ஓர் அறிமுகம் மற்றும் நேர்காணல்

தமிழில்: எச்.பீர் முகம்மது

வாதி அல் யுயோன். ஆரவாரமற்ற பாலைவனம் அது. பாலைவன மணல் வெடிப்புகளுக்கிடையே சின்னதான பச்சைத்துளிர்ப்புகள். பூமியானது வெடித்தும் வானம் அதன் மீது இறங்கியதான தோற்றத்துடனும் இருந்தது. அதனை பார்ப்பவர்கள் இந்த இடத்தின் மீது கண்வைக்க வேண்டியதிருக்கிறது. தண்ணீர் இதனிலிருந்து எப்படி வெளியாகிறது? இதன் சலனம் என்பது என்ன? இயற்கை அதன் அசலையும் நேர்த்தியையும் ஒரு சேர இங்கு அளித்திருக்கிறது.

(முனீபின் Cities of Salt என்ற நாவலின் தொடக்க வரிகள் )

பாலைவனங்கள் சூழ்ந்து கொண்டிருக்கும் மத்திய கிழக்கின் ஓரத்திலிருந்து அரபு இலக்கிய படைப்புகளை பற்றி மதிப்பிடும் எனக்கு அப்துல் ரஹ்மான் அல் முனீபின் படைப்புவெளி குறித்து அதிகம் விவரிக்க வேண்டியதாக இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டு அரபுலகம் அதன் தனித்த படைப்பாளுமையால் மேற்குலகின் கவனத்திற்கு ஆள்பட்டிருக்கிறது. தங்கள் சுய அடையாளங்களை இழந்ததன் தவிப்பும், அதன் ஊடுருவலும், ஏக்கமும் படைப்பாளிகளின் மொழிக்குள் வகைப்பட்டிருக்கிறது. எட்வர்த் செய்த் சொன்னது போன்று இலக்கியம் சில நேரங்களில் விசனத்தின் மொழியாக இருக்கிறது. வாழ்க்கைப் பற்றிய அவ நம்பிக்கை அவர்களின் படைப்புக்கு தெளிவான உயிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதம் என்ற எல்லைக்குள் மட்டுமே குறுக்கப்பட்டு வந்த அரபு மொழி இன்று அதன் எல்லா நேர்கோடுகளையும் உடைத்து விட்டது. அதன் படைப்பு வெளி எல்லா தரப்பினரின் கவனத்திற்கும் ஆளாகியிருக்கிறது.

எகிப்திய நாவலாசிரியர் நகிப் மஹ்பூஸுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டதற்கு பின் அரபு படைப்புகளின் பிற மொழி கடப்பு அதிகமானது. நகிப் மஹ்பூஸ் பற்றி தமிழில் இப்போது தான் பதிவுகள் வர ஆரம்பித்திருக்கின்றன.. இவரை அடுத்து அல்லது அதன் சம தளத்தில் அப்துல் ரஹ்மான் அல் முனிப் வருகிறார். லத்தீன் அமெரிக்க படைப்பாளிகளான கப்ரேல் கார்சியா மார்க்யூஸ் மற்றும் ஆக்டோவியா பாஸ் ஆகியோரின் இடத்தில் மதிப்பிடப்படும் அப்துல் ரஹ்மான் அல் முனீப் ஓர் அகோன்னத கட்டத்தில் 1933ல் ஜோர்டான் தலைநகரான அம்மானில் பிறந்தார். இவரின் தந்தை சவூதி அரேபியாவை சேர்ந்தவர். ஒட்டக வர்த்தகரான இவர் அரபுலகம் முழுவதும் தன் வணிக ஸ்தாபனங்களை விரிவுபடுத்தியிருந்தார். தாயார் ஈராக்கில் பிறந்தவர். தந்தையை பின் தொடர்ந்து அப்துல் ரஹ்மான் சவூதி அரேபிய குடியுரிமையை கொண்டிருந்தார். பின்னர் தன் படைப்புகள் காரணமாக அதை துறக்க வேண்டியதாயிற்று. பள்ளி படிப்பை ஜோர்டானில் முடித்த அவர் மேற்படிப்புக்காக ஈராக் சென்றார். அங்கு சட்டபடிப்பு படித்தார். இறுதியில் பெல்கிரேடு பல்கலைகழகத்தில் பெட்ரோலிய பொருளாதாரத்தில் ஆய்வு படிப்பை நிறைவு செய்தார்.

இதன் பிறகு சிரியாவில் பெட்ரோலிய துறையில் பணிபுரிந்த முனீப் 1967 ல் நடந்த அரபு இஸ்ரேலிய போர் காரணமாக ஈராக்கிற்கு சென்றார். இந்த காலகட்டத்தில் சிரியாவில் பிரபலமாக இருந்த பாத் சோசலிச கட்சியில் இணைந்து அதன் தீவிர உறுப்பினராக செயல்பட்டார்.பின்னர் ஈராக்கில் எண்ணெய் வள பொருளாதார நிபுணராகவும் அதன் பின்னர் பெட்ரோலிய ஏற்றுமதி கூட்டமைப்பிலும் (OPEC) சில காலம் பணிபுரிந்தார். இக்காலகட்டத்தில் நாடோடி பதூயீன்களும் எண்ணெய் பொருளாதாரமும் குறித்த இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. பிந்தைய கட்டத்தில் எண்ணெயும் வளர்ச்சியும் என்ற மாத இதழின் ஆசிரியரானார். ஈராக்கில் பாத் சோசலிச கட்சியோடு இணைந்து செயலாற்றினார். சோசலிசம் குறித்த நுண்ணுணர்வு அப்போது தான் அவருக்கு ஏற்பட்டது. சோவியத் ரஷ்யாவின் தாக்கத்தோடு அது இணைந்திருந்தது.அதன் நிலைபாடுகளில் மனமுறிவு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறினார். அந்த கட்டம் தான் ஈராக்  ஈரான் போர் ஏற்பட்டது. அதற்கு சதாம் உசேனை கடுமையாக விமர்சித்தார்.

1981 ல் பிரான்சுக்கு நகர்ந்தார். மேற்குலக நகர்வுக்கு பின்னர் தான் எழுத்தில் தீவிர கவனம் செலுத்த தொடங்கினார். பிரான்சு வாழ்க்கை அவருக்கு புதிய பரிமாணத்தை கொடுத்தது. பிரெஞ்சு இலக்கியத்தை ஆழ்ந்து கற்ற முனீப் அதன் அகவய பிரக்ஞையோடு அரபு எழுத்து வெளியில் உலவ தீர்மானித்தார். இதன் தொடர்ச்சியில் ஐந்தாண்டுகள் பிரான்சில் கழித்த முனீப் அதன் பிறகு சிரியா திரும்பினார். சிரியாவை தன் இருப்பிடமாக மாற்றிக் கொண்டார். இவரின் முதல் நாவல் மரங்களும் மர்சூக்கின் படுகொலையும்  என்ற தலைப்பில் 1973 ல் வெளிவந்தது. அவரின் இளமைக்கால பாதிப்புகள் குறித்ததாக இருந்தது அந்த நாவல். இளமையின் உதிர்ப்புகள் வாழ்வின் பிந்தைய கட்டத்தில் எவ்வித பிரதிபலிப்பை செலுத்தும் என்பதான கதை வெளியை கொண்டது அது. அதன் பின்னர் அரபு பழங்குடியினரின் காதல் கதை என்ற நாவல் வெளிவந்தது.

அரபு இனத்தின் பூர்வ குடியினரான பதூயீன்கள் பற்றிய வரைபடமாக அது இருந்தது. பதூயீன்களின் வாழ்க்கையமைப்பு பெட்ரோலிய நிலத்தோடு சம்பந்தப்பட்டது. அதனோடு இயைந்த விடுபடல்களிலிருந்து எழும் மன உணர்வுகளின் கூட்டுநிலையாக கதையமைப்பு தடமறிந்து செல்கிறது. இக்கட்டத்தில் முனீப் நவீன ஓவியங்கள் மீது கவனம் செலுத்தினார். ஈராக்கில் இருந்த போதே அவருக்கு பண்டைய மெசபடோமிய சிற்பங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஈராக்கின் ஓவியர்களாக இருந்த ஜவாத் சலிம் மற்றும் சகிர்அலி செய்த் ஆகியோரின் ஓவியங்கள் முனீபின் படைப்பு வெளிக்குள் மிகுந்த பாதிப்பை செலுத்தின. அவரின் அநேக நாவல்கள் அரபு ஓவியர்களின் ஓவியத்தை உட்கொண்டிருக்கின்றன. நவீன ஒவியத்தில் ஆர்வம் உண்டான பிறகு முனிப் அதை அரபு உலகம் முழுவதுமானதாக வளர்த்தெடுக்க முடிவு செய்தார். இதற்காக பாலஸ்தீன அறிவு ஜீவியான ஜாபர் இப்ராஹிம் அல் ஜாப்ராவுடன் தொடர்பை ஏற்படுத்தினார். நவீன ஓவியங்களை பொறுத்தவரை முனீப் ஒரு விமர்சகராகவே இருந்தார் எனலாம்.

இருபதாம் நூற்றாண்டு அரபு ஓவியர்களான பதிஹ் அல் முதரிஸ், மர்பான் பாஸி, நாதிர் நாபா, நயிம் இஸ்மாயில், ஜாபர் அல்வான், அபு தாலிப் மற்றும் மஹ்மூத் முக்தர் ஆகியோரின் ஓவியங்களை பற்றி பல்வேறு இதழ்களில் விமர்சன கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இவற்றை தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. ஆனால் நிறைவேறுவதற்கு முன் மரணம் அவரை முந்திக் கொண்டு விட்டது. ஓவியங்கள் மீதான அவரின் ஆர்வம் பற்றி முனீப்பிடம் ஒரு தடவை கேட்கப்பட்டது. அதற்கு அவர் "முதலில் ஓவியங்களை விரும்பக்கூடியவன் என்ற முறையில் நான் அதன் இயற்கை தன்மையை மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டாவதாக ஓவியங்களை நேசித்த அரபு கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகளை கண்டறிந்து அவர்கள் தொடாத ஓவியங்களின் புள்ளிகளை, அதன் ஒளிவீச்சை தேர்ந்த விமர்சகராக உள்வாங்கி கொள்வது, மூன்றாவதாக அரபுலகில் ஓவியர்களிடையே ஏற்பட்டிருக்கும் பலகீனங்களை கண்டறிந்து அதை நாவல்கள் வழியாக சீரமைப்பது. மேற்கண்ட அம்சங்கள் அவரின் ஒவியங்கள் மீதான பங்களிப்பிற்கு உதாரணமாக இருக்கின்றன.

முனீப் தன் படைப்பு உத்தியில் நவீனத்துவத்தை அதிகம் உள்வாங்கி கொண்டு இருக்கவில்லை. நவீனத்துவத்தின் காலச்சேர்வை அதிகம் கற்றவராக இருந்த முனீப் அவரின் சமகாலத்தவர் மாதிரி அதனோடு முழுமையாக ஒன்றி போகவில்லை. நவீனத்துவம் ஏற்படுத்திய ஒரு வித அயற்சியே அதற்கு காரணம். அவரின் சமகாலத்தவர்கள் அதோர்னோவின் எதிர் காவியம் என்ற கருதுகோளுக்குள் வந்து விழுந்தார்கள். அவர்கள் நாவல் அதன் சரியான மரபில் நிற்க வேண்டுமென்றால் அதன் எதார்த்தவாத தன்மையை கைவிட வேண்டுமென்று சொன்னர்கள். அப்போது தான் அது மீண்டும் உற்பத்தி செய்யமுடியாத ஒன்றாக இருக்கும் என்றார்கள். முனீப் இந்த முறையிலிருந்து சற்று விலகி ஒரு வித தாராள கதை வெளிக்குள் தன் வரிகளை வடிவமைத்துக் கொண்டார். இதுவே அரபுலகில் அவரின் குறிப்பிட்ட கால இடைவெளியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது.

அவரின் எதார்த்த மொழி வாசகனிடத்தில் வெறுமனே கடந்து செல்லாமல் ஒரு வித ஊடுருவலை ஏற்படுத்தியது. அரபுலகில் முனீப் ஒரு படைப்பாக்க ஆளுமையாக மாற அவரின் நாவல்களே காரணம். வாழ்வின் அவிழ்க்க முடியாத புதிர்களை பற்றி ஆராய சிறந்த தளம் நாவலே என்று முனீப் அதிகம் நம்பினார். முதல் நாவலுக்கு பிறகு 1982 ல் வெளிவந்த வரைபடமற்ற உலகம் (World without maps) என்ற அவரின் நாவல் அரபுலகில் மிகுந்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஜோர்டானில் பிறந்து மத்திய கிழக்கின் பல்வேறு நகரங்களுக்கு புலம் பெயர்ந்து கொண்டிருந்த முனீப் வீடற்ற நிலை என்பதன் பிரக்ஞையில் ஆழ்ந்திருந்தார். எழுத்தாளரும் நாடுகடத்தலும் என்ற கட்டுரையில் முனீப் நாடுகடத்தல் என்பது ஒருவனை சமூக குற்றவாளியாக , மனநிலை பிறழ்ந்தவர் இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது என்றார். அவரின் பெரும்பாலான நாவல்கள் புலம் பெயர்தலை குறித்ததாகும்.

ஜார்ஜ் லூக்காஸின் நாவல் பற்றிய கருதுகோளான "நாவல் என்பது சமூக மாற்றத்தை முன்னிறுத்தும் களம்" என்பதை முனீபின் நாவல் பிரதிபலித்தது. மேலும் இவரின் நாவல்களில் மேற்குலகத்தால் அதிகம் பேசப்பட்டது உப்பின் நகரங்கள் (Cities of Salt) என்ற நாவலாகும்.. நான்கு பகுதிகளை கொண்டிருக்கும் இந்நாவல் அரேபியாவின் பெயர் அறியப்படாத ஒரு பாலைவன கிராமத்தில் பெட்ரோலிய கண்டுபிடிப்பின் பிறகு அங்குள்ள நாடோடி பழங்குடியினர் விரட்டப்பட்ட கதையை முன்னிறுத்தியதாகும். வாதி அல் யுயோன் என்ற கற்பனா கிராமம் பாலைவன தாவரங்களாலும் சிறிய நீரூற்றுகளாலும் நிரம்பியிருக்கிறது. பூர்வ குடியினரான பதூயீன்கள் குடில் அமைத்து அதன் பல எல்லைப்பகுதிகளில் தங்கியிருக்கின்றனர். மிதப் அல் ஹதால் என்ற நபர் அவர்களின் தலைவராக இருக்கின்றார்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் சவூதி அரேபியாவில் பிரிட்டன் உதவியுடன் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் அந்த பழங்குடியினர் வாதி அல் யுயோன் என்ற கிராமத்திலிருந்து விரட்டப்பட்டனர். எங்கு செல்வதென்ற உணர்வில்லாத நிலையில் கூட்டம் கூட்டமாக பல மைல்களுக்கு அப்பால் சென்று குடியேறுகின்றனர். வாதிஅல் யுயோன் சகல வசதிகளும் நிரம்பிய பூமியின் சொர்க்கமாக இருக்கிறது. பல வருடங்கள் கழித்து மிதப் அல் ஹதாலின் மகன் பவாஸ் அந்த கிராமத்திற்கு திரும்பி வருகிறான். தாங்கள் தங்கியிருந்தாக அறியப்படும் இடங்கள் எவ்வித சுவடுகளுமற்று எண்ணெய் குழாய்களின் தடயமாக மாறி இருப்பதை நேரில் காண்கிறான். நீரூற்றுக்களும் தடமழிந்து இருந்தன.

வாதி அல் யுயோன் புதிய நகரத்திற்கான தோற்றம் குறித்ததாக இருந்தது. எதார்த்தவாத கதை சொல்லல் முறையில் இருந்தாலும் இதன் பிந்தைய பகுதி மாந்திரீக எதார்த்தவாத முறையில் இருக்கிறது. அடையாளங்களை இழத்தல் ஆழ்மன ரீதியில் ஏற்படுத்தும் பாதிப்புகள் இந்நாவலில் பவாஸின் ஏக்கத்தோடு இயைந்து நிற்கிறது. வாழ்வு அதன் அர்த்தத்தை இழந்து நிற்பதையும் இன்னொன்றிற்கான தேடல் முற்று பெறாமல் நிற்பதையும் நாவல் பாலைவன கதைவெளிக்குள் வரைந்து கொள்கிறது. இந்நாவல் மூலம் முனீப் அரபுலக இளம் அறிவுஜீவிகளால் அதிகம் ஆகர்சிக்கப்பட்டார். அதே நேரத்தில் அரசுகளால் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.அரபுலகில் பெட்ரோல் பற்றிய முதல் நாவல் என எலியாஸ் கௌரியால் இது குறிப்பிடப்பட்டது. சவூதி அரேபிய அரசாங்கம் ராஜ்ய விரோத நாவல் என குறிப்பிட்டு சில காலம் இதை தடைசெய்தது. சுமார் ஐந்தாண்டுகளுக்கு பிறகு இத்தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்நாவலை பற்றி முனீப் ஒரு தடவை இவ்வாறு குறிப்பிட்டார். "எவ்வளவு தூரம் இந்நாவல் வட்டார சித்திரத்தை கொண்டிருக்கிறதோ அதே அளவு உலக சித்தரிப்பையும் கொண்டது. வேறு வார்த்தைகளில் சொன்னால் வட்டார காலநிலையோடு நெருங்கும் அந்நேரத்தில் உலகத்தோடும் நெருங்குகிறது.

மக்களின் வாழ்நிலையோடு ஒன்றிய நிலையில் அவர்களின் தேடலாகவும் இருக்கிறது." இவரின் கடைசி நாவலான இருண்ட நிலம் (Land of Darkness) ஈராக்கின் கதையாக பிரதிபலிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈராக்கின் ஆட்சியாளராக இருந்த சுல்தான் பாதுஷாவின் அதிகார ஒடுக்குமுறை குறித்ததான சித்திகரிப்பாக இருக்கிறது. அம்மக்களின் அரசை எதிர்த்த தின வாழ்வாதார போராட்டம் கதைவெளியை நுட்பமாக கட்டமைக்கிறது. இந்நாவல் இவருக்கு படைப்பு ரீதியாக மேலும் வலுசேர்த்தது. நாவல்கள் மூலம் அப்துல் ரஹ்மான் அரபு இலக்கிய வெளியின் உன்னத நிலையை வெளிக்கொண்டார் எனலாம். தீவிர எழுத்து செயல்பாடுகளில் ஈடுபட்ட அப்துல் ரஹ்மான் புற்று நோயால் சில காலம் பாதிக்கப்பட்டார். சிரியாவுக்கும், பெய்ரோட்டிற்கும் இடையே பயணம் மேற்கொண்டிருந்த முனீப் 2004 ஆம் ஆண்டு ஜனவரியில் மரணமடைந்தார். முனீப் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிலவற்றை Vintage பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அப்துல் ரஹ்மான் அல் முனீப்பின் நேர்காணல்கள் மிகக் குறைவே. அதற்கு காரணம் முனீப் பத்திரிகைகளின் கண்கள் படாமல் ஒதுங்கியதாகும். இதில் ஒரு நேர்காணல் அல் ஜதீத் என்ற ஆங்கில பத்திரிகையிலும் மற்றொன்று லெபனானிலிருந்து வெளிவரும் அந்நஹாரிலும் வெளியாகி இருந்தது.

அல் ஜதீத் நேர்காணலிலிருந்து...

அல் ஜதீத்: உங்கள் வாழ்க்கை குறிப்புகளை எடுத்துக்கொள்வோர் உங்களின் பொருளாதார படிப்பையும் அதன் பிறகான உங்களின் ஆய்வு பட்டத்தையும் எடுத்து கொள்வார்கள். எப்படி உங்களால் பெட்ரோலிய பொருளாதாரத்திலிருந்து நாவல்களுக்கு நகர முடிந்தது?

அப்துல் ரஹ்மான் அல் முனீப்: ஒரு காலத்தில் என்னுடைய பெரிய விளையாட்டாக அரசியல் இருந்தது. அரசியல் செயல்பாடுகளை அனுபவ பூர்வமாக உணர தொடங்கிய பிறகு ஏற்படும் அனுபவம் குறைபாடு உடையதாகவும், போதாமையாகவும் எனக்கு உணரப்பட்டது. அதன் பிறகு நான் மற்றவர்களின் விசனங்களையும், வெளிப்பாடுகளையும் இணைப்பதற்கான வாய்ப்பாட்டை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினேன். அது வரலாற்று தலைமுறை சார்ந்ததாகவும் இருந்தது. என்னுடைய செயல்பாடாக இருந்த வாசிப்பானது எனக்கு நான் தேடி கொண்டிருந்த கருவியை அளித்தது. அரசியல் இயக்கம் என்பதை விட எனக்கு நாவல்கள் வழி அதிகம் வெளிப்பாட்டு முறையை ஏற்படுத்த முடிந்தது. பொருளாதாரத்தை பொறுத்த வரை குறிப்பாக பெட்ரோலை பொறுத்த வரை அதிகார சமூகங்கள் மீதான படிப்பினையை அளிக்கிறது. இவ்வாறாக பொருளாதாரமும், அறிவியலும் படைப்பாளிகளுக்கு சமூகத்தைப் பற்றி புரிந்து கொள்ளும் வழிமுறையை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்த இடத்தில் தான் நாவலாசிரியன் முன்னுக்கு வருகிறான்.

அல்ஜதீத்: அரசியலை நீங்கள் ஏன் ஜனநாயகத்திற்கு எதிரானது என்கிறீர்கள்? நாவல் இலக்கிய சொல்லாடல்களை விட அதிகம் அரசியல் சொல்லாடல்களை தானே உற்பத்தி செய்கிறது?

அப்துல் ரஹ்மான் அல் முனீப் : முதல் கேள்வியை பொறுத்த வரை நம்முடைய தலைமுறையானது கடரும் தலைமுறை என்றழைக்க சாத்தியமானது. நாம் மாற்றத்திற்கான மிகுந்த கனவுகளையும், அபிலாசைகளையும் சுமந்து கொண்டு திரிகிறோம். அதே நேரத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பானது மாற்றத்திற்கான வாகனத்தை கொண்டு வருகின்றது. நமக்கு வழிகளை விட கனவுகளே பெரிது. அரசியல் கட்சிகளின் எச்சங்கள் மாற்றத்திற்கான தூண்டலில் மிக பலவீனமாகவும், இயலாமை கொண்டவையாகவும் உள்ளன. அவைகளின் கருத்துக்களில் பழமை தன்மையும், வெறுமையும் ஒரு சேர கிடக்கின்றன. அவை சமூக இயக்கங்களுக்குள் இணைக்கப்படவில்லை. அவைகளிடம் அரசியல் செயல்திட்டங்களை விட வெறும் கோஷங்களே மிஞ்சி இருக்கின்றன. அவைகள் எதார்த்த சோதனையை எதிர்கொள்ளும் போது அவற்றின் பலகீனங்களும், தோல்விகளும் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்து விடுகின்றன. இரண்டாவது கேள்வியை பொறுத்தவரை நாவலாசிரியன் அரசியல் கட்சிக்கு வெளியே அரசியல் பார்வையோடு நகரக்கூடியவனாக இருக்கிறான். காலப்போக்கில் அவன் அதிகரிக்கும் அனுபவ வெளியால் சமூகத்தை வெறும் அரசியல் சொல்லாடல்களை விட உயர்ந்த மதிப்பீட்டிற்கு கொண்டு வருகிறான். இவ்வாறாக வாசிப்பு என்பது சமூகத்திற்கு மாற்றத்திற்கான உயர்ந்த உத்திகளை ஏற்படுத்தி கொடுக்கிறது. வரலாறு, பொருளாதாரம் மற்றும் சமூகவியலானது, சமூகத்திற்கு தனித்தோ அல்லது கூட்டாகவோ அதன் கனவுகள் மற்றும் அபிலாசங்களின் வெளிப்பாட்டு முறையாக மாறுகிறது.

அல்ஜதீத்: உங்கள் நாவல்களை வாசிப்பவர்கள் சந்தேகமின்றி ஒரு விசனகரமான அறிவுஜீவியின் நிலையான பிம்பத்தை அதில் கண்டடைகிறார்கள். நாவலாசிரியர் என்ற முறையில் மூன்றாம் உலக அறிவு ஜீவிகளின் இன்றைய பங்களிப்பு என்ன என்பதாக கருதுகிறீர்கள்?

அப்துல் ரஹ்மான் அல் முனீப்: இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவுஜீவிகள் சமூகத்தின் மிக முக்கிய பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியும் , இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமும் அரபு உலகில் அறிவு ஜீவிகள் இயக்கத்தின் சுடர் காலமாக இருந்தது. அதன் பிறகான கட்டத்தில் அரசியல் இயக்கங்களும் பிற அமைப்புகளும் அவர்களின் குரலை வெளிப்படுத்த அறிவு ஜீவிகள் தங்களுக்கு அவசியம் என்பதை கண்டுபிடிக்க தொடங்கினார்கள். மற்றொரு கட்டத்தில் அவை அறிவுஜீவிகளை தங்கள் இயக்கத்து பிரசாரர்களாகவும், ஆலோசகர்களாகவும் மாற்றுகிறது. அந்த இயக்கங்கள் நலியும் போது அவை அவற்றின் அறிவுஜீவிகளின் தோல்வியை வெளிப்படுத்துகின்றன. அதே நேரத்தில் அறிவு ஜீவி தான் மட்டுமே அரசியல் இயக்கங்களுக்கு மாற்றாக சமூகத்தை பிரதிபலிக்க முடியும் என கருதுகிறான். என்னுடைய தொடக்க நாவல்களில் நான் அறிவுஜீவிகளின் தோல்வியையும், சறுக்கலையும் சித்தரித்திருக்கிறேன்.

பிந்தைய கட்டங்களில் அறிவுஜீவி என்பவன் முழுமையாக நாவலும், வாழ்க்கையும் இல்லை என குறிப்பிட்டிருக்கிறேன். வாழ்க்கை இதை விட வளமானது. அறிவு ஜீவியின் பங்களிப்பு இதன் முப்பரிமாண தளங்களில் இருந்த போதும் அதன் ஒரு பக்கம் இருள் கவ்வும் போது அவனால் வாழ்க்கையின் மற்ற பகுதிகளை அணுக முடியாது. நடப்பு மூன்றாம் உலக அறிவுஜீவிகளை பொறுத்தவரை அவர்களின் பங்களிப்பானது சந்தேகமின்றி முக்கிய கேள்வியாகவும், கவனமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் இருக்கிறது. என்னை பொறுத்தவரை அறிவுஜீவி சமூகத்தின் அறிவு தோற்றத்திற்கான, மாற்றத்திற்கான முக்கிய பங்காளியாக இருக்கிறான். அவன் வெறுமனே தூண்டிலாக, பிரசாரகராக இல்லாமல் அவனின் கருத்தியல் தளத்தில் நின்று கொண்டு சமூகத்தை அணுக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால் அறிவுஜீவி என்பவன் அரசியல் இயக்கங்களின் பதிலியாக அல்லது பிரசார ஊடகமாக மாறக்கூடாது. மாறாக அவனின் நிலைபாட்டில் நின்று கொண்டு ஜனநாயக பூர்வமான கருத்தாக்கங்களை. பன்முக தளங்களில் பதிவு செய்ய வேண்டும். இது தான் இன்றைய மூன்றாம் உலக அறிவுஜீவிகளின் கடப்பாடு.

அல் ஜதீத்: உங்கள் நாவல்களில் நீங்கள் குறிப்பிடுவது "பாலத்தை கடந்து விடும் போது' கடந்து போன தோல்விகளும் அதன் வழிகளும். இது 1976ல், இருபது ஆண்டுகள் கடந்த பிறகும் அதே நிலைபாடு தானா?

அப்துல் ரஹ்மான அல் முனீப்: நான் சொன்னது "வறட்சியான ஏழு வருடங்கள்" அது இந்நூற்றாண்டு வரையோ அல்லது அதன் பிறகோ தொடரலாம். இது சவூதி அரேபியா அல்லது பிற தேக்க நிலை சமூகங்களுக்கு அதிர்ச்சியை தரலாம். அடுத்த சகாப்தங்களில் அங்கு பஞ்சம் காரணமாக உள்நாட்டு கலகங்கள் ஏற்படலாம். அரசியல் முரண்பாடுகள் இன்னும் அதிகப்படலாம். ஏற்கனவே அடிப்படைவாதம் அங்கு உச்சநிலையை அடைந்துள்ளது. இதில் முக்கிய பிரச்சினை என்னவென்றால் இதற்கான மாற்று செயல்திட்டங்களோ அல்லது வடிவங்களோ இல்லை என்பது தான். நாம் அத்தகைய நிலையில் சிவில் சமூகத்தையும், பன்முகப்பட்ட ஜனநாயக வடிவத்தையும் ஏற்படுத்த முனைய வேண்டும்.

அல் ஜதீத்: எழுபதுகளில் வெளிவந்த உங்கள் நாவலான The Eastern Mediterraneanல் பல விஷயங்களை கையாள்கிறீர்கள். அதே விஷயங்கள் 90 ல் வெளிவந்த நாவலான "now here or the Eastern Mediterranean one more time என்பதற்கும் அது திரும்புகிறது. ஏன் இந்த திருப்பம். புதிய நாவலில் அதை மறு பரிசோதனை செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?

அப்துல் ரஹ்மான் அல் முனீப் : Eastern Mediterranean யை எழுதும் போது எனக்கு நானே சுய தணிக்கையாளராக இருந்தேன். அந்த தருணத்தில் வேறு நாவல் எதுவும் வெளிவராத நிலையில் அதில் எனக்கு சில விடுபடல்கள் இருந்தன. குறிப்பாக அரசியல் சிறைகள் பற்றியதானது அது. இரண்டாம் நாவலான Now here அதனை ஓரளவு நிறைவு செய்தது. இன்னும் Cities of Saltக்கு திரும்பி கொண்டிருக்கிறேன். மொத்த நிலையில் அரசியல், சமூக, மனித நிலை போன்ற பல விஷயங்கள் நாவலுக்குள் நிரம்பியிருக்கின்றன. இதன் மூலம் நாவலாசிரியன் சாரத்தை குவியப்படுத்தும் பல விஷயங்களை அதில் வரைந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

அல் ஜதீத்: இன்றைய நம்முடைய எதார்த்த பிரச்சினை எண்ணெயில் தான் ஒளிந்திருக்கிறது என நீங்கள் நம்புகிறீர்களா?

அப்துல் ரஹ்மான் அல் முனீப்: நம்முடைய பிரச்சினை என்பது முத்தளத்திலானது. எண்ணெய், அரசியல் இஸ்லாம் மற்றும் சர்வாதிகாரம். இந்த அம்சங்கள் நவீனத்துவத்திற்கான பாதையை தேடிக் கொண்டிருக்கும் அரபு சமூகங்களுக்கு குழப்பத்தையும், நிலைகுலைவையும் ஏற்படுத்துபவை. எண்ணெயானது அரசியல் இஸ்லாத்தோடு இணைந்து அதிக அதிகார குவியலை ஏற்படுத்துகிறது. ஆப்கானிஸ்தான் இதற்கான உதாரணம். அதே நேரத்தில் எண்ணெயானது சர்வாதிகார சமூகங்களுக்கு மேலும் பலத்தையும், அதன் ஒடுக்குமுறைகளுக்கு மேற்தூண்டலையும் அளிக்கின்றது. இது பல கட்டங்களில் இணைந்து கொண்டு பிராந்தியம் முழுமைக்குமானதாக பரவுகிறது. அதே கட்டத்தில் மற்ற இயக்கங்களின் இயலாமை காரணமாக அவர்களால் இதை எதிர்கொள்ள முடியாமல் போகிறது.

அல் ஜதீத்: உங்கள் நாவல்களில் அடிக்கடி வரும் சொல்லாடலான "எங்குமில்லை" என்பது இன்னும் சந்தேகமாகவே இருந்து கொண்டிருக்கிறது. இது எதை விவரிக்கிறது?

அப்துல் ரஹ்மான் அல் முனீப் : இடங்களின் சரியான விஷயம் என்பது ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கிடையேயான உறவு முறையை விவரிப்பதாகும். அது சார்பாகவும், விளிம்பாகவும், முக்கிய மற்றும் இருக்கிறது. அரசியல் சிறைகளை பற்றி குறிப்பிட்டேன் என்றால் அது ஈராக்கிலோ அல்லது சவூதி அரேபியாவிலோ இருக்கிறது என்பதல்ல. இவைகள் அட்லாண்டிக் முதல் வளைகுடா வரை இருந்தாலும் அவற்றின் சூழலும், வழியும் தீர்மானகரமான சக்திகளாக இருக்கின்றன. ஏனென்றால் எல்லோரும் அந்த சூழலின் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். என்னுடைய சுய வாழ்வு மற்றும் இயக்க அனுபவங்களின் தாக்கம் சமூகம் பற்றிய பிரத்யேக வாசிப்பை ஏற்படுத்தி அவற்றை பற்றிய படைப்பு கருதுகோளுக்கு என்னை வரவழைத்தது. மேலும் இந்த சாரங்கள் என்னை ஓர் இடத்திற்கும் மற்ற இடத்திற்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதை கண்டுபிடிக்க வைத்தது.

அல் ஜதீத்: மேற்கண்ட எங்கள் கேள்வியின் நீட்சியில் லெபனான் பற்றி.. அதை எப்படி அதிகார சமூகத்திலிருந்து வித்தியாசப்படுத்தி பார்க்கிறீர்கள்

அப்துல் ரஹ்மான் அல் முனீப்: லெபனான் உள்நாட்டு போரை பற்றி நாம் படிக்கும் போது 1975 லிருந்து 90 களின் முந்தைய பகுதி வரை நடந்த போரானது அந்த சமூகம் நவீனமயமாதலின் எதார்த்த அர்த்தத்தையும், அதன் கால உறவு முறையையும் நமக்கு அளிக்கிறது. அதன் அடுக்கு முறைக்கு வெளியே புராதன மற்றும் பழைய சமூகங்களுக்குரிய மோசமான பின் தங்கிய நிலையையும், பிளவுகளையும் கொண்டு விளங்குகிறது. இந்த அர்த்தத்தில் ஒரு வேளை அதன் வடிவத்திலும், தோற்றத்திலும் ஓர் இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு வித்தியாசம் வரலாம். ஆனால் பதூயீன்களை பொறுத்தவரை எண்ணெய் வளமிக்க பாலைவனங்களோடு அவர்களின் வாழ்க்கை முறை சம்பந்தப்பட்டிருக்கிறது. அங்கிருந்து அது எல்லா அரபு நகரங்களுக்கும் இடம்பெயர்ந்திருக்கிறது. இந்த சக்திகளின் தீர்மான முறை வெறும் அரசியல் மட்டுமல்ல, கலாசாரம் மற்றும் வாழ்க்கை வழி முறை போன்றவற்றோடு இயைந்திருக்கிறது.

அல் ஜதீத்: உங்களின் அம்மான் (ஜோர்டானின் தலைநகரம்) பற்றிய புத்தகத்தில் நீங்கள் நகரம் பற்றிய சுய சரிதையை போலி செய்வதாக இருக்கிறது. ஆனால் இந்த கதை 1940 முதல் பாலஸ்தீன் புலப்பெயர்வு வரை நீள்கிறது. ஏன் இந்த சுய சரிதை? இது வரலாற்றிற்குள் விவாத தன்மையை ஏற்படுத்த கூடியதா? பாலஸ்தீனியர்களின் அம்மான் புலப்பெயர்வு பொருளாதார மற்றும் அதன் கட்டமைப்பின் பிறப்பிற்கு வழி ஏற்படுத்துகிறதா?

அப்துல் ரஹ்மான் அல் முனீப்: இது பன்முக பரிமாணங்களை கொண்ட கேள்வி. முதலில் நான் நவீன இலக்கியத்தில் நகரம் பற்றிய அதிக எழுத்துக்களை கண்டுபிடிக்க விரும்பவில்லை. நகர வாழ்க்கை பற்றிய பல பிரச்சினைகள் அது ஆவணமாக்கபடாத சூழலில் கொஞ்சமாக மறைய தொடங்கி கால ஓட்டத்தில் அழிந்து விடுகிறது. நகரம் பற்றிய என்னுடைய சுய சரிதையானது அநேக படைப்பாளிகளின் தூண்டலாக விளங்கும் நகரமும், இளமைக்காலமும் குறித்ததாகும்.

அல் ஜதீத்: சுய சரிதைகள் நாவல்களில் எந்த எல்லை வரை பங்களிக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?

அப்துல் ரஹ்மான் அல் முனீப்: இது இரண்டு வித்தியாசங்கள் மூலம் சாத்தியமாகிறது. ஒன்று நாவல் மற்றும் பிற எழுத்து முறை. நாவலில் இதன் பங்கு அல்லது தாக்கம் மிகக்குறைவே. நாவலின் தன்னிலையில் இதன் குணாதிசயங்கள், வாழ்க்கை ஓட்டங்கள் வருகின்றன. ஒவ்வொரு ஆசிரியனும் அவன் எதை எழுதுகிறானோ அதன் சிறு பரப்பில் உள்ளாக இருக்கிறான். நாவல்களில் அறிவுஜீவீயின் குணாதிசயம் என்பது அவனின் வாழ்க்கை ஓட்டத்தை அர்த்தப்படுத்துவதாக இருக்க கூடாது. அதற்கு எதிர் நிலையில் சில குணாதிசயங்களை மட்டுமே ஆசிரியன் விமர்சிப்பதாக இருக்க வேண்டும். புனைவு எழுத்தின் எல்லையானது அதன் இயல்பான வேட்கைகளையும், கனவுகளையும் கொண்டது. இதில் சுய சரிதை என்பது நாவலுக்கு அடிப்படையான தடையாக இருக்கிறது. ஒரு தடவை நான் சொன்னேன். " ஆசிரியன் தன் நாவலை சுய சரிதையாக கருதி நகர்த்தி கொண்டு சென்றால் அவனால் எதையுமே அடைய முடியாது. இது வெறும் உணர்ச்சி பெருக்கங்களையே ஏற்படுத்தும்." என்னுடைய எழுத்துகள் இந்த எல்லையிலிருந்து வெளி நகர்ந்து தான் வந்திருக்கின்றன.

அல் ஜதீத்: மர்வான் குசப் பாஸியை (சிரியாவின் ஓவியர்) பற்றிய உங்கள் எழுத்துக்கள்....

அப்துல் ரஹ்மான் அல் முனீப்: நான் முதலில் நவீன ஓவியங்களை விரும்புபவன் என்ற முறையில் அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்கிறேன். ஓவியத்தின் ஆக பெரும் விரிவெல்லையானது இதுவாக தான் இருக்க முடியும். இலக்கிய படைப்பாளர்கள் ஓவியங்களை காண்கிற போது ஒருவித நுண்வாசிப்பு அனுபவத்தை அடைகிறார்கள். நாவல் இவற்றை கடக்கும் புள்ளியாக இருக்கிறது. மர்வான் குசப் என்னை பொறுத்தவரை இதை தான் பிரதிபலித்தார். அரபுலகில் ஓவியங்களுக்கு இருக்கும் வரவேற்பின் எல்லையை தாண்டியே அவரின் பயணம் இருந்தது. ஒரு நாவலாசிரியனுக்கு நாவலோடு உறவு ஏற்படுவது மாதிரி ஓவியங்களோடும் ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

Pin It