாள். அவளுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. போன வருடம் தான் அவள் புருஷன் மஞ்சள் காமால வந்து செத்துப்போனான். அந்த வீடு இன்னும் பாகம் பிரிக்கப்படாமல் ஈஸ்வரியின் செத்துப்போன அப்பா பேரில் இருந்தது.

ஈஸ்வரியை.. அவள் புருஷன் எவ்வளவோ தடவை வந்து கூப்பிட்டும்.. பலபேரை சிபாரிசு வைத்தும் ஒன்றும் நடக்கவில்லை. சமரசம் செய்ய வந்தவர்கள் முன்னாலே அவள்.. ‘‘பொறுக்கித் திங்கிற நாயிக்கு..பொண்டாட்டியா.. இருந்து.. பொழச்சது போதும்னு..’’ என்றபடி தன்னோட தாலியைக் கழற்றி தன் கணவனின் முஞ்சி மீது எறிந்துவிட்டு வந்துவிட்டாள்.

வந்த நாளிலிருந்தே.. அக்காளுக்கும்..தங்கச்சிக்கும் அறவே ஒத்துப்போகவில்லை. ஒரே வீட்டுக்குள்.. இருவரும்.. தனித்தனி உல வச்சு ஆக்கித்தின்றார்கள். ஒருவருக்கொருவர் தாங்கள் சாப்புடுவதை ஒளிச்சு.. மறச்சு வைத்துக் கொண்டார்கள். அப்படி ஒளிச்சதுல.. இன்னைக்கு கூழ்சட்டிய.. சின்னத்தாயி.. டிரங்கு பெட்டிக்குள் வைக்க.. திருட வந்தவன்..எதுவோ..அந்த பெட்டிக்குள்ள இருக்குணு.. நெனச்சு தூக்கிட்டு ஓடிப்போக.. நடுத்தெருவுல.. சட்டி உடஞ்சு..எல்லாம் வெட்ட வெளிச்சமாகப் போச்சு.

திருடனை.. எச்சரித்துவிட்டு..அவனது கட்டுகளை அவிழ்த்து விரட்டிவிட்டார்கள்.

முனியம்மாவை தெருவே பாராட்டியது. புலி புடுச்சாலும் பத்து நாளைக்கு வச்சுத்திங்கும். அவன.. புடுச்சு.. பல்ல ஒடச்சிருக்கான்னா.. அவ.. எப்படிப்பட்ட.. தைரியமானவ.. என்று எல்லோரும் அவளை வாயாறினார்கள்.

எதையும் துணிச்சலா செய்யுற முனியம்மா செய்த காரியங்கள்.. ஒவ்வொன்னா.. சொல்லணும்னா.. ஒரே மூச்சில் சொல்லி முடிக்க முடியாது.

தங்க உருப்படிகளுக்கு.. தங்கமுலாம் போட்டுத்தாரேன்னு.. அந்த தெருவுல.. நாலஞ்சு வீடுகள்ல..தன் கைவரிசையை காட்டுனவன..போலீஸில் புடுச்சுக் குடுத்ததும்.. பஸ் டிரைவர் பூபதி வீட்டுல.. தவலப்பானைய தூக்கிக்கிட்டு ஓடுன.. தம்பூராக்காரன.. கல்லெடுத்து எறிஞ்சு கீழ விழவச்சதும்.. தபால்காரர கடிச்ச நாயே.. ஊதுகுச்சியால.. அடிச்சுக்கொன்னதும்... டெலிபோன்காரங்க வெட்டி வச்ச குழியில விழுந்த பாரிஜாதத்தின் 3 வயசுப் பையன காப்பாத்தினதும்.. வார்டு கவுன்சிலரோடு தர்க்கம் பண்ணி.. அந்த தெருவுல அடிகுழாய் போட வச்சதும்..ரேன்ஸ் கட்டவச்சதும்.. முனியம்மாதான்.. என்று அந்த தெருவில் எல்லோரும் பெருமையாக பேசிக்கொண்டாலும்.. அதே சமயத்தில் அவளது கல்யாணங்களைப் பற்றி ரகசியமாய்.. கிசுகிசுத்து.. சந்தோஷப்பட்டுக்கொள்ளவும் செய்தார்கள்.

ரேவதி பிரஸ்ஸில் அச்சிடுபவனாக வேலை செய்த மாரிமுத்துவை.. முனியம்மா.. முதலில் கல்யாணம் செய்தாள்.

அவன்.. அவளது முறைமாமன். இரண்டு நாளைக்கு வேலைக்கு போனால் பத்து நாளைக்கு ஓய்வெடுப்பான். வாக்குல..நடத்தையில.. செய்கையில எந்த சுத்தமும் இல்லை. யாராவது அவனிடம் பேச்சுக்கொடுத்தால்... தேனொழுகப் பேசுவான்... முடிவில் கடன் கேட்பதில் போய் முடியும் அவனது பேச்சு. கடன் கொடுத்தவர்களிடம் ஒரு போதும் நாணயமாய் நடந்துகொள்ளமாட்டான். எப்பொழுதும்.. கலர்சட்டையும், கைலி வேட்டியுமாக கட்டியிருப்பான். ஏனென்றால் அவனது முட்டிக்கு கீழே இரண்டு கால்களும்.. கறுத்துப்போய்... புண்ணாய் இருக்கும். அதிலிருந்து சீழ் எப்போதும் வடிந்து கொண்டேயிருக்கும்.

குருவிக்கூடு மாதிரி தலையை சீவி..நெற்றிக்கு மேல் சுருள்சுருளாய்.. பாம்பு படமெடுத்து இருப்பது போல முடியை தூக்கி வைத்திருப்பான். தன்னோட கழுத்துக்கும், சட்டைக்கும் இடையில் கர்ச்சீப்பை முக்கோண சைஸில் மடித்து.. அவன் சொருகியிருப்பான். அவனிடமிருந்து ஏதோ செண்ட் வாசனையும், புண்ணின் சீழ் வாசனையும் வந்துகொண்டேயிருக்கும். அடிக்கடி தன் பொண்டாட்டியிடம் கந்தகத்தை முட்டையில் போட்டு வறுத்துத் தரச்சொல்வான். அது கரப்பானுக்கு மருந்தாம்.

அவன் தண்ணியடிக்கமாட்டான்..பீடி, சிகரெட்டெல்லாம் கெடையாது..ஆனால் எம்ஜிஆர் படம் என்றால் அவனுக்கு உயிர். படம் போடுற நாளிலிருந்து மாற்றும் நாள் வரை தினமும் போய் பார்ப்பான். அந்த ஊரில் மூன்று தியேட்டர்கள் இருந்தன. அவற்றில் மூன்றிலும் எம்ஜிஆர் படம் போட்டால் அவனுக்கு கொண்டாட்டம்.. சொல்லித்தீர்க்க முடியாது. தன் வீட்டுப்பக்கம் வராமலே.. தியேட்டர்களே.. கதியாய் கிடப்பான்.

அவன் சினிமா பார்ப்பது என்பது.. வேடிக்கையான.. விநோதமான கூத்தாயிருக்கும். யாரும் அவன் பக்கத்தில் நிம்மதியாய் உட்கார்ந்து பார்க்க முடியாது.

சோகத்தில் பக்கத்திலிருப்பவரை கட்டிப்பிடித்து அழுது ஒப்பாரி வைப்பதும்.. சந்தோஷத்தில் ஆரவாரமாய் கைதட்டி சிரித்தபடி அடுத்தவரின் முதுகில்.. ஓங்கி.. ஓங்கி.. தட்டிக்கொடுப்பதும்.. நடனக்காட்சிகளில் எழுந்து நடனமாடுவதும்.. சண்டைக்காட்சிகளில் கதாநாயகனுக்கும்..வில்லனுக்கும் நடக்கின்ற சண்டைகளில்; அருகில் இருப்பவரோடு சண்டை போடுவதுமாய்..இருக்கும் அவனது அத்துமீறல்கள்.

ஒரு முறை மீனாட்சி தியேட்டரில்..இவனின் இடப்புறமும், வலது புறமும் உட்கார்ந்திருந்த அந்த ஊரின் சப்&இன்ஸ்பெக்டரின் மகனிடமும், அவனது நண்பர்களிடமும்..தன் திருவிளையாடலைக் காட்டி செமத்தையாக அவர்களிடம் அடிபட்டு..ஒருநாள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டான்.

முனியம்மா கட்டிக் கொண்ட நாளிலிருந்து அவளுக்கு நயாபைசா கொடுத்ததில்லை. ஆனால் அவள் ஏலச்சீட்டு நடத்தியும், கந்துவட்டிக்குக் கொடுத்தும் சம்பாதிப்பதை திருடிக்கொண்டு.. அடிக்கடி ஊரைவிட்டு ஓடிப்போவான். அப்படி ஒரு தடவை ஓடிப்போனவன் நெடுநாட்களாகியும் திரும்பாமல்.. எங்கோ ஓடிப்போய்விட்டான்.

வேலாயுதம்.. அந்த தெருவில் பரசிவிடப்பட்டிருந்த தார்க்கலவையின் மீது ரோடு போடும் மிஷினை முன்னும், பின்னுமாக ஓட்டிக் கொண்டிருந்தான்.

வெயில் கொளுத்தியது. ரோடு வேலை செய்பவர்கள்... எதையும் சட்டை செய்யாமல் தங்கள் பாட்டுக்கு தங்களின் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள்.

ஜல்லிகள் பரசிவிட்ட அளவிற்கு மிஷினை ஓட்டி விட்டு.. என்ஜினை அணைத்துவிட்டு.. வியர்வை ஒழுக.. ஒழுக.. வேலாயுதம் கீழே இறங்கினான். நா வறட்சியை அவனால் தாங்க முடியவில்லை. அவனுக்கு கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம் என்று தோன்றவே... அவன் தகரம் போட்ட அந்த வீட்டின் முன் போய் நின்று.. தண்ணீர் கேட்டான்.

அவனின் குரலைக்கேட்டு வெளியே எட்டிப்பார்த்த முனியம்மா..மறுபடியும் உள்ளே நகர்ந்து..தன் தாயிடம்.. வெளியே தண்ணீர் கொண்டு போய் கொடுக்கும்படி சொன்னாள்.

முனியம்மா அம்மா வாசியம்மாள்..பித்தளை செம்பில் தண்ணீர் கொண்டுபோய்..வேலாயுதத்துக்கு கொடுத்தாள்.

மூன்று நாட்களாக..அந்த தெருவில் ரோடு போடும் வேலை நடந்தது.

இப்பொழுதெல்லாம்..நெனச்சபோது வீட்டுக்குள் வந்து உட்காருவதும்.. முனியம்மாவிடம் பேசி.. சிரிப்பதும்.. தண்ணீர் குடிப்பதில் இருந்து.. சாப்பிடுவது வரையிலுமாக.. வேலாயுதம் அவளிடம் நெருக்கமாகிவிட்டான்.

தன் புருஷன் தன்னைவிட்டு ஓடிப்போன உடனேயே.. தன் தாலியைக் கழற்றி முனியம்மா மூலையில் எறிந்துவிட்டாள். அதுபற்றி கேட்பவர்களிடம், ‘‘ பொண்டுக பய செத்தொழிஞ்ச பெறகு.. இந்த சீர்..செனத்திய.. செமந்துகிட்டா.. திரியணும்.. நாய்க்கு வெண்டயம் தட்டிப்போட்ட மாதிரி...’’என்பாள்.

ஊர் முழுக்க ரோடு போடும் வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. வேலாயுதம் வேலை நேரம் போக.. மற்ற நேரங்களில் முனியம்மா வீட்டில் இருந்தான். அக்கம்பக்கம் உள்ளவர்கள்.. முனியம்மாவின்.. அவளுடைய அம்மாவின் வாய்க்குப்பயந்தபடி.. எல்லாவற்றையும் அமைதியாய் பார்த்துக் கொண்டிந்தபடி.. ஒருவருக்கொருவர் பொரணி பேசிக்கொண்டார்கள். துணிச்சலாக..ஓரிருவர்..‘‘ என்ன முனியம்மா.. எப்ப.. எங்களுக்கெல்லாம் கல்யாண சாப்பாடு போடப்போற...’’ என்று நக்கலாக கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர்களின் வாயை அடைப்பது போல வேலாயுதத்திற்கும், முனியம்மாவிற்கும் வல்லவன் கோவிலில் வைத்து கல்யாணம் நடந்தது.

மூன்று மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு நாள் எட்டு மணியளவில்.. மூன்று பெண் குழந்தைகளுடன் ஒரு பெண்... முனியம்மாவின் வீட்டிற்கு முன்னாள் வந்து நின்றாள்.

காபி வாங்குவதற்காக.. வேலாயுதம் பனியன் மட்டும் போட்டபடி.. கைலியை தூக்கிக் கொண்டு தூக்கு வாளியுடன் வெளியே வந்தான்.

அவனைப் பார்த்ததும்.. தன் குழந்தைகளை விட்டு விட்டு.. அந்தப்பெண்..அவன் மேல் பாய்ந்தாள், ‘ ஏண்டா... எடுபட்ட பயலே.. பொண்டாட்டி புள்ளைகளை தவிக்க விட்டுப்புட்டு.. இங்க வந்து..ஒரு மொண்டிச்சிறுக்கியோட.. கும்மாளம் அடிச்சுக்கிட்டாத் திரியுற...’’

பனியன்..அந்தப்பெண்ணின் கையில் சிக்கிக் கிழிய..வேலாயுதம், ‘‘ஜெயந்தி.. ஜெயந்தி.. கோபப்படாத ஜெயந்தி.. ஏதோ.. நடந்தது.. நடந்துபோச்சு...’’ கெஞ்சினான்.

‘‘என்னடா.. நடந்தது.. நடந்துபோச்சு...லோலாயி மகனே.. நடந்தது.. நடந்து போச்சு... ஒந்.. பெரக்கித்திங்கிற.. பொறுக்கித்தனத்துக்கு.. நா.. பத்தலையா.. இன்னொருத்தி கேக்குதா...’’ என்றபடி அவள்..அவனின் முகத்திலும், நெஞ்சிலும் ஆவேசமாய் குத்தினாள்.

அந்தப்பெண்ணின் ஆங்காரக்குரலைக் கேட்டதும்.. முனியம்மாவும், அவளது அம்மாவும் வீட்டிற்கு வெளியே வந்தார்கள். தெருவே கூடிவிட்டது.

முனியம்மாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. தனக்கு கல்யாணம் ஆகவில்லையென்று அவன்..தன்னை ஏமாற்றிவிட்டானேயென்று அவள் துடித்துப்போனாள்.

வெளியே வந்த முனியம்மாவைப் பார்த்து, ஏண்டி... தட்டுவாணி முண்ட..உனக்கு..ஏந்..புருஷன் தான்.. கெடச்சானா.. ஊர்ல எத்தனை பய இருக்கான்.. ஒருவங்கூட கெடக்கலையா.. அவுசாரி.. கொண்டிச்சிறுக்கி.. ஏங்.. குடும்பத்த கெடுக்கவாடீ.. மினுக்கிட்டு திரியுற..’’ என்றபடி வேலாயுதத்தின் பொண்டாட்டி.. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில்.. முனியம்மாவின் கழுத்தில் கிடந்த தாலியை வெடுக்கென்று அத்து எறிந்தாள்.

முனியம்மா சட்டென்று அவளது குடுமியைப்பிடிக்க.. புது தார்ரோட்டில் இருவரும் உருண்டு.. புரண்டு சண்டையிட்டார்கள்.

அவர்கள் தங்கள் சீலைகள்.. ரவிக்கைகள் விலகின கிழிந்தன.. என்பது கூட தெரியாமல் ஆக்ரோசமாய் குதறிக்கொண்டார்கள்.

வேலாயுதம் ஏதும் செய்யாது.. கிழிந்த பனியனுடன் திகைத்து நின்றிருந்தான். கூத்தை வேடிக்கை பார்த்த கூட்டம்.. சட்டென்று சுதாரித்து..இருவரையும் விலக்கிப் பிரித்தது.

ரோடு போடுற காண்ட்ராக்டரின் முன்னிலையில்.. தெரு ஜனங்கள்.. ஆள் ஆளாளுக்குப்பேசி..வேலாயுதம் ரூ.10,000ஐ முனியம்மாவுக்கு கொடுத்து விடணும்.. இனிமேல் அவனுக்கும், அவளுக்கும் எந்த ஒட்டோ.. ஒறவோ இல்லை என்று முடிவானது.

முனியம்மா அதை ஏற்றுக்கொண்டாள். ஆனால் வேலாயுதத்தின் பொண்டாட்டி ஜெயந்திதான்.. கடைசிவரைக்கும்.. ஒத்துக்கொள்ள முரண்டு பிடித்தாள்.

அப்போது எல்லோரும், ஒந் புருஷன் செஞ்ச தோரணைக்கு ஜெயிலுல்ல இருக்கணும்.. ஏதோ.. ஒந்..முகத்தாட்சணைக்கும்... ஒந் புள்ளைகள நெனச்சும்... இந்த முடிவ எடுத்துருக்கோம்னு...’’ என்று சொன்னதும்.. மனசில்லாமல்..அவள் சரியென்றாள்.

வீரபாண்டி மாரியம்மன் திருவிழாவிற்காக ஆயிரம் கண் பானை நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக..அந்த தெருவிலிருந்தவர்களை லாரியில் கூட்டிக்கொண்டு போனாள்.. முனியம்மா.

ஆற்றோரமாக இருந்த தென்னந்தோப்பு ஒன்றில் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அதைச்சுற்றி.. ஆண்கள்.. பெண்கள்.. குழந்தைகள் என அதில் வந்தவர்கள் உட்கார்ந்திருந்தனர். பலி விருந்து தயாராகிக்கொண்டிருந்தது.

முனியம்மா தனது நேர்த்திக் கடனை முடித்து, குளித்துவிட்டு.. ரோஸ்கலர் பட்டுப்புடவையில்.. கைகளை கீழே ஊன்றி எம்பி.. தாவி.. தாவி வந்து கொண்டிருந்தாள். அவளுடன்.. அவளின் அம்மாவும்.. சில ஆண்களும்.. பெண்களும் நடந்து வந்தார்கள். அவர்களில் ராசு என்ற கள்ள வண்டானும் இருந்தான்.

கைகளில் மோதிரங்களும், கழுத்தில் புலி நகம் வச்ச சங்கிலியும் அணிந்திருந்த கள்ளவண்டான் எல்லோரிடமும் சகஜமாய் பேசியதை.. ஆச்சரியமும், மரியாதையும் கலந்த ஒரு வித பயத்துடன் பார்த்து.. அவனிடம் பேசுவதே.. தங்களின் பாக்கியமென.. அங்கிருந்தவர்கள் நடந்து கொண்டார்கள்.

அவன் முனியம்மாவுக்கு தூரத்து சொந்தம். இருபது வருஷங்களுக்கு முன்னால்.. கஜானாப்பாறையில் இருந்த ஏலத்தோட்டத்திற்கு வேலைக்குப்போன முத்துச்சாமியின் ஒரே மகன்.

அவனுடைய அய்யாவும், அம்மாவும் செத்துப்போயிட்டாங்களாம்.. 10 ஏக்கர் ஏலக்காடு.. நக.. நட்டு.. பணமினு இருந்தும்.. யாரும் இல்லாத அனாதை மாதிரி.. இருந்துக்கிட்டு.. இருக்கேன்.. என்று அவன் வருத்தப்பட்டு பேசியது.. எல்லோருக்கும்.. என்னவோ.. போலிருந்தது.

மேலும் அவன், ‘‘இப்ப.. பொண்ணு பாத்துக் கட்டிக்கிட்டு போகலாம்னு புறப்பட்டு வந்ததாகவும்.. அவனுக்கு சின்ன வயசுல இருந்தே.. முனியம்மா மேல பரிதாப பாசம் இருந்ததாகவும்... பாவம்.. காலில்லாம.. தெனம்.. தெனம்.. எவ்வளவு கஷ்டப்படுறா.. அவ.. என்று.. அடிக்கடி நெனச்சுப் பார்த்துக்கிருவேன்.. அதனால... அவள.. தானே கட்டிக்கிட முடிவு பண்ணி வந்ததாகவும்.. பொண்ணு கேட்க போறதுக்கு முன்னாடி.. மாரியாத்தாள பார்த்துக் கும்பிட்டுப் போகலாம்னு வந்ததாகவும்.. நான் நெனச்ச மாதிரியே.. மாரியாத்த.. முனியம்மாவ.. அவ சன்னதியிலே.. கொண்டு வந்து சேர்த்திருக்காளே.. என நெகிழ்ச்சியாய் பேசினான்.

எல்லோருக்கும் சந்தோஷம் பொறுக்க முடியவில்லை. ஆனால் முனியம்மா தனது முந்தைய வாழ்க்கையை பற்றி சொல்லாமல் இருக்கக்கூடாது என்று.. மற்றவர்கள் தடுக்க..தடுக்க எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.

கள்ள வண்டானுக்கு அதைப்பற்றி அக்கறையும், கவலையும் இல்லை என்பதுபோல், ‘‘குளத்துல..நாயில இருந்து பன்னி, கழுதை, மாடுன்னு வந்து விழுந்து எழுந்திருச்சுப் போகுது..அதுக்காக..நாம என்ன...அதுல குளிக்காமல இருக்கமா..? இல்ல குடிக்காம இருக்கமா..? என்றான்.

சிறிது நேரத்தில் அங்குள்ள ஈசுவரன்கோயிலில் அவர்களுக்கு திருமணம் நடந்தது.

கல்யாணம் முடிஞ்சதிலிருந்து கள்ளவண்டான்.. முனியம்மா வீட்டிலேயே இருந்தான். தன்னுடைய ஏலக்காட்டிற்கு கூட்டிட்டு போறேன்.. கூட்டிட்டுப்போறேன்.. என்று சொன்னானே தவிர.. அவளைக் கூட்டிட்டுப் போகவில்லை. தான் மட்டும்.. அடிக்கடி.. தோட்டத்தைப் பார்த்துட்டு வாரேன்..என்று போவான். அப்போது அவள் கூட வருவதாய் சொன்னால்.. ’’ஏலக்காய் பழம் எடுப்பு முடியட்டும்.. போகலாம்..‘‘ ஏலக்காய் பழம் எடுப்பு முடியட்டும்..போகலாம்..’’ என்பான்.

அவன் போய்விட்டு திரும்புகையில் கைப்பை ஒன்று கொண்டு வருவான். அதில் கட்டுக்கட்டாக பணம் இருக்கும். அதுபற்றி முனியம்மா கேட்டால்.. எல்லாம் மருந்து, உரம் வாங்கிட்டுப்போறதுக்காக.. கூலியாளுக்கு சம்பளம் போடுவதற்காக.. என்று ஏதாவது சொல்வான்.

சில சமயம் அவன்.. ‘‘ஏலப்பழம் எடுத்தபெறகு உனக்கு நக நட்டு வாங்கித்தாரேன் என்பான். ஆனால் குடும்பச் செலவுக்கோ... கைச்செலவுக்கோ.. சல்லிக்காசு.. முனியம்மாவிடம் கொடுத்ததில்லை. எல்லா செலவும் அவள் தான் செய்வாள். சில சமயம் அவளிடம் தாரேன் என்று பணம் வாங்குவான்.. இதுவரைக்கும் தான் வாங்கியதை திருப்பிக் கொடுத்ததில்லை.

அன்றைக்கு பொழுது விடியவில்லை. சுமார் 5 மணியிருக்கும். யாரோ தன் வீட்டுக்கதவை தட்டுகிறார்களென்று.. தன் அம்மாவை விட்டு கதவைத் திறக்கச் சொன்னாள் முனியம்மா.

வெளியே.. யாரோ சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் மலையாண்டி சின்னய்யாவும், தலைக்கான் அண்ணனும் நிற்பதைப்பார்த்து.. அவள் பதறிப்போனாள்.. என்ன ஆச்சோ.. ஏது ஆச்சோ.. என்று.

மலையாண்டி, ‘‘முனியம்மா..ஒந் புருசன்.. நம்மளயெல்லாம் ஏமாற்றிப்போட்டானம்மா.. அவனுக்கு ஏலக்காடும் இல்ல.. ஒரு மண்ணும் இல்ல.. அடி மாடுகள வாங்கித் தர்ற புரோக்கராம் அவன்..இந்தா நிக்குறாரே.. சேட்டான்.. இவருக்கு மாடு வாங்கித் தாரேன்னு ஐம்பதாயிரத்தை வாங்கிட்டு வந்தானாம்.. இன்னும் மாடும் வாங்கித்தரல.. பணத்தையும் தரல.. இவங்களெல்லாம் மூணாறுல இருந்து வந்துருக்கிற போலீஸ்காரங்களாம்.. என்று அருகிலிருந்தவர்களை சுட்டிக்காட்டியபடி.. அவன எங்கம்மா..?’’என்றான்.

அவள் அலறியபடி, ‘‘அய்யோ..போச்சே’’ என்றபடி குப்புற கவிழ்ந்தாள். அவளது அம்மா ஓடிப்போய் தண்ணீர் கொண்டு வந்து தன்மகளின் முகத்தில் தெளித்து, கழுவிவிட்டு..கொஞ்சம் குடிக்க வைத்தாள்.

தெளிச்சி அடைந்த முனியம்மா,‘‘ பாவிப்பய... ஏலச்செடிக்கு கவ்வாத்து வைக்கணும்..ஏலப்பழம் எடுத்த ஒடனே.. திருப்பித் தாரேன்னு..என்னோட அஞ்சு பவுன் சங்கிலிய வாங்கிட்டு போனானே...’’ என்று அழத்தொடங்கியதும்.. வந்திருந்தவர்கள் ஒன்றும் பேசாமல் திரும்பிப் போய்விட்டார்கள்.

போன கள்ளவண்டான் திரும்பி வரவில்லை.

முனியம்மாவுக்கு வயித்தெரிச்சல் தாங்காமல், ‘அநியாயமா அஞ்சு பவுன் நக போச்சே..போச்சே...’’ என்று கால, நேரம் தெரியாமல் புலம்பிக்கொண்டிருந்தாள்.

பக்கத்து வீட்டு பார்வதி..அவ்வப்போது வந்து ஆறுதல் சொன்னாள். ஆனால் அந்த சாக்கில்..தன்னோட தம்பி பழனியப்பன.. எப்படியாவது.. முனியம்மாவோட.. சிக்க வச்சுறணுமுனு..கங்கணம் கட்டிக்கொண்டுதான் வந்து கொண்டிருந்தாள். ஏன்னா.. முனியம்மாகிட்ட கொஞ்சம் ‘‘பச’’ இருக்குறது அவளுக்கு நல்லாத்தெரியும்.

பொம்பள மனசென்ன.. பாறாங்கல்லா..? அதுகூட.. காத்துக்கும், மழைக்கும் பொடி பொடியாய் உதிர்ந்து மணலாப் போகையில.. முனியம்மா மனசு மட்டும்.. என்ன.. அப்படியேவா.. இருக்கும்? பார்வதி கணக்கு தப்பவில்லை.

முனியம்மா.. சிம்ளி விளக்க அணைச்சிட்டு.. பழனியப்பன் பக்கத்தில் வந்து படுத்தாள். அவன் எதிரே உள்ள மதில்பக்கமாக திரும்பி..மதிலோடு ஒண்டினான். அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது.

மெல்ல.. அவனைத்தன் பக்கமாக திருப்பினாள். மறுபடியுமாக அவன் மதில் பக்கமாக திரும்பிக்கொண்டான். அவளுக்குப் புரியவில்லை. அவனை நெருங்கி தனது இடது கையை அவன் மேல் இரு முறை போட்டாள். அவன் அவளது கையை தட்டி விட்டுக் கொண்டேயிருந்தான்.

முனியம்மாவுக்கு பொறுக்கமுடியவில்லை...

‘‘என்னய்யா.. தட்டி.. தட்டிவிடுற.. என்ன புடிக்கலையா...’’ என்று ஆதங்கத்தோடு கேட்டாள்.

படக்கென்று எழுந்த அவன், ‘‘ஐயோ.. முனியம்மா.. என்ன மன்னிச்சுரு.. சின்ன வயசுல பசங்களோட.. ஆத்துல குளிக்கப்போகும் போது.. பாறையில இருந்து குதிச்சப்ப.. அடிபட்டு. என்னால..? உன்ன.. சந்தோஷப்படுத்த முடியாது.. என்ன மன்னுச்சுரு...’’ என்றவாறு கதறினான்.

முனியம்மாள் நொறுங்கிப்போனாள். ஆனாலும்.. அவனைத் தேற்றினாள்..‘‘ இது மட்டும்தானாய்யா.. வாழ்க்க.. ஒன்றும் கவலப்படாத.. என்ன கட்டிட்டு விட்டுட்டு போனவனுக எல்லாம்..உடம்பத்தான் சந்தோஷப்படுத்தினானுக தவிர..ஏந்..மனச இல்ல... நீயாவது.. ஏந் மனச சந்தோஷப்படுத்துனா.. போதும்யா... நான் நூறு வருஷம் உயிரோடு இருப்பேன்...’’ என்றபடி அவனைக் கட்டிக்கொண்டாள்.

அவன் பிரமிப்பாய் அவளைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.

யாரோ அலறுவதைக் கேட்டு திடுக்கிட்டு முழித்துப் பார்த்தாள் முனியம்மா. நன்றாக விடிந்துவிட்டிருந்தது. அருகில் பழனியப்பனைக்காணவில்லை.

அவளின் அம்மா, ‘‘மோசம் போயிட்டோமடி.. சண்டாளப் பாவிப்பய... பீரோவுல இருந்த நக. நட்டு, பணம்... எல்லாத்தையும் தூக்கிக்கிட்டு.. ஓடிப்போயிட்டானே..’’ என்றபடி தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தாள்.

முனியம்மா பேச்சு மூச்சற்று.. அசையாமல் அப்படியே படுத்திருந்தாள்.

Pin It