ரகசியமாய் காதலிப்பவர்களுக்கு
ஓடிப்போகிறவர்களுக்கு
ஊரறிய தாலிக்கட்டிக் கொள்பவர்ளுக்கு
எல்லோருக்கும்
குழந்தைகள் பிறக்கின்றன.

முன் முடிவுகள் ஏதுமற்ற தருணத்தில்
உண்டாகின்றன குழந்தைகள்
உருப்பெரும் எல்லாக்குழந்தைகளும்
உலகத்திற்கு வருவதில்லை

ரத்தக்கோளங்களாய்
உருளும் பருவத்தில்
சில குழந்தைகள்
கொண்டாட்டத்தையும்
சிலகுழந்தைகள்
வெறுப்பையும் பெற்றுக்கொள்ளும்

வரம் வாங்கி வந்ததாகவும்
சாபம் பெற்றதாகவும்
உண்டாக்குபவர்களே
தீர்வு சொல்கிறார்கள்

செத்துப் பிறந்த குழந்தைகள்
புண்ணியம் செய்திருக்க கூடும்
ஆஸ்பத்திரிக்கட்டிலில்
யாருமற்று கதறும் குழந்தை
யாரின் சாபம் பெற்றது.

எந்தக் கடவுளின்சாபம்
குழந்தைகள் காப்பகம்
”சுடுகாடாய் காட்சியளிப்பதை
மௌனமாய் கடந்து செல்கிறோம்
குழந்தைகள் இல்லாத
கோடீஸ்வரனின் வீட்டை

நாய்க்குட்டிகளாய்
விளையாடிக்கொண்டிருக்கும்
குழந்தைகளின் ஓலைக்குடிசை மீது
வெள்ளைநிலா
சிரித்து பால்பொழிவதை
நிறைய தடவை பார்த்திருப்போம்

அழுத்துகின்றன
யார் யாரோ செய்த குற்றங்கள்
குழந்தைகளின் தலைகளை

பணம் கொடுத்து வாங்க முடியாத
ஏதோ ஒன்றை
குழந்தைகளின் கண்களில்
ஒளித்துவைத்திருப்பதை உணராதவர்கள்
கருக்கலைப்புக்கு தயாராகிறார்கள்

குழந்தைகளை பெற்றெடுப்பது
எதற்காகவென்று பெற்றோருக்கும்
யாருக்கு குழந்தையாக
பிறக்கப்போகிறோமென
குழந்தைகளுக்கும் தெரியாமல்
பிறந்து கொண்டேயிருக்கின்றன
எல்லாவீடுகளிலும்

அப்பா வைப்பாட்டியின் வீடே
கதியாகிவிட
குடிக்கு அம்மா
அடிமையாகிவிடுகிறபோதில்
நடுத்தெருவாகிறது
குழந்தைகளின் வீடு
*****************************************************
சேஷம்மாவும் பென்சில் மரமும்
ஏசு கோவில் கை பம்பு
அவளுக்காகவே
அதிகம் சுரந்தது

அம்மாவிற்கும் இரண்டு குடம்
அடித்துக்கொடுத்து
அடுப்புத்தள்ளி
காக்காப் பிடித்தாள்
தங்கையின் குழந்தையை
தூக்கி வைத்திருக்க
தவறாமல் வருவாள்

எனை விரும்புவதாய்
என் நோட்டுப்புத்தகத்தில்
தப்புத்தமிழில் குறிப்பிட்டிருந்தாள்

செவ்வந்தி பொழுதொன்றில்
ஒழுங்கெடுக்கும்
எனைப்பார்த்துக்கொண்டே
தண்ணீரெடுத்து வந்தவள்
தவறவிட்டாள் கும்பகோணத்தவலையை
பொன்மரகிளைத்தடுக்கி

தடுக்கிய கிளை வெட்டினேன் துரிதமாய்
தோழியர்கிண்டலில்
தொலைந்துபோனதாய்
பனியிரவில் பகிர்ந்தாள்

பாதாம் கொட்டைகள் சேகரித்து
நறுக்கித் தந்து பாசம் வளர்த்தவள்
பாண்டிச்சேரிக்கு
தாலிக்கட்டிக் கொண்டுப் போனாள்

பெரும்புயலில்
அடிபெயர்ந்த பென்சில் மரம்
பிணமாய்கிடந்தது வாசலில்
வாள்கொண்டு அறுத்தவர்கள்
சொல்லக்கேட்டேன்
நல்ல வைரம் என்று

என்னைப் போலவே
இத்தனை ஆண்டுகளாய்
அதுவும் அவளை நினைத்திருந்ததோ
என்னவோ.
Pin It