"சாமுண்டி யாரு? வேத்து மனுஷனா, என்னோட சின்னய்யா மகன், எந்தம்பி. ரெண்டுநாள் காய்ச்சிலுலே கண்ணை மூடிட்டான். எல்லோரும் மாதிரி காரியம் முடிஞ்சதும் வந்தோம். தின்னோம், மொய் எழுதினோம்னு செருப்பை மாட்டிட்டா போயிட முடியுமா? இனி, நடக்க வேண்டியத பத்தி கூடி உட்கார்ந்து பேச வேண்டாமா. தம்பி குடும்பத்த தவிக்க விட்டுட்டா நாலு பேரு ஊருக்குள்ள என்னப் பத்தி தரக்குறைவா பேச ஆரம்பிச்”டுவாங்களே. அதுக்கு இடம் கொடுக்கலாமா. கொழுந்தியா வள்ளிமயிலைக் கூப்பிடு. இனி என்ன செய்யணும்னு வழி சொல்லுறேன்"  என்றான் தாளமுத்து.

திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை இடித்துக் கொண்டிருந்த ஆராயி, தாளமுத்துவை உற்று நோக்கினாள். பின், பதில் எதுவும் சொல்லாமல் மறுபடியும் வெற்றிலையை இடிக்க ஆரம்பித்தாள்.

"என்ன ஆத்தா, நான் பேசுறது காதுலா விழுதா இல்லையா. வெத்திலை இடிக்கிறத முதலுல நிறுத்து. வேலை வெட்டி இல்லாத வெறும் பய ஏதோ பேசுறான்னு நினைச்சுக்கிட்டியா. சாயர்புரம் பஞ்சாயத்துக்குப் போகணும். திருச்செந்தூர்ல ஒரு மண்டகப்படிக்குத் தலையைக் காட்டணும்... எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைச்”ட்டு தம்பி சாமுண்டி குடும்பத்துக்கு வழி செய்வோம்ணு உட்கார்ந்துகிட்டிருக்கேன். யாரோ மூணாவது மனுஷன் வந்திருக்கிறது மாதிரி நீ பாட்டுக்கு வெத்திலை இடிச்சுக்கிட்டிருக்கே. கொழுந்தியா வந்து மச்சானோட யோசனையைக் கேக்குறது மாதிரியும் தெரியல... நான் கை கழுவி விட்டா குடும்பம் தெருவிலதான் நிக்கும்"

ஆராயி வெற்றி இடிப்பதை நிறுத்தினாள்.

என்ன தாளமுத்து சொன்னே, குடும்பம் தெருவில நிக்குமா? கஞ்சித்தண்ணிக்கு வழியில்லாம வள்ளிமயிலும், அவ மகன் செந்திலும் பிச்சை எடுக்கப் போறாங்களாக்கும். நீ வழி சொல்லி கஞ்சி ஊத்தப் போறியாக்கும். பனங்காட்டுல எவளாவது ஆட்டுப்புழுக்கை அள்ளிக்கிட்டிருப்பா அவகிட்டப் போயி சொல்லு. உம் பங்காளி சாமுண்டி வெறும் பயலாவா செத்தான். குடியிருக்க வீடு, தேரிகாட்டுல பனை ஒண்ணா ரெண்டா எழுபதஞ்”. பதனியும், நுங்கும் வித்தாலே பத்து குடும்பம் திங்கும்...நீ ஒண்ணும் இந்த குடும்ப பாரத்தை உன் தலையில தூக்கிவச்”ட்டுத் தள்ளாட வேண்டாம்.... சாராயத் தள்ளாட்டத்துக்கு மேல இது வேறயோ...பாரம் தாங்க முடியாம, எனக்கு முந்த  பொ”க்குன்னு போயிடப்போற. சாயர்புரம் பஞ்சாயத்து, புன்னக்காயல் விவகாரம் இதுகளுக்கு பஞ்சாயத்து பண்ண ஆள் கிடைக்காது. வள்ளிமயிலுக்கு எப்படி பிழைக்கணும்னு தெரியும் என்றாள் ஆராயி.

ஆராயி பிடி கொடுக்காமல் அழுத்தம் திருத்தமாகப் பேசியதும் தாளமுத்து ஒரு கணம் திகைத்துப் போய்விட்டான். இருந்தாலும், சுதாரித்துக் கொண்டு இந்த தேரிகாட்டுக்கு வெளியே என்ன நடக்குன்னு தெரியாம தெருவையே சுத்தி சுத்திப் பறக்கம் நாட்டு காக்கா நீ, ஊர் நடப்பு பத்தி உனக்கென்ன தெரியும். எழுபத்தஞ்சு பனைன்னு பீத்தி பெருமையடிக்கியே முந்தா  நேத்து நாகலாபுரம் சந்தையிலே வேம்பால் பால்வடிவு நாடாரைப் பார்த்தேன். ”ம்மாச் சரிவுலே இருநூறு பனைக்குச் சொந்தக்காரரு என் கையப் பிடிச்சுட்டு "தாளமுத்து, தூத்துக்குடி பக்கம் உப்பளம், விலைக்கு வந்தா சொல்லு....இந்த பனையால் நஷ்டம் வருது வெட்டி வித்துடலாம்னு..."

அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆராயி "பனையேறி பாடுபடத் தெரியாத சோம்பேறிக்குத் தான் நஷ்டமும், குஷ்டமும் வரும். உங்கிட்ட யோசனை கேட்குறவன் எப்படி இருப்பான்? வெட்டி வீணாக்குறதல கெட்டிக்காரன்னு சுத்துவட்டாரம் பூராம் பேரெடுத்த பெருமாளாச்சே. ஒண்ணா ரெண்டா உன்னோட பங்குக்கும் எழுபத்தஞ்சு பனையைத் தேரிகாட்டுல வைச்சுட்டுத்தான் உங்க அப்பனும் செத்தான். இன்னிக்கு எருக்கஞ் செடியும், எலந்தப் புதரும் தான் அங்க மண்டிக் கிடக்கு" .

சொல்லாலேயே தாளமுத்துவுக்கு ஆராயி கொடுக்கும் சவுக்கடிகளைக் கேட்டவாறு உள்ளே ”வரோரம் உட்கார்ந்திருந்தாள் வள்ளிமயில். மடியில் பத்து வயது மகன் செந்தில் தலை வைத்துப் படுத்திருந்தான்.

திருச்செந்தூர் கோயிலில் கல்யாணம் முடித்துவிட்டு கூண்டு வண்டியில் சாமுண்டியும், வள்ளிமயிலும் ஊர் திரும்பும் பொழுது "அதோ தேரிக்காட்டுக்கு வலப்புறம் நிக்குற பனை மொத்தம் எழுபத்தஞ்சு நம்ம சொத்து. தெக்குப் பக்கம் எழுபத்தஞ்” மரம் தாளமுத்து அண்ணாச்சியோட பங்குக்கு கிடைச்சிடுச்சு".

"தெக்கிலே ஒரு பனையைக் கூட காணோம்"  வள்ளிமயில் வண்டியிலிருந்து எட்டிப் பார்த்தவாறு கேட்டாள்.

"எல்லாப் பனையையும் அண்ணாச்சி வெட்டி வித்துட்டாக"

"பனையையெல்லாம் வெட்டிட்டாகளா எதுக்கு வெட்டணும்?" ஆச்சர்யமாகக் கேட்டாள் வள்ளிமயில்.

மனைவியிடம் மறைக்க விரும்பாத சாமுண்டி உண்மையைச் சொன்னான்.

தாளமுத்து அண்ணாச்சிக்கு சேர்க்கை சரியில்லை. தினமும் சீட்டு விளையாட தூத்துக்குடி, சாயர்புரம், திருநெல்வேலின்னு போய்க்கிட்டேயிருப்பாக. விடியக் காலையிலேயே சாராயத்தை ஊத்திவிட்டுத் தான் வெளியே வருவாக. கெட்ட பொம்பளைங்க சகவாசம் நிறைய உண்டு’’.

வள்ளிமயில் முகம் சுழித்தாள்.

வண்டி செங்காட்டு ஓடை மீது ஏறிக் குலுங்கியது. வள்ளிமயில் காதோரம் செருகியிருந்த ரோஜா மலர் சாமுண்டியின் மடியில் விழுந்தது.

அப்பூவை விருட்டென்று அவன் எடுத்து அவள் கூந்தலில் செருகினான். வள்ளிமயிலின் கன்னங்களில் நாணம் படர்ந்தது.

பழைய நினைவுகள் காட்சி காட்சியாக நெஞ்”க்குள் வந்ததும் வள்ளிமயில் விம்மினாள்.

வெளியே தாளமுத்துவின் தர்க்கம் “தொடர்ந்தது.

“ ஆத்தா, ஊரு உலகத்தில் எந்த ஆம்பிளையும் செய்யாத ஏதோ ஒரு புதுத் தப்பை செஞ்சுட்டது மாதிரி மூச்சு விடாம பேசுறே. கேவலம் அந்த எழுபத்தஞ்சு பனைமரம்.... பூர்வீகச் சொத்தாக்கும். அது போச்சுன்னா ஒருத்தன் பிழைக்க முடியாதா...இப்ப நான் பிழைக்கலயா...

ஓ.... இது ஒரு பிழைப்பா நாலு ரௌடிப்பயலுகளச் சேத்துக்கிட்டு ஊரு ஊரா போயி குடும்பங்களுக்குள்ள சண்டையை மூட்டிக்கிட்டு அங்கேயும் இங்கேயும் கை நீட்டி காசு வாங்கி...ஒரு நல்ல பனையேறி இப்படியா பிழைப்பான். வேர்வை சிந்தி உழைக்காத காசு உடம்புல ஒட்டுறது மாதிரித் தெரியும். ஆனா  உள்ளுக்குள்ள எந்த வியாதிக்கு உரம் போட்டுக்கிட்டிருக்கோ

சரி ஆத்தா.... நான் வியாதி வந்து உடம்பெல்லாம் புளு நெளிஞ்சே சாகுறேன். ஒருத்தன் ஒரு தரம் சகதியிலே புரண்டுட்டா காலமெல்லாம் அதே கதின்னு கிடப்பானா... எங்கதை கிடக்கட்டும். இப்ப நான் பே”றது சாமுண்டி குடும்பத்துக்காக... குறுக்க பேசாம நான் சொல்லுறத கேளு

சரி, சொல்லு

ஆத்தா நம்ம குரும்பூர் பெரியசாமி அத்தான் மெட்ராஸிலே பலசரக்குக் கடை வச்சிருக்காக. கோடம்பாக்கத்தில் இன்னொரு கடையைத் திறக்கப் போறாகளாம். எனக்கு லெட்டர் எழுதியிருக்காக. தாளமுத்து, நம்ம பக்கத்துப் பையன் எவனாவது கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தா இங்க அனுப்பு. கடை வேலைக்கு ஆள் தேவை. சாப்பாடு, தங்குறது, முடிவெட்டுறது  எல்லாம் நான் பார்த்துகிடுவேன்.

கையில் ஐநூறு சம்பளமாகத் தர்றேன். வீட்டுக்கு கூட மணியார்டர் செஞ்சிடுதேன்னு கேட்டுருக்காக. நம்ம செந்தில் பயலை அனுப்பிச்சிடலாம்னு நினைக்கேன்.

ஏண்டா, உனக்குப் புத்தி மழுங்கிப் போச்சா. பள்ளிக்கூடத்திலே படிக்கிற பயலை பலசரக்குக் கடை வேலை அதுவும் மெட்ராஸுக்கு அனுப்பணும்னு சொல்லுறியே...நல்லதா யோசிக்கவே தோணாதா. இது தான் சாமுண்டி குடும்பத்துக்கு வழி காட்டுத லட்சணமா தலையில் அடித்துக் கொண்டாள் ஆராயி.

ஆத்தா, படிக்க வைக்கறதுன்னா சும்மாவா. பொம்பளயால முடியுமா. அப்பனைப் பறி கொடுத்தவன் படிச்” ஜில்லா கலெக்டராகப் போறானாக்கும். மளிகைக் கடைக்கு அனுப்பிச்சா மாசம் ஐநூறு மணியார்டர் வரும். அடுத்து அந்த எழுப்பத்தஞ்” பனையையும் நானே குத்தகைக்கு எடுத்துகிடுதேன். வருஷத்துக்கு ஆறாயிரம் தந்துடுதேன். மொத்தமாக வேணுமானாலும் வள்ளிமயில் வாங்கிக்கட்டும். இல்ல மாசம் ஐநூறு கொடுத்திடுறேன். ஆக, மகன் கொடுக்கிற ஐநூறு, நான் கொடுக்கிற ஐநூறு ஒரு பொம்பளைக்கு மாசம் ஆயிரம் போதாதா. கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு காலத்தை ஓட்ட வேண்டியது தான்.’’

எந்திரிச்சு போடா எடுபட்ட பயலே. பல ஆயிரக் கணக்குல குத்தகைக்குப் போற மரங்களை வெறும் ஆறாயிரம் அதுவும் வருஷத்துக்கு. உன் நாக்கு தான் நீளமுன்னு பேசுறியாக்கும். வள்ளிமயில் நேத்தே சொல்லிட்டா பனைகளை அவளே கவனிச்சுக்கிடுவாளாம்.

தாளமுத்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்.

எதுக்குலே சிரிக்க?

சிரிக்காம என்ன செய்ய. பொம்பள பனைகளை எப்படியாத்தா கவனிக்க முடியும். இது என்ன கரிசக்காட்டு விவசாயமா. சோளத்தையோ, கம்பையோ விதைச்சுட்டு வந்தா போதும். நாலு மழை விழுந்துச்சுன்னா பயிர் எழுந்த நின்னு கதிரைத் தள்ளிரும். பொம்பளையே காட்டுக்கு போயி கதிரை அறுத்து, தலைச்சுமையா வீட்டுக்குக் கொண்டு வந்திடலாம். இது பனை. பலன் தர்ற தாவர சாதியிலேயே உசரமானது. நெஞ்சோடு கட்டிப்பிடிச்சு ஏறணும். செரா குத்தி சதை கிளியும்.

ஐயா, தாளமுத்து, நான் யாரு? பனையேறிக்குப் பொறந்தவ. பனையேறிக்கு வாக்கப்பட்டவ. எங்கிட்ட வந்து பாடம் சொல்லிக் கொடுக்கியாக்கும். நீ எதுக்கு வலை வீசுதேன்னு எனக்குத் தெரியும். எப்படியாவது அந்த எழுப்பத்தஞ்சு பனைகளையும் ஏமாத்தி வாங்கிட்டா மிச்சமிருக்கிற தேவடியாளுக்கெல்லாம் அழலாமில்ல. ஊர் உலகத்திலே ஏமாறதுக்கு ஜனங்க நிறைஞ்” கிடக்காங்க. அங்க போயி உன் குள்ளநரித்தனம், வாய்ச் சவடால் எல்லாம் காட்டு...எனக்கு வேற வேலை இருக்கு.

ஆராயி எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.

வீட்டிற்குள் வந்த ஆராயி வள்ளிமயில் அருகில் வந்து அமர்ந்தாள்.

என்ன அத்தே, மச்சான் வரிஞ்சு கட்டிக்கிட்டு கொளுந்தியாளுக்கு உதவராக்களாக்கும் என்றாள்.

உதவிக்கு வந்து நிக்ற முகரக்கட்டையைப் பாரு. அவனோட நரித்தனத்துக்கு மயங்கி பனையெல்லாம் அவங்ககிட்டே ஒப்படைச்சுடுவோம்னு நினைக்கான். நம்ம ஊருல கூலிக்கு பனையேறுற அய்யனார், பால்சாமி, இருளாண்டி இவங்கள கூப்பிட்டுப் பேசுவோம். பாவம், உள்ளூர்ல வேலையில்லாததால பாஞ்சாலங்குறிச்சி, விளாத்திக்குளம்னு பனங்காடு இருக்கிற ஊருகளுக்கு வேலை தேடி போவாங்க தொழில் தெரிஞ்சவங்க.பொறுப்பா உழைப்பாங்க மாலையில் மூவரும் வந்தனர்.

வெளியூர்ல ஒரு பனைக்கு எவ்வளவு தருவாங்களோ அதுக்கு மேலேயே கொடுத்திடுதோம். தேரிக்காட்டுலேயே குடிசையிருக்கு தங்கிக்கோங்க. நாளைக்கே பாளை சீவி கலயம் கட்டிருங்க என்றாள் ஆராயி.

மூவரும் பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தனர்.

அவர்கள் முகத்தில் வேதனை தெரிந்தது.

என்ன, இருளாண்டி எதுக்குப் பேசாம இருக்க? வாயைத் திறந்து சொல்லு அதட்டினாள் ஆராயி.

ஆத்தா, உங்கிட்ட எப்படிச் சொல்லுறதுன்னு தெரியாம தவிச்சுப் போய் நிக்கோம். பாளை அறிவாளோடு ஊர் ஊரா அலைஞ்சு வயத்தக் கழுவணும்னு  ஆண்டவன் எழுதி வைச்சுட்டான். நாங்க கூலிக்காரங்க என்ன செய்ய முடியும் என்றான் இருளாண்டி.

இருளாண்டி, நீ சொல்லுறது இந்த கிழவிக்குப் புரியல. விளக்கமாச் சொல்லு

ஆத்தா, மத்தியானம் தாளமுத்து நாலு அடியாட்களோடு எங்க வீட்டுக்கு வந்தாக. எம் பங்காளி சாமுண்டியோட பனையில கையை வைச்சீக தேரிக்காட்டுச் செம்மண்ணுல அது வெட்டுப்பட்டுக் கிடக்கும். உங்களுக்கு மட்டும் சொல்லல வெளியூர் பனையேறிங்ககிட்டேயும் சந்தையில பாத்தா செல்லிடுங்க. அந்த எழுபத்தஞ்”மரமும் எங்க முப்பாட்டன் சொத்து. நான் உ”ரோடு இருக்கிற வரைக்கும் எந்தப் பனையேறியும் இங்க வந்து பாளை சீவ முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அவரப் பத்தித்தான் உங்களுக்குத் தெரியுமே. தெருச்சண்டியா உருவெடுத்து, ஊர்ச் சண்டியராகி இன்னிக்கு ஜில்லா சண்டியரா பேரெடுத்திட்டாரு. ஒரு ரௌடிக் கூட்டமே கூடயிருக்கு. வீண் பொல்லாப்பு எதுக்கு ஆத்தா. சாமுண்டி மகன் செந்திலு பெரியவனாகி பனையேற்று வரைக்கம் பொல்லாப்புத்தான் என்ற இருளாண்டி மற்றவர்களை அழைத்துக் கொண்டு நடை இறங்கிவிட்டான்.

ஆராயி அப்படியே இடிந்து போய் விட்டாள்.

வள்ளிமயில் உள்ளிருந்து வந்து ஆராயி பக்கத்தில் அமர்ந்தாள்.

“அத்தே, அந்த பனையேறிங்க பாவம். உழைச்”ப் பிழைக்கிறவங்க. கையென்ன தாளமுத்து மச்சான் கழுத்தைக் கூட வெட்டுவாக. ஒண்ணு கிடக்க ஒண்ணு நடந்துருச்”ன்னா அவங்க பெண்டாட்டி பிள்ளைகளோட கதி. ஆதனால அவங்க ஒதுங்கிட்டாங்க. சரி. அந்த கவலையை விடுங்க. கேப்பைக் களி கிண்டி வைச்”ருக்கேன். வந்து சாப்பிடுங்க’’ என்றாள்.

பீமசேனன் மாதிரி இருந்தயே ரெண்டு நாள் காய்ச்சலுலே பொ”க்குன்னு கண்ண மூடி எங்கள தவிக்க விட்டுட்டுப் போயிட்டியே, என் ராசா, சாமுண்டி..... நாதியத்து நிக்கோம் ஆராயி ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்ததும் என்ன அத்தே, எனக்குத் தைரியம் சொல்லுத நீங்க எதுக்குப் புலம்புதீங்க. வாங்க அத்தே

ஆராயி மெல்ல எழுந்து வள்ளிமயில் பின்னால் சென்றாள்.

மறுநாள் அதிகாலை கடமுடாவென்று உருட்டும் சத்தம் கேட்டு கண்விழித்த ஆராயி வாசலில் நிற்கும் வள்ளிமயிலின் கோலத்தைப் பார்த்து அப்படியே திடுக்கிட்டுப் போய்விட்டாள்.

தூக்கிச் செருகிய கொண்டை, தார் பாய்ச்சிய இறுக்கமான சேலைக்கட்டு. வலக்கையில் பாளை சீவுற அரிவாள். தோளில் நெஞ்சப் பட்டை. தளைநார் காலடியில், பனையில் கட்டும் கலயம். ஒரு பனையேறிக்குரிய தோற்றம்.

அடியே, உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா? இது என்ன கோலம் பதறினாள் ஆராயி.

அத்தே எதுக்குப் பதறுதீக. நான் பனையேறி பாளை சீவப்போறேன் சர்வசாதாரணமாகச் சொன்னாள் வள்ளிமயில்.

அடியே, வீட்டுக் கொல்லையிலே கப்பும் கிளையுமா வளர்ந்திருக்கே நெல்லிமரம் அதுல கூட பொம்பளையால ஏற முடியாது. பறிக்க தொரட்டி வேணும். பனையேறப் போறாளாம் பனையேற. ஏற்கனவே நான் நொந்து போய்க் கிடக்கேன். நீ எதுக்கடி காலங்காத்தாலே வேஷம் போட்டுட்டுக் கூத்தடிக்க. போய் படுடி எரிச்சலோடு சொன்னாள் ஆராயி.

ஆத்தா, எனக்கு பனையேறத் தெரியும். வா, வந்து பனையில நான் ஏறி இறங்கிறது பாரு. அதுக்குப் பிறகு சொல்லுவே. சீக்கிரமே, இந்த சண்டாளியை விட்டுச் செத்துப் போயிடுவோம்னு நினைச்சோ என்னவோ பனை ஏறுறது பாளை சீவி கலயம் கட்டுறது, நுங்குக் கொலை வெட்டுறது எல்லாம் சொல்லிக் கொடுத்துட்டு என் தெய்வம் போய்ச் சேர்ந்துருச்”

பனையேறச் சாமுண்டி சொல்லிக் கொடுத்தானா’ வியப்புடன் கேட்டாள் ஆராயி.

ஆமா சொல்லிக் கொடுத்தாக அதற்கு மேல் பேசாமல் அப்படியே ”வரில் சாய்ந்தாள் வள்ளிமயில்.

புதைந்து கிடந்த நினைவுகள் புரண்டு வந்தன.

கல்யாணம் முடிந்து பத்து நாட்களாகிவிட்டன. சாமுண்டி அதிகாலையிலேயே பனையேறச் சென்றுவிட்டான். கோழிக்குழம்பையும், வரகரிசிச் சாதத்தையும் எடுத்துக் கொண்டு வள்ளிமயில் தேரிகாட்டிற்குச் சென்றாள். ஒரு பனையின் உச்சியில் காய்ந்த ஓலைகளை வெட்டிக் கீழே தள்ளிக் கொண்டிருந்த சாமுண்டி வள்ளிமயிலைப் பார்த்ததும் அரிவாளை இடுப்பில் செருகிவிட்டு பனையிலிருந்து இறங்கி கீழே வந்தான்.

அவன் உடம்பில் வழிந்தோடிய வியர்வையை முந்தானையில் துடைத்துவிட்டவாறு, மச்சான், பனை உச்சியிலிருந்து பாத்தா ஊரு உலகமெல்லாம் தெரியுமில்ல என்று கேட்டாள்.

ஆமா வள்ளி தெரியும். உரத் தொழிற்சாலையோட புகைபோக்கி, தூத்துக்குடி போற ரோடு, திருச்செந்தூர் கோயில் கோபுரம், நீலக்கடல் எல்லாம் தெரியும் என்றான்.

வள்ளிமயில் சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் ஏதோ யோசிப்பது மாதிரித் தெரிந்தது.

என்ன வள்ளி என்ன யோசிக்க?

நா ஒண்ணு கேட்பேன் சரின்னு சொல்லுவீகளா

வள்ளி, உன் கழுத்தில தாலி கட்டும்போது இனி இந்த உ”ரும், உடம்பும் வள்ளிமயிலுக்குத்தான்னு மன”க்குள்ளே சொல்லிக்கிட்டே முடிச்”ப் போட்டேன். என்ன வேணும் தாயி, சொல்லு

வள்ளிமயில் ”ற்றிலும் நெடு நெடுவென்று வளர்ந்திருந்த பனை மரங்களைப் பார்த்தாள்.

மச்சான் சின்ன வய”லேயே பனை ஏறணும்னு எனக்கு ஆசை. எங்க அப்பாகிட்ட கேட்டேன். நம்ப சாதி பொம்பள எவளுக்கும் வராத ஆசை உனக்கு வந்திருக்கு பாரு. ஆம்பிளங்க தான் பனையேற முடியும்னு சொல்லிட்டாரு. எங்க அண்ணன்கிட்ட கேட்டேன். அரிவாளைத் தூக்கி காண்பிச்சான். பொறந்த வீட்டுல இந்த பாவி மகளுக்கு நிறைவேறாத ஆசையை புருஷன் தான் மச்சான் நிறைவேத்தணும்.’’

இன்னிக்கு இப்பவே பனை ஏறச் சொல்லிக் கொடுங்க. பயப்படாம ஏறுவேன் என்றாள்.

சாமுண்டி பதறிப் போய்விட்டான்.

வள்ளி, இது என்னம்மா எந்த பொம்பளைக்கும் வராத ஆசை. சேலை வேணும், கொலு” வேணும்னுதான் புருஷன்கிட்ட கேட்பாங்க... பனையேறணும்னு ஆசைப்படுறியே....பனையோட உசரத்தைப்பாரு...ரொம்ப சிரமம் வள்ளி’

மச்சான் சிரமம்னு நினைச்சா மாடிப்படியில ஏறுரது கூட சிரமம் தான். உடம்புல வலு, நெஞ்”ல வைராக்கியம் இந்த ரெண்டும் இருந்தா எதையும் சாதிக்கலாம். இதுல ஆம்பிள பொம்பளன்னு எதுக்குப் பார்க்கணும். நீங்க மட்டும் எப்படி ஏறணும்னு சொல்லிக் கொடுங்க ஏறிக்காட்டுறேன்.

சாமுண்டியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச ஆரம்பித்தாள் வள்ளிமயில்.

வள்ளி நீ, ரொம்ப ஆசைப்படுறதால மரம் ஏறச் சொல்லித் தாரேன். ஆத்தாட்ட சொல்லிடாதே. ஊரக்கூட்டி ஒப்பாரி வைக்கும்.இந்த அடிமரத்தைப் பாரு செதில் செதிலா இருக்கிறதால கால் விரல அழுத்தமா அதுல வைச்” ஒரு எம்பு எம்பி மேலே பிடிக்கணும். ஓர் அளவு உசரத்துக்கு மேலே ஏறிட்டா காலால வளைச்” மரத்தைப் பிடிச்”க்கிட்டு, இரண்டு கையாலும் மரத்தை மெல்ல அணைச்சிக்கிட்டு, காலத் தளர்த்தி அப்படியே உடல மேல் நோக்கி உந்தணும். கீழேயிருந்து பாக்குறவனுக்கு மரத்தை அணைச்சிக்கிட்டு உட்கார்ந்து எந்திரிக்கிறது மாதிரித் தெரியும். இப்படியே கால்கள மடக்கி மடக்கி மேலே இழுத்து உடல உந்தி நிமிர்ந்து கைகள உசர அணைச்” அணைச்” ஏறிடலாம். ஏறும் போது கவனம் மரத்தில தான் இருக்கணும். காத்து அடிக்கும் போது மரம் மெல்ல ஆடும். திடீர்னு ஓணான் இறங்கும். செங்குளவி கத்தும். எதைப் பார்த்தும் பயப்படக்கூடாது.

இப்ப நான் ஏறிக்காட்டுறேன் பாரு. காலை எப்படி மடக்குறேன். கைகளையும், உடம்பையும் எப்படி முன்னால நகர்த்துறேன் பாரு

சாமுண்டி ஒரு மரத்தில ஏறினான். பாடம் சொல்லுவது போல. வள்ளி காலை எப்படி வைச்”ருக்கேன்னு பாரு...கைய எங்க கொண்டு போயிருக்கேன்னு பாரு பாதிமரம் வரை பலதடவை ஏறி இறங்கிக் காண்பித்துவிட்டு தரைக்கு வந்து என்ன ஏறுறியா என்று கேட்டான்.

ஓ என்றவள் சேலையை வரிந்து வரிந்து கட்டினாள். நெஞ்”ப் பட்டையை அணிந்தாள்.  தாளநாறை காலில் நுழைத்துக் கொண்டாள். கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களைக் கழற்றிவிட்டாள். ஏறப்போகும் பனைமரத்தைத் தொட்டு வணங்கினாள்.

ம்ம்... தைரியமா ஏறு நான் பின்னாலேயே வர்றேன். சாமுண்டியும் தயாரனாõன்.

வள்ளிமயில் அடிமரத்தில் கால் வைத்து மேலே எட்டி அணைத்து மெல்ல ஏறினாள். ஓர் ஆள் உயரத்துக்கு மேலே ஏறினதும் மரத்தின் சொர சொரப்பு குறைவாக இருந்தது. இரு கால் தொடைகளுக்கிடையே மரத்தைப் பற்றி பாதங்களை பக்கவாட்டில் அழுத்தி, அணைத்த கரங்களை மேலே நகர்த்தி உடலை உந்தினாள். உடல் மேலே நகர்ந்ததும், கால்களை உயரே இழுத்து மடக்கினாள்.

“ அப்படித்தான் அப்படியே ஏறு’’ குரல் கொடுத்தவாறு சாமுண்டியும் ஏறினான்.

முதலில் சிரமமாக இருந்தது. ஆனால் மூன்று ஆள் உயரத்துக்கு மேல் ஏறியதும் கையும், காலும் எந்திரம் போல வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன.

ஒரு தேர்ந்த பனையேறி போல் வள்ளிமயில் பனையில் ஏறிக் கொண்டிருந்தாள்.

பனையின் கழுத்துக்கு வந்த பொழுது உச்சியைப் பார்த்தாள். ஒரு பிரமாண்டமான மலரின் இதழ்கள் போல பனை ஓலைகள் விரிந்து படர்ந்திருந்தன.

"மட்டையைப் பிடிச்”ட்டு ஜாக்ரதையா உட்காரு"

மரத்தின் கழுத்து இடுக்கில் கால் வைத்து மெல்ல எம்பி, ஒரு பனைமட்டையில் உட்கார்ந்தாள். சாமுண்டியும் ஏறிவந்து அவள் எதிரில் ஒரு மட்டையில் அமர்ந்தான்.

"பயப்படாம மளமளன்னு ஏறிட்டேயே, வள்ளி, இந்த நேரிக்காட்டுல எந்த பனையேறி பொண்டாட்டிக்கு இந்த துணிச்சல் வரும்"

பெருமிதத்தோடு மனைவியைப் பார்த்தவன் அவள் கரங்களைப் பிடித்து மெல்ல முத்தமிட்டான்.

அவள் முகத்தில் நாணம் படர்ந்தது. "மச்சான், எல்லாம் கீழே வைச்”டலாம் கோபுரம் தெரியுமுன்னு சொன்னீக"

"தெக்கே பாரு புள்ள....இந்த ஓலையை விலக்கிட்டுப் பாரு"

வள்ளிமயில் தெற்கே பார்த்தாள். ஒரு கின்னத்தை கவிழ்ந்தது போல வானம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீலக்கடல். அதன் கரையோரம் கோபுரம், சூரிய ஒளியில் மின்னும் கலசங்கள்.

"தெரியுது மச்சான் தெரியுது...எல்லாமே தெரியுது" கூவினாள் வள்ளிமயில்.

பக்கத்து மரத்திலிருந்து ஒரு பறவை படபடவென்று பறந்து சென்றது.

"மச்சான் நமக்கு மட்டும் பறக்குற சக்தியிருந்தா எப்படி இருக்கும்? இப்படி கால் மாத்தி, கைமாத்தின்னு பனஞ்செரா குத்தி இழுக்கச் சிரமப்பட்டு ஏற வேண்டாமே. பறந்து வந்து பாளை சீவி பதனி இறக்கலாம்" என்றாள்.

"வள்ளி, நடக்குற சக்திய வைச்சுக்கிட்டே இந்த மனுசப் பயலுக செய்ற அக்ரமத்துக்குக் குறைச்சலேயில்லை. பறக்கவும் தெரிஞ்சா கேட்கவே வேண்டாம். பறந்து பறந்து அக்ரமம் செய்வாங்க..." பூமி தாங்குமா...சரி, பாளை சீவுறது, பதனி கட்டுறது எல்லாம் எப்படி செய்யணும்னு சொல்லுறேன் கேட்டுக்கோ.

ஒவ்வொன்றாக அவன் சொல்லச் சொல்ல வள்ளிமயில் கவனமாகக் கேட்டாள்.

சரி வள்ளி பசிக்குது இறங்குவோமா, அதே மாதிரித் தான். அதிகம் சிரமம் இருக்காது. ஆனா அவசரப்படக்கூடாது.

வள்ளிமயில் முதலில் இறங்கினாள்.

சாமுண்டி அவளைத் தொடர்ந்தான். தரையைத் தொட்டதும் அப்பனை மரத்த மீண்டும் வணங்கினாள்.

மச்சான், வாங்க ஓடையிலே போய்ச் சாப்பிடலாம்

ஓடை ஓரம் மஞ்சணத்தி மர நிழலில், குறு மணல் பரப்பில் அமர்ந்தனர். வரகரிசிச் சாதத்தில் கோழிக் குழம்பை ஊத்தி சாமுண்டியின் முன் வைத்தாள்.

அவன் பிசைந்து ஒரு கவளம் எடுத்து முதலில் வள்ளிமயிலுக்கு ஊட்டினான்.

ஆளுக்கு ஒரு வாய் என்று மாறி மாறிச் சாப்பிட்டு விட்டு ஓடையில் கை கழுவி நீரை அள்ளி அள்ளிப் பருகினர். மறுபடியும், நிழலுக்கு வந்தமர்ந்தனர்.

ஊமை வெய்யில் தேரிக்காட்டில் படர்ந்திருந்தது. பாளைச் சீவல்களைத் தின்ன வரும் ஆட்டு மந்தைகளை காணவில்லை. செம்மண் புழுதி பறக்கச் ”ழன்று  ”ழன்று வீ”ம் காற்று கூட அடங்கிக் கிடந்தது. வள்ளிமயிலை மெல்லத் தன் பக்கம் இழுத்தான் சாமுண்டி. மார்பில் சாய்ந்தவள் அவன் பரந்த தோள்களைத் தழுவியவாறு குறுமணலில் சரிந்தாள். இறுக்கமான அந்தச் சூழலில்  இரு உடல்கள் எதையோ வேகமாகத் தேடித் தேடி பின் அடைந்துவிட்ட மனநிறைவில் மெல்ல விலகின’’

ஆத்தா, வள்ளி, வள்ளி மயிலு ஆராயி உலுக்கியதும் நீண்ட பெருமூச்சோடு பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டாள்.

அத்தே, உங்க மகன் எனக்குப் புருஷனா மட்டும் இருக்கல. பனையேறும் வித்தை கத்துக் கொடுத்த குருவாகவும் இருந்தாரு. குருவோட நினைப்புகள் நெஞ்”க்குள்ள வைச்சு பூஜை செய்யுற யாருக்கும் சோர்வு, தோல்வி, பயம் எதுவும் அண்டாதுன்னு பெரியவங்க சொல்லுறத கேட்டிருக்கேன். என் சாமி தழுவித் தழுவியேறிய ஒவ்வொரு பனையும் என்ன மாதிரியே அவர் இறந்த துக்கத்தில் ஊமையா உள்ளுக்குள்ள அழுதுகிட்டிருக்கலாம். இந்த ஏழை வள்ளிமயிலை அதுக என்னிக்கும் காக்கும், கவலைப்படாம இருங்க பாளை அரிவாளை இடுப்பில் செருகிவிட்டு தேரிக்காட்டை நோக்கி வள்ளிமயில் நடந்தாள்.

Pin It