கன்னடக்கவிதை: பிரதிபா
தமிழாக்கம்: புதிய மாதவி

கதைச் சொல்லு
கதைச் சொல்லு
எனக்கொரு கதைச் சொல்லு.
உன் கதையில்..
ஏழு கடல்கள்
இடியுடன் கூடிய புயல்
தீ கக்கும் டிராகன்
இவர்களுடன் இருக்கட்டும்
அரக்கனைப் பரிகாசம் செய்யும்
ஒரு சின்னப் பச்சைக்கிளி
முத்துக்களைக் கொறித்துக்கொண்டு.
இருக்கட்டும்
முடிவில்லாத சிக்கலான பாதை
வெளிவரமுடியாமல்
ஒவ்வொரு படியிலும்
தடைக்கற்கள்
பயப்படவில்லை.
இந்த மாதிரிக் கதைகளை
எனக்குத் தெரியும்.
எல்லா கதைகளிலும்
எப்போதும்
கடைசியில்
இனிமையாக வாழ்ந்ததாக
சுபமாக முடியும் என்று.

கதைச் சொல்லு
எனக்கு.
மூச்சுத் திணறும் அணைப்பில்
வேப்பமரத்தடியில்
அவன் கனவுகள் விழித்தெழுந்ததை..
கதைச் சொல்லு எனக்கு.

உன் கதைக் கேட்டு
அடிப்பட்ட மான் போல
துடிதுடித்து அழவேண்டும்.
கதை முடிவில்
தொலைந்து போன குழந்தைகள்
சந்தர்ப்பவசத்தால்
ஒருவரை ஒருவர் சந்திக்கட்டும்..
கதைச் சொல்லு எனக்கு.

ஒரே ஒரு ஊரில்
ஓர் இளவரசியாம்
அவளைக் காதலித்தானாம்
துணிகளை வெளுக்கும் அவன்..

இந்தக் கதையில் கற்பனை இருக்காதே..
கதைச் சொல்லு எனக்கு.
கதைச் சொல்லு.