முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள, மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக மக்களின் எழுச்சி நம்மை சிலிர்க்க வைத்துவிட்டது. கட்டாயம் தூக்கில் தான் போட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் சிபாரிசு செய்ய, குடியரசுத் தலைவர் தூக்குத் தண்டனைக்கு உத்தரவு பிறப்பித்தவுடன் தமிழகமே வீறுகொண்டு எழுந்துவிட்டது. தம் மக்களில் பெரும் எண்ணிக்கையைப் பலிகொடுத்த பிரபஞ்சத் தமிழ்க் குடும்பம், மீண்டும் மூன்று பேரின் சாவைத் தடுக்க வேண்டும் என்ற உணர்வில் ஒன்று சேர்ந்து நிற்கிறது. இந்த மக்கள் எழுச்சியின் பிரதிபலிப்பு தான் சட்ட மன்றம் இயற்றியத் தீர்மானமும், நீதிமன்றத் தடையும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மரண தண்டனை வேண்டாம் என்று உலகில் பல நாடுகள் முடிவெடுத்துவிட்டன. இன்று ஐரோப்பாவில் எந்த நாடுகளிலும் மரண தண்டனை இல்லை. பல்லுக்குப் பல் கைக்குக் கை என்ற பழைய தண்டனை முறைகளில் மாற்றம் வேண்டும் என்று தொடர்ந்து உலகச் சமூகம் வலியுறுத்தி வருகிறது. தண்டனை மனமாற்றம் அடைந்து திருந்துவதற்கானப் பாதையை உருவாக்கித் தரவேண்டும். மனந்திருந்த வகை செய்யாத தண்டனைகள் பயனற்றவை. மரணதண்டனைகள் அமலில் உள்ள நாடுகளில் தான் கொலைக்குற்றங்கள் கூடுதலாகிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தூக்குத் தண்டனையின் நுழைவாயிலில் நின்று கொண்டிருக்கும் இந்த மூவரும் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாது, இருபது ஆண்டுகள் சிறையில் வைத்துத் தூக்கிலே போடுவது எந்த வகைப்பட்ட நீதி என்ற கேள்வியும் நீதித்துறை வல்லுனர்களாலேயே மிகவும் ஆழமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், இரண்டு ஆண்டுகளுக்குள் தூக்கில் போடவில்லை என்றால், அவரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மூவரும் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தாலும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, 11 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார்கள். இவர்களது தூக்குத் தண்டனையை ரத்து செய்வதுதான் தனிப்பட்ட மனிதருக்கு வழங்கும் நீதியாக இருக்க முடியும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் சட்டம், சிலத் தனித்தன்மைகளைக் கொண்டிருக்கிறது. மாநிலங்களுக்கு சில சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் முடிவெடுத்து மரண தண்டனையை ஒழித்துக்கொள்ளலாம். இன்று அங்கு, சில மாநிலங்கள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. மரண தண்டனையை கைவசம் வைத்துள்ள மாநிலங்களும் அங்கு இருக்கத்தான் செய்கின்றன. சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சுரேஷ் போன்றவர்கள், இந்திய மாநிலங்கள் தங்களே சட்டமியற்றி மரண தண்டனையை ஒழித்துக் கொள்வதற்கு அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறது என்று கூறியுள்ளார். இதன் சாத்தியப்பாடுகள் என்ன என்பதையும், எதிர்காலத்தில் யோசித்துப் பார்ப்பது அவசியமானதாகும்.

எப்படிப் பார்த்தாலும், இந்தியக் குடியரசுத் தலைவர் எந்தவிதமான காலதாமதமும் இல்லாமல், உடனடியாக தமிழக மக்களின் பேரெழுச்சியையும், சட்டமன்றத் தீர்மானத்தையும், நீதிமன்றத் தடை ஆணையையும் கணக்கில் கொண்டு, உடனடியாக தூக்குத்தண்டனையை ரத்து செய்வது அவசியமானதாகும்.

Pin It