தோழர் இசாக் அவர்களின் நட்பிலும் தோழமையிலும் மகிழ்ந்திருந்தபோதும், அவருடைய கவிதைகளில் தோயும் வாய்ப்புகள் என்னைவிட்டுத் தள்ளியே நின்றன. ஏற்கனவே வெளிவந்திருந்த தொகுப்பு என்னிடம் வழங்கப்பட்டிருந்த போதும், அதன் வாசிப்பை நான் தள்ளியே வைத்து வந்துள்ளேன். கவிதைகளின் மீது கொண்ட அன்போ, மதிப்போ தெரியவில்லை, எந்த ஒரு கவிதையையும் பட்டென அணுகும் துணிவைத் தந்ததில்லை. நண்பர் மீது கொண்ட அன்பு, அத்தொகுப்பின் உள்ளடக்கத்திற்கு அப்பாற்பட்டது. சில சமயங்களில், வெறும் வரிகளால் கனக்கும் ஒரு தொகுப்பு, என்னைச் சித்திரவதை செய்துவிடுவதுண்டு. நேரடியாகச் சொல்லும் கணங்கள் நட்பின் இழைகளை அறுத்து விடக்கூடியவை. இதனால் பல நேரங்களில் முன்னுரைகளுக்கோ, மதிப்புரைகளுக்கோ வரும் தொகுப்புகளைத் தொடாமல் பல நாட்கள்  ஏன்  பல மாதங்களைக் கடத்தியுள்ளேன்.

ஒரு கவிதைத் தொகுப்பைப் படிப்பதற்குரிய மனநிலையும் அவசியம். இயந்திரகதியில் எந்த இலக்கியத்தையும் படிக்க முடியாது. கவிதைக்கு இன்னும் கூடுதலான உணர்வு வேண்டும். சில சமயங்களில்  ஒரு படைப்புக்கான கால அவகாசமும், உணர்வும் கவிதையைப் படிப்பதற்கும் தேவைப்-படுவதை அனுபவித்திருக்கிறேன். இசாக்கின் "துணையிழந்தவளின் துயரம்' என்ற இத்தொகுப்பை என் மேசையில் விரித்தபோது, என்றுமில்லாத அவல உணர்வுகளால் அல்லாடினேன். ஈழத்தமிழர்களின் துயரம், எனது எல்லா வகையான இலக்கிய முயற்சிகளையும் குலைத்தது. படிப்பு, படைப்பு எதிலும் மனம் ஈடுபடவில்லை. காலம் மனத்தை இயல்பு நிலைக்குத் திருப்பக் கூடியது. துயரத்தை ஆற்றக் கூடியது. இப்பொழுது கிட்டத்தட்ட ஒர் ஆறுதலான மன நிலையில் இருக்கிறேன். எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்பதன்று இதன் பொருள். எல்லா நடப்புகளையும் எதிர் கொள்ள வேண்டும் என்கிற மனநிலை. எல்லாவற்றையும் தெளிவுபடச்சிந்தித்து எழுத வேண்டும் என்கிற மனநிலை.

இசாக்கின் "துணையிழந்தவளின் துயரம்' ஒரு வகையில் புலப்பெயர்வின் துயரத்தின் வெளிப்-பாட்டைத் தான் கூடுதலாகப் பாடுகிறது. எனினும் இதை ஈழம் உள்ளிட்ட பிற நாடுகளில் நிகழும் வன்முறையின் விளைவான புலப்பெயர்வோடு ஒப்பிட முடியாது. ஈழத்தில் நிகழ்வது வேருடன் பெயர்தல். கூடு இழக்கும் கொடுமை. தமிழகத்தில் அப்படிப்பட்ட கொடுமை நிகழவில்லை. 

துபாயில் பிழைக்கப் போனவரின் கதையைச் சொல்லுகின்றன பெரும்பாலான கவிதைகள்.

"வாழ்க்கையில்

விடுமுறை நாட்கள் வரும் போகும்

அனைவருக்கும்.

விடுமுறை நாட்களில் தான்

வந்து போகிறது

வாழ்க்கை

நமக்கு.'

மிக எளிமையாகச் சொல்லப்பட்ட இந்தக் கவிதையில் பாடுபொருளாவது வாழ்க்கைதான். அந்த வாழ்க்கை நெடும்பிரிவால் அலைக்கழிகிறது குறுகிய நாட்களில் குமிழியிடுகிறது.

"அந்த மூன்று நாட்கள் பற்றியான

அங்கலாய்ப்புகளால்

நிரம்பி வழிகிறது பெண்களுலகம்.

ஆண்டு முழுவதும் மூன்று நாட்களான

சோகத்தை

யாரிடம் சொல்லியழுவாள்

அவள்.'

இப்படி பொருள்வயின் பிரிதலை, புதிய சூழல்களில் வைத்துப் பேச முனைகிற கவிதைகள் நிரம்ப. இந்தப் பிரிவு  ஒரு வன்முறை அரசியலின் விளைவு அன்று என்று நமக்குத் தோன்றும். ஆனால், இப் பிரிவுகளின் பின்னணியில் உள்ள கண்டுணரப்படாத அரசியல், பொருளாதார சமுதாய வன்முறைகளை யார் பேசுகிறார்?

ஆயுதத்தால் மட்டுமே வன்முறையை அடையாளப் படுத்தும் மரபு நம்முடையது. அதனால் வன்முறையின் உண்மை முகத்தை நாம் காணத்தவறுகிறோம். பல சமயங்களில் ஆயுதம் ஏந்தாத இருப்புகள், ஆயுத வன்முறையைக் காட்டிலும் கொடுமையும் கபடமும் நிறைந்தவை.

"இளமை புறங்கொடுத்து' இசாக்கை ஒத்த இளைஞர்கள், பாலையின் கானல் கரைகளில் ''சுருண்டு விழுவதன் பின்னுள்ள ஒரு பொருளாதாரமுறை, அதைக் காப்பாற்றும் அரசியல் முறை வன்முறை சாராதது என்பது எத்தனை பெரிய ஏமாற்றுக் கொள்கை? புலப்பெயர்வின் பின்னுள்ள இந்த வன்முறை இயக்கத்தை இசாக்கின் கவிதைகள் நேரடியாகப் பேசாவிடினும், நுட்பமாகப் பதிவு செய்கின்றன.

"கட்டடக் கட்டுமானப் பணியின்போது

கோடையின்

கொடும் வெயில் தாங்கமுடியாமல்

சுருண்டு விழுந்து

செத்துப் போன

கூலித்

தொழிலாளி

கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.'

என்று ஒரு தற்செயல் நிகழ்வின் துயரத்தைச் சாதாரணமாகச் சொல்லித் தொடங்கும் இசாக்  அடுத்துக்காட்டும் காட்சி இத்தற்செயலின் கண்டுணரப்-படாத பயங்கரத்தைக் காட்டுகிறது அக்காட்சி..

"கோடை வரும்முன்

தனி வானூர்தியேறி

தூரத்து

குளிர்தேசம் சென்று ஓய்வெடுக்கத்

துபாய் இளவரசனின்

பந்தயக் குதிரையா இவன்?'

மானுடம் எவ்வளவு மலிவாய்ப் போய்விட்டது! இந்த உணர்தல்தான் "மக்கட்பண்பு' என்று வள்ளுவரால் ''சுட்டப்படுகிறது. பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றும் பண்பு. ஆனால் இசாக் உணரும் வலி, துபாய் இளவரசனுக்கு ஏன் இல்லாமற் போனது?

தமிழீழத்தில் பயணம் செய்த போது இப்படி ஒரு காட்சியைக் கண்டு நானும் அதிர்ந்தேன். இதை வேறொரு கட்டுரையில் பதிவும் செய்துள்ளேன். மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களின் லாயனுக்குச் சென்றோம். கூட வந்த மலையக நண்பர் ஒருவர் சொன்னார்: தொழிலாளர்களின் இந்த லாயன் ஒரு காலத்தில் வெள்ளைத்துரைகளின் குதிரை லாயமாக இருந்ததாம். அங்கு ஒரு வீட்டுக்குள் நுழைந்து பார்த்தோம்.

அதை வீடு என்று சொல்வது ஒப்புக்குத்தான். நுழைந்தபோது உள்ளே இருட்டாக இருந்தது. கால் வைத்த நான் இடறிவிழப்பார்த்தேன். அந்த இருட்டுக்குச் சில நிமிடம் பழகிய பிறகு அங்கு இருந்தவை புலப்பட்டன. பத்துக்குப் பத்து என்ற அளவில் இருந்த ஒரு கெமரா அது. அறையை அப்படித்தான் சொல்கிறார்கள். அதில் நடப்பதற்கு ஓர் ஒன்றரை அடி வழி விட்டு, அந்த அறையை இடுப்பளவு உயரமுள்ள ஒரு களிமண் சுவர் பிரித்திருந்தது. அந்தச் சுவருக்கு இருபுறமும் இரண்டு மண் அடுப்புகள் "தூர்ந்து' போய்க்கிடந்தன. அடுப்பை அடுத்த இப்பக்கமும் அப்பக்கமும் பழந்தலையணைகள், சிதைந்தபாய்கள் கிடந்தன.

அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரும் நாற்பது வயதுத் தோற்றமுள்ள மற்றொருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். இரண்டு பெண்களும் குழந்தைகளும் சூழ நின்றார்கள். "இதில் யார்குடி இருக்கிறார்கள்?'' என்று கேட்டேன். நாற்பது வயதுக்காரர் பெரியவரைச் சுட்டிக்காட்டி: "எங்கள் இரண்டு பேரின் குடும்பமும் இருக்குதுங்க'' என்றார். எனக்கு அதிர்ச்சி! இந்தப் புறாக்கூட்டுக்குள் இத்தனை மனிதர்களா? மீண்டும் கேட்டேன். "எவ்வளவு காலமாக?'' முதியவர் சிரித்தபடிச் சொன்னார்: "நாங்க பொறந்ததே இங்கேதான்'' எனக்கு எதுவும் பேசத்-தோன்றவில்லை. வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது மலைச்சரிவுகளில் தேயிலைச்செடிகள் "கிராப்' வெட்டிக்-கொண்டதுபோல் சீராகப் பசும் முகம் காட்டிக்-கொண்டிருந்தன.

அங்கிருந்து "நுவரேலியா' என்ற இடத்துக்குப் போனோம். அங்குள்ள குதிரை லாயத்துக்கு அழைத்துச்சென்றார்கள். பல்வேறு குதிரைகள் பளபளவென்ற தோல்களில் மினுங்கிக்-கொண்டிருந்தன. ஒவ்வொரு குதிரைக்கும் பத்துக்குப்பத்தடி குறையாத வெளியில் ஒரு தடுப்பு இருந்தது. வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்த பந்தயக்குதிரைகள் என்றார்கள்.

மலையகத்தில் சென்றவிடமெல்லாம் தேனீர் பரிமாறப்பட்டது. சுவையான தேனீர்! அந்த லாயனில் அடைக்கப்பட்ட மனிதர்கள்கூடப் புலம்பெயர்ந்தவர்கள் தாம்! இசாக்கின் அரபுக்குதிரையைப் படித்த போது எனக்கு நுவரேலியாக் குதிரைகள் தாம் நினைவுக்கு வந்தன.

இசாக்கின் முந்திய கவிதைகளில் ஒருவகையான காதல் தகிப்பு இருந்தது. அந்தத் தகிப்பு புனைவியல் பாங்கில் வெளிப்பட்டிருந்தது. இந்தப் புனைவியல் பாங்கு, கவிதை எழுதத்தொடங்குபவரையும் ஏமாற்றும்; கவிதையின் தொடக்க வாசகரையும் ஏமாற்றும். ஏனெனில் அக்கவிதைகளில் வாழ்வனுபவம் பதிவு செய்யப்படுவதைவிடக் கற்பனை அழகே கூடுதலாக அழுந்தி இருக்கும். "மௌனங்களின் நிழற்குடை'யில்

"மிகவும்

ஆபத்தானதென்கிறார்கள்

புதைகுழி

அடீ

உன்

கன்னக்குழியைவிடவா?'

என்று எழுதுவது ஒரு புனைவுதான். இதில் வெறுங்கற்பனை தெறிக்கும் அளவுக்கு, அனுபவம் தலைநீட்டவே இல்லை. இதில் இசாக்குக்குப் பல பெரிய கவிஞர்களே முன்னோடிகள்!

ஆனால் இந்தத் "துணையிழந்தவளின் துயரம்'   தொகுப்பில் இசாக் விடுபட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. இவருக்கு இயல்பாக அமைந்துவிட்ட எளிய சொல்லாட்சிதான் இவரை இப்படி மீட்டுவந்திருக்கிறது.

"மூன்று மாதம் முழுதாக வீட்டில் தங்காமல் மறுபயணத்துக்குப் புறப்படுகிறான் தலைவன்.' அவன் பயணம் அப்பா அம்மாவுக்கு, அக்கா தங்கைகளுக்கு.. எல்லோருக்கும் தாங்க முடியாத சோகந்தான். புறப்படும் அன்று / சோக.. சோகமாகக் காட்சியளிக்கிறார்கள்/வழியனுப்ப வந்தவர்களும்கூட/.. இப்படி ஒவ்வொருவர் மீதும் கவியும் துன்பங்களைச் சித்தரித்து வந்தவர், யதார்த்தத்தின் வலியுடன் கவிதையை இப்படி முடிக்கிறார்:

"என்ன செய்ய

துபாய் போகாமல் இருந்துவிட்டாலும்

மகிழ்ச்சியடையப் போவதில்லை

எவரும்!'

இந்தத் தலைவன் போகிறான் என்பதைவிடத் துரத்தப்படுகிறான் என்பதுதான் உண்மை. துரத்துபவர்கள் எல்லாம் வேறு யாருமில்லை, சொந்த ரத்தமே! போவதில் அவனுக்கும் மகிழ்ச்சி இல்லை. துரத்துவதில் அவர்களுக்கும் உடன்பாடில்லை. எனினும் இது நிகழ்கிறது.. ஏன்? இங்குதான் முன்னரே குறிப்பிட்ட கண்டுணராத அரசியல், பொருளாதார வன்முறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி எழுதுவதற்குக் கற்பனை பயன்படாது! அனுபவ முதிர்ச்சிதான் பயன்படும். இசாக் இப்படிப்பதிக்கும் அனுபவமுத்திரைகளால் இத்தொகுப்பே கனத்துக் கொண்டிருக்கிறது.

பிரிவின் வலிமட்டும் இங்கு பாடுபொருளாக-வில்லை. வெவ்வேறு சூழல்களில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளும் கவிதைகளாகி உள்ளன. நிறையச்-சொல்லலாம். ஒரு சான்று மட்டும் இதோ:

"சிறப்புப் பிரார்த்தனையன்றிற்குத்

தலைமையேற்ற போதகர்

ஒலிவாங்கியின் உதவியால்

நள்ளிரவைத் தாண்டியும்

மறுமை நாளின்

சிறப்பைத்

தெளிவாகச் சொல்லிக் கொண்டிருந்தார்

பகலெல்லாம்

உறங்கப்போகிற உற்சாகத்தில்.

மறுநாள்

காலை

பணிக்குப் போகவேண்டுமென்கிற

கவலை

என்னைப்போல பலருக்கு

இறைவன்

ஆசிர்வதிப்பானா?

சபிப்பானா?'

இதைப் படிக்கும் போது ஒரு மெல்லிய புன்னகைதான் என் உதடுகளிலும் நெளிந்தது. இத்தொகுப்பில் இப்படி பல இடங்களில் புன்னகைத்துச்செல்லலாம். துயரம், விழுமியங்களின் போதாமை மீதான ஒரு கிண்டல்  எதிலும் மிகையில்லாமற் சொல்கிற ஒரு போக்குத்தான் இத்தொகுப்பில் ஊடாடுகிறது. குறைகளே இல்லை என்று சொல்ல முடியாது எளிமையாகச் சொல்லும் முயற்சியில் சில இடங்களில் வெறுமையாக நிற்கிற விபத்தும் நிகழ்ந்து விடுகிறது. எனினும் இந்தக் குறைகள் மிகவும் குறைவு.

ஓரிடத்தில் தம்மைப் பற்றியே பேசுகிறார். எந்த ஒரு பிரகடனமுமில்லாமல்.

"நவீன யுக்திகளோடு

வாழ்வனுபவங்களின் பொருளுணர்த்தும் கவிதை

இவனுடையதென அடையாளப்பட

இச எழவுகள்

எதுவுமறியாவிட்டாலும் இளித்து நிற்க வேண்டும்.

அப்படியிருக்க அறியாதவன்

நான்.

-இப்படிப்பல அறியாததுகளைச் சொல்லி, தான் கவிஞனுக்குரிய தகுதி இல்லாதவர் என்று சொல்லும் போது- கவிஞர்கள் அடிக்கும் 'லூட்டி'யை நினைவுப்படுத்திக்கொண்டே வருகிறார். கவிதை இப்படி முடிகிறது:

'எந்த எல்லைக்குள்ளுமில்லாத என்னை

கவிஞனென்று சொல்லுகிற துணிவு

எவருக்குண்டு

என் நண்பர்களைத் தவிர.'

தோழர் இசாக் அவர்களே!

தோழமை என்ற பரிவால் அல்ல-

உங்களுடைய கவித்துவத்தால் சொல்லத்துணிந்தேன்

உங்களை ஒரு கவிஞன் என!