கையில் ஊன்றுகோலின்றி
கம்பியில் நடந்து
செல்லும்
வித்தைக்காரன் நீ

தொட்டால் சுட்டெரிக்கும் நீ
தொட்டால் குளிரும்
நீரிலும் கருத்தரிக்கிறாய்

புத்தம்புது தொழிற்ப் புரட்சி
யுத்தமின்றி சத்தமின்றி
உன்னால்தான் வந்தது

விஞ்ஞான அறிவியல்
கண்டுப்பிடித்து தந்த நீ
கண்டுப்பிடிக்க முடியாத இடத்தில்
ஒளிந்துகொள்கிறாய் சில நேரம்

நீ....
வரும் நேரமும் போகும் நேரமும்
அரசால் அறிவிக்கப்பட்டாலும்
அதையும் தாண்டி
அடிக்கடி காணாமல் போகிறாய்

கண்ணாம்பூச்சி விளையாடி
நீ ஒளியும் போது
கற்கால உலகுக்கே எம்மை
கடத்திச் செல்கிறாய்

விளம்பர வெளிச்சத்தில்
வெள்ளமாய் நீ விரயமாவதை
தடுக்காதவர்கள்

உன்னை சொட்டு சொட்டாய் பயன்படுத்த
சிக்கன வாரம் கொண்டாடுகிறார்கள்
உழவுக்கும் நெசவுக்கும்
உன் தரிசனம் இலவசமென்று
ஆணையிட்ட அரசு
அடைத்த கதவை திறப்பது எப்போது?

சுரண்டும் அந்நியர் தொழில் நடத்த
சிரித்துக்கொண்டே கைகொடுக்கும் நீ
சொந்த நாட்டான் தொழிலுக்கு உதவாமல்
இருட்டுக் குழியில் குப்புறத் தள்ளுகிறாய்

ஆலையில் வேலை செய்ய
தொழிலாளர்கள் வந்தாலும்
நீ வராததால் உற்பத்தி முடக்கம்
உழைப்போர் வயிற்றில் அடிவிழுகிறது.

கட்டண உயர்வோ கழுதை கவ்வும்
நீ காணாமல் போகையில்
கண்களும் குருடாகும்

காற்று வேண்டுமானால் நீ வேண்டும்
வீட்டு விசிறி சுழல வைப்பாய்
நீ வேண்டுமானால் காற்று வேண்டும்
காற்றாலையில் கூடுதல் உற்பத்தி
நீ தொடர்ந்து கிடைக்க
கூடங்குளத்தை காட்டும்... இவர்கள்
ஊழல் குளத்தில் மூழ்கி கிடப்போர்

வற்றாத சூரிய ஒளியை
எப்போது பயன்படுத்துவார்களோ?