கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் மின்சாரப் பஞ்சத்தில் உழன்று கொண்டிருக்கும் தமிழகத்துக்கு கொடுப்பது தொடர்பாக பிரதமர் நல்ல முடிவை எடுப்பார் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறிக்கொண்டிருக்கிறார்.இன்னும் 10 நாட்களுக்குள் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலை இயங்கத் துவங்கும் என்றும், தமிழகத்தின் மின் பற்றாக்குறையினைப் போக்குகின்ற செயலினை (இதன் மூலம்) தொடங்கிவிட்டதாகத் தமிழ்நாடு முதல் அமைச்சர் மே 5 ஆம் தேதியன்று தெரிவித்துள்ளார்.

அடிப்படையானபாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து முழுமையான ஆய்வுகளும், நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்படாமலேயே துவங்க இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு முழுமையாகக் கொடுக்கப்பட்டாலும் மாநிலத்தின் மின்சாரப் பஞ்சம் தீரப் போவதில்லை என்பதுதான் உண்மை நிலை. ஆனால் அதே நேரத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் துணையின்றி தமிழகத்தின் மின்சாரப் பஞ்சத்தினைத் தீர்த்திட நிரந்தர வழி தமிழ்நாட்டிலேயே உள்ளது.இருந்தும் என்ன காரணத்தாலோ அது குறித்து அமைச்சர் நாராயணசாமியோ, தமிழக முதல்வரோ பேசுவதை இன்றுவரைதவிர்த்தே வருகின்றனர்.

கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின்அதிகபட்ச  இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால்அதிக பட்சமாக அதனால் 800 மெகாவாட்டையே உற்பத்தி செய்ய முடியும்.மின்சாரம் கம்பிகளில்கடத்தப்படும்போது 20% இழப்பு உண்டாகும்.எனவே அதில் இருந்து பயனீட்டாளர்களுக்குக் கிடைக்க வாய்ப்புள்ள மின்சாரத்தின் அளவு வெறும் 640 மெகாவாட் மட்டுமே.இரண்டு அணு உலைகளின் மொத்த உற்பத்தியும் தமிழகத்திற்கு வழங்கப்படுகின்றது என்று வைத்துக் கொண்டாலும்கூட, அவற்றில் இருந்து கிடைக்கப்போவது வெறும் 1280 மெகாவாட் மட்டுமே.

இன்றைய தேதியில் தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது சுமார் 3000  4000 மெகாவாட் ஆக இருக்கிறது.2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மின்சாரம் முழுவதுமே தமிழ்நாட்டிற்குக் கிடைத்தாலும் கூட அடுத்த மூன்று ஆண்டுகளில் உருவாகப்போகும் மின் பற்றாக்குறையில் ஆறில் ஒரு பங்கை மட்டுமே அதனால் ஈடு செய்ய முடியும்.

புதிதாக 3800 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் திறக்கப்படும் என்று 26.3.2012 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.2013 தொடக்கத்தில் இயங்க வாய்ப்புள்ள இந்த மின் நிலையங்களால் 2013 கோடையில் சுமார் 3300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்பதுதான் மின் நிபுணர்களின் எதிர்பார்ப்பு. இந்த மின் உற்பத்தி நிலையங்களைத் தவிர 600 மெகாவாட் மற்றும் 1000 மெகாவாட் திறனுள்ள இரண்டு மின் நிலையங்கள் எண்ணூரில் உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால், இவை செயல்பாட்டுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவே.எனவே, 2015 ஆம் ஆண்டில் உருவாகவுள்ள 7300 மெகாவாட் பற்றாக்குறையில் கூடங்குளத்தின் மின்சாரம் முழுமையாகக் கிடைத்தாலுமே வெறும் 4580 மெகாவாட்டை மட்டுமே ஈடு செய்திருக்க முடியும். சுமார் 2700 மெகாவாட் பற்றாக்குறை தொடர்ந்து கொண்டிருக்கும்.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் ஓசைப்படாமல் சுமார் 18,500 மெகாவாட்டுக்கான மின் நிலையங்கள் தனியார் நிறுவனங்களால் கட்டப்பட்டு வருகின்றன. நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவை உபயோகிக்கும் இந்தப் புதிய மின் நிலையங்களில் சுமார் 3000 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்கள் அடுத்த சில மாதங்களில் மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ளன.வணிக மின் நிலையங்கள் என்றழைக்கப்படும் இந்த மின் நிலையங்களுக்கு அனைத்துச் சலுகைகளையும் அரசு வழங்கியிருக்கிறது. என்றாலும் கூட அவை தம் மின்சாரத்தைத் தமிழகத்திற்கு அளிக்காமல் அவர்களது மின்சாரத்திற்கு இந்தியாவிலும், தெற்கு ஆசியாவில் உள்ள இலங்கை, பாகிஸ்தான், மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளிலும் யார் அதிக விலை கொடுக்கத் தயாராய் உள்ளார்களோ அவர்களுக்குக் கொடுப்பதற்கான தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. அவற்றின் செயல்பாட்டை 2003 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டம் சட்ட ரீதியில் சரி என்று நியாயப்படுத்தவும் செய்கிறது.

மின்சாரப்பஞ்சத்தில் மாநிலம் உழன்று கொண்டிருக்கும் போது அதைப்பற்றிக் கவலையேதும் கொள்ளாது மாநிலத்தின் அனைத்து இயற்கை வளங்களையும் உபயோகித்து, மாநிலத்தின் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பிற மாநிலத்திலும், நாடுகளிலும் உள்ள பணம் படைத்தோருக்கு விற்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

2001 ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு மின்சார வாரியம் லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.எனவே அதனிடம் அந்த ஆண்டுவரை புதிய மின் நிலையங்களை அமைப்பதற்கான நிதித் திறன் இருந்தது.2001 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் முதல்முறையாகத் தனியார் மின் நிலையங்கள் நிறுவப்பட்டன.அவற்றிடம் இருந்து அதிக விலையில் மின்சாரம் வாங்க வேண்டும் என்று 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் மின்சாரச் சட்டங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தை நிர்ப்பந்தப்படுத்தின. மாநிலங்களின் சுயாட்சியைப் பறிப்பதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட இந்தக் கொடுங்கோல் சட்டங்களின் சிகரமாய் விளங்குவதே 2003 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மின்சாரச் சட்டமாகும். இதன் காரணமாக, லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று சுமார் 53000 கோடி நஷ்டத்திற்கு உள்ளாகியது.புதிய மின் நிலையங்களை அமைக்க அதனிடம் நிதி இல்லாமல் போனது.

ஆனால், 2001 இல் இருந்து தமிழ்நாட்டில் மின் உற்பத்தித் தொழில் தொடங்கிய முதலாளிகளோ தமிழக மின்வாரியத்தை சட்டத்தின் துணையோடு கொள்ளையடித்ததன் மூலம் கிடைத்த பணத்தின் உதவியுடன் இன்று நாடு முழுவதும் பல்லாயிரம் மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களை நிறுவிக்கொண்டிருக்கிறார்கள். மின் நிலையங்களை அமைப்பதற்கான தமிழ்நாட்டின் மிகச் சிறந்த இடங்களைக் கைப்பற்றியுள்ளார்கள்.மத்திய, மாநில அரசின் சலுகைகளுடன் அவர்கள் சுமார் 18,500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்களை ஓசைப்படாமலும், விரைவாகவும் நிறுவிக் கொண்டிருக்கிறார்கள்.மின்சாரத்தைத் தமிழக மின்வாரியத்திற்கு மக்களால் ஏற்புடைய விலைக்கு விற்க மறுக்கிறார்கள்.கூடுதல் விலை கொடுக்க முன்வரும் பிற மாநில மற்றும் நாடுகளில் உள்ள பணம் படைத்தோருக்கு விற்பதற்கான ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும், ஆய்வுகளும் முழுமையானவை அல்ல என்பது நிறுவப்பட்ட உண்மையாகும்.இதனைப் பொது வெளியில் விவாதிப்பதற்கான வாய்ப்பினை மாநில அரசும், மத்திய அரசும் இன்றுவரை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.அரசினால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழுக்கள் கூடங்குளம் பகுதி மக்களையும், மக்களின் நிபுணர் குழுவையும் சந்தித்து வெளிப்படையாக விவாதிப்பதை இன்றுவரை மத்திய மாநில அரசுகள் தடுத்தே வந்திருக்கின்றன. 2011 மார்ச்சில் ஏற்பட்ட ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலை விபத்திற்குப் பிறகும்கூட இந்த நிலைப்பாட்டை மத்தியமாநில அரசுகள் கைவிட மறுத்து வருகின்றன.

""அணு சக்தித் துறை சார்ந்த தகவல்களையும் பிற துறைகளைப்போலவே வெளிப்படையாக முன் வைக்கவேண்டும்; மறைத்தல் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடக்கூடாது; கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை அரசு வெளிப்படையாக மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்''  என்று மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர் திரு.சைலேஷ் காந்தி 26 மார்ச் 2012 அன்று பிரதம அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்பதை இங்கு மனதில் கொள்ள வேண்டும்.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் 2008 ஆம் ஆண்டிலிருந்து நிலவிவரும் மின்பஞ்சத்தைக் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மட்டுமே தீர்க்க முடியும் என்று மத்தியமாநில அரசுகள் கூறிவருவது இரண்டு அடிப்படையான பேராபத்துகளைத்  தமிழக மக்களுக்கு உருவாக்கியுள்ளது:

1)   தமிழகத்தின் மின்சாரப் பஞ்சத்திற்கு மூலக் காரணமாக இருக்கும் தனியார் மின் உற்பத்தியாளர்களையும், அவர்களது நலன்களைத்  தூக்கிப்பிடிக்கும் 2003 மின்சாரச் சட்டத்தினையும் அது மக்களிடம் இருந்து மறைத்துள்ளது. தமிழ்நாட்டிலேயே பணம் படைத்தோருக்காக  தனியார்களால் கட்டப்பட்டுவரும் 18.500 மெகாவாட் மின் நிலையங்களின் மீது தமிழக மக்களுக்கு உள்ள அடிப்படை உரிமை குறித்த விவாதங்களை அது தடுத்து விட்டிருக்கிறது.

2) கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகள் குறித்த வெளிப்படையான விவாதத்தை அது தடுத்து விட்டிருக்கிறது. இதன் மூலம், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஏற்பட வாய்ப்புள்ள விபத்துகள் குறித்தும், அவற்றிலிருந்து தமிழக மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் தேவைப்படும் அனைத்து அறிவியல்பூர்வமான தகவல்களையும் அது இல்லாமல் செய்துள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முழுமையான மின் உற்பத்தியும் தமிழகத்திற்குக் கிடைத்தாலுமே அதனால் தமிழகத்தின் மின்சாரப் பஞ்சத்தினை சிறிதளவே சரி செய்ய முடியும் என்பதுதான் உண்மை நிலை. ஆனால், அதன் பாதுகாப்பிற்கான முழுமையான ஆய்வுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் அதனை இயக்குவது என்பது எதிர்காலத்தில் நம் இனத்தின் பேரழிவுக்கான காரியமாகக் கூட இருந்து விடக் கூடும். எனவேதான், கூடங்குளம் அணுமின் திட்டத்தினைச் செயல்படுத்துவதில் அரசிற்கு நிதானம் அவசியமாகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மின்சாரம் தொடர்பாக அரசும், பல  அரசியல் கட்சிகளும் முன் வைத்திடும் வாதங்கள் தமிழகத்தின் மின் பஞ்சத்திற்கான உண்மைக் காரணங்களை மறைக்கும் செயலைத்தான் இன்றுவரை செய்து கொண்டிருக்கிறன. இதன் மூலம், தமிழ்நாட்டின் மின்சாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவசியமாகும் உடனடி நடவடிக்கைகளை அவை தடுத்துக் கொண்டிருக்கிறன. தமிழகத்தினை மின்வளம் மிக்க மாநிலமாக ஆக்க வேண்டும் என்றால் இங்கு நிறுவப்பட்டு வரும் 18,500 மெகாவாட் திறனுக்கான வணிக மின் உற்பத்தி நிலையங்களைத் தமிழ்நாட்டிற்கே, நம்மால் சாத்தியப்படும் விலையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு 2003 மின்சாரச் சட்டம் தடையாக இருக்கும் பட்சத்தில், மாநில சுயாட்சி அதிகாரத்தினை இல்லாததாக ஆக்கும் அந்தக் கொடுங்கோல் சட்டத்தினை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், உடனடியாக மாநில அரசு முன்னெடுக்க வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வெளிப்படையான விவாதங்களுக்கு ஏதுவான சூழலை மாநில அரசு உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அப்படிச் செய்யாமல், கூடங்குளம் அணு மின் நிலையம்தான் தமிழக மின் பஞ்சத்திற்கான தீர்வு என்று கூறுவது பிற மாநிலங்களிலும் மற்றும் பிற நாடுகளிலும் உள்ள பணம் படைத்தோருக்கு மின்சாரத்தை அரசின் சலுகைகளுடன் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்து, எவ்வித சமூக அக்கறையும் இன்றி அதனை விற்கின்ற தனியார் வணிக மின் உற்பத்தி நிலையங்களைக் காப்பாற்றும் செயலாகவே இருக்கும்.மாநில உரிமைகளைப் பறிக்கும் 2003 கொடுங்கோல் மின்சாரச் சட்டத்தினை ஆதரிக்கின்ற செயலாகவே அது அமையும். அறிவியல் அடிப்படையிலான முழுமையான பாதுகாப்பு ஆய்வுகளின்றியே, தமிழகத்தின் மின்சாரப்பஞ்சத்தைக் காரணம் காட்டி, உடனடியாகத் தொடங்கவுள்ள கூடங்குளம் அணு உலைகளை உலகத்திலேயே மிகவும் அபாயகரமான உலைகளாக நிலை நிறுத்திடும் செயலாகவும் அது இருந்துவிடக் கூடும்.

Pin It