கொக்கியறுந்த சட்டையும்
ரிப்பன் சட்டையுமாய் திரிவாள் நித்யா

புளியம்பிஞ்சோ, தேங்காய்துண்டோ
போதும் அப்போது
கூட்டாஞ்சோறில் தொடங்கி
“அப்பா அம்மாவில்” முடிப்போம்

கையில் ஈரப்பிசுபிசுப்புடன்
மிட்டாய் வைத்துக்கொண்டு
“என்னதானே கல்யாணம் பண்ணிப்ப”& என்பாள்
படிப்பின்மீதோ
அம்மாவின் தாலிமீதோ
பொய்சத்தியம் செய்ததாக ஞாபகம்

எட்டாம் வகுப்புடன்
எல்லோரும் தாலிக்கட்டிகொண்டுபோக
இவள் மட்டும்
இன்னும் தொடர்கிறாள் படிப்பை

செம்மண் நிறத்தில்
கறுப்பு பூப்போட்ட நைட்டியில்
தினமும் தண்ணீர் பிடிக்க
வீட்டிற்கு வருகிறாள்

அம்மா ஊருக்கு போய்விடுகிற
நாட்களில்
வாசல்தெளித்துப் பெருக்குகிறாள்

பூனைகள் போனால்
தடவிக் கொடுத்து
சோறு வைக்கிறாள்

ஆங்கில சொற்கள்
அதிகம் பயன்படுத்துகிறாள்

என் வீட்டில் புதிய பெண் குரல் கேட்டால்
பூவரச மரத்தோரம்
மறைந்து கவனிக்கிறாள்

தீவாய்த் தனித்த கடுக்கலூருக்கு
நாளிதழ்களும், வாரஇதழ்களும்
வாங்கிவந்து தருகிறாள்

அழகும் புத்தியும், கூடியசாயலுடன்
சுடிதாரிலும், புடவையிலும்
அடர்ந்த கருங்கூந்தல்
இடுப்பைத்தாண்ட
கல்லூரி சென்று வருகிறாள்

“என்ன கல்யாணம் பண்ணிக்குவ இல்ல” & என்ற
அதேவாயால்
அண்ணா வென்று அழைக்கிறாள்
“நானவளுக்கு மாமா முறை”

புடவைக்கட்டிய நித்யாவும்
கொக்கியறுந்த சட்டைப்போட்ட நித்யாவும்
ஒரே நித்யா அல்ல

ஏனென்றால்
புளியம்பிஞ்சு, தேன்மிட்டாய்தந்து
இந்த நித்யாவை
ஒருபோதும் ஏமாற்ற முடியாது
என்னால் இன்று

Pin It