"எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று மகாகவி பாரதியார் பாடியதை உறுதி செய்வது போல் மலேசியாவில் ஆண்களோடு பெண்களும் அனைத்து துறைகளிலும் ஈடுபாடு கொண்டு முன்னேறி வருகிறார்கள்.

தமிழ் இலக்கியத் துறையிலும் பெண்களின் பங்களிப்பு கணிசமான அளவில் வளர்ச்சி கண்டே வந்துள்ளது எனலாம்.

இலக்கியத் துறையின் மீது நம் பெண்களுக்கு அதிக ஆர்வமும் அக்கறையும் இயல்பாகவே இருக்கின்றது.

படைப்பிலக்கியங்கள் அனைத்துமே மக்களின் நலன் கருதி நன்னோக்குடன் படைக்கப் படுதலே சிறப்பு என்பதைக் கருத்தில் கொண்டு பெண்கள் தங்கள் எழுத்தை மிகவும் சிரத்தையுடன் படைத்துள்ளனர்.

பெண்களின் எழுத்துத் துறை ஈடுபாடு அன்று தொட்டு இன்றும் இனி என்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இன்று பெண் படைப்பாளிகளின் சிந்தனைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை இலக்கிய வடிவங்களின் வழியாக அறிய முடிகின்றது.

இது பெண்ணிய இலக்கிய சிந்தனையின் மலர்ச்சிக் காலம் என்றும் சொல்லலாம்.

மலேசியாவில் 100 ஆண்டுகளுக்கு முன்னரே படைப்பிலக்கியம் தோன்றியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சிறுகதை கட்டுரை, கவிதை, நாவல், நாடகம் போன்ற இலக்கியப் பிரிவுகள் மலேசிய மண்ணில் ஆர்வமுடன் படைக்கப் பட்டு வந்தாலும் சிறுகதை இலக்கியமே ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி வளர்ந்துள்ளதாகப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவைப் பொறுத்தவரை பெண்களில் பலர் பெரும்பாலும் சிறுகதை எழுத்தாளர்களாகவே அறியப் படுகின்றனர்.  எனினும், மற்ற இலக்கியப் பிரிவுகளிலும் தடம் பதித்துள்ளனர்.

மலேசியத் தமிழ் இலக்கியத்தின் புதிய தொடக்கம் 1946க்கும் பின்னரே என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

1950ஆம் ஆண்டு வாக்கில் தமிழ் நேசன் ஞாயிறு பதிப்பில் கதை வகுப்பு நடத்தத் தொடங்கி, சு.நாராயணனும், பைரோஜி நாராயணனும் எழுத்தார்வம் உள்ளோர்க்குக் கதை, கவிதை, உரை நடை, நாடகம் போன்ற பல்வேறு துறைகளிலும் பயிற்சி அளித்துள்ளனர்.

பயிற்சிக்குப் பின்னர் தேர்வு செய்யப் பட்ட எழுத்தாளர்களில் ஆறு பெண்களும் இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அதன் பின்னர் நடை பெற்று வந்த சிறுகதை எழுதும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களில் திருமதி கு.நா.மீனாட்சி, மு.தனபாக்கியம், கமலச்செல்வி இ.மேரி என்ற உஷா நாயர் ஆகியோரும் இருந்தனர்.

இவர்களில் திருமதி உஷா நாயர் கவிதைத் துறையில் புகழ் பெற்று விளங்கியவர்; தமிழ்மணி பட்டம் பெற்றவர்; மரபுக்கவிதைகள் எழுதியவர்;  இலக்கிய நிகழ்ச்சிகளில் தலைமையேற்று வழி நடத்தியுள்ளார்;  செந்தமிழில் சிறப்புற பேசும் ஆற்றல் கொண்ட தமிழாசிரியர் திருமதி உஷா என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தேசிய விடுதலை, நாட்டுப் பற்று, மொழிப் பற்று மற்றும் நன்னெறிக் கோட்பாடுகள் போன்ற கருப் பொருள்களை மரபுக் கவிதைகளில் பாடியவர். சுமார் 30 ஆண்டு காலம் சோர்வின்றி இலக்கியப் பணியைச் செம்மையாகச் செய்துவிட்டு மறைந்தவர்; இன்றும் இலக்கிய உலகில் பேசப்பட்டு வருபவர்; மறையாது நிலைத்திருப்பவர் திருமதி உஷா நாயர்.

தொடர்ந்து எழுதி வந்தவரான திருமதி கமலாட்சி ஆறுமுகம், கதை, கட்டுரை, நாவல், வானொலி நாடகம் போன்ற படைப்புகளின் மூலம் பிரபலமானவர். அரசியலிலும், சமூகப் பணிகளிலும் ஈடுபட்டவர் இரு நூல்களை வெளியிட்டு தனது இலக்கியப் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளார்.

அடுத்த காலக்கட்டத்தில் வந்த பெண்களில் பலரும் சிறுகதையோடு, கட்டுரை, கவிதை, குறுநாவல், நாவல், வானொலி, நாடகங்கள், சிறுவர் இலக்கியம், தொடர் கதைகள் போன்ற பல்வேறு பிரிவுகளிலும் தங்களின் படைப்புகளைப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது இளம் எழுத்தாளர்கள் புதுக் கவிதை எனும் உரைவீச்சில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்று களஞ்சியம் படைத்துள்ள இலக்கியக் குரிசில் மா. இராமையா அவர்கள் இலக்கியத் துறையில் பங்காற்றியுள்ள சில பெண் படைப்பாளர்களை வரிசையிட்டு காட்டியுள்ளார்.  எனினும், அவர்களில் பலர் எழுத்துத் துறையினின்றும் விலகியுள்ளனர்.  

நம் பெண்களில் பலர் தொடர்ந்து எழுதாமைக்குப் பல காரணங்களைக் கூறலாம்.  இலக்கிய அரும்புகள் ஆய்வு நூலைப் படைத்திருக்கும் முனைவர் இலக்குமி மீனாட்சி சுந்தரம் அவர்கள் எடுத்துக் கூறியிருக்கும் காரணங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.

பெண்கள் திருமணத்துக்குப் பின்னர், எழுத்துலகையே மறக்க வேண்டிய சூழ்நிலை அமைந்துவிடுகின்றது.

மலேசிய இலக்கியத் துறை பத்திரிகைகளை நம்பியே இருக்கிறது.  ஆனால், எழுத்தாளர்களுக்கு போதுமான ஊக்கத் தொகை அளிக்கப்படுவதில்லை. எழுத்தாளர்களின் எழுத்துப் படிவங்கள் நூல்களாக வெளியிடப் படுவது மிகவும் அரிது; நூல்களை வாங்கிப் படிப்பவர்களும் குறைவு.

அதனால், எழுதுபவர்களின் ஊக்கம் குறைகிறது; எழுதும் ஆர்வமும் தடைபட்டுப் போகின்றது.

மேலே குறிப்பிடப் பட்டவாறு சிக்கல்கள் பல நிறைந்த இக்கட்டான சூழ்நிலையில் ஓரிருவரே எதிர்நீச்சலுடன் தொடர்ந்து எழுதி வந்துள்ளனர் என்கிறார் முனைவர் இலக்குமி.

அவர் சொல்லும் கருத்துகளும் ஏற்புடையதே!  நான் எழுதிய நூற்றுக்கணக்கான கதைகளும், தொடர்களும், சிறுவர் இலக்கியமும் நூல் வடிவம் பெறாமையால் அடையாளம் இன்றி மறைந்து போயின.

எழுதத் தொடங்கி 28 ஆண்டுகளுக்குப் பின்னரே என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான "தாய்மைக்கு ஒரு தவம்' நூலை வெளியிடும் துணிவு பிறந்தது; அதுவே இன்றும் என்னை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது.

ஆர்வமுடன் எழுதத் தொடங்கும் பெண்கள் மின்னல் வேகத்தில் மறைந்து போவதற்கு உயர்கல்வி மொழி அறிவு ஆழமான இலக்கிய இலக்கணம் கிட்டாமல் போயிருப்பதும் தடையாகியிருக்கலாம்.

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு ஏழாம் ஆண்டுவரை தமிழில் கற்கும் வாய்ப்பு இருந்தது. பெண்கள் தங்களுக்கு கிட்டிய ஆரம்ப பள்ளியின் மொழி அறிவைக் கொண்டு வாசிக்கும் பழக்கத்தை, கதைப் புத்தகங்கள் வழியே வளர்த்துக் கொண்டனர். அதுவும் சில பெண்களுக்குத்தான் அவ்வித வாய்ப்பும் வசதியும் கிடைத்தது எனலாம்.

பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நாளிதழ்கள், வார,மாத இதழ்களை வாசிப்பதுதான் விருப்பமான பொழுது போக்காக இருந்தது. அதன் வழி மொழியறிவை வளர்த்து கொள்ளவும் முடிந்தது.

இப்படி வாசிக்கும் பழக்கமே அவர்களை இலக்கியத் துறையின் பால் ஈடுபாடு கொள்ளச் செய்கிறது. தங்களுக்குக் கிட்டிய மொழியறிவைக் கொண்டு எழுதும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு எழுதத் தொடங்கி, இலக்கியப் பணியாற்றியவர்கள் சிலர்.

உயர்கல்வி கிட்டாத நிலையில் ஆர்வத்தூண்டலால் எழுத வருபவர்களுக்கு வழிகாட்டலோ வாய்ப்புக்களோ இன்றிச் சோர்வடைந்து முடங்கிப் போவதும் உண்டு.  தமிழாசிரியர்களாகப் பயிற்சி பெற்ற வெகுசிலர் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.

இது தொடக்கக் கால நிலை.!

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு

இன்று பெண்களுக்கு உயர்கல்வி பெறும் வாய்ப்பும் வளமும் பெருகியுள்ளதால், தொடர்ந்து எழுதவும் நூல் வெளியீடு செய்யவும் ஓரளவு இயல்கின்றது எனினும், அதிக அளவில் நூல் வெளியீடு காணவில்லை என்பதும் கவலை தரும் நிலையே.

பல சிரமங்களுக்கிடையே ஆர்வமுடன் எழுதும் பெண்களின் இலக்கியப் பணி அடையாளமின்றி மறைந்து போய்க் கொண்டிருக்கிறது.

சமூக அமைப்புகள் மற்றும் மொழித்துறை சார்ந்தவர்கள் ஆலோசனைகள் கூறி ஆவன செய்தால் நம்மொழிக்கு ஆற்றிய பணியாகும்.

தற்போது சில பெண்கள் தங்களின் படைப்புகளை நூல் வடிவில் கொண்டு வருவதில் அக்கறை  கொண்டுள்ளனர்.  ஆனாலும், அவை வாசகர்களைச் சென்றடையவதாகத் தெரியவில்லை. விமர்சனம் செய்பவர்கள் கூட அவற்றை தேடி எடுத்துக் குறிப்பிடுவது இல்லை.  அத்தகையதொரு அலட்சியம் நிலவுகிறது இங்கே.

இரண்டாவது காலக் கட்டமாக குறிப்பிடப்படும் 1956முதல் 196670 வரையிலான காலத்தில்தான் பல பெண் படைப்பாளர்கள் உருவாகி வந்துள்ளனர். தரமான படைப்புகள் மூலம் நிலையான இடத்தையும் பிடித்துள்ளனர். அவர்களின் பெயர்களே இன்றும் நினைவில் நிற்கின்றன எனலாம்.

சிலர் சோர்வின்றி இன்றுவரை எழுதிக் கொண்டு வருகின்றனர்; சிலர் காலப் போக்கில் எழுத்துலகில் இருந்து காணாமல் போய்விட்டனர்.

1956  தொடக்கம், ஈடுபட்டவர்களில் சிலர், திருமதி அன்னலெட்சுமி மயில்வாகனம், அன்னக்கிளி ராசையா, திருமதி பரணி, சரஸ்வதி அரிகிருஷ்ணன் போன்றவர்களை குறிப்பிடலாம்.

1957இல் தொடங்கிய ந.மகேசுவரி. அவரைத் தொடர்ந்து வந்தவர்களில் திருமதி துளசி, இராஜம் கண்ணன், நா.மு.தேவி, நேசமணி, அமிர்தவல்லி இராக்கம்மாள், வி.விஜயா, வில்வமலர், வருணா ரகுநாதன், சரஸ்வதி அருணாசலம், தீனரட்சகி, தா.ஆரியமாலா, பாவை, பாக்கியம், நிர்மலா ராகவன், சாரதா கண்ணன், எலிஸெபத், சு.இந்திராணி, ஜனகா சுந்தரம், இ.தெய்வானை, த.மு.அன்னமேரி, வளர்மதி, பத்மாதேவி, வேலுமதி, மல்லிகா சின்னப்பன் போன்றோரை குறிப்பிடலாம்.

இவர்களில் சிலர் மறைந்து விட்டனர். பாவை, மகேசுவரி, பாக்கியம், நிர்மலா போன்ற சிலர் இன்னும் எழுதி வருகின்றனர்.

மூன்றாவது காலக் கட்டத்தில் வந்தவர்கள் வே.இராஜேஸ்வரி, கி.அஞ்சலை, கண்மணி, சுந்தரம்பாள், சுபத்திராதேவி, வே.நீலவேணி, சந்திரா சூரியா, என்.ஜெயலட்சுமி, கல்யாணி வேலு, கமலாதேவி, வீ.சுமதி, ஜீ.ராஜகுமாரி, பூங்காவனம் ஜெகநாதன், தேவிநாதன் சோமசன்மா, சி.வெண்ணிலா, ருக்மணி முத்துக்கிருஷ்ணன், சரஸ்வதி பாண்டியன், மு.பத்மாவதி, உமையாள் பார்வதி, அம்மணி ஐயாவு, ஆரியமாலா குணசுந்தரம், கெஜலட்சுமி, கோ.பராசக்தி போன்றவர்கள்.

1980ஆம் ஆண்டுகளில் எழுதத் தொடங்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் திருமதி கமலா, ஆதிலட்சுமி, கோமகள், நிர்மலா பெருமாள், எஸ்.பி.பாமா, பத்மினி, கல்யாணி மணியம், சுந்தரி பொன்னையா, துளசி அண்ணாமலை, மங்களகௌரி, ருக்மணி, லோகா, வாணி ஜெயம், இன்னும் சிலர்.

மேலே கூறியவர்களில் வெகு சிலரே தொடர்ந்து எழுதி வருகின்றனர். சிலர் அவ்வப் போது எழுதுவர். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும், சில சமூக அமைப்புக்களும், மன்றங்களும் எழுதும் பெண்களை பாராட்டி பொன்னாடை அணிவித்து பொற்பதக்கம் அளித்தும் கேடயம் வழங்கியும் சிறப்பித்துள்ளன என்பது பெண்களின் இலக்கியப் பங்களிப்புக்குச் சான்றாகும்.

ஆனால், வருத்தம் தரக்கூடிய செயல் யாதெனில், பெண் படைப்பாளர்களைச் சக எழுத்தாளர்களோ, விமர்சனம் செய்பவர்களோ ஆய்வு செய்பவர்களோ நினைவில் வைத்துக் கொள்வதில்லை என்பதுதான். இலக்கியத் துறையிலும் சிலரின் ஆதிக்கம்.  அதுமட்டுமன்று, இவர்களின் படைப்புகள் நூல் வடிவம் பெறாமல் மறைந்து போகின்றன.  மற்றொரு காரணம் இவர்கள் இலக்கியப் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில்லை. வெளி உலகத் தொடர்புகள் இல்லை; யாரையும் சந்திப்பதுவுமில்லை.

ஒரு குறிப்புக்காக சட்டென நினைவுக்கு வர வேண்டிய பெண் இலக்கியவாதிகளை இங்கே தருவதன் மூலம் ஒரு சிலரையாவது கருத்தில் கொள்ள இயலுமே என்கிற ஆதங்கத்தில் சில பெயர்களை குறிப்பிட்டுள்ளேன்.

புதிதாகப் பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை வரவேற்போம். வருங்காலத்தில் அவர்களையும் வரிசையில் இணைத்துக் கொள்வோம். நூற்றுக்கணக்கான கதைகளும் தொடர்களும் எழுதியவர்களின் பெயர்கள் கூட மறந்து விடுகின்றது. ஆனால், ஒரே ஒரு நூலை வெளியிட்டிருந்தால் பளிச்சென்று பெயர் நினைவுக்கு வருகின்றது. பெண்கள் இக்குறிப்பைக் கருத்தில் கொள்வார்களாக.  சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல் போட்டிகளில் பவுன் பரிசுகளும் முதல் பரிசுகளும் பெற்ற பெண்கள் பலரும் சிறப்பாக எழுதக் கூடியவர்களே.  அவர்களின் எழுத்தும் தரமானவை. இல்லையேல் தேசிய அளவில் அனுபவ முத்திரைப் பதித்துள்ள பிரபலங்களோடு போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருக்க இயலுமா?

"எட்டும் அறிவினில் இலக்கியத் துறையில் நாங்கள் இளைப்பில்லை காணென்று'

பெண்களும் இலக்கியத் துறையில் தங்களின் திறமையை நன்கு வெளிப்படுத்தியுள்ளனர். தங்கள் பங்களிப்பை நிறைவாகவே செய்து வந்துள்ளனர்.

ஆனால், பெண் படைப்பாளிகளின் இலக்கியப் பணிகள் அதிகம் பேசப்படுவதில்லை. அடையாளமின்றி அவை மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன.

நம் தமிழ்ப் பெண்களின் உலகம் குடும்பம் எனும் ஒரு வட்டத்துக்குள்ளே அடங்கியுள்ளது. குடும்பம், குழந்தைகள், வீட்டுக் கடமைகள் என்று ஓர் எல்லைக்குள்ளே அடங்கியுள்ளது. பண்பாட்டுக் கூறுகள் என்கிற கட்டுப் பாட்டு வேலிகள் அவர்களை முடக்கிவிடுகின்றது.  வெளியில் பணிபுரியச் சென்றாலும் வெளியுலகத் தொடர்புகள் அதிகமிருக்காது.

அனுபவங்களைத் தானே கற்பனையுடன் கலந்து கலை நயத்துடன் வெளிப்படுத்தலாம். தனி மனித அகவெழுச்சிதானே இலக்கியமாகிறது. அவ்வகையில் தங்களின் அனுபவங்களை எழுத்துக்களின் வழி படைப்புகளாகக் கொண்டு வருகின்றனர். பெண்களின் புனைவுகளில் யதார்த்தமும், நேர்மையும் பண்பாட்டுக் கூறுகளும் மொழித் தூய்மையும் சிறப்பாகவே வெளிப்படுகின்றன.

பெண்களின் மன உணர்வுகளை எழுத்தில் வடிக்கின்றனர். பெண்களின் எழுத்துக்களில் ஆபாசமோ, அத்துமீறல்களோ பண்பாட்டுக்குப் புறம்பானவையோ வடிவமைக்கப் படுவதில்லை. கிளர்ச்சி வேட்கை, வலி போன்ற அகவுணர்வுகளை மலேசியத் தமிழ்ப் பெண்கள் இன்னும் பேசவில்லை. பெண்களுக்கே உரிய மனப்படிமங்களை எழுத்தில் வெளிப்படுத்தவே விரும்புகின்றனர்.

பெண் எழுத்தாளர்களின் அகப்பொருள் கதைகளில் பொதுவாகத் தான் காணமுடிகின்றது.  பெண்ணின் துயரங்கள், எதிர்பார்ப்புகள், கனவுகள் பெண்ணுக்காகப் பரிந்து பேசும் குரல்களைத் தான் அதிகம் காணமுடிகிறது.

இதுவரை பெண்ணுடல் அந்தரங்கப் பிரச்சனைகள் தொட்டு இங்கு யாரும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. பெண்கள் தாங்கள் நினைத்ததை எல்லாம் முழுமையாக வெளிப்படையாக பேசுவதில்லை.  அச்சம், மடம் நாணம் பயிர்ப்பு எனும் கட்டுப் பாடுகள் பெண்களுக்கு மட்டுந்தானே!

பெண்களுக்கு எல்லாவற்றிலுமே எல்லையை குறுக்கிவைத்துள்ளதால் போதுமான அனுபவங்கள் கிடைப்பதில்லை. தங்களின் மென்மையான உணர்வுகளின் மூலமே கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர்.

புதிய பார்வைகள் புதிய தேடல்கள், புதிய கோணங்களில் மலேசியாவில் பெண்களின் எழுத்துகள் இன்னும் அழுத்தமாகப் பதிவாகவில்லை என்று நினைக்கின்றேன். இரண்டொருவர் மேலோட்டமாகவே தொட்டுப் பேசியுள்ளனர்.

முரண்பாடுகளில்  பாக்கியம், ஞானப்பூக்கள்  பாவை, தீ மலர்  கமலா, ஆறாவது காப்பியம்  வே.இராஜேஸ்வரி இவர்களிடமிருந்து தீப்பொறி கிளம்பியுள்ளது. ஆதிலட்சுமி, நிர்மலா ராகவன், நிர்மலா பெருமாள் போன்றவர்களிடமிருந்து சமூகப் பிரச்னைகளும் பார்வையும் வெளிப்படுகின்றன.

இலக்கியம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, சமூக மலர்ச்சிக்குரிய கருவி.  சமூக மாற்றத்தின் உச்சக்கட்ட எழுச்சியாக இலக்கியம் திகழ்கிறது. மக்களுக்கான இலக்கியம் தேவை என்பதைப் புரிந்து கொண்டுதான் பெண்கள் தங்கள் பங்களிப்பைச் செய்கின்றனர்.

அதைப் புரிந்து கொள்ளாமல் சிலர், பெண்கள் குடும்பக் கதைகளையும் பெண்களைப் பற்றியுமே எழுதுவதாகக் குறை கூறுகின்றனர். பெண்கள் படித்திருந்தாலும் பணி புரிந்தாலும் தங்களின் குடும்பத்திற்காகவே சேவை செய்கிறார்கள். குடும்பத்தையும் பெண்ணையும் பிரித்துப் பார்க்கவா முடியும்?

கருப்பொருள் அடிப்படையில் கதைகள் குடும்பச் சூழலில் அமைந்தாலும் தங்களின் நுட்பமான பார்வை மூலம் பல கோணங்களில் சமுதாயத்திற்குப் பல படிப்பினைகளை வழங்குகின்றனர். அதீதமான கற்பனைகளை அள்ளி வீசாமல் நம்பகத் தன்மையோடு கதை சொல்ல முடிகின்றது. நேரடியாகச் சமுதாயத்தை நோக்கிச் செல்லாவிடினும் குடும்பத்தின் மூலம் பல சிக்கல்களைத் தீர்க்க முடியும். தெளிவு பெறவும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் உதவுமன்றோ?

மேலோட்டமாக நுனிப்புல் மேய்வது போல படித்தால் பயன் தெரியாதுதான். குடும்பமும் சமுதாயத்தின் ஓர் அங்கம்தான் என்பதை உணர்ந்தால் குறை சொல்ல நேரிடாது. எல்லா ஆறுகளும் கடலில் தானே சங்கமிக்கின்றன. பிரச்னைகள் எங்கிருந்து கிளம்பினாலும் சமூகத்துக்கு சீர்கேடுதானே; சிக்கல் தீர்வடைய வேண்டுமல்லவா? எழுதும் பெண்களில் பலர் ஆசிரியர்களாக இருப்பதால் பள்ளியில் நிகழும் அவலங்களையும் நம்மின மாணவர்களின் சங்கடங்கள், சிக்கல்கள், இழப்புகள், பாதிப்புகள் பலவற்றையும் கதையின் மூலம் வெளிப்பார்வைக்குக் கொண்டுச் செல்கிறார்கள். பெற்றோர்களை விழிப்படையச் செய்கிறார்கள்.

தோட்டப்புறங்களையும் பால்மரங்களையும் வறுமையையும் பற்றி மட்டுமே எழுதினால் போதுமா? நகர்ப் புற அவலங்களி அங்கே அலைபாயும் நம் மக்களைப் பற்றி எழுத வேண்டாமா?

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதைக் குறிப்பிடும்போது அவர்களின் சிறப்பான சாதனை எனும் அளவுக்கு சொல்லப் படும் சில குறிப்புகளையும் இங்கு வெளியிடவேண்டியுள்ளது.

சிறுகதைப் போட்டிகளில் பல பெண் படைப்பாளிகள் பவுன் பரிசுகளும் பெற்றிருக்கின்றார்கள்.  திருமதி பாவை என்ற புஷ்பலீலாவதி, பேரவைக் கதைகளில் மட்டும் 15 முறை பரிசுகள் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

வரலாற்று நாவல் எழுதும் போட்டியில் பினாங்கு திருமதி சு.கமலா  தீ மலர் எனும் நாவல் எழுதி முதல் பரிசு பெற்று இலக்கிய உலகில் வரலாறு படைத்திருக்கிறார்.

ஆஸ்ட் ரோவும் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றவர் மங்கள கௌரி.

தமிழகத்து மஞ்சரி இதழ் நடத்திய தேவன் நினைவுக்கட்டுரைப் போட்டியில் "அங்கோர்வார்ட்'' வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோயில்கள் பற்றிய கட்டுரை எழுதி முதல் பரிசை பெற்றவர் ந.மகேசுவரி.  இவர் எழுதிய "தாய்மைக்கு ஒரு தவம்' தமிழகத்தின் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டப் படிப்புக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தது.

சிங்கப்பூர் இலக்கியக் களம் சிறுகதைத் திறனாய்வில் திருமதி பாக்கியம் எழுதிய “வேனல்'' சிறந்த கதையாகத் தேர்வு பெற்றது.

சிறுகதை, கட்டுரை, நாவல் என 8 நூல்களை வெளியிட்டு பெண்களின் பாராட்டைப் பெற்றுள்ளவர் திருமதி நிர்மலா பெருமாள்.

14 பெண் எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து "கயல்விழி' எனும் நூலை வெளியீடு செய்தவர் புலவர் கோமகள்.

1995இல் ஆனந்த விகடன் நடத்திய நகைச்சுவை நாடகப் போட்டியில் 2ஆம் பரிசு பெற்றவர் திருமதி ராஜம் கிருஷ்ணன்.

லண்டன் முரசு நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர் திருமதி கோ.அமிர்தவல்லி.

துணைவன், சலங்கை ஆகிய மாத இதழ்களின் ஆசிரியராக இருந்து வெளியீடு செய்தவர் முன்னாள் செனட்டர் திருமதி ஜெயா பார்த்திபன்.

தமிழ் மலர், தினமணி, தமிழ் நேசன் போன்ற ஏடுகளில் துணையாசிரியராகப் பணி புரிந்து பத்திரிகை துறையில் ஈடுபட்டவர் திருமதி வில்வமலர். மலேசியத் திருக்கோவில்கள் எனும் கட்டுரைத் தொகுப்பையும், உருப் பெறும் உண்மைகள் எனும் கட்டுரைகளையும் நூல் வடிவில் தந்தவர் இவர்.

சித்த வைத்தியம் படித்த ஜனகா சுந்தரம், பல மருத்துவ குறிப்புகள், தொடர் கட்டுரைகளும், கதைகளும் எழுதியவர். சிறுகதை, கட்டுரைத் தொகுப்புகளையும் நூல் வடிவில் வெளியீடு செய்தவர்.

"மகளிர் உலகம்' என்ற பெண்களுக்கான இதழை வெளியிட்டவர் திருமதி ராஜேஸ்வரி கணேசன்.

மகளிருக்காக "ஆனந்த ராணி' மாத இதழை நடத்தி வருகிறார் திருமதி ஆனந்தி.

உடல் ஊனமுற்று சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே இரு நூல்களை எழுதி வெளியிட்டவர் தா.மு.அன்னமேரி.

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு மனநிறைவு தரும் வகையில் சிறப்பாகவே அமைந்திருக்கிறது;  எனினும் நூல் வடிவம் பெறாமலும், ஆய்வு செய்யப் படாமலும் காலப் போக்கில் அவை மறைந்து கொண்டே வருகின்றன என்பது கவலைக்குரிய நிலையாகும். அடையாள மின்றி மறைந்து போகுமுன் தமிழின் பால் அக்கறை கொண்டவர்கள் இதனைக் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள் என்று நம்புவோமாக.