இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் புகழ் மிகுந்த 22 வது மாநில மாநாடு தமிழக வரலாற்றில் திருப்பு முனை என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல. தொன்மையும் சிறப்பு கொண்ட தாய்மொழியாம் தமிழ் மொழியலிருந்தும் தமிழ் பண்பாட்டிலிருந்தும் நம் கட்சியை தனிமைப்படுத்தும் ஆதிக்க வெறியர்களின் சூழ்ச்சியை முறியடித்து, புதுப்பாதை அமைத்துக் கொடுத்த மாநாடு என்று தான் இதனைக் கூற வேண்டும். வரலாற்றில் நமக்கு எதிராக விரித்து வைத்திருந்த சூழ்ச்சி வலைகள் அனைத்தையும் மாநாடு அகற்றியுள்ளது.

 manadu_370தமிழின் விரோதிகள் என்றும், அந்நியத் தத்துவங்களை சுமந்தவர்கள் என்றும், அந்நிய நாட்டின் கூலிப்படை என்றும் எத்தனைக் காலம் எத்தனை வசை மொழிகளை எதிர் கொண்டது தமிழகத்தின் கம்யூனிஸ்டு பேரியக்கம். தமிழ் தாயின் தலைமகன் ஜீவா மட்டுமல்லது ஜீவாவின் தமிழையும் கேலிசித்திரம்வரைந்து கிண்டலடிக்கப்பட்ட காலங்கள் உண்டு. தமிழும் பொதுவுடமையும் பிரிக்க முடியாதை என்று கம்யூனிஸ்டு ராஜபாளையம் மாநாட்டில் மீண்டும் ஒருமுறையும் திருப்புமுனையை உருவாக்கிவிட்டது.

 மார்க்சீயத்தின் வெளிச்சம் மானுடத்தின் வெளிச்சம். இனக்குழுக்களாகத் தோற்றம் பெற்றது முதல் எதிர்காலத்தில் சுரண்டலற்ற முழுமையான சமுதாயத்தை அமைக்கும் வரையில் அனைத்தைப் பற்றியும் ஒரு அறிவியல் பூர்வமான கண்ணோட்டத்தைக் கொண்ட கொள்கையாக கொண்டவை தான் கம்யூனிஸ்டு கட்சிகள். மற்ற கட்சிகளை போல ஒரு குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில் கருவுற்று அடுத்த சூழல் உருவாகும் போது அழிந்து போகும் தன்மையைக் கொண்டதல்ல கம்யூனிஸ்டு கட்சி. காலத்தை வென்று செல்லும் தத்துவ வலிமையைக் கொண்டுள்ளது. இந்த புரிதலைஉணர்ந்து ஆதிமுதல் பொதுவுடமையோடு தமிழுக்கு இருக்கும் இணக்கத்தை மீண்டும் செழுமைப்படுத்தும் மாநாடாக கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு அமைந்துள்ளது. இதுதமிழ்கூறும் நல்லுலகத்திற்கு மகிழ்ச்சியை தருவதாக இருக்கிறது.

 இன்றைய கார்பரேட் உலகில், நடைபெறும் பிரபஞ்சக் கொள்ளை யாராலும் கணக்கிட்டு கூறமுடியாததாகவே இருக்கிறது. பல்வேறு தேசங்களின் விலை மதிப்பற்ற செல்வங்கள், கேட்பாரற்று கொள்ளையிட்டு செல்லப்படுகின்றன. இதனை எதிர்த்து நடைபெறும் உலகம் முழுமைக்கானப் போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் தான் முன்னணியில் இருக்கிறார்கள். இந்திய நாட்டில் நடைபெறும் இதற்கானப் போராட்டங்களில் தீவிர மிகுந்தவற்றை தமிழ்நாடு மாநிலக்குழு நடத்தும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கக் கூடியதாக மாநாடு அமைந்துள்ளது.

பொதுவுடமையும் தமிழின் பண்பாட்டு அரசியலை புதியதிசை வழியில் உருவாக்கித்தரும் மாநாடாக அமைந்து இது புதிய ஊக்கத்தை வழங்கியுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியமானதாகும்.

Pin It