தமிழ் இலக்கிய உலகில் கவிஞர் அறிவுமதியின் விரல்பிடித்தே இளையக்கவிகள் பயணிக்க முடியும். அந்த அளவுக்குக் கவிதை ஆளுமையாகவும் தாய்மை உணர்வுமிக்கவராகவும் வாழ்ந்துவருபவர்அறிவுமதி. அவர் கவிதைப்பரப்பில் பேசப்பட்ட அளவு கதையாளராக அறியப்படவில்லை என்பது வருத்தமான செய்தியே.

அறிவுமதி அவர்கள் எழுதிய கதைகளின் தொகுப்பாக "வெள்ளைத்தீ' என்னும் நூல் வெளியாகி இருந்தாலும், இலக்கிய உலகம் இன்னும் அந்நூல் குறித்த எந்த கருத்தையும் பகிராமல் கள்ளமவுனம் காத்துவருகிறது. அந்நூலில் இடம்பெற்றுள்ள அடமானம் என்னும் கதையை தாமரை வாசகர்களுக்கு அளிப்பதில் பெருமைக்கொள்கிறோம்.

முன்பே இக்கதை வெளியாகியிருந்தாலும் வாசகனின் புதிய அனுபவத்தினை கவனத்தில் கொண்டு மீண்டும் பகிர்கிறோம்

***

சட்டென விழித்துக்கொண்டாள் ‘செடிசேம்பு’ பட்டிக்குள் அடைந்து கிடக்கும் பன்றிகள் சண்டையிட்டுக் கொண்டு சாமத்தில் உறுமத் தொடங்குகிற நேரமெல்லாம் இப்படி ஆகும். விரிந்த விழிகள் கனக்க இருள். உடம்பு நெடுக வலி. கொத்தாய்த் தலைமயிரைச் சுருட்டிப் பிடித்துக் கொண்டு ‘மாசாணம்’ உதைத்த உதை, அடித்த அடி, கீழே வெளியில் களை பறித்தவர்கள்... ஏர் ஓட்டியவர்கள் எல்லோருமாய் வந்து அதட்டியும் கூட அடங்காத வெறியில் புரட்டி எடுத்தான்.

மரமாய் நின்ற ‘செங்கானை’ அப்போதைக்கப்போது ஓடிப்போய் நெட்டி நெட்டித் தள்ளிவிட்டு வந்து மனைவியை அடித்தான்.

“ஏலே கிறுக்கா.. வெட்டப் போற பன்னிய வெரட்டி வெரட்டி மல்லுகட்டறாப்போல இப்படிப் போட்டு இவள தொவைக்கிறியே... கிறுக்கு கிறுக்குப் புடிச்சுப் போச்சா ஒனக்கு” என்றபடியே பூசாரி வீட்டுக்கிழவர் அவனைப் பிடித்து விசிறித் தள்ளவும் புழுதியில் போய் விழுந்தான் மாசாணம். புழுதியை உதறிவிட்டு கோவணத்தை இறுக்கியபடியே ஓடிவந்தவன் புலம்பினான்.

“எத்தனப் பன்னிய வித்து... எவ்வளவு சிரமப்பட்டு இவங்கிட்டேருந்து இவள மூட்டிருக்கேன் தெரியுமா சாமி... மூட்டுன பொறவும் என்னெ உட்டுட்டு வந்து இங்க ஆமக்கறி குழம்போட குந்திகிட்டு இவனோட கும்மாளம் போடுறான்ன... இவள என்னா செஞ்சா தகும் சாமி... நீங்களே சொல்லுங்க.”

“சரிடா மாசாணம்... ஏதோ ஒரு மொடைக்கு அங்க இங்க பொரட்ட முடியாம செங்காங்கிட்ட ஒம் பொண்டாட்டிய அடமானம் வச்சுட்ட. பத்து நாளு பதினைஞ்சு நாளுல மூட்டியிருந்தின்னா பிரச்சன இல்ல. பத்து மாசம் உட்டுட்டு இப்பத்தான் தீத்திருக்க. பத்து மாசமா பழகுன பழக்கத்த ஒடனே ஒதறிவிட முடியுமா?”

புரள முயன்றாள். மார்பு நசுக்கி நீண்டு கிடந்தது மாசாணத்தின் கை. எத்தனை உடும்புகள். எத்தனை அணில்கள். எத்தனை விளாமரத்துக்குட்டை ஆமைகள். எல்லாமுமாய்த் தின்று சீரணித்த கொழுப்பின் கிளை.

பட்டிப்படலை முட்டி மோதும் பன்றிகளின் தூண்டுதலில் கிறுக்கேறி நெட்டி முறிப்பதாய் ஒடிந்தாள். கையின் நசுங்களில் பிதுங்கிய மெத்தின் சூட்டில் விழித்தவன் புரண்டான்.

கறம்பின் கெட்டித்த மண்ணில் முட்டி முட்டிக் கிளறிக் சீய்த்துக் கோரைக் கிழங்குகள் தின்னும் பன்றிகள் கூடி மிதிக்க மிதிக்க சாராயம் கிளறிய பாடல்கள் யாவும் பெருமூச்சுகளின் வழியே கசிந்து பிசுபிசுத்தன.

அசைவற்று மல்லாந்த செடிசேம்பின்மீது... கூரையின் ஓட்டை வழியே இறங்கம் நிலாகயிறு பிடித்து மெல்ல இறங்கினான் செங்கான். அவள் மேல் எடையற்றுப் படர்ந்தான். அவனை மூச்சாய் உள்வாங்கிக் குடித்தாள்.

அடமானம் வைத்த புதுசு. மேலப்பாளையூர் வெளிக்குப் பன்றியோட்டிப் போனவன் சாயந்தரம் திரும்புகையில் தோள் கனக்க ரெண்டு மூன்று உடும்புகளைப் போட்டுக் கொண்டு வந்தான்.

கூடமாட அவனும் ஒத்தாசை செய்ய குழம்பு வைத்துச் சாப்பிடக் கூப்பிட்டாள்.

இடதுகாலைக் குத்திட்டுக் கொண்டு உட்கார்ந்தான். சாப்பாட்டில் குழம்பை ஊற்றவும் கறித்துண்டுகளை ஒதுக்கி விட்டுப் பிசையப் பிதுங்கும் ஆவியிலேயே மீசை பூத்தான். ஒரு வாய் அள்ளி வாய்க்குள் வைத்தான். ருசி உச்சி மண்டைக்குச் சுரீர் என்று ஏறிய சுருக்கில் அப்படியே சொம்பில் இருந்தத் தண்ணியை எடுத்துப் பக்கத்தில் இருந்த சட்டியில் கை கழுவினான்.

“என்னய்யா, குழம்பு புடிக்கலியா?”

“இல்ல சேம்பு, இவ்வளவு ருசியா சமைக்கிறியே, இப்படிச் சாப்புட்டுப் பழக்கப்பட்ட ஓ ஊட்டுக்காரன் இந்த ஒரு மாசமா நாக்கு செத்துக் கெடப்பான்ல. முதல்ல அவனுக்குக் குழம்பயும் சோத்தயும் எடுத்துட்டுப் போயி குடுத்துட்டு வா. இருந்து சாப்பிடவச்சு நெதானமா வா... நா ஆத்தங்கரையில நிக்கறேன்”.

“போறன் நீ சாப்புடு”

“போயி குடுத்துட்டு வா மொதல்ல”

நாய்க்குட்டியும் புறப்பட்டது, தடுத்து மடியில் வைத்துக் கொண்டான் செங்கான்.

மாசாணத்திற்குத் திக்கென்றது.

“என்னடி இந்த நேரத்துல”

“இல்ல... உடும்புக்கறி கொழம்பு.. அதா எடுத்துட்டு வந்தேன்!”

“அவனுக்குத் தெரிஞ்சுதுன்னா...”

“அந்த ஆள்தான்யா கொண்டுபோயி குடுத்துட்டு வான்னாரு, வா... சாப்புடு..”

உட்காரச் சொல்லி ஆசை தீரச் சாப்பிட வைத்தாள். கை கழுவி வந்து அமர்ந்ததும் அழுதாள்.

“என்னெ சீக்கிரமா மூட்டுக்கய்யா.. பத்து நாள்ன்னு சொல்லிட்டு மாசம் ஒண்ணு ஆயிடுச்சு.”

“கொஞ்சம் பொறுத்துக்க, பன்னிங்க பெருகட்டும், புடிச்சு கொஞ்சத்த வித்துட்டு வந்து உன்னெ மூட்டுக்கறேன், சரி புறப்படு. அவன் காத்திட்டிருப்பான்.”

“பரவால்ல... நெதானமாதா வர சொல்லிச்சி”

“நெதானமான்னா?”

அமர்ந்திருந்தவனைக் காலால் உதைத்துத் தள்ளி விட்டாள். சட்டென விழுந்த வேகத்திலேயே எழுந்து கொண்டான் மாசாணம்.

“சேம்பு... அடமானம் வச்ச பொருள மூக்காம ஆளுறது அழகில்ல, சீக்கிரம் மூட்டுக்குறன் புறப்படு.”

ஆற்றைத்தாண்டி கரையேறுகிற போது செங்கான் காத்திருந்து அழைத்துப் போனான்.

பட்டியில் பன்றிகளின் அழிச்சாட்டியம். புரண்டு படுத்து மாசாணத்தின் மார்பு நடுவே கொசகொசவெனச் சுருண்டு கிடந்த மயிர்க் கோரைகளில் விரல்கள் பரப்பிப் பிடுங்கினாள். மிருதுவாய் விரல் நகர்த்திக் கெண்டைக் காலில் நிமிண்டினாள்.

திமிறினான். ஒருக்களித்தான். முதுகு காட்டிப் படுத்தான். பாம்பாய் இழைந்தாள். பற்களால் நடு முதுகில் கொத்தாய்ச் சதை கௌவி இழுத்தாள். செடி சேம்புக் குள்ளிருந்து உடும்புகள் சிம்பின. கோரை நைப்பு திரண்டு இரவு அதிர்ந்தது. பிழிந்த மூருக்கத்தில் “மாசாணம்” தக்கையானான், குறட்டை.

நிலா வெளிச்சத்தின் வழியே மறுபடியும் இறங்கி வந்த “செங்கான்” கை கொடுத்துத் தூக்கவும் எழுந்தாள்.

சீலையைச் சுற்றிக்கொண்டு மெல்ல படலைத் திறந்தாள். கோழிக்கூட்டிற்குப் பக்கத்தில் பன்னி வெட்டைப் பொறுக்கும் கூடைக்குள் கவிழ்த்து  வைத்திருந்த ஆமைக்கறிக் குழம்பை எடுத்துக்-கொண்டு புறப்பட்டாள்.

பாழ்வாய்க்கால் தாண்டி கருவைகளின் ஒத்தாசையோட பதுங்கிப் போய் ஆற்றுக்குள் இறங்கி சீலையை முச்சூடுமாய் அவிழ்த்துச் சுருட்டிக் குழம்பு சட்டியோடு தூக்கிப் பிடித்துக்கொண்டு கழுத்தளவு தண்ணியை மீறுகிற இடத்திலும் ஒத்தக்கை நீச்சலாய்க் கரையேறி குழம்புச் சட்டியை வைத்துவிட்டு வந்து மீண்டும் தண்ணீரில் இறங்கிக் குளித்தாள்.

அங்கங்கே அடிபட்ட இடங்களின் சதைத் சிராய்ப்புகளில் மீன்கள் கடிக்கக் கடிக்க ஒணைக்கையாய்ப் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றவள் கரையேறி நடந்தாள்.

தொழூர் இலுப்பைத் தோப்பு.

மரத்துக்கு மரம் பதுங்கிப் பதுங்கி அரவான் பலி கொடுக்கும் இடத்தையும் தாண்டி வந்து ‘செங்கானின்’ பனை ஓலைக் குடிசையின் படலைத் திறந்ததும்தான் தாமதம். சட்டென மோப்பன் கண்ட நாய் மார்புச்சீலையில் தவ்விக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டது. பத்து மாசமாய் வளர்த்துவிட்டுப் போன பாசம்.

இரண்டு கைகளாலும் குழம்புச் சட்டியை மேலே தூக்கியவள் மெல்ல ஒரு கையில் மாற்றிக் கொண்டு குழம்புச் சட்டியில் கை விட்டு இரண்டு மூன்று கறித்துண்டுகளை எடுத்துக் கீழே போட்டாள். நாய் அதைச் சட்டை செய்யவில்லை. அவளையே தொற்றிக்கிடந்தது. குனிந்து வருடி முத்தமிட்டு அணைத்துச் சமாதானம் செய்தாள்.

மெல்லக் கதவு திறந்து போனாள். குழம்புச் சட்டியை இருளில் துழாவி உறியில் வைத்துவிட்டு வாசல் வழியே வந்த நிலாவெளிச்ச நெகாவில் “செங்கான்” படுத்திருக்கும் இடத்தில் அமர்ந்தாள்.

இருளில் வெளிச்சம் பிழிந்து, செங்கானின் முகம் தேடி நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அகன்ற மார்பு மூச்சுக்கு மூச்சு விரிந்துபடுத்தது.

சட்டென அழுகை வந்து அவன் மீது படர்ந்தாள்.

“சேம்பு”

“ம்”

“இந்த நேரத்துலயா...”

“முடியலய்யா.. உன்னெ இப்படி ஒத்தையில படுக்க வச்சுட்டு அங்கப் போயி படுக்க முடியல... மனசு அறுக்குது.”

“சேம்பு... புரிஞ்சுக்காமப் பேசாத. சாதாரணமா குழம்பு கொடுக்க வந்ததுக்கே... உன்னெ என்ன பாடுபடுத்திட்டா(ன்) அவன். என்ன செய்ய முடிஞ்சுது என்னால.. அவ(ன்) மூட்டுக்கிட்ட பொறவு நான் என்ன செய்ய முடியும்”

“பணம் வேணுங்கறப்ப அடமானம் வைக்க... பணம் கெடச்சப்ப மூட்டுக்க இதென்ன அண்டா குண்டானாய்யா... பத்து மாசமா ஒங்கூடவே காடு கறம்பு வயலு வாய்கான்னு அலைஞ்சிட்டு... இப்ப இப்படி ஒன்னெப் பிரிஞ்சு கெடக்க என்னால முடியலய்யா..”

அவன் மார்பில் விம்மினாள்.

இரு கைகளாலும் உள்வாங்கி மிருதுவாய் வருடினான். கைநெகாவில் காயம் உணர்ந்து, அவளைப் பாயில் கிடத்தி எழுந்தான். அவள் அவனை இழுத்து மார்பில் அழுத்தினாள். அவன் கைகளைப் பிய்த்து எடுத்தான்.

“சேம்பு வேணாம்... நெடுக ரணம்பட்டுக் கெடக்குற ஒடம்புல போயி... எப்படி.. முடியாது... இரு”

எழுந்தான். சிம்னி கொளுத்தி மூலையில் இருந்த சீசாவைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து காயங்களில் பன்னி நெய்யைப் பறவையின் இறகால் நனைத்து எடுத்து நீவிவிட்டான். சீசாவை வைத்துவிட்டு மிருதுவாய் உடல் நெடுகப் பிடித்துவிட்டான்.

“சேம்பு.. எழுந்திரு... அங்க முழிப்பு தட்டித் தேடுனான்னா கதையே வேற.. பஞ்சாயத்துக்குச் சாராயம் வாங்கி கொடுத்தே எம்பட்டியும் போயிடும், அவம் பட்டியும் போயிடும். அப்புறம்... கூடகட்லியோ... மொறம் கட்லியோன்னு வடக்குச் சீமைப் பூராவும் அலைய வேண்டியதுதான். எழுந்துரு.”

எழுந்தாள். படலை மூடிக்கொண்டு.. வெளியே வந்ததும் நாய் தொடர ஆற்றங்கரைக்கு வந்தனர். இருவரையும் யாரோ குறுக்காகக் கிழிப்பதுபோல் உணர்ந்து, அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

சிறிதுநேர அமைதிக்குப்பிறகு அவளே விடுவித்துக் கொண்டு குனிந்தாள். நாயை மெல்ல வருடி அணைத்து முத்தமிட்டு ஆற்றில் இறங்கினாள். பாதி தூரம் சென்று திரும்ப.. நாயும் நீச்சலிட்டு வருவது தெரிந்தது. திரும்பி விரட்டினாள். அருகில் நீச்சலிட்டு வந்து “போ... போ... வர்றேன்.. போ...” என்று தள்ளிவிட்டாள்.

கரையேறிவள் சீலையைச் சுற்றிக்கொண்டு திரும்பிப் பார்த்தாள்.

நிலா வெளிச்சத்தில் “செங்கான்” நின்று கொண்டிருந்தான். பக்கத்தில் நின்ற நாய் உடலைச் சிலுப்பவும் நிலாத் துளிகள் தெறித்துச் சிதறின.

Pin It