இந்திய மக்களின் மனசாட்சியோடும் இணைந்து வாழ்ந்து, செழிப்புற்று வரும் அமைப்பு தான் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சம்மேளனம்.  சுதந்திரப் போராட்டம் தீவிரம் கொண்ட 1936 ஆண்டிலேயே இது தொடங்கப்பட்டுவிட்டது. இது வடித்துக்கொடுத்த  எழுத்தாளர்கள்தான், இந்திய இலக்கியப் படைப்புகளின் தலைமக்கள். புகழ் மிக்க எழுத்தாளர்கள் பிரேம் சந்தத், முல்கிராஜ் ஆனந்த், போன்றவர்கள் தான் ஆரம்பகாலத்தில் சம்மேளனத்தைக் கட்டி அமைத்தவர்கள், பண்டிதர் ஜவகர்லால் நேரு, கவி ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்கள், எழுத்தாளர் சம்மேளனத்தில் பங்கேற்றுஅதன் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள்.

அகில இந்திய எழுத்தாளர் சம்மேளனத்ததின் 15வது தேசிய மாநாடுஅண்மையில் இந்திய தலைநகர் டெல்லியில் ஏப்ரல் 14, 15, 16 தேதிகளில் நடை பெற்றுள்ளது. இந்தியா முழுவதிலிருந்தும் மேன்மை மிகுந்த படைப்பாளிகள் பலரும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் எழுத்துப்போராளி ஆஸ்கார் அலி இன்ஜினியர் ஆற்றிய உரை பொன்எழுத்துக்களால் பொறிக்கத் தக்கவை. இதனைப்போலவே மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட கருத்தரங்குகள் ஒவ்வொன்றும் மானுடத்தை இணைத்து வைக்கும் முன்மொழிவுகளாக அமைந்திருந்தன.

இன்றைய சூழல், பல்வேறு நெருக்கடிகளை நமக்கு வழங்கியிருக்கிறது.

உலகமயம் என்னும் சுனாமி, நுகர்வு அழிவு பேரலையை எழுப்பி மனிதனுக்குள் பெரும் சேதங்களை ஏற்படுத்திவிட்டது. இதில் மனிதரின் தொன்மை மிக்க வாழ்க்கைக்கு கடும் நெருக்கடிகள் நேர்ந்துவிடுகின்றன.  உலகமயத்தின் முதல் தாக்குதல், பண்பாட்டின் மீது தான் தொடுக்கப்படுகிறது.

புவிபரப்பில் வாழும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மொழிக்குடும்பங்கள் இதனால் அழிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதில் சில மொழிக்குடும்பங்கள் அழிந்தும் போய்விட்டன.  இந்தியா தொன்மை மிக்க பன்முக பண்பாட்டைக் கொண்ட நாடு. இதன் ஆழம் குறித்த ஆய்வுகள் இன்றும் உலக அளவில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இதில் தமிழ் மிகவும் மூத்தமொழி. பண்பாட்டு தாக்குதல் மிகவும் பெரிய பாதிப்பை உருவாக்கியுள்ளது. அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடு அதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்கி தந்துள்ளது.  இதனை செயல்படுத்துவதில்தான் இப்பொழுது, நமது கவனங்கள் தேவைப்படுகிறது.  மாநாடு தமிழ் மக்களுக்கு ஒருவிதமான மகிழ்ச்சியை வழங்கியுள்ளது.

தமிழகத்தின் படைப்பாளி எழுத்தாளர் பொன்னீலன் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைமை பொறுப்பை ஏற்று பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடன்செயல்பட்டவர். தமிழுக்கு சிறந்த நாவல்களை வழங்கியுள்ளார். தமிழின் இன்றைய மூத்தப்படைப்பாளிக்கு இந்த பொறுப்பு கிடைத்ததில் தமிழ் மக்களும், கலை இலக்கிய பெருமன்ற முன்னோடி இந்த வாய்ப்பை அடைந்ததில் கலை இலக்கிய அன்பர்களும் பெரும் மகிழ்ச்சியை அடைகிறோம்.

தாமரைக்கும், எழுத்தாளர் பொன்னீலனுக்கும் இடையில் அமைந்த உறவு நாடறிந்தது. எழுத்தாளர் பொன்னீலன் அவர்களுக்கு தாமரை தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

Pin It