ஊர் விழிக்கும் முன்னே மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பிவிட்டாள் அழகம்மாள். ஊரைத் திரும்பிப் பார்த்தாள். பார்க்கப் பார்க்க மனசு வெறுமையாய் மூடி கவிந்தது. கீழ்த்தெருவே வெறிச்சோடிக் கிடந்தது.ஒவ்வொரு வீடும் கலையிழந்து காரணம் அறியாத ஒரு வேதனையில் கனத்து மங்கலாய் இருள் படர்ந்துவிட்டது. சின்னப் பாப்பாவைத் தோளில் தூக்கிக் கொண்டாள். பெரிய பாப்பாவை நடத்திக்கொண்டு வருகிறாள். எல்லோரும்முன்னமே போய்விட்டிருந்தார்கள். இவள் மட்டுமே கடைசியாய் மிச்சமென கிளம்பி விட்டாள்.

தாழிடப்பட்ட கதவுகளின் உள்ளில் சோகங்களின் கூடு கட்டிய குழவிகளும் பூச்சிகளும் வசிக்க ஆரம்பித்துவிட்டன. இனி தாங்காதென முடிவெடுத்தவள்தான் அழகம்மாள்.

மாதாகோயில் மணியோசை வெளியெங்கும் கிழித்துக் கேட்கிறது. எல்லோரும் சுதாகரித்துப் பரபரக்கிறார்கள். அக்கம் பக்கத்து ஊரெங்கும் மனித சஞ்சாரம்.

கூட்டம் கூட்டமாய் மணியோசை வந்த திக்கை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார்கள். மணியோசை கேட்டாலே எல்லோர் முகத்திலும் கொஞ்சம் உயிர்க்களை வந்து விடுகிறது. மிச்சம் மீதியான உசுரெல்லாம் இந்த மணியோசை வரும்போது துளிர்த்து விடுகிறது.

கண்ணுக்கெட்டும் தொலைவுவரை வயலும் காடும் பொட்டலாய்ப் பொசுங்கிக் கிடக்கிறது. ஓர் அருகுகூட பச்சையாய் தலைநீட்டவில்லை. பேடைக் கரிச்சான்கள் எங்கோ இடம் பெயர்ந்து விட்டன. எல்லோரும் கண்ணீரை முடிந்து போகிறார்கள். எல்லோர் கால்களிலும் பாளம் பாளமாய் வெடித்துகீற்றுகளிட்ட இடத்தில் ரத்தக் கசிவு. மாதாக்கோயில் மணியோசை சுண்டியிழுக்க எல்லோரும் ஓடுகிறார்கள்.

மாதாக்கோயிலே மனித வெள்ளத்தில் மிதக்கிறது. அக்கம் பக்கத்திலுள்ள கிராமத்திலிருந்தெல்லாம் சனங்கள் கூடிவிட்டார்கள். வாய்கள்முணுமுணுக்கின்றன. வார்த்தைகள் ஒடுங்கிவிட்டன. அழகம்மாள் தன் குழந்தைகளோடு வந்திருந்தாள். அவள் வாழ்வு தொண்டைக்குள்ளேஅடைத்தது. அவள் அப்பா ரொம்ப தூரத்திலுள்ள, வடக்காலுள்ள ஊரின் தோப்பில் கண்ணும் காதும் கேட்காத அம்மாவை வைத்துக்கொண்டு ஜீவிக்கிறார். அவளுக்கு வாய்த்த வாழ்க்கை அப்படி. புண்ணியம் செய்தவன் புருஷன். எப்போலிங்போய்ச் சேர்ந்துவிட்டான். அவன் கஷ்டமும் சோறும்முடிந்துவிட்டது. தன் குழந்தைகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் பெரும்பாடுபடுகிறாள். வரிசையில் நிற்கிறார்கள். அவரவர் நிழல்கள் அவர்களை கேலிசெய்வதுபோலிருக்கிறது. முகங்களெல்லாம் வாடுகின்றன. கைக்குழந்தையோடு வந்த ஒருத்தியின் குழந்தை வீறிட்டு அழுகிறது.

மாதாக்கோயிலின் சுவரோர நிழலில் மறைவாக உட்கார்ந்து பாலூட்டுகிறாள். குழந்தை தேம்பித்தேம்பி அழுகிறது. அழுகையை நிறுத்தவேயில்லை.கொஞ்சுகிறாள். அணைக்கிறாள். முத்தமிடுகிறாள். குழந்தை அப்பொழுதும்அழுகையை நிறுத்தவில்லை. குழந்தை சூப்புகிறது. அழுகிறது. பாலேவற்றிவிட்டது. அவள் கண்ணீரெல்லாம் ரத்தமாய் வடிந்தது. குழந்தையின் அழுகை சலனமிட்டு, இன்னொரு தாய் குழந்தையை வாங்கி மறைவிடத்தில் பாலூட்டுகிறாள். குழந்தைப் பசியாறி அழுகை நிறுத்திற்று. குழந்தையின் தாய்பொங்கியெழுந்த அன்பைக் கைமாறாக பரிமாறினாள். வரிசைகள் பரபரக்க முட்டி மோதி தள்ளுகிறார்கள்.

மாதாக்கோயில் பாதிரியார் எல்லோரின் முன் தோன்றி வேதப் பாடல்களைப் பாடுகிறார். அன்றன்றைக்குமான அப்பம் எல்லோருக்கும் கிடைக்கும்படியாய் ஜெபிக்கிறார். அன்பும் வாழ்வும் வேதப் பாடல்களில் மிதந்து எல்லோரின் காதுகளிலும் ரீங்கரிக்கின்றன. அழகம்மாள் குழந்தைகளின் வாய்கள் முணுமுணுக்கின்றன. வரிசைகள் நகர்ந்து வேதப்பாடல்களில் கரைந்து, அவர்களின் வாய்கள் வயிறை முன் வைத்து ஜெபிக்கின்றன. வரிசைகள் நகர நகர ஒவ்வொருவருக்கும் இரண்டு சிரங்கை கோதுமை மணிகளை அள்ளிப்போடுகிறார் பாதிரியார். எல்லோர் முகமும் கொஞ்சம் துளிர்க்கிறது.

அழகம்மாள் பாதிரியார் முன் வந்தவுடன் அவளும் அவள் குழந்தைகளும்அவர் கால்களைத் தொட்டு வணங்குகிறார்கள். பாதிரியார் குழந்தைகளின் தலைமீது கை வைத்து வேத வசனங்களை உச்சரித்துத் தன் அன்பைக் கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படுத்தி ஜபிக்கிறார். உடலே சிலிர்த்துப் போய்விட்டது. வரிசைகள் நகர்ந்து நகர்ந்து அவரவர்கள் கோதுமை மணிகளை வாங்கினார்கள். பாதிரியாரின் வேத வசனங்களில் சனக் கூட்டமே கரைந்தன. எல்லோருக்கும் வயிறை நனைத்துக் கொள்ள உயிர் தண்ணீர் கிடைத்துவிட்டது.  கோதுமை மணிகளை வாங்கிக்கொண்டு போனவர்களின் அன்றைய நாளில்எல்லோர் வீட்டிலும் உலை கொதித்தது. பசியாறினார்கள். அள்ளிக்கொடுத்த பாதிரியார் மனசெல்லாம் திளைத்தார். அவர் ஜெபித்த வேத வசனங்களைஅவர்கள் அறியாமலே அவர்களின் வாய்கள் முணுமுணுத்தன. அதன்பிறகு மாதாக்கோயிலின் மணியோசைக்காக காத்திருந்தார்கள். மணியோசைகள் நின்றுவிட்டன. வேதப் பாடல்களோ வசனங்களோ கேட்காமலே போய்விட்டன. எல்லோர் வயிறும் காய்ந்து வெடித்த நிலம்போல் ஆகிவிட்டன.

ஈச்சங்காட்டு கொல்லைப்பக்கம் எல்லோரும் பரபரக்க ஓடுகிறார்கள்.  அழகம்மாள் குழந்தைகளோடு ஓடுகிறாள். ஓடுகிறவர்களின் முன் இவளால்ஜரூராக ஓட முடியவில்லை. வெயில் நெஞ்சை சுட்டெரிக்கிறது. தணல் உச்சி முதல் உள்ளங்கால் வரை கொதிக்கிறது. அழகம்மாள் புருசனோடு வாழ்ந்த வாழ்வு நினைவில் ஓடுகிறது. அந்த நாளில் வயிற்று ஜீவிதத்துக்குப் பரபரக்க ஓடியதில்லை. கண்ணீரின் கங்காட்சியில்லை. முப்போகம் வெள்ளாமையில் வீடே தானிய மணிகளால் நிரம்பி வழிந்தன. பொட்டு இடம்கூட இல்லாது கால்களை மடக்கி உட்கார்ந்த தானிய மூட்டைகளின்மீது தூங்கிய அந்த நாள் எங்கே போயிற்று?

அழகம்மாளின் தோளில் தொங்கிய களைக்கொத்திகள் அவளைப்போல் வாட்டம் கொண்டன. விதிர்த்த வியர்வையைத் துடைக்கும்போது அவள் முந்தானையின் நீச்சம் முகம் சுளிக்க வைத்தது. இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாக அழகம்மாள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு போனாள். சூரியன் விழிக்கும் முன் ஈச்சங்காட்டு ஓடைக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.  கொஞ்சம் நீர்ச் சதுப்பு இருந்தது. ஆங்காங்கே திட்டுத் திட்டான நீர்ச்சதுப்பில்கோரைகளும் கண்ணுக்கு தென்படாத கொட்டிக் கிழங்குகளும் இலைகள் பழுப்பேறி தலை நீட்டியிருந்தன. சாம்பல் தெளிப்பான வெளிச்சத்தில் எல்லோரும் முகம் விழித்தார்கள். காடு கழனியெல்லாம் கரம்போடி இருத்தலாய் இருந்தது கண்டு எல்லோரின் மன”ம் திக்கென்றது. பூமித்தாய் கண்ணீர்வடித்துக் கொண்டிருந்தாள். தன் பச்சை ஆடை பூண நாள் பார்த்திருந்தாள். கையில் தட்டுப்பட்ட கொட்டிக் கிழங்குகளை வேர் நரம்பு அறாமல் மண்ணைப் பறித்து கிழங்கை இலகுவாய் எடுத்தார்கள்.

அழகம்மாளுக்கு நாலைந்து கிழங்குகள் கிடைத்தன. அதற்காக அவள் ரொம்பவே இம்சைப் பட்டாள். முட்டி மோதிக் கொண்டு அங்கலாய்த்துப் பரபரத்து ஓடி ஓடித் தான் தட்டுப்பட்டதை எல்லாம் பிடுங்க வேண்டியிருந்தது. மேட்டுத்தெரு கனகம் ஒரு மாச பச்சிளம் சிசுவோடு வந்திருந்தாள். அவளைப் பார்ப்பதற்கு எல்லோர் மனசும் ஆடிப்போய்விட்டது. சிசுவை மாரோடு அணைத்து கிழங்கைப் பறிக்கும்போது ரொம்பதான் திண்டாட்டம் கண்டுவிட்டது. அடிவயிறும் இடுப்பும் நங் நங் என்று வலித்தது. பேறு நிகழ்ந்த அப்பொழுதுகூட அந்த வலி ஒரு நொடியில் பறந்து சுகம் கண்டுவிட்டது.

எல்லோரும் அவளுக்கு விட்டுக் கொடுத்தார்கள். அவளுக்குத்தான் கிழங்கே அகப்படாமல் போயிற்று. சிசு விர்ரென்று அலறி அலறி அழுகையை நிறுத்தவேயில்லை. மாராப்பை நிண்டி நிண்டி பசியை உணர்த்தியது.

கிழங்குக்காய் சிசுவின் பசியை மறந்து போனாள்.  ஒன்றிரண்டு கிழங்குகள் மட்டுமே கையில் அகப்பட்டது.  பள்ளத்தெரு அய்யா, நாடி நரம்பு தளர்ந்துகூட கிழங்குப் பறிக்க வந்திருந்தார். அவர் நோட்டம் எல்லாம் ஆங்காங்கே குத்து புல் புதருக்குள் மறைந்திருந்த இரண்டு மூன்று நான்காய் நீண்டு தலைகாட்டிய கீற்றான கொட்டி இலைமீதே கவனம் போயிற்று. யாருமே புல் புதர் இடுக்கில் ஒளிந்திருக்கும் கொட்டி கிழங்குகளைக் கவனிதிப்பதில்லை. அய்யா பார்வையில் அதெல்லாம் தட்டுப்பட்டுவிடும். எல்லோரை விடவும் அய்யாவுக்குத்தான் நிறைய கிழங்குகள் கிடைத்தன. தோளில் தொங்கிய துண்டின் முடிச்சில் கனத்த கிழங்குகளைக் கண்டவர்கள் மோவாயில் கைவைத்து ஆச்சர்யப்பட்டார்கள்.

வெயிலின் தீட்சண்யம் தாங்காமல் புல் பொசுங்கிய வரப்பில் எல்லோரும் ஊரை நோக்கி நடந்து போனார்கள். அழகம்மாள் குழந்தைகளைத் தோளில் ஒன்றும் கையில் ஒன்றுமாகத் தூக்கிக் கொண்டு நடந்தாள். கனகம் சிசுவை மார்பில் அணைத்து மாராப்புத் துணியை இறுகப் போர்த்தி வெயில் சிசுமீது படாதவாறு பார்த்துக் கொண்டாள். அய்யா ஒரு  மேட்டில் நாலைந்து இலை தழைகளோடு நின்ற நுணா மரத்தடியில் காலாறினார். அழகம்மாளும் கனகமும் அய்யாவைக்கடந்து போகையில் அய்யா கையசைத்துக் கூப்பிட்டார். தோளின் துண்டு முடிச்சில் தொங்கிய கிழங்குகளை ஒரு கைச்சேர் மட்டும் எடுத்துக்கொண்டு மீதியெல்லாவற்றையும் அவர்களுக்கே பகிர்ந்து கொடுத்தார். அழகம்மாளும் கனகமும் மனமெல்லாம் பூரித்துப் போனார்கள். அழகம்மாளின் குழந்தைகளைக் கிள்ளி செல்லங்களா... என்றார். அய்யாவின் உதடுகளில் புன்னகைகள் நெளிந்தன. கனகத்தின் சிசுவைப் பார்த்துப் பச்சாதாபத்தில் இச் கொட்டினார். அழகம்மாளும் கனகமும் அய்யாவின் கண் பார்வையிலிருந்து மறையும்வரை கையசைத்து வழியனுப்பினார்.

கிழங்கை அவிழ்த்து எல்லோரும் அன்று பசியாறினார்கள். அழகம்மாளின் குழந்தைகள் சிறு கசப்புத் தட்டி அவர்கள் கிழங்கை விழுங்க முடியாமல் தவித்தார்கள். பசி காதடைத்துத் தூக்கம் வரவே அவர்களின் நிலை கண்டு இரவே வருத்தம் கொண்டது.

கனகம் கிழங்குகளை உண்டு பசியாறினாலும் அவளின் பால்மடி வற்றிப் போயிற்று. சொட்டுச் சொட்டாக ஊறிய பாலும் சுத்தமாக அதன் ஊற்றும் அடைத்துப் போயிற்று. என்ன "கெதிகாலமோ' தலை பிடித்து நொந்து கொண்டாள். சிசு அழுது அழுது அதன் அழுகையும் மெலிதாய் சிறுத்து தேம்பிற்று.

இனி உண்டு பசியாற அவர்களுக்கு எதுவுமில்லைதான் என்று தோன்றுகிறது. வாழ்க்கையே பொய்த்துவிட்டது. குதிருகளும், பழங்கலயங்களும் சட்டி பானைகள் எல்லாமே வெறிச்சென்று ஒரு குன்றிமணி தானிய மணிகளுக்காய் ஏங்குவது போலிருந்தது.

பறவைகள் தெற்கு திசை நோக்கி இரை தேடிப் போய்விட்டன. காளைகளும், பசுக்களும் மற்றும் ஆடுகளும் அதன் குட்டிகளோடு கட்டுத்தறியிலிருந்து அவிழ்த்துக்கொண்டு விடுதலையாகி ஒவ்வொரு மூலையாய்ப் போய்விட்டன. மழைதூறிப் பச்சைகள் துளிர்க்கும்போது ஒருவேளை அதனதன் இருப்பிடம் நோக்கி வந்துவிடக்கூடும்.

ஊருக்கு ஈசான மூலை ஏரிப்பக்கத்தில் ஈரச் சதுப்பில் முட்டு முட்டாய் பண்ணைக் கீரை அடர்ந்து பச்சைக் கட்டியிருப்பதாய் ஊமையன் எல்லோரிடமும் சொல்லிப் போனான். எல்லோரும் கருக்கு அருவாளோடு போனார்கள். மடி கனக்க கொய்தார்கள். அழகம்மாளும் கனகமும் கீரை கொய்யும்போது ஈரச் சதுப்பில் கொடுக்குகளை  நீட்டி வலைக்குள் ஓடிய நண்டுகளை முந்தானைக்குள் முடித்து எடுத்து வந்தார்கள். என்றுமில்லாத திருநாளாய் வயிறு புடைக்க உண்டு பசியாறினார்கள். அழகம்மாளின் குழந்தைகளுக்குப் பண்ணைக் கீரையும் நண்டும் உண்ணுவதற்கு ருசியாய் இருந்தது.

பள்ளத்தெரு அய்யாவுக்குத்தான் பண்ணைக் கீரை பசியை அடைத்துவிட்டது. செரிமானம் கூடாமல் அவர் வயசு அவரை நிலைகுலையச் செய்துவிட்டது. ரொம்ப நாளாய் அய்யா படுத்த படுக்கையாய்க் கிடந்தார். அழகம்மாள்தான் பிரியமாய் பார்த்துக்கொண்டாள். முந்தானையில் நனைத்த தண்ணீரை சொட்டுச் சொட்டாய் வார்த்தாள். ஒவ்வொரு சொட்டும் அய்யாவின் நாவை நனைத்தது. அது உசுரை வைத்துக் கொள்ள ரொம்ப உபகாரமாய் இருந்தது. அய்யாவின் விழிகளில் பசுமையான நாட்கள் வழிந்தன. அந்த நாள் இனித்ததை அந்தத் தருணத்தில் உணர்ந்தார். சாரதா அம்மை அவர் மனசில் வழிந்தோடினாள். அவள் இருந்தால் இப்படியெல்லாம் சின்னாபின்னாப்பட்டுக் கொண்டு இருக்க மாட்டார். எவ்வளவோ ஒத்தாசையாய் இருந்தாள். அவளின் நறுவிசான குடித்தனம் ஊரே வியந்தது. சுவரில் அவளிட்ட கரிக்கோடுகள் உயிர் பெற்று ஒவ்வொன்றும் கண்ணீராய் உருண்டு அவர் கண்ணில் வழிகிறது.

மாதாக்கோயிலின் மணியோசை ஒலித்து ரொம்ப நாளாகி விட்டது.

தெருவெல்லாம் சோகைக் கூடி அலங்கோலப்பட்டுவிட்டது. கிழக்கு ஊர் மறிச்சியிலுள்ள பனைவிடலை சாரிகளின் இடுக்கில் தென்பட்ட ஈச்சங்கன்றுகளை அழித்து பதனப்பட்ட குருத்துச் சோறுகளைப் பக்குவமாய்ச் சேகரித்து அன்று பசியாறினார்கள். ஈச்சங்கன்றுகளை இழந்த பனைவிடலைகள் அதன் வருத்தத்தைக் காற்றுடன் பேசிற்று. வார்த்தையற்று முனகிற்று. சாம்பலும் புழுதியுமாய்ப் படிந்த வயல்களில் மனிதர்களின் உயிர் ரேகை இன்னும் நெளிந்து கொண்டிருந்தது. எங்கோ இடம் பெயர்ந்த கரிச்சான்களின் குஞ்சொன்று ஈனக்குரலில் தாயைப் பிரிந்த துயரத்தில் தனித்து கீச்சிட்டது.

பொழுதடங்கி இருட்டிவிட்டது. அன்று மாதா கோயிலின் மணியோசை என்றுமில்லாமல் ஓங்கி ஒலித்தது. ஓசை காதுகளில் பிளந்து மூளையில் தைத்தது. எல்லோரின் வயிற்றிலும் கோதுமை மணிகளின் முளைப்பாரிகள் சந்தோஷம் கூடி துளிர்த்தன. பள்ளத்தெரு அய்யா கண் விழித்தார். அழகம்மாளின் குழந்தைகள் குதூகலித்தார்கள். கனகத்திற்கு வற்றிய தாய்மடி சுரப்பதுபோல் இருந்தது. லாந்தர் வெளிச்சத்தோடு எல்லோரும் பரபரக்கப் போகிறார்கள். ஒருவர் அடியை ஒருவர் மிதித்துப் போகும்பொழுது, மணியோசை சிறுத்துக் கொண்டே போனது. அந்த ஓசை  எல்லோரையும் திகைக்க வைத்து திக்கென்றது.

மெல்ல மெல்ல சிறுத்த மணியோசையில் ஏதோ ஒன்று நிகழ்ந்துவிட்டதின் வலி தெறித்தது. எதிர்ப்பட்டவர்கள் பாதிரியார் செத்துப்போனதை நெஞ்சு தளும்பி தொண்டை அடைக்க சொன்னார்கள். அழகம்மாள் அய்யோவென உட்கார்ந்து விட்டாள். அவளின் குழந்தைகளின் நா வறண்டு தேம்பி அழுதார்கள். அவள் குழந்தைகளை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

வற்றிய பால்மடியைச் சூப்பிக் கொண்டிருந்த சிசுவை அணைத்து வாரிக்கொண்டு கனகம் பாதிரியாரைப் பார்த்துவிட்டு போனாள்.

பள்ளத்தெரு அய்யாதான் பாதிரியாருக்கு இறுதி பணிவிடைகளைச் செய்தார். அன்றைக்கு கிடைக்கும்படியான அப்பம் யாருக்குமே கிடைக்காதுபடியானதால், வேத வசனமோ ஜெபமோ எல்லோரின் வாய்களும் உச்சரிக்காமல் போயின.

கீழவெளிக் கொல்லை மறிச்சியில் கார முள்ளும் சூர முள்ளுச் செடிகளுக்கிடையில் நீர்த்த சோற்று கற்றாழைகளை கைக் கனக்க எடுத்துவந்து கனகம் அழகம்மாளுக்குக் கொடுத்தாள். நீர் வற்றிப் போயிருந்தது. பச்சை வதங்கி மஞ்சள் வரித்த கற்றாழைகளின் ஓரத்திலுள்ள கருக்கை சீவி தோலை உரித்து எடுத்த சோற்றின் பிசுபிசுப்பு விரல்களின் இடுக்கில் கொழகொழத்தது. குழந்தைகள் கற்றாழையின் பிசுபிசுப்பும் கசகசப்பும் ஓக்களிக்க அவர்கள் அதை உண்டு பசியாறவில்லை.

இனிமேல் அவர்களின் பசிக்கு எதுவுமே கிடைக்காது என்றுதான் ஆயிற்று. புழுதியும் மிச்சமென தகிக்கும் சூரியனும் அந்த ஊரின் தடங்களாய் எஞ்சின.

தாது வருச பஞ்சத்தில் ஊரே காலியானது. உலை மூட்டிய அடுப்புகள் சில்லுகளாய் நொறுங்கிக் கிடந்தன. வாழ்க்கைப்பட்டு வந்த பெண்டுகளின் தலைமுறைகளெல்லாம் மூலைக்கொன்றாய் சிதறிப்போனதைக் கண்டு மண் பதறியது.

பள்ளத்தெரு அய்யா, பட்டணம் போய் பொழச்சுக்க தாயி....ன்னு சொல்லி அழகம்மாளை அனுப்பி வைத்தார். ஊரை  விட்டுப் போகும்பொழுது அய்யாவை விட்டுட்டுப் போகவே மனசு வரவில்லை.

மண்ணையும் அய்யாவையும் பிரிய மனசில்லாமல்தான் விடைபெற்று அழகம்மாள் கிளம்பிவிட்டாள். ஊர் எல்லையைத் தாண்டும்முன் மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டாள்.

அழகம்மாளும் குழந்தைகளும் நடை கூட்டி, கூட்டிப் போகையில், ஊரும் வாழ்ந்த வீடும் பார்வையிலிருந்தும் மனசிலிருந்தும் அகலாது கரிச்சான்களாய் வட்டமடித்துக் கொண்டிருந்தன.

Pin It