அந்த விரிந்த சமவெளியில், காவிரியின் நீரின்றி எதனால் தான் உயிர்வாழ முடியும்? இந்த பசுமை பெரும் பரப்பிற்கு ஏற்பட்டு வரும் நெருக்கடி மனதை பெரிதும் துயருர வைத்துவிடுகிறது. நைல் நதியின் சமவெளியை விட விரிவையும், செழிப்பையும் கொண்டதாக காவிரி சமவெளி கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக ஆறு சுமந்து வந்த வண்டல் மண்ணால் பெரும் செழிப்புடன் வாழ்ந்த இந்த பூவுலகின் செழிப்பு, வறண்டு பாலைவனமானால் யாரால் தான் பொறுத்துக் கொள்ள இயலும். மலைதலை காவிரி என்ற சிறப்பைக் கொண்ட இந்த நதி சோழ வளநாட்டிற்கு சோறுடைத்து என்ற பெருமையைப் பெற்று தந்துள்ளதை இப்பொழுது மறந்துவிட முடியுமா?

காவிரி ஆறு நீரற்றுப் போனதற்கு இயற்கையின் மீது எந்த குற்றமும் இல்லை. பேராசை பிடித்தலையும் மனிதக் கூட்டம் அதன் ஜீவனை சிறுக சிறுக கொலை செய்து முடித்தது. இன்று காவிரி வறண்டு கிடக்கிறது. அண்மையில் கர்நாடக அரசு சட்டத்திற்குப் புறம்பாக உருவாக்கியுள்ள புதிய பாசன வசதியும், புதிய நீர் தேக்கங்களும் நிலைமையை மோசடைய வைத்துவிட்டன. கர்நாடக அரசு செய்யும் தவறை மத்தி அரசு தடுத்து நிறுத்தாமல் வாய் மூடி மௌனியாக இருக்கிறது

இடைக்கால தீர்ப்பை நடுவர் நீதி மன்றம் வழங்கி பல ஆண்டுகளாகி விட்டது. எந்த நீதி மன்றத் தீர்ப்பும் அமுலாக வேண்டும். இதற்கான முழுப்பொறுப்பும் மத்திய அரசிடம் தான் இருக்கிறது. ஒருபுறம் காவிரி வறண்டு அதன் பாசனப்பரப்பெங்கும் வறண்டு போய்க்கிடக்கிறது. மறுபுறத்தில் கர்நாடகத்தில் புதிய பாசன விரிவாக்கம் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. பாசன உரிமை என்பதை ஒரு நாட்டில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாது, கண்டம் விட்டு கண்டம், நாடுகளுக்கு இடையே அமைந்த நீர் பாசன உரிமை கூட உலகில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு எந்தவிதமான பாதுகாப்பையும் தமிழகத்திற்கு தருவதற்கு  தயாராக இல்லை.

முல்லைப் பெரியார், பாலாறு, தென்பெண்ணை, சிறுவாணி என்று, அண்டை மாநிலங்களிலிருந்து வரும் ஆற்று நீர், அனைத்தும் அந்த மாநிலங்களால் அணை கட்டி தடுக்கப்பட்டு வருகிறது. எத்தனை வேகமாக குரல் கொடுத்தாலும், அந்தக்குரல் கேட்பாராற்று காற்றில் கரைந்து போய்விடுகிறது. இந்தப் புறக்கணிப்பை தமிழக மக்கள் எத்தனைக் காலத்திற்கு தான் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்.

இதன் விளைவு மத்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது. இதில் மறைந்துள்ள ஆபத்தை மத்திய அரசு புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

Pin It