தலைவர் ஆர்.நல்லகண்ணு பாராட்டு

தில்லி மாநகரில் கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பாக நடைபெற்ற அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் 15வது தேசிய மாநாட்டில் அகில இந்திய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் எழுத்தாளர் பொன்னீலனுக்கு நாகர்கோவிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது தலைவர் நல்லகண்ணு குறிப்பிட்டுச் சொன்ன ஒரு மதிப்பீடுதான் “பண்பாட்டுத் துறையில் ஜீவாவுக்குப் பின் தனி முத்திரை பதித்தவர் பொன்னீலன்'' என்பது.

திருத்தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டு திருவனந்தபுரம் சிறைச்சாலையில் இருந்தபோது, கேரளத் தோழர்களுடன் கொண்ட உறவால், விடுதலையாகும்போது ஒரு இடதுசாரியாக வெளிவந்த தோழர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா தலைமையில் பாராட்டு விழா நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி சென்டரில் வைத்து 5.5.2012 மாலை 6.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.

குமரி மாவட்ட இலக்கிய வரலாற்றில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வரும் தமிழாலயம் இயக்குநர் புலவர் கு. பச்சைமால் வரவேற்றுப் பேசினார்.  பொன்னீலனோடு இளமைக்காலம் முதலே நட்பு பாராட்டி வருகின்ற கொடிக்கால் ஷேக் அப்துல்லா பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றியும் தெரிவித்தார்.

ஆர். நல்லகண்ணு:

காட்சிக்கு எளியராய், கடமையையும் கண்ணியத்தையும் உயிர்மூச்சாகக் கொண்டு எல்லோருக்கும் தோழராய்த் திகழ்கிற, பொதுவுடைமை இயக்கத்தால் புடம்போட்டு எடுக்கப்பட்ட, இன்று அனைத்துத் தரப்பு மக்களாலும் தோழர் என அன்புடன் அழைக்கப்படும் மக்கள் தலைவர் நல்லகண்ணு பாராட்டுப்பெறும் பொன்னீலனை வியந்து பாராட்டினார்கள். இது பாராட்டு நிகழ்வுக்கு மகுடம் சூட்டியது போலிருந்தது.

“சமூக நோக்கத்தோடு 1936ல் அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனம் தொடங்கப்பட்டது.  மக்கள் வாழ்க்கையை எழுத்தில் எடுத்துச் சொன்ன முன்ஷி பிரேம்சந்த் என்ற மாபெரும் எழுத்தாளர்தான் முதல் தலைவர். சஜ்ஜாத் ஜாஹீர் பொதுச்செயலாளர்.  முல்க்ராஜ் ஆனந்த் என்ற மாபெரும் எழுத்தாளர் நீண்ட காலம் தலைவராக இருந்தார்.

அரசியல் போராட்டங்கள் உணர்ச்சிமயமான போராட்டங்கள்.  சுதந்திரப் போராட்டம் என்பது நீண்ட பயணம்.  இங்கே அறிவு பூர்வமான சிந்தனை வேண்டும்.  அதற்கு அனுபவரீதியான ஆற்றல் வேண்டும். இங்கேதான் எழுத்தாளர்களின் சமூக முக்கியத்துவம் வருகிறது.  தோவாளை சுந்தரம் பிள்ளை வில்லுப்பாட்டில் “ஏன் பஞ்சம் வந்தது'' என்பதைப் பாடுவார்.

பட்டாபி சீதாராம அய்யர் எழுதிய காங்கிரஸ் சரித்திரம்தான் அதிகாரபூர்வமான காங்கிரஸ் கட்சி வரலாறு.  வெள்ளைக்காரர்களுக்கு எதிராக சுதேசி கப்பலோட்டிய வ.உ.சிதம்பரம் பிள்ளை ஏகாதிபத்தியத்தின் ஒரு சரடைப் பிடித்தவர். ஆனால் அந்த வரலாறு சீதாராம அய்யர் எழுதிய காங்கிரஸ் சரித்திரத்தில் இடம் பெறவில்லை. இதைப் போலவே சிங்கார வேலர் முதன் முதலில் சென்னையில் மேதினத்தைக் கொண்டாடியவர். காங்கிரஸ் மாநாட்டில் பூரணச் சுதந்திரம் பற்றி பேசியவர். தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட். முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தலைமை தாங்கியவர்.  கட்சி வரலாற்றை எழுதும்போது வடக்கே உள்ளவர்களுக்குச் சிங்காரவேலரைப் பற்றி தெரியவில்லை. தோழர்கள் முருகேசனும், சி.எஸ். சுப்பிரமணியமும் சிங்காரவேலர் பற்றி ஆங்கிலத்தில் நூல் எழுதிய பிறகுதான் சிங்காரவேலர் பற்றி வடக்கே அறிமுகம் கிடைத்தது. இதேபோல் பாரதிக்கும் நூற்றாண்டு விழாவின் போதுதான் பாரதி பற்றி வடக்கே தெரிய வந்தது.

பொன்னீலன் முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றால் அது தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம். ஜீவா உருவாக்கிய கலை இலக்கிய பெருமன்றத்துக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம்.

பொன்னீலன் விளாத்திகுளம் வட்டாரத்தில் பள்ளி ஆய்வாளராக வந்த நாட்களிலிருந்து எனக்கு அவர் அறிமுகம். அந்த வட்டாரத்தில் பணி என்பது ஒரு தண்டனை போலத்தான். யாரும் அங்கு போகமாட்டார்கள். ஆனால் பொன்னீலன் அங்கு சென்று தங்கி பணியாற்றினார்கள். அதுபோல் வயலூரில் பள்ளி தலைமையாசிரியர் அங்கு யாரும் விரும்பி பணிக்குப் போகமாட்டார்கள். சாலையிலிருந்து இறங்கி ஆறு மைல்கள் சைக்கிள் மிதித்தால்தான் அந்த ஊருக்கு போக வேண்டும்.  ஓட்டுவீடு கூட கிடையாது.  அந்த ஊரிலும் சென்று தங்கி பணியாற்றினார் பொன்னீலன். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அத்தாணி ஊரில் ஒரு குடிசையில் தங்கி, அவரே சமையல் செய்து சாப்பிட்டு பணியாற்றினார். ஆனால் போன இடங்களிலெல்லாம் அவர் நல்லாசிரியராக பணியாற்றி பெருமை சேர்த்தவர்.  அவருடைய பழக்கமுறையும், பண்பாடும் மிகச் சிறப்பானவை.

1967ல் என்று நினைக்கிறேன்.  எட்டயபுரம் பாரதி விழாவில் கவியரங்கத்தில் பொன்னீலன் கவிதை வாசித்தார்.  அதுதான் தொடக்கம். தொடர்ந்து இலக்கியப் பணிகள், சிறுகதைகள், நாவல்கள், படைப்புக்கள், பேச்சுக்கள் என அவருடைய பணிகள் சிறப்பானவை.

பேச்சு என்றால் பொன்னீலன் பேச்சு சிறப்பாக இருக்கும்.  திருமண வீடுகளில் திருமணத்துக்கு நான் தலைமை தாங்கி இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு அமர்ந்துவிடுவேன்.  மணமக்களை வாழ்த்திப் பேச பொன்னீலன் வந்து பேசுவார்.  வாழ்வைப் பற்றி, வாழ்க்கையின் ருசிகளைப்பற்றி, மணமகள் பற்றி, மணமகன் பற்றி, மணமக்களின் குடும்பம் பற்றி மிகமிக ரசனையாக பேசி எல்லோரையும் சந்தோஷப்படுத்தி விடுவார்.  அவர் பேசும் போது எல்லோரும் சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.  நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவருடைய பேச்சை ரசித்து பேசிக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டது அவருடைய பேச்சு. கரிசலுக்கு தமிழ்நாடு அரசின் பரிசு கிடைத்தது.  புதிய தரிசனங்களுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.  அவருடைய பல நூல்கள் கல்லூரிகள், பல்கலை கழகங்களில் நூலாக வைக்கப்பட்டுள்ளன. அவருடைய கரிசல் மலையாளத்திலும் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  மறுபக்கமும் வேறு மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும். மறுபக்கம் நாடு தழுவிய ஒரு இலக்கியமாக மாற வேண்டும்.

அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அமைப்பு, 75 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் பண்பாட்டு அமைப்பு.  கலை இலக்கிய பெருமன்றத்தின் துணைச் செயலாளராக, பொதுச்செயலாளராக, தலைவராக பல்லாண்டுகள் பணியாற்றிய பொன்னீலன் இன்று அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  எல்லா தகுதிகளும் பெற்ற அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் என்ற செய்தி அறிந்ததும் மிகவும் மகிழ்ந்தேன்.  அவர் இத்தகைய தகுதியை அடைந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

பாராட்டு பிறந்த மண்ணில் நடப்பது மிகச் சிறப்பு.  இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொண்டதில் எனக்கு பெரு மகிழ்ச்சி.  இந்த பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த தோழர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாவுக்கு என் பாராட்டுக்கள்''.

நிகழ்ச்சியில் பொன்னீலனின் பால்ய கால நண்பர்கள், தோழர்கள் முதல், கலை இலக்கியப் பெருமன்ற தோழர்கள், மாவட்டம் முழுவதிலும் இருந்து பேராசிரியர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் என திரளாக கலந்து கொண்டார்கள். வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி தெரிவித்து பொன்னீலன் ஏற்புரை வழங்கினார்.

விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து பெருமன்றத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் எச். ஹமீம் முஸ்தபா சிறப்பாக தொகுத்தளித்தார்.  இறுதியில் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ஜே.சிவசங்கர் நன்றி கூறினார்.

பாராட்டப்பட வேண்டிய ஒரு சின்னஞ்சிறு விஷயத்தைப் பார்த்தாலும், ஓடோடிச் சென்று பாராட்டி மனிதர்களை உற்சாகப்படுத்துகின்ற, உத்வேகப்படுத்துகின்ற மானுடப் பண்பை தன் வாழ்வியலாகவே கொண்டிருக்கிறவர் பொன்னீலன்.  அவருக்கானப் பாராட்டுவிழாவுக்குத் தலைவர் நல்லகண்ணுவை சிறப்பு அழைப்பாளராக அழைத்து, நிகழ்வில் கலை இலக்கியப் பெருமன்றத்தையும் இணைத்து, விழாவுக்குப் பொறுப்பேற்று சிறப்பாக நடத்திய தோழர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.