பேராசான் ஜீவா அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்று களங்களிலும் மூழ்கி முத்தெடுத்தவர். பொருளியல் சமத்துவத்துக்கான அரசியல் சமரில் பலரும் முழுக்கவனம் செலுத்திய தருணத்தில் காலம் காலமாக மனித உள்ளங்களின் உள்ளியக்கத்தைத் தீர்மானித்தப் பண்பாடு குறித்து சிந்தித்தார்; கவனம் செலுத்தினார். மொழி குறித்தும் மக்கள் பண்பாடு குறித்தும் அக்கறை கொண்டார்.  ஏராளம் எழுதினார்.  பேசினார்.

ஜீவாவின் பன்முகப் பணிகள் இன்று அரசியல் கடந்து கவனம் பெறுகின்றது. தமிழிய வீரியம் தப்பிய விதைகளங்காய்த் தகிக்கின்றது. இத்தருணத்தில் பத்திரிக்கையாளரும் சிவப்புச் சிந்தனையாளருமான தோழர் சு. பொ. அகத்தியலிங்கம் ஜீவாவின் பாடல்களை முன்வைத்து கோடிக்கால் பூதமடா... (ஜீவாவின் கவிதைப் பயணம்) என்ற தலைப்பில் ஒரு நூலினைப் படைத்துள்ளார். "தோழர் ஜீவாவை அறிமுகப்படுத்திய அளவுக்குக் கூட கவிஞர் ஜீவாவை அறிமுகப்படுத்தவில்லை" என்ற ஆதங்கத்தில் இந்நூலைப் படைத்துள்ளார்.

ஜீவாவின் கவிதைகளில் தற்போது கிடைத்துள்ள 122 கவிதைகளை அதன் உள் ஆற்றல்களோடு அறிமுகப்படுத்துகின்றார்.

“இவற்றில் 25 பாடல்கள் பெண் விடுதலையை உயர்த்திப் பிடிப்பன :  48 பாடல்கள் தொழிலாளி வர்க்க எழுச்சி, சோசலிசம் சார்ந்து எழுந்தவை : கட்சி, தியாகம் குறித்து நேரடியாகப் பேசும் பாடல்கள் 7 : புரட்சி பற்றிய பாடல்கள் 5: இது போக பாசிசம், யுத்தம் குறித்த பாடல்கள் 6 : சுயமரியாதை , பகுத்தறிவு சார்ந்த பாடல்கள் 11, தேசியம் சார்ந்த பாடல்கள் 15, பாப்பா பாடல் 2, பொது 2, தமிழகம் 1. எனப் பத்து வகைபாடுகளில் அவற்றை நாம் அனுகலாம்'' என்று பகுத்துக் கூறுவது கல்விப்புல ஆய்வு போன்ற வியப்பைத் தருகின்றது.

ஜீவாவின் பாடல்கள் இன்றைக்கும் பொருத்தப்பாடு உள்ளதாக உள்ளன என்பதைச் சான்றுகளுடன் காட்டுகின்றார். 

மிக எளிமையாகவும், சுவைபடவும் பல பாடல்களைப் பற்றி ஆசிரியர் விவரிக்கின்றார்.  1930 ஆம் ஆண்டு வெளிவந்த சுயமரியாதைச் சொல்மாலையில் ஆத்திச்சூடி போல எழுதியுள்ள கீழ்க்காணும் அடிகளைப் பொருத்தமாக எடுத்துக்காட்டுகின்றார்.

"காதல் மணத்தாலே தருமின்பம்
"தாசியர் வேணுமாய் பேசுவார் கயவர்"
"தையலர் விடுதலை வையக விடுதலை"
"பெண்ணும் ஆணும் எண்ணில் நிகரே"
"மெல்லியர் கல்விக்கு அல்லும் பகலுழை"
"கற்பெனப் பெண்களை அற்பரே குலைத்தார்"

அதே நேரத்தில் “பெண்கல்வி'' பற்றி கூற வந்தவர் "மெல்லியர்' என பெண்ணை உடல் சார்ந்து குறைத்து மதிப்பிடும் வார்த்தைகளைக் கையாண்டது அன்றைய சிந்தனை வழக்கில் பிழையெனப் பாடவிடினும், பெண்ணியப் பார்வை விரிந்து பரந்துள்ள இக்கால கட்டத்தில் இவ்வார்த்தை பயன்பாட்டை பெண்ணியவாதிகள் ஏற்கமாட்டார்கள்'' என விமர்சிக்கவும் செய்கின்றார்.  மற்றொரு இடத்தில் “சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும் ஜீவாவும் பெண்விடுதலை குறித்து எழுதியவை மீண்டும் வாசிக்கப்பட வேண்டும்.  பெரியாருக்கு ஒப்பவும் சில இடங்களில் அதற்கு மேலாகவும் பெண் விடுதலை குறித்து சிந்தித்தவர்கள் இவர்கள்.  இது குறித்து தனியே ஒரு நூலே எழுதலாம்''.  என்று கூறுவது மிக நல்ல மதிப்பீடாக அமைகின்றது.

மூட நம்பிக்கை, மத நம்பிக்கை ஆகியன குறித்த ஜீவாவின் தீவிர எதிர்ப்புணர்வை அவர்தம் பாடல்கள் வழி உணர்த்துவது சிறப்பு.

"இடி விழுந்தது கடவுள் மேல்" என்றும் "தலைக்கொரு பாழ் மதம்" என்றும்;  "கற்சாமி பிழைத்திட வேலி நிலம்" என்றும் "புத்தி கெட்ட ஆத்திகம்" என்றும் ஜீவா ஆவேசமாய் கூறும் இடங்களைச் சுட்டி எழுதிச் செல்வது அருமை.

ஜீவாவின் உள்ளத்தில் சுடராய் தகித்த பாட்டாளிவர்க்க உணர்வு அவர்தம் பாடல்களில் பற்றிப்படர்வதை அகத்தியலிங்கம் நுட்பமாகப் பதிவு செய்கின்றார்.

“ஜீவாவின் பாடல்கள் காலாவதியானவை அல்ல.  இன்றும் கால ஓட்டத்தின் சுருதியே அவை.  பணத்திமிருக்கு பணியாத நா  ஜீவாவின் பேனா. அவர் பணத்திமிர் பற்றி எழுதுகிறார்.

"யானை போற் கொழுத்த மேனி
இடர் செய்யும் நச்சு நெஞ்சு
பூனைபோல் நிறைந்த வாழ்வு
பொய்புலை நிறைந்த வாழ்வு
ஏனையோர் குடிகெடுக்கும்
எத்தனம் பொழுதுபோக்கு
பானைபோல் வயிறு கொண்ட
பணத்திமிர் வீழ்க! வீழ்க!"

எனக்கூறி விளக்கிச் செல்கிறார். குவலயம் நாற்றிகையும் அதிர  "கோடிக்கால்பூதம்" போன்ற அற்புதமான சொற்சேர்க்கைகளை ஜீவா பாடல்களில் காண முடியும்.

அதிகம் பேசப்படாதப்பாடல்களை எடுத்து அவற்றின் இலக்கிய நயத்தினை விளக்கும் போது ஆசிரியர் ஜீவா மீதும் உழைக்கும் மக்களின் சித்தாந்தத்தின் மீதும் கொண்டுள்ளப் பற்று பளிச்சிடுகின்றது. 

வாடாத மக்களும் வாழ்வதெங்கு?
மாதர் சுயேட்சை மணப்பதெங்கு?
நாடக முற்போக்கு காண்பதெங்கு?
நல்லிளைஞர் வேகம் பூண்பதெங்கு?
கோடாலி மண்வெட்டி ஆள்வதெங்கு?
குக்கிராம மக்கள் தழைப்பதெங்கு?
தேடும் மனித சமமெங்கு?
சீர்மிகும் ரஷ்யப் பொன்னாட்டிலன்றோ?

அடடா... அடடா... எவ்வளவு பொருள் பொதிந்த வரிகள்.  கோடாளி, மண்வெட்டிதூக்கி வியர்வை சிந்த உழைப்பவன் ஆட்சி எனில் கசக்குமோ ஏழைக்கு? பொறுக்குமோ பணச் கொள்ளையருக்கு? “ என்று துள்ளித் துள்ளி எழுதிச் செல்கிறார்.  29 பாடல்கள் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது நன் முயற்சி.

ஜீவாவின் ஒட்டு மொத்த ஆளுமையை, ஜீவாவுக்கு லட்சியக் கனவு ஒன்று இருந்தது.  அது தேச விடுதலையில் காலூன்றி, சுயமரியாதையில் கிளை விரித்து, பொதுவுடைமையில் பூத்துக் குலுங்கும் கனவு.  அந்தக் கனவு கைகூட தனது நாவை, பேச்சாற்றலை ஆயுதமாக்கினார்.  தனது எழுத்தாற்றலை பேனாவை சாதனமாக்கினார்.  வாகனமாக்கினார் என நூலாசிரியர் சு.பொ. அகத்தியலிங்கம் சித்தரிக்கிறார்.

இது ஜீவாவின் பாடல்களை மக்களிடம் புது முறையில் எடுத்துச் செல்லும் நூல். சுயநல அரசியலும், உலகமய பொருளியலும், நுகர்வுப் பண்பாடும் பெருகிவரும் இக்காலத்தில் நேர்மையான அரசியலை, மக்கள் மய பொருளியலை, தமிழியப்பண்பாட்டை முன்னெடுக்க ஜீவா ஓர் அடையாளமாக, ஆயுதமாகப் பயன்படுவார்.  அந்த ஆயுதத்தை உணர்வுப் பொங்க கூர்தீட்டி கையளித்திருக்கிறார் தோழர் அகத்தியலிங்கம் என்றால் மிகையில்லை.

கோடிக்கால் பூதமடா... ஜீவாவின் கவிதைப் பயணம், சு.பொ.அகத்தியலிங்கம், நாம் தமிழர் பதிப்பகம் பக். 104, விலை ரூ.50/