"வாய்மொழி இலக்கியங்கள் போலவே இனக்குழு, மக்களின் மற்றொரு கலை வெளிப்பாடு, ஆட்டக்கலையாக உலகம் முழுக்க மலர்ந்திருக்கிறது." நாடகத்தின் ஆசிவடிவம் கூட இந்த ஆடும் பாவனைதான். இயற்கையின் சகலசஞ்சாரங்களின் அசைவுகளிலிருந்தும் நடவடிக்கைகளிலிருந்தும் வெளிப்பாடுகளிலிருந்தும் உள்வாங்கிக் கொண்டு தங்கள் உடல்களின் வழி சாராம்சம்மிக்க ஒரு கலையாக மாற்றித்தருகின்ற கலைதான் ஆட்டகலை என்பது.

அவ்வகையான ஆட்டக்கலைஞன் ஒன்றான ஒயிலாட்டம் குறித்த ஒரு சமூகப்பண்பாட்டு அசைவியக்கத்தை நண்பர் முனைவர். ஆ. அழகு செல்வம் நூலாக ஆக்கிக் தந்திருக்கிறார். அழகு செல்வத்தைப்போலவே நானும் விவசாய குடியிலிருந்து வந்தவன். இவ்விதம் உழைக்கும் கூட்டத்திலிருந்து வந்தவர்களுக்கு உடல் சார்ந்த கலைகள் மீது காதல் உள்ளவர்களாக இருக்கின்றனர். எந்த ஆட்டகலையைப் பார்க்கும் போதும் அதோடு இணைந்துவிட மனது துடிக்கின்றது. இது உழைக்கும்வர்க்கத்தின் தொப்புள்கொடி உறவாகத்தான் இருக்கிறது. இவ்விதமாகத்தான் இந்நூலாசிரியர் ஆ.அழகு செல்வத்திடம் "ஒயிலாட்டத்தைக் கற்றேன் எனது மாணவர் இசக்கியிடம் தப்பாட்டத்தையும் கழியல் ஆட்டத்தையும் கற்றேன். சிலம்பாட்டத்தை மதுரை வாத்தியாரிடம் கற்றேன். எல்லாம் முழுமையாக அல்ல. அவர்களோடு இருக்க நேர்ந்த சந்தர்பங்களில் அரைகுறையாகவேனும் கற்க முனைந்தேன். இந்த ஆர்வம் ஏன் ஏற்படுகிறது? உழைப்புசார்ந்த குடிகளின் ரத்தபந்தமாக இந்த ஆட்டக்கலை இருப்பதால்தான்.

இலக்கிய வாசிப்பு அனுபவம் போலவே உடலை வாசிக்கிற அனுபவம்தான் ஆட்டக்கலை. அறிவார்ந்த விசயங்களில் மனதின் சாளரங்களை பண்பாட்டினுள் உறைந்திருக்கும் புதிர்களை வெளியில் நிறைந்திருக்கிற உண்மைகளைக் கண்டு அடைகிற அறிதல்களினால் நேரும் புதிய அனுபவங்களைப் போன்றதே இந்த ஆட்டக்கலையும்.

உலகியல் விசயங்களை, நிகழ்வுகளை, தொழில் செயற்பாடுகளை தங்கள் உடலிலிருந்து ஆட்டக்காரர்கள் வெளிப்படுத்துகின்றனர். அது ஒரு மகத்தான உடல்மொழி. எழுதுபவன் தனது அனுபவங்களை மொழிவழி இலக்கியமாக்குவதுபோல, படிப்பறியா பாட்டாளிகள் தங்கள் உடலின் வழி தொழில் சார்ந்த தங்கள் வாழ்க்கை அனுபவங்களை ஆட்டக்கலையாக மாற்றி முன்வைக்கின்றனர். காட்சி புலன்சார்ந்த கலையைத்தான் அவர்கள் இயல்பாகவே தேர்ந்து கொள்ள முடியும்.

இப்படியான மக்கள் சார்ந்த கலைவடிவங்களில் ஒன்றான ஒயிலாட்டம் குறித்து அழகுசெல்வம் வரலாறு சார்ந்தும், பண்பாடு சார்ந்தும் மண்சார்ந்தும் ஒப்பிட்டு நல்லதொரு மக்கள் பண்பாட்டு நூலை அளித்திருக்கிறார். இந்த நூல் நுட்பமான பார்வைகளோடு சொல்லபட்டிருக்கிறது. அதற்கு முன்னதாக ஒரு விசயத்தைச் சொல்ல வேண்டும். ஊராட்சி மன்ற பள்ளியில் படிக்கிறபோதே. உணவு வழங்க மறுத்த பிள்ளைமார்சாதியைச் சேர்ந்தவரை எதிர்க்க விரட்டபட்ட தலித்மாணவர்களைத் திரட்டி தலைமையேற்று எதிர்த்து கல்லெறிந்திருக்கிறார் அழகுசெல்வம். இந்த உள்ளக்கனல் ஏன் அவ்வளவு சிறுவயதில் அவருள் தோன்றியது? என்றால் இந்த "ஒயிலாட்டத்தின்" அடிப்படை கதை நிகழ்வாகக் கொண்டிருக்கிற நந்தனார் கீர்த்தனைதான். மிகச் சிறுவயதில் அழகு செய்கிற பாத்திரமாக நிறுத்துவார்களாம். அப்படித்தான் நந்தனின் கண்ணீரை மிகச் சின்னவயதிலேயே உணர்ந்ததால் தலித்சிறுவர்கள் சார்பாக நிற்கத் தூண்டியிருக்கிறது. இந்த ஒயிலாட்டம் சக மனிதர்களை நேசிக்க வைத்திருக்கிறது. கலை செய்கிற நல்ல உருமாற்றம் இதுதான். அழகு செல்வத்தைப் பொறுத்தளவில் ஒயிலாட்டம் என்பது அவர் உறுப்பினுள் ஒன்று. இதயம் என்று கூட சொல்லலாம். அதனை நூலாக்கித் தந்திருக்கிறார்.

ஆதிமனிதனுள் ஆட்டக்கலை உண்டான விதம் வரலாற்றிலும் இலக்கியத்திலும் உயிரோட்டமுள்ள பகுதியாக மாற்றியுள்ளவிதத்தை ”ருக்கமாகவும் செறிவாகவும் தொட்டுக்காட்டியிருக்கிறார். வாழ்வியலின் பல்வேறு அம்சங்கள் சாராம்சமாகத் திரண்டு ஆட்டக்கலை என்ற பாவனையாக மாறியுள்ள திறத்தை, நூல் நெடுக அடையளப்படுத்தி இருக்கிறார்.

போர்வெற்றிக்குப் பின்னான அரச உலாவல் முன்தேர் குரவை, பின்தேர் குரவை ஆட்டங்களை ஆடுவதைத் தொல்காப்பியம் பதிவு செய்திருக்கிறது. தொல்காப்பியம் ஆட்டக்கலையின் பல்வேறு பகுதிகளைப் பண்ணாத்தி வேத்தியல், பொதுவியல், வேலன்வெறியாட்டு, களவேள்வி என்ற விதத்தில் விரித்தோதுவதை வரலாற்றியல் நோக்கில் எடுத்துவைக்கிறார்.

"கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடி பாவை போல' என்ற குறுந்தொகைப் பாடல்

பிரதிபலிப்பு என்ற ஆட்ட நோக்கை வெளிப்படுத்துவதைக் காணலாம்.

துணங்கை கூத்து, துடி, அல்லியம், தோனி போன்ற ஆட்ட நிகழ்வுகள் பற்றிய விளக்கம் மிக சரியாகவே இருக்கிறது. "தோனி' என்பது தோளில் காவடி, கரகம் போன்றவற்றை வைத்து தொடாமல் சுழற்றி ஆடுவதைக் காட்டுகிறார்.

பாணர் மரபு இந்தியா முழுக்க இருந்திருக்கிறது. உத்ராஞ்சல், பீகார், ஜார்க்கண்ட், வங்காளம், ஒரிசா பகுதிகள் கோண்டுகளின் தேசம் என்று அழைக்கப்படுகின்றது. கொண்டு என்றால் பாணர் மரபினர். யாழ்பாணம்போல பாணர்களின் தேசம் இது. சமீபத்தில் வங்களாம் சென்றிருந்தபோது நீண்டதண்டில் பொருத்திய இசை கருவியை வாசித்தபடி ஊர்ச் சுற்றிக் கொண்டிருந்த ஒரு பாணனைப் பார்க்க முடிந்தது. நூலாசிரியர் தொல்காப்பியம் முதற்கொண்டு இன்றளவு தொடர்ந்து வருகிற விசையோடுகூடிய ஆட்டக்கலைகளையும் கலைஞர்களையும் அடையாளப்படுத்தியிருக்கிறார் இந்நூலில்.

மையமாக ஒயிலாட்டத்தையும் அவ்வாட்டத்தோடு தொடர்புடைய நந்தனார் கீர்த்தனையையும் எடுத்துக்கொண்டு விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். ஏயில் ஆட்டத்திலும் பாடலிலும் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணங்களை சமூக உளவியல் சார்ந்து தொட்டுக்காட்டும் இடம் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியது.

நந்தன் தன் பக்தியை நிறுவிய பின் வேதியர்கள் பாடியதாகப் பாடப்படும் பகுதியை சமீபகாலங்களில் பாடுவதில்லை என்று நுட்பமாக முன்வைக்கிறார் அவ்வரிகள்.

"பக்தியே முதலென்று பழகிய பெரியவர்

சிக்கமுந் தெளிந்து தெய்வமே நீரென்று' என்ற இருவரிகளை விட்டு மூன்றாவது வரியான "புத்தியும் வந்தது பத்தியுமானது' என்று பாடி முடிப்பதில்உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த ஒயிலாட்டத்தை நடுநிலை சாதியார்களே இன்று அதிகம் ஆடுவதையும், தொழில்முறைசார்ந்த தலித் கலைஞர்கள் ஆடுவது மிகவும் குறைந்துவிட்டதையும் குறிப்பிடுவதில் இருந்தும் ஒயிலாட்ட வாத்தியார் கிராமக்கோயிலின் முன் சிறு குளம்போல பள்ளம் செய்து தீண்டாக்கி அதைத்தாண்டி குறித்து கோவிலினுள் சென்று இறைவனோடு கலந்துவிட்டதாக நடத்துகிற சடங்கு முக்கியமான செய்தியை உணர்த்துகிறது. ஒயில்  ஆட்டமும் அதனோடு தொடர்புடைய நந்தனார் கீர்த்தனை கதைப்பாடலும் இடைநிலை சாதியாரின் வசமாகிவிட்டதைக் காணலாம். ஆனாலும் நாட்டுப்புற ஆட்டக் கலை தனி மனிதன் சார்ந்து இலங்காமல் குழு சார்ந்து இயங்கும் அதன் உயிராம் சத்தைச் சரியாகச சொல்லி இருக்கிறார். குறிப்பிட்ட என்ற நிலையிலிருந்து மாறி பொதுவானது என்ற நிலைக்குச் செல்லும் அதன் உயரிய அம்சம் என்றும் அழியக்கூடாத ஒன்று. நடுநிலை சாதியா@ர அதிலும் கூடினால் கூட ஆட்டத்தைத் தொடங்குவதற்கு முன் ஊர் மந்தையைச்”ற்றிவந்து ஆடுவதில் ஒரு சடங்கை  பொதுத் தன்மையாக்கியிருப்பதையும் இனம் காட்டுகிறார்.

ஆட்ட நிகழ்வுகூட மையக்கூறு துணைக்கூறாகவும், துணைக்கூறு மையக்கூறாகவும் மாறி மாறி அமைகிற சிறப்பான அம்சத்தில் உள்ள பொதுமைப் பண்பை அறியலாம்.

ஒயிலாட்டத்தின் ஒவ்வொரு அடிவரிசையை விளக்கும் விதத்தைக் கொண்டு நாம் ஆடிவிட முடியும். ஆட்டத்தில் புரளல் என்பது ஒரு அடிவரிசையை விளக்கும் விதத்தைக் கொண்டு நாம் ஆடிவிட முடியும். ஆட்டத்தில் புரளல் என்பது ஒருஅடிவரிசை. அதனை இடதுபக்கப் புரளல் மேலே ஏறிச் செல்வதற்கும், வலது பக்கப் புரளல் கீழே இறங்கி வருவதற்கும் ஏற்ற முறை என்பதை விளக்கும் விதம் சிறப்பு. "கொட்டு' கதிர் அடிப்பதுபோல, "நாலடிமுகம்' எல்லாரிசைகளிலும் தேடுவதுபோல குனிந்து கைகொட்டு தலை கதிரனுதல்ல போல என ஆட்ட அடிவரிசைகளை தொழிற்பயன் பாட்டிலிருந்து உருவாகிவந்த ஆட்டக்கலையாக இனம் கண்டிருக்கிறார்.

கூடுதலாக இந்த அடவுகளுக்கு கோட்டோவியங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் சிறப்பாக  இருந்திருக்கும். கால்களை விரைபாக  இல்லாமல் தெய்வான நிலையில் ஆடும்போது கூடும் அழகும், நின்ற இடத்திலேயே குரித்தாடுபவனின் சிறப்பான ஆட்டக்காரனின் வெளிப்பாடும் குறித்து விளக்கும் இடம் அழகு செல்வம் கலைஞனாக இருப்பதினாலேயே இயல்வதாகியிருக்கிறது. இந்த ஆட்டம் ஆட்டக்காரர்களோடு தொட்டும் பார்வையாளர்களோடும் தொட்டும் ஆகும் அரவனைப்பை கொண்டிருக்கிறது. பரத கலைஞர்களிடமிருந்து வேறுபட்ட ஒன்று. இன்னொரு அம்சம் எத்தனை ஆட்டக்காரர்களையும் சேர்த்து விரித்துக் கொண்டே செல்லமுடியும். நாட்டுப்புற ஆட்டத்தின் இந்த அரவணைப்பு என்பது மகத்தானது.

பெரும்பாலும் ஒயிலாட்டம் பெண்கள் ஆடுவதில்லை. இதற்கான எளிய காரணமாக கைகளை உயரேத் தூக்கி, நெளித்து ஆட்டி ஆட வேண்டியிருப்பதாலும், ஆட்டத்தில் உடலின் மேற்பகுதி மென்மையானதாகவும், கீழ்ப்பகுதி வலிமையானதாகவும் வெளிப்படுவதை காட்டுகிறார். ஆனாலும் பெண்கள் ஆடக்கூடிய விதத்தில் அழகு செல்வம் பயிற்சி அளித்து வருகிறார் என்பது எனக்குத் தெரியும். இது கலையை ஜனநாயகப்படுத்துகிற செயல்.

வாத்தியார் பாடுவதில் மேவிரண்டு வரிகளைத் திருப்பப்படுதலை வாங்கிப்பாடுதல் என்றும் மெதுவான அடவினை "தக்கு' எனவு வேகமான அடவிளைக் காலம் எனவும் ஆட்ட குறிப்பு மொழிகளை நுட்பமாக விளக்கிக் செல்கிறார். இசைக் கருவிகளும் காலில் கட்டிய சலங்கை ஒலியும் வாத்தியாரின் பாடலும், குழுவினர் பாடுவதும் ஒலி வழியாகச் செய்தி தந்து ஆட்ட நிகழ்வினை அழகுறச் செய்கின்றன என்று விளக்கும் பாங்கு அவரும் ஒரு ஆட்டக்கலைவாத்தியார் என்பதால்தான்.

சிறிய நூல் என்றாலும் செறிவான நூலை எழுதியதற்காக அழகு செல்வத்தை இருகரம் நீட்டி வரவேற்கிறேன். கலைகள் மீது விருப்பமுள்ளவர்களும் கலைகளே மனிதனை மகத்துவமாக்கிறது என்று நம்புபவர்களும் இந்நூலை வரவேற்பார்கள். நம்மை சிறிதேனும் உயர்த்திக்கொள்ள அழகு செல்வத்தின் "ஒயிலாட்டம்' நூல் பயனளிக்கும். இனியேனும் அழகு தொடர்ந்து தீவிரமாக ஆய்வுத்துறையில் இறங்க வேண்டும். என் சகத்தோழன் என்பதால் அல்ல. அவரின் பன்முக அனுபவங்கள் தமிழ்வாசகர்களுக்குப் பயன்படும் என்பதால்தான். என் இலக்கியத்தின் சகப்பயணியாக வரவேண்டும் என்ற உள்ளார்ந்த என் விருப்பத்தையும் கூறி நிறுத்துகிறேன்.

Pin It